1877-ஆம் ஆண்டில் சாமுவேல் பவுல் ஐயர் எழுதிய சரிகைத் தலைப்பாகை எனும் சிறுகதை தமிழின் முதல் சிறுகதை என்றும், 1913-இல் பாரதியார் எழுதிய ஆறில் ஒரு பங்கு சிறுகதைதான் தமிழின் முதல் சிறுகதை என்றும், 1915-இல் வ.வே.சு.ஐயர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் எனும் கதையே தமிழின் முதல் சிறுகதை என்றும் சிறுகதை ஆய்வாளர்களால் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

முதல் சிறுகதை யாரால் எழுதப்பட்டது என்கிற ஆராய்ச்சிகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், தமிழில் சிறுகதை எனும் வடிவம் அறிமுகமாகி, ஒரு நூற்றாண்டினைக் கடந்துவந்திருக்கிறோம். தமிழ் மொழியே மரபார்ந்த கவிதை மொழியாக இருந்த நிலையில், ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னரே தமிழில் உரைநடை, நாவல், சிறுகதை ஆகிய இலக்கிய வடிவங்கள் அறிமுகமாயின.

கற்ற கல்வியின் வழியே ஆங்கில மொழியறிவு பெற்ற தமிழர்கள், ஆங்கில இலக்கியங்களைப் படித்ததன் விளைவாக, அவ்வகை இலக்கியங்களைத் தமிழிலும் படைக்கத் தொடங்கினார்.

தமிழில் புதுக்கவிதை, சிறுகதை ஆகிய வடிவங்களில் பலரும் எழுதத் தொடங்கி, இன்றைக்கு உலகத் தரத்திலான கவிதைகளும், சிறுகதைகளும் தமிழில் எழுதப்பட்டுள்ளன. ஆனாலும் அவற்றை உலகின் பார்வைக்குக் கொண்டுசெல்லும் மொழியாக்க முயற்சிகள் ஏதும் தமிழில் பெரிய அளவில் தொடங்கப்படவில்லை என்பது சற்றே வருத்தத்திற்குரியது.

Advertisment

தமிழ்ச் சிறுகதை தளிர் நடை போடத்தொடங்கிய காலத்திலேயே சிறுகதையின் வடிவத்தை ஆழமாக உள்வாங்கி, அதன் சமூகத் தேவையை மிகச் சரியான அர்த்தத்தில் உணர்ந்து சிறுகதை, நாவல்களைப் படைத்தவர் எனும் பெருமைக்குரியவர் எழுத்தாளர் அகிலன்.

காந்தியின் உரையால் கவரப்பட்ட சிறுவன் தமிழ்ப் படைப்புலகம் கொண்டாடும்படியான எழுத்தாக்கங்களைத் தந்த அகிலன், 1922-ஆம் ஆண்டு ஜூன் 27 அன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பெருங்களூர் எனும் கிராமத்தில் ம.வைத்தியலிங்கம் -

அமிர்தம்மாளின் மகனாகப் பிறந்தார். இயற்பெயர் பி.வி.அகிலாண்டம் என்பதாகும். கிராம அதிகாரியாக வும், கலால் அதிகாரியாகவும் பணியாற்றிய வைத்தியலிங் கம், தனது மகனை இலண்டனுக்கு அனுப்பி, ஐ.சி.எஸ் படிக்க வைத்து, உயரதிகாரியாக்கிப் பார்க்க வேண்டு மென்று விரும்பினார்.

Advertisment

புதுக்கோட்டை மன்னரின் ஆளுகைக்குள் இருந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தில், ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்ட எழுச்சி பெரிய அளவில் நடைபெறாத காலமது. பாரதியாரின் விடுதலை முழக்கப் பாடல்களைப் பாடவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

அந்நாளில் பள்ளி மாணவராக இருந்த அகிலாண்டம், தனது தாயாரின் ஊரான கரூருக்கு அடிக்கடி செல்வதுண்டு. கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களில் விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளும், கட்டபொம்மன் தெருக்கூத்தும், தேச உணர்வூட்டும் நாடகங்களும் நடைபெறும். சிறுவனாக இருந்த அகிலாண்டத்தின் மனதில் இவை சுதந்திர உணர்வை மெல்ல அரும்பச் செய்தன.

