ரணம் என்பது வாழ்க்கையை விட அழகானது.

ராமகிருஷ்ணன் அவ்வாறு நினைத்தானோ? எத்தனை வருட கனவுகளும் எதிர்பார்ப்பு களும் அந்த மரணத்தில் கரைந்து விட்டன!

எந்தச் சமயத்திலும் சந்தோஷமான முகத்துடனே நான் பார்த்திருக்கிறேன்.

மனதிலிருக்கும் கவலைகள் அனைத்தையும் மறந்துவிட்டு, மகிழ்ச்சியாக சிரித்து ஆனந்தப் பெருக்கில் இருக்கிறாய்! நான் பொறாமை அடைந்திருக்கிறேன். உனக்கு எந்த அளவிற்கு சந்தோஷத்தை இந்த வாழ்க்கை பரிசாக அளித்திருக்கிறது! இப்போது நான் நினைத் துப் பார்க்கிறேன்.

Advertisment

உண்மையாகவே நீ கண்ணீரின் புன் சிரிப்பாக இருந்தாய் அல்லவா என்பதை...

உன் உதட்டில் எப்போதும் ஒரு தமிழ் பாடலின் வரிகள் நிறைந்து நின்றிருக்கும்.

மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காக அந்த போரடிக்கக் கூடிய பாடல்களை எத்தனை தடவைகள் நீ பாடியிருப்பாய்...

Advertisment

ராமகிருஷ்ணா! நீ எப்படிப்பட்ட செப்படி வித்தைகளையெல்லாம் காட்டினாய்!

நீ எங்கள் அனைவருக்கும் ஒரு கோமாளியாக இருந்தாய்.

எங்களில் பலரும் உன்னை "சிரிக்கும் கழுதை' என்று அழைத்தோம்.

அதையும் நீ ஒரு பட்டமாக எடுத்துக் கொண்டாயோ? "கழுதை ராமகிருஷ்ணன்' என்று முதன்முதலாக அழைத்ததே நான் தானோ?

"கழுதை ராமகிருஷ்ணன்' என்ற பெயரில் நீ எங்களுக்கிடையே அறியப்பட்டவனாக ஆனாய்.

ராமகிருஷ்ண மேனன் என்று அழைக்க வேண்டியவர்கள்கூட உன்னைத் தவறான பெயரால் அழைக்க முயற்சித்தார்கள்.

இப்போது குற்றவுணர்வின் காரணமாக என் தலை குனிந்து போகிறது. நீ இறந்த வேதனையை நான் அனைத்து நாட்களிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். என் கவலைகளை வெளிப்படையாக கூற வேண்டு மென நினைக்கிறேன்.

ஆனால், நீ இறந்து விட்டாய். இனி திரும்பி வரப் போவதில்லை...

உயிருடன் இருந்தபோது, இரக்க உணர்வுடன் நடக்க என்னால் முடிந்ததா? என் தொழில்ரீதியான பொறுப்புகள் என்னை உன்னுடன் கொண்டிருந்த நட்புறவிலிருந்து விலகி இருக்கச் செய்துவிட்டனவோ? உண்மையிலேயே நீ என் மீது மற்றவர்களைவிட அன்பு செலுத்தினாய்.

அதற்கும் மேலாக மதித்தாய். "பெரிய மனிதர்களை அவர்களின் வழிகளிலேயே போகச்செய்து விட்டு, ஏழை களுக்காக தன்னையே மறந்து பேசக்கூடிய ஒரு ஆள்... பணிக்கர்.

பணிக்கர்தான் நம் யூனியனின் ஆன்மா''. அந்த பாராட்டு வேறு அனைத்து பாராட்டுகளையும் விட விலைமதிப்பு உள்ளதாக இருந்தது. சொந்த விஷயத்தைச் சாதித்துக் கொள்வதற்காக கூறப்பட்ட வெறும் வார்த்தைகள் அல்ல அவை.

யூனியனுக்காக கொடிகளைப் பிடித்துக் கொண்டு, அந்த பெரிய ஆலயத்திற்கு முன்னால் ஊர்வலத்தை நடத்தியதற்கு, நானும் ராமகிருஷ்ணனும் அடங்கிய ஏராளமான தாழ்ந்த நிலையிலுள்ள பணியாட்களின் பசிக்கும் வயிறுகளைப் பற்றிய புரிதல், அடிமனதில் இருந்ததுதான் காரணமா?

வாட்டர் பாய் ராமகிருஷ்ணனுக்கு இருபத்தைந்தும், க்ளார்க்கான எனக்கு ஐம்பத்தைந்தும் முன்பு யூனியன் சம்பளமாக தந்தது. யூனியன் வளர்ச்சியடையவும் பலம் கொண்டதாகவும் ஆன பிறகு, ராமகிருஷ்ணனுக்கு ஐம்பத்தைந்தும் எனக்கு தொண்ணூற்றைந்து ரூபாய்களும் என்று ஆனது.

