அதிகபட்சம் பன்னிரண்டு வயது மட்டுமே மதிக்கக்கூடிய ஒரு சிறுவனாக அவன் இருந்தான். ஆனால் அந்த வளர்ச்சி அவனுடைய சரீரத்திற்கு இல்லை. அங்கிருந்த மொழியும் அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு மொத்தத்தில் தெரிந்திருந்தது பழைய தில்லியின் தெருக்களில் அவன் கேட்டு வளர்ந்த உருது மட்டும்தான். அதனால் "யத்தீம்கானா'வின் மற்ற சிறுவர்களிலிருந்து பல நேரங்களிலும் அவன் விலகியே நின்றான்.
அங்குள்ள வாழ்க்கையில் அவனுக்கு கஷ்டங்கள் எதுவுமில்லை. நல்ல உணவு, நல்ல ஆடை, நல்ல தங்குமிடம், நல்ல நண்பர்கள்... ஆனால்... எனினும், காரணமற்ற ஒரு பயம் அவனை எப்போதும் பாடாய்ப்படுத்திக் கொண்டேயிருந்தது. சில நேரங்களில் இரவு வேளைகளில் கெட்ட கனவுகளைக் கண்டும்... அப்படி இல்லாமலேகூட அவன் திடுக்கிட்டு கூப்பாடு போடுவதுண்டு.
அப்படிப்பட்ட சமயங்களில் நண்பர்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும், அவனால் எதுவுமே கூற முடிந்ததில்லை. மொழிபற்றிய பிரச்சினை மட்டுமல்ல. இன்னும் சொல்லப்போனால்... இந்த குறுகிய காலத்திற்கிடையே... மற்றவரிகள் கூறக்கூடிய மலையாளத்தைக் கொஞ்சமாவது புரிந்துகொள்வதற்கும், மனதிற்குள் இருப்பதைக் கொஞ்சமாவது... தவறுடன் இருந்தாலும்... மற்றவர்களுக்குப் புரியவைப்பதற்குமான திறமையை அவன் பெற்றிருக்கிறானே!
எனினும், "குல்முஹம்மது... நேத்து ராத்திரி நீ ஏன் திடுக்கிட்டு சத்தம் போட்டே?''
என்று நண்பர்களும், சமையலறையில் இரவு வேளையில் உறங்கக்கூடிய பணியாட்களும் கேட்கும்போது, அவனால் பதைபதைப்புடன் நிற்க மட்டுமே முடிந்தது. எந்த சமயத்திலும் எதையும் தெளிவாகக் கூறமுடிந்ததில்லையே!
மாலை நேரங்களில் எப்போதும் நண்பர்கள் பந்து விளையாடுவதைப் பார்த்தவாறு அவன் நின்றுகொண்டிருப்பான். அவன் எந்தச் சமயத்திலும் பந்து விளையாடியதில்லை. இன்றும் அவ்வாறு, விரிந்த கண்களில் சந்தோஷமும் ஆச்சரியமும் வழிய மைதானத்தின் ஓரத்தில் நின்றுகொண்டிருக்கும்போது, அலுவலகத்திலிருந்து ப்யூன் வந்து மேனேஜர் அழைப்பதாகக் கூறினான். அதைக் கேட்டவுடன் அவனுடைய மனதில் பயம்தான் முதலில் உண்டானது. பொதுவாக எதுவுமே கூறாமல் அவன் கேட்டான்:
"எதுக்கு?''
அலுவலகத்திலிருந்து வந்த பணியாளுக்கு சில விஷயங்கள் தெரிந்திருந்தன. எனினும், எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாதாரணமான குரலில் அவன் கூறினான்:
"ஓ... என்னவோ சொல்றதுக்கு...''
குல்முஹம்மது பணியாளுக்குப் பின்னால் மௌனமாக நடந்தான். அப்போது அவன் சுற்றிலுமிருந்த எதையுமே பார்க்கவில்லை. அவனுடைய கண்கள் கீழே... பூமியில் மட்டுமே இருந்தன.
