எழுதுவதால் நான் மேன்மை உறுகிறேன். அதற்காக எழுதுகிறேன். எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது. அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் பயனும் எய்துகின்றார்கள். அதற்காக எழுதுகிறேன். எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் எதிர்காலச் சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன்.
-ஜே.கே
ஜெயகாந்தன் இணையற்ற ஓர் எழுத்தாளர். இருபதாம் நூற்றாண்டின் இவரைப் போல் பெரும் சிறப்பு பெற்றவர்கள் அரிதிலும் அரிது என்று சொல்லலாம்.
ஜெயகாந்தன் என்று சொன்னாலே ஒரு கம்பீர உருவம் வாசகர் கண் முன் வந்து நிற்கும். இலக்கிய ஆளுமை என்னும் சொல்லாடலுக்கு முற்றிலும் பொருத்தமானவர். இருக்கும் போதும் பேசப்பட்டவர். இல்லாதபோதும் பேசப்படுபவர்.
ஜெயகாந்தன் ஓர் எழுத்தாளர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல பேச்சாளர். ஒரு நல்ல கட்டுரையாளர். ஒரு நல்ல இயக்குனர். ஒரு நல்ல பாடலாசியர் என்று பலவகையிலும் அவரைப் பட்டியலிட முடியும்.
அவர் ஏராளமாக எழுதியவர். அதிகமாகப் பேசியவர். அவர் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் ஏராளம் இருக்கிறது. எழுதப்பட்டவைகளும் சொல்லப்பட்டவைகளும் ஏடுகளில் விரவிக் கிடக்கின்றன. தொகுக்க நினைப்பவர்களுக்கு தரவுகள் இலக்கியப் பரப்பில் ஏகத்துக்கும் காணக் கிடைக்கின்றன.
ஜெயகாந்தன் எழுதிய படைப்புகளும் அதிகம். அவருக்குக் கிடைத்த வாசகர்களும் அதிகம்.
அவர் பெற்ற நண்பர்களும் அதிகம். அவரின் நண்பர்களில் ஒருவர் திறனாய்வுச் செம்மல் எம். எஸ். தியாகராஜன். ஜெயகாந்தன் இறப்பிற்கு பின் அவர் குறித்த ஒரு தொகுப்பைக் கொண்டுவர திட்டமிட்டு தரவுகளையும் திரட்டினார். ஆனால், தியாகராஜனும் இயற்கை எய்தி, காலம் சென்ற ஜெயகாந்தனுடன் கலந்து விட்டார்.
நண்பர் தியாகராஜனின் நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ஜெயகாந்தன் குறித்த ஒரு தொகுப்பைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு, தரவுகளைத் திரட்ட , சேகரிக்க, பாடுபட்டு ஒரு தொகுப்பையும் உருவாக்கியுள்ளார் பாவலர் கருமலைப் பழம் நீ. நட்புக்கு அடையாளமாக விளங்குகிறார்.
பாவலர் கருமலைப்பழம் நீ கவிதை, சிறுகதை, கட்டுரைகள், ஹைக்கூ, சிறுவர்களுக்கான படைப்புகள் என இருபதுக்கும் மேற்பட்ட தொகுப்புகளை வெளியிட்டதுடன் தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கிவருகிறார். ஜெயகாந்தன் குறித்த தொகுப்பு முயற்சியில் ஒரு வருடத்திற்கும் மேலாக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவர், தொகுப்பு குறித்து அடிக்கடி உரையாடுவார். அப்படியான ஓர் உரையாடலின் போதுதான் ' ஜெய ஜெய காந்தன்' என்னும் தலைப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. ' ஜே. கே. குறித்த பதிவுகள்' என்று குறிப்பிட்டுள்ளார். ஜெயகாந்தனுடனான தன் புகைப்படங்களுடன் தொகுப்பைத் தொடங்கி நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
எமக்குத் தொழில் கவிதை என் றார் பாரதி. பாரதியைக் குருவாகக் கொண்டு இயங்கிய ஜெயகாந்தன் 'எழுதுகோல் என் தெய்வம்' என்கிறார்.
"எழுதுவதால் நான் மேன்மை உறுகிறேன். அதற்காக எழுதுகிறேன். எழுதுவதால் எனது மொழி வளம் பெறுகிறது.
அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் எனது மக்கள் இன்பமும் பயனும் எய்துகின்றார்கள்.
அதற்காக எழுதுகிறேன். எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. அதற்காகவும் எழுதுகிறேன். எழுதுவதால் எதிர்காலச் சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்ல இலக்கியம் ஒன்று தேவை என்பதாலும் எழுதுகிறேன். வாளினும் வலிமை கொண்டது என் எழுதுகோல். வாழ்க்கைப் போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். எழுதுகோல் என் தெய்வம் " என ஜெயகாந்தனே ஏன் எழுதுகிறேன் என 1971 ஜூலை 5-ல் வானொலியில் உரையாற்றியதை இதில் எடுத்துக்காட்டியுள்ளார்.
ஜெயகாந்தனின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் கேள்விக்கு பதில் சொல்வதில் கெட்டிக்காரர். எழுத்து மூலமாக கேட்டாலும் நேரடியாக வாய் மூலம் கேட்டாலும் நெத்தியடியாகவும் நெஞ்சில் நிற்கும் வண்ணமும் அவரின் பதில் இருக்கும். பல்வேறு இதழ்களிலும் பேட்டி வெளியாகியுள்ளது. ஜெயகாந்தன் பேட்டிகள் என்றொரு தொகுப்பும் தோழர் கே. ஜீவபாரதி அவர்களின் நேர்காணல் என்னுமொரு தொகுப்பும் வெளியாகியுள்ளது. பாவலர் கருமலைப்பழம் நீ இத்தொகுப்பில் கல்பனா இதழில் வெளியான ஒரு கேள்வி பதிலையும் தோழர் கே. ஜீவபாரதியின் ஒரு நேர்காணலையும் பல்வேறு நேர்காணலில் பாவலர் ரசித்த பதில்களையும் என மூன்று பிரிவுகளாக இணைத்துள்ளார்.
கல்பனா இதழில் கவனத்தைக் கவர்ந்த ஒரு கேள்வி பதில் கே. எஸ். சுப்பிரமணி காரைக்குடி:
யாரிந்த ஜெயகாந்தன் என்று சாவியில் ஒருவர் கேட்டிருக்கிறார். நானும் கேட்கிறேன். யார் இந்த ஜெயகாந்தன்?
ஜெயகாந்தன்:
இது இவன் யுகம் என்று தமிழ் இலக்கியத்தில் எவனைக் குறித்தால் காலம் ஏற்குமோ அவனது இயற்பெயர் அது.
ஜெயகாந்தனுக்குரிய மிடுக்கையும் தன்னம் பிக்கையையும் காண முடிகிறது. ஞானபீட விருது பெறுவதை ஒட்டியதானது தோழர் கே. ஜீவபாரதியினுடையதான விரிவான நேர்காணல். பெண்ணியம் இதழில் வெளியான ஒரு நேர்காணலும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் ' ஆண்களை விடப் பெண்கள் சிறந்தவர்கள்' என்கிறார் ஜெ. கா.