நாங்கள் அதை வாங்கி அனுபவிக்க ஆரம்பித்து அதிக நாட்கள் ஆகவில்லை.சம்பளம் அதிகரித்ததற் கேற்ற முதல் இங்க்ரிமெண்டை ராமகிருஷ்ணனால் வாங்க முடியவில்லை.

திருமணமாகாத ஆளாகவும், குடும்பப் பொறுப்புகள் உள்ளவனாகவும் இருந்த ராம கிருஷ்ணனுக்கு எப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன! நேற்று இரவு அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்ட செயல் நடந்ததா?

பணியாட்களைப் பொறுத்தவரையில் பலவகை யான புகார்கள் இருந்தன.பல நிலைகளிலும் ராம கிருஷ்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டியிருந்தது. "வாட்ச்மேன் பணிக்கான ப்ரொமேஷன் எனக்கு கிடைக்குமா... பணிக்கர்? யூனியன் நினைத்தால், ஏதாவது நடக்குமா?'' "மன்னிக்கணும்... ராமகிருஷ்ணா... மன்னிக்கணும்...''- எவ்வளவோ தடவைகள் இவ்வாறு தேற்றியிருக்கிறேன்.

யூனியனின் செக்ரட்டரி என்ற வகையில் பல முறைகள் நிர்வாகத்திற்கு எழுதி தெரியப்படுத்தியும் இருக்கிறேன். "சர்வீஸுக்கு ஏற்றபடி சீனியாரிட்டியும், சீனியாரிட்டிக்கு ஏற்றபடி பதவி உயர்வும் கொடுக்கப் பட வேண்டும். வரையறைப்படியானதும் நியாயமானது மான உரிமைகளை அநியாயமாக ஒதுக்கிவிடக் கூடாது.''

ஆனால், அப்படிப்பட்ட தாள்களைக் குப்பையைப் போல நிர்வாகம் நினைத்தது.

ss

ராமகிருஷ்ணனுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு இரண்டு...மூன்று முறைகள் மீறப்பட்டன. புதிதாக வந்த சிலர் வாட்ச்மேனாக ஆனார்கள்.

அப்போதெல்லாம் என்னிடம் வந்து புகார் கூறிக் கொண்டிருந்தான்.

முடிந்தவரைக்கும் செய்தேன்.

என்னையும் சேர்த்து பலரும் யூனியனைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், கூர்ந்து கவனிக்கப்படும் மனிதர்களாக ஆனோம். வாய்ப்பு கிடைத்தால், பிடித்து வெளியேற்றி விடுவார்கள்.

பொருளாதாரரீதியான நெருக்கடிகள் ராம கிருஷ்ணனை மூச்சு விட முடியாமற் செய்தன. தாங்க முடியாத அளவிற்கு மன வேதனையும்.. நேர்மை குணம் கொண்டவனாகவும், மரியாதையைப் பெரிதாக நினைப் பவனாகவும் இருந்த காரணத்தால், ஒரு பலவீனமான நிமிடத்தில் வாழ்வைவிட இனிமையானது மரணம் என்று தோன்றியிருக்குமோ?

நேற்று இரவு என்னிடம் இறுதி விடைபெறுவதற்கு வந்திருப்பானோ?

நான் அமர்ந்து பண வரவுலிசெலவு கணக்கு கொண்ட ரெஜிஸ்டரைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தேன்.

நேரம் இரவு பத்து மணியைத் தாண்டியிருக்கும்.

பணத்தையும் ரசீதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதற்குப் பிறகு அதை எழுதி வைக்க வேண்டும். இன்னும் பணி மீதமிருந்தது. பிறந்த நாளிலிருந்தே தொல்லை கொடுக்க ஆரம்பித்த தலைவலி ஆரம்பித்தது.

"அமர்ந்து எழுத முடிகிறதா?''- ராமகிருஷ்ணன் தனக் கென்றுள்ள சிரிப்புடன் தலையைச் சொறிந்தவாறு முன்னால் வந்தான்.

"ராமகிருஷ்ணா... உனக்கு இப்போ என்ன தோணுது?

தூங்க மாட்டேன் என்ற விஷயம் உறுதியா தெரியுதுல்ல...?''

"நான் ஒரு விஷயத்தைச் சொல்ல நினைக்கிறேன்.''

"இப்போ சொல்ல வேண்டாம். ஏதாவது சொல்ல ணும்னா... பணி நேரம் முடிந்த பிறகு, வா. இல்லா விட்டால்...

காலையில் யூனியன் அலுவலகத்துக்கு வந்தாலும் போதும்.''

பொதுவாகவே அப்போதைய என் குரல் சற்று தெளிவில்லாமல் இருந்தது.

(பணியில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில், யாராவது வலிய உள்ளே வந்து பேசுவது என்ற விஷயம் இப்போதும் விரும்பக்கூடியதல்ல. குறிப்பாக... தலைவலி ஆரம்பித் திருக்கும் நிலையில்....)

"ஒரு தீக்குச்சி தர முடியுமா?''

நான் ராமகிருஷ்ணனுக்கு தீப்பெட்டியைக் கொடுத் தேன். எனக்கு கோபம் வந்திருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்கான ஒரு சோதனைதான் அந்த தீப்பெட்டி கேட்கும் செயலோ?

