சென்னையைச் சேர்ந்த பிரபல நாடி ஜோதிடர் திருச்சிற்றம்பலத்திடம் கொரோனா தாக்குதல் குறித்து கேட்டபோது, அதன் வீரியம் ஏப்ரல் 20-க்கு மேல் படிப்படியாகக் குறையும். ஆனாலும், டிசம்பர் 26 வரை பல்வேறு இயற்கைப் பேரிடர் அபாயங்கள் இந்த உலகிற்குக் காத்திருக்கின்றன என்றார் அழுத்தமாய்.
இவர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் மரணம் குறித்து முன்கூட்டியே கணித்துச் சொல்லி ஆச்சரியமூட்டியவர். அதேபோல் கடந்த 2016 தேர்தலின் போதும், அ.தி.மு.க. தான் ஆட்சியைப் பிடிக்கும். மாபெரும் மக்கள் தலைவரான கலைஞருக்கு, இனி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லை என்றும் அதிரடியாகச் சொல்லியிருந்தார். எனினும், இங்கிருக்கும் மக்கள் முழுமையாக ஊரடங்கைக் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக எச்சரிக்கை இன்றி இன்னும் திரிந்துகொண்டிருக்கும் நிலையில், கொரோனா எப்படிக் குறையும்? என்ற சந்தேகம் நம்மைக் குடைந்தது. அதே போல் டிசம்பர் வரை, எத்தகைய பேரிடர்கள் வரப்போகிறது? எந்த அடிப்படையில் இதைச் சொல்கிறார்? என்றும் வினா எழுந்தது.
இந்த சந்தேகங்களை திருச்சிறம்பலத்திடமே நாம் வைத்தோம். நிதானமாகப் பேச ஆரம்பித்த அவர்...
இந்த விகாரி வருடம் அவ்வளவு சிறப்பான வருடம் இல்லை என்கிறது ஜோதிட சாஸ்திரம். சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே தீரமறு நோயால் திரிவார்கள் - மாரியில்லை பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும் ஏமமின்றி சாவார் இயம்பு என்கிறது ஒரு ஜோதிடப் பாடல். அதனால் நான் கடந்த அக்டோபர் நவம்பரிலேயே, உலக அழிவு தொடங்கப்போகிறது என்று என் நண்பர்களிடம் சொன்னேன். அவர்கள் நம்பமறுத்தார்கள். ஆனாலும் இப்போது அதுதானே நடக்கிறது என்றவர், குருவும் சனியும் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் கால கட்டம் உலகிற்கும், உலக மக்களுக்கும் பெரும் அழிவைத் தரும் என்பது ஜோதிட விதி . போர் கிருமிகளாலும், விஷ ஜந்துக்களாளும், போர் போன்ற மோதல்களாலும் உலக அளவில் மக்களும் உயிரினங்களும் அதிக அளவில் அழிவைச் சந்திக்க வேண்டிய நேரம். அதேபோல் நாம் இருக்கும் தேசத்தின் அயல் விவகாரங்களைச் சொல்லும் கிரகம் கேது. அது பூமிகாரகனுடன் சஞ்சாரம் செய்யும் போது சர்ப்பதோஷம் ஏற்படுகிறது. இதனால் அன்னிய மொழி, மதம், பாசை கொண்ட நாட்டின் மூலம் அழிவைச் சந்திக்க வேண்டிய பலன் இருக்கிறது. அதுதான் இப்போது கொரான வைரஸாய் இங்கே நுழைந்து துவம்சம் செய்கிறது. இதனால்தான் தேசம் நெருக்கடியைச் சந்திக்கிறது. இந்த கிரக நிலை தேசத்தின் சகல வளர்ச்சி நிலையையும் கடுமையாகப் பாதிக்கும்.
ஆனாலும், கெட்டதிலும் ஒரு ஆறுதல் என்னவென்றால் ஏப்ரல் 20-க்குப் பின் தனுசு ராசியில், சனி, குரு, செவ்வாய், கேது ஆகிய நான்கு கிரகங்களும் சஞ்சரிக்க இருப்பதால், பேரழிவைத் தரவேண்டிய இந்த கிரகங்கள் சாபம் அடைகின்றன. அதனால், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பது போல், அவற்றின் வீரியம் குறையும்.
அதேபோல் ஏப்ரல் இறுதியில் செவ்வாய், மகர ராசியில் உச்சம் பெறுகிறது. இதனாலும் நாட்டு மக்கள் தங்களைப் பீடித்த பிணியில் இருந்து குணம் பெறுவார்கள். சகல ஜீவராசிகளும் உற்சாக மடையும் வகையில் சூழல் அமையும். அதோடு இப்போது ஏற்பட்டிருக்கும் வைரஸ் நெருக்கடியும் பாதிப்பும் கொஞ்சம் கொஞ்சமாய் குறையும் என்று நம்பலாம். என்றார்.
பின்னர் அவரே...
எனினும் விகாரி வருடத்துக்கே இயல்பான துர்பலனால் நில நடுக்கம், சுனாமி, எரிமலை உள்ளிட்ட இயற்கை இடர்கள் உலகில் அங்கங்கே தொடரத்தான் செய்யும். டிசம்பர் 26-ல் சனி, தனுர் ராசியில் இருந்து மகரத்து இடம்பெயர்ந்து ஆட்சிபெறுகிறார்.
அப்போது பரிபூரண மகிழ்வும் சேமமும் ஏற்படும். உலகத்தின் நிம்மதி இதன் பிறகு திரும்பும் என்கிறார் அழுத்தமாய்.
ஜோதிடர் திருச்சிற்றம்பலம் சொல்வதுபோல், கொடூர கொரானா இங்கே ஏப்ரல் இறுதிக்குள் தன் ஆட்டத்தையும் அதகளத்தையும் நிறுத்தினால், மகிழ்ச்சிதான். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.