பெண்ணியத்தின் பெருமிதமாக வந்து வாய்த்தவர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.
இரவு வானத்தில் வெளிச்சக் கீற்றுகள் தோன்றும்போது புதிய விடியல் பிறக்கிறது. இருள் விலகுவதற்கும் ஒளி பரவுவதற்கும் இயற்கைக்குச் சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. இயல்புக்கு மாறாக ஏற்படுத்தப்பட்ட அறியாமை என்னும் இருட்டை விரட்டுவதற்குக் காத்திருப்பு மட்டும் பலன்தராது. அதற்குப் போர்க்கொடி ஏந்திப் போராட வேண்டியிருக்கிறது. அப்படிப் பல ஆண்டுகளாக மருத்துவப் படிப்பு பெண்களுக் கில்லை என்ற தடையை ஒற்றை விண்ணப்பத்தால் முடிவுக்குக் கொண்டுவந்த பெண்மணி ஒருவர் உண்டு. அவர்தான் பாலியல் நோயால் பாதிக்கப் பட்ட மகளிரை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கான முக்கியமான சட்டத்தைப் பல போராட்டங்களுக்குப் பிறகு நிறைவேற்றினார். பொட்டுக்கட்டும் வழக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டியெறிந்தார். பொம்மைக் கல்யாணம்போல நடந்த குழந்தைத் திருமணத்தைத் தடுத்துநிறுத்திய சாதனையைப் படைத்தார்.
கணவனைக் கடவுளாகச் சித்தரித்த சமூகத்தில், எனக்குச் சம உரிமை கொடுத்து, என் விருப்பத்தில் தலையிடாமல் இருந்தால் திருமணம் செய்து கொள்வேன்’ என்ற நிபந்தனையுடன் திருமணத்தை அணுகினார். சாதாரண மாவட்டமாக இருந்த புதுக் கோட்டையை ‘புகழ்க் கோட்டையாக’ மாற்றிய சமூக சேவகி. சமூகப் பார்வை கொண்ட அவர் இந்தச் சமூகத்திற்கு விட்டுச்சென்ற செயல்திட்டங் கள் இன்றும் அவர் பெயரைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. தமிழ்மொழிக்கான உரிமைப் போராட்டத்திலும் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். அவரே இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற சிறப்புக்குரிய டாக்டர் முத்து லட்சுமி அம்மையார்.
இன்று பெண் கல்வி பரவலாக்கப்பட்டு, ஏராளமான பெண் மருத்துவர்கள், பெண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். தேவதாசி முறை என்பது தற்போது நடைமுறையில் இல்லாமல் ஒழிக்கப்பட்டுவிட்டது. அந்தக் காலத்தில் பெண்களுக்கான திருமண வயது பதினாறாக இருக்க வேண்டி வகுக்கப்பட்ட சட்டங்களைத் தாண்டி இன்று பெண்ணின் மண வயது இருபத்தியொன்று என்று மாற்றமடைந்த நிலையில் என்றோ வாழ்ந்த முத்துலட்சுமி அம்மையாரைப் பற்றிச் சிலாகித்துப் பேசவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? வரலாறு தெரியாத இனம் தன் மண்ணின் மரபை உணரமுடியாமல் அடிமைப்படும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறது. அதிலிருந்து மீளவும், மீண்டும் விடுதலை உணர்வு தலையெடுக்கவும் வரலாறு அவசியம். ஒரு பாலினம், அது கடந்துவந்த பாதையை இருட்டடிப்பு செய்வோமானால் அல்லது புறக்கணிப்போமானால் அந்தப் பாலினம் பட்ட துன்பங்களை அறிந்துகொள்ள இயலாமல் போய்விடும். மேலும் தற்போது அடைந்திருக்கும் சமத்துவ நிலையின் உன்னதத்தை உணரவோ மீண்டும் அடிமையாகாமல் இருக்கவோ வழி இல்லாத அபாய நிலை உருவாகிவிடும்.