கூர்க்கா காவலாளிக்கென மட்டுமே ஒதுக்கி வைக்கப் பட்டிருந்த ஸ்டூலின் மீது அமர்ந்து, ராமகிருஷ்ணன் ஒரு பீடியைப் பற்ற வைத்தான். அந்த பீடியிலிருந்து காற்று வெளிக்குள் உயர்ந்து கொண்டிருந்த அந்த புகைச் சுருள் ராமகிருஷ்ணனின் இதயத்திலிருந்த கவலையின் நிழல்களாக இருந்தனவோ?

ரெஜிஸ்டரிலிருந்து கண்களை எடுத்து ராம கிருஷ்ணனின் முகத்தைப் பார்த்தேன். கண்கள் நிறைந்து இருந்தனவோ? முகம் முழுவதும் தாளைப் போல வெளிறிப்போய் காணப்பட்டது.

நெற்றியிலிருந்து வியர்வைத் துளிகள் வழிந்து விழுந்துகொண்டிருந்தன.

சலவை செய்த ஒரு புதிய மேற்துண்டு கையிடுக்கில் இருந்தது. அந்தத் துணியும் வியர்வையில் நனைந் திருந்தது.

கையில் ஒரு பென்சில் துண்டும் தாளும் இருந்தன.

ஏதாவது மனு எழுதித் தர வேண்டுமோ? இல்லா விட்டால்... மனதிலிருக்கும் ஆழமான கவலைகளை எழுதிக் காட்டுவதற்காக இருக்குமோ?

அதிகமான களைப்பும் தலைவலியும் இருந்த காரணத்தால், எப்போதும் செய்வதைப் போல சற்று உரையாட விரும்பவில்லை. (யாருடனாவது உரத்த குரலில் பேசி முடித்து விட்டால், அப்போது ஆரம்ப மாகி விடும்... மனதில் அமைதியற்ற நிலை.). அந்த அமைதியற்ற நிலை, இதயத்தைச் சற்று வேதனைப் படுத்தவும் ஆரம்பித்தது.

"நான் போகட்டுமா, பணிக்கரே? ஒருவேளை... இனி....''

முழுமை செய்வதற்கு முன்பே, நான் அவனைப் பார்த்து கூறினேன்:

"விடைபெறுவதற்காக பேசவேண்டாம், ராம கிருஷ்ணா! காலையில் பார்ப்போம். யூனியன் அலுவலகத்தில் இருப்பேன்.''

ராமகிருஷ்ணன் சென்றது தெரியுமா?

ரெஜிஸ்டரை எழுதி முடித்தபோது, நேரம் பன்னிரண்டிற்கும் மேலாக ஆகிவிட்டது. ரசீது புத்தகங்களை எடுத்து மேஜையில் வைத்தேன்.

சட்டையை அவிழ்த்து சாளரத்தின் கொக்கியில் தொங்க விட்டேன். உணவு சாப்பிட முடியாது. தேநீர் கிடைப்பதற்கும் வழியில்லை. எல்லா கடைகளும் அடைக்கப்பட்டு விட்டன. ஒரு பீடியைப் பற்ற வைத்து, அலுவலக அறையில் காலியாகக் கிடந்த பெஞ்சில் மல்லாந்து படுத்தேன். அப்போது நான் அதிகமாக நினைத்தது...

என்னைப் பற்றித்தான்.

தந்தையின் ஆசை... ஒரு வக்கீலாக ஆக்க வேண்டும் என்பதாக இருந்தது. அதற்காக இல்லாத பணத்தைத் தயார் செய்து கல்லூரியில் சேர்த்து விட்டார்.முழுமை செய்யாமலே, கல்லூரியைவிட்டு வெளியே வந்தேன். பத்திரிகைத் துறையில்தான் அதிக ஈடுபாடு... ஏதாவது புகழ்பெற்ற ஒரு பத்திரிகை அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்வதைக் கனவு கண்டுகொண்டிருந்தேன்.

கதையின், கவிதையின் அற்புத உலகத்தில் வாழ்வது...!

ஒரு நான்காம் தர வார இதழின் உதவி ஆசிரியராகக் கூட ஆகவில்லை. நாட்கள் பல கடந்த பிறகு, ஒரு வானொலி அறிவிப்பாளராக பணி கிடைத்தால் போதுமென நினைத்தேன். பல நேரங்களில் வானொலி யின் வழியாக என் பெயரைச் சத்தமாக கூறுவது காதிலும் மனதிலும் பதிந்துவிட்டிருந்தது.

உலகத்தில் என்னை விட திறமையும் செல்வாக்கும் அதிகமாக உள்ளவர்கள் ஏராளமாக வாழ்ந்து கொண்டிருந்த காரணத்தால், இறுதியாக 40-4-120-ன் ஒரு எல்.டி.யாக இங்கு வந்து சேர்ந்தேன்.

நிர்வாகத்தின் கண்ணில் ஒரு துரும்புதான் நான்...இப்போதும்...