1934-இல் கரூரில் கேட்ட மகாத்மா காந்தியடிகளின் உரை, 11 வயது சிறுவனான அகிலாண்டத்தை உத்வேகம் கொள்ள வைத்ததோடு, கரூர் அருகேயுள்ள திருஆநிலையூர் எனும் சிற்றூரில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பங்கேற்கவும் தூண்டியது. புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் சர்தார் வல்லபாய் படேலைச் சந்தித்ததும் அகிலாண்டத்தின் சுதந்திரப் போராட்ட உணர்வை மேலும் தூண்டின.

வறுமையை எழுதிய பிஞ்சுக் கைகள்

1939-ஆம் ஆண்டில் அகிலாண்டம் கல்லூரி படிக்கையில், ‘அவன் ஏழை’ எனும் சிறுகதையை எழுதி, கல்லூரி ஆண்டு மலரில் வெளியிடுமாறு தனது கல்லூரி தமிழாசிரியரிடம் கொடுத்தார். கதையின் மொழி நடையும் மையக் கருத்தும் தமிழாசிரியரை ஆச்சரியத்தில் ஆழ்த்த,“"நீயே இந்தக் கதையை சொந்தமா எழுதினாயா?"’ என்று ஐயத்தோடு கேட்டார். ஆசிரியரின் சந்தேகமான கேள்வியால் கோபமான அகிலாண்டம், “"நான் தான் எழுதினேன்.

சந்தேகமாக இருந்தால் திருப்பித் தாருங்கள்" என்று கேட்கவும், தனது தவறை உணர்ந்த ஆசிரியர், ‘மிடியால் மடிதல்’ என்று கதையின் தலைப்பை மட்டும் மாற்றி, மலரில் அக்கதையை இடம்பெறச் செய்தார்.

தாய், தந்தையற்ற தனது தம்பிக்கு அவனது மூத்த சகோதரி ஆண்டுதோறும் தீபாவளிக்குப் புதுத்துணி எடுத்து அனுப்பி வைக்கிறாள். அந்த ஆண்டும் அக்கா அனுப்பும் புத்தாடைக்காகச் சிறுவன் காத்திருக்கையில், அக்கா இறந்துபோன செய்தி வருகிறது. இதனால் மனம் உடைந்த சிறுவன் அங்கிருக்கும் ஏரியொன்றில் குதித்து, தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறான் என்பதே அகிலாண்டம் எழுதிய முதல் சிறுகதையின் மையக்கருவாக இருந்தது.

ஆரம்பக் கல்வியைச் சில காலம் பெருங்களூரிலும், பிறகு கரூரிலும் கற்ற அகிலாண்டத்திற்கு, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படிக்கிற காலத்தில், தனது ஆங்கில வகுப்பில் படித்த சார்லஸ் டிக்கன்ஸ், வாஷிங்டன் இர்வின், டி.ஹெச்.லாரன்ஸ், ஆலிவர் கோல்ட்ஸ்மித், வோர்ட்ஸ்வொர்த் ஆகியோரின் எழுத்துக்கள் மீது மிகுந்த தாக்கம் உண்டானது. பின்னர்,‘சக்தி வாலிபக் கழகம்’ எனும் அமைப்பைத் தொடங்கினார். புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்டவரை திரு.வி.க.வின் உரைநடை வெகுவாக ஈர்த்தது. பிறகு, பாரதியார் பாடல்களையும் படித்தார். பாரதி பாடல்களை மிகுந்த ஆர்வத்துடன் பாடத் தொடங்கினார்.

