இலக்கியப் படைப்பின் உருவாக்கம் என்பது சமூகத்தின் உயிர் அங்கமாக இலங்குவது. சமூகத்தின் உயிர்ப்பினைத் தக்கவைக்கும் காரணிகளில் இத்தகைய படைப்பாக்கமும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. ஒரு சமூகத்தை மாற்றியமைத்து அதனை ஒழுங்குபடுத்தும் செயற்பாட்டினையும் செய்யும் ஆற்றல்மிக்கதாகப் படைப்பு விளங்குகிறது. இதற்குப் படைப்பாளிகளின் படைப்பாளுமையே காரணமாகும். காலந்தோறுமான சிறுகதை இலக்கிய வளர்ச்சியில் எண்ணற்ற படைப்பாளிகள் தோன்றி மறைந்து தோன்றிச் செயற்பட்டாலும் அவற்றில் ஒருசிலரே காலவெள்ளத்தில் கரைந்துபோகாமல் நிற்பதற்கு அவர்களின் படைப்புகளே வேராகின்றன. அவ்வகையில் படைப்பாளி விந்தனின் படைப்பாளுமை குறித்துச் சிலவற்றைப் பகிர்ந்துகொள்வதே இக்கட்டுரையின் கடமையாக அமைகிறது.
அடிப்படையில் சக உயிர்களிடத்து அன்பும், பரிவும், மனிதநேயப்பண்புடன் மனிதர்களை அணுகு வதும் அவர்களுக்கு உதவுவதும் இரக்கங்கொள்வதும் அவர்களுக்காகத் தங்களின் படைப்புக்குரலை எழுப்புவதுமாக இருப்பதே படைப்பிற்கு முன்னதாகப் படைப்பாளியின் பண்பாக அமைதல் வேண்டும். விந்தன் அத்தகைய மனிதநேயமிக்க படைப்பாளுமை கொண்டுள்ளதையே அவரின் ஒவ்வொரு படைப்பும் உறுதிசெய்கிறது.
விந்தனின் எல்லாச் சிறுகதைகளிலும் ஏதேனும் ஒரு கூறு படிப்போரைச் சுருக்கெனத் தைக்க வைக்கிறது. இந்தத் தைப்பு வெகு இயல்பாக நிகழ்கிறது.
போகிறபோக்கில் என்று சொல்வதுபோல விந்தன் இதைச் சரளமாகக் கையாளுகிறார். சமூகத்தின் பல்வேறு மனித வாழ்வுகளில் நிகழும் அவலங்களைப் பலரும் பொருட்படுத்தத்தக்கதல்ல என்று எண்ணிப் போவதைப் பொருட்படுத்தி ஆழமாக மனத்துள் பதிய வைத்து அதிர்வுகளை உண்டாக்கும் ஆளுமையை விந்தன் உருவாக்குகிறார். ஒரு சிறுகதைக்கு ஒரு தகவல் வேண்டும் என்று சொல்லப்பட்ட அடிப்படை வரையறையைத் தாண்டிப் பல தகவல்களைப் படிப்போர் உள்ளத்துள் செலுத்துகிறார். இவை தகவல்களாகப் பரிமாறப்படவில்லை. நமக்கும் இவை நேரும். நாமும் இதனை அனுபவிப்போம். ஆகவே இந்த அவல அனுபவத்தைப் பெற்றுத் தவிப்போரைத் தாண்டிச் செல்லக்கூடாது மனிதநேயத்துடன் இதனைக் கண்கொண்டு பார்க்கவேண்டும் என்று சொல்லாமல் வலியுறுத்துகிறார்.
கதைக்குத் தலைப்பிடும்போதே சொல்லவரும் கருத்தைப் பற்றி யோசிக்க வைத்துவிடுகிறார். சில கதைகளின் தலைப்புகளைப் பார்க்கலாம். ஏழையின் குற்றம், கடவுள் என் எதிரி, மாட்டுத்தொழுவம், கருவேப்பிலைக்காரி, முதல்தேதி, சோறும் சுதந்திரமும். தலைப்புகளைப் படித்ததும் என்னவாயிருக்கும் என்று யோசித்துவிடலாம். நேரடிப்பொருளையும் கண்டுகொள்ளலாம். இதுவாகத்தானே இருக்கும் என்கிற அலட்சிய பாவத்திலும் எண்ணிவிடலாம். ஆனால் விந்தன் தலைப்பினை வேறு பொருண்மைக்கு மாற்றுகிறார். முரணை தலைப்பிலேயே முள்ளாக விதைக்கிறார். அதில் ஒரு நகையைத் துள்ளவிடுகிறார்.