கொஞ்ச காலமாகவே ஒரு வெறுமை நிறைந்த உணர்வு... எப்போதும் ஒரே மாதிரியான நாட்கள்! காலையில் எழுகிறேன்...

குளிக்கிறேன்...

இருப்பதை எடுத்துச் சாப்பிடுகிறேன்...

பணிக்குச் செல்கிறேன்... இந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்றால் என்ன? பல நேரங்களிலும் தோன்றியிருக்கிறது. அப்போதெல்லாம் பல கவலை நிறைந்த பிரச்சினைகளும் மனதில் எழுந்து வரும். அம்மா! பிறகு... இவர்கள் இரண்டு பேர்களுக்காக இந்த பணியை விட்டெறியவில்லை என்பதுதான் உண்மை. அம்மாவை கவனித்து பார்த்துக் கொள்ளவேண்டும். அது எப்போதும் இருக்கக்கூடிய பொறுப்பல்லவா? வாக்கு கொடுத்துவிட்டேன் என்ற நிலையில், அந்த இளம்பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதான்.

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை, நாட்கள் செல்லச் செல்ல இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

பூமியில் நரகத்தை உண்டாக்குவதற்கே அந்தத் திருமணத்தால் முடியும். 40-4-120.

அதில் எல்லா வளர்ச்சியும் அடங்கியிருக்கிறதே!

80-6-180 என்ற சம்பள கணக்கில் பணியில் அமர்த்தலாம் என்பதுதான் ஒப்பந்தம். பணி உத்தரவு கையில் கிடைத்த போது, (உணர்வற்ற வர்க்கம்) வெறும் எல்.டி.மட்டுமே இருந்தது.

உண்மையிலேயே அது ஒரு நம்பிக்கை துரோகத் தின் கதை அல்லவா? எனினும், "கிடைத்தது அதிர்ஷ்டம்' என்று நினைத்து, பணியில் சேர்ந்தேன். அப்போது அலுவலகத்தில் இருந்தேன். பணிக்கு ஒரு ஒழுக்கமும், மதிப்பும் இருந்தன. காலையில் பத்து மணிக்குச் சென்றால், சாயங்காலம் ஐந்து மணிக்கு திரும்பிச் செல்லலாம். மதியம் முக்கால் மணி நேரம் ஓய்விற்கான வேளை இருந்தது. ஸெக்ஷன் க்ளார்க்காக இருந்தேன்.

ஃபைலைப் பார்த்து பணி செய்வதில் ஒரு சந்தோஷம் இருந்தது. இரண்டு வருடங்கள் அலு வலகத்தில் அமர்ந்து ஒழுங்காகப் பணியாற்றி னேன்.

புகார்கள் உண்டாக்கவில்லை. ஒரு தாளைக்கூட எந்தவொரு காரணத்தைக் கொண்டும் தாமதம் உண்டாகும்படி செய்யவில்லை. ஒரு பைசாவைக்கூட அபகரிக்க வேண்டுமென மனதாலும் பேச்சாலும் செயலாலும் நினைக்கவுமில்லை.

எனினும், யாரோ கூறினார்கள்: "ஆளு... தோழர். பத்திரிகையில் வாயில் தோன்றும் அனைத்தையும் எழுதக்கூடிய ஆள். நம் ரகசியங்கள் வெளியே தெரிந்து விடும். பிறகு... பிரச்சினை உண்டாகி விடும். நிர்வாகத்தை அரசாங்கம் ஏற்று நடத்தும். அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.''

எப்போதும் நண்பன் என நடிக்கக்கூடிய இன்னொரு எதிரி, மேலதிகாரியின் காதில் முணுமுணுத்தார்:

"அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு கதை எழுதுவது தான் வேலை. வெறுமனே சம்பளம் வாங்கிக் கொண்டி ருக்கிறார். செய்ய வேண்டியது.. சத்திரத்திற்கு மாற்றி விடுவதுதான்.''

உயரதிகாரி கண்ணாடியின் வழியாக கடைக்கண் களால் பார்த்தார். அப்போதும் அமர்ந்து பணி செய்து கொண்டிருந்தேன்.

"பணிக்கரே.... ஒரு இடம் மாறுதல் இருக்கு. சத்திரத் திற்கு... பாய், தலையணை கொடுப்பதற்கு ஒரு ஆள் வேணும். நம்பிக்கைக்குரிய உங்களை அங்கு போகும் படி அனுப்பி வைக்கிறோம்.''

"அது சரியாக இருக்காது. நான் அந்த அளவிற்கு நம்பிக்கைக்கு உரியவனல்ல. பாயையும் தலையணை யையும் கூலிக்குக் கொடுப்பதற்காக என்னை நியமிக்க வில்லை. என்னை அலுவலக க்ளார்க்காக பணி செய்ய அனுப்பினார்கள். இனிமேலும் பொறுமையாக வியாபாரம் பண்ணும் எண்ணம் இல்லை.''

அப்படித்தான் கூறியிருக்கவேண்டும். வேறு பிரச்சினைகளின் காரணமாக கூறவில்லை என்பது தான் விஷயம். சிறிதாக முனக மட்டும் செய்தேன்.