அலுவலகத்தில் மேனேஜர் வாசலுக்கு நேரெதிரில் அமர்ந்திருந்தார். மேனேஜருக்கு முன்னால் வேறொரு மனிதரும் இருந்தார். அவர்களுக்கிடையே என்னவோ மிகவும் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்த அறைக்குள் குல்முஹம்மது இதற்குமுன்பு ஒருமுறை வந்திருக்கிறான்.
ஆறு மாதங்களுக்கு முன்னால் இங்கு வந்துசேர்ந்த முதல் நாள்... அதற்குப் பிறகும் பலமுறை மேனேஜரைப் பார்த்திருக்கிறான். மேனேஜர் அவனிடம் பேசவும் செய்திருக்கிறார்.
சிறுவர்கள் அனைவரும் கூடி ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடும் அறையில், படுத்திருக்கும் கூடத்தில், வகுப்பறையில், விளையாடும் இடத்தில்... மேனேஜர் மிகவும் சாந்தமான குரலில்தான் யாரிடமும் பேசுவார். அவனிடமோ மேலும் சாந்தமான குரலில்... எப்போதும் மிகவும் பிரகாசமான ஒரு புன்சிரிப்பு...
"என்ன... குல்முஹம்மது... சாப்பாடு திருப்தியா இருக்கா?'' இல்லாவிட்டால்... "படிப்பெல்லாம் எப்படி யிருக்கு குல்முஹம்மது?'' அதுவும் இல்லாவிட்டால்... "குல் முஹம்மது... விளையாடலையா?'' இவ்வாறு எதையாவது...
ஆனால், அப்போதெல்லாம் சந்தோஷமும் பதைபதைப்பும் காரணமாக எதுவுமே கூறமுடியாமல் அவன் வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றிருப்பான்.
மேனேஜர் பேசியது மலையாளத்தில் மட்டுமல்ல. பழைய தில்லியின் உருதுவிலும்தான்...
எனினும், எந்த சமயத்திலும் அவரிடம் பதிலென்று அவனால் எதுவுமே கூறமுடிந்ததில்லை.
வெளியே... வாசலில் அவன் தயங்கியவாறு நின்றிருந்தான். பார்க்க வந்திருப்பது யார்?
அப்போது மேனேஜரின் மனதில் வேறு சில விஷயங் கள் இருந்தன. அவர் குல்முஹம் மதுவை பாசத்துடன் பார்த்தார். இந்தச் சிறுவனையா சில மாதங் களுக்குமுன்பு தனக்கு சிறிதும் அறிமுகமில்லாத ஒரு போலீஸ் காரர் தனக்கு முன்னால் அழைத் துக்கொண்டு வந்தார்! கரியும் அழுக்கும் படிந்து, நீண்டநாட்கள் பயன்படுத்தியதால் நைந்துபோக ஆரம்பித்திருந்த பைஜாமாவையும் சட்டையையும் அணிந்திருந்த, எந்த நிமிடத்திலும் சுய உணர்வை இழந்து விழக்கூடிய நிலையிலிருந்த, முற்றிலும் சோர்வடைந்துபோய்க் காணப் பட்ட ஒரு பையன்... இறுதி சுவாசத்தை விடப்போகும், கண்கள் அவ்வப்போது மேல்நோக்கி செருகிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய கோழிக்குஞ்சைப்போல அவன் இருந்தான். அவனை ஒப்படைத்துவிட்டு, போலீஸ் காரர் கூறினார்:
"சார்... நான் உங்களைப் பத்தியும், உங்களோட நிறுவனத் தைப் பத்தியும் தெரிஞ்சிருக்கேன். உங்களோட புகழ்பெற்ற தலைவ ரைப் பத்தியும் அறிஞ்சிக்கேன். அதனாலதான் இவனை அழைச் சிக்கிட்டு இங்க வந்தேன். இவன் நடைபாதையில தனியா உட்கார்ந்திருந்தான். பார்த்ததும் எனக்கு ரொம்ப கவலை உண்டாகிட்டது...''
போலீஸ்காரர் சிறுவனின் சட்டையை உயர்த்திவிட்டுக் கூறினார்:
"சார்... இதைப் பார்த்தீங்களா?''
