சந்திப்பு : முனைவர் அ. பழமொழிபாலன்
நம் தமிழ்க் கலாச்சாரம் பாரம்பரியம் மிக்கது. அது கடல் தாண்டி, மலை தாண்டி, கண்டங்கள் தாண்டி, விசாலமாக இந்த பிரபஞ்சம் எங்கும் வியாபித்துக் கிடக்கிறது. நம் கலாசாரத்தின் நிழலில் இளைப்பாறுகிறபோது, மேலை நாட்டு மக்கள் கூட லயிப்பில் புலன் அடங்கிப் போகிறார்கள்.
நம் கலாசார நெகிழ்வுகளை சுலபமான முறையில் மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் இசையும், இசை சார்ந்த கருவிகளும், மொழியும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பூவரசு இலையைச் சுருட்டி நுனியில் அமிழ்த்தி, ஊதுகின்றபோது, ஏற்படுகின்ற ஓசை குழலோசையையும் மிஞ்சி விடுகிறது. அந்த இசையோடு வார்த்தைகளைக் கோர்க்கிறபோது வெளிப்படுகின்ற பிரமாண்டம், கணவன் மனைவிக்கு இடையிலான பரஸ்பர சுகத்தையும் மிஞ்சி விடுகிறது. பாடலும் இசையும் ஏற்படுத்துகின்ற ஸ்பரிசத்தை வேறு எதனால் கொடுத்துவிடமுடியும்.
ஏழு ஸ்வரங்களுக்குள் இருக்கும் இன்பத்தை எடுத்துக் கொடுப்பவர்களும் ஏறத்தாழ பிரம்ம வித்தை கற்றவர்கள்தான். இசை உணர்வுகளுக் குத் தீனி போடுகிறது. அதில் குழைந்து வரும் வார்த்தைகள் உயிருக்கே தீனி போடுகிறது. அப்படி உயிருக்கே தீனிபோடும் பங்களிப்பில் கவிஞர்களே முதன்மையான இடத்தைப் பெறுகிறார்கள்.
இவர்கள் உயிர்களை வசீகரிக்கும் சூட்சும ரசத்தை இந்த பிரபஞ்சத்தில் ஊற்றி வைத்திருக்கிறார்கள். அதுதான் மானுடத்தை அதலபாதாளத்தில் விழுந்துவிடாமல் இன்றளவும் காப்பாற்றிக் கொண்டு நிற்கிறது. இதில் திரையிசைப் பாடல்களின் பங்கு அளப்பரியதாக நிற்கிறது.
அவ்வகையில் தமிழ் திரையிசைப்பாடல் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பவர் பழம்பெரும் பாடலாசிரியரான பூவை.செங்குட்டுவன்.
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா" "திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்" "முத்தமிழில் பாட வந்தேன்" "தாயிற் சிறந்த கோயிலுமில்லை" போன்ற காலத்தால் அழிக்க முடியாத கானங்கள்தான் இன்றளவும் நம் இதயத்தை அலங்கரித்து கொண்டே இருக்கின் றன. இந்த கானங்கள், பக்தியின் பரவசத்தை உணர்வற்றுக் கிடைக்கும் பொருள்களைக்கூட உணர்வு பெறச் செய்து விடுகிறது. கவியரசு கண்ணதாசனைப் போன்று காலத்தை கடந்து நிற்கும் மேற்கண்ட முத்தான பாடல்களைக் கொடுத்தவர்தான் கவிஞர். பூவை. செங்குட்டுவன். இவர் சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி பிறப்பிட மாகக் கொண்டவர். தற்போது தேனாம்பேட்டை லாயிட்ஸ்ரோடில் உள்ள 14/29 ராமலிங்க ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இதோ அவருடன் ஒரு சந்திப்பு...
1. "தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்று தத்துவார்த்தமான ஒரு பாடல் எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் கோயிலாக நினைக்கக்கூடிய உங்கள் தாயை பற்றியும், அதில் தெய்வமாக நினைக்கக் கூடிய உங்கள் தந்தையைப் பற்றியும் கொஞ்சம் கூறுங்கள்.
தாயைப் பற்றி கூறுகிறபோது, பெரிய பெரிய தலைவர்கள் எல்லோருமே தாயை அளவுக்கு அதிகமாக நேசித்து இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் தன் தாயின் மீது அளவில்லாத அன்பு வைத்திருந்தார். ஆதலால்தான் அவர் தொடங்கியிருந்த ஒளிப்பதிவுக் கூடத்திற்கு சத்யா ஸ்டூடியோ என்று பெயர் வைத்திருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தாயின் மீது மிகுந்த பற்று கொண்டவர். ஆதலால்தான் தன் வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் சூட்டியிருந்தார். முத்தமிழறிஞர் கலைஞரும் அப்படித்தான். தன் தாயிற்கு ஒரு சிலை செய்து அதனை தன் அருகிலேயே வைத்து தாய் தன் அருகிலேயே இருப்பதுபோன்று ஒரு உணர்வுடனே வாழ்ந்து கொண்டிருந்தார். எனக்கும் என் அம்மாவை ரொம்ப பிடிக்கும்.