அந்த முனகலை பாதி சம்மதமாக நினைத்து ஆர்டர் தந்தார்கள். அந்த ஆர்டரைத் திருத்தியிருக்கலாம். ஆனால், மனசாட்சிக்கு எதிராக எதுவுமே செய்ய இன்று வரை முடிந்ததில்லை.

அருகில் அமர்ந்து பணி செய்து கொண்டிருந்த சந்திரசேகரன் கூறினார்:

"டேய்.. உன் கொள்கை எதுவும் இந்த அலுவலகத் தில் செல்லாது. ஒழுங்காக பணி செய்பவன் இங்கு இருக்கவும் முடியாது. உனக்கோ பெயின்ட் அடிக்கவும் தெரியாது''- அந்த மனிதர் தனக்கென்றிருக்கும் சில அனுபவங்களை உதாரணங்களுடன் எடுத்துக் காட்டினார்.

இவ்வாறு இங்கு இடம் மாறுதல் பெற்று வந்தேன்.

ஒரேயொரு ஆளை இரவுப் பணிக்கு அமர்த்தியிருப்பது நல்ல நோக்கத்துடன் இருப்பதற்கு வழியில்லையே! ஒரு பாடத்தைக் கற்பிக்கச் செய்கிறார்கள் போலும்! இரவு பத்து மணியிலிருந்து அதிகாலை ஆறு மணி வரை பணி...எப்படிப்பட்ட வகைகளில் உள்ள ஆட்களெல்லாம் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்! மரியாதை என்பதற்கு பெரிய இடம் எதுவுமே இல்லை... நண்பரே! அறை எடுக்க வருபவர்கள் எதையெல்லாம் தெரிந்து கொள்ள நினைக்கிறார்கள் என்பது தெரியுமா? அவசியமும் அவசியமற்றதுமான அந்த கேள்விகள் அனைத்தும் பதில்களுக்கான தகுதி உள்ளவைதானா?

அறைக்கு வாடகை எவ்வளவு?

சிங்கிள் ரூம் இருக்கிறதா? டபுள் ரூம் இருக்கிறதா? ட்ருப்புள் ரூம் இருக்கிறதா? காட்டேஜ் இருக்கிறதா?

ஒவ்வொரு அறைக்கும் என்னென்ன வசதிகள் இருக்கின்றன?

ஒவ்வொரு அறையிலும் குளியலறையும் கழிப்பறையும் இருக்கின்றனவா?

குளியலறை "காமன்'னா?

செப்டிக் கழிப்பறையா?

பயன்படுத்துவது குழாய் நீரா?

குழாய் நீரை பயன்படுத்தினால், "ஃபைலேரியா' வருமா?

ஒவ்வொரு அறைக்கும் தனிப்பட்ட முறையில் 'பாய்' உண்டோ?

மேலும் சற்று உயர்ந்த நிலையில் இருப்பவர்களாக இருந்தால், வேறு சில கேள்விகளையும் கூட கேட்பார்கள்:

எமர்ஜென்ஸி டெஸ்பாட்ச் இருக்கிறதா? மது விலக்கு இருக்கிறதா?

கடற்கரை எங்கு இருக்கிறது?

இடத்திலிருக்கும் பழக்க வழக்கங்கள் எப்படி யிருக்கும் என்பதை சிலர் அறிய ஆசைப்படுவார்கள்.

இன்னொரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு ஆரம்பிப்பார்கள்:

ஆலயத்தில் எப்போது பூஜை நடக்கும்? கடவுள் ஆணா... பெண்ணா? மம்மியூர் எத்தனை மைல் தூரத்தில் இருக்கிறது? இங்குள்ள முக்கிய இடங்கள் என்ன?

இப்படி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டுதான் ஒரு நாளின் எட்டுமணி நேர வேலையைச் செய்து தீர்க்க வேண்டும்.

இரண்டரை ரூபாய் கொடுத்து அறை எடுத்த பிறகு, 24 மணி நேரமும் தனக்குத் தோன்றக்கூடிய அனைத்தையும் செய்யலாம் என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கிறது.

அறைக்குள் நுழைந்ததும், சுத்தம் பற்றிய எதிர்ப்பு உண்டாகி விடும்.சுகாதாரம் குறித்த சிந்தனையுடன் இருக்கும் பலருக்கும் "பேட் ஸ்மெல்' வந்து விடும். "அறையில் ஃபேன் இல்லை... இரட்டைக் கட்டில்கள் இல்லை... டன்லப் மெத்தை இல்லை...

பருகுவதற்கு சுத்தமான நீர் இல்லை... நிலைக் கண்ணாடி இல்லை..சீப்பு இல்லை... பவுடர் இல்லை.... விரிப்பு வெண்ணிற சில்க் துணியால் இல்லை... பல்பு விளக்கு...பல்பு விளக்கு இருந்தால், வெளிச்சம் போதாது... குழாய் செயல்படவில்லை... அறைக்கு சுத்தம் போதாது... அழைத்த உடனே பையன் வரவில்லை...'' ஒரு நூறாயிரம் புகார்களை ஒரே வாயிலிருந்து வரச் செய்வார்கள்.

