கொரோனா காலத்தில் நிகழும் மரணங்கள் அவலம் நிறைந்தவை.அதிலும் கொரோனாவால் நிகழ்பவை பேரவல மானவை என்கிற இந்தக் கருத்தையெல்லாம் தகர்த்தெறிந்து விட்டது எஸ்.பி.பி.யின் மரணம்.

'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?' என்று அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மீறி ரசிகர்கள் அனைவரும் தங்கள் துக்கத்தையும் கண்ணீரையும் வெளிப்படுத்திய தருணம் எஸ்.பி.பி.யின் மரணத்தின் துயரத்தைக் கடந்த பெருமையாகும். மக்கள் வெளிப்படுத்திய சோகமும் துக்கமும் கண்ணீரும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஒரு மகா கலைஞன் என்பதை நிரூபணம் செய்திருக்கின்றன.

எஸ்.பி.பி. ரசிகர்கள் கண்கள் கசிந்து கண்ணீர் வழியவிட்ட தால் அன்று காற்றில் ஈரப்பதம் அதிகரித்திருக்கக்கூடும்.

எஸ்.பி.பி. உடல் நலிவுற்றிருக்கிறார் என்ற செய்தி வந்தபோது உலகமெங்கும் பிரார்த்தனைகள் பீறிட்டு எழுந்தன.

Advertisment

எத்தனை கோடி கரங்கள் குவிந்தன, எத்தனை கோடி இமைகள் கவிழ்ந்தன; இதயங்கள் உருகின.தன்னலம் கருதாத எந்தப் பிரார்த்தனைக்கும் மதிப்பிருக்கும் அல்லவா? எனவேதான் காலன் தனது கோரப் பிடியினைச் சில நாட்கள் தளர்த்தி வைத்திருந்தான் போலும்.

அவரது உலக வாழ்க்கைக்கான முற்றுப் புள்ளியைக் காலன் சற்று தள்ளி வைத்திருந்த காரணம் கண்ணீர் கலந்த பிரார்த்தனைதான் என்று பிறகுதான் புரிந்தது. அவரது மரணத்தை ஒத்தி வைக்கக்கூடிய வலிமை பிரார்த்தனைக்கு இருந்தது. அப்படி நாம் செய்ததாக நினைத்துக் கொண்டிருந் தாலும் காலன் கொடியவன். சமயம் பார்த்து நல் பொக்கிஷங் களைக் களவாட அஞ்சாதவன்.நம் கவனம் தவறிய சில வினாடி களில் அவன் கவர்ந்து சென்றுவிட்டான்.

எஸ்.பி.பி. பல சாதனைகள் புரிந்திருக்கிறார் .ஆனால் அதை அவர் செய்யக் கருதிச் செய்ததில்லை.பூ மலரும்போது மணம் பிறப்பதுபோல் தானாக அமைந்தவை.

Advertisment

அவருக்கும் எண்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. அவர் பாடி வெளிவந்த முதல் பாடல் 'ஆயிரம் நிலவே வா'. பிரபல மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களைக் கடந்தவர். கின்னஸில் இச்சாதனை பதிவாகியுள்ளது. கன்னடத்தில் 15,000, தமிழில் 11,000, தெலுங்கில் 10,000 ,ஹிந்தியில் 4,000 என 16 மொழிகளில் பாடியிருக்கிறார்.

46 படங்களுக்கு இசையமைத் துள்ளார். ஒருநாள் சாதனையாக கன்னடத்தில் 21 பாடல்கள், தமிழில் 19 பாடல்கள், இந்தி யில் 16 பாடல்கள் என பாடி ஒலிப்பதிவு செய்யப் பட்டுள்ளன. உலகத்தை 30 முறை வலம் வந்திருக்கிறார்.

50 ஆண்டுகளாகத் திரைத்துறை யில் பாடிக் கொண்டிருக்கிறார்.

40 ஆண்டுகளாக வைரமுத்து வின் பாடல்களைப் பாடியிருக்கிறார். தேசிய விருது மற்றும் ஃபிலிம்பேர் விருது களை 6 முறை பெற்றிருக்கிறார். 25 முறை நந்தி விருது பெற்றிருக்கிறார்.

