எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், உடல்நலக் குறைவு காரணமாக தனது சொந்த ஊரான விளாத்திகுளத்தில் கடந்த 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இயற்கையோடு கலந்தார்.
அவர் மறைந்த செய்தி, தமிழ் இலக்கிய உலகை அதிரவைத்தது.
கல்லூரிக் காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராளியாகத் திகழ்ந்த இவர், சமூகப் போராளியாக தனது எழுதுகோலை உயர்த்திப்பிடித்தார். 1971 முதல் 1999 ஆம் ஆண்டு வரை தமிழ் நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சூரியதீபன் என்ற புனை பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், அரசியல், நாவல்கள், கட்டுரைகள் எழுதியவர் செயப்பிரகாசம். தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதியிருக்கிறார். எழுத்து வட்டத்திற்குள் மட்டுமே தன்னை சுருக்கிக்கொள்ளாமல், போராட்டக் களத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திராவிட மற்றும் இடதுசாரி சிந்தனையாளர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர். எழுத்தாளர், பேச்சாளர், பேராசிரியர் உள்ளிட்ட பன்முகத் திறமை கொண்டவர். தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரும் பங்காற்றியவர்.
1941-ல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரத்தில் பிறந்தார். இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 1968-ஆம் ஆண்டு முதல் 1971-ஆம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றினார். 1971-ஆம் ஆண்டு முதல் 1999-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
திராவிட இயக்கச் சிந்தனை கொண்ட எழுத்தாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். காடு, இரவுகள் உடையும், புதியன, இரவு மழை உள்ளிட்ட ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். பள்ளிக்கூடம், மணல் என இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். சூரிய தீபன் என்ற புனைப் பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், அரசியல், நாவல்கள், கட்டுரைகள் ஆகியவற்றையும் எழுதினார்.
இவருடைய கதைகளில் கரிசல் மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் எடுத்துரைத்தார். கரிசல் மண் சார்ந்த கதைகளை எழுதியுள்ளார். ஷமன ஓசை' என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி என்ற அமைப்பின் செயலாளராக பொறுப்பு வகித்தார். கல்லூரிக் காலங்களில் இருந்து பேச்சாளராகத் திகழ்ந்துள்ளார்.
அரசியல் மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் பல சொற்பொழிவுகள் நடத்தியுள்ளார். தன்னுடைய மரணம் வரை, பல சிறுகதைகளையும்ஸ், நாவல்களையும் எழுதிவந்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக தனியாகவே வாழ்ந்தார். இவரின் மனைவி மணிமேகலை. இத்தம்பதிகளுக்கு தீபன் என்ற மகனும் சாருநிலா என்ற மகளும் உள்ளனர். தீபன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். சாருநிலா அமெரிக்காவில் வசித்து வருகிறார்.