ஓர் இலக்கியவாதியான ஜெயகாந்தன் குறித்து இலக்கியவாதிகள் பலர் அவர் இறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் பேசியுள்ளனர். பாவலர் பலரின் கருத்துகளை வாசிக்கத் தந்துள்ளார். ' தமிழ்ச் சிறுகதையின் பொற்காலம்' என்கிறார் எழுத்தாளர் கு. அழகிரிசாமி. " ஜெயகாந்தன் என்ற பெயருக்கு மறுமலர்ச்சி இலக்கியத்தில் என்றென்றும் ஒரு சிறப்பான இடம் உண்டு" என்பது எழுத்தாளர் மணியனின் கருத்து. " இன்றைய இந்தியாவின் தேவை, தமிழகத்தின் தேவை ' ஜெய ஜெயசங்கர' அல்ல.' ஜெய ஜெய பாட்டாளி ' என குறிப்பிட்டுள்ளார் தோழர் ஆர். நல்ல கண்ணு. அவ்வகையிலே இத்தொகுப்பு ' ஜெயஜெயசங்கர'வும் இன்றைய தேவையாக இருக்கிறது. எழுத்தாளர் வண்ணநிலவன் "ஜெய காந்தனே தன்னை புதுமைப்பித்தனின் வாரிசு என்பது போல் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வருகிறது. இதுதான் நிஜமும் ' என கூறியிருப்பது குறிப்பிடலுக்குரியது.
எழுத்தாளர் புதுமைப்பித்தனுக்குப் பின் எழுத்தாளர் ஜெயகாந்தனே சிறுகதைத்துறையில் சிறந்து விளங்கி சாதனை படைத்தவர் ஆவார். " ஜெயகாந்தன் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். எல்லா விருதுகளைத் தாண்டியும் மிகுந்த ஆளுமையும் உயர்வும் தனித்துவமும் கொண்டவர்" என போற்றியுள்ளார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். "இலக்கியத் துறையில் அவர் கையாண்ட புது உத்திகளுக்கு ஒரு முன்னுதாரணம் கிடையாது. அவரது நிலத்தில் தோன்றிய விளைச்சலுக்கு அவரே விதை, அவரே நீர், அவரே உரம் " என்பது ஜெயகாந்தன் குறித்த கவிஞர் கண்ணதாசன் பார்வை .
தோழர் தா. பாண்டியன் " ஜெயகாந்தன் ஒரு பிறவிப் பொதுவுடைமைவாதி. சோவியத் அமைப்பு நிலைகுலைந்த பின்னரும் ஜெயகாந்தன் நெஞ்சுக்குள் மட்டும் அது இன்னும் நிலைகுலையாது இருக்கிறது " என ஒரு பொதுவுடைமைவாதியாக காட்டியுள்ளார். " மதிக்கத் தக்க படைப்பாளியாக எப்போதும் துலங்கும் ஜெயகாந்தன் நேசிக்கத்தக்க மனிதராக விளங்குகிறார் இப்போது. காலம்தான் மிகப்பெரிய சலவைக்காரன் " என பவளவிழா மலரில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். "ஜே. கே. ஒரு கொள்கைவாதி, ஜே.கே. ஒரு பிடிவாதக்காரர், ஜே.கே. ஒரு மைல்கல், ஜே.கே ஒரு சிங்கம் " என படம் பிடித்துக்காட்டியுள்ளார் இயக்குநர் கே. பாலச்சந்தர். மேலும் எழுத்தாளர் சிட்டி, எழுத்தாளர் அசோகமித்திரன், எழுத்தாளர் தி. க. சிவசங்கரன், எழுத்தாளர் தி. ஜ. ர., ஹக்கீம், கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் மு. மேத்தா ஆகியோர் கருத்துகளையும் திரட்டித் தந்துள்ளார். செம்மலர் இதழில் ச. செந்தில்நாதன் அவர்களால் ஜெயகாந்தனுடனான நினைவுகள் பகிரப்பட்டுள்ளது. " எழுத்தாளுமையின் கம்பீர முகம் ஜேகே ' என்கிறார் கவிஞர் மு. முருகேஷ்.
கலைஞர் மு. கருணாநிதியும் எழுத்தாளர் ஜெயகாந்தனும் எதிரெதிர் நிலையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் ஒரு நட்பு இருந்துள்ள தைக் ' கலைஞரின் மேடைப் பேச்சில் இருந்து' பாவலர் எடுத்துக்காட்டத் தவறவில்லை. " வேறுபாடு என்பது பாலும் தண்ணீரும் போன்றது. முரண்பாடு என்பது எண்ணெயும் தண்ணீரும் போன்றது. நானும் ஜெயகாந்தனும் பாலும் தண்ணீரும் போல" என பொதுவாக இருந்த ஒரு முரண்பாடு குறித்த ஒரு பேச்சை உடைத்துள்ளார் கலைஞர். " பிற்காலத்தில் கொள்கைரீதியாக நாங்கள் எவ்வளவோ முரண்பட்டோம். எனினும் எங்கள் இருவருக்கும் இடையேயான ஆழ்ந்த நட்பில் எப்போதும் முரண்பாடு ஏற்பட்டதில்லை " என்கிறார் சிறுவயது முதலே நட்புடன் இருந்த திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி. கலைஞர் கூறியதை ரசித்து ரசித்து நண்பர்களிடம் ஜெயகாந்தன் குறிப்பிடுவார் என விகடன் நிருபர் நா. கதிர்வேலன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வள்ளுவர் கோட்டம் கலைஞரின் முயற்சியால் கட்டப்பட்டது. அவரின் ஆட்சி கலைக்கப்பட்டு திறப்பு விழாவின்போது கலைஞருக்கு வாய்ப்பில்லை. விழாவில் கலந்துகொண்ட எழுத்தாளர் ஜெயகாந்தன் வள்ளுவர் கோட்ட வடிவமைப்பில் கலைஞரின் உழைப்பை கலைஞருக்கு ஆதரவாக சுட்டிக்காட்டிய துணிச்சலைக் கண்டு வியந்துள்ளார் அஞ்சலிக் கவிதையில் பாவலர்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்வதில் சுயவிமர்சனம் செய்துகொள்வதில் தேர்ந்தவர் ஆவார். படைப்பைத் தாண்டி பல்வேறு சிந்தனைகளையும் பதிவித்துள்ளார். பாவலரும் பகிர்ந்துள்ளார். அதிலொன்று ' வாழ்க்கை என்பது வாழ்வின் பிரச்சனை. வளர்ச்சி என்பது வாழ்க்கையின் பிரச்சனை. கலையும் இலக்கியமும் வளர்ச்சியின் பிரச்சனைகள். எனது கதைகள் பொதுவாக பிரச்சனைகளின் பிரச்சனை " என தன்னிலையைத் தெரிவித்துள்ளார்.
ஜெ. கா. வின் பால்பேதம் போன்ற சில கதைகளுக்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்த நேரத்தில் மார்க்சிய அறிஞர் நா. வானமாமலை சரஸ்வதி இதழில் " ஜெயகாந்தனின் கதைகளில் டால்ஸ்டாயின் சாயலைக் காண்கிறேன். அதோடு நின்று விடாமல் எல்லா சமூக உண்மைகளையும் அச்சமின்றி எதிர்ப்புக்கு பணிந்துவிடாமல் தன் கதைகளை மேலும் பறையறைந்து கூறுவார் என்று எதிர்பார்க்கிறேன்" என எழுதிய கடிதத்தில், எதிர்பார்ப்பைத் தெரிவித்துள்ளார்.
ஆவணப்படுத்துதல் அவசியம். எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியது எல்லாம் ஓர் ஆவணம் என்றால் அவரும் ஓர் ஆவணம். அவரை ஆவணப்படுத்துதலும் அவசியம். எழுத்தாளர் சா. கந்தசாமியும் கவிஞர் ரவிசுப்பிரமணியமும் ஆவணப்படுத்தியுள்ளார்கள். எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்து ஆவணப்படம் எடுத்துள்ளார்கள். சா. கந்தசாமி சாகித்ய அகாதெமிக்காக எடுத்துள்ளார். அந்த ஆவணப்படம் குறித்து பொன். குமார் எழுதிய கட்டுரையையும் இடம்பெறச் செய்துள்ளார் தொகுப்பாளரான பாவலர். " ஜெயகாந்தன் ஒரு நல்ல சிறுகதையாளர். ஒரு நல்ல நாவலாசிரியர். ஒரு நல்ல கவிஞர். ஒரு நல்ல கட்டுரையாளர். ஒரு நல்ல குடும்பஸ்தர். ஒரு நல்ல மனிதர். ஒரு நல்ல குடிமகன். ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இதற்கெல்லாம் எடுத்துக்காட்டே ' ஜெயகாந்தன்' என்னும் ஆவணப்படம்" என்பது ஆவணப்படம் குறித்த பொன். குமாரின் கருத்து.
ஒரு சிறுகதையாளராக, ஒரு நாவலாசிரியராக அறியப்பட்ட ஜெயகாந்தன் ஒரு கவிஞர் என பலருக்கு தெரியாது. ' ஜெயகாந்தன் கவிதைகள்' என்று ஒரு தொகுப்பே உள்ளது. கவிதைத் தொகுப்பிலிருந்து கவிதைகள் சிலவற்றைத் தேர்ந்து தந்துள்ளார். சான்றாக இரண்டு கவிதைகள்.
நாலு வயதில் இருந்து- நான்
நடந்து வந்திருக்கேன். - இப்போ
நடத்தை சரியில்லை என்கின்றனர்-வயதோ
நாற்பதும் ஆகிறது.
எனக்கு நானே கடவுள்
எனக்கு நானே பக்தன்
என் வாழ்நாள் எல்லாம் திருநாள்
மரணம் எனக்குக் கரி நாள்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் கவிதைகளே பாடல் போலிருக்கும். அவரின் திரைக்கதைகளுக்கு அவரே பாடல் எழுதியிருப்பார். பாடலிலே கதையிருக்கும். ஜெயகாந்தன் எழுதிய பாடல்கள் பனிரெண்டையும் பல்வேறு நண்பர்களையும் தொடர்பு கொண்டு சேகரித்துத் தந்துள்ளார் கருமலையார். இதுவோர் அரிய பதிவாகும். ஜெயகாந்தனின் பாடலாசிரியர் என்னும் முகத்தைக் காட்டியுள்ளார். ' ஜெயகாந்தன் என்னும் கவிஞன்' தலைப்பில் ஜெயகாந்தனின் பாடல்களைப் பாராட்டி எழுதியுள்ளார் நீதியரசர் வெ. சுப்பிரமணியன்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதுவதை விடவும் நண்பர்களிடம் பேசுவது மிகவும் பிடித்தமானது. அதற்கு பெயரே ' ஜெயகாந்தன் சபை'. சபைக்கு நிரந்தரமாக வருபவர்களும் உண்டு. தற்காலிகமாக வருகிறவர்களும் உண்டு. சபையில் கேள்வியும் அவரே. பதிலும் அவரே. சபை குறித்து ஆனந்த விகடன் எழுதியுள்ளதைத் தந்துள்ளார். ஜெயகாந்தன் சபை குறித்து விரிவாக எழுதியுள்ளார் ஜூனியர் விகடன் இதழில் தமிழ் மகன். அவர் மரணத்தைத் தொடர்ந்து 'ஜெயகாந்தன் சபை கலைந்தது' என்பது ஒரு வருத்தத்தை ஏற்படுத்தவே செய்கிறது. ஒரு நாத்திகராகவோ, ஓர் ஆத்திகராகவோ, கம்யூனிஸ்ட் தோழர் என்றோ காங்கிரஸ்காரர் என்றோ ஜெயகாந்தன் குறித்து ஒரு முடிவிற்கு வரமுடியாது என்றும் ' ஆனால் அவர் கலகக்காரர்' என்று அடையாளப்படுத்தலாம் என்கிறார்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் இறப்பை யொட்டி ஏராளமான அஞ்சலி கட்டுரை கள் இதழ்களில் வெளியாயின. இந்திய ஆட்சிப் பணியாளராக இருக்கும் எழுத்தாளர் இறையன்பு ' எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லை' என்னும் நிலையில் வாழ்ந்தவர் ஜெயகாந்தன் என குமுதம் தீராநதி இதழில் தெரிவித்து தொடர்ந்து " படைப்பாளர் என்ற