அப்பா பெயர் ராமையா. அம்மா பெயர் லட்சுமி அம்மாள். நாங்கள் நான்கு ஆண் பிள்ளைகள். இரண்டு பெண் பிள்ளைகள். நான்தான் கடைசி. எங்களை செல்லமாக வளர்க்கவில்லை. கண்டிப்பாக வளர்த்தார்கள். என் அப்பா எங்கள் ஊர் பகுதிகளில் மிகவும் செல்வாக்கு மிகுந்தவர். அப்போதெல்லாம் திருடர்கள் புழக்கம் அதிகமாக இருந்த காலகட்டம். ஆனால் என் தந்தை இருந்தவரை எங்கள் ஊருக்கு திருடர்கள் வருவதில்லை. எப்படி என்றால் திருடர்களை அழைத்து ஐந்தாறு மூட்டை நெல், தானியங்கள், தேங்காய் எல்லாம் வைத்து வண்டி கட்டி அவர்கள் வீட்டிற்கு அப்பா அனுப்பிவைப்பார். அந்த காலத்தில் இருந்த திருடர்கள் எல்லோரும் பசிக்காகத்தான் திருடி இருக்கிறார்கள். வயிற்றுப்பசிக்கு அவர்களுக்குத் தேவையானது கிடைத்துவிட்டால் அவர்கள் திருட வேண்டிய தேவையில்லாமல் போய்விடும் என்று அப்பா அடிக்கடி கூறுவார்.
அந்த காலகட்டத்தில் பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் மதுரை சாமி என்று ஒரு சித்தரைப் பார்க்க அடிக்கடி எங்கள் ஊருக்கு வருவார். என் அப்பாவும் தேவரய்யாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். காலையில் 10 மணிக்கு உட்கார்ந்து பேச ஆரம்பிப்பார்கள். பொழுது சாயும் வரை பேசிக்கொண்டே இருப்பார்கள். தேவர் ஐயா என் முதுகில் தட்டிக் கொடுத்து நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். அப்பாவுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கனும் என்பார். அவர் என் முதுகில் தட்டிக் கொடுத்ததனாலோ என்னவோ நான் சமூகத்தில் பேரும் புகழும் பெறுவதற்கு அது ஒரு காரணமாக இருந்திருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை" என்ற பாடல் எழுதியதன் மூலம் புரட்சித்தலைவரின் அரசியல் பயணத்திற்கு உங்களுடைய பங்களிப் பும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அந்த வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது.
அதைப் பற்றி உங்கள் அனுபவத்தை கூறுங்கள்.
குகநாதன் திரைத்துறையில் உச்சம் தொட்டவர் களில் முக்கியமானவர். ஆனால் அவர் திரைத்துறைக்கு வராத காலத்திலேயே நாங்கள் நெருங்கிய நண்பர்கள். குகநாதன் ஒரு இந்திப் படத்தின் கதையை எம்.ஜி.ஆருக்காக வாங்கியிருந்தார். கதை எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிடித்துப்போகவே அந்த படத்தில் கவிஞர் கண்ணதாசனுக்கு மூன்று பாட்டு. மூன்று பாட்டுமே நன்றாக இருக்கும். நெத்தியில பொட்டு வச்சேன், சின்னவளை முகம் சிவந்தவளை போன்ற பாட்டு.
"நான் ஏற்கனவே குகநாதனிடம் ஒரு பாட்டு சொல்லி வைத்திருந்தேன். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, இது ஊரறிந்த உண்மை, நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை". இந்தப் பல்லவி எம். ஜி. ஆருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருந்தேன். இந்த பாடல் வரிகளை குகநாதன் எம்.ஜி.ஆரிடம் கூறியிருக்கிறார். கணேசன் செட்டியாரும் எம்.ஜி.ஆரிடம் சொல்லியிருக்கிறார்.
ஒரு நாள் குகநாதனும் நானும் எம்.எஸ்.வி. வீட்டிற்குச் சென்றிருந்தோம். அவர் புதிய பூமி என்றொரு படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்தார். குகநாதன் எம்.எஸ்.வி.யிடம் என்னை அறிமுகப்படுத்தவே, அவர் எனக்கு ஒரு சந்தம் கொடுத்தார் தான நானா தான நானா என்று அவர் சொல்லிக்கொண்டிருந்தார். சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நான் பாட்டுக்கு எழுதிக்கொண்டே இருந்தேன். வாத்தியார் ஐயா என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று எம்.எஸ்.வி. என்னைக் கேட்டார். ஒன்றும் இல்லைங்க நீங்க சொன்ன சந்தத்திற்கு டூப் வார்த்தைகள் போட்டு எழுதிக்கொண்டு இருந்தேன் என்றேன். எங்க குடுங்க பார்ப்போம் என்றார். அந்த டூப் வார்த்தையாக எழுதியதுதான் "காலம்தோறும் பாடம் கூறும் மாறுதல் இங்கே தேவை, ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை. இதயம் எந்தன் ரோஜாவானால் நினைவே நறுமணம் ஆகும். எங்கே இதயம் அங்கே வாழும் அன்பே என்னை ஆளும்.
