கண்ணகி சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவியாவாள். இவளது வாழ்க்கை துயரம் நிரம்பியது. இவள் அடைந்த துயரம் அநியாயமானது. இனிமையான இல்லற வாழ்க்கையை நடத்தவேண்டிய சமயத்தில் கணவனால் கைவிடப்பட்டு, கணவனது துன்பக் காலத்தில் உடன்நின்று அவனது துன்பத்தில் பங்கேற்று, கள்வனின் மனைவி எனும் பழிச்சொல்லுக்கு ஆளாகி, செய்யாத குற்றத்திற்காகக் கணவன் கொலை செய்யப்பட்டபோது துடித்துத் துவண்டு இறுதியில் வெகுண்டு, இத்துயரங்களுக்குக் காரணகர்த்தர்களைக் கண்டறிந்து, வழக்குரைத்து, வெற்றிபெற்று, உலகுக்கு உண்மையை உணர்த்தி, பழிச்சொல்லைத் துடைத்தெறிந்து, மன்னனைத் தண்டித்து, மதுரையை எரித்து புரட்சி செய்தவள்.
இவளுற்ற துயரம் மக்களை வாட்டிற்று. இதனால் இவளது வாழ்க்கை மக்களது பேசுபொருளாயிற்று. இவள் கலக்கம் மக்கள் கலக்கமாயிற்று. இவள் துயரம் மக்கள் துயரமாயிற்று. இவளது வாழ்வில் மக்கள் தங்களது வாழ்வைக் கண்டனர். அரசு எந்திரமும் அதிகாரவர்க்கமும் கொண்டிருந்த ஆணவப் போக்கு மக்களுக்கு அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஒருங்கே தோற்றுவித்தன. இவற்றின் மறுதலையாக இவள்மீது பாசமும் பரிவும் மிகுந்தன. அதிகாரவர்க்கத்துக்கு எதிரில் நின்று உண்மையை உரத்துப் பேசிய இவளது புரட்சி அக்கால கட்டம் அதுவரை கண்டிராத புரட்சி; இது ஒரு புதிய எழுச்சிக்கு அடித்தளமாகவும் அமைந்தது.
தங்களால் செய்யவிலாத காரியத்தைக் கண்ணகி செய்தபோது மக்கள் அவளது வெற்றியைத் தம்முடைய வெற்றியாகப் பாவித்தனர். அவளில் தங்களது வாழ்வைக் கண்டதனால் அவளைத் தங்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொண்டனர். அவள் அவளது செயற்கருஞ்செயலின் காரணமாகப் புகழ்ச்சிக்கும் பரவுதலுக்கும் உரியவளானாள். அவளைப் பற்றிய பேச்சு தக்காணப் பீடபூமி முதல் இலங்கை வரை வியாபித்திருந்தது. எண்ணற்ற மக்களது நாவில் இவள் வாழ்வு செய்தியாயிற்று; செவிவழிச் செய்தியாகவே இப்பெண்ணின் கதை கதையாக கதைப் பாடலாகத் தலைமுறை தலைமுறையாகத் தமிழ்கூறு நல்லுலகம் முழுவதிலும் உலவலாயிற்று. சிலப்பதிகாரக் காப்பியக் காலத்துக்கு முற்பட்ட காலத்தில் தோன்றிய நற்றிணைப் பாடலில் (216) மருதன் இளநாகனார் "ஒருமுலை குறைத்த திருமா உண்ணி' என இப்பெண்ணின் வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
காப்பியம் எழுந்ததற்குப்பின் ஏழு நூற்றாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த இராஜராஜ சோழன்காலத்துக் கல்வெட்டும் (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) இதற்குப் பின் மூன்று நூற்றாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த பிற்காலப் பாண்டியர் காலத்துக் கல்வெட்டும் (கி.பி. 13-ஆம் நூற்றாண்டு) இவளை முறையே ஸ்ரீபூர்ண்ணி, ஸ்ரீபூர்ணி என்றும் குறிப்பிடுகின்றன. ஆக இவள் வாழ்வு காப்பியத்திற்கு முன்பும் பின்பும் மக்கள் மத்தியில் காலங்காலமாகப் பேசப்பட்டு வந்த ஓர் அதிசயக் கதையாக விளங்கிற்று எனல் தெளிவு. இடம், காலம் எனும் இரு தளங்களின் ஊடாகப் புகுந்து வெளிப்படும்போது மக்களின் ஈர்ப்பு, ரசனை, தோய்வு ஆகிய காரணிகளால் பற்பல மாற்றங்களுக்கும் உரியதாயிற்று.