‘தன் எழுத்தால் என்னைச் சிந்திக்கத் தூண்டினார்;

என்னை உணர்ச்சி வயப்படச் செய்தார்; என் கற்பனையைத் தூண்டிவிட்டார் திரு.வி.க என (எழுத்தும் வாழ்க்கையும்) பின்னாளில் தனது கட்டுரை நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கோட்டை பகுதிகளில் வெளிவந்து கொண்டிருந்த இந்திரா, தாய்நாடு, அணிகலன், இன்பம் ஆகிய இதழ்களில் கதைகள் எழுதிக்கொண்டிருந்த அகிலாண்டம், தந்தையின் மறைவுக்குப் பிறகு, பொருளாதார தேவையின் பொருட்டு,‘இன்பம் இதழில் உதவியாசிரியராகப் பணியில் சேர்ந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக‘இன்பம் இதழ் இருக்கவே, அப்பணியை விட்டு விலகினார்.

ad

வேறு வேறு பணிகளுக்குச் செல்ல நேர்ந்தாலும், அவரது மனம் எழுதுவதிலேயே பெரும் நாட்டம் கொண்டிருந்தது. காந்தியச் சிந்தனைகளை மையமாகக்கொண்ட பல கதைகளை எழுதிய அகிலாண்டம், சில காலம் பெருங்களூரில் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பணியாற்றினார். பின்னர் கீரனூர், பொன்னமராவதி, புதுக்கோட்டையிலும் பல துறைகளின்கீழ் பணியாற்றி வந்தார்.

பயணத்தில் தொலைந்த இன்ப நினைவு

அகிலாண்டம் 1940-ல் எழுதிய ‘சாவிலே வாழ்வு’ எனும் சிறுகதை ‘இந்திரா’ இதழில் பரிசுப்பெற்று வெளியானது. 1942-ல் ‘கல்கி’ இதழில் எழுதிய ‘சரசியின் ஜாதகம்’ கதையும், ‘கலைமகள்’ இதழில் எழுதிய ‘காசு மரம்’ எனும் கதையும் அகிலாண்டத்திற்குப் பரவலான கவனிப்பையும் பாராட்டுக்களையும் பெற்றுத்தந்தன. அன்றிலிருந்தே அகிலன் எனும் புனைபெயரில் தொடர்ந்து எழுதத் தொடங்கினார்.

1944-ல் மாமன் மகள் பட்டம்மாளை அவருக்கு மணமுடித்து வைத்தனர். மத்திய அரசின் அஞ்சல் துறையில் பணி கிடைக்க, தென்காசி, விருதுநகரிலும் பணிசெய்து, பின்னர் ஆர்.எம்.எஸ் எனப்படும் இரயில்வண்டி அஞ்சலகப் பிரிவிலும் பணியாற்றினார்.

வாழ்க்கையை இயல்பாக எதிர்கொள்வதோடு, சக மனிதர்களை எப்போதும் கூர்ந்துநோக்கும் குணமுடைய அகிலன், தனது பெருங்களூர் கிராமத்தின் இயற்கை வளம் மற்றும் கலைகளை உள்ளடக்கி, விடுதலைப் போராட்டப் பின்னணியில்‘மங்கிய நிலவு’ எனும் தனது முதல் நாவலை எழுதினார்.

பின்னோக்கிய பழைய நினைவோட்டத்தில் எழுதப்பட்ட அதே நாவலை ஐந்தாண்டுகள் கழித்து, சற்றே திருத்தி ‘இன்ப நினைவு’ எனும் நாவலாக்கினார்.

1945-ல் ‘கலைமகள்’ இதழ் நாவல் போட்டி ஒன்றை நடத்தியது. அதில், அகிலன் எழுதிய ‘பெண்’ என்ற நாவல் முதல் பரிசினைப் பெற்று, 1946-இல் தொடராக வெளிவந்து, பின்னர் 1947-ல் நூலாகவும் வெளியானது.