அவர் சொன்ன டியூனுக்கு நான் உடனே எழுதி விட்டேன். அவர் இயக்குனரைக் கூப்பிட்டார் டைரக்டர் சார் வாங்க, இவரு டூப்னுதான் சொல்றாரு அதுவே பிரமாதமா இருக்கு. நாளைக்குதானே ரெக்கார்டிங் தியேட்டருக்கு எழுதிட்டு வரச் சொல்லுங்க போதும் என்று சொன்னார். அப்படியே எழுதிக்கொண்டு சென்றேன். அடுத்த நாள் சத்யா ஸ்டூடியோ உள்ளே இந்த பாடலுக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது. நான் எம். ஜி. ஆரைப் பார்க்கலாம் என்று அங்கே சென்றிருந்தேன்.
அப்போதுதான் இந்த பாடலுக்கான படப்பிடிப்பு நடக்குது. உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் உலகில் நிச்சயம் உண்டு ஒவ்வொரு மனிதனின் உழைப்பினாலும் உலகம் செழிப்பது உண்டு. குகநாதன் எம். ஜி ஆரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.
இந்த பாட்டு எழுதியவர் இவர்தான் என்றார். எம்.ஜி.ஆர் என்னை பாராட்டி உட்காருங்க என்று அவர் அருகிலேயே உட்கார வைத்துக்கொண்டார். இப்படித்தான் எம்.ஜி.ஆர் உடனான அறிமுகம் எனக்குக் கிடைத்தது.
உங்களின் முதல் பாடலான திருப்பரங்குன்றத் தில் நீ சிரித்தால் முருகா என்ற பாடல் உருவான விதத்தை கொஞ்சம் சொல்லுங்கள்.
குன்னக்குடி வைத்தியநாதனுடன் எனக்கு ஏற்பட்ட நட்புதான் அதற்குக் காரணம். நிறைய நாடகங்கள் போடுவோம். அந்த நாடகங்களுக்கு கதை, வசனம் நான்தான் எழுதுவேன். நாடகங்கள் அனைத்திற்குமே குன்னக்குடிதான் இசையமைப்பார். அப்போது குன்னங்குடி இசை அமைப்பதற்காகவும், நான் பாடல் எழுதுவதற்காகவும் சினிமாவுக்கு முயற்சி செய்துகொண்டிருந்த காலம். சினிமாவுக்காக வாய்ப்பு தேடி எங்கே போய்விட்டு வந்தாலும் மயிலாப்பூர் புதுத் தெருவில் உள்ள, தேரழுந்தூர் சகோதரிகள் வீட்டிற்கு மதிய சாப்பாட்டிற்கு வந்துவிடுவோம். அப்போதுதான் சகோதரிகள் இவரோட பாட்டு எல்லாமே நல்லாயிருக்கு என்று சொன்னார்கள். குன்னங்குடி சொன்னார் நீங்க முருகனைப் பற்றியும் சிவனைப் பற்றியும் பாட்டு எழுதிக் கொடுங்க என்று. இல்லைங்க முருகனைப் பத்தி சிவனைப் பத்தி யெல்லாம் நான் எழுதமாட்டேன். வேறு ஏதாவது பாட்டு சொல்லுங்க நான் எழுதுகிறேன் என்று சொன்னேன். அப்போது அவங்க சொன்னாங்க சினிமாவுக்காகவா போகப் போகுது, கச்சேரியில் தானே பாடப் போறாங்க என்று. எனக்கு என்னன்னா நான் ஒரு பகுத்தறிவுவாதி. நாம எப்படி பக்திப் பாட்டு எழுதுறதுன்னு ஒரு எண்ணம். இதையெல்லாம் தாண்டி என்னை பேனாவைப் பிடித்து எழுத வைத்தது, அந்த இசை மேதை குன்னக்குடி தான். அப்போது நான் கச்சேரிக்காக எழுதிய முதல் பாடல்தான் "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்" என்ற பாடல்.
பக்தி பாடல்களை எல்லாம் தாண்டி, கவிஞர். கண்ணதாசன்தான் சினிமாவில் உங்களுக்கான முதல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த அனுபவம் குறித்து கொஞ்சம் கூறுங்கள்?
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா" என்ற பாடல், இதை தேரழுந்தூர் சகோதரிகள்தான் பாடினார் கள். அந்த இசைத்தட்டு அதிக அளவில் விற்பனையானது. அதன் பின்பு பிலிம்சேம்பரில் ஒரு விழா வைத்தார்கள். அந்த விழாவில் ஏ.பி.என். இருக்காரு. ஏ.எல்.எஸ். இருக்காரு. கவிஞர் கண்ணதாசன் இருக்காரு. இறைவணக்கப் பாடலாக "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்" என்ற பாடலைத்தான் சூலமங்கலம் சகோதரிகள் பாடினார்கள். ஏ.பி.என் அவர்களிடம், கண்ணதாசன் கேட்டார், ஏ.பி.என். இந்த பாட்டு யாரு எழுதினது என்று கேளுங்க. கந்தன் கருணையில முருகன் வள்ளி தெய்வானையுடன் உட்கார்ந்து இருக்கிற அந்த காட்சிக்கு இந்த பாட்டு மிகவும் பொருத்த மாக இருக்கும். அப்படியே வச்சிடலாம் என்று கண்ணதாசன் கூறினார். அவர் கூறியபடியே கந்தன் கருணையில் "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்" என்ற பாட்டு இடம்பெற்றது.
