திரைப்பாட்டுத் துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உரைவீச்சும், கவிதை வீச்சும் முழங்கிவருபவர். பச்சையப்பன் கல்லூரி வழங்கிய பண்பாட்டுக் கவிஞர். இலக்கணம்- இலக்கியம் கற்றறிந்தவர். இடிபோல் மேடைகளில் கவிதை படைக்கும் எழுச்சித் தமிழர். ஆயிரம் திரைப்பாடல்களும், தனிப்பாடல்களும் இயற்றியவர். இத்தனை சிறப்புகளுக்கும், உரியவர் கவிஞர் இளையகம்பன். அவரை நம் இனிய உதயம் சார்பாக சந்தித்தபோது...
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தை பிறப்பிடமாகக் கொண்டிருக்கிறீர்கள். அங்கு மலர்ந்த உங்கள் பிஞ்சுப் பருவம் பற்றிக் கூறுங்கள்?
தாலாட்டுபோல் உங்கள் முதல் கேள்வியே என் இதயத்தைத் தழுவுகிறது. அமுதசுரபிபோல் அழகை வார்க்கும் எங்கள் ஊர் "கல்வராயன் மலையடி வாரத்தின்" கவிதை எனலாம். முப்புறம் மலைகளும், ஒருபுறம் வயல்களும் முத்தமிடும் ஓர் எளிய சிற்றூரில் பிறந்தேன். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் ஒற்றை சொர்க்கமாய்த் திகழும் அந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் புழுதி மண்ணில்தான் வளர்ந்தேன். மஞ்சம் புற்களால் வேயப்பட்ட மல்லாபுரம் எனும் அந்த களிமண் நிலத்தில்தான் நான் கனவுகள் வளர்த்தேன். வளமும், அழகும் நிறைந்த அந்த மண், எனக்கு வறுமைச் சோறூட்டியது. கூலிக்கு தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட, தாய் தந்தை அருணாசலம்- அஞ்சலையின் வாஞ்சையும், பாசமும் எனக்கு வரமென வாய்த்தாலும் என் பிஞ்சுப் பருவப் பொழுதுகளை, துன்பமும் கண்ணீரும்தான் தோளில் சுமந்தன. என் இளம் வயதுச் சூரியன் இல்லாமை யின் கிழக்கில்தான்” உதித்தான். பாமர வர்க்கத்தில் பிறந் தாலும் தன் பிள்ளை கல்லாமையில் இருந்துவிடக் கூடாது என எண்ணிய, என் தாய் தந்தையர் எனக்கு கல்வியை வழங்கினார்கள். கொஞ்சி விளையாடும் என் பிஞ்சுப் பிராயம் களிப்பு நிறைந்தாய் இல்லை என்றாலும் கருத்தியலை ஊட்டினார்கள். ஞாபகக் கண்களால் திரும்பிப் பார்க்கிறேன். என் நடைவண்டி வீதிகள் முட்களால் நிரம்பிவழிகின்றன பள்ளிக்காலத்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இயல்பிலேயே தெருக்கூத்துப் பாடல்களிலும், தெம்மாங்கு மெட்டுகளிலும் என் உள்ளம் ஒன்றிக் கிடந்தது. இயற்கையாகவே ஓவியம் தீட்டும் ஆற்றலைப் பெற்றிருந்தேன். இந்தக் கலை ஆர்வத்தை என் பள்ளி பொழுதுகள்தான் பட்டை தீட்டின. பதிமூன்று வயதிலேயே நேரிசை வெண்பாக்கள், விருத்தங்கள் என எழுதி, பள்ளி அளவில் பரிசுகள் பெறத் துவங்கி விட்டேன். தமிழ்மீது எனக்கிருந்த ஆர்வத்தை அறிந்துகொண்ட என் ஆசிரியப் பெருமக்கள் தட்டிக்கொடுத்து ஊக்குவித்தார்கள்.
பாவேந்தரின் தமிழியக்கமும், புதுமைப்பித்தனின் கடிதங்களும், மு.வ.வின் எழுத்துக்களும், வைரமுத்து வின் காந்தச் சொற்களும் சின்ன வயதிலேயே என்னைச் செதுக்கிய உளிகள் என்பேன். பல் முளைக்கும் முன்பே சொல்முளைப்பதுபோல், தென்னாற்காடு சீமை பெற்ற‘இலக்கியச் சிங்கம் ஜெயகாந்தனைப் படித்ததும் அந்த கால்சட்டைப் பொழுதுகள்தாம். ஆறாம் வகுப்புத் தொடங்கி பனிரெண்டாம் வகுப்புரை“தேவபாண்டலம் அரசுப் பொது நூலகம்தான் எனக்கு இலக்கியப் பாலூட்டிய இரண்டாம் தாய்மடி!
பச்சையப்பனில் பி.ஏ. தமிழிலக்கியம் பயின்ற நீங்கள், மாநிலக் கல்லூரி சென்று மு. மேத்தாவின் இலக்கிய வகுப்பில் கலந்து கொள்வது, அப்படியே புதுக்கல்லூரி’சென்று இன்குலாப், ஈரோடு தமிழன்பன் போன்ற இலக்கிய ஆளுமைகளைச் சந்திப்பது. அப்படியென்ன இலக்கிய தாகம் கம்பனுக்கு?
கடலை நோக்கிதான் ஓடைகளும், நதிகளும் பயணிக் கின்றன. வான் நோக்கிதான் மேகங்கள் வரிசை கட்டுகின் றன. நானும் அப்படிதான். பச்சையப்பனில் விதையாக எழுந்த நான், உச்சத்தமிழ் படைத்தவர்களின் அரவணைப்பில் வேர்பிடித்து வளர்ந்தேன். காயம் பட்ட என் சிறகுகளுக்கு இவர்களைப் போன்ற இலக்கிய மேதைகள்தான் களிம்பு தடவினார்கள். நானும் நா.முத்துகுமாரும், கவிஞர் சுந்தரமூர்த்தியும், இங்கிருந்து தான் எழுத்துதீபம் ஏற்றி புறப்பட்டோம்.