கதையின் மூலம் மிகப்பெரிய மாற்றத்திற்கு உள்ளாகவில்லையென்றாலும் மூலத்தைச் சுற்றி வரக்கூடிய நிகழ்ச்சிப் போக்குகள் மாற்றங்கண்டன. தவறு செய்யாமலேயே துயரம் உற்றதற்குக் காரணம் என்ன எனும் யூகத்திற்கு விடை காண முற்பட்ட மக்களுக்குச் சிந்தனை ஓட்டம் தடைப்பட்டதால், "வினைப்பயன்' என்றுரைத்து ஆறுதலடைந்தனர். ஊழ்வினையைப் பொருத்தமுற அமைப்பான் வேண்டி மூலக்கதைக்கு முன்னும் பின்னும் பற்பல முன்னொட்டு, பின்னொட்டு உப கதைகள் முளைத்தன. இதனால் ஒரு சிறுகதை பெருங்கதையாயிற்று; சிறுவித்து பெரிய விருட்சமாயிற்று. பற்பல ரூப பேதங்கள், பாடபேதங்கள் இவளது வாழ்க்கை நிகழ்ச்சிகளை விதந்து கூறுவனவாகக் காணப்படுகின்றன. பாட பேதங்கள் அதிகம் உள்ள ஒரு செய்யுள் நூல், அங்ஙனம் பாடபேதங்களுடையதாக ஆனமைக்குரிய காரணங்களுள் ஒன்று புலவரிடையே அதிகப் புழக்கத்தில் இருந்தமை எனலாம். அதுபோல, கண்ணகி பற்றிய கதைகளுள் கதை நிகழ்ச்சிகளில் சிறு சிறு மாற்றங்களும் முன்னும்பின்னும் ஒட்டிக்கொண்டிருக்கின்ற நிகழ்ச்சிகளில் பெரும் மாற்றங்களும் இருப்பதற்குக் காரணம் இவளது கதை பெருவாரியான மக்களிடையே நாட்டுப்புறக் கதையாக வழங்கி வந்தமை எனலாம்.
இங்ஙனம் வழங்கி வராமல் இருந்திருக்குமானால் இத்தனை வேறுபட்ட நிகழ்ச்சியுடைய கதைப் பின்னல்களைக் கொண்ட வடிவங்கள் உருவாகியிருக்க மாட்டா. இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை வால்மீகியும் வியாசரும் உருவாக்குவதற்கு முன்னதாகவே இக்கதைகள் மக்கள் மத்தியில் வழங்கி வந்தன. அரசியல் சூழ்ச்சி காரணமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ராஜகுமாரனது மனைவியை இன்னொரு நாட்டரசன் அபகரித்துக்கொண்டு போன அவல உணர்ச்சி மக்கள் நெஞ்சில் ஆழப்பதிந்தது. சூழ்ச்சியில் சிக்கி, நாடு நகரமிழந்து பங்காளிகளால் படாத பாடு பட்ட சகோதரர்களது கதை பாரதமாகப் பேசப்பட்டது. நல்லவர்கள், நேர்மையானவர்கள் அடைகிற துன்பம் மக்களைக் கலங்கச் செய்கிறது. சூழ்ச்சி செய்பவர்கள், அநியாயக்காரர்கள், அடுத்தவர் சொத்தை அபகரிப்பவர்கள்மீது மக்களது கோபமும் வெறுப்பும் படர்கின்றன.
இவை மக்களிடையே கதையாக, பாடலாக, கதைப்பாடலாக உருவாகின்றன. நாம் இவற்றையே நாட்டுப்புறக் கதை எனவும் நாட்டுப்புறப் பாடல் எனவும் நாட்டுப்புறக் கதைப்பாடல் எனவும் பெயரிட்டு அழைக்கிறோம்.
