ஹைக்கூவைப் புரிந்துகொள்ள ஜென்னையும், அதன் தனித்துவம் வாய்ந்த மரபுகளையும் அறிந்துகொள்ள வேண்டும். ஜென் என்பது சீன மனமும், இந்தியச் சிந்தனையும் மகரந்தச் சேர்க்கை நடத்தியதால் மலர்ந்த மனோரஞ்சித மலர்.

பௌத்தச் சிந்தனை கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சீனத்துக்குள் நுழைந்தது.

அதன் பற்றற்ற தன்மையை சீனம் ரசிக்கவில்லை. சீனர்கள் தத்துவப் பார்வையில் ஊஞ்சலாடுபவர்கள் அல்லர். அவர்கள் உலகியல் பார்வையில் ஊறித் திளைத்தவர்கள். இரண்டும் இணைந்தபோது உருவானவை ஜென் மடாலயங்கள்.

ஒவ்வொரு மடாலயமும் சுய நிர்வாக அமைப்பு கொண்ட நிறுவனம். தனித்தனி அலகுகளாகத் தங்களைத் தாங்களே நிர்வாகம் செய்துகொள்ளும் அமைப்பு பெற்றவை. பௌத்த சங்கத்திற்கும், ஜென் மடாலயத்திற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. ஜென் மடாலயங்கள் ஜனநாயகரீதியில் அமைந்தவை. அதன் துறவிகள் பொருளாதாரரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் விழிப்புணர்வு பெற்றவர்களாகத் திகழ்பவர்கள்.

Advertisment

ஜென் துறவிகள் மடாலயத்தின் அத்தனை பொறுப்புகளையும் நிறைவேற்றுவதோடு தலைமைத் துறவியின் பிரசங்கங்களையும் கேட்பார்கள்.

dd

அவை சுருக்கமாகவும், ஆழமாகவும் இருக்கும்.

Advertisment

அங்கு நேரடியான விடை கிடைப்பதில்லை. ஆனால் செயல்பாடுகளோ நேரடியாகவும், அதிரடியாகவும் இருக்கும்.ஒரு சின்ன உதாரணம். ரின்ஜாய் என்கிற துறவியிடம் பயிற்சி பெற்ற கையோடு ஓர் இளம் துறவி வெளியே நடந்து வருகிறபோது இன்னொரு பௌத்தப் பள்ளியைச் சார்ந்த மூன்று துறவிகளை எதிர்கொண்டார்.

எப்போதுமே மடாலயங்களுக்குள் மன வேறுபாடு உண்டு.

அவர்களில் ஒருவர் எகத்தாளமாக, ‘ஜென் ஆறு எவ்வளவு ஆழம்?‘ என்றார். அப்போது அவர்கள் நதியொன்றின் மேல் அமைந்த பாலத்தில் இருந்தார்கள். உடனே அந்த இளம் துறவி, ‘நீங்களே கண்டுபிடியுங்கள்‘ என்று கேள்வி கேட்ட துறவியைப் பாலத்திலிருந்து தூக்கிப்போடத் தயாரானார்.

அவருடைய நண்பர்கள் கெஞ்சிக் கேட்டதன் பேரில் மன்னித்துவிட்டார்.

ஜென் என்பது வார்த்தை ஜாலம் அல்ல. அது மொழியியலின் அத்தனை கோட்பாடுகளையும் புறந்தள்ளுவது. அங்கு அனுபவத் துளிர்ப்பும், வெளிப்படும்விதமும் ஒன்றாகவே இருக்கின்றன. அது நேரடியான அனுபவத்தையே பிழிந்து தருகிறது, சின்னச் சின்ன துளிகளாக.அங்கு தர்க்கம் தோற்றுப்போகிறது. ஜென் என்பது மதமோ, கோட்பாடோ அல்ல. அது வாழ்க்கை முறை. ஒவ்வொரு நொடியையும் விழிப்புணர்வோடு நோக்குவது. நாம் செய்யும் செயலில் முழுவதுமாகக் கரைகிறபோது அது கொண்டாட்டமாகி விடுகிறது.

ஜென்னைப் பயிற்றுவிப்பவர்கள் சில நேரங்களில் அறிவியலுக்கு அப்பாற்பட்டும், கடுமையாகவும், மனிதத்தன்மை அற்றும் நடந்துகொள்வது உண்டு. ஜென்னின் வெளிப்பாடாகக் கருதப்படுகிற ஹைக்கூவிற்கும் அதற்கும் மிகப் பெரிய ஒற்றுமை ஒன்று உண்டு. அது தன்முனைப் பற்ற தன்மை. ஹைக்கூ கவிதையிலும் ஜென்னைப்போல ‘நான்‘ என்கிற உணர்வைக் கழற்றி வைப்பது அவசியம்.