‘தமிழ்க்கடல்’ தெ.ஞானசுந்தரமும், மு.பி.பாவும், குருவிக்கரம்பை சண்முகமும், ஏ.எஸ். பிரகாசமும் நீருற்றி, உரமேற்றி பாதுகாத்த இந்த விதை, இன்குலாப் மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன் என்னும் தட்ப வெப்பத்தில் தழைத்து மகிழ்ந்தது. ஒரு ஆண்தாய் போல் “கவிவேந்தர்” மேத்தா என்னை அடைகாத்தார். அய்யா இன்குலாப்பும், ‘மகாகவி’ ஈரோடு தமிழன்பனும் என் நம்பிக்கைக்கு விடையாத்தார்கள். தணியாத என் தேடலின் தாகம் இன்னும் நீள்கிறது. அதனால் என் ‘எழுத்துத்தீ மூள்கிறது.
கல்லூரிப் பருவத்தில் ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் நடத்தும் கவியரங்குகளில் கலந்து கொள் வீர்கள். அந்தப் பண்பு நலன்கள்தான், நீங்கள் பாட்டரங்குகளில் பாடுவதற்கான பயிற்சிப் பட்டறையாக அமைந்தனவா?
தமிழ்க் கவிதை இலக்கியத்தை உலகறியச் செய்த ஒப்பற்ற மானுடக்கவி “கவிக்கோ”. அவரது கவிதா பட்டறையில் ஆயிரமாயிரம் பாவலர்கள் ஆயுதங் களாய்ப் பட்டை தீட்டப்பட்டார்கள். அந்த வரிசையில் நானும் என்னை இணைத்துக் கொண்டேன். ஒரு தாயின் இருதயம் அவருடையது. கரித்துண்டாய் வரும் மாணவர்களை வைரங்களாய் வளர்த்தெடுப்பார். திருவல்லிக்கேணியில் அவர் நடத்திய பாட்டு மன்றங் கள் என் திரிகளைக் கொளுத்தின. திக்கற்ற இருளில் கிடந்த என் தேசத்தில் தீபங்கள் ஏற்றின. “உருவுகண்டு எள்ளாதே” எனும் சொற்றொடருக்கு உருபொருள் உரைத்தவர் அவர்தான். தோல் போர்த்திய உடம்போடும்.
பள்ளத்தில் விழுந்த கண்களோடும் பாட்டரங்கில் கலந்துகொள்ள வரும் என்னை பரிகசித்தவர்கள் நடுவே கவிக்கோதான் என்னை கரங்கள் நீட்டி ஏந்தினார்.
அவரது ‘ஆலாபனையும்”, சுரதாவின் “தேன்மழையும், என் பச்சையப்பன் நாட்களின் இதிகாசங்கள் என்றால் மிகையல்ல. அவர் அளித்த பயிற்சிதான் என் ஆணி வேருக்கு நீர் வார்த்தது என்றால் பிழையல்ல.
இளையகம்பன் என்பது இயற்பெயரா? புனைப் பெயரா?
மாணவப் பருவத்திலேயே "பெரியாரின்" கருத்தியல் சிந்தனைகளில் கண்ணுற்றுக் கிடந்தேன். இரண்டு ரூபாய் விலையில் கிடைக்கும் ஈரோட்டுக் கிழவனின் சிறு பதிப்புக்களில் நெஞ்சம் தீப்பிடித்து திரிந்தேன். அது போலவே கம்பன் எழுத்திலும், தமிழிலும் காதலுற்று அலைந்தேன். நான்“ஓவியர் திலகம் உபால்டுவின் மாணவன். கம்பன்மீது எனக்கிருந்த பற்றறிந்து பாரதிச் செல்வன்’ எனும் என் பெயரை“இளையகம்பன் என்று மாற்றினார். கல்லூரி படிக்கும்பொழுதே. அரசு ஆவணத் தில்“இளையகம்பன்” எனும் பெயரை பதிவு செய்து கொண்டேன். கம்பன்போல் காவியம் படைக்கும் எண்ணம் இல்லை. கம்பனை எதிர்த்த பெரியாரின் வாழ்க்கையை புதுக்கவிதையில் தீட்டும் செயலில் தீவிரமாய் இருக்கிறேன். வானம் பெரிதுதான்! ஆனால், அதை சிட்டுவின் சிறகுகள்தான் அளக்கின்றன.
திரைப்படத்தில் நீங்கள் எழுதிய முதல் பாடல் அனுபவம், உங்களுக்கு எதுமாதிரியான உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்தியது?
“ஞாபக நதிக்கரையில் நின்று நினைத்துப் பார்க்கி றேன். முதல் பாடல் எழுதி இருபது ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இன்னும் அந்த ஈரப் பரவசம் என் இமைகளை நனைக்கிறது. பாட்டுத்துறையில் நான் பாதம் பதித்த காலகட்டம் இப்பொழுது போல் லகுவானது அல்ல. இரும்புக் கதவுகளை எறும்பு திறப் பது போல் கடினமானது.
முறையாக தமிழிலக்கியம் பயின்று. இலக்கணம் அறிந்து. சந்தம், மரபுகளில் தனியாளுமைப் பெற்றும், முதல் பாடல் எழுத, அந்த வாய்ப்பைப் பெற ஆறு ஆண்டுகள் தேடலுற்றேன். பாதங்கள் தேய திரைப்பட நிறுவனங்களின் படியேறி இறங்கியன் பலனாய்க் கிடைத்த வாய்ப்புதான்“சூப்பர்குட் நிறுவனத்தின்” தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்திரி வழங்கிய முதல் வாய்ப்பு. முதல் பாடலே நடிகர் அஜீத்குமாருக்குதான் எழுதினேன். எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைப்பில் கவி. காளிதாஸ் இயக்கிய உன்னைக் கொடு என்னைத் தருவேன் திரைப்படம்தான், பாட்டுத்துறையில் எனக்கு முதல் படம்.’இதயத்தைக் காணவில்லை, அது தொலைந்தும் நான் தேடவில்லை எனும் என் முதல் பாடல் இன்றும் என்னை இயக்குகிறது. ஒரு ஜீவமரணப் போராட்டத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட இந்த பாட்டு வாய்ப்பு, வார்த்தைகளில் தீட்டமுடியா கிளர்ச்சியை இன்றும் வழங்குகிறது.