மொழிப் புலமையும் காவிய இலக்கணமும் கற்பனை வளமும் படைப்பு ஆர்வமும் கொண்ட ஒரு காவியகர்த்தா மேற்படி நாட்டுப்புறக் கதை மூலத்தை அறிந்து அதில் தோய்ந்து, அதைக் கற்றறிந்தார் போற்றும் காவியமாக உருவாக்குகிறான். இப்படித்தான் காப்பியங்கள் உருவாகின்றன. மக்களிடமிருந்தே ஓர் இலக்கியம் உருவாகி திரும்பவும் அது மக்களிடமே சென்று சேர்கிறது. நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு காப்பியத்திலும் காப்பியத்தின் செல்வாக்கு நாட்டுப்புற இலக்கியத்திலுமாகப் பதிவதற்குரிய காரணம் இது. பெருவாரியான பொது மக்களிடையே புழக்கத்திலிருக்கும் கதைக்கு நிகழ்ச்சி பேதங்கள் பல உண்டாகும் என்பதற்குக் கண்ணகி கதைகளே சான்றுகளாய் உள்ளன. இனி கண்ணகி கதைகளைக் காணலாம்.
கதை 1: "கோவிலன் கதை' என்ற தலைப்பில் புகழேந்திப் புலவர் பாடியதாகக் கூறப்படும் ஒரு நாட்டுப்புறக் கதைப் பாடலில் காணப்படும் கதையைப் பார்ப்போம்:
காவிரிப்பூம்பட்டினத்தில் மாநாகன் செட்டி, மாச்சோட்டான் செட்டி என இரு வணிகர்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் கப்பலோட்டி வியாபாரம் செய்யும் பெருஞ்செல்வர்கள். அவ்வூரில் முத்துச் செட்டி என்றொரு செட்டி நெடுநாள்களாகக் குழந்தைப்பேறு வாய்க்காமல் வருந்தினார். ஆகவே நந்தவனம் பூந்தோட்டம் ஆகியன அமைத்தும் பல தரும காரியங்கள் செய்தும் இறைவனை நினைத்துத் தவம் செய்தார். தெய்வலோகப் பசுவாகிய காமதேனு ஒருநாள் தன்னுடைய கன்றுடன் வந்து நந்தவனப் பூந்தோட்டத்தை மேய்ந்தது. முத்துச்செட்டி இவற்றை விரட்டக் கவண்கல்லை எறிய கல்பட்டு கன்று இறந்தது.
காமதேனு தான் பதினாறு ஆண்டு களாகப் பாலூட்டி அன்புடன் வளர்த்த தனது கன்றைக் கொன்ற முத்துச்செட்டியை நோக்கி "உன் வயிற்றில் பிறக்கும் மகனும் பதினாறு வயதில் இறப்பான்' எனச் சாபம் கொடுத்தது, இது ஒருபுறம் இருக்க, மதுராபுரிப் பட்டணம் என்ற ஊரில் மணியரசன் என்ற பெயருடைய வாணியனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். முதல் மனைவிக்கு மூன்று மகன்களும் இரண்டாம் மனைவிக்கு ஒரு மகனும் பிறந்தனர். இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் மணியரசன் தன் சொத்துக்களை இரு பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியை முதல்தாரத்திற்குப் பிறந்த மகன்களுக்கும், இன்னொரு பகுதியை இரண்டாம் தாரத்திற்குப் பிறந்த ஒரு மகனுக்கும் கொடுத்தார்.
இரண்டாம் தாரத்திற்குப் பிறந்த மகன் தொழில் தொடங்கி எண்ணெய் விற்கப் போனபோது எண்ணெய் விலை போகாததால் வருத்தமுற்று பத்திரகாளி கோவிலை அடைந்தான். பாண்டிய மன்னர் கள் தங்களுக்குக் குழந்தைப்பேறு வாய்க் காததால் பத்திரகாளி அம்மன் கோயிலை அடைத்துப் பூட்டி மண்ணறைந்து "யார் விளக்கேற்றினா லும் கடுந் தண்டனை கொடுப்போம்' எனப் பறை அறைவித்ததால் அம்மன் கோயில் இருளடைந்து கிடந்தது. இதைக் கண்ட இவ் வாணியன் விற்பனைக் குக் கொண்டுவந்த எண்ணெய் முழுவதும் சீக்கிரமே விற்பனையாகிவிட்டால் அம்மனுக்கு "ஆயிரம் திருவிளக்கு' வைப்பதாக நேர்ச்சை செய்தான். எண்ணெய் அம்மன் அருளால் வெகு சீக்கிரத்தில் விற்பனையாகவே, வாணியனும் நேர்ந்தபடி விளக்கேற்றிவிட்டு வீடு போய்ச் சேர்ந்தான்.