‘பெண்’ நாவலில் வரும் சந்தானம்கதாபாத்திரம், அகிலனின் மனதினைப் பிரதிபலிக்கும் பாத்திரமென்பதை அகிலனே முன்மொழிந்துள்ளார்.“இந்தக் கதையில் என் தந்தை நான் ஐ.சி.எஸ். படிக்கவேண்டுமென்று கண்ட கனவும், அதைச் சிறு பிராயத்திலே எதிர்த்த என் மனப் போக்கும், சந்தானம் பாத்திரப் படைப்பின் வாயிலாக வெளியாகின்றன’ (பெண்- பக்கம்:5) என்று பதிவு செய்துள்ளார்.

இந்தியச் சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில் எழுதப்பட்ட அந்நாவலில், விடுதலைப் போராட்டப் பின்னணியும், பாத்திரங்களின் உரையாடல்களும் வாசிப்பவரைப் பெரிதும் ஈர்த்தன.

அகிலனின் முதல் சிறுகதை நூலாக‘சக்திவேல்’ 1946-ல் வெளியானது. இருபத்திரண்டு சிறுகதை களடங்கிய அந்நூலிலுள்ள பல கதைகள், பல்வேறு இதழ்களில் வெளியாகி, பாராட்டைப் பெற்ற கதைகளாக விளங்கின.

இரயில் வண்டியின் அஞ்சலகப் பணி அகிலனின் உடல் நலனைப் பாதித்தது. டைபாய்டு காய்ச்சல் கண்ட அகிலனை முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மனைவியை வாசலில் காவலுக்கு வைத்துவிட்டு,‘கலைமகள்’ இதழுக்காக ‘நெஞ்சின் அலைகள்’ எனும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப்படையை மையமாகக்கொண்ட தொடர்கதையொன்றினை எழுதினார் அகிலன். தொடர்ந்து எழுத வேண்டுமென்கிற ஆர்வமும், அகிலனின் கதைகளுக்குக் கிடைத்த நல்ல வரவேற்பும், அஞ்சலகப் பணியை உதறிவிட்டு, முழு நேர எழுத்தாளராக்கியது. எட்டாண்டு காலம் முழுநேர எழுத்தாளராக எழுதிக்கொண்டிருந்த அகிலன், 1966-ல் அகில இந்திய வானொலியில் பணியில் சேர்ந்தார்.

காந்தியச் சிந்தனையும் பசியின் குரலும் தனது சிறுவயதிலேயே விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை நேரில் கண்டு, அதன் வழியே சமூக நலனை முன்வைக்கும் காந்தியச் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்ட அகிலன், தனது கதைகளில் காந்தியச் சிந்தனைகளை வலியுறுத்தியதோடு, போலி காந்தியச் சிந்தனையாளர்களையும் கண்டிக்கத் தயங்கியதில்லை.

ஏழைப் பிச்சைக்காரனும் அவனது மனைவியும் ஒதுங்க இடமில்லாமல் நடைபாதை ஓரத்தில் உறவில் ஈடுபடுவதைப் பார்த்து, அவர்களை அடித்து விரட்டும் செல்வந்தரைப் பார்த்து, அந்தப் பிச்சைக்காரி ‘வெட்கம்’ சிறுகதையில் இப்படி கேட்கிறார்; “உனக்கு வெக்கமாயிருந்தா நீ ஒரு குடிசை கட்டிக் குடுக்கிறது தானே? நீ தான் உலகத்துக்கே வீடு கட்டித் தர்றீயே… எங்களுக்கு ஒரு வேளைச் சோறு போடக்கூட நாதியில்லே…” (வழி பிறந்தது - பக்கம்: 39) என்று கோபாவேசமாகக் கேட்கிறார்.

ss

பசி, எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமானது;