ஆயிரம் திரைப்பாடல்களைக் கடந்திருக்கும் நீங்கள் அடைந்த இலக்கென்ன? ஏமாற்றம் என்ன?
நாணயத்தின் இரு பக்கங்கள் போலவே ஒவ்வொரு துறையிலும் உழைப்புக்கேற்ற உயரங்கள் உண்டு. அது திரைப்பாட்டுத் துறைக்கும் பொருந்துகிற ஒன்று. இந்த இருபது ஆண்டுகளில் ஆயிரம் பாடல்கள் என்பது மிகவும் குறைவான எண்ணிக்கைதான். இருப்பினும் அதிக எண்ணிக்கையைவிட நான் ஆழமான பாடல்கள் படைக்க விழைகிறேன். விழைவது எல்லாம் இங்கு நிறைவேறுவதில்லை. வெற்றிப் படிகளில் விரைந்து ஏறுவதற்கு இன்னும் வேகம் வேண்டும் எனக் கருதுகிறேன். வாய்ப்புகளை நான் தேடிப் பெறுவதில்லை என்பது என்மீது நானே வைக்கும் குற்றச்சாட்டு. ஆதலால் அடைந்த ஏமாற்றங்கள் அதிகம்தான்.
பேச்சு வழக்கை, உரைநடைப் பதங்களை, உதிரிச் சொற்களை நான் பாடல்களில் பயன்படுத்துவதில்லை. பாடல் என்பது எளிமையும், கவித்துவமும், கற்பனை வளமும் நிறைந்ததாய் இருக்க வேண்டும் என எண்ணுகிறவன் நான். அதன் பாதையிலேயே பயணிக்கிறேன்.
அடையும் இலக்கு வரும். இங்கு அங்கீகாரம் என்பது கேட்டுப் பெறும் யாசகம் அல்ல! அது நமக்கு நாமே சூடிக்கொள்ள வேண்டிய மகுடமாகும்.
கவிப்பேரரசு வைரமுத்து பற்றி?
பரவசத்தில் ஆழ்த்தும் கேள்வியைக் கேட்ட பழமொழி பாலனுக்கு நன்றி. கவிப்பேரரசர் மீது நான் கொண்டது அன்பல்ல! அது பெருமதிப்பு. ஆசான் மீது மாணவன் வைத்திருக்கும் மாண்புடைமை! என் கவிதையை கைவாளாய் மாற்றியது பாவேந்தர் என்றால், என் திரைப்பாட்டுக் கனவுகளை தேன்தடவிக் காப்பது கவிப்பேரரசர் என்பேன். அவரது எழுத்துக்கள் ஒரு பூகம்பம்போல் என்னை அசைத்தன. அவரது தாக்கத்தால் இந்த நாற்பது வருடங்களில் பாதிப்புக்குள் ளாகாதவர் எவரும் இலர். கிராமத்துச் சிறுவனாக இருந்தபோது அவர்மீது எனக்கிருந்த காமம், பலநூறு மடங்கு இன்று அதிகரிக்கிறதே தவிர அணுவளவும் குறைந் ததில்லை. தம்பி! என்று என்னை அவர் அழைக்கிற போது என் கர்வம் கட்டுக்கடங்காமல் சிலிர்க்கிறது. அவர் பாதம் தொட்டு வணங்கி நிமிரும் என்னை, அவர் ஆரத் தழுவும் அணைப்பில், என் தந்தையை உணர்கிறேன். எல்லா நிலைகளிலும் இந்த ஏழைமகன் மீது அவர் அன்பை வெளிப்படுத்துகிறார். தூர நின்றே நான் அதைத் துய்த்து வருகிறேன். ஆம்! அவர் என் பல்கலைக்கழகம்.
கவிஞர் வாலி பற்றி...?
பதினான்காயிரம் பாடல்கள் எழுதிய“பாட்டுச் சிங்கம் வாலிக்கு, இளம் தலைமுறைக் கவிஞர்கள் மீது எப்பொழுதும் பிரியமுண்டு. ஐம்பது ஆண்டுகள் பாட்டுத்துறையில் அசைக்கமுடியாத சக்தியாய் விளங்கியவர் வாலி. அவர் எளிமையின் சின்னமாக விளங்கினார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையில் நான் பாடல் எழுதிய செய்தியறிந்து அலைபேசியில் அழைத்து என்னைப் பாராட்டினார். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் அவரது அன்பையும், ஆலோசனைகளையும் பெற்றவர்களுள் அடியேனும் ஒருவன். பல கவியரங்குகளில் அவர் தலைமையின்கீழ் பங்கேற்று இருக்கிறேன். பல்வேறு செய்திகளை அவரிடத்தில் பரிமாறிக்கொண்டிருக்கிறேன். எவரிடத்தும் பேதம் பார்க்காத ஏந்தலாய்த் திகழ்ந்தவர் வாலி. அவரது எண்பதாம் அகவை அன்று வாழ்த்து மாலை சூடச் சென்ற என்னையும், என்னருமை நண்பர் யுகபாரதியையும் ஆரத்தழுவி இருவர் தோளிலும் கைகள் போட்டு. ஒருபக்கம் பாரதி மறுபக்கம் கம்பன் இதைவிட எனக்கு என்னய்யா வேண்டும் என்று ஒரு குழந்தைபோல் குதுகலமாய்ச் சிரித்தார். அந்த நிகழ்வின் புகைப்படம்தான் அது. அந்நிகழ்வை சிறப் பாய் ஒருங்கிணைத்த ஆற்றல்மிகுக் கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், ஆனந்த விகடனுக்கும் நன்றி.