ஆறாயிரம் பாண்டியர்கள் இரவுப் பொழுதில் உப்பரிகை மேலேறி உலவித்திரியும்போது பத்திரகாளி கோயிலில் விளக்கெரிவதைக் கண்டு காவலரை அழைத்து காளி கோயிலில் விளக்கேற்றிய நபரைக் கட்டியிழுத்து வரும்படி ஆணையிட்டனர். மணியரசனுடைய முதல்தாரத்து மக்கள் காட்டிக் கொடுக்கவே இரண்டாம் தாரத்து மகனாகிய வாணியன் கைது செய்யப்பட்டு இழுத்துவரப்பட்டான். மன்னர்கள் இவ்வாணியனைக் காளிக்கு முன்பாகக் கண்ட துண்டமாக வெட்டும்படித் தீர்ப்புக் கூற, அவ்வாறே வாணியன் வெட்டுப்பட்டான். இவனது தலை காளி மடிமீது விழுந்தது.
கதறியழும் தலையைக் கண்ட காளி "பாண்டியரைப் பழிவாங்குவேன், கலங்காதே' என்ற கூறினாள். வாணிச்சி தன் கணவன் வெட்டுப்பட்டதறிந்து ஓடிவந்து மோதியறைந்து கொண்டு உயிர் துறந்தாள். சிவபெருமான் ஒரு தங்கச் சிமிழில் வாணியன், வாணிச்சி, காளிகாதேவி ஆகிய மூவருடைய உயிரையும் அடைத்து வைத்தார்.
முன்னே காமதேனுவின் சாபத்திற்காளான முத்துச்செட்டியின் மனைவி வர்ணமாலை வயிற்றில் வெட்டப்பட்ட வாணியன் கோவலனாக வந்து பிறந்தான்.. குழந்தை வரம் வேண்டி மலைமேல் தவமிருந்த பாண்டிமாதேவி கோவிலிங்கி வயிற்றில் காளிதேவியே காலில் சிலம்பொடும் கழுத்தில் மாலையோடும் கண்ணகியாக வந்து பிறந்தாள். கர்ணம் (கர்ணம் - காதுப்பகுதி) வழியாகப் பிறந்த மையால் கர்ணகி எனும் பேர் பெற்றாள். கழுத்தில் மாலை போட்டுக் கொண்டு பிறந்த இப்பெண் குழந்தையால் மதுரை அழியும் எனச் சோதிடர்கள் கூறியமையால் அப்பெண் குழந்தையைப் பேழையுள் வைத்து வைகையாற்றில் விட்டுவிட்டனர். ஆற்றோட் டத்தில் பேழை அடித்துச் சென்றபோது ஐந்து தலைநாகம் அக்குழந்தையைக் காளியென அறிந்து கர்ண வழியாகப் பிறந்ததால் கர்ணகி எனப் பெயரிட்டு அக்குழந்தையின் காலில் இருந்த சிலம்புக்குள் நாகரத்தினத்தை உமிழ்ந்து சென்றது. பேழை வைகை நதியின் ஓட்டத்தில் சென்ற கடலை அடைந்து அலைப்புண்டு காவிரிப்பூம்பட்டினத்தை அடைய, மாநாகன் செட்டியும் மாச்சோட்டான் செட்டியும் பேழையைக் கண்டனர். மாச்சோட்டான் செட்டி பேழை தன்னுடையது என, மாநாகன் செட்டி பேழைக்குள்ளிருக்கும் பொருள் தன்னுடயது என அவ்வாறே அக்குழந்தை மாநாகன் வீட்டில் வளர்ந்தது.
திருக்கடையூர் தேவதாசி வசந்தமாலை குழந்தைப்பேறில்லாமல் வருந்தி இறைவனை வேண்ட இறைவன் அருளால் முன்னிறந்த வாணிச்சி மாதகியாக வசந்தமாலை வயிற்றில் உருவாகிப் பிறந்தாள். வளர்ந்தபின் மிகவும் பேர்பெற்ற நாட்டியக்காரியாக விளங்கினாள். முத்துச் செட்டியும் மாநாகன் செட்டியும் கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் செய்விக்க நிச்சயித்து அவ்வாறே திருமணம் நிகழ்த்துகிறார்கள். கோவலன் கல்யாணப் பந்தலில் கச்சேரி வைக்கும்படி வற்புறுத்த திருக்கடையூர் தேவதாசி மாதகிக்கு நடனமாடும்படிச் செய்தியனுப்புகிறார்கள். மாதகி ஆனைமேல் ஏறிவந்து தான் பிறந்தபோதே தன்னுடன் பிறந்த பொன்னுரு மாலையைக் கழுத்திலிருந்து கழற்றிச் சுழற்றி எறியும்போது யார் கழுத்தில் விழுகிறதோ அவரை அழைத்துச் செல்வேன் என நிபந்தனை விதித்துச் சம்மதம் பெற்று அவ்வாறே செய்ய வர்ணமாலை தன் மகன் கோவலனை மறைத்துவைத்தபோதுங்கூட அம்மாலை கோவலனைத் தேடிச் சென்று அவன் கழுத்தில் விழுகிறது.