இயலாதவனின் வறண்ட சிரிப்பைப்போல அது கதையை வாசித்துமுடித்ததும் உள்ளத்துள் வினையாற்றுகிறது. அவர் நினைப்பதையெல்லாம் கதையில் சொல்லுகிறார். கேட்கிறார். கோபப்படுகிறார். எள்ளலோடு வருத்தப்படுகிறார். ஆனால் எவற்றுள்ளும் கடுகளவுகூட மிகையில்லை. அடடா இது சரிதானே? இப்படித்தானே கேட்டிருக்கவேண்டும்? நடந்திருக்க வேண்டும்? ஏன் இப்படி நாம் நினைக்காமல் போனோம் என்று படிப்போரில் உள்ள சாதாரண வாசகரை மட்டுமல்ல இன்னொரு படைப்பாளியையும் சிந்தனைச் சேற்றுக்குள் புதைக்கிறார். இது விந்தனின் கைவந்தகலையாக ஒவ்வொரு கதையிலும் மிளிர்கிறது.
ஒரு ரூபாய்க்கு மேல் கூலி வாங்கவந்துவிட்டால் செட்டியாரின் கண்களிலிருந்து ஏனோ இரண்டு சொட்டுக் கண்ணீர் கீழே விழும். (ஏழையின் குற்றம்)
ஒரு முதலாளி ஒரு கூலித்தொழிலாளி. என்னதான் கடினமாக அவன் முழு உழைப்பையும் ஈந்தாலும் அது ஒரு ரூபாயைத் தாண்டக்கூடாது என்கிற முதலாளி யின் சித்தாந்தம் நமக்குக் கண்ணீரை வரவழைத்து விடுகிறது. இரவு பத்து மணிக்குமேல் போயிட்டு வரேனுங்க என்று உத்தரவு வாங்கி கிளம்ப எத்தனித் தாலும் என்னடா இத்தனை சீக்கிரம் என்று மனித நேயத்தைப் புதைத்த சொற்களில் கேட்கும் செட்டியார் (முதலாளி) சரிதான் அந்த அரிசி மூட்டையை வீட்டில் போட்டுவிட்டுப்போ என்று வேலையிட்டு ஆறணாவைத் தாராளமாக அன்றைய கூலியாகத் தந்து விழுந்த இரண்டு சொட்டுக்கண்ணீருக்குச் சமாதானம் அல்லது நியாயப்படுத்திக்கொள்கிறார்.
செட்டியாரின் திருட்டு வியாபாரத்தை எத்தனையோ நாட்களாகத் காத்துவந்தவரும், சின்னச் சாமியின் திருட்டுத் தொழிலுக்கு ஒன்பது நாட்கள் துணையாயிருந்தவருமான கடவுள் பத்தாவது நாள் மட்டும் கறுப்பு மார்க்கெட்டின் மூலம் பணக்காரரான செட்டியாரை விட்டுவிட்டு, ஏழைச் சின்னசாமியை மட்டும் ஏனோ காட்டிக்கொடுத்துவிட்டது. (ஏழை யின் குற்றம் )
மேற்கண்ட பத்தி உணர்த்தவருவது என்ன? பல கேள்விகளைத் தரலாம். ஆனால் பிறப்பிலேயே திருட்டுப் புத்தியோடு பிறந்தவன் அப்படித்தான். ஆனால் இடையில் திருட்டுப்புத்தி கொள்பவன் அப்படியில்லை. ஆகவே சின்னச்சாமியை கடவுள் காட்டித்ததான் கொடுக்கும் (கொடுப்பார் இல்லை). குற்றம் பொதுவானது இருவருக்கும் என்றாலும் பலன் என்பது எப்போதும் ஏழையையே சார்கிறது என்று இன்றுவரை மாற்றப் படாத விதிதானே? இதனை யார் மாற்றவேண்டும்? என்பதுதான் இக்கதை நமக்கு உணர்த்தவருவது. ஒருவனுக்குத் திருட்டுப் பட்டம் இன்னொருவனுக்கு ராவ்பகதூர் பட்டம். இதுவும் சிந்தனைக்குரியது தான்.
விந்தனைப் பொருத்தளவில் தன்னுடைய மனித நேயப் பண்பை எல்லா உத்திகளிலும் ஒரு கதைக்குள் சொல்லி அதைச் சலிப்பூட்டாமல் வெற்றிபெறச் செய்வதுதான் மேற்சொன்னபடி கைவந்த கலையாக இருக்கிறது. சொல் கோர்வை, உவமைகள், வருணனை உத்திகள், உரையாடல் சொற்கள், காட்சிப் படிமம், மனவோட்டம், சொல்லாட்சி, வார்த்தை, தொடர்கள் என இப்படியாக எல்லாவற்றிலும் தன்னுடைய மனிதநேயப் பண்பைப் படைப்பாளுமையாக விந்தன் முதன்மைப்படுத்தி கதையை அழியாச்சித்திரமாக மனத் துள் வரைந்துவிடுகிறார்.
தரித்திர தேவதை, அவருடைய ஏகபோக உரிமைப் பொருள் அன்பின் ஆக்கினைகள் (மாட்டுத்தொழுவம்)கைப்பிடித்த தோஷம் (கருவேப்பிலைக்காரி)அவ்வளவு அஜாக்கிரதை (சொல் கோர்வைகள்)
இந்தச் சொல்கோர்வைகள் மேலோட்டமான பொருள் என்பதைக் கடந்து கதையோடு இயங்கும் போது அவை ஏற்படுத்தும் கொந்தளிப்புகள் தனித் துவம் மிக்கவை. நம்மை மனமற்று உறையவைப்பவை.
சில கதைகளின் தொடக்கத்தில் மனிதர்களின் அறியாமை மீறல்களைச் சொல்லி மனிதநேயத்திற்கு முன்பாக இவை ஒன்றுமே செய்யமுடியாது எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் என்பதையும் தெளிவுறுத்துகிறார் விந்தன்.
அதிகாரப் பூர்வமான சட்ட திட்டங்களால் மனித வர்க்கத்தை அடக்கி ஆண்டுவிடமுடியும் என்று நம்புவது அறியாமை. ஆனால் அன்பின் ஆக்கினைகளை மீறுவதற்கு மனிதன் சக்தியற்றவன் (மாட்டுத்தொழுவம்)
கருவேப்பிலைக்காரியை என்னால் மறக்கவே முடியவில்லை. உங்களோடு என்னையும் சேர்த்துப் பேசமுடியுமா, அம்மா? என்ற கேள்வி என் மனதை விட்டு அகலவேயில்லை இருவருக்குமான பேதங்கள் இருந்தாலும் பெண்ணாகப் பிறந்ததில் ஒன்றாக இருந்தாலும் மனோ பாவத்தில் உள்ள வித்தியாசத்தை உணரவேண்டும் என்பதை விந்தன் அந்தப் பெண் பாத்திரம் வழியாகக் குறிப்பிடுகிறார்.
சிறுகதையின் பலம் என்று திறனாய்வாளர்கள் குறிப்பிடும் கூறுகளுள் பாத்திரங்கள் பேசும் உரையாடல் களும், வருணனை உத்திகளும் அடங்கும். விந்தன் கதைகளில் உரையாடலில் மாறுபட்ட சொல்கோர்வை யில் முரண் நகையுடன் அமைத்து ஆழமான கருத் தாடலுக்கு இடமளிக்கிறார். எதார்த்தத்தை மீறிய எந்தவொன்றையும் விந்தன் கதைப்பில் காணமுடிய வில்லை. அன்றாட மனிதச் சொல்லாடல்களில் வழக்குகளில் அவற்றை அமைக்கிறார். வாழ்க்கையும் எழுத்தும் வேறுவேறல்ல என்கிற சத்தியத்தைக் காப்பாற்றும் போராளியாகவே விந்தன் தன் கதைகளில் இயங்குகிறார். வருணனை உத்திகளிலும் சரி உவமைகளிலும் சரி இந்தப் பண்பைக் காக்கிறார்.
சித்திரம் சிற்பம், நடனம், நாட்டியம் முதலிய சுவைகளைச் சிலர் தங்கள் குலவித்தையாகக் கொண்டிருக்கிறார்களல்லவா?