இசைஞானியோடும் இணைந்து பாடல் எழுதி இருக்கிறீர்களே?
ஐந்திணைகளுக்கு அடுத்து,“பாடலும் பாடல் சார்ந்த இடமும்’ என்றொரு திணை இருந்தால் அந்த "ஆறாம் திணைக்கு", "இசைஞானி" என்று பெயரிடலாம். இசைஞானியின் பாடல் கேட்டு பிறந்து, வளர்ந்து, வாழும் இளையகம்பன், இசைஞானியின் இசையில் பாடல் எழுதுவது சாதனைதான். அந்த வாய்ப்பை நெடுங்காலத் தவமிருந்து ஒரு வரம்போல் நான் பெற்றேன். கல்லூரி மாணவனாக இருக்கும்போதே, பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றுத்தருவதற்கு அய்யா உபால்டு, இசைஞானியின் வீட்டிற்கு என்னை அழைத்துச்சென்று அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.“காலம் கனியும்போது இந்தத் தம்பிக்கு பாட்டு வாய்ப்புத் தருகிறேன். இதற்காக நீங்கள் அலைய வேண்டுமா? என்று உரிமையோடு உபால்டுவிடம் இசைஞானி உத்தரவாதம் அளித்தார். அந்த உத்தர வாதம் இருபது ஆண்டுகள் கழித்து நிறைவேறியிருக்கி றது. இசைஞானியின் அன்பை, ஆசியை, நம்பிக்கையை நான் பெற்றிருக்கிறேன். அதனால் அவர் இதயத்தில் இன்று இடம்பிடித்திருக்கிறேன். அவர் இசையால் சூழப்பட்ட தீபகற்பம் என்பதைவிட தீபம் என்று சொல்லலாம். தூரத்தில் நின்று தரிசித்தால், ஒளியில் மனம் குளிர்ந்துவிடும். அருகில் சென்றால் சுட்டுவிடும். பணிவோடு அவர் நிழலில் பாடல் எழுதி அமர்ந்திருக் கிறேன். அந்த பண்புக்கு ஒருநாளும் குறை நேர்வதில்லை. இன்னொன்றும் சொல்கிறேன். தந்தையின் அன்பைப் பெறுவதற்கு இங்கு தடைச்சட்டங்கள் ஏதுமில்லை.
மேலைநாட்டுக் கவிஞர்களின் கவிதை கள்‘தமிழ்போல்’ அடிக்கரும்பாய் இனித்திடுமா?
பூகோளத்தின் மூத்தமொழி நம் புகழ்மிகுத் தமிழ்மொழி என்று, உலகின் மொழி வல்லுனர்கள் ஒப்புக்கொண்டதை மானுடம் அறியும். அதைத்தான் செப்பேடுகளும் உரைக்கின்றன. ஐரோப்பிய செவ் விலக்கியங்களையும், ரஷ்ய இலக்கியங்களையும், அரபு தேசப் படைப்புகளையும், என் புத்திக்கு எட்டிய வரை புரிந்துணர்ந்து வாசித்திருக்கிறேன். கலீல் ஜிப்ராணையும், இக்பால், செகாவ், ஷெல்லியையும், நெரூடா, மாயகோஸ்கியையும் புலன்கள் பூப்பூக்க படித்திருக்கிறேன். ஆனால்! அதில் எல்லாம் காணாத இன்பம், தமிழின் சங்க இலக்கியத்தை நான் உண்ணுகிறபோது கிட்டுகிறது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பார் அறிஞர் அண்ணா எனும் பெருந்தகை. உண்மைதான்! ஆயினும் தாய்போல் ஆகுமா வேறுறவு? தாயின் அன்பை யும், தாய்மொழியின் சிலிர்ப்பை யும் எதுவும் இங்கு எவருக்கும் தந்துவிடாது. அன்னைத் தமிழில் தான் வளம் அதிகம்! அடிக் கரும்பில்தான் சுவை அதிகம்!
எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கே பெண் இளைப்பிள்ளை காண் என்று கும்மியடிக்க சொன்னானே பாரதி! பெண்களுக்கு சம உரிமையை வழங்குகிறார்களா?
மாறிவரும் உலகத்தில் மாற்றங் கள் சாத்தியம் என்று எண்ணுகிறவன் நான். ஏனெனில் மாற்றம் ஒன்றுதான் இங்கு மாறாத ஒன்றாய் விளங்குகிறது. விடுதலைக் கவி "பாரதியின்" அக்கினி எழுத்துக்கள் வெடித்தபின்தான், இந்த ஆணாதிக்கச் சமூகத்தின் ஆணவம் குறைந்தது. பாரதியின் சொற்களுக்கு மீசைமுளைத்த பின்தான் பத்தாம் பசலித்தனங்கள் ஓய்ந்தன. பஞ்சாங்கக் குப்பைகளுக்கு பாரதியின் பெண்ணிய கீதங்கள்தான் தீ வைத்தன. நூற்றாண்டுக்கு முன் அவன் கண்ட கனவு களின் மீது இன்னும் சிலர் கல்லெறிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஏட்டளவில் இருந்த சமத்துவம் நாட்டளவில் நிலவவேண்டும். அப்படி நிலவினால் தான், சமத்துவத்தை இங்கு நிறுவினால்தான் நீதி தேவதையின் தராசுமுள் நியாயம் செய்கிறது என்று பொருள். பாரதி நினைத்த“பெண் சமத்துவம்’இன்னும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. நிலுவையில் இருக்கும் அந்த நீதி விடுவிக்கப்படவேண்டும் என்பதுதான் எனது திண்ணம்!