பின்னர் மாதகி கோவலனுக்கு மைதடவப்பட்ட வெற்றிலையைக் கொடுத்து மயங்கச் செய்து அழைத்துப் போகிறாள். அவளோடு சென்ற கோவலன் எல்லாச் செல்வங்களையும் இழக்கிறான்.
பால்ய காலத்தில், புத்தி தெரியாத வயதில் நடந்த திருமணத்தை அறியாத கண்ணகி வளர்ந்து பெரியவளானதும் தன் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தைப் பார்த்து விவரம் அறிந்து மாமியார் வீடுதேடிச் சென்று தன் கணவன் எங்கே என்று கேட்கிறாள். கணவன் திருக்கடையூரில் மாதகியுடன் இருப்பதறிந்து கணவனை வரும்படியழைத்து ஓலை அனுப்புகிறாள். ஓலையைக்கண்ட கோவலன் கண்ணகியிடம் செல்வதற்கு மாதகியிடம் அனுமதி வேண்டுகிறான். மாதகி சூழ்ச்சி செய்து கோவலனிடமிருந்து எல்லா ஆபரணங்களையும் பறித்துக் கொண்டு மொட்டையடித்து கிணற்றில் தள்ளியும் ஆற்றில் மூழ்கடித்தும் கொல்லப் பார்க்கிறாள்.
வைகையாற்றில் தள்ளப்பட்ட கோவலன் காவிரிப்பூம்பட்டினத்தில் கடலோரத்தில் கரை யொதுங்கி கண்ணகியை அடைந்து வருந்தி மாதகி கடனுக்காகச் சிலம்பை விற்று முதலாக்குவதற்காக மதுரைக்குப் புறப்படுகிறான். உடன் வரவிரும்பும் கண்ணகியை விட்டுவிட்டுத் தான் மட்டும் செல்ல, கண்ணகியும் கணவன் சென்ற வழியைப் பின் தொடர்கிறாள். வழியில் பல அற்புதங்களைச் செய்த கண்ணகி தன் கணவனோடு மதுரையை அடைகிறாள்.
ராஜகன்னி தன் சிலம்பைச் செப்பனிட வஞ்சிபத்தன் எனும் பொற் கொல்லனிடம் தர வஞ்சிப்பத்தன் மனைவி முத்துமாலை பெற்றெடுத்த குழந்தைகள் கருடனது முட்டைகளை உடைத்து விட கருடன் ராஜகன்னியின் சிலம்பை எடுத்துச் சென்று ஏழு கடலுக்கு அப்பாலிருக்கும் ஐந்து தலை நாகத்திடம் கொடுத்து மறைத்து வைக்கும்படி சொல்லி வஞ்சிப்பத்தனைப் பழி வாங்கிற்று. பாண்டியர்கள் வஞ்சிப்பத்தனைச் சிலம்பு தரும்படி நெருக்க, வஞ்சிப்பத்தன் தன்னை நாடிவந்து சிலம்பு விற்றுத் தரும்படி வேண்டிய கோவலனை ராஜகன்னியின் சிலம்பைத் திருடிய கள்வன் எனக் காட்டிக் கொடுத்துத் தப்பித்துக் கொள்ள, மன்னன் ஆணையால் மழுவரசன் கோவலனை வெட்டுகிறான்.
கண்ணகி கோவலனைத் தேடிக் காட்டுவழிச் சென்றாள். வழியில் மாட்டுக்காரச் சிறுவர்களைக் கண்டாள். என் கணவன் கொலை செய்யப்பட்ட படுகளம் எங்கே எனக் கேட்டாள். அவர்கள் நாங்கள் பசியாக இருக்கிறோம். பசியாற்றினால் இடம் காட்டுகிறோம் என்றனர். கண்ணகி ஆற்றுமணலை அரிசியாக்கினாள்; காட்டுக்காய்களைப் புசிக்கும்படி ஆக்கினாள். மணக்க மணக்க அவர்களுக்குச் சமைத்துக் கொடுத்தாள். அவர்கள் சாப்பிட்டுவிட்டுக் கோவலன் வெட்டுப்பட்டுக் கிடந்த இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கண்ணகி கோவலனின் உடலைப் பார்த்தார். ஐயோ சிவனே என்று அழுதாள் ""வேசி வீட்டிற்குப் போனீரே என்ன சுகம் கண்டீர்? என்னிடம் சேர்ந்து இருந்தால் கொள்ளி வைக்கப் பிள்ளை கிடைத்திருக்குமே'' என்றாள்.