எல்லா ஜீவன்களையும் பசி ஒரே புள்ளியில் இணைக்கிறது. அகிலனின் கதைகளில் வரும் எளிய மனிதர்கள் அனைவருமே அன்பாலும் பசியாலுமே பின்னப்பட்டவர்கள். அவர்களுக்கு வாழ்க்கையைப் பொய்யாக வாழத் தெரியாது. கண்முன் விரியும் நிஜம், அவர்களைச் சுடும்போது பொங்கியெழுகிறார் கள்.‘தெய்வத்தின் குரல்’ சிறுகதையில் ஒலிக்கும் பசியின் குரல், நம் காதுகளில் இப்போதும் எதிரொலிக் கவே செய்கிறது.

“இந்த வள்ளல்களோட அறிவுக்கும் திறமைக் கும் சக்திக்கும் இவங்களுக்கு மனச்சாட்சிங்கிற ஒண்ணு மட்டும் இருந்திட்டா இத்தனை பேர் ஏழை, எளியவங்க இந்தப் பக்கத்திலே இருந்திருக்க மாட்டாங்க. இவங்க நினைச்சிருந்தா, இங்கே அத்தனை பேரையும் எப்பவுமே பட்டினியில்லாம காப்பாத்தி யிருக்கலாமே!” (சகோதரர் அன்றோ - பக்கம்: 98, 99)

காசு மரத்தில் முளைத்த அகிலன்

குழந்தைகளின் மனவுலகை வெகுநுட்பமாகப் பார்த்த சிறுகதையான அகிலனின் காசு மரம், வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கதையாகும். அகிலன் என்கிற சிறந்த சிறுகதையாளரைப் பலரும் அறிய அடையாளங்காட்டிய கதையும் இதுதான்.

நாகம்மாள் - சுப்பையாவின் மகள் காவேரி. குடும்ப வறுமையைப் போக்க வெளியூருக்கு வேலை தேடிப்போகிறார் சுப்பையா. கணக்குப்பிள்ளை வீட்டில் வேலை செய்து, பசியாற்றி வருகிறாள்

அம்மா நாகம்மாள். பள்ளிக்கூடம் செல்லும் காவேரிக்கு தினமும் காலணா கொடுப்பாள் அம்மா.

கணக்குப்பிள்ளை வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்ல, அம்மாவுக்கு வேலையில்லாமல் போகிறது.

அம்மா கொடுத்துவந்த காலணா, வேலையில்லாததால் ஒரு பைசாவாகக் குறைகிறது.

அம்மா தரும் ஒரு பைசாவைத் தினமும் மண் கலயத்தில் சேர்த்து வருகிறாள் காவேரி. வேலையில்லாத அம்மாவிடம் காசு கேட்டு காவேரி நச்சரிக்க,“கேக்கிறப்ப எல்லாம் காசு கொடுக்க இங்கென்ன காசு மரமா மொளைச்சிருக்கு..!” என்று அம்மா கேட்கிறாள்.

சிறுமி காவேரியின் சிந்தனை வேறோன்றை யோசிக்கிறது. காசு மரம் முளைத்தால் நம் குடும்பத்தின் கஷ்டம் தீர்ந்துவிடுமல்லவா? வீட்டுப் பக்கத்தில் காசினைப் புதைத்து வைத்து, தினமும் நீரூற்றி வருகிறாள்.

ம்ஹூம் காசு மரம் முளைக்கவேயில்லை.

ஒரு நாள் பள்ளிக்கூடத்தில் சக குழந்தைகள் பேசுவது, காவேரியின் காதில் விழுகிறது. ‘

அய்யய்யோ… ஆரஞ்சுப் பழத்தை முழுங்கிட்டா. இனி, இவ வயித்திலே ஆரஞ்சு மரம் மொளைக்கப்போகுது!’