கவிஞர் வாலியால்‘இலக்கியச் சிங்கம் என்றழைக் கப்பட்ட, புலவர் புலமைப்பித்தனுடன் நெருங் கிப் பழகியவர் நீங்கள். அவருடன் உண்டான இலக்கியத் தொடர்பு பற்றி சொல்லுங்கள்.
பாட்டுத் துறைக்கு வருவதற்கு முன்பே புலவருடன் எனக்குப் பரிச்சயம் இருந்தது. 2000-ஆண்டில் ஈழ வேங்கை அண்ணன் வி.சி.குகநாதன் இயக்கிய ஒரு திரைப்படத்திற்கு புலவரோடு நானும் ஒரு பாடல் எழுதி இருந்தேன். கற்பகம் ஸ்டுடியோவில் நடைபெற்ற பாடல் ஒலிப்பதிவில் ஆரத்தழுவி என்னை ஆசீர்வதித்தார். தந்தைக்கும். மகனுக்குமான பாசஉறவு எங்களுடையது. அப்பா என்றுதான் அழைப்பேன். அகமும், முகமும் மலர மகனே’கம்பா என்றழைத்து கருணைக் கரங்களால் என்னைத் தட்டிக்கொடுப்பார். பல்வேறு பாட்டரங்கில், புலவர் தலைமையில் நான் கவிபாடியிருக்கிறேன். நந்தனம் அரசுக்கலைக் கல்லூரியில் அண்ணன் கவிஞர் சொற்கோ கருணாநிதி ஒருங்கிணைத்த பாட்டரங்கின் தலைமையேற்ற புலவர், அரங்கில் வெடித்த என் ஆவேசம் கண்டு“பாரதிதாசனைப் போல் என் மகன் கம்பன் மேடையில் முழங்குகின்றான் என்று பாராட்டுரை வழங்கினார்.
வாலியே வியந்த வரலாற்றுப் பாவலர் புலமைப்பித்தன். அவ ரோடு நான் கொண்ட பந்தம் ஒற்றைக் கேள்வியில் உரைத்து விட முடியாது. அது நெடுந் தொகைப் பாசம். புலவரை நினைவு படுத்தியமைக்கு எனது நன்றி மலர்கள்.
"பாட்டுத் துறை", "கவிதைத் துறை" இவை இரண்டும்‘ஒரு கவிஞனுக்கு இரு சக்கரங்கள்’ஒரு ராஜபாட்டையாக, அந்த தமிழ்த் தேரை எப்படி நீங்கள் சமன் செய்து இழுத்துச் செல்கிறீர் கள்?
பொறுப்பை உணர்த்தும் உங்கள் கேள்விக்கு ஒரு பூங்கொத்து!
இலக்கியத்தையும், பாட்டையும் இரு கண்களாகத்தான் பார்க்கிறேன். இரண்டிற்கும் நேரத்தை வகுத்துக்கொண்டு செயல் ஆற்றும் பொழுது, நெஞ்சில் ஒரு நிறைவு பரவுகிறது. நேர மேலாண்மை என்பது கவிஞனுக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் அவசியமானது. திட்டமிடல் இருந்தால், வெற்றி நம்மை வட்டமிடல் தொடர்ந்த வண்ணம் இருக்கும். திரைப்பாட்டுப் பயணம் என்பது சிறகில் தீப்பற்றிக் கொண்டே திசைகளை அளப்பது. கவிதை இலக்கியம் என்பது சிறைகள் அற்ற வானத் தில் சிலம்பம் ஆடுவது. இரண்டின் அவசியத்தையும் நான் உணர்ந்து எழுதுகிறேன். சக்கரங்கள் இருக்கும் தேர்தான்“வடம்பிடிப்பதற்கு வசதியானது. களிமண் புழுதிக் காட்டிலிருந்தும், களர் நிலத்தின் வீதியில் இருந்தும் என் பாட்டுத் தேரை ராஜபாட்டை நோக்கி இழுத்துவருகிறேன். என் வீதியெல்லாம் வேகத்தடைகள்! திருவிழா சகடைக்கு ஒருநாள் தேர் வரும்! தேர் பார்க்க ஊர்வரும்”.
கவியரங்க மேடைகளை எப்படி உணருகிறீர் கள்?
மாக்சிம் கார்க்கி கலையும், இலக்கியமும், மக்களுக்கானது? என்றான். மக்களைப் பற்றி பேசாத, போரிடாத எழுத்தும், கலையும் எதற்கும் பயனற்றது என்றான் மார்டின் லூதர்கிங். அதை என் புத்தியில் பொதிந்து வைத்திருக்கிறேன். கவிதை எமக்குத் தொழில்! இமைப்பொழுதும் சோராதிருத்தல், நாட்டிற்குழைத்தல்! என்றான் பாரதி. இந்த கம்பீர உறுதிமொழியை என் ரத்த நாளங்களில் நட்டு வைத்திருக்கிறேன். கடைக் கோடி மனிதர்களின், விளிம்புநிலைச் சமூகத்தின் பிரதிநிதி நான். ஆகவே கவிதையை அழகியலாக என்னால் அரங்கில் படைக்கமுடிவதில்லை. நான் பட்ட அவமான மும், நான் கொண்ட கண்ணீரும், காயங்களும் சொற்களாய் ஏட்டில் வடிக்கின்றபொழுது அவை சுடும்நெருப்பாய் வெளிப்படுகின்றன. கைத்தட்டலுக்கும், நகைச்சுவைக்கும் நான் கவிதை எழுதுவதில்லை. பெரியாரும், அம்பேத்கரும், ஜீவானந்தமும் கற்றுத்தந்த கருத்தியல் வடிவமாய் என் எழுத்துக்கள் இருப்பதால் அதில் கர்வமும் மிடுக்கும் கோபமும் இருக்கத்தான் செய்யும். அரங்கில் ஏறும்வரை எந்தத் திட்டமிடலும் என்னிடம் இருப்பதில்லை. இயற்கையாகவே அந்த‘ எரிதழல் என்னை ஆட்கொள்கிறது. இங்கு எவரும் கவிதை எழுதுவது சுலபம். அதை மக்களைச் சேரும் வண்ணம் மன்றத்தில் படைப்பது கடினம். ஆம்! செருக்குடையவராய் கவிஞர்கள் திகழ்வது தேசத்திற்கு நலம் பயக்கும்.