இன்னும் ஏராளமான விருது களைப் பெற்றவர். 70 படங்களில் நடித்துள்ளார். 10தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். கமலுக்கு மட்டுமே 100-க்குமேல் மொழிமாற்றுப்படங்களுக்குக் குரல் கொடுத்துள்ளார். இத்தனை எண்களைக் கூறி அவரது சாதனைகளை நாம் கணக்கிட முடிந்தாலும் அவருக்கு பிடித்தது ஒரே எண். ஒன்று என்பதுதான் அது.இசை என்கிற அந்த ‘ஒருமை’தான் அவரது பெருமை. மொழி இனம் மதம் கடந்து இசை என்கிற ஒரே புள்ளியில் இணைந்து இத்தனையையும் சாதித்திருக்கிறார்.

s

அவருக்குத் தெரிந்த ஒரே மொழி இசை.

ஒரு காலத்தில் அவர் இந்தியா முழுக்க ஒலிப்பதிவிற்காகச் சுற்றியவர். அப்போது அவர் ஓய்வெடுக்கும் நேரம் என்பது விமானத்தில் செல்லும் பயண நேரம்தான் என்ற அளவில் பறந்து பறந்து பாடியவர்.

கொரோனா காலத்திலும் அவர் பாடிக்கொண்டுதான் இருந்திருக்கிறார். அவர் இறுதியில் இசையமைத்துப் பாடியது கொரோனாசூழ் அசாதாரண காலத்தில் களப்பணியாற்றிடும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் காவலர்களுக்கும் நன்றி சொல்லும்படியான வைரமுத்து எழுதிய பாடல். உழைக்கும் கடவுள்களே உங்களுக்கெல்லாம் நன்றி’ எனத்தொடங்கி

வணக்கமய்யா வணக்கம் - எங்கள்

வாழ்க்கை உங்களால் நடக்கும் - உங்கள்

தேசத் தொண்டை வாழ்த்திக் கொண்டே

தேசியக் கொடியும் பறக்கும்’

என்று முடியும்.

எஸ்.பி.பி. பாடகர் மட்டுமல்ல இசை யமைப்பாளர், நடிகர், பின்னணிக்குரல் கலைஞர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.அவரது வாழ்க்கைக் குறிப்புகள், தரவுகள் எல்லாம் ஊடகங் களில் பல சுற்றுகள் வலம் வந்துவிட்டன.

ஒரு பின்னணிப் பாடகர் மறைவுக்கு இவ்வளவு தாக்கம் இதுவரை வந்ததில்லை; இவ்வளவு துக்கம் கவிந்ததில்லை. எஸ்.பி.பி.க்கு மட்டும் எப்படி நிகழ்ந்தது?

குடியரசுத்தலைவர் முதல் குடிசையில் வாழ்ந்த ரசிகன்வரை அவரது மறைவுக்காக கண்ணீர் கசிவது எப்படி?

தங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்ததாக அனைவரும் கண்ணீர் வடிக்கிறார்களே எப்படி?

எண்ணிக்கை அடிப்படையிலும் தொழில் அடிப்படையிலும் இந்த அபிமானம் வந்திருக்காது.

அதற்குச் சாத்தியமில்லை. எஸ்.பி.பி. என்ற குரல் தென்னக ரசிகர்கள் நெஞ்சங்களில் ஒரு பண்பாட்டு அடையாளமாகவும் தங்கள் வாழ்க்கையின் அத்தனை தருணங்களிலும் பொருந்தி ஒன்றிக் கலந்து விட்டதாக வும் இருப்பதுதான் காரணம்.

ரசிகர்கள் இவரது பாடல்களைத் தங்களது விடியற் காலை விருப்பமாகவும் காலை நேரத்துக் களிப்பாகவும் மதிய நேரத்தில் மகிழ்ச்சியாகவும் சாயங்காலத்து சந்தோஷமாகவும் இரவின் இன்பமாகவும் உணர் கின்றனர். இப்படி காலாகாலத்துக்கும் அவர் தன் பாடல்களால் ரசிகமனங்களில் நிறைந்து வந்திருக்கிறார்.

வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் அவரது பாடல்கள் கமழ்ந்து, கலந்து வந்திருப்பதே இதன் காரணம்.

எத்தனையோ பாடகர்கள் இருந்திருக்கிறார்கள்;

இறந்திருக்கிறார்கள் . ஆனால் எஸ்.பி.பி.யை மட்டும் தனி அன்பைப் பெற்றுத் திகழ்ந்த ஒருவராக உணரமுடிகிறது. காரணம் அவர் பாடல் பாடும்போது மெட்டும் வரியும் மட்டும் வெளிப்படுவதில்லை.

அதை மீறி தனது உணர்வு ஓட்டத்தையும் தன் குரலின் மூலம் வெளிப்படுத்தியவர்.

