நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஈரோடு வேலா இராசமாணிக்கனார் திங்கள் தோறும் பவுர்ணமி நாளில் நடத்தி வந்த “நிலா முற்றம்” நிகழ்வில் மென்மையும் மேன்மையும் மிக்க ஒருவர் உரையாடுவார்.

அவர் பேச்சில் தனித்தமிழ் தலைதூக்கி நிற்கும். அலட்டலோ, ஆர்ப்பட்டமோ இல்லாமல் தான் சொல்ல வந்த திருக்குறள் செய்தியை மிக அழகாக எடுத்துரைப்பார். சிவந்த நிறம். ஒல்லியான உடலமைப்பு. சுறுசுறுப்பான நடை. இதுதான் அந்த மனிதரின் அடையாளம். திருக்குறள் கருத்துகளை தெளிதமிழில் எடுத்துரைக்கையில் அந்தக் கருத்துகள் யாவும் அப்படியே மனத்திற்குள் பதிந்துவிடும்.

dd

அந்தப் பெருமகன்தான் முதுமனைவர் இளங் குமரனார். தொய்வில்லாத தன் தொடர் உழைப்பால் 600 நூல்களுக்கு மேல் எழுதித் தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர் பெருந்தகை தன்னுடைய 94ஆம் அகவையில் 25.7.2021 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி அளவில் இயற்கை வெளியில் கலந்து விட்டார். மூத்த தமிழறிஞ ரின் முனைமுறியாத எழுத்துப் பயணம் தமிழ் இலக்கியங்களின் ஆழத்தையும் தமிழர் பெருமிதத் தையும் எழுதிச் சென்றிருக் கிறது.

நெல்லை மாவட் டம் வாழவந்தாள்புரத்தில் 1927ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் பிறந்த கிருட்டினன்தான் பின்னாளில் “புலவர் இரா. இளங் குமரனார்” என்று அழைக்கப்பட்டார். ஆரம்பத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக, தான் பிறந்த வாழவந்தாள்புரத்தில் பணியைத் தொடங்கினார். புலவர் தேர்வில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தங்கப்பதக்கம் பெற்றார். 1951ஆம் ஆண்டு தமிழாசிரியர் பணியைக் கரிவலம்வந்தநல்லூர், தளவாய்ப்புரம் என்று தொடர்ந்து பின் மதுரை திருநகர் மு.மு.மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். பணிக்காலத்தின் இறுதி நான்காண்டுகள் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் ஆய்வுத் துறையில் பணியாற்றி நிறைவு பெற்றார். பின் திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்து எழுத்துப் பணிகளையும் இலக்கிய உரையாடல்களையும் தொடர்ந்தார். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்தத் தவச்சாலை தமிழறிவை அள்ளி வழங்கியது. மறைமலைஅடிகளார், தேவநேயப் பாவாணர் வழியில் தன் இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்தவர் தமிழ் அரிமா இலக்குவனா ரோடு இணைந்து தமிழ்வளர்ச்சிக்காகப் பல களங்களைக் கண்டார். பாவாணரின் வழித்தடத்தில் தமிழ் வளர்க்கும் முனைப்பு அவருக்குள் மூட்டி விட்ட கனல் வாழ்நாள் முழுவதும் அணையாமல் இருந்தது. பதினாறு வயதில் மணமகள் செல்வத்தை மணந்த இவருக்கு நான்கு மக்கள் செல்வங்கள். இவருடைய செயல் பாட்டைக் கண்ட மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தில்” இணைத்துக் கொண்டார். பாவாணர் வரலாறு, பாவாணர் மடல்கள் இரண்டு தொகுதிகள், தேவநேயம் தொகுதிகள், செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம் பத்துத் தொகுதிகள், திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை ஆறு தொகுதிகள், வழக்குச் சொல் அகராதி, வட்டார வழக்குச் சொல் அகராதி, இணைச்சொல் அகராதி, இலக்கிய வகை அகராதி, இலக்கண அகராதி, புறத்திரட்டு, காக்கைப்பாடினியம், தமிழர் வாழ்வியல் இலக்கணம், தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்க வரலாறு, முதுமொழிக் களஞ்சியம், உவமை வழி அறநெறி விளக்கம் என்று அருமையான நூல்களைக் கொண்டுவந்தார்.