டாக்டர் முத்து லட்சுமி அம்மை யாரின் பிறப்பு கொண்டாடப்பட வேண்டியது. உடல் தேவைக்காக ஏற்படும் காமம் ஒரு புள்ளியில் தீர்ந்துவிடும். உணர்வு மலரும்போது ஏற்ப டும் காதல் இலட்சி யப் பூக்களை மலரச் செய்யும். அதற்குச் சாட்சியாகப் பிறந்தவர் முத்துலட்சுமி. அன்றைய புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயணசாமி என்ற பிரபல வழக்கறிஞருக்கும், சந்திரம்மாள் என்ற சிறந்த பாடகிக்கும் மூத்த மகளாகப் பிறந்தார். பெண் குழந்தை பிறந்தால் சமையல் செய்யவும், துணி துவைக்கவும், வீட்டைப் பராமரிக்கவும், வம்சத்தை விருத்தி செய்யவும் ஒருத்தி வந்திருக்கிறாள் என்ற பழைய பிற்போக்குத்தனமான சிந்தனைகளை முறியடிக்கப் பிறந்தவள் என்று யாரும் அப்போது நினைத்திருக்கமாட்டார்கள்.
அம்மையாருக்கும் அவருக்குப் பிறகு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கும், ஓர் ஆண் குழந்தைக்கும் கல்வி வரத்தைப் பரிசாக்க நினைத்தனர் நாராயணசாமி தம்பதியினர். பிராமண சமூகத்தைச் சேர்ந்த நாராயணசாமியும் - இசை வேளாளர் மரபைச் சார்ந்த சந்திரம்மாளும் கருத்து ஒருமித்து சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.
அன்றிலிருந்து இன்றுவரை சாதி மறுப்புத் திருமணங் களுக்கு எதிர்ப்பு காட்டுவது, பலி வாங்குவது தொடர்கதையாகி வருகிறது. அவற்றை மீறி பெரியாரியப் புரட்சிப் பாதையில் நடைபோட்ட அத்தம்பதியினர், தங்கள் பிள்ளைகள் சமூக அக்கறையுடன் வாழ உதவினர். பெண் கல்விக்கு மறுப்பு தெரிவிக்கும் அந்த நாளில் படிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்த முத்துலட்சுமியைப் படிக்க அனுப்புவது மிகப்பெரிய சவாலாக இருந்தது.
“தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? - நீ
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!”
என்று புரட்சிக்கவி பாரதிதாசன் பாடி மகிழ்ந்ததுபோல, தன் மகளை மிக விருப்பத்துடன் படிக்க அனுப்பினர் பெற்றோர்.
திண்ணைப் பள்ளியில் கற்றலைத் தொடங்கிய வர், தனது பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் இண்டர்மீடியட் பயில விரும்பினார். வெளியூர் கல்லூரிகளுக்குச் சென்று படிக்கலாம் என்றால், பெண்களுக்கு அங்கே தங்கிப் படிப்பதற்கான விடுதி வசதி இல்லை என்ற நெருக்கடி. உள்ளூர் கல்லூரியிலோ பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு. இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்று தவித்த வேளையில் புதுக்கோட்டை மன்னர் மனமுவந்து உதவ முன்வந்தார். நாற்றமெடுக்கும் பெண்ணடிமைத் தனத்திற்குச் சாவுமணி அடிக்க தன்னால் இயன்ற அத்தனை உதவியையும் பெருந்தன்மையுடன் நிறைவேற்றித் தந்தார்.
எல்லா ஆண்டுகளும் ஒரே மாதிரி தொடங்கி முடிந்துவிடு வதில்லை. சில ஆண்டுகள் அதிக மான நன்மைகளைத் தருகின்றன.
அந்த வகையில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 1904- அன்று விண்ணப்பித்தபோது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில் சில பழைமைவாதி கள் இதைக் கடுமையாக எதிர்த் தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்குச் சிந்தனையும் கொண்ட மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார். ஒரு பெண் கல்லூரியில் படிக்க வந்தால் அங்கே படிக்கும் ஆண் மாணவர்களின் படிப்புக்கு இடையூறு நேரிடும், அவர்கள் மனம் சலனமடையக்கூடும் என்று நம்பிய நிலையில் ஆண்களுக்கும் அம்மையாருக்கும் இடையில், ஆண்கள் பார்க்க முடியாதபடி எப்போதும் திரை போடப்பட்டிருக்கும். இத்தனை புறக்கணிப்புக்கு இடையிலும் இன்டர்மீடியட் படிப்பில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார் என்பது சாதனை!