அதேபோலக் கூலிப் பிழைப்பைத் தன் குல வித்தையாகக் கொண்டிருந்தான் சின்னசாமி (ஏழையின் குற்றம்)
குலவித்தை என்பது மரபுவழிச்சொல் அது உணர்த்தும்பொருள் வேறு. ஆனால் கூலி வேலை என்பது குலவித்தை அல்ல. அது சமுகத்தின் குற்றத் தில் விளைந்த சாபம். இந்த அவலத்தை எங்கே பொருத்திக் காட்டுகிறார் விந்தன் பாருங்கள். ஓர் ஏழைக்குக் குலவித்தையாக கூலிவேலை அமைந்தது யார் குற்றம்? ஏழையின் குற்றமா? சமுகத்தின் குற்றமா? கேட்காமல் கேட்கிறார் தலைப்புத்தொடங்கி விந்தன். மனிதநேயத்தின் இயற்பண்பால்தான் இப்படிக் கேட்கமுடியும்.
தெரிந்த ஊரைவிட்டு பிறந்த வீட்டை விட்டு பெற்ற தாயைவிட்டு, வளர்த்த தந்தையைவிட்டு, தெரியாத ஊருக்குள் நுழைந்தேன், பிறக்காத வீட்டுக்குள் புகுந்தேன், பெற்ற தாயின் பரிவுக்குப் பதில் வாய்த்த மாமியின் கொடுமையைக் கண்டேன் என்னை வீட்டுக் காரியம் செய்யவிடாத தந்தைக்குப் பதில் எடுத்ததற்கெல்லாம் என்னையே காரியம் செய்யவிடும் மாமனா ரைக் கண்டேன் (மாட்டுத்தொழுவம்)
சாதாரண எல்லோரும் புழங்கும் சொற்களில் என்ன அழகான ஒப்பீடு மேற்குறித்த பத்தியின் கருத்து இன்றைக்கு வரை பொருந்தும். இந்தப் பொருத்தமே விந்தனின் அழியாப் படைப்பாளுமைக்குச் சான்றா கும். இயல்பாய் ஒரு வீட்டிற்கு வரும் பெண்ணை எப்படி அணுகவேண்டும் என்பதை எப்படி அணுகக் கூடாது என்று ஒப்பிட்டுணர்த்தும் விந்தனின் உத்தி மனிதநேயப் படைப்பாளுமைக்கும் சிறந்த சான்றா கவே விளங்குகிறது.
இதே கதையில் துன்பங்கொடுக்கும் மாமியாரைப் பற்றி மருமகள் சிந்திப்பதாக விந்தன் எழுதியிருக்கும் பின்வரும் பத்தி ஒரு மாறுபட்ட படைப்பாளுமையின் வாசலை அடையாளப்படுத்துகிறது.
பார்க்கப்போனால் பிறக்கும்போதே அவள் மாமியாராகப் பிறந்துவிடவில்லை. ஒரு காலத்தில் அவளும் இன்னொரு மாமியாரின் கீழ் மருமகளாய்த் தான் வாழ்ந்திருக்கவேண்டும். இப்பொழுது என் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் எல்லாம் அப்பொழுது அவள் உள்ளத்திலும் தோன்றியிருக்க வேண்டும். நான் இன்று அனுபவித்த கஷ்டத்தை அவளும் அன்று அனுபவித்திருக்கவேண்டும். நான் காணும் வேதனையை அவளும் அடைந் திருக்கவேண்டும். நான் காணும் கனவுகளையெல்லாம் அவளும் கண்டிருக்கவேண்டும். என்னைப் போல் இளமையின் ஆசைக் கடலில் வீழ்ந்து அவளும் ஒரு காலத்தில் தத்தளித்திருக்கவேண்டும். துன்பத்தைக் கண்டு துடித்து இன்பத்தை நினைத்து ஏங்கியிருக்க வேண்டும். ஆனால காலம் மாறிவிட்டது. அவள் கடவுளைத்தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்க முடியாத நிலையில் இப்பொழுது இருக்கிறாள். இருந்துவிட்டுப்போகட்டும். அதற்காக நானும் அவளைப்போல் ஜபமாலை உருட்டி வெறும் வேஷதாரியாக வேண்டுமா? (மாட்டுத்தொழுவம்)
இந்த பத்தி உணர்த்த வருவது என்ன? இந்த சிந்தனைகள் யாருக்கு வரவேண்டும். தான் அனுபவித்த தைப்போல தன் மருமகளும் அனுபவிக்கக்கூடாது என்று நினைப்பதற்கு யாருக்குத் தோணவேண்டும்? தன் மகனின் மனைவியல்லவா என்கிற பரிவும் பாசமும் உண்மையில் யாரிடம் இருந்திருக்கவேண்டும்? இருந்துவிட்டு போகட்டும் என்று மருமகள் நினைப் பதுபோல் யார் நினைக்கவேண்டும்? தான் அனுபவிக் கும் துன்பங்கள் எல்லாப் பெண்களுக்கும் உரித்தானது அது ஒருகாலத்தில் பெண்ணாக இருக்கும் தன் மாமியாருக்கும் நேர்ந்திருக்கிறதே என்கிற இரக்கமிக்க மனிதநேயச் சிந்தனை யாருக்கு வரவேண்டும்? வர வேண்டியவர்களுக்கு வராமல் ஒரு மருமகளின் வாயிலாகத் தன் துன்பத்தை ஒரு சூழலில் மாமியாரும் அனுபவித்திருக்கிறாளே இது இயல்புதான் என்று சிந்திக்கும் மருமகள் அதேசமயம் அதற்காக நானும் அனுபவிக்கவேண்டுமா? இதை ஏன் நீங்கள் சிந்திக்கமாட்டேனென்கிறீர்கள் என்று மாமியாரின் உள்ளத்திற்குக் கேட்கும் உணர்வுகளை எல்லாம் விந்தன் எழுப்புகிறார்.