ஐந்து வயதிலேயே மேடை ஏறிப் பேசிய இளங்குமரனார் வாழ்நாளெல்லாம் திருக்குறள் கருத்துகளை பல்லாயிரம் மேடைகளில் முழங்கினார். வள்ளுவ நெறிப்படி தன் வாழ்வை வடிவமைத்துக் கொண்டவர் எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை என்று வாழ்ந்தார். விருதுகளுக்கோ பட்டங்களுக்கோ விரலைக் கூட நகர்த்தாதவரைத் தேடி விருதுகளும் பட்டங்களும் வந்து விழுந்தன. தான் பெற்ற பரிசுத் தொகையைத் தமிழ் வளர்ச்சிக்கென்றே செலவிட்ட பெருந்தகையை மதுரைத் தமிழ்ச்சங்கம் “தமிழ்ச்செம்மல்” விருது வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் ”முதுமுனைவர்” பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தமிழ் நாட்டரசு “திருவிக விருது” வழங்கி யது.1958ஆம் ஆண்டில் “குண்டலகேசி” என்ற நூலை மதுரை அங்கயற்கன்னி ஆலயத்தில் வெளியிட்டார். 1963ஆம் ஆண்டு இவருடைய “திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு” என்ற நூலை அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு வெளியிட்டார். 2003ஆம் ஆண்டு சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு என்ற நூலை மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வெளியிட்டார். 1951ஆம் ஆண்டிலிருந்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்வழித் திருமணத்தை நடத்தி வழிகாட்டிய பெருமகனார் வீண் சடங்குகளைப் புறந்தள்ளினார். தமிழ்வழித் திருமணம் நடத்துவதைக் குறித்து முப்பத்தியெட்டுப் பக்கங்களில் சிறு நூலை வெளியிட்டு மற்றவர்க்கு வழிகாட்டினார். பிறந்தநாள் விழா, பெயர்சூட்டுவிழா உட்பட தமிழரின் இல்ல விழாக்கள் பலவற்றுக்கும் தனித்தனி நூல் எழுதி வெளியிட்டார். தொடக்க காலத்தில் தமிழ்வழித் திருமணத்திற்கு முகச்சுழிப்புகளை எதிர்கொண்டார். ஆனால் கொண்ட கொள்கையில் சற்றும் தடம்பிறழாமல் தமிழேறாக நடைபோட்டு வெற்றிபெற்றார்.

“செந்தமிழ்” ஆசிரியராய் வலம்வந்தவர், தன் எழுத்துப் பணிக்கு இடையூறாக இருக்கும் என்பதால் கைப்பேசி, தொலைபேசி களைத் தவிர்த்துவிட்டார். படிப்பதும் படைப்பதுமாக எழுதிக் குவித்த அறிஞர் காலை ஐந்து மணிக்கு எழுதத் தொடங்கினால் மாலை வரை எழுதுவார். இடையில் உணவுக்காகச் சிறிது இடைவெளி. அவ்வளவுதான். இதற்கிடை யில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடைபெறும் உரையரங்குகளில் கலந்து கொண்டு தன் ஆழ்ந்தகன்ற புலமைக் கருத்துகளை முன்வைத்துக் கேட்பாரை ஈர்ப்பார். எந்தத் திசையில் தமிழுக்கு ஊறு நேர்ந்தாலும் சீறிப் பாய்கிற மறவராக விளங்கினார். மரபார்ந்த இலக்கியங்களில் செறிவார்ந்த அறிஞர் பெருமகனார் சிறிது காலத்திற்கு முன் தவறி விழுந்ததில் இடுப்பெலும்பு முறிந்தது. நெஞ்சகச் சிக்கல் தொல்லை தந்தது. கோவையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று ஓரளவு தேறினார். எனினும் அகவை முதிர்வு அவர் வாழ்வுக்கு முடிவுரை எழுதிவிட்டது. இளங்குமரனாரின் நினைவுகள் அவரோடு நெருங்கிய நேயம் கொண்டிருந்தவர்களின் நெஞ்சங்களில் அலைஅலையாக எழுந்து வருகின்றன. ஒவ்வொருவரும் அவரிடம் பெற்ற அனுபவங்களை நூலாக எழுத வேண்டும். அவர் மறையவில்லை. எழுதிய நூல்களில் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்.

அவர் மறைவு தமிழுலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. தமிழ்நாட்டரசு இளங்குமரனாருக்கு இருபத்தியொரு குண்டுகள் முழங்க மரியாதை செய்தது ஆழ்ந்தகன்ற புலமையாளருக்குச் செய்த சிறப்பு. நம் இதயத்தில் நிறைந்துவிட்ட இளங்குமரனார் தன் நூல்களின் வழியே நம்மோடு உரையாடிக் கொண்டே இருப்பார்.