சிறுவனின் வயிற்றிலும் நெஞ்சிலும் கைத்தண்டிலும் நெருப்பைக்கொண்டு சுட்ட அடையாளங்கள் இருந்தன.
போலீஸ்காரர் கூறினார்:
"பழுக்க வச்ச கரண்டியால...''
சிறுவன் சத்தமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். போலீஸ்காரர் கவலையுடன் மீண்டும் கூறினார்:
"நான் இவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்திருப்பேன். ஆனா இப்போ இவனுக்கு சாப்பிடுறதுக்கான சக்தி இல்ல. அதனால தேநீர் மட்டும் குடுத்தேன்.''
அன்று எந்த நிமிடத்திலும் அலுவலக அறையில் சுய உணர்வையிழந்து இறந்துவிடுவான் என்று தோன்றவைத்த சிறுவன்தான் இப்போது தடித்து பருமனாகி, சுத்தமான ஆடையையும் அணிந்து...
என்ன ஒரு மாற்றம்!
புறப்படும்போது போலீஸ்காரர் கூறினார்:
"இவன் உங்களோட குழந்தை...''
மேனேஜருக்கு முதலில் அதற்கான அர்த்தம் புரியவில்லை. பிறகு... புரிந்தபோது அவர் உள்ளம் குளிர சிரித்தார்.
"பாருங்க... இங்கு அந்தமாதிரி எங்களோட குழந்தை, உங்களோட குழந்தைன்னு எதுவுமில்ல. அப்படி பார்க்கக்கூடிய இடங்கள் இருக்கலாம். ஆனா இங்க இல்ல. குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டதா என்பதை மட்டுமே நாங்க பார்ப்போம். மனநலம் பாதிக்கப்பட்ட நபரா இருந்தா இங்குள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி...''
போலீஸ்காரர் தயக்கத்துடன் கூறினார்:
"நான் அப்படி எதையும் மனசுல வச்சு சொல்லல...''
அப்போது அவர் சிரித்துக்கொண்டே கூறினார்:
"பரவாயில்ல...''
இன்று... அவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்தபோது, இளைஞரான மேனேஜரின் முகத்திலிருந்து புன்சிரிப்பு மறைந்து, அவருடைய உணர்ச்சி வெளிப்பாடு அதிக கனம் கொண்டதாக மாறியது. சிறுவன் அப்போதும் கதவுக்கு வெளியே தயங்கியவாறு நின்றுகொண்டிருந்தான்.
மேனேஜர் கூறினார்: "வா குல்முஹம்மது. நீ ஏன் அங்கேயே... அப்படி நின்னுக்கிட்டு இருக்கே? உள்ள வா...''
தயங்கித் தயங்கி அறைக்குள் நுழைந்த சிறுவனின் கண்கள் மேனேஜருக்கு எதிரில் அமர்ந்திருந்த ஆளின் முகத்தில் பதிந்தபோது... அவன் அதிர்ச்சியடைந்து விட்டான்.
அவனுக்கு உடனடியாகத் தோன்றியது- பின்னால் திரும்பி ஓடவேண்டும் என்பதுதான். ஆனால், அவனுடைய கால்கள் அசையவில்லை. அவை முற்றிலுமாகத் தளர்ந்துபோயிருந்தன.
அவனிடம் உண்டான மாற்றத்தை மேனேஜர் கவனித்தார்.
மேனேஜருக்கு எதிரில் ஆமர்ந்திருந்த ஆள் அப்போது நாற்காலியிலிருந்து எழுந்தான்.
"மகனே... நீ...''
அந்த ஆளால் முழுமையாகக் கூறமுடியவில்லை.
மேனேஜர் விலக்கியது மட்டுமே காரணமல்ல.
அவன் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்தான்.
மேனேஜர் சிறுவனிடம் கேட்டார்:
"குல்முஹம்மது... உனக்கு இவரைத் தெரியுமா? இவர் தில்லியிலிருந்து வந்திருக்காரு. ஒரு பத்திரிகையில உன் புகைப்படத்தையும் செய்தியையும் பார்த்துட்டு... நீயும் தில்லிக்காரன்தானே? சொல்லு... உனக்கு இவரைத் தெரியுமா?''