தனது இளமை குன்றாத கந்தர்வக் குரலால் இப்படி அரை நூற்றாண்டாக பாடி வந்தவர், கே. வி. மகாதேவன் முதல் அனிருத் வரை பாடியிருக்கிறார்.

எம்ஜிஆர் -சிவாஜி ,கமல்- ரஜினி, அஜித் -விஜய் மட்டு மல்ல அதற்கு அடுத்த தனுஷ் போன்ற நான்காவது தலைமுறை நடிகர்களுக்கும் பாடியிருக்கிறார்.

திரை இசை ரசிகர்கள் தங்கள் இதயத்தின் அந்தரங்க அறைகளில் எஸ்.பி.பி.க்கு ஓர் இடம் கொடுத்து வைத்துள்ளார்கள்.ஒரு தொழில்ரீதியான பின்னணிப் பாடகருக்கு இப்படி ஓர் அன்பாபிமானம் கிடைத்துவிடாது. இதற்கு அவரது கண்ணியம், மனிதநேயம் ,அனைவருக்கும் மரியாதை தரும் பண்பு, பழகியவரை மதிக்கும் பாங்கு போன்ற அணிகலன்களுடன் தன் பாதையில் பயணித்ததுதான் காரணம் எனலாம்.

எந்தக் கருத்து சொன்னாலும் எதிர்க்கருத்து கூறும் அதிகப் பிரசங்கிகள் நிறைந்த இந்த அவசரகால சைபர் யுகச் சூழ்நிலையில்கூட எட்டு பக்கத்திலிருந்தும் ஏகோபித்த முறையில் இரங்கல் தெரிவிப்பதும் கலங்கி நிற்பதும் இவருக்கு மட்டுமே நிகழ்ந்துள்ளது. காரணம்? அவர் மேடைகளில் கூறுவார் ""என்னுடைய பாதையில் வெற்றிகரமாக பயணிக்கக் காரணம் இரு இறக்கைகள். ஒன்று வித்தை இன்னொன்று வினயம்"" என்று. அப்படி ஆற்றலையும் அடக்கத்தையும் பற்றிக்கொண்டு சாதனை வானில் பறந்து சிறந்தவர்.

அப்படித் திறமையும் பண்பும் அவரது இரு துடுப்புகளாக அவரது பயணத்தில் உதவியிருக்கின் றன.அந்தத் துடுப்புகளைக் கொண்டுதான் அனைத்து அலைகளிலும் எதிர்நீச்சல் போட்டிருக்கிறார்.

ஆயிரம் நிலவே வா ’என்று அவர் பாடலைத் தொடங்கி இருந்தாலும் அவரை ஆயிரம் பிறை காணமுடியாமல் காலன் கவர்ந்துவிட்டான். காரணம் எமனுக்கு சாகித்தியம் மட்டுமல்ல சங்கீதமும் தெரியாது. இருந்தாலும் அவர் பல்லாண்டுகள் தனது பாடல்களின் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பார்.

ஆர்வமிகுதிப் பாடகனாக அறிமுகமாகித் தொழில்முறைப் பாடகனாக வளர்ந்து பரபரப்பான திரைக்கலைஞனாக மாறி மக்கள் கலைஞனாக மரணிப்பது என்கிற வரம் எஸ்.பி.பி.யின் வாழ்க்கையில் வாய்த்திருக்கிறது. அதனால்தான் அவரது மறைவுக்கு அச்சு ஊடகங்கள் அழுதன. காட்சி ஊடகங்கள் கதறின. சமூக ஊடகங்களும் சஞ்சலப்பட்டு கண்ணீர் வடித்தன.

பிரதமர் முதல் முதல்வர் வரை அதிகாரத் தளத்திலும், செல்வந்தர் முதல் ஏழைகள் வரை என்று மக்கள் தளத்திலும் அவர் தன் இசையால் ஆட்சி செலுத்தி இருக்கிறார்.

பாசத்துக்குரிய நண்பனை இழந்ததாகப் பாரதிராஜா பரிதவிக்கிறார். இளையராஜா உருகி இசையஞ்சலி பாடுகிறார். வைரமுத்து தன் பனிவிழும் மலர்வனம் பாலைவனமானதாய்க் கண்ணீர் விடுகிறார்.

கே .ஜே .ஜேசுதாஸ் தனது உடன்பிறவா சகோதரனை இழந்துவிட்டதாக உருகுகிறார்.