முதன் முதலில், தமிழ் சினிமா உலகத்திலேயே கொடிகட்டிப் பறந்த, மாபெரும் கவிஞர், கண்ண தாசனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே ஒரு கவிஞன் நான்தான். வேறு யாரும் கிடையாது. தமிழ் சினிமா உலகத்திலேயே கிடையாது. இப்படித்தான் எனக்கு முதல் வாய்ப்பு சினிமாவில் கிடைத்தது. அந்த பழைய பாடல் பதிவு செய்த பாட்டில் "சென்னையிலே கந்த கோட்டம் உண்டு" என்று எழுதியிருப்பேன். அதை கவிஞர் திரைப்படத்தில் வரும் போது "சிறப்புடனே கந்தகோட்டம் உண்டு" என்று மாற்றி இருப்பார். சிறப்பு டனே என்று மாற்றி எனக்கு சிறப்பு சேர்த்துக் கொடுத்தவர் கவிஞர் கண்ணதாசன். அதுதான் எனக்கு சினிமாவிலும் முதல் பாடலாக அமைந்தது கவியரசு கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற சமகால கவிஞர்களுடன் எதிர்நீச்சல் போட்டு திரையிசை பக்திப் பாடல்களில் அவர்கள் தொடமுடியாத உச்சத்தை நீங்கள் தொட்டிருக்கிறீர் கள் அது எப்படி உங்களுக்கு சாத்தியமானது.
அதை எனக்கு சொல்ல தெரியவில்லை. ஏன்னா நான் ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி பக்தி நமக்குள்ள இருந்துச்சா, இல்ல அது ஒரு சக்தியா என்று நமக்கு தெரியாது. ஆனா அவரு எழுதச் சொன்ன உடனே நான் எழுதிட்டேன்! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் என்று எழுதிட்டேனே! இதை நிறைய பேரு கிண்டல் பண்ணுனாங்க. ஏய்யா இங்கே சிரிச்சா அங்கே கேட்கு முன்னு நீ பாட்டு எழுதிட்டே. அவ்வளவு ராட்சசதனமாவா முருகன் சிரிப்பாரு. அப்படியெல்லாம் கிண்டல் பண்ணினாங்க. ஆனால் அந்த பாடல்தான் எனக்கு அவ்வளவு பெருமையைத் தேடித் தந்தது.
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்" என்ற பாடல் வெளிவந்த பின்பு சமூகத்திற்கான அங்கீ காரம் உங்களுக்கு எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
அதாவது கர்நாடகாவில், ஒரு மலைப் பிரதேசத்தில் நாங்க ஒரு படப்பிடிப்பிற்கு போயிருந்தோம். அங்கே ஒரு தேனீர்க் கடையில போயி தேநீர் சாப்பிடுவதற்காக நானும் என் நண்பரும் சென்றிருந்தோம். அங்கே ஒருத்தர் கேட்டார். இங்க எங்க வந்து இருக்கீங்க. நாங்க ஒரு படப்பிடிப்பிற்காக வந்திருக்கோம். என்ன படம் தமிழ் படமா என்றார். ஆமாம் என்று சொன்னேன்.
இந்த பாட்டு எழுதறவங்க எல்லாம் உங்களுக்குத் தெரியுமான்னாரு. ஓரளவு தெரியும் என்றேன். திருப்பரங்குன்றத்தில் என்று ஒரு பாட்டு இருக்கே அதை எழுதியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா என்று கேட்டார். "திருப்பரங்குன்றத்தில் சிரித்தால் திருத்தணியில்தான் கேட்கும் என்று நினைத்திருந் தேன்" கர்நாடகாவெல்லாம் கேட்டிருக்கு. அது நான் தான் என்று சொன்னேன். உடனே அவர் டீக்கெல் லாம் நீங்க காசு கொடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, அவருடைய வீட்டுக்கு அழைச்சிட்டு போய் அவர் மனைவி மகளிடமெல்லாம் என்னை அறிமுகப் படுத்தினார். அது எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு. அந்த பெருமை எல்லாம் குன்னக்குடி வைத்தியநாதனைத்தான் சேரும்.
இதுவரை நீங்கள் எத்தனை பாடல்கள் எழுதி உள்ளீர்கள் அதில் குறிப்பிடும்படியான அனுபவம் ஏதேனும் உண்டா?
1200 பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் முக்கால்வாசி பாடல்கள் திரைப்படத்திற்கு எழுதியது. அது எல்லாமே வெற்றி பெற்ற பாடல்கள்தான்.