ஜென்னின் கலை வடிவங்கள் அனைத் துமே நம்மை அடை யாளமற்றவர்களாக ஆக்கிக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டவை. ஹைக்கூவும் அதைப்போல நம் உணர்வுகளையும், இயற்கையையும் வாழ்விலும் பிரம்மாண்டமாக வெளிப்படுத்தி சிலாகிக்கும் தன்மை கொண்டது.

அதற்கு இறுதி நோக்கம் என்ற ஒன்று இல்லை. தனக்கு ஏற்பட்ட கலைக் கிளர்ச்சியை வெளிப்படுத்துகிற ஒரு சாதனமாக மட்டுமே அதை எழுதுபவர் இருக்கிறார். அவர் அங்கு ஒரு சாட்சியாக நின்று நமக்குச் சுட்டிக்காட்டுகிறார். ஆழ்மனத் திலும் ‘தான்‘ என்கிற எண்ணம் முற்றிலுமாக அற்றுப் போகிறபோதுதான் இது சாத்தியம். அதனால்தான் ஜென்னின் வயப்பட்ட ஒருவர் மட்டுமே வெற்றிகரமாக ஹைக்கூ கவிதையை எழுத முடியும்.

அது ஒருவிதமான திடீர் மெய்ஞானமாக உலகியலிருந்து துண்டித்து நம்மை முழுவதுமாக இல்லாமல் செய்துவிடும். ஹைக்கூ என்பது 17 உயிர்ச்சொற்களால் உருவான ஜப்பானியக் கவிதை வடிவமாக இருந்தது. அது ஒரு வகை தற்கால ஞானோதயத்தின் வெளிப்பாடாக, நாம் பார்க்கிற பொருட்களின் மீது உண்டாகும் உணர்வின் திரட்டாக இருந்தது. ஹைக்கூவை ஒட்டுமொத்தமாக வாசித்து விடமுடியாது.

இயற்கையின் அத்தனை அம்சமும் நமக்கு என்பது மேற்கத்திய கோட்பாடு. டி.டி. சுசிக்கி கூறுவதைப்போல, டென்னிசன் எழுதிய ‘சின்னப் பூவே! உன்னை வேரிலிருந்து ஒட்டுமொத்தமாக நான் அறிந்துகொண்டால் இறைவனையும் மனிதனையும் அறிந்துகொண்டதைப்போல‘என்கிற கவிதையில் தொனிக்கும் மனிதன் என்கிற ஆதிக்க மனப்பான்மைக்கும், பாஷோ எழுதிய ‘நான் வேலியோரம் பூக்கும் நசூனியாவைக் கவனமாகப் பார்த்தேன்‘ என்கிற தன்முனைப்பற்ற தன்மைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

நசூனியாவையும், தன்னையும் பாஷோ தனித்தனியாகப் பார்க்கவில்லை. இரண்டும் அவருக்கு ஒன்றுதான். ‘செழித்து ஓங்கியிருக்கும் பிரம்மாண்டத்தின் முன்பு தற்காலிகமாகக் கடந்து செல்கிறவர்கள் நாம்‘ என்கிற எண்ணத்தில்தான் ஜென் ஹைக்கூ கவிதைகள் உருவாகின்றன.

அவற்றை யாரும் வலுக்கட்டாயமாக அமர்ந்து எழுத முடியாது. அப்படி எழுதினால் அவை சக்கையாக வந்து விழுமே தவிர, சதைப்பிடிப்பாக இருக்காது.

தமிழில் தொடர்ந்து ஹைக்கூ கவிதைகளை எழுதி, அவற்றைப் பரவலான வாசகர் களிடம் கொண்டு சென்று, துளி நேர மெய்ஞானத்திற்கு அவர் களை இட்டுச்செல்லும் முயற்சி யில் ஈடுபடுவர் கவிஞர் மு. முருகேஷ்.

ஹைக்கூவை விடுகதைகளைப் போல எழுதி சுகம் காணும் பலர் இருக்கிறார்கள். நம்மிடம் இருக்கிற மிகப் பெரிய குறைபாடே அனைத்தையும் எளிமையாக்கிவிடலாம் என்கிற எண்ணமே. எழுதியவரிடமே சிலர் பொழிப்புரை கேட்பதுண்டு. எப்படி எழுதியவர் மெய்ப்புப் பார்க்கக் கூடாதோ, அதைப்போல பொழிப்புரை யுடன் ஹைக்கூவை அணுகமுடியாது.