என்னுடைய குரலாகப் பல ஆண்டுகள் ஒலித்தவர் என்கிறார் ரஜினி துயரத்துடன். ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என்கிறார் கமல். நெகிழ்ச்சியுடன் . பாடகர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதை எஸ்.பி.பி. பெயரில் வழங்கவேண்டும் என்கிறார் தயாரிப்பாளர் கேயார். பாரத ரத்னா கோரிக்கையும் எழுகிறது. தென்திசை தாண்டி வடக்கே சச்சின் டெண்டுல்கர் முதல் சல்மான்கான் வரை சஞ்சலப்பட்டு நிற்கிறார்கள்.

திரை உலகின் அனைத்து தரப்புக் கலைஞர்களும் ஒவ்வொருவரும் ஓர் இரங்கல் செய்தியோடு கண்கலங்கி நிற்கிறார்கள்.எஸ்.பி.பி.யுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொண்ட அணுக்க அனுபவங்களைச் சுமந்துகொண்டு உலகின் ஆயிரக்கணக்கானவர்கள் அடர்மௌனம் காக்கிறார்கள்.

அரசு மரியாதையுடன் அடக்கம்செய்ய முடிவெடுத்து தமிழகஅரசும் இந்தக் கலைஞனை உயர்த்தி இருக்கிறது.

எஸ்.பி.பி. பாடலுக்கு மெட்டு தாண்டி, வரிகள் தாண்டி உயிரோட்டத்தை வழங்குபவர். அவர் தனது குரலின் மூலம் பாடல் உணர்வுக்கு ஒரு உயரம் அளிப்பவர்.

அழியாத கோலங்கள் ' படத்தில் இடம்பெறும் 'நான் எண்ணும்பொழுது ஏதோ சுகம் எங்கோ தினம் செல்லும் மனது' என்ற பாடல் சலீல் சவுத்ரி இசையில் உருவானது. அதன் இந்தி மூலத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய 'நா ஜியா லகே நா' பாடலில் லதா அளித்ததைவிட குழைவையும் அழகையும் எஸ்.பி.பி. அளித்திருக்கிறார் என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இது ஒரு சோறு பதம்.

எஸ்.பி.பி. தன் பாடல்களால் காதல் வெற்றியைக் கொண்டாடி இருக்கிறார். காதல் தோல்வியை வலியுணர்த்தியிருக்கிறார் .துவளும்போது தூக்கி நிறுத்தியிருக்கிறார். காயம் பட்டபோது களிம்பு தடவியிருக்கிறார்.

தாலாட்டு முதல் ஒப்பாரி வரை தரம் காட்டி யிருக்கிறார். உறவை உயர்த்தி, பிரிவை உணர்த்தி எத்தனை பாடல்கள். அவரது குரலில் மட்டும்தான் கந்தர்வம் மிளிரும் ; கந்தகம் எரியும்.மந்தமாருதம் வீசும்; சண்டமாருதம் சீறும்.

அவர் பாடுவதோடு மட்டுமல்லாமல் சிரிப்பார், சிலிர்ப்பார், அழுவார், எழுவார், துள்ளுவார், கிள்ளுவார். இழைவார், குழைவார், கொஞ்சுவார், கெஞ்சுவார், இருமுவார், செருமுவார், கிறங்குவார், முழங்குவார், பொருமுவார், உறுமுவார், உருகுவார், மறுகுவார், அணுங்குவார், சிணுங்குவார், அலுங்கு வார், குலுங்குவார், சீறுவார், சிதறுவார், சீண்டுவார், வேண்டுவார். இப்படி இசைக்குறிப்புகள் சொல்லாத உணர்வையும் பாடலில் அவர் தூவுவார். அப்படித் தனது பாடல்கள் அனைத்திலும் இவர் யாரும் எதிர்பார்க்காத ஜரிகை அலங்காரம் செய்து இருப்பார்.

அதனால்தான் அவரைத் தம்மவராக மக்கள் உணர்கிறார்கள்.

என்னடி மீனாட்சி, நான் பொல்லாதவன், ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், அண்ணாத்தே ஆடுறார், ஹேப்பி நியூ இயர், எங்கேயும் எப்போதும், சிங்காரி சரக்கு நல்ல சரக்கு, தாயின் மணிக்கொடி, புதுச்சேரி கச்சேரி, வந்தேன்டா பால்காரன், தேவுடா தேவுடா, மானூத்து மந்தையிலே போன்ற பாடல்கள் உற்றறிவோர் உள்ளத்தில் உற்சாக மின்சாரம் பாய்ச்சுபவை.

அந்தப் பாடல்களில் அவர் காட்டிய கம்பீரமும் கொண்டாட்டமும் அவரை மக்களோடு இன்னும் அணுக்கப்படுத்தின.