பக்திப் பாடலில் "ஆடுகின்றானடி தில்லையிலே" என்ற ஒரு பாட்டு எழுதி இருந்தேன். அதையே ஏ.பி.என் ராஜராஜசோழன் என்ற படத்தில் "ஏடு தந்தானடி தில்லையிலே" என்று மாற்றி எழுதிக் கேட்டார். அது அவருக்கு மிகவும் பிடித்த பாட்டு. ஏ.பி.என். அவர்களிடம் பாட்டு எழுதுவது என்பது பழகிய பின்பு மிகவும் சுலபமாக இருந்தது. ஒரு முறை குருவாயூரப்பனை பற்றி ஒரு பாடல் எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டார். இல்ல குருவாயூரப்பன் தலவரலாறு எல்லாம் வேண்டும் என்றேன்.
அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. கண்ணன்தான் குருவாயூரப்பன். குருவாயூரப்பன்தான் கண்ணன். நீங்கள் எழுதிடுவீங்க எழுதுங்க என்று சொன்னார்.
இதெல்லாம் எனக்கு வாழ்க்கையில கிடைச்ச மிகப் பெரிய வரம்.
திரைத்துறையில் திரையிசைப் பாடல்கள் எழுதுவதுதான் என் இலக்கு என்று எப்போது தீர்மானித்தீர்கள்?
அதாவது பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே. ஏழாவது படிக்கும் போது என்று நினைக்கிறேன்.
அப்போது சிவகங்கை மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் படம் பார்க்கும்போது அந்த படத்தில் வருகிற டைட்டில் மாதிரி நம்ம பேரும் டைட்டில்ல வரணும்னு அப்போதே ஒரு ஆசை. அது நடக்குமா நடக்காதா என்றெல்லாம் எனக்கு தெரியாது.
அப்போதே சென்னைக்குப் போக வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றியது. பாட்டு எழுதுவது என்பது எனது எண்ணம் அல்ல. கதை எழுத வேண்டும் என்றுதான் நினைத்தேன். அது நினைத்த மாதிரியே நாடகங்களுக்கு நிறைய கதைகள் எழுதினேன் பின்புதான் பாடல் எழுத ஆரம்பித்தேன் திரைத்துறையில் மூன்று தலைமுறைகளை வென்றெடுத்த நீங்கள் மூன்று தலைமுறைகளில் உங்களோடு பயணித்த கவிஞர்களைப் பற்றி உங்கள் அனுபவங்களை கூறுங்கள்.
எனக்கு கண்ணதாசனிடம்கூட அதிக பழக்கம் இல்லை. ஆனால் அவர் எனக்கு நிறைய படங்களுக்கு சிபாரிசு செய்திருக்கிறார். அவருடைய தென்றல் பத்திரிகையில் எல்லாம் நான் எழுதி இருக்கிறேன். ஆலங்குடி சோமு எனக்கு நல்ல பழக்கம் உண்டு. மாயவநாதனிடமும் நல்ல பழக்கம். எனக்கு அந்த இரண்டு கவிஞர்களையும் மிகவும் பிடிக்கும். மிகவும் அற்புதமான கவிஞர்கள். நான் லாயிட்ஸ் ரோட்டில் ஒரு ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்து இருந்தேன். அப்போது மாயவநாதன் அங்கு வந்திருந்தார். நீங்கள்தானே பூவை செங்குட்டுவன் என்று கேட்டார். ஆமாம் என்றேன். "வணங்கும் கைகளின் வடிவத்தைப் பார்த்தால் வேல் போல் தெரிகிறதே" என்று நீங்கள் தானே எழுதினீர்கள். ஆமாம் என்றேன். கையை பிடித்துக்கொண்டு அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். இது மாதிரி எந்த கவிஞனும் இதுவரை எழுதியதில்லை என்று பாராட்டினார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முத்துலிங்கத்தோடு நல்ல பழக்கம் உண்டு. வாலியோடும் நல்ல பழக்கம் உண்டு. வாலி மாதிரி எல்லாம் ஒரு மீனவருக்கு அது மாதிரி யாரும் எழுத முடியாது. "தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்" நல்லதொரு அற்புதமான கவிஞர்.
நீங்கள் உச்சம் தொடுவதற்கு உந்துசக்தியாக இருந்து ஊக்கம் கொடுத்தவர்கள் யாரேனும் உண்டா?
அது என்னுடைய மனைவிதான். கஷ்டம், இன்பம், துன்பம் எல்லாவற்றிலும் பங்குகொண்டு, ரொம்ப கஷ்டமான காலங்களில் எல்லாம் அதை தாங்கிக் கொண்டு, எனக்கு பக்கபலமாக இருந்தார்.
திருக்குறள் இசைப் பாடலாக வெளிவருவதற்கு காரணம் என் மனைவிதான். ஒருநாள் ஒரு சிறிய பையன் என்னிடம் வந்து கூறினான். நீங்கள் தான் பக்திப் பாடல்கள் எல்லாம் எழுதுகிறீர்களே திருக்குறள் பற்றி இசைப்பாடல்கள் எழுதுங்களேன் என்று கூறினான்.
அதை என் மனைவியிடம் வந்து கூறினேன்.
உடனே அவர்கள் ஒரு பையன் வந்து கூறினான் என்றால் அது முருகனாகத்தான் இருக்கமுடியும். நீங்கள் எழுதுங்கள் என்றார்கள். எனக்கு என்ன தெரியும் ஒரு பத்து குறள் தெரியும். எப்படி எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் மு.வ. உரை பரிமேலழகர் உரை எல்லாம் வாங்கி, படித்துப் பார்த்து அனைத்தையும் உள்வாங்கி எழுதினேன். ஒரு அதிகாரத்திற்கு ஒரு பாடல் வீதம் 130 பாடல்கள் இசைப் பாடல்களாக வெளிவந்தது. இசைப் பாடல் என்றால் அது மாதிரி யாராலும் எழுத முடியாது. மிகச் சிறப்பாக வந்திருந்தது. ஆனால் அதற்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. நிச்சயம் கிடைக்கும்.
திரையிசைப் பாடல்கள் இப்போதும் உங்கள் வாயில் கதவை தட்டுகிறதா? அப்படி என்றால் என்ன படங்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கிறீர்கள்?
இப்போது இரண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறேன். "ஆயத்தம்" என்று ஒரு படம். "குற்றம்" என்று ஒரு படம். பழைய பாடல்கள் அளவுக்கு நின்னு நெலைச்சு நிக்குமான்னு தெரியாது. ஆனால் நமக்குன்னு ஒரு எழுத்து வடிவம், நடை இருக்கு இல்லையா அது மாதிரி எழுதி இருக்கிறேன்.
எழுத்துத்துறையில் உங்கள் பயணம் எது மாதிரியான இலக்குகளை எட்டியிருக்கிறது நீங்கள் எழுதிய நூல்கள் பற்றி குறிப்பிடுங்கள்?
ஒரு பதினைந்து நூல்கள் எழுதியிருக்கிறேன். "வீரமங்கை வேலுநாச்சியார்", "உண்மையான உண்மைகள்" ,"உள்ளத்தின் ஓசைகள்" போன்ற நூல்கள், இப்போது "நெஞ்சில் நிறைந்தவர்கள்" , "இலக்கிய துளிகள்", "இதனால் சகலமானவர்களுக்கும்" போன்ற நூல்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்று ஒட்டுமொத்த மானுடவியலுக்குமான சூட்சமத்தின் உண்மை நிலையை எழுதுவதற்கு எது உங்களுக்கு உந்து சக்தியாக இருந்தது?
தாய் தந்தை தான். கடவுள் நேரடியாக வர முடியாது.
ஒரு தாய் வழியாக வரலாம். தாய் என்பது எங்கேயும் ஒரு கெட்ட தாய் என்று யாரும் இருக்க முடியாது. தாய் வந்து ஒரு சக்தியான ஆளுமை உடையது. இந்த வாசகம் நம் முன்னோர்கள் சொன்னதுதான். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், கலைஞர். இவர்கள் அனைவரும் மிகப்பெரிய புகழை அடைந்தார்கள் என்று கூறினால் அது அவர்களுடைய தாயால்தான் என்பது மறுக்கமுடியாத உண்மை.
முத்தமிழறிஞர் கலைஞரோடு உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் உண்டா?
ஒரு முறை என்னுடைய நூல் ஒன்றை, கலைஞர் தலைமையில் வெளியிடலாம் என்று அவரை பார்க்கச் சென்றேன். முதல்நாளே என்னுடைய நூலை கொடுத்திருந்தேன். மறுநாள் சென்றபோது அரங்கம் நல்லா இருக்கானு கேட்டார். உன்னோட புத்தகத்தை இரவே படிச்சிட்டேன்யா அது என்ன நீ பூராவும் சாமி பாட்டா எழுதி இருக்க. நான் அங்கு வந்து என்ன பேசுறது. நான் கூறினேன் நீங்கள் வந்து திட்டிப் பேசினாலும் பரவாயில்லை நீங்கள்தான் வெளியிட வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர் உன்னை எப்படிய்யா நான் திட்ட முடியும் அப்படின்னார் பாருங்க அதிலேயே எல்லாம் முடிஞ்சுபோச்சு. அதுதான் கலைஞர். அதன்பின்பு கலைஞர் மேலுள்ள மரியாதை கூடிக்கொண்டே சென்றது. கண்ணதாசன்தான் என்னை அறிமுகப் படுத்தினார் என்பதற்காக கண்ணதாசன் பெயரிலேயே ஒரு விருது ஆரம்பித்து அந்த விருதை எனக்கு கொடுத்தவர் கலைஞர்.
உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத மனிதர்கள் பற்றி கூறுங்கள்?
ரொம்ப மறக்கமுடியாத மனிதர்கள் என்றால் அவர்கள் இப்போது இல்லை. அதில் ஒருவர் ஏழுமலை என்ற பெயருடையவர். சோமு என்று ஒருவர். இவர்கள் இருவருமே நான் எழுதிய நாடகங்களில் நடித்தவர்கள். இவர்கள் இருவருமே எனக்கு எந்தவிதமான வருமானமுமே இல்லாத காலகட்டத்தில் உதவி செய்தவர்கள். அவர்களை நான் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் "நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் மாதிரி" ஒரு நாலு பேருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று ஒரு விழா எடுத்தேன். குன்னக்குடி, கண்ணதாசன், ஏ.பி.என்., ஏ.எல்.எஸ் இந்த நால்வருடைய படங்களையும் திறந்து வைக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன். குன்னக் குடி படத்தை இசையமைப்பாளர் சங்கத்தலைவர் தினா, கவிஞர் கண்ணதாசன் படத்தை பிறைசூடன், ஏ.பி. என்., படத்தை குகநாதன்., ஏ.எல்.எஸ். படத்தை என்னுடைய மருமகள் அதாவது இயக்குனர் விஜய் அவர்களுடைய மனைவி ஐஸ்வர்யா போன்றோரை வைத்து திறந்துவைத்தேன். இயக்குநர் விஜய், என் மனைவியின் தங்கச்சிப் பையன். மதராசபட்டணம் போன்ற படங்களை இயக்கியவர். இவர்கள் எல்லாம் என் வாழ்வில் மறக்க முடியாத மனிதர்களாக இன்னும் எனக்குள்ளே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
இன்றைய இசையமைப்பாளர்கள், பாட லாசிரியர்கள் பற்றி உங்களுடைய கருத்தை கூறுங்கள்?
இன்றைக்கு கொடி கட்டி பறக்கின்றவர் என்றால் அவர் இளையராஜாதான். அவர் முதன்முதலில் திரை இசைப் பாட்டுக்கு இசையமைத்தது பூவை செங்குட்டுவன் பாட்டுக்குத்தான். இதெல்லாம் வரலாறு. இளையராஜாவும் இதை பல மேடைகளில் பேசி இருக்கிறார். "ஊரும் பழனியப்பா உன் பேரும் பழனியப்பா" என்று ஒரு பாட்டு. அப்போது அவர் சினிமாவுக்கு வராத காலம். முதன்முதலில் இந்த பாட்டுக்குத்தான் ராஜா சார் இசையமைக்கிறார்.
வாழ்வுக்கு துணை இருக்கும் வழி வேருக்கும் மணம் இருக்கும் உன் காலுக்கும் வழி இருக்கும் அது கருணையின் வழி நடக்கும். என்று அதை இடைவிடாமல் எழுதியிருப்பேன். அதை அவரே குறிப் பிட்டுச் சொல்லியிருப்பார். அவ்வளவு பெரிய இசை மேதை, இசைஞானி இளையராஜா. என்னுடைய பாட்டுக்குத்தான் முதன்முதலில் இசை அமைத்துள் ளார் என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
இதோ போட்டு இருக்கிறேனே இந்த மோதிரம் இளையராஜா சார் போட்டது.
திரையிசைப் பாடலாசிரியராக கொடிகட்டிப் பறந்த உங்களால் வாழ்க்கைக்குக் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ள முடிந்ததா?
முடியவில்லை. அதற்கு காரணம் என்னவென்றால் அப்போது எனக்கு கிடைத்த வருவாய் குறைவா னது. இப்போது இருப்பது போன்று இல்லை.
அதாவது புகழ் வந்த அளவுக்கு பொருள் வந்ததில்லை. பிள்ளையார் என்று ஒரு படம், அதில் ஒரு பாட்டு வரும். யாரை வணங்கிட வேண்டும் பிள்ளை - யாரை வணங்கிட வேண்டும் என்று ஒரு பாட்டு அப்போது சூலமங்கலம் சகோதரிகள், அவர்களே மெட்டுப்போட்டு அவர்களே பாடி இருந்தார்கள்.
அப்போது உள்ள தயாரிப்பாளர்களிடம் காசுகளையும் நீங்க இவ்வளவுதான் கொடுக்கவேண்டும் என்று கேட்க கூடிய நிலை இல்லை. கேட்கவும் எனக்கு மனசு இல்லை. அப்போது சூலமங்கலம் சகோதரிகளும் தயாரிப்பாளரும் வந்து பாட்டு நல்லா வந்திருக்கு என்று கூறிவிட்டு ஐம்பது ரூபாய் பணத்தை என் சட்டைப் பையில் வைத்துவிட்டுச் சென்றார்கள். மறுநாள் அந்த தயாரிப்பாளரிடம் சென்றேன்.
அவ்வளவுதாங்க, அவ்வளவுதான் என்று சொன்னார்.