காவேரியின் மனதில் புதிய கற்பனை முளைக்கிறது. ‘நாம காசை முழுங்கிட்டா, நம்ம வயித்துள்ளிருந்து காசு மரம் முளைக்குமே! காசொன்றை முழுங்கி, தண்ணீர் குடிக்கிறாள். காசு மரம் முளைத்தபாடில்லை. அடுத்த நாள், மண் கலயத்தில் சேர்த்து வைத்திருந்த மொத்த காசுகளையும் முழுங்கிவிடுகிறாள். தலை சுற்றல் ஏற்பட்டு, வாந்தி வருகிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் பயனின்றி இறந்துபோகிறாள். இறக் கும் முன்பாக தன் தாயிடம் காவேரி சொல்கிறாள்; “

கவலைப்படாதம்மா. நான் செத்தாலும் என் வயித்தில காசு மரம் மொளைக்கும். உன்னோட கஷ்டமெல்லாம் தீரும்!”

இக்கதையை முடிக்கையில் நம் மனசையும் கண்களையும் ஒருசேர ஈரமாக்கி விடுவதே அகிலனின் எழுத்தின் சிறப்பாகும். தங்க நகரம், சிவப்பு விளக்கு, நல்ல பையன் ஆகிய சிறுவர் நூல்களைப் படைத்திட்ட அகிலன்,’கண்ணான கண்ணன்’ (1958) எனும் தலைப்பில்‘மலர் மாமா எனும் புனைபெயரில் எழுதிய நூலுக்காகத் தமிழக அரசின் பரிசினைப் பெற்றார்.

தமிழ் நாவலின் தனித்துவமான குரல்

நாடு விடுதலை பெற்றும் முன்னேற முடியாமல் பெருந்தடையாக இருக்கும் சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கிட வேண்டுமென்பதையும், காந்தியப் பொருளாதாரத்தை நாடு கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி புதுவெள்ளம் எனும் நாவலை எழுதினார்.

மனிதர்களுக்குள் ஊடாடும் அறிவு, உணர்வு எனும் இரு வேறு மனப்போராட்டத்தை முன்வைத்து ‘பாவை விளக்கு’ (1957) எனும் நாவலையும், மனித வாழ்வின் அடிப்படை அன்பாலானது. அதனைப் புரிந்துகொண்டவர்களுக்கு துன்பமோ, மரணமோ இல்லை என்பதனைச் சொல்லும் ‘வாழ்வு எங்கே?’ நாவலும், மாமன்னன் இராஜேந்திர சோழன் ஆட்சி புரிந்த காலத்தைப் பேசும் வேங்கையின் மைந்தன்’ (1960) வரலாற்று நாவலும், விஜயநகர பேரரசு மதுரையில் நாயக்கர் ஆட்சியை நிறுவிய காலத்தைப் பதிவுசெய்த‘வெற்றித் திருநகர் நாவலும் என 20 நாவல்களை எழுதி, தமிழ் நாவலுலகிலும் தனது தனித்துவமிக்க எழுத்தினால் உயர்ந்து நின்றார் அகிலன்.

திரையிலும் ஒளிர்ந்த வெற்றிக் கதைகள்

1957-ல் அகிலன் ‘கல்கியில் எழுதிய ‘பாவை விளக்கு’ தொடர்கதை, சிவாஜி கணேசன், பண்டரிபாய் நடிப்பில் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில், கே.சோமு இயக்கத்தில் திரைப்படமாக 1960-இல் வெளிவந்து, ரசிகர்களின் வரவேற்பால் வெற்றி பெற்றது.

அதேபோல், ‘கலைமகள்’ இதழில் தொடர்கதையாக வந்த வாழ்வு எங்கே எனும் தொடர்கதை, 1963-ல்‘குலமகள் ராதை’ எனும் திரைப்படமாக வெளிவந்து வெற்றிப் படமாகப் பேசப்பட்டது.