நாமும் அந்த உணர்வு நிலைக்கு நம்மைக் கடத்த வேண்டும். அதற்கு இருமையற்ற நிலை ஏற்பட வேண்டும். நாமே அந்தச் சூழலில் ஒரு பட்டாம்பூச்சியைப் பார்ப்பதைப்போலவும், சிகாடாவைப் பார்ப்பதைப் போலவும் உணர்ந்தால்தான் அது நம் ஆன்மாவில் கிளர்ச்சியை ஏற்படுத்தும். முருகேஷ் இயற்கையைத் தாண்டியும் ஹைக்கூ கவிதைகளை அரசியல் விழிப் புணர்வு ஊட்டும் வகையில் எழுதுபவர். அரசியல்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஒருவித பரந்துபட்ட செயல்பாடு என்பதை ஜென் துறவிகள் வசமே நாம் அறிந்துகொள்ள முடியும்.

அவர்கள் வறுமையைக்கூட நயமாகச் சுட்டிக் காட்டியவர்கள். அவர்கள் நான் ஏற்கெனவே கூறிய தைப்போல அரசியல் விழிப்புணர்வு கொண்டவர் களாகவே திகழ்கிறார்கள். உலகத்தின் போக்குகளுக்குக் காதைப் பொத்திக்கொண்டு செல்பவர்களாக அவர்கள் இருப்பதில்லை. திரையில் தெரியும் வெளிச்சத்தில் மயங்கி தங்கள் வாழ்க்கையில் இருளை அப்பிப் பூசிக் கொள்கின்ற பலரை நாம் பார்க்கிறோம். கற்பனைகளில் தங்கள் மனத்தைப் பறிகொடுத்து, மாயக் கனவுகளை உள்ளமெங்கும் தெளித்து, அதையே உண்மையென ஏமாந்து விடுகிற பலர் நாட்டையே பின்னடையச் செய்வதுண்டு.

அதை முருகேஷ் நாசூக்காக, மேடையில் குவிந்திருக்கும் பிரம்மாண்டமான வெளிச்சம் அரங்கம் முழுக்க அடர்ந்த இருள் -என்று குறிப்பிடுகிறார். அதில் இருளில் இருப்பவர்கள் பொய் யான வெளிச்சத்தில் தங்களைப் பறிகொடுப்பதும், வெளிச்சத்தி லேயே எப்போதும் இருக்க விரும்பு கிறவர்கள் அடுத்தவர்களை இருளிலேயே வைத்திருப்ப தும் சூசகமாகச் சொல்லப்பட் டிருக்கிறது. இலைகளின்மீது படிந்திருக்கும் பனித்துளிகளை பார்வைரீதியாக ‘முத்துகள்‘ என்றும், ‘பனிக்குடம்‘ என்றும் கவிஞர் கள் குறிப்பிட்டது உண்டு. மேற்கத்திய கவிதை, வரிசையாகப் படிந்திருக்கும் பனித்துளிகளை ‘வைர அட்டிகை‘ என்று வர்ணித்திருக்கிறது.

இவையெல்லாம் காட்சிரீதியானவை. உணர்வுரீதியாக நம்மிலும் சில சலனத்தை ஏற்படுத்தினால்தான் அது ஹைக்கூவாக முடியும். எழுதியவருக்கு ஏற்பட்ட அதே சிலிர்ப்பை நமக்கும் ஏற்படுத்தும் வகையில் ஒரு ஹைக்கூ புல்வெளிக்குள்

வெறுங்காலால் நடந்தேன்

எத்தனையெத்தனை பனி முத்தங்கள்

-வெறும் காலோடு புல்லுக்கு மத்தியில் நடந்தவர்களுக்குத்தான் அந்தப் பனித்துளிகளின் முத்தங்கள் பரவசப்படுத்துவது தெரியும்.

அமில மழையின் காரணமாக மீன்கள் செத்துப்போவதும், தண்ணீர் மாசுபடுவதும் இயற்கையின் பிறழ்வை உணர்த்தும் நிகழ்வுகள். இயற்கையை வியப்பது மட்டும் அல்ல, அதன் சிதிலங்களையும் கவித்துவப் பார்வையுடன் கட்டம் கட்டுகிறது முருகேஷின் ஹைக்கூ.

குளக்கரையில் கொக்கு

k

மிரட்சியோடு பார்க்கிறது

செத்து மிதக்கும் மீன்களை

-முற்றிலும் அரசியல் பார்வையோடு அவர்

எழுதியிருக்கிற இன்னொரு ஹைக்கூ பெரும்

விவாதத்தைத் தொடங்கி வைக்கும் தன்மை

யுடையது.

பறந்தது தேசியக்கொடி

உதிர்ந்த பூக்களுக்குள்

நெளியும் பூக்கள்

-கைப்பேசியில் அதன் உரிமையாளரைத் தவிர வேறு யாராவது தொடர்புகொண்டால் ஏதோ சிக்கல் என்று பொருள்.

