கலைகளில் ஓவியம் மட்டுந்தான் எல்லாத் துறைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது. ஏனெனில் ஓவியம்தான் மொழிக்கே மூலமாக இருந்துள்ளது. தொடக்ககால மனிதன் சுவரோவியங்கள் மூலமாகவே பிறருடன் தொடர்புகொண்டான் என்பதிலிருந்தே ஓவியத்தின் ஆளுமையை நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
ரசித்து...ரசித்து.... ரசித்ததை தன் தூரிகையில் அல்லது வேறு பல உபகரணங்கள் மூலமாக தீட்டி காண்போரை வியப்பில் ஆழ்த்துவதே ஓவியம்.
திரைத்துறையில் ஓவியத்தின் பங்கு அளப்பரியது. தொடக்கத்தில் வரும் டைட்டிலில் இருந்து, படம் நிறைவு பெறும்வரை ஓவியக் கலைஞர்களின் பணி தேவையாய் இருக்கிறது.
திரைத்துறையில் பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களில் உதவி கலை இயக்குநராக பணியாற்றி வருகிற சுரேன்தான் நம் கட்டுரையின் நாயகர். இவர், 2.0, கொலைகாரன், ஜெகமே தந்திரம், நெஞ்சுக்கு நீதி, லேபில் ( வெப் சீரிஸ்) சுழல்-2 (வெப் சீரிஸ்) உள்ளிட்ட திரைச்சித்திரங்களில் பணியாற்றி இருக்கிறார்.
வாழ்க்கையில் தாய் சுசிலா ஊக்குவிக்க, தந்தை செல்வராஜ், தன் மகன் விரும்பியவாறு சுரேனை, கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் சேரச் செய்து மகிழ்வித்திருக்கிறார். இவையே பின்னர் சுரேனை, திரைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் கலை இயக்குநராக வலம் வரச் செய்திருக்கிறது.
ஏழு வயது இருக்கும்போது இவர் வரைந்த ஓவியத்தை இவரின் அம்மா அழகாக ஃபிரேம் போட்டு சுவரில் ஒட்டி அழகு பார்த்திருக்கிறார். அது சிறுவனான சுரேனுக்கு நம்பிக்கை டானிக்காக அமைந்திருக்கிறது.
'தம்பி, முடியாதது என்று எதுவும் இல்லை...உன்னோட முயற்சியை மட்டும் விட்றாத...பெரிய ஆளா வருவே... ஒருநாள் எல்லாரும் உன்னைப் பாராட்டுவாங்க..." என்று அம்மா உச்சி முகர்ந்திருக்கிறார். ஆனால் அந்த தாயின் பாராட்டும் ஊக்குவிப்பும் நீடிக்கவில்லை. அந்த சிறுவயதிலேயே அம்மாவை இழந்துவிட்டார் சுரேந்திரன்.
அம்மா உயிருடன் இல்லை என்றாலும் அவரின் உயிருள்ள வார்த்தைகளே அவரது "தூரிகைக் கரங்கள்" உருவாகுவதற்கு அடிப்படை யாக இருந்திருக்கிறது.
கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் நீர் வண்ண ஓவியக் கலையில் பட்டம் பெற்றவர்.
படிக்க, தன் செலவுக்கென்று தானே வருமானம் ஈட்ட தஞ்சை பூங்கா உதவியிருக்கிறது.
வாரம் ஒரு நாள் ஞாயிறு தஞ்சை சிவகங்கை பூங்காவில் அங்கு வருபவர்களை வரைந்து கொடுத்து, அவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து ஆரம்பத்தில் அவரது நாட்கள் நகர்ந்திருக்கின்றன.
இப்படி படித்துக்கொண்டிருக்கும்போதும் படித்து முடித்த பிறகும் தேடலை தொடர்ந்து கொண்டிருந்த சுரேந்தருக்கு திரைப்படத்தில் உதவி கலை இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
அங்கும் சந்திக்க வேண்டிய அத்தனை புறக் கணிப்புகளையும் சந்தித்த பிறகுதான் அவருக்கான ஒரு இருக்கை கிடைத்தது.
இந்த அனுபவங்களுடன் "தூரிகைக் கரங்கள்" என்ற அமைப்பைத் தொடங்கி தமிழ்நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து, ஓவியத்தில் பெரிய கனவுகளோடும் ஆர்வத்தோடும் இருக்கின்ற மாணவ மாணவியர்களைக் கண்டறிந்து இலவசமாக ஓவியப் பயிற்சி அளிக்கும் உயரிய இலக்கை நோக்கி பயணித்து வருகிறார்.
இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் பள்ளி கல்லூரிகளில் நடக்கும் ஓவியப் போட்டிகளில் பரிசு பெற்று வருகிறார்கள். சிலர் தனியார் நிறுவனங்களில் கனிணித் துறையில் வடிவமைப்பாளர்களாக பணியாற்றுவதே இவரின் வெற்றி.
சுரேன் தாயுள்ளத்தோடு ஓவியம் சொல்லிக் கொடுப்பதை பாராட்டியே ஆகவேண்டும்.
ஒருவரின் வெற்றியென்பது தான் மட்டும் அந்த துறையில் வெற்றிபெறுவதல்ல யாரென்றே தெரியாதவர்களுக்கும் கற்பித்து அவர்களின் வெற்றியