முத்தமிழறிஞர் கலைஞர், தன் நூற்றாண்டை நிறைவு செய்து, நூற்று ஒன்றைத் தொடுகிறார். இதில் ஒரு சந்தேகம் எழலாம். கலைஞர் மறைந்துவிட்டாரே. ஆனால் வாழ்வதுபோல் சொல்வது சரியா? என நினைக்கலாம்.
தலைவர் கலைஞர் வழியிலே சொல்ல வேண்டு மானால் போராளிக்கு சாவே இல்லை. ஆம் கலைஞர் எனும் போராளிக்கு சாவே இல்லை. தலைவர் கலைஞரைநினைக்கும் போதெல்லாம் அவர் கவிதை தேனாய் இனிக்கிறது. அவருடைய பேச்சு உணர்ச்சி மேலிடச் செய்து போர்க்களத்திற்கு செல்லத் தூண்டுகிறது. அவரது வசனங்கள் உணர்ச்சி மிகுந்து உள்ளத்தைக் கிழித்தெடுக்கிறது . அவரது சாதனைகள் வானத்தில் மின்னிடும் நட்சத்திரங்களாய் பிரகாசிக்கின்றன.
சமூகமும் அவருடைய வாழ்வும் மரத்தில் சுற்றும் கொடி போல பின்னிப் பிணைந்தது. அதைப் பிரித்தெடுப்பது என்பது வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பறித்து வருவது போலத்தான். அவரது வாழ்வு பூப்போன்றது அல்ல. அவரது வாழ்வு ஒரு பெரிய போர்க்களம் போன்றதுதான். ஆனால் அந்த போர்க்கள வாழ்வை பூக்களமாக நினைத்துக் கொண்டார். அதுதான் விந்தை. கலைஞரின் நடைநயம் எப்படிப்பட்டது? பொன்னர் சங்கரில் கலைஞர் இப்படி எடுத்துச் சொல்கிறார்.
உவமைகளையும் உருவங்களையும் பொருத்தமாய்பொழிகிற நடைநயம். தொட்ட இடமெல்லாம் இப்புதினத்தில் துலங்குவதைக் காண்கிறோம்.
தாமரை நாச்சியார் தன் பிள்ளைகளை - அவர்கள் தன் பிள்ளைகள் என்று அறியாமலே-காணும்போது ஏற்பட்ட மன உணர்வை கலைஞர் இப்படிக் கூறுகிறார்.
தாமரை நாச்சியார் விழிகள் அவர்களை நோக்கிய காட்சி கடற்கரையில் காணாமல் போய் மண்ணில் புதைந்துவிட்ட முத்துப்பதித்த கம்மல்களை எடுப்பதற்குக் கரங்களைக் கொண்டு கடற்கரை மணலைத் தோண்டுவது போல இருந்தது.. தமிழுக்கும் அமுதென்று பெயர் இதிலுள்ள நுட்பத்தை கலைஞர் தெளிவுற பெறச் சொல்கின்றார் பாருங்கள். ஏன் பாவேந்தர் தமிழுக்கு அமுதென்று பெயர் எனச் சொல்லாமல் தமிழுக்கும் அமுதென்று பெயர் என்று சொன்னார்?
பாரதி தாசன் எதற்கு அப்படிச் சொன்னார் என்றால்அமுதுக்கு அமுதென்று பெயர். அதைத் தவிர்த்தால்தமிழுக்கும் அமுதென்று பெயர். இப்படிச் சொன்னவுடன் கூட்டத்தில் பலத்த கரவொலி எழுந்தது.
தற்காலத் தமிழ், இடைக்காலத் தமிழ், சங்ககாலத் தமிழ் இந்த மூன்றுக்கும் வரையறை தருகிறார் தலைவர் கலைஞர். தற்காலத் தமிழ் வாழைப்பழம் போன்றது தோலை உரித்ததும் அப்படியே சாப்பிட்டு விடலாம். இடைக்காலத் தமிழ் மாம்பழம் போன்றது அரிவாளைக் கொண்டுதோலைச் சீவி விட்டு துண்டம் துண்டாக அறுத்துச்சாப்பிட வேண்டும். இது வாழைப்பழத்தை விடகொஞ்சம் கடினமானது.
சங்க காலத் தமிழ் என்பதுஅப்படியல்ல அது பலாப்பழம் போன்றது. அதில் முதலில் முள் அதற்கு அடுத்து அதன் தசைகள், அதற்கு அடுத்து அதன் பசை அடுத்து சுளைகளைச் சுற்றியிருக்கக் கூடிய நரம்புகள் இத்தனையையும் அகற்றினால்தான் சுவையான சுளைகளைச் சாப்பிடலாம். தலைவர் கலைஞர் குறளுக்கு விளக்கவுரையும் எழுதினார் அதே சமயத்தில் குறளுக்கு ஓவியமும் தீட்டினார். அந்தக் காட்சியை விவரிக்கும் விதத்தைப்படித்தாலே அந்தக் காட்சி கண்முன்னே தெரியும். இந்தக் காட்சி ஆண்டாளின் திருப்பாவையில் காணலாம்.
அதற்கு எடுத்துக்காட்டாக குறள்.
குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்.
மழலைச் சொல் கேளாதவர்.
தம் மக்கள் அறிவுடமையானது தம்மைவிட உலகத்துஉயிர்களெல்லாம் இது இனிதாயிருக்கும். இது முற்கால உரை. இந்தக் குறளுக்கு கணவன் குழலில் இசை எழுப்புகிறான். மனைவி யாழை மீட்டும்போது இனிய இசை எழுகிறது. கணவனின் குழலோசையில் மனைவி மயங்குகிறாள் மனைவியின் யாழிசையில் கணவன் மயங்குகின்றான்.இப்போது அவர்களின் குழந்தை ஓசை எழுப்புகிறது. அந்த ஓசை இசையானது. அது தங்களது குழல் யாழ் இசையைவிட இனிதாக இருந்தது. இது கலைஞரின் உரை. இது அழகான ஓவியந்தானே. அரசியலில் வெப்பம் தகிக்கும்போதெல்லாம், சமூகநீதிக்கு ஆபத்து வந்தபோதல்லாம் தலைவர் கலைஞர் கொதித்தெழுவார். அதுவும் கவிதையால்...
இதோ அவரது தலைமைக் கவிதையில் சில வரிகள்.
ஆண்டவன் படைப்பில்
அனைவரும் சமம் எனில்?
உயர் சாதியினருக்கும்
தலையில் தங்கத்தால்
மூளை செய்து வைத்தானா.
மற்ற சாதியினருக்கு இருப்பதென்ன
களிமண்ணா
சுண்ணாம்பா
வள்ளுவன் இளங்கோ அடிகள்
கம்பர் ஒட்டக்கூத்தர் இவர்கள்
பிரம்மனின் தலையில் பிறந்தவர்களா.?
இவர்கள் தமிழ் மொழியின் இமயங்கள் அல்லவா.
என்றைக்கும்
இல்லாத வெப்பம்
தலைமைக் கவிதையிலே
எனக் கேடகத் தோன்றுகிறதா.
முதலுக்கே மோசம் வந்தபின்
முயலாய் இருந்து என்ன செய்ய
அணிலாய் இருந்து என்ன செய்ய
அதேபோல் போர்க்களத்திற்கு உன் ஒரே மகனை அனுப்ப மாட்டாயோ என ஒரு தாயிடம் கேட்டதற்கு,
மானம் என் மகன் கேட்ட தாலாட்டு
மரணம் அவன் ஆடிய விளையாட்டு
பால்குடிக்கும் குழந்தையாய்
இருந்தபோதே
வேல்பிடிக்கும் வித்தையைக்
கற்றுக் கொடுத்தேன்.
இது புறநானூற்றுப் பாடலுக்கு விளக்கம். இதைப்படித்தவுடன் கோழை கூட வீரனாக மாறுவான். படுத்துக் கிடந்தவன்கூட எழுந்து வாள் எடுத்து ஓடுவான். போர்க்களத்தில் முகாரி ராகம் பாடக் கூடாது. போர்ப்பரணி பாட வேண்டும்.
அதேபோல் திருக்குறளுக்கு
காலாழ் களிரின் நரியிடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
இதுவும் போர்க்களம் பற்றியதுதான். போர்க்களத்தில் தூக்கம் தவிர்க்க வேண்டும். மாவீரன் நெப்போலியன் குதிரையிலே தூங்கியதாக வரலாறு சொல்கிறது. ஏனெனில் கீழே படுத்து உறங்கினால் கடும் உழைப்பிற்கு அசந்து தூங்கிவிட்டால், எதிரணி வீரர்கள் சமயம் பார்த்து நம்மை மோதப் பார்ப்பான் என எண்ணிய நெப்போலியன், கண் சிமிட்டும் நேரமே கண்விழியை மூடித்திறந்தான்.அதைத்தான் கோழித் தூக்கம் என்பார்கள்.
அதேபோல போர்க்களத்தில் மிகவும் கவனமாகச்செல்லவேண்டும். ஒருவன் பாதையில் நடந்து செல்லும் போது அவன் விழிகள் பாதை நோக்கிப் போனால் போதும் ஆனால் போர்க்களத்தில் செல்லும் வீரனின் பார்வை நாலா பக்கமும் சுழல வேண்டும். எந்தப் பக்கத்திலிருந்தும் வேல், வில், அம்பு போன்றவை பாய்ந்து வரலாம். இது போல போர்க்களத்தில் மிகப்பெரிய மாவீரனாக இருந்தாலும் சூழல் அறிந்து செல்ல வேண்டும் செல்லும் பாதை சரியானதா அங்கு குளிர் அதிகமாக இருக்கிறதா வெயில் அதிகமாக இருக்கிறதா அதை நம் வீரர்கள் தாக்குப்பிடிப்பார்களா எனஆராய்ந்து பார்த்து செல்ல வேண்டும். மாவீரன் அலெக்சாண்டர் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே வந்தான். அவன் ஆசை அளவற்றுப் போனது.
கடைசியில் இந்தியாவையும் பிடிக்க எண்ணினான். இமயமலையைக் கடந்தபோது அவ்வளவு குளிர் இருக்கும் என அவன் எண்ணவில்லை. அதைத்தாங்க முடியாத அலெக்சாண்டரின் போர்வீரர்கள் பாதிக்கு மேலாக செத்து மடிந்தார்கள். அவன் சோம்பிய முகத்துடன் திரும்ப வேண்டியதாயிற்று. இதைத்தான் ஒரு பழமொழி, யானைக்கும் அடிசறுக்கும் என்கிறது. இதைத்தான் தலைவர் கலைஞர் தன்னுடைய பாணியிலே சொல்கிறார் .
வேலேந்திய வீரர்களைக் கொல்லுகின்ற ஆற்றல் படைத்த யானை சேற்றில் சிக்கிவிட்டால் அதனை சிறு நரிகள்கூடக் கொன்று விடும். எனவே வீரனே களத்தில் போர்க்களத்தில் ஆராய்ந்து பணிபுரிவாயாக என்ற நோக்கில் கலைஞர் இந்த குறளுக்கு விளக்கம் கொடுக்கிறார்.
இதேபோல சித்தார்த்தன் என்றொரு கலைஞரின் நாடகம். இதில் காதல் மனைவியைப் பிரிந்து சென்று
விடுவான். இதனால் துயருறுவாள் மனைவி. அவள் நேராக புத்தனின் சிலை அருகே வந்து அவரிடம் சொல்லி
அழுவாள். என் கணவனை என்னிடம் சேர்ப்பாயாக என்பாள். அதற்கு சித்தார்த்தன் நானே இளம் மனைவி மகனை விட்டுவிட்டு வந்தவனம்மா. உன் கணவனுக்கு புத்தி சொல்ல எனக்கு யோக்கியதை கிடையாது. எனச் சொல்லிவிட்டு.நீ போ போ எனச்சொன்னார். இதைக் கேட்ட அவள் அய்யயோ பகவானே என அழுதாள். சிரிப்பொலி கேட்டது விழி திறந்தாள். சிலைக்கு பின்னாலிருந்து கணவன் வந்தான். அத்தான் எனக் கட்டிப் பிடித்தாள்..பின்னர் எல்லாம் சித்தார்த்தன் அருள் என்றாள்.
அதற்கு அவன், அவர் அருளியது உலகை வாழ்விக்கும் உயர் கொள்கை. கூலி பெற்று பிராத்தனைகள் நிறைவேற்றிட அவரில்லை. அந்தோ அவரையும் கடவுளாக்கிவிட்டனர். அய்யோ என்ன கொடுமை என்பான். அதற்கு அவள் பேசியது யார் என்றாள். சிலையல்ல நானே என்றான். இருவரும் தழுவிக் கொண்டனர்.
இது பராசக்தி படத்தை நினைவுபடுத்துகிறது.
அம்பாளா பேசுகிறாள்.
அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்
எனச் சொல்லியிருப்பார்.
இந்த சித்தார்த்தன் சிலை மிகச் சிறிய சிறுகதைதான். ஆனால் எத்தனை சிந்தனைகள். சித்தார்த்தனுக்கு ஒரு இடித்துரை. அன்பின் வெளிப்பாடு பகுத்தறிவு சிந்தனை இப்படி அனைத்தையும் ஒருசேரக் கொண்டு வந்திருப்பார். தலைவர் தன்னுடைய பதினான்கு வயதில் இந்தி எதிர்ப்பை இலக்கிய நயத்தோடு எடுத்துச்சொன்னார். ஓடி வரும் இந்திப் பெண்ணே நீ தேடி வரும் இடம் இதுவல்ல என்று.
அந்த போர்க்குணமும் இலக்கிய சிந்தனையும் அவருடைய வாழ்வின் இறுதி வரை இருந்தது. அவருடைய 92 வயதில் பகுத்தறிவுச் சிந்தனையோடு ராமானுஜர் தொடர் எழுதினார். அவர் இறந்த பிறகும் அவர் நினைத்த இடத்திற்கு செல்வதற்கு பெரிய போராட்டம் நடத்தியே செல்ல வேண்டியிருந்தது. எல்லோருக்கும் இரண்டு கண்கள் என்பார்கள். ஆனால் தலைவர் கலைஞருக்கு மூன்று கண்கள், எழுத்துத்துறை அதுதான் இலக்கியம்.
அதையடுத்து அரசியல், இதுதான் போர்க்களம். இதில் இரண்டிலும் சிந்தித்ததை செயல்படுத்த கிடைத்த முன்றாவது கண். அதுதான் நெற்றிக்கண் அதுதான் ஆட்சித் துறை. எத்தனைபேர் எதிர்த்து வந்தாலும் சுட்டெரித்துவிட்டு தமிழினத்திற்குஅவர் செய்த அரும் பெரும் சாதனைகள். அவர் வாழ்வில் 75 திரைப்படங்களுக்கு வசனங்கள், பதினைந்து நாவல்கள், 210 கவிதைகள். கலைஞரின் சிறுகதைத் தொகுப்பு உடன் பிறப்புகளுக்கு7000 மேற்பட்ட கடிதங்கள். இது போக அவரது பேட்டிகள், மேடைப் பேச்சு. சட்டமன்ற உரை இப்படி கலைஞரின் படைப்புகள் 178 நூல்கள் வெளிவந்துள்ளன.
இன்னும் அவரைப் பற்றிய பேச எழுத பக்கங்கள் போதாது, வருடங்கள் போதாது.
நான் எழுதியிருப்பது பெருங்கடலில் கடலில் ஒரு துளி. அவரை மறக்க முடியுமா.?
-எழுத்தாளர் சி. அன்னக்கொடி