சிறுவன் "தெரியாது' என்பதைப்போல தலையை ஆட்டினான்.
"உன் அப்பான்னு சொல்றாரு. உண்மையா?''
அவன் அப்போது உடனடியாகக் கூறினான்:
"இல்ல... என் அப்பா இல்ல...''
மேனேஜர் கேட்டார்:
"அப்படின்னா... உன் அப்பா..?''
சிறுவன் கூறினான்:
"அம்மா இறந்தவுடனே அப்பாவும் இறந்துட்டாரு.''
அவனுடைய குரல் வழக்கத்தில் இல்லாதவகையில் உரத்து இருந்தது. எனினும், இடையே அது இடறியது.
வந்திருந்த ஆள் பேச முற்பட, மேனேஜர் அவனை விலக்கினார்.
"உன் பேரு குல்முஹம்மது இல்ல... ஹனீஃப்னும், குல்முஹம்மதுங்கறது உன் நண்பனோட பேர்னும் இவர் சொல்றாரு. அது உண்மையா?''
சிறுவன் உரத்த குரலில் கூறினான்: "நான்... குல்முஹம்மதுதான். எனக்கு ஒரு நண்பனும் இல்ல.''
அப்போது தில்லியிலிருந்து வந்திருந்த ஆள் கோபப் பட்டு என்னவோ சத்தமாகக் கூறினான். தொடர்ந்து முகத்தை மூடிக்கொண்டு அழவும் ஆரம்பித்தான். குல்முஹம்மதுவும் பதைபதைப்பில் இருந்தான்.
மேனேஜர் அவனிடம் கூறினார்:
"குல்முஹம்மது... நீ அறைக்கு போ. பிறகு நான் உன்கிட்ட பேசறேன். இப்ப வேணாம்...''
சிறுவன் போவதைப் பார்த்து, வந்திருந்த ஆள்
அடக்கமுடியாத கோபத்துடன் கூறினான்:
"நான் இனிமேலும் வருவேன். அப்போ என் கையில நீதிமன்றத்தோட உத்தரவும் இருக்கும். எனக்கு உதவறதுக்கு காவல் துறையும் இருக்கும். நான் இப்படி யெல்லாம் நினைக்கல. அதனாலதான்... பார்க்கலாமே! அப்போ நீங்க என்ன செய்வீங்கன்னு...''
மேனேஜர் அவனுடைய முகத்தை கவலையுடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். அவருடைய மனதில் அப்போது இருந்தது... இளம் வயதில் பாடப் புத்தகத்தில் படித்த ஒரு கதைதான்.
சித்தார்த்தன் என்றும் தேவதத்தன் என்றும் பெயர்களைக்கொண்ட இரு இளவரசர்கள் இருந்தார்கள். சித்தார்த்தன் அனைத்து உயிர்களின்மீதும் அன்பையும் இரக்கத்தையும் வைத்திருந்தான். அவனுடைய உறவினனான தேவதத்தன் அவ்வாறில்லை. அவன் கொடூரகுணம் கொண்டவனாக இருந்தான். ஒருநாள் சித்தார்த்தன் தோட்டத்தில் காற்று வாங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு அன்னப் பறவை ஆகாயத்திலிருந்து அவனுடைய மடியில் வந்து விழுந்தது. அன்னப் பறவையை யாரோ அம்பெய்து வீழ்த்தியிருக்கிறார்கள். கவலைக்குள்ளான சித்தார்த்தன் இரக்க உணர்வுடன் அன்னப் பறவையின் சரீரத்திலிருந்து அதற்கு சிறிதும் வலிக்காமல் அம்பைப் பிடுங்கினான். காயத்திற்கு மருந்து தடவினான். அதைத் தடவித் தடவி குணப்படுத்தினான்.
அப்போது தேவதத்தன் அங்குவந்து கோபத்துடன், "இது என் பறவை. நான்தான் இதை அம்பெய்து வீழ்த்தினேன். இது எனக்கு வேண்டும்'' என்று கூறினான்.