மணியோசை கேட்டு எழுந்து, வந்தனம் வந்தனம், தேவதை இளம்தேவி, மண்ணில் இந்தக் காதல், உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன், மலரே மௌனமா?, காதல் ரோஜாவே, முன்பனியா முதல் மழையா போன்றவற்றில் வரிகளையும் தாண்டி குரல் நுணுக்கங்களால் செறிவு செய்தவர். உணர்வு இழைகளால் உயரம் தந்தவர்.

அவர் மக்கள் கலைஞராக மாறிவிட்டார். அவரது பாடல்கள் மக்களின் காதுகளில் என்றும் ரீங்கரித்துக் கொண்டிருக்கும். அவை இந்த காற்றுவெளிகளில் என்றும் கரைந்து தவழ்ந்து கொண்டிருக்கும்.

கலைஞர்களுக்கு மரணமில்லை எஸ்.பி.பி.யின் உயிரை எமன் எடுத்துக்கொண்டு விட்டான். அவரது பூத உடலை பூமி எடுத்துக்கொண்டு விட்டது. அவரது குரலை காற்றுவெளி எடுத்துக்கொண்டு விட்டது. அவரது புகழைத் திரையுலகம் எடுத்துக்கொண்டு விட்டது. அவரது பெயரை வரலாறு எடுத்துக்கொண்டு விட்டது.

மடை திறந்து தாவும் நதியலை மட்டுமல்ல, மனம் திறந்து கூவும் சிறு குயில் அவர். காற்றின் தேசம் எங்கும் அவரது கானம் சென்று தங்கும்.காலத்தின் ஒவ்வொரு நொடித்துகளிலும் அவரது குரல் நுழைந்து இழைந்து நிறைந்திருக்கும்.

இப்போதும் கூட எங்கோ ’வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்’ என்று பாடிக் கொண்டிருப்பார்.’வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது ’என்று வருத்தப்பா பாடுவார்.

என்னோடு பாட்டு பாடுங்கள், எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள் ; இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள் சுகம் தேடுங்கள்’ என்று பாட அழைப்பார்.

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம், ஆகாயம் பூக்கள் தூவும் காலம், நாளை என் கீதமே எங்கும் உலாவுமே’ என்று மகிழ்வார்.’போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே , ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா’ என இழைவார்.

பாடும் நிலாவே தேன் கவிதை, பூ மலர உன் பாடலை நான் கேட்கிறேன்’ என பாமாலையை அவர் கோர்ப்பார்.

'இசைக் கலைஞன் என் ஆசைகள் ஆயிரம், நினைத்தது பலித்தது' என்றவர் அவர். அதனால் இசைக்கென இசைக்கின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் அவருக்கே தான்.

தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே ,மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க’. ’ஆகாயம் என் பாட்டில் அசைகின்றது, என் சங்கீதம் பொய் என்று யார் சொன்னது?’

'ராகம் ஜீவனாகும், நெஞ்சின் ஓசை தாள மாகும்;கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்' போன்றவற்றில் தெரிவது அவர் குரல் மட்டுமா? முகமும் தான்.

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என ஆசைப்பட்டவர், ’சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன் ,சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன் உச்சந்தலையில் மழையைக் கேட்டேன் உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்’ என்று தேடிச்சென்று விட்டாரா?

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை, கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம், கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல?, நந்தா என் நிலா , வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா, பாடும் வானம்பாடி ,உனக்கென்ன மேலே நின்றாய், கடவுள் அமைத்து வைத்த மேடை ,வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் ,நீல வான ஓடையில் , இது குழந்தை பாடும் தாலாட்டு, தகிட ததிமி தகிட ததிமி தந்தானா,சம்சாரம் அது மின்சாரம்,தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ ,அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி,சோகம் இனி இல்லை என்று எங்காவது உலக வெளியின் ஒவ்வொரு நொடியிலும் அவரது பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

'உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொடுவேன்' என்றவரை மறக்கமுடியாது. நிறைவாழ்வு வாழ்ந்த அவரது நினைவைக் கொண்டாடுவோம். ஏனென்றால் அவர் நம் நெஞ்சில் இட்ட கோல மெல்லாம் அழிவதில்லை என்றும் அது கலை வதில்லை; எண்ணங்களும் மறைவதில்லை! இப்படி முடிக்கும் போதும் அவர் குரல் இப்படி எங்கோ ஒலிக்கும் 'இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்'