அகிலன் எழுதிய பாண்டிய பேரரசின் பிற்கால எழுச்சியினைக் கதைக்களனாகக் கொண்ட‘கயல்விழி’ எனும் வரலாற்று நாவல் 1965-ல் வெளியாகி, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசினைப் பெற்றது. இதனைப் படமாக்கும் முயற்சியில் நடிகர் எம்.ஜி.ஆர்., சென்னை லாயிட்ஸ் சாலையிலிருந்த அகிலனின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று, அனுமதி பெற்று மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் எனும் பெயரில் தானே இயக்கி, 1978-ல் இப்படம் வெளிவந்து, வெற்றிகரமாக ஓடியது.

தமிழுக்கு கிடைத்த முதல் ஞானபீட விருது

தமிழ்ச் சமூகத்தில் பெண்ணுக்கு மட்டுமே கற்பு நெறியையும் ஒழுக்கத்தையும் விதித்துவிட்டு, ஆண் மகன் தீய குணங்களுடன் சமுதாயத்தையும் குடும்பத்தையும் சீரழிவு பாதைக்கு அழைத்துச்செல்லும் அவலத்தைத் தோலுரித்து காட்டுவதோடு, பெண்ணுரிமைச் சிந்தனையை மாறுபட்ட புதிய கோணத்தில் பேசிய ‘சித்திரப்பாவை’ (1970) நாவல், இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘ஞானபீட விருதினை’ 1975-இல் பெற்ற முதல் நாவல் எனும் பெருமையைத் தமிழுக்குப் பெற்று தந்தது.

1960-இல் அகிலன் எழுதிய‘வேங்கையின்மைந்தன்’ நாவலுக்கு. 1963-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் சாகித்திய அகாதெமி’விருது கிடைத்தது. மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் பணியாற்றும் மக்களின் நெருக்கடியான வாழ்க்கையை மையமாக வைத்து‘பால்மரக்காட்டினிலே’ எனும் நாவலையும் எழுதினார்.

பொதுவாகவே, இதழ்களில் தொடராக எழுதிய பிறகே அவை நூல் வடிவம் பெறுவது வழக்கம். ஆனால், அகிலனின் விஷயத்தில் இது தலைகீழாக நடந்தது. ‘தங்க நகரம்’ எனும் நாவலை எழுதி, அதை நூலாக வெளியிட்டார் அகிலன். அச்சமயத்தில் புதுக்கோட்டைக்கு வந்திருந்த ‘கல்கி’ சதாசிவத்திற்கு அந்த நாவல் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.“இது அகிலனின் நாவலா..? எந்த இதழில் வெளியானது?’ என்று ‘கல்கி’ சதாசிவம் கேட்க, ’எந்த இதழிலும் இது வெளிவரவில்லை. நேரடியாகப் புத்தகமாக வெளிவந்துள்ளது என்றதும், அகிலன் எழுத்தை மிகவும் நேசிக்கும்‘கல்கி’ சதாசிவம், நூலாக வந்த அந்த நாவலை ‘கல்கி’ இதழில் தொடராகவும் வெளியிட்டார்.

மாத நாவல்களில் முன்னோடி

அகிலனின் எழுத்தை விரும்பிப் படிப்பவர்களில் ஒருவராக விளங்கிய ‘தினத்தந்தி’ ஆசிரியரான சி.பா.ஆதித்தனாரிடம் ஒருமுறை, “பழைய நாவல்களைச் சுருக்கி, ஒரு ரூபாய் விலையில் போடுங்கள்’ என்கிற யோசனையொன்றை முன்வைத்தார் அகிலன்.“நல்ல யோசனை என்று வழிமொழிந்த சி.பா.ஆதித்தனார்,

அகிலனையே எழுத வைத்து முதல் நாவலை வெளியிட்டார். இதுவே தமிழில் மாத நாவல்கள் வெளிவர முன்னோடிச் செயலாக அமைந்தது.

ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று, பல்வேறு கருத்தரங்குகளிலும் இலக்கிய விழாக்களிலும் பங்கேற்று உரையாற்றினார்.

அகிலனின் படைப்புகள், இந்திய மொழிகள் மட்டுமல்லாது ஆங்கிலம், ஜெர்மனி, சீனம், பிரெஞ்ச் ஆகிய உலக மொழிகளிலும் மொழிபெயர்ப்பாயின.

இதழார்வமும் திரைப்பட நாட்டமும்

பத்திரிகை ஒன்றினைத் தொடங்கும் ஆர்வம் அகிலனுக்கு உண்டானது. புதுக்கோட்டையில் பத்திரிகைகளை அச்சிட்டு வந்த கண்ணபிரான் அச்சகத்தின் உரிமையாளரான எஸ்.பரசுராமிடம் தனது விருப்பத்தைச் சொல்ல, “எழுத்தாளன் பத்திரிகை ஆரம்பித்தால், பத்திரிகை நடத்த கட்டுரைகள், சிறுகதைகள், விளம்பரங்களைப் பெற நடையோ நடையென்று நடக்க வேண்டும். நீங்கள் பத்திரிகை அதிபர் ஆகலாம். ஆனால் உங்களுக்குள் இருக்கும் எழுத்தாளன் வெளியே வர மாட்டான் என்றவர் சொன்னதும், தனது பத்திரிகை தொடங்கும் முடிவை கைவிட்டார் அகிலன்.

திரைத்துறையில் ஈடுபாடும் எண்ணத்துடன் சென்னைக்கு வந்த அகிலனிடம்,‘கலைமகள் ஆசிரியரான கி.வா.ஜ.,“"திரைத்துறை எப்போதும் பகட்டானது. படைப்பாளி அதனுள்ளே போனால் காணாமல் போய்விடுவான்"’ என்றதுமே, அகிலன் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.

‘உண்மையின் அழகை எளிய முறையில் பேச வேண்டும்’ எனும் அடிப்படை கலைக்கொள்கையுடன் எழுதிய எழுத்தாளர் அகிலன், “மக்களுக்கு எது பிடிக்கிறதோ அதை எழுதாமல், எது பிடிக்க வேண்டுமோ அதை எழுதுவது தான் எழுத்து’ எனும் உயரிய கொள்கையிலிருந்து சிறிதும் நழுவாமல், தன் கடைசி படைப்பு வரை உறுதியாக இருந்தவர். 1988-ஆம் ஆண்டில் சனவரி 31 அன்று தனது 65 அகவையில் மறைந்த அகிலனின் எழுத்துகள் என்றென் றும் தமிழ் வாசகர்களின் நினைவில் நிற்கும்.

17 சிறுகதை நூல்கள், 20 நாவல்கள், 4 சிறுவர் நூல்கள், 8 கட்டுரை நூல்கள், 3 மொழிபெயர்ப்பு நூல்கள், ஒரு நாடக நூல் என பன்முக திறனுடன் எழுதிய எழுத்துச் சிகரம் அகிலன் என்பதை வாசக உலகம் நன்கறியும்.

ஒரு நூற்றாண்டின் தமிழ்ச் சிறுகதை முகமாக தனது நூற்றாண்டிலும் நினைவு கூறப் படும் அகிலனுக்கு, புதுக்கோட்டையில்நினைவு மண்டபம்அமைத்திடவேண்டும், பெருங்களூரில் அவர் பிறந்த தெருவுக்கு அகிலன் வீதி என்று பெயர்சூட்டவேண்டுமென்றும் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களைக் கொண்டாடும் இந்த அரசு. இதற்கான அறிவிப்பையும் வெளியிடுமென்பதே அகிலனின் வாசகர்களான அனைவரின் விருப்பமும் எதிர்பார்ப்புமாகும்.

(புதுக்கோட்டைவாசகர்பேரவைசார்பில்கடந்த செப்டம்பர்.29 அன்றுபுதுக்கோட்டைஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அகிலன் நூற்றாண்டு விழாவில் ஆற்றிய சிறப்புரையின் எழுத்து வடிவம்)