சிலர் தங்களுடைய பெருமையை வெளிப்படுத்த, இன்னும் ஒரு படி மேலே செல்வார்கள்.

"யார் இங்கு சூப்ரெண்ட்? அவருக்கு இங்கு என்ன வேலை? மேனேஜரின் பெயர் என்ன? ஓஹோ... அப்படி யென்றால்... அவரைக் கொஞ்சம் பார்க்க வேண்டும்.''

இன்னொரு கூட்டத்தினர் வேறொரு மெட்டில் இருப்பார்கள்.

"மேனேஜர் அவரா? நாங்கள் ஒரே வகுப்பில் படித்தவர்கள்...

அம்மாவின் தந்தை... மருமகன்...

உறவினர்...

மைத்துனன்... (அன்பிற்குரியவனே.. அவர் உன் அடிமை என்ற விஷயத்தை என்னிடம் ஏன் கூறவில்லை?) இப்படி பலவகைப்பட்ட "பந்தா' வார்த்தை களைக் கேட்கலாம். க்ளார்க் என்று கூறப்படும் உயிரினம் இப்படிப்பட்ட மனிதர்களுக்கு மிகவும் கேவலமானவன்.

"உனக்கு ஒரு பாடத்தைக் கற்பித்துத் தந்தே அடங்கு வேன்'' என்ற நினைப்புடன் அனைவரையும் எதிரி களாகக் கருதும் சில நண்பர்களும் பூமியில் இருக்கத் தானே செய்கின்றனர்!

"மதிப்பிற்குரிய சகோதரரே... அறை சுத்தம் செய்யப் படாமல் இருந்தால், சுத்தப்படுத்தித் தருகிறேன். இரண்டரை ரூபாய்க்கான அறைக்கு இங்கு சில குறிப்பிட்ட வசதிகள்தான் இருக்கும். அந்த வசதிகள் அனைத்தும் உங்களின் அறையிலும் இருக்கின்றன.''

அவற்றையெல்லாம் கேட்பதற்கு பொறுமையில்லை. பேச்சைக் கேட்டால்... அங்கு இருப்பவன் தன் வீட்டிற்குத் தான் பணம் முழுவதையும் வாங்கிக் கொண்டு செல்கிறான் என்பதைப்போல தோன்றும்.

அன்பிற்குரிய நண்பர்களே...

நாங்கள் உங்களின் கருணையை எதிர்பார்த்து இருப்பவர்கள்.

சிரமப்படும் எங்களை எந்த வகையிலும் தவறாக நினைக்காதீர்கள்.

பெரிய.. பெரிய மனிதர்கள் செய்யும் கேடுகெட்ட செயல்களுக்கும் அறிவற்ற காரியங்களுக்கும் இரையாக ஆவது இந்தச் சிறிய வாழ்க்கையைத் தள்ளி நகர்த்திக் கொண்டிருக்கும் 40-4-120 நிலையில் இருப்பவர்கள்தான்.

ஒரு நாளில் குறைந்தபட்சம் நான்கு தடவைகளாவது ஒரு க்ளார்க் தன் மனதைத் திட்டிக் கொண்டிருப்பான்.

இரவுப் பணி என்பது தாங்க முடியாத அளவிற்கு கேடுகெட்ட ஒன்று.ஐந்து மணி ஆகும்போது, அனைத்து அறைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. அதற்குப் பிறகும் மக்களின் வருகை நிற்கவில்லை.

வெளியூர்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு வர தொடங்கி விட்டனர்.

கூர்க்கா வாட்ச்மேன் ஷ்யாம் பகதூர் "அறைகள் காலியாக இல்லை' என்ற பலகையை எடுத்துத் தொங்கவிடுகிறான். இரவில் வருபவர்களில் பெரும்பாலானவர்கள் மலையாளம் அறியாதவர்கள்...

சிறப்பு பேருந்துகளிலிருந்து புனிதப் பயணிகள் வந்து இறங்குகிறார்கள்.

என்ன ஒரு கூட்டம்!

"நாங்கள் ஐநூறு மைல் தூரத்திலிருந்து வருபவர்கள். குடும்பம் இருக்கிறது.கடந்த மூன்று நாட்களாக தூங்கவில்லை.

நான்கு சிறிய குழந்தைகள்... சார்..

எப்படியாவது ஒரு அறை தரணும்.''

"அறை எதுவும் காலியாக இல்லையே!''- எதுவுமே செய்ய முடியாத நிலையில் கையை விரிக்கிறேன்.

"நாங்கள் இந்த இரவு வேளையில் எங்கு போவோம்?''

"நான் என்ன செய்யணும்?"

"எப்படியாவது ஒரு அறை தயார் பண்ணி தரணும்.''

"நான் மிகவும் வருத்தப்படுறேன்.

அறை ஏதாவது காலியானால், உங்களுக்கு முதல் உரிமை தர்றேன்.''

"அது வரை எங்கு இருப்பது?''