ஆனால், இளவரசன் சித்தார்த்தன் பறவையை தேவ தத்தனுக்குக் கொடுக்கவில்லை.
அவன் கூறினான்: "இந்தப் பறவை என் பறவையோ உங்களுடைய பறவையோ அல்ல. இது ஆகாயத்திற்குச் சொந்தமானது. பிறகு.... இதன்மீது யாருக்காவது ஏதாவது உரிமையென்ற ஒன்றிருப்பதாக இருந்தால், அது... இதைக் காப்பாற்ற முயன்ற எனக்குதான். கொல்லமுயன்ற உங்களுக்கல்ல...''
இவ்வாறு கூறியவாறு சித்தார்த்தன் பறவையை ஆகாயத்தில் பறக்கவிட்டான். பறவை நன்றியுணர்வுடன் யாரும் பார்க்காத உயரங்களை நோக்கிப் பறந்து சென்றது.
தில்லியிலிருந்து வந்திருந்த ஆள் எரிச்சலுடன் மீண்டும் கூறினான்:
"நீங்களன என்ன... எதுவுமே சொல்லாம சிந்திச்சிக்கிட்டிருக்கீங்க?''
அந்தக் கதையை அந்த ஆளுக்குக் கூறவேண்டுமென மேனேஜர் நினைத்தார். ஆனால் பிறகு வேண்டாமென ஒதுக்கிவிட்டார்.
போகும்போது தில்லியிலிருந்து வந்திருந்த ஆள் மீண்டும் ஞாபகப்படுத்தினான்:
"நான் இனிமேலும் வருவேன்.''
இந்தமுறை மேனேஜர் கூறினார்:
"பாருங்க... நீங்க நீதிமன்றத்தோட தாளோட வர்றதா சொன்னீங்கள்ல? நாங்க எந்த சமயத்திலும் உங்களை கேவலமா நினைக்கல. நாங்க சட்டத்தை மதிக்கிறவங்க. ஆனா தயவுசெஞ்சு நீங்க கொஞ்சம் சிந்திச்சுப் பார்க்கணும். இந்தச் சிறுவனை அழைச்சிக்கிட்டு, தில்லிவரை போகமுடியும்னு உங்களால உறுதியா கூறமுடியுமா? அதுக்குமுன்ன அவன் ஏதாவதொரு பாலத்திலயிருந்து கீழே குதிச்சு உயிரைவிட முயற்சிச்சா.... இல்ல... ஓடிக்கிட்டிருக்குற ரயிலோட சக்கரங்களுக்கு முன்னால தாவி குதிச்சா... நடக்கலாம்ல? உங்களுக்கு நான் சொல்றது புரியுதுல்ல? எதுக்கு இந்த பாவச் செயலைச் செய்யணும்?''
வந்திருந்த ஆள் எதுவுமே கூறாமல் நின்றிருக்க, மேனேஜர் தொடர்ந்து கூறினார்:
"உங்களோட அன்புக்குரிய மகன்னுதானே சொல்றீங்க? அவனுக்கு ஒழுங்கா ஏதாவது உணவு கொடுத் திருக்கீங்களா? அவனோட சரீரத்தை நீங்க பார்த்திருக் கீங்களா? அந்த சூடுபட்ட அடையாளங்களை? எப்படி இதையெல்லாம் ஒரு சிறுவனுக்கு உங்களால செய்ய முடிஞ்சது?''
வந்திருந்த ஆளிடம் பதிலெதுவும் இல்லை. அவன் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தான். மேனேஜரின் முகத்தைப் பார்க்காமல் அவன் மெதுவான குரலில் கூறினான்:
"இனிமேல இதெல்லாம் நடக்காது.''
மேனேஜர் கேட்டார்:
"அது எப்படி?''
வந்திருந்த ஆள் தாழ்ந்த குரலில் கூறினான்:
"அவள் இப்போ அங்க இல்ல.''
மேனேஜர் கேட்டார்:
"இறந்தாச்சா?''
மேனேஜரின் குரலில் கடுமையான கோபமிருந்ததது. வந்திருந்த ஆள் அதைப் பொருட்படுத்தாமல் கூறினான்:
"இல்ல... அவள் என்னைவிட்டு போய்ட்டா.''
அப்போது மேனேஜர் கேட்டார்:
"இனிமேல வரப்போற பெண் விஷயத்திலும் இதுவே நடக்காதா? அப்போதும் நீங்க வெறுமனே இதையெல்லாம் பார்த்துக்கிட்டு...''
மேனேஜர் திடீரென நிறுத்தினார். அவர் நினைத் தார்: அப்படியே இல்லையென்றாலும், நான் எதற்கு இதையெல்லாம்...
அந்த ஆள் சென்ற வழியைப் பார்த்தவாறு மேனேஜர் அதற்குப்பிறகும் சிறிதுநேரம் அங்கேயே நின்றிருந்தார்.
வார்த்தைகளால் கூறமுடியாத அளவுக்கு ஒருவகை யான சோர்வு அவரை ஆக்கிரமித்தது.
தொடர்ந்து உயர்நிலைப் பள்ளி, இஸ்லாமிய பள்ளிக்கூடம், மகளிர் கல்லூரி, தொழில் பயிற்சி மையம் ஆகியவற்றுக்கு மத்தியில் அவர் பலவற்றையும் சிந்தித்தவாறு சிறுவர்கள் தங்கியிருக்கும் கூடத்திற்குச் சென்றார்.
அவரை எதிர்பார்த்து அங்கு குல்முஹம்மது இருப்பானல்லவா?
ஆனால், குல்முஹம்மது அங்கில்லை. கூடத்திற்குச் சென்ற அவன் சிறிது நேரம் மட்டுமே அங்கு இருந்தான். சிறுவர்கள் அனைவரும் அப்போதும் விளையாட்டு மைதானத்தில் இருந்தார்கள். எப்போதும் அவனுடன் இருந்த பயவுணர்வு, பயங்கரமான அதன் படத்தை விரித்து அவனை நடுங்கச் செய்து, அவனை இறுகக் கட்டி, மூச்சுவிட முடியாமல் செய்தது. அப்போது அவன் யாருக்கும் தெரியாமல் குளியலறைக்குப் பின்னா லிருந்த சுவரில் ஏறி, பக்கத்து நிலத்திற்குத் தாவினான். இடிந்துவிழப் போகும் நிலையிலிருந்ததும், ஆட்கள் வசிக்காதிருந்ததுமான ஒரு பெரிய வீடும், பல நூற்றாண்டு கள் பழமை வாய்ந்த சில மரங்களும் அங்கு இருந்தன. மரங்களின் நிழலில் அவன் குனிந்து நடந்தான். சாலைக் குச் செல்வதுதான் அவனுடைய இலக்கு. அங்குபோய்ச் சேர்ந்ததும், அவன் ஒரு நிமிடம் தயங்கி நின்றான். ஆனால், பிறகு... அவனுக்குப் புரிந்துவிட்டது. வலப்பக்கத்திலிருந்த சாலையின் வழியாகச் சென்றால் ரயில் நிலையத்தை அடையலாம். அதனால் அவன் இடப்பக்கமாகத் திரும்பினான்.
இடப்பக்கம் செல்லக்கூடிய சாலை கடலுக்கு முன்னால் முடியக்கூடியதாக இருந்தது.
_________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
"இனிய உதயம்' மாத இதழில் என் மொழிபெயர்ப்புப் படைப்புகள் 2002-ஆம் ஆண்டு ஜூலை இதழிலிருந்து பிரசுரமாக ஆரம்பித்தன. இந்த 20 வருடங்களில் 30 பல்வேறு மொழிகளிலிருந்து நான் மொழிபெயர்த்த எவ்வளவோ புதினங்களையும், குறுநாவல்களையும், சிறுகதைகளையும் "இனிய உதயம்' வெளியிட்டிருக்கிறது. என் "இனிய உதயம்' இலக்கியப் பயணத்திற்கு மூலகாரணமாகவும், அச்சாணியாகவும் இருப்பவர் திரு. நக்கீரன் கோபால் அண்ணன் அவர்கள். அவரை என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து கைகுவித்து வணங்குகிறேன்.
என் இலக்கியப் பயணத்திற்கு உறுதுணையாகவும், உந்துசக்தியாகவும் இருக்கும் "இனிய உதயம்' ஆசிரியர் குழு சகோதரர்களுக்கும், குறிப்பாக திரு. மலரோன் அவர்களுக்கும் என் அன்பு நிறைந்த நன்றி.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று சிறந்த சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.
"பெரியக்கா' என்ற போஜ்புரி மொழிக் கதையை எழுதியிருப்பவர் முனைவர். சந்தியா சின்ஹா.
இவர் ஒரு கல்லூரி பேராசிரியை. இந்தி, போஜ்புரி ஆகிய மொழிகளில் கதைகள், கவிதைகள் எழுதியிருக்கும் இவர் "அம்கனா' என்னும் போஜ்புரி பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறார்.
நிபா என்னும் பெண்ணைப் பற்றிய கதை. நிபாவின் மூத்த சகோதரி அவளின்மீது அளவற்ற பாசம் வைத்திருக்கிறாள். நிபா தனக்கருகில் எப்போதும் இருக்கவேண்டுமென நினைக்கிறாள். அதற்குக் காரணம்..? உண்மையிலேயே கதையின் மிகப் பெரிய அதிர்ச்சியைத் தரும் திருப்பம் இது.
கதையை வாசிக்கும் யாருமே இதை எதிர்பார்த்தி ருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட சிக்கல் நிறைந்த ஒரு கதைக் கருவைக் கையாண்ட சந்தியா சின்ஹா வைப் பாராட்டுகிறேன்.'
"பூச்செண்டு' என்ற மலையாளக் கதையை எழுதியிருப்பவர் இலக்கியத்திற்கான மிக உயர்ந்த விருதான "ஞானபீடம்' விருதையும், தேசிய சாகித்ய அகாடெமி விருதையும் பெற்றிருக்கும் எஸ்.கெ. பொற்றெக்காட். ரோம் நகரப் பின்னணியில் எழுதப் பட்ட கதை. முப்பத்தைந்து வருடங்களுக்குமுன்பு தன் ஒன்பதாவது வயதில் இறந்துவிட்ட தங்கள் அன்பு மகனின் கல்லறைக்கு வந்து பூச்செண்டை யும், மகனுக்குப் பிரியமான விமான பொம்மையையும் அர்ப்பணம் செய்யும் வயதான தம்பதிகளையும், அவர்களின் செயல்களை உன்னிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் பொற்றெக்காட்டையும் நம்மால் எப்படி மறக்கமுடியும்?
"குல்முஹம்மது' என்ற மலையாளக் கதையை எழுதியிருப்பவர் தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மலையாள இலக்கியத்தின் நட்சத்திரமான டி. பத்மநாபன்.
குல்முஹம்மது என்ற ஏழைச் சிறுவனை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. நெருப்பால் சுடப்பட்ட அடையாளங்களுடன் இருக்கும் அவன் நம் கண்களை ஈரமாக்குவதென்னவோ உண்மை. "வலது பக்கத்திலிருந்த சாலையின் வழியாகச் சென்றால் ரயில் நிலையத்தை அடையலாம். அதனால், அவன் இடது பக்கமாகத் திரும்பினான். இடது பக்கம் செல்லக் கூடிய சாலை கடலுக்கு முன்னால் முடியக்கூடியதாக இருந்தது' என்ற வரிகளை வாசிக்கும் போது நம் இதயம் கனத்துவிடும். கண்களில் கட்டாயம் நீர் அரும்பும்.
முத்துக்கு நிகரான இந்த மூன்று கதைகளும், இவற்றை வாசிக்கும் உங்களை புதிய உலகங்களுக்குள் கையைப் பற்றி அழைத்துச்செல்லும்.
என் "இனிய உதயம்' இலக்கியப் பயணம் 21-ஆம் வருடத்தில் கால்பதிக்கிறது. என்னை வாழ்த்துங்கள்... ஆசீர்வதியுங்கள்... பயணம் தொடரட்டும்...
அன்புடன்,
சுரா