அப்படி வேறு யாரோ பேசும்போது அதற்குரியவர் விபத்தில் சிக்கிக்கொண்ட விவரம் தெரிவதை அனுபவப் பட்டவர்களுக்கு அது பாம்பினைத் தொட்ட அனுபவம் போலவே விழுதினைத் தொடும்போதும் இருக்கும். விபத்தில் பலியானவர்கள் கைப்பேசி ஒலிக்கும்போது எதிர்முனையில் இருப்பவர்களிடம் என்ன சொல்வது? எப்படி அந்தத் துக்கமான செய்தியைக் குரல்வளையில் கோலிசோடாவில் கோலி புரள்வதைப்போல விழுங்கிக் கொள்ள இயலாமல் உரைப்பது? விம்மி அழுகிறவர்களை எவ்வாறு சமாதானப்படுத்துவது?இந்த உணர்வை மூன்றே வரிகளில் ஒரு சோகக் காவியத்தைப்போல சுருக்கிக் கொடுத்துவிடுகிறார் முருகேஷ்.

என்ன பதில் சொல்ல

விபத்தில் பலியானவனின் கைப்பேசியில்

விடாத தொடர் அழைப்பு

-உணர்வுகளைச் சலித்துச் சலித்து மீண்டும் அவற்றை நினைவு

களோடு பொருத்திப் பார்க்கும் போதுதான் இத்தகைய கவிதைகள் சாத்தியம்.ஜென்னைப் பொருத்த வரை அது வாழ்க்கை தற்காலிகமானது என்றாலும் முழுமையாக வாழ வேண்டும், துளித்துளியாக ரசித்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அதனால்தான் அங்கு தேநீர்ச் சடங்கு. தேநீரை மௌனமாக ருசித்து ருசித்து உண்ண வேண்டும்.

அந்த நொடியில் முழுமையான மௌனம். நாமே தேநீராகிவிடும் அனுபவம். ஹைக்கூவும் அதன் அடிப்படையிலேயே அனைத்தையும் பதிவு செய்கிறது. அதை உணர்த்தும் வகையில் பாஷோவின் ஒரு கவிதை.

தெள்ளுப்பூச்சிகளும் பேன்களும்

குதிரையோ சிறுநீர் கழிக்கிறது

என் தலையணைக்கு அருகில்

-இந்தக் கவிதை அசூயையை வெளிப்படுத்துகிற கவிதை அல்ல. இவற்றைத் தாண்டி வாழ்க்கையை நுகர வேண்டும் என்கிற பார்வை. இவையெல்லாம் நம்மைக் கடந்து சென்று விடுபவை. கசப்புகளைக் கடந்து மேலும் மேலும் செல்கிறபோதுதான் தித்திப்பு தென்படத் தொடங்குகிறது.

வாழ்க்கையின் நிலையில்லாமையை முருகேஷ் குறிப்பிடுகிறபோது,

மயானத்திலிருந்து திரும்புவதற்குள்

வீட்டிலிருந்து வெளியேறிவிட்டன

இறந்தவரின் ஆடைகளும்

-என்று கூறுகிறார். இறந்தவரின் நினைவுகள் ஆடைகளைத் தாண்டியும் நீடித்து இருப் பவை. பானை உடைகிறபோது பெண் துறவி ஒருவர் மெய்ஞானம் அடைந்ததாக ஜென் கதையொன்று உண்டு. அதை நினைவுபடுத்தும் வகையில்,

உடைந்த மண்பானை

ஒவ்வொரு துண்டிலும்

கொஞ்சம் தண்ணீர்

-என்கிற முருகேஷின் கவிதை நம் காதுகளில் கிசுகிசுக்கிறது. எல்லா நீர்நிலைகளிலும் நிலவு பிரதிபலிக்கிறது.

அது பெரிய கடலில் மட்டும் அல்ல, சின்னக் குளத்திலும் முகம் காட்டுகிறது. நான் இந்த நூலை வாசித்தபோது முந்திரிப் பருப்பு களை முதலில் எடுத்துத் தின்றுவிடும் சிறுவனைப்போல, என்னை ஈர்த்தவற்றை மட்டும் தேர்ந்தெடுக்க நினைத்து அணிந்துரை அளிக்க ஆசைப்படவில்லை. நூலைத் துழாவும்போது என் கையில் கிடைத்த முந்திரிப் பருப்புகள் இவை. உங்களுக்காக நான் விட்டு வைத்த நிறைய முந்திரிப் பருப்புகளும், திராட்சைப்பழங்களும் கிடக்கிற சர்க்கரைப் பொங்கலாக இத்தொகுப்பு சமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஹைக்கூவை யும் வாசித்த பிறகு தியானித்துப் பார்த்தால் அதிலிருக்கும் அர்த்தங்களின் ஆழம் இன்னும் அதிகமாகப் புலப்படும்.

(மு.முருகேஷின் ‘கொம்பு முளைத்த நிலா’ நூலுக்கு வழங்கிய அணிந்துரை.)