நிலையில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பினும் ஜெயகாந்தன் அடைந்துள்ள உச்சத்தினை வேறு யாரும் அடை வதற்கு வாய்ப்பில்லை. நவீன இலக்கியம் மட்டுமின்றி பண்பாட்டுத் தளத்திலும் புதிய போக்குகளை வடிவமைத்த சாதனையாளரான ஜெயகாந்தனின் வாழ்க்கை எழுத்தாளன் என்ற நிலையில் நிறைவானது " என புகழாரம் சூட்டியுள்ளார். இதே இதழில் நவீன இலக்கிய விமர்சகரான ந. முருகேச பாண்டியன் ' ஜெயகாந்தனின் பன்முக ஆளுமை' குறித்து எழுதியுள்ளார். அதில் ' காமராஜருக்கும் ஜே. கே. வுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருந்தது. அவர் ஏற்றுக்கொண்ட ஒரே தமிழகத்துத் தலைவர் காமராஐர்தான்' என்கிறார். ஜெயகாந்தனோ காமராஜரை காங்கிரஸில் இருக்கும் கம்யூனிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
' ஜெயகாந்தனோடு பல்லாண்டு' வாழ்ந்தவர் பி. ச. குப்புசாமி. இத்தலைப்பிலேயே ஒரு தொடர் இந்து தமிழ்த் திசையில் எழுதி ஒரு தொடராக வந்து பின் ஒரு தொகுப்பாகவும் வெளிவந்தது.
அத்தொடரின் சில பகுதிகளை வாசிக்கத் தந்துள்ளார். வழக்கு மன்றத்தில் ஒரு வழக்கு விசாரனையின் போது ஜெயகாந்தன் படைப்புகள் தொடர்பான கேள்விகள் கேட்கும் அளவிற்கு ஜெயகாந்தன் புகழ் பெற்றிருந்தார் என ஒரு தகவலை அளித்து வியக்கச்செய்துள்ளார் பி. ச. குப்புசாமி.
'ஜெயகாந்தன்... இல்லையென்று யார் சொன்னது...?' என்னும் தலைப்பில் ஒரு கேள்வியை எழுப்பி எழுத்துகளில் இருக்கிறார் என்ற ஏர்வாடி ராதாகிருஷ்ணன் தன் குடும்பத்திற்கும் ஜெயகாந்தன் குடும்பத்திற்கான தொடர்பு குறித்து நட்பு குறித்து பேசியுள்ளார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு இலக்கியத்தில் உதவியாளராக வந்து இல்லறத்தில் துணை யாகவும் மாமி என குடும்பத்தாரால் அழைக்கப்படும் கௌசல்யா. குடும்பத்திலும் ஓர் உறுப்பினர் ஆனார். கௌசல்யா மாமி குறித்து அறியச் செய்துள்ளார் எழுத்தாளர் கடற்கரய்.
ஓர் உரையாடலுக்குப்பின் " ஜே. கே. வுக்கு உண்மையான உபாசகி கௌசல்யா. இவருக்கு அன்பான தோழி ஞானாம்பிகை. இப்படியொரு தோழமை காவியத்தில் கூட கிடையாது" என எழுதி இருப்பது நெகிழ்ச்சியானது. ஜெயகாந்தனை ஒரு காவியத் தலைவன் ஆக்கியுள்ளார். ஜெயகாந்தனைப் பற்றி அவர் மகள் ஜெ. தீபலட்சுமியும் அவர் மகன் ஜெ. ஜெயசிம்மனும் எழுதியதை வாசிக்கும்போது ஒரு தந்தையாக ஜெயகாந்தனின் நிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது.
