ஒரு உச்சிப்பொழுது வேளையில் ஆற்றின் கரையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரரின் பதைபதைப்பைப் பார்த்த போதவிரதன் அவரைத் தேற்றுவதற்கு முயற்சித்தான்.
" எனக்கு பயமா இருக்கு...'' பக்கத்து வீட்டுக்காரர் கூறினார்.
"எதற்கு?'' போதவிரதன் கேட்டான்.
"என் தந்தையை நான் எரித்துவிட்டு வருகிறேன். தந்தை உயிருடன் இருந்த போது, எனக்கும் சிதைக்கும் இடையே ஒருதடை இருந்தது. இப்போது அந்த தடை நீங்கிவிட்டது. சிதையின் நெருப்பு என்னை நோக்கி நெருங்குகிறது.''
"தேற்றிக்கொள்ளுங்கள்.'' போதவிரதன் கூறினான்:
"ஏதாவதொரு வழி பிறக்கும்.''
வருடங்கள் கடந்தன. நள்ளிரவு வேளையில் பக்கத்து வீட்டுக்காரரை போத விரதன் மீண்டும் பார்த்தான். பக்கத்து வீட்டுக்காரரின் கண்களில் இனம் புரியாத... புதிரான பிரகாசம்!
"நான் என் தந்தைக்கு சிராத்த சடங்குகள் செய்தேன்'' பக்கத்து வீட்டுக்காரர் கூறினார்.
"தந்தைக்கு நீர், அன்னம், துணி ஆகிய வற்றைச் சமர்ப்பித்தேன்.''
"பிறகு....?''
"மீண்டும் ஒரு தடை விலகியது.''
"எப்படி?''
"பிறகு... என் மகன் எனக்கும் அவை அனைத்தையும் தந்தான். நீரையும் அன்னத் தையும் துணியையும்...''
"பயம் நீங்கிவிட்டதா?''
"விலகிவிட்டது.''
"பயப்படுவதற்கு எதுவுமே இல்லை.'' போதவிரதன் கூறினான்: "இது சிராத்தங் களின் தொடர்ச்சிதானே?''