சேம்புக் கிறைத்தீரே செவ்வாழை வைத்தீரே
வேம்புக் கிறைத்தீரே விறுதாவாய் நின்றீரே
எருக்குக்கு நீர் சொரிந்து எத்தனை பூ
பூத்தாலும்
மருக்கொழுந்து போல் வருமோ
என்று சொல்லி அழுதாள். அவனது தலையை உடலோடு சேர்த்து தனது தலைமயிரால் தைத்தாள். சொக்கலிங்கப் பெருமானை நினைத்தாள். கோவலன் உயிர் பெற்றான். எழுந்தான். ""இங்கே வந்தவள் கண்ணகியா, மாதவியா? மாதவியானால் என் மடியில் வந்து அமரட்டும். கண்ணகியானால் கடந்து போகட்டும்'' என்றான். கண்ணகிக்கு ஆத்திரம் வந்தது, ""படுகளத்தில் உன்னைப் பார்க்க மாதவியா வருவாள். கூத்தி அவள் வரமாட்டாள். கொண்டவள் வந்துள்ளேன்'' என்றாள். கோவலன் ""இங்கு ஏன் வந்தாய்?'' எனக் கேட்டான்.
கண்ணகி கணவனிடம் ""உமக்கு இந்தத் துன்பம் வரக் காரணமானவர் யார் என்று சொல்லும். பழிவாங்குகிறேன்'' என்றாள்.கோவலன் நடந்த கதையைக் கூறினான்.
""வஞ்சிப்பத்தனின் மனைவி என் தலையில் உலக்கையால் அடித்தாள். பாண்டிநாட்டுக் கொலையாளிகள், அமைச்சர்கள் எல்லோரும் நல்லவர்கள், அரசன் பொல்லாதவன். பாண்டியனின் குடலை எடுத்து என்னுடன் எரித்துவிடு. என்னுடன் மாதவியும் சிவலோகம் வரவேண்டும். இதற்கு நீ அருள வேண்டும்'' என்றான்.
கண்ணகி அவன் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்களித்தாள். பின் அவனிடம் ""எனக்கு மாமரத்தில் ஏறிப் பழம் பறித்துத் தாரும்'' எனக் கேட்டாள். கோவலனும் மரத்தில் ஏறினான். பழுத்த பழங்களை தன் மடியில் கட்டிக்கொண்டான்; சொத்தைப் பழங்களைக் கண்ணகிக்கு விட்டெறிந்தான்; ""இதை தின்பாய்'' என்றான். அவனது நோக்கத்தைப் புரிந்து கொண்ட கண்ணகி ""செத்த பின்பும் புத்தி மாற வில்லையே'' என்றாள்.
கண்ணகி ""கொழுநரே உமக்கு தலை பார்க்கிறேன்; என் அருகில் வாரும்'' என்றாள். ஏற்கனவே கோவலனது உடலையும் தலையையும் சேர்த்து தலைமுடியால் தைத்து உயிர் தந்திருந்தாள்.
இப்போது மயிரை உருவிவிட்டாள் அப்போது ஒன்றாயிருந்தவர்தாம் இரண்டாய் விழுந்து விட்டார் குலைவெட்டிச் சாய்த்ததுபோல் கோவலர் விழுந்துவிட்டார் கோவலன் உடனே மாண்டான். கண்ணகி மதுரைக் கோட்டைக்குள்ளே சென்றாள். மன்னனைப் பார்த்தாள், ""என் கணவனைத் திருடன் எனக் குற்றம் சாட்டினாயே? விசாரணை செய்தாயா? பழிகொடடா பழிகொடடா. பர்த்தாவைக் கொன்ற பழி ஆளினைக் கொன்ற பழி, அரிவையர்க்கு நீ கொடடா, ஏது கெட்ட பாண்டியனே'' என்றாள்.
பாண்டியன் கண்ணகியிடம் ""சிலம்பைக் கவர்ந்த திருடனைக் கொன்றது தவறா'' என்று கேட்டான். அதைக் கேட்ட கண்ணகி அவையின் நடுவில் வந்தாள். என் சிலம்பு இங்கே வரட்டும் என்றாள்.