எத்தனையோ படிப்புகள் இருக்க, மருத்துவப் படிப்பு தேர்ந்தெடுக்க தாயார் மீது முத்துலெட்சுமி அம்மையார் வைத்த பாசமே காரணம். தாயார் சந்திரம்மாள் நோய்வாய்ப்பட்டு அவதிப்படும்போது தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டார். அந்தக் கனவும் நிறைவேறும் நாள் கைகூடியது. சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைத்தது. இருந்தாலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அங்கே அறுவை சிகிச்சைப் பேராசிரியராக இருந்தவர், தன் வகுப்பில் பெண் களை அனுமதிக்காமல் இருந்தார். அம்மையாரோ அறுவை சிகிச்சை பாடத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்ற பின், அன்று முதல் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, அறுவை சிகிச்சை வகுப்புக்குப் பெண்களை அனுமதித்தார் என்பது வரலாறு. தனி ஒருவரின் தியாகம் எப்படிச் சமூக மாற்றத்திற்குக் காரணமாகுமோ அதுபோல் அவரின் சாதனையும் சமூக மாற்றத்தைச் சாத்தியப்படுத்தும் என்கிறது இவரின் வாழ்க்கை வரலாறு.
மருத்துவப் படிப்பு முடித்த பிறகு, சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனை யில் பணியைத் தொடங்கினார். மருத்துவப் படிப்பு படிப்பதற்கும், புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவுவதற்கும் அம்மையார் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பெரிய காரணிகளாக அமைந்தன. இருபது வயதிற்குள் அந்நியர் போட்ட திருமணம் பற்றிய சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று அகிம்சை வழியில் போராடி,சிறைக்குச் சென்ற சிறுமியே தனக்குச் சுதந்திர உணர்வு ஊட்டியவள் என்று கொண்டாடுகிறார் மகாத்மா காந்தியடிகள். தென்னாப்பிரிக்காவில் பிழைப்புத் தேடிச் சென்ற இந்தியர்கள் மீது ஆதிக்கத்தைச் செலுத்த விரும்பிய ஆங்கிலேய அரசு, பதிவு முறையில் செய்யப்படாத திருமணங்கள் செல்லாது என்ற புதிய சட்டத்தைத் திணித்தது.
இந்திய முறைப்படி செய்யப்பட்ட திருமணங் கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று போராடிய அந்தச் சிறுமி சிறைப்படுத்தப்பட்ட போது, சிறையில் சுகாதாரமின்மையாலும், ஆரோக்கியமான உணவு வழங்கப்படாததாலும் படுத்த படுக்கை நிலைக்குத் தள்ளப்பட்டாள். பின்னர் சிறையிலிருந்து விடுதலை பெற்றபோதும், சில நாள்களிலேயே மரணமடைந்தாள். அந்தச் சிறுமி செய்த தியாகம் தனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று குறிப்பிடுகிறார் மகாத்மா.
அந்தத் தியாகச் சிறுமியே ‘தில்லையாடி வள்ளியம்மை. அவளின் பெயரில் எழும்பூர், கோ-ஆப்டெக்ஸ் மாளிகைக்கு ‘தில்லையாடி வள்ளியம்மை மாளிகை’ என்று பெயர் சூட்டப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோல, முத்துலட்சுமி அம்மையார் தன் தங்கை சுந்தரம்மாள் புற்றுநோயால் இறந்தபோது அந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உடைந்து போனார். அதிலிருந்து மீள முடியாமல் துயரப்பட்டார். அந்த நிலையில் புற்றுநோய் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அதற்கான மருத்துவம் பரவலாக்கப்பட வேண்டும் என்றும் விரும்பினார். சமூகப்பணி குறித்த விழிப்புணர்வு இல்லாத ஒரு நாளில் சமூகப் பணிக் கல்விக்கான கல்வி நிறுவனத்தை ஒற்றைப் பெண்மணியாக இருந்து பத்மவிபூஷன் மேரி கிளப் வாலா ஜாதவ் சென்னையில் நிறுவியது போல, புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை அடையாறில் ஏற்படுத்தினார். இன்றும் பல்வேறு ஊர்களிலிருந்து வரும் நோயாளிகளுக்கான சரணாயலயமாக நிமிர்ந்து நிற்கிறது ஆராய்ச்சி மையம்.