தான் பிறப்பெடுத்துத் தவழ்ந்து வளர்ந்து வாழ்ந்த சமூகத்தினைப் பிரதியெடுப்பதாகவே விந்தனின் படைப்பாளுமை அமைந்திருக்கிறது. இப்படித் தான் எல்லாப் படைப்பாளிக்கும் நேரும். என்றாலும் அவரவர் படைப்பு அறிவால் மாறுபட்ட சொற்களில் அது மிளிரும். விந்தன் உள்ளதை உள்ளவாறே எதார்த்த மாக எளிமையாகப் பார்த்த மனிதர்களின் உள்ளங்களி லிருந்து வெளிப்படும் சொற்களில் ஒரு சாமானிய மனித வாழ்வைப் பிரதிபலித்துக் காட்சிப்படுத்துகிறார். கண்களால் கண்டு உள்ளத்தால் தெளிதல் வேண்டும் என்பது விந்தனின் படைப்பாளுமையின் எண்ணம்.
கருவேப்பிலைக்காரி எனும் கதையில் கருவேப் பிலை விற்பவளுக்கும் அதை வாங்கும் பெண்ணுக்கும் ஒரே வாழ்க்கைப் பிரச்சினைதான். இருப்பினும் அதன் அணுகுமுறைகள் தீர்வுகள் என்பவை வெவ்வேறு தளங்களில் இருப்பவை. ஒட்டுமொத்தக் கதையின் உயிர்நாடியாக ஒரு தொடரை வெகுஎளிதாக கதை யினூடாக விந்தன் வெளிப்படுத்துகிறார். அது ஆயிரம் கேள்விகளைப் படிப்போரை நோக்கி வீசுகிறது.
உங்களோடு என்னையும் சேர்த்துப் பேசமுடியுமா, அம்மா? (கருவேப்பிலைக்காரி)
நடக்காத கதை எனும் கதையில் ஒன்றை நடத்தி இப்படித்தான் உலகமெங்கும் மனிதநேயம் பேணப்பட வேண்டும் என்றும் விந்தன் விருப்பமுற்றுக்கூறுகிறார்.
எல்லாம் தெரியும் பிள்ளை, அதுக்கா இப்படி நடுங்கிக்கிட்டு நிக்கறே? ..சே.. விட்டுத் தள்ளுங்கிறேன். உன்னைக் கொண்டு இத்தனை வருஷமா நான் எவ்வளவு பணம் சம்பாதிச்சிருப்பேன்? இப்போ நீ தவறி ஒரு விளக்கை உடைச்சி விட்டதுக்காகவா அந்த நஷ்டத்தை உன் தலையிலே கட்டறது அநியாயமில்லே.. நானே உடைச்சி விட்டிருந்தேன். அப்போ என்ன பண்ணியிருப்பேன். பிள்ளை? -அதே நியாயந்தான் உனக்கும் என்றார் அல்லாப் பிச்சை ராவுத்தர் (நடக்காத கதை )
விந்தன் இக்கதையை எழுதிய காலத்தில் வேண்டுமானால் இப்படியான ஒரு விஷயம் நடக்காதி ருந்திருக்கலாம். ஆனால் இன்று இதுபோன்று நியாய உள்ளங்கள் தென்படத்தொடங்கியுள்ளமை கண்கூடு.