அரண்மனையிலிருந்த அவள் சிலம்பு உடனே வந்தது. ""செஞ்சிலம்பே, என் அருகே வராதே எட்டி நில்'' என்றாள். இதைப் பார்த்த பாண்டியன் ""உத்தமியே, உன் சிலம்பு வந்துவிட்டது. என் சிலம்பையும் வரவழைப்பாய்'' என்றான். உடனே கண்ணகி பாண்டியமாதேவியின் சிலம்பு வரட்டும் என்றாள்.
அந்தச் சிலம்பு ஏழு கடல் கடந்து இருந்த ஐந்துதலை நாகத்தின் மீது இருந்தது. அதை ஒரு நொடியில் கருடன் எடுத்து வந்து பாண்டியனின் மனைவியிடம் கொடுத்தது.
பாண்டிமாதேவி இரண்டு சிலம்புகளையும் பார்த்தாள். கண்ணகியின் சிலம்பை விட்டெறிந்தாள். இதைப் பார்த்தான் பாண்டியன். திகைத்தான். தெரியாமல் நடந்துவிட்டதே என்றாள். கண்ணகி பாண்டியனின் குடும்பத்தைக் கொலைக்களத்துக்கு அழைத்துச் சென்றாள். பாண்டியனின் மகுடத்தைக் கழற்றச் சொன்னாள். அவனது முப்புரிநூலை அறுக்கச் சொன்னாள்.
காளி என்ற ரூபமதை தானெடுத்தாள்
சிங்கப்பல்லும் செஞ்சடையும் கண்ணகிதான் கோடாலிப் பல்லழகும் கோழிமுட்டைக் கண்ணழகும் இரண்டு கரத்தினிலே எடுத்தாள் திரிசூலம் பாண்டியனின் நெஞ்சில் சூலத்தைக் குத்தினாள்.
சிறுகுடலையும் பெருங்குடலையும் எடுத்து மாலையாகப் போட்டாள்.
கண்ணகி பின்னர் வஞ்சிப்பத்தனின் வீட்டிற்குச் சென்றாள். அவளைக் கண்டு அவன் ஓடினான். காளியோ விடவில்லை. அவனைப் பிடித்தாள். அவனது மனைவி முத்துமாலையின் வயிற்றுப்பிள்ளையை எடுத்து வாயிலே கௌவிக் கொண்டாள். அப்போது வஞ்சிப்பத்தனின் மக்கள் வந்தனர். கழுகின் விருப்பப் படி அவர்களின் குடலை உருவி ஆகாயத்தில் விட்டெறிந்தாள். கழுகு அதைப் பற்றிக்கொண்டு பறந்தது. பின் பாண்டிமாதேவியிடம் வந்தாள். அவளைக் கொன்று, குடலை மாலையாகப் போட்டுக்கொண்டாள்.
கண்ணகி மதுரை வீதிக்கு வந்தாள். வேசி சிந்தாமணி, மதுரை பள்ளிக்கூட வாத்தியார், அமைச்சர் ஆகியோரின் குடும்பத்தினரை ஊரை விட்டு போகச் சொன்னாள்.
தன் சிலம்பை தான் எடுத்துத்
தனிமதுரை விட்டெறிந்தாள்
அதுபட்ட இடங்கள் எல்லாம்
அக்கினியாய் பற்றுதங்கே
வலதுமார் திருகி வடமதுரை விட்டெறிந்தாள்
இடதுமார் திருகி எழில் மதுரை விட்டெறிந்தாள்
பாழ்பட்ட இடங்களெல்லாம் பற்றி எரியுதுபார்.
மதுரை எரிந்தபோது கண்ணகிக்கு இடைப் பெண்ணின் நினைவு வந்தது. அவள் வீடு மட்டும் எரிய வேண்டாம் என வரம் கொடுத்தார்.
கண்ணகி பின் மாதவிக்கு மடல் அனுப்பினாள்.
""என் சக்களத்தியே, உன் கடனை அடைக்க செஞ்சிலம்பை விற்கப்போய் என் கணவன் உயிர் துறந்தான்'' என்ற எழுதினாள்.
கண்ணகியின் மடலைப் படித்த மாதவி கலங்கி ஓலமிட்டாள். தன் செல்வத்தை எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்தாள். படுகளத்துக்கு ஓடிவந்தாள். கணவனின் உடலைப் பார்த்தாள். அழுது புரண்டாள். கட்டி முத்தமிட்டாள். கண்ணகியைப் பார்த்து ""நான் வாழ்ந்து சுகப்பட்டவள். என்னைத் தகனம் செய்துவிடு'' என்றாள். கண்ணகியும் அப்படியே செய்கிறேன் என்றாள்.
கண்ணகியும், மாதவியும் கோவலனின் உடலைக் குளிப்பாட்டினர். பச்சை வாழைத் தடையை அடுக்கி அவனது உடலை அதன்மேல் கிடத்தினர். மாதவி அவனருகே படுத்துக்கொண்டாள். கண்ணகி தீ மூட்டினாள். வாழைத்தடை எரிந்தது. முழுதும் எரிவது வரை கண்ணகி நின்றாள். இருவரின் சாம்பலைத் திரட்டினாள். அப்போது மாதவி உடுத்திருந்த சேலையும், சூடியிருந்த மலரும் எரியாமல் இருப்பதைப் பார்த்தாள். ""இவள் உண்மையில் கற்புடையவள்தான்'' என மெச்சிக் கொண்டாள்.
பின் மலையாள நாட்டிற்குச் சென்றாள்.
அங்கு பகவதி எனப் பெயர் பெற்று காட்சி தந்தாள். பின்னர் திருவொற்றியூருக்கு வந்தாள். அவள் அந்த நகரத்துக்கு வரும்போது சிவனும் தேவியும் கோவிலின் முன்னே மரத்து நிழலில் பகடை ஆடிக் கொண்டிருந்தனர். கண்ணகியைக் கண்டு தேவி அஞ்சி ஓடினாள். கண்ணகி ஈசனிடம் தாகமாக உள்ளது, அருந்த நீர் வேண்டும் என்றாள். இறைவன் ஒரு சுனையை உண்டாக்கி அதில் இறங்கு என்றான். கண்ணகி அதில் இறங்கியதும், சுனையின் மேல் ஒரு கல்லை வைத்து மூடிவிட்டான் ஈசன். கண்ணகியோ வேறு இடத்தில் முளைத்தாள். அவள் ஈசனிடம் எனக் குக் கோவில் எடுத்து வழிபட வேண்டும். சித்திரை மாதம் விழா நடத்த வேண்டும். பொற்கொல்லனைப் பலி தரவேண்டும் என்றாள். திருவொற்றியூரில் அவள் வட்டபுரி அம்மன் என்னும் பெயரில் நிலை பெற்றாள்.
மேலும் நவீன பிரெஞ்சுப் பெண்ணியலரான சந்தால் சவாப், சவியேர் காதியே, லூயி இரிகாரே ஆகியோர் உள்ளிட்ட பலரும் பெண்ணின் பாலியல் அறிந்துகொள்ள முடியாத கூறுகளை உடையது என வாதிடுகின்றனர். ஆனாலும் புதிர்களைத் தேடி, உள் நுழைந்து ஏதாவது கண்டெடுத்ததாகக் கூறும் மனித சரித்திரத்தின் மன அமைப்பிற்கு ஏற்ப, இங்கேயும் இந்த மண்ணின் மக்களிடம் வழங்கும் கதைகளைத் தொகுத்துத் தருவதன் மூலம் பெண் என்ற இந்தப் புதிரை ஒரு கீற்று அளவாவது புரிந்து கொள்ளவும், அதன் மூலம் மானுட வாழ்விற்குள் அமைந்துள்ள சொல்லுக்கு அடங்காத சாத்தியப்பாடுகளின் இருப்பை அறிந்து கொள்ளவும் வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் கி.ரா. எனலாம்.
பெண்களுக்கான கருத்தாக்கங்களை உருவாக்கு வதற்கும், அவர்களின் ஆதி மன உலகைத் தேடிக் காண்பதற்கும், அவர்களுக்கான அதிகாரங்களையும் மொழியையும் ஆணித்தரமாக நிறுவுவதற்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிற இந்தக் காலகட்டத்தில், இத்தகைய தொகுப்பு ஒன்றைக் கி.ரா. தருவது, பெண்ணியலாளர்களுக்குப் பெரிதும் பயன்படும்; தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாற்றின் விளைச்சலான இக்கதைகள் மூலம் தங்களைப் பற்றிய சொல்லாடலைப் பெருக்கித் தங்கள் அதிகாரத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பாக அமையும் எனலாம்.