தில்லையாடி வள்ளியம்மை தன்னைச் சமூகத்திற்காக ஒப்புக்கொடுத்தது போலத் தன் வாழ்நாளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எளிய மக்களின் துயரம் போக்கும் வாழ்க்கையாக மாற்றிக்கொண்டார். புற்றுநோய் தாக்கப்பட்டவரை அருகில் இருந்து பக்குவம் பார்ப்பதற்கு அதிக மனதைரியம் வேண்டும். அவர்கள் வலியால் துடிப்பதைப் பார்த்துக் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது. ஆரம்பத்தில் குணப்படுத்த முடியாத நோயாக இருந்தபோது அதற்காகச் செலவழித்து மருத்துவமனை தொடங்குவதால் என்ன பயன் என்று பலரும் கருதினர். இந்தச் சூழலில் தன் தங்கை பட்ட துன்பத்தைப்போல மற்றவர்கள் படக் கூடாது என்ற மனிதநேயச் சிந்தனையுடன் இந்த ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினார். அவரின் தொடர்ச்சியாக அவரின் இரண்டாவது மகன் புற்றுநோய் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி இந்த மையத்தைத் தொடர்ந்து நிர்வகித்து வந்தது அனைவரும் அறிந்ததே!
பிறப்பின் அடிப்படையில் பாலியல்ரீதியில் பெண்களைச் சுரண்டும் போக்கைக் கண்டு மனம் கொதித்த இவர் அதற்குத் தீர்வு காணும் நாளுக்காகக் காத்திருந்தார். வாக்கு உரிமையும், தேர்தலில் போட்டியிடும் உரிமையும் இல்லாதபோது முதன்முதலாக அரசியல் களத்தில் வெற்றி பெற்று, அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார். மேலும், 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுகளில் புரட்சிகரமான சட்டங்களை நிறைவேற்றினார்.
அரசியல் களத்தில் நுழைந்ததால் இசை வேளாளர் மரபில் பிறந்த மகளிர் கடவுளுக்குப் பொட்டுக் கட்டி விடப்பட்டுக் கோயில் நிர்வாகி களுக்கும், பெரிய செல்வந்தர்களுக்கும் சிற்றின்பம் தரும் பதுமைகளாக மாற்றப்பட்டனர். இதை மாற்ற சட்டசபையில் விவாதிக்கும்போது, காலங்காலமாக இருந்து வரும் இந்த மரபை மீறினால் நாட்டில் ஒழுக்கக்கேடு நிகழும் என்றும் இது செய்யாமல் போகும் பட்சத்தில் அப்பெண்கள் புண்ணியங்களை இழக்க நேரிடும் என்றும் எதிர்த்துப் பேசிய சத்தியமூர்த்தி போன்றவர்களுக்குச் சரியான பதிலடி கொடுத்து மடக்கினார்.
இத்தனை காலமாக ஒரு குறிப்பிட்ட சாதியினர் அடைந்த புண்ணியத்தை, இனி மற்ற சாதியினரும் அடையலாம் என்று ஆவேசமாகப் பதில் தந்து அவர்களின் வாயை அடைத்தார். மேலும்‘ தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்’ என்ற முதன்மைச் சட்டத்தை நிறைவேற்றி அமலுக்குக் கொண்டு வந்தார். தவிர இருதார தடைச்சட்டம், பால்ய விவாகங் களைத் தடை செய்யும் சட்டம் போன்ற குறிப்பிடத் தக்க சட்டங்கள் தோன்றவும் காரணமானார். தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் இயற்றினாலும், அதிலிருந்து மீட்கப்பட்ட பெண்கள் தங்களுக்குப் போக்கிடம் இல்லாமல் மீண்டும் அம்மையாரின் வீட்டுக் கதவைத் தட்டினர். அவர்களுக்காக ‘அவ்வை இல்லம்’ என்ற இல்லத்தை நிறுவி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார். இன்றும் இந்த இல்லம் ஆதரவற்ற பெண்களுக்கான கலங்கரை விளக்கமாக இயங்கி வருவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.
சமூகத்தைச் செதுக்கும் சிற்பியாகவும், தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட சிற்பமாகவும் விளங்கிய அம்மையாரின் பணியைப் பாராட்டி இந்திய அரசு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கிக் கௌரவித்தது. தமிழக அரசு அடையாறில் உள்ள ஒரு சாலைக்கும், பூங்காவிற்கும் அம்மையாரின் பெயரைச் சூட்டி அடுத்த தலைமுறைக்கு அம்மையாரின் பங்களிப்பை மௌனமாக உணர்த்தி வருகிறது. மேலும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டம் என்ற பெயரில் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் பேறுகால நிதி உதவித் தொகையாக ரூ.12000 ரூபாயிலிருந்து ரூ.18000 ரூபாய் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் போன்றவற்றைக் குறைக்க காரணமாக இருப்பது ஆரோக்கியமானது.