சே. விட்டுத் தள்ளுங்கிறேன் எல்லாவற்றையும் விட்டுத்தள்ளத்தான் வேண்டும். மனித நேயத்தின் முன்பாக எதுவும் ஏற்கப்படவேண்டியதில்லை.
உன்னைக் கொண்டு இத்தனை வருஷமா நான் எவ்வளவு பணம் சம்பாதிச்சிருப்பேன்?
இத்தகைய உணர்வு இருக்கிறதா? இருக்கிறது பாலைவனத்தில் மழை பெய்து தங்கிய துளிகள் போல ஒன்றிரண்டு.
விளக்கு தூக்கித் தூக்கியே சுமந்த தலையில் மேலும் விளக்கு உடைத்த நஷ்டத்தையும் தூக்கி வைக்கமுடியுமா? எத்தனை மனிதநேயமான பேச்சு?
அல்லாப்பிச்சை ராவுத்தருக்கு வந்திருக்கிறது என்றுதான் எழுதி சிறுகதையில் புரட்சி செய்ய வேண்டியுள்ளது. படிப்போரும் ஏற்பார்கள். என்றாலும் இது எல்லா மனிதருக்கும் எல்லாவற்றையும் தாண்டி வரவேண்டும் என்பதுதான் விந்தனின் மனக்கிடக்கை.
அதே நியாயந்தான் உனக்கும். படிக்கிற எல்லோருக் கும் இதே நியாயந்தான் விந்தன் கூறுகிறார்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை முதல் தேதி கதையில் அழகாகக் காட்சிப்படுத்துகிறார் விந்தன்.
எல்லாவற்றுக்கும் முதல் தேதியை இலக்கு வைக்கும் கதையின் நாயகன் எல்லோரிடமும் பணிந்து போகும் நாயகன் சலவைக்காரியிடம் மட்டும் தன் இயலாமையை முதலாளித்துவக் குரலில் உயர்த்துகிறான்.
காசுக்கு வேளை, நாழி, நாள், கிழமை ஒன்றும் கிடையாதா? நினைத்த போதெல்லாம் வந்துவிட வேண்டியதுதானா? போ, போ, முதல் தேதியன்று வா… என்று அவளை விரட்டிவிட்டு சற்று விச்ராந்தியாக இருந்துவிட்டு வரலாமென்று கணேசன் மாடிக்குச் சென்றான்.
அங்கே பிற்பகல் விளைவுக்காகக் கடவுள் காத்திருக்கிறார்.
நீங்கள் என்னிடம் ஒரு சமயம் ஐந்து ரூபாய் வாங்கினீர்கள் மறந்தே போய்விட்டீர்கள்.. (முதல் தேதி)
கேட்கிற எல்லோரிடமும் ஒலிக்கவேண்டிய உயர்த்தவேண்டிய குரலை சலவைக்காரியிடம் மட்டுமே உயர்த்தமுடியும் இயலாமை இன்று நேற்றல்ல யுகங்களாய் நடுத்தரவாழ்வில் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதையும் இது மாறாதா என்கிற ஆதங்கத்தையும் விந்தன் கொட்டுகிறார்.
விந்தன் மனிதநேயப் படைப்பாளி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மனித வாழ்வின் மீதாகப் பரிவிற்கும் பாசத்திற்கும் உண்மை அன்பிற்கும் ஏங்கும் படைப்புமனமே அவற்றைப் படைப்புகளிலும் புலப்படுத்துகிறது. இதைத்தான் விந்தனின் எல்லாக் கதைகளும் வெளிப்படுத்துகின்றன. ஒரு மனிதன் தன் வாழ்வில் வாழ்தல் என்பது சக மனிதர்களோடுதான். அவற்றையும் அன்புகொண்டுதான் வாழவேண்டும்.
அப்படி வாழும் மனப்பக்குவம் வந்துவிட்டால் பண்பு அமைந்துவிட்டால் படைப்பு என்ற ஒன்று தேவை யில்லை. என்றாலும் அது தேவை என்றைக்கும் என்பதைத்தான் மனித வாழ்வில் பல்வேறு பரிமாணங் கள் காட்டுகின்றன என்பதையே விந்தன் கதைகளைச் சாட்சியாக வைத்து நாம் உணர வேண்டியுள்ளது.
(விந்தன் சிறுகதைகள்-தொகுப்பை முன்வைத்து)