சமகாலப் பாடலாசிரியர்களோடு தொழில் சார்ந்து இணக்கமாக பயணிக்க முடிகிறதா?
இன்று பாட்டுச் சிகரத்தில் வெற்றிக்கொடி ஏற்றிய அனைத்து சமகாலப் பாடலாசிரியர்களும் நட்புறவாகத்தான் பயணிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு உயரம் இருக்கிறது. ஒரு தனித்த மொழிவளம் இருக்கிறது. அவரவர் திசையில் அரவணைப்புடன்தான் திகழ்கிறோம். யாரும் யாருடைய வாய்ப்பையும் தட்டிப் பறிப்பதில்லை. எவரையும் அவமதித்து கைகொட்டிச் சிரிப்பதில்லை. வெற்றி தோல்விகளும் ஏற்ற இறக்கங்களும் இங்கு இயல்பான ஒன்று. காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. கீழ் உள்ளது மேல் வரும். மேலே உள்ளது கீழ் வரும்! அதை பாடலாசிரியர்கள் புரிந்து வைத்திருக்கிறோம். அதனால் எங்கள் சகோதரத்துவத்தில் எந்த தடைகளும் இல்லை. கண்ணதாசன்-வாலி-முத்துலிங்கம் போன்ற எங்கள் வழிகாட்டிகளை வணங்குன்றோம்! இளம் தலைமுறைப் பாடலாசிரியர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம். எங்களுக்குள் இணக்கமுண்டு! பிணக்கமில்லை!
பாடலாசிரியர், இசையமைப்பாளர்களுடன் கூட்டுறவு வைத்திருப்பது அவசியமா?
மலர்களோடு வண்டுகள் வைத்திருக்கும் கூட்டுறவில் தான் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகின்றன. மண்ணோடு வேர்கள் வைத்திருக்கும் கூட்டுறவில்தான் மரங்கள் கனிகளை வழங்குகின்றன. பாட்டுறவுக்கு மட்டுமல்ல, நாட்டுறவுக்கும் கூட்டுறவு என்பது மிகவும் அவசியமாகிறது. இசைமைப்பாளர்களுடன் பாடலாசிரியர்கள் கொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒரு பாடலை வெற்றிப் பாடலாய் ஆக்குவதற்கு வழிவகுக்கும். உடுமலை நாராயணகவி, சுரதா, மருதகாசி, பட்டுக்கோட்டை காலத்தில் இருந்தே இந்த கூட்டுறவு நல்ல பலன்களை நாட்டுக்கு நல்கியிருக்கிறது. அது கவியரசர் கண்ணதாசன், வாலி காலத்தில் பல காவியங்களைச் செய்து காட்டியது. அதை நாடறியும். ஏடறியும்.
ஆனால் அந்த புரிதல் மட்டுமே. வெற்றிப் பாடல்களுக்கான ‘பொதுவிதி என்று கருதுவதும் தவறு. பாடலின் வெற்றி என்பது கூட்டு முயற்சியின் கொண்டாட்டம். நான்கு தூண்களில் ஒன்று நலிவுற்றால் கூட கோபுரம் குடைசாயும். கரைகளில் ஒன்று உடைந்துவிட்டால் நதி கட்டாந்தரையில் பாயும். கூட்டுறவில் நம்பிக்கையும் திறமையும்தான் கோலோச்சி நிற்கும்!.
நீங்கள் எழுதிய“பத்துமாசம் என்னசுமந்து மற்றும் முன்னூறு நாள்சுமந்து என்ற பாடலையும் எழுதும்போது எதுமாதிரியான உணர்வை அனுபவித்தீர்கள்?
தாயின் பெருமை பற்றி நான் எழுதிய இந்த இரு பாடல்களும் உணர்ச்சிகளின் அணைகளை உடைத்துவிடும் உறுதியைக் கொண்டது.’பத்துமாசம் என்னசுமந்து என்னும் பாடல், தம்பி வேல்முருகனால் பாடப்பெற்று, உலகத் தமிழர்களின் உள்ளங்களைத் தொட்டது.“முன்னூறு நாள்சுமந்து என்னும் இந்த பாடல் அண்ணன் புதுவை சித்தன் ஜெயமூர்த்தியால்” பாடப்பெற்று இன்று புகழ்க்கொடி நாட்டி நிற்கிறது. திரைப்பாடல்களைத் தாண்டி, இதுபோல் நான் எழுதிய வாழ்வியல் பாடல்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவை சமூகத்தில் அணிவகுத்து நிற்கின்றன. சமூகம்- இனவிடுதலை-ஈழமீட்பு, இளைஞர் எழுச்சி என எழுதப்பட்ட என் பாடல்களில் வலியும், காயமும், கண்ணீரும் கலந்திருக்கும். வாழ்வின் ஈரம் படிந்திருக்கும். தாயைப்பற்றி, தந்தை பற்றி நான் எழுதுகிறபோது கண்ணீரை சிந்தியபடியே கலங்கி நின்று எழுதுகிறேன். அந்த கண்ணீர் சமூகத்தின் கண்ணாடியில் பட்டுத் தெறிக்கிறது.
உங்கள் இரண்டாம் கவிதை நூலான “மற்றுமொரு சகாப்தம்’ நூலுக்கு கலைஞரின் அணிந்துரை எப்படி சாத்தியமாயிற்று?