எழுத்தாளர் மாலன் அஞ்சலியை ஒரு கவிதையாக எழுதியுள்ளார். கல்யாணியை, சாரங்கனை, கங்காவை, ஹென்றியை, ரங்காவை, ஜோசப்பை, கோகிலாவை, கௌரிப் பாட்டியை, சிறுவன் சிட்டியை நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் ஜெ. கே. உங்களையும் சந்திப்போம். போய் வாருங்கள் ஜே. கே. நீங்காத நினைவுகளுடன்
-மாலன்
என எழுதி எழுத்தாளர் ஜெயகாந்தன் பாத்திரங்களுடன் எப்போதும் வாழ்வார் என்கிறார்.
'ஜெய ஜெய காந்தன்' என்னும் இத்தொகுப்பின் தொகுப்பாசிரியான பாவலர் கருமலைப் பழம் நீயும் நிறைவாக ஓர் அஞ்சலிக் கவிதையை எழுதியுள்ளார். அதில்
தனிநபர் துதிபாடாத
தன்மானத் தமிழ்முரசே!
அந்த தேவ ரட்சகன்
மூன்றாம் நாளிலே
உயிர்த்தெழுந்து வந்தது போல்
நிச்சயம் நீ எழுந்து வருவாய்
'தேவன் வருவாரா?' என்று
கேட்டவனே..! இதோ
நானும் கேட்கிறேன்..
'ஜே. கே. வருவாரா? "
என ஜெயகாந்தன் வரவேண்டும் என்கிறார். ஜே. கே. வருவாரா?
பாவலர் கருமலைப்பழம் நீ தன் நண்பர் திறனாய்வாளர் எம். எஸ். தியாகராஜன் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு' ஜெய ஜெய காந்தன்' என்னும் ஒரு தொகுப்பைத் தமிழ் இலக்கிய உலகத்திற்கு அளித்துள்ளதன் மூலம் எம். எஸ். தியாகராஜன், ஜெயகாந்தன் ஆகிய இருவரின் மீதான அன்பையும் பற்றையும் வெளிப்படுத்தியதுடன் இருவரின் ஆத்மாக்களையும் திருப்தியடையச் செய்துள்ளார். பாவலரின் உழைப்புக்கும் ஜெய காந்தன் மீது கொண்டுள்ள ஈடுபாட்டுக்கும் இத் தொகுப்பு ஒரு சான்று. எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்து எழுதப்பட்டவை இலக்கிய பரப்பெங்கும் பரவியிருக்கும்.
எழுதாத இலக்கியவாதிகளும் பேசாத படைப் பாளிகளும் அரிதிலும் அரிதாகவே இருப்பர். எதிர்மறையான கருத்துக் கொண்டவர்களும் இருப்பர். பாவலர் கருமலைப்பழம் நீ அவர்களின் தீவிரத் தேடலில் கிடைத்தவைகளைக் கொண்டு தொகுப்பை உருவாக்கியுள்ளார். தொகுப்பு கனத்து விடும் என்பதால் தேடலை ஓர் எல்லையில் நிறுத்தி யிருப்பார் என்று தோன்றுகிறது. எனினும் ' ஜெயஜெய காந்தன்' தற்போதும் கனக்கிறது. காரணம் ஜெய காந்தன் குறித்த கருத்துகள், கட்டுரைகள், படைப்பு கள், பேச்சுகள். பாவலர் கருமலைப் பழம் நீ எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு செய்துள்ள சிறப்பு, பாராட்டு ' ஜெய ஜெய காந்தன்'. புகழின் உச்சியில் இருக்கும் எழுத் தாளர் ஜெயகாந்தனுக்கு மேலும் புகழ் சேர்த்துள்ளார் பாவலர் கருமலைப் பழம் நீ. பாவலருக்கும் புகழ் கூடும்.
பாவலர் கருமலைப் பழம் நீ அவர்களின் இருபத்தைந் தாம் தொகுப்பு ' ஜெய ஜெய காந்தன் ' . பாவலருக்கும் காந்தனுக்கும் இத்தொகுப்பு ஒரு முக்கிய பதிவு.
வெளியீடு :புரட்சிப் பாரதி பதிப்பகம்,
தொடர்பு எண்: 9043050699