"வராந்தாவில் நாம் சேர்ந்து இருப்போம். இரண்டு கட்டில்கள் ஏற்பாடு பண்ணி தர்றேன். பாயும் தலையணையும் தர்றேன். மெத்தை இல்லை.இருப்பதை வைத்து சில மணி நேரங்கள் எப்படியாவது இருப்பதற்கு வழியைப் பாருங்கள்''- அன்பு நிறைந்த குரலில் அவர்களிடம் கூறினேன்.

எனினும், குறைப்பாடு காதில் விழத்தான் செய்தது:

"இப்படி... பொது வராந்தாவில் தங்கி எங்களுக்குப் பழக்கமில்லை.''

‌"வேறு வழிகள் எதுவும் தெரியவில்லை.''

ஒரு வகையாக அந்த குடும்பத்தை வராந்தாவில் இருக்கும்படி செய்கிறேன்.(வராந்தாவில் இடம் கொடுப்பது என்பது பணி சட்டங் களுக்கு எதிரானது.

தேவைப்பட்டால்... சட்டத்தின் பெயரில் உயர் பதவியில் இருப்பவர் கள் க்ளார்க்கைத் தண்டிக்கலாம். மனிதத் தன்மையை வெளிப்படுத்திய காரணத்திற்காக பல நேரங்களில் குற்றவாளியாக ஆகியிருக்கிறேன்.)

நேரம்... ஒரு மணி. கடவுள்கூட உறக் கத்தில் இருக்கிறார்.

பணியில் இருப்பவர்கள் அப்போதும், தூக்கத்தை ஒதுக்கி விட்டு, இருக்க வேண்டும். உறக்கம் கண்களில் ஆழமாக நிறைந்திருக்கிறது.

அப்போது ஒரு ஹார்ன் சத்தம்... கேட்டைக் கடந்து கார் விசாரணை அலுவலகத்திற்கு முன்னால் வந்து நிற்கிறது.

‌"வேர் ஈஸ் தேவஸ்தான சத்திரம்?''- ஒரு கறுத்த நாட்டுக்கோட்டை செட்டி தன் லேண்ட் மாஸ்டர் காரிலிருந்து இறங்கி வந்தார். அவருடன் சில நைலான் அழகிகளும்...

காஞ்சிபுரம் பட்டின் பளபளப்பில் இளமையின் மதர்ப்பு தெரிந்தது. ஒரு காஸ்மெட்டிக் கடையின் சாயல்... நாசியைத் துளைக்கும் பலமான வாசனை காற்றில் மிதந்து வருகிறது.

தமிழ்நாட்டின் நறுமணத்தைப் போல...

"மேனேஜர் எங்கே?''

கூர்க்கா வாட்ச்மேன் பணிவுடன் கூறுகிறான்:

"படுத்திருக்கிறார்... சார்.''

"எங்கே?'' (தமிழ் திரைப்படங்களின் அரசரைப் போல).

கறுத்த தமிழர் ஓடி வந்தார். க்ளார்க்கை வலிய தூக்கி, குலுக்கி அழைக்கிறார்:

"ஏய்... அறை இருக்குதா?'' (ஒரு கர்ஜனை)

"இல்லையே!''

"நாங்க பொள்ளாச்சியில இருந்து வர்றோம். அறை தாங்க.. வாடகை எவ்வளவு வேணும்னாலும் தர்றேன்.''

"சார்... அறை ஒண்ணு கூட இல்லையே!''

கறுத்த தமிழர் சில்க் ஜுப்பாவின் பையிலிருந்து இரண்டு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டுகிறார்.

இரண்டு ரூபாய் நோட்டை எடுத்து "லஞ்சம்' கொடுத்தால், ஒரு அறை கிடைக்கும் என்று அந்த பண மூட்டை நம்பிக்கை வைத்திருக்கலாம்.

கருப்புச் சந்தை வர்த்தகம் அனைத்து திசைகளிலும் இருக்கிறது என அவர்கள் நினைப்பதுதான் காரணமா? மனிதனின் மதிப்பு நாட்கள் செல்லும் தோறும் இறங்கிக் கொண்டிருப்பதைப் போல தோன்றியது.

காலை பணிக்குவர வேண்டிய க்ளார்க் வந்து சேரவில்லை.

பேருந்திற்குப் போக வேண்டியவர்களின் கூட்டம் அதிகமானது.

அறையைக் காலி பண்ணி விட்டு செல்பவர்களுக்கு முன் பணத்தைத் திரும்ப தர வேண்டும். அப்போது யாரோ வந்து கூறினார்கள்: "ஃபேமிலி க்வாட்டர்ஸில் ஒரு அறை வேணும். ஒரு மேரேஜ் பார்ட்டிக்கு... ஒன்பது மணிக்கு மணமகனின் ஆட்கள் வருவார்கள்.''

"ஃபேமிலி க்வாட்டர்ஸ் எதுவும் காலியாக இல்லை.''

"கொஞ்சம் முயற்சி செய்தால் நல்லது.''

"ஃபேமிலி "6' ன் சாவி எங்கே?''- 6 ஆம் எண் அறையின் சாவியைக் குறித்து விசாரித்தேன். ஆறாம் எண் அறையின் வாட்டர் பாயைக் காணோம்.