“முத்தமிழ் அறிஞருடன் எனக்கு ஏற்பட்ட இலக்கியத் தொடர்பானது, என் எழுத்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது. எங்கோ ஒரு குக்கிராமத்தில் இண்டம்புதர்க் காடுகளில் பறந்து திரிந்த இந்த பட்டாம்பூச்சிக்கு, நாடாண்ட கலைஞரின் எழுத்துக்கள்தான் நந்தவனமாய்த் தெரிந்தது. நறுந்தேனாய் தமிழை அது சொரிந்தது. என் முதல் நூலான‘"தொடுவானம் தூரமில்லை" எனும் கவிதைத் தொகுதிக்கே, கலைஞரின் அணிந்துரைக்காக முயற்சித் தேன். அது நிறைவேறவில்லை. பொதுவுடைமைக் கவிஞர் கே.ஜீவபாரதியின் மூலம் “மார்க்சிய எழுத்தாளர் இளவேனில் எனக்கு பரிச்சயமானார். கலைஞருக்கு அவர் நெருக்கமானவர். அவரது அன்பால் கலைஞரிடம் நான் கொண்டுசேர்க்கப்பட்டேன். மற்றுமொரு சகாப்தத்திற்கு "கலைஞர் எழுதிய மூன்று பக்க அணிந்துரை, என் எழுத்துக்களுக்கு அங்கீகார மெனும் அணிகலன்கள் பூட்டின. அதன் தொடர்ச்சி யாய் அவர் முதல்வராய் இருந்து தலைமையேற்ற உவமைக் கவிஞர் சுரதா சிலைதிறப்புக் கவியரங்கில் வாலி-அப்துல்ரகுமான் இவர்களுடன் கவிதை முழங்கினேன். அதில் இருந்து இன்னும் அவர் என்மீது கூடுதல் பாசம் காட்டினார். கடைசியாய் கலைஞர் முன்னிலையில் திருவாரூர் கவியரங்கில் கலந்துகொண்டேன். கோபாலபுரம் வீட்டிற்கு என்னை வரவழைத்து திருவாரூரில் வாசித்த கவிதையைப் பெற்று’முழுப்பக்கம் முரசொலியில் பதிவுசெய்தார். இன்னும் இப்படி நெஞ்சுருகும் சந்திப்புகள் நிறைய உண்டு. அது ஒரு காலம். கலைஞர் காலம்! கவிதைகளின் காலம்!!
நீங்கள் எழுதிய நூல்கள் பற்றி சொல்லுங்கள்!
இதுவரை ஆறு கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. அதில்“புதிதாய் இனியொரு பூமி செய்வோம்" - எனும் பகுத்தறிவை வளர்க்கும் சிறுவர் பாடல் தொகுப்பும் அடங்கும்.
அடுத்ததாக“தினகரன் வெள்ளி மலரில் வாரம் தோறும் தொடராய் வெளிவந்த என் பாட்டுத்தேர்" எனும் கட்டுரைத் தொகுப்பும், எழுத்ததிகாரம்" எனும் கவிதைத் தொகுப்பும் அச்சில் இருக்கின்றன.
அதைத் தொடர்ந்து பத்திரிகைகளில், கவியரங்குகளில் இடம்பெற்ற கவிதைகள் அட்சய பாத்திரங்கள் இலவசம் எனும் நூலாய் தயாராகிக்கொண்டிருக்கிறது.
உங்கள் குடும்பம் குறித்து சொல்லுங்கள்!
வாழ்வின் உயர்ந்த இலக்குகளை, லட்சியங்களை, ஒருவர் அடைவதற்கு நல்லறத்துணை மட்டுமல்ல இல்லறத்துணையும் வேண்டும். இல்லறத்தில் நிறைவிருந்தால் மனிதன் எதையும் வெல்வான் என்பார் கவியரசர் கண்ணதாசன். இதற்குப் பொருளாய் எமக்கு வாய்த்தவர்தான் என் இல்லத்தரசி சுகுணா. எங்கள் இருவரின் வாழ்க்கைப் பயனாய் வாய்த்திருக்கிறார்கள் இரு மகன்கள். மூத்தமகன் கவிதைத்தமிழ் பதினொன்றாம் வகுப்பு வணிகவியல் படிக்கிறார்.
இளைய மகன்“இன்பத்தமிழ்” ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். பிள்ளைகள் நலமே எங்கள் பேருவகை என்று வாழ்ந்து வருகின்றோம். இரு மகன்களும் இசைநாட்டம்’ உள்ளவர்களாய்த் திகழ்கிறார்கள். ஆதலால் இசைப்பயிற்சியும் பெறுகிறார்கள். இதுதான் என் குடும்பம் குறித்த தகவல். நான்கு வரித் திருக்குறள் நாங்கள்.
எதிர்கால திட்டம் ஏதேனும் இருக்கிறதா?
முன்னமே நான் உரைத்ததுபோல்‘பகுத்தறிவுப் பகலவன்’ பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை புதுக்கவிதையிலும், 99 பாடல்கள் கொண்ட“அன்பு டைமையின் ஆழத்தைச் சொல்லும் சங்க இலக்கிய நூலான முத்தொள்ளாயிரத்தை” தேன்சொட்டும் கவிதை நடையிலும் படைக்கும் பணியில் ஆயத்த மாயிருக்கிறேன்.
இப்பணி முடிந்து“கவித்தொகை பக்கம் என் கவனம் திரும்பும். திரைப்பாட்டுப் பணிக்கு இன்னல் இல்லாவண்ணம் இவற்றைச் செய்வேன். எல்லாம் காலத்தின் கைகளில் இருக்கிறது. நாளையின் நம்பிக்கையில்தான் இந்நாள் இனிக்கிறது.
நீங்கள் பெற்ற விருதுகள்?
தனியார் அமைப்புகளும், கல்வி நிறுவனங்களும், இலக்கிய அமைப்புகளும், என் கவிதைப் பணியை பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கி இருக்கின்றன.. பட்டியல் இட்டால் அது நீளும். மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம் முன்னிலையில், இலக்கியச் செம்மல் சிலம்பொலி செல்லப்பனும், தமிழ்க் கடல்’ ஔவை நாடராசனும் சேர்ந்து வழங்கிய காஞ்சி அமிழ்தன் அறக்கட்டளையின் "திருக்குறள் விருது", உள்ளபடியே என் எழுத்து வாழ்க்கையை அர்த்தப்படுத்தியது என்பேன்.
தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பயணிக்கும் நீங்கள் அதன் செயல்பாடு குறித்து கூறுங்கள்.
முச்சங்கம் வளர்த்த தமிழகத்தில், பாட்டுப் பரம்பரைக்கென்று ஒரு நற்சங்கம் இல்லாது இருக்கலாமா? ஒவ்வொரு துறைக்கும் ஒரு சங்கம் இருக்கிறது. சங்கம் இல்லாத துறையாய் பாட்டுத்துறை இருந்தது. அந்தக்குறை“கவிஞர். தமிழமுதனால் தீர்ந்தது. பாடலாசிரியர் சமூகத்தையும், அதன் ஒற்றுமை மற்றும் உரிமையைக் காக்கவும் தமிழமுதனால் இச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. கண்ணதாசன், வாலி, மருதகாசி மூவரும் அக்காலத்தில் முயற்சித்து நடைமுறைக்கே வராமல் முதல் நாளிலேயே முற்றுப்பெற்றது அவர்கள் ஆசை. அதை நெடிய போராட்டத்திற்குப் பிறகு தோற்றுவித்து சங்கத்தை“பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க அரும்பாடுபட்டிருக்கிறார் நம் தமிழமுதன். நான் அதன் பொதுச்செயலாளராய் அங் கம் வகிக்கிறேன். மூத்த கவிகளின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் சங்கத்தை பலப்படுத்துகிறது.
மூத்த பாடலாசிரியர்களும், இளம் தலைமுறைகளும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும் என்ற வலிமையான லட்சிய நோக்கம் உடையது இச்சங்கம். புதிய உறுப்பினர் களை சேர்த்தல், பழைய உறுப்பினர்களுக்கு ஒடதந இன் உரிமைத் தொகையினைப் பெற்றுத் தருதல்.
கண்ணதாசன், பட்டுக்கோட்டை விருதுகள், வாழ்நாள் சாதனையாளருக்கு 25 ஆயிரம் பொற்கிழி வழங்குதல், இளம் பாடலாசிரியர்களுக்கு‘இளம்தளிர் விருது" வழங்குதல். அனைத்து உறுப்பினர் களுக்கும்“மருத்துவக் காப்பீடு அட்டை பெற்றுத் தருதல், என சிறந்த பங்களிப்பை சங்கம் ஆற்றிவருகிறது.
இதன் மூத்த ஆலோசனைக் குழுத் தலைவராய்“மகாகவி ஈரோடு தமிழன்பன் விளங்குகிறார்.
வாலி, முத்துலிங்கம், புலமைப்பித்தன், மேத்தா, வைரமுத்து இவர்களின் வழிகாட்டுதலும் சங்கத்தை வழிநடத்துகிறது. இன்று சிறுகன்றாய் விளங்கும் சங்கம், நாளை கனிகள் தரும் மரமாய் காய்த்துக் குலுங்கும். பாடலாசிரியர் சமூகம் பயனுறும்.
உங்கள் முனைவர் பட்டம் பற்றி..?
நெடிய எழுத்துப் பணிக்குக் கிடைத்த சின்னதொரு அங்கீகாரமாய் இதைக் கருதுகிறேன். லண்டன் தமிழ்ச் செம்மொழிப் பல்கலைக் கழகம் தேர்ந்தெடுத்து அளித்த இந்த“மதிப்புறு முனைவர் பட்டம் இன்னும் எழுத என்னை ஊக்குவிக்கிறது. உற்சாகப்படுத்துகிறது.“
இளைஞர் நலம் - பெண்ணியம் - ஈழக்களம் என்னும் பிரிவில் என் எழுத்தைத் தேர்ந்தெடுத்து, மேடையில் அதை முழங்கி இப்பட்டத்தை எனக்களித்ததை எண்ணி பெருமையுறுகிறேன். சேற்று வயலில் இன்னும் தன் வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கும் அருணாசலம் - அஞ்சலை எனும் விவசாயிகளின் மகனுக்கு இந்த வெகுமதி ஓர் இளைப்பாறல்தான்.
உலகெலாம் வாமும் தமிழர்களுக்கும்- ‘இனிய உதயம்’ வாசகர்களுக்கும் நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
தமிழருக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டு செய்பவர்களை, காலம் தலைநிமிர்ந்து வாழுவைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்தத் தூய தொண்டினை“நக்கீரன் குழுமம் முப்பது ஆண்டுகளுக்கு மேல் இங்கு ஆற்றிவருகிறது. "நக்கீரன்" மற்றும் "இனிய உதயம்" இதழ்களின் நிறுவனர் அன்பு அண்ணன் நக்கீரன் கோபால்’ ஒரு“போராளி மனிதர் என்பதை உலகறியும். என் போன்ற அவரது பாட்டுத் தம்பிகள் பலரும் அறிவர். அண்ணன் கோபால் வீரத்தின் விளை நிலமாய்த் திகழ்பவர். கொடை உள்ளத்தின் கோயிலாய் விளங்குகிறவர். அவரால் உருவாக்கப்பட்ட இனிய உதயம் தமிழகம் மட்டுமல்ல உலக அளவில் தமிழ்ப் பணி செய்து வருகிறது. எண்ணற்ற புதிய படைப்பாளர் களுக்கு வாய்ப்பளித்து அரவணைக்கும் வேடந்தாங்க லாய்த் திகழ்கிறது. இலக்கிய வரமளிக்கும் ஆலயமாய் நமக்கு“இனிய உதயம்” விளங்குகிறது. தழிழர்களின் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைப் பறைசாற்றும்‘இனிய உதயத்தால்” தமிழர்கள் இன்னும் இன்னும் பயனுற வேண்டும். தமிழும், தமிழினமும் தலைநிமிர வேண்டும்.!