அந்த படத்துல அந்த பாட்டுதான் சிறப்பான வெற்றிப் பாடலாக அமைந்தது. பாட்டுதான் வெற்றிப் பாடலாக அமைந்ததே தவிர அதற்கான சன்மானம் எதுவும் பெரிதாகக் கிடைக்கவில்லை. இது கூட பரவாயில்லை. சில தயாரிப்பாளர்கள் பாட்டை எழுதி பதிவு செய்துவிட்டு, வாசிப்பவர்கள், பாடுபவர்கள் அவர்களுக்கெல்லாம் பணம் கொடுத்துவிட்டு, அண்ணே நாளைக்கு உங்களை எங்க மேனேஜர் வந்து பார்ப்பார் என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்று விடுவார்கள். மறுநாள் மேனேஜரும் வரமாட்டார் அந்த படமும் வெளிவராது. இதுபோன்று நிறைய படம். இப்படித்தான் அன்றாட வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு போகமுடிந்ததே தவிர, வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை.
தற்போதுள்ள வாழ்வாதாரத்தை நகர்த்திக் கொண்டு செல்வதற்கான சூழ்நிலைகள் சரியானதாக அமைந்திருக்கிறதா?
வாழ்க்கை முறையானதாக அமையவில்லையே என்ற வருத்தம் தானே தவிர மற்றபடி என்னுடைய பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள். என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். ஐ.பி.ஆர்.எஸ். என்று ஒரு அமைப்பு இருக்கிது. அதிலிருந்து எனக்கு வருவாய் வந்துகொண்டிருக்கிறது. தற்போது இரண்டு வருடங்களாக கொரோனா காலகட்டத்தில் அது வரவில்லை.
என்னுடைய சின்ன பொண்ணு கடலூரில் இருக்கிறது. அது எனக்காகவே மேலே தனி அறை கட்டி குளிர்சாதனப் பெட்டி எல்லாம் போட்டு, அப்பா நீங்க இங்கேயே வந்து தங்கிக் கொள்ளுங்கள். இனிமேல் எங்கே பாட்டு எழுதப் போகிறீர்கள் என்று கூறியது. இல்லம்மா பாட்டு எழுதுவது ஒரு பக்கம் இருந்தாலும், எழுத்து வேலைகள் எல்லாம் இருக்கிறது என்று கூறினேன். தேவைப்பட்ட காலத்துல பெருசா ஏதும் கிடைக்கல. கஷ்டப்பட்டோம். இப்போது அது இல்லை. ஒரு மனிதன் சராசரியாக வாழ்வதற்கு என்ன தேவை இருக்கு அவ்வளவுதான். அது இருக்கு. அது போதும்.
உங்களுடைய திரை இசைப் பாடல்கள் குறித்த பயணத்தில் சந்தத்துக்கு எழுதுவது, மெட்டுக்கு எழுதுவது குறித்து உங்களுடைய கருத்து என்ன?
அதாவது ஒரு கவிஞன் என்று சொன்னால் இரண்டிற்கும் தயாராக இருக்கவேண்டும். அதாவது ஒரு டியூன் ரொம்ப நல்லா இருக்கும் அதற்கு தகுந்த வார்த்தைகளைப் போட்டு விட்டால் பாட்டு மிகவும் சிறப்பாக வந்துவிடும். அதே மாதிரி நாம் எழுதி வைத்திருக்கக்கூடிய பாட்டு நன்றாக இருக்கும்.
அதற்கு இசை நன்றாக அமைந்துவிட்டால் அந்த பாடல் சிறப்பாக இருக்கும். அதனால் கவிஞர், இசையமைப் பாளர் இருவருமே இரண்டுக்குமே தயாராக இருக்க வேண்டும் "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்" இந்த வார்த்தைகளைக் கூறினால் அந்த ட்யூன் நினைவுக்கு வர வேண்டும். அது மாதிரி அந்த டியூனை தானான தானான என்று கூறுகின்ற போது அந்த வார்த்தைகள் நினைவுக்கு வரவேண்டும்
அதுதான் பாட்டு.
புதிதாக பாடல் எழுத வரும் கவிஞர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
புதிதாக எழுதும் கவிஞர்களில் சில பேர் நன்றாக எழுதுகிறார்கள். ஒரு படத்துக்கு பாட்டு எழுதும்போது கதை சொல்லி அந்த கதைக்கு தகுந்த மாதிரி பாடல் எழுதுவது என்பது இப்போது கிடையாது. டைட்டில்ல பேர் வரணும். டைரக்டர் சொல்றாருன்னு எழுதுறாங்க. அதுல எனக்கு உடன்பாடில்லை. ஏன்னா ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு பாடலிலும் ஒரு செய்தி சொல்ல வேண்டும். வணக்கம் என் வணக்கம் சிங்கார வேலன் என்று எழுதிய பாடலில் கூட ஒரு செய்தி சொல்லி இருப்பேன் அன்னநடை இது என்ன நடை யார் யாரோ சொன்ன நடை என்று எழுதி இருப்பேன். அதுல கூட தேவர் என்ன கட்டிப்புடிச்சிக்கிட்டு என்னய்யா இவ்வளவு அருமையா எழுதி இருக்கீங்க என்று மகிழ்ந்து போனார். ஆனால் இப்போது உள்ள கவிஞர்கள் எல்லாம் திறமை நிறைய இருக்குன்னு சொல்லலாம். ஆனால் மக்களுக்குத் தேவையான கருத்தைச் சொல்ல வேண்டும்.