விசாரணைக்கு வந்தது. அப்போது யாரோ கூறினார்கள்... ஆறாம் எண் அறைக்குள் நேற்று இரவு ராமகிருஷ்ணன் செல்வதைப் பார்த்ததாக... இது வரை வெளியே பார்க்கவில்லை.

இல்லாவிட்டால்...

வீட்டிற்குப் போயிருப்பானா என்று தெரியவில்லை.

போய் பார்த்தபோது, ஆறாம் எண் அறை உள்ளேயிருந்து பூட்டப்பட்டிருந்தது.

தட்டி அழைத்தேன். யாரும் திறப்பதாகத் தெரியவில்லை.

உள்ளே யாரோ இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

சிறிது நேரம் கடந்த பிறகு, இன்னொரு பையன் வந்து கூறினான்: "ஜன்னல் திறந்திருக்கிறது.''

திறந்திருக்கும் சாளரத்தின் வழியாக உள்ளே பார்த்தேன். அப்போது சாலையைப் பார்த்து ராம கிருஷ்ணன் நின்று கொண்டிருப்பதைப் போல தோன்றியது. அருகில் சென்று பார்த்தேன். அந்த காட்சி! அது இப்போதும் கண்களில் அப்படியே ஆழமாக பதிந்திருக்கிறது. ஒரு ட்ராயர் மட்டும் அணிந்திருக்கிறான். கழுத்தில் வேட்டியைக்கொண்டு இறுக முறுக்கிக் கட்டியிருக்கிறான்.

நாக்கு நீட்டிக் கொண்டிருக்கிறது.

கண்கள் மூடியிருக்கின்றன.

தலை ஒரு பக்கமாக சாய்ந்திருக்கிறது.

மலமும் சிறுநீரும் ட்ராயரின் வழியாக வழிந்த அடையாளம் இருக்கிறது.

கவலைகள் நிறைந்த அந்த வாழ்க்கை நாடகம் முடிவிற்கு வந்து விட்டது.

ராமகிருஷ்ணன் தன் வாழ்க்கையைப் பழிவாங்கி முடித்து விட்டான்.வெறும் ஒரு தற்கொலை என்பதைத் தாண்டி அது வேறொன்றுமில்லை.

அந்த காட்சியை நேரடியாக பார்த்தவர்கள் பலரும் அந்தச் சிறிய கதையை மறந்து விட்டார்கள்.... மறந்தே ஆக வேண்டும்.

"ஃபேமிலி ப்ளாக்' (குடும்பப் பிரிவு): ஆறாம் எண் அறையின் சாவி பெரும்பாலான நாட்களிலும் கீ போர்டில்தான் தொங்கிக்கொண்டிருக்கும்.

அனைத்து அறைகளும் கொடுத்து முடித்த பிறகுதான் அந்த அறை சமீப காலமாக கொடுக்கப்பட்டு வந்தது. கருப்பு நிற கீ போர்டின் மேல்,சிவப்பு நிறத் திலிருந்த டிஸ்க்கில்... ஃபேமிலி ப்ளாக்: ஆறாம் எண் அறையின் சாவி தனியாக தொங்கிக் கிடக்கும் நிலையில்... நான் அந்த கதையை நினைத்துப் பார்க்கிறேன்.

மெதுவாக...

மெதுவாக என் மனம் அந்த வாட்டர் பாயைப் பற்றிய நீண்ட நாட்களுக்கு முந்தைய ஞாபகங்களுக் குள் சுவடு வைத்து...சுவடு வைத்து நகர்ந்து போய்க் கொண்டிருக்கிறது.

"ஃபேமிலி ப்ளாக் காலியாக இருக்கிறதல்லவா?''- யாராவது ஆறாம் எண் அறையின் சாவியைச் சுட்டிக் காட்டியவாறு பெரும்பாலான நாட்களிலும் கேட்பதுண்டு.

தெரியாத திசைகளிலிருந்து கட்டுடனும், மூட்டை யுடனும் குழந்தைகளுடன் நுழைந்து வரும் பக்தர் களிடம் அந்தக் கதையைக் கூறுவதால் எந்தவொரு பயனுமில்லை.

இரண்டரை ரூபாய்களை வாடகையாக வாங்கிக்கொண்டு ஏதாவது மனிதரின் பெயரை ரெஜிஸ்டரில் எழுதும்போது, குற்றவுணர்வு காரணமாக என் தலை குனிந்து போனதுண்டு.

மனிதர்களின்மீது கொண்டிருக்கும் அன்பு முழுமையாக இல்லாமற் போயிராத ஒரு க்ளார்க்கிற்கு முன்னால் தோன்றும் மிகப் பெரிய ஒரு குழப்பம் நிறைந்த பிரச்சினை...

"ஃபேமிலி ப்ளாக் : அறை எண் 6'.

அன்பிற்குரிய ராமகிருஷ்ணா....

உன்னை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

நேற்றும்... இன்றும்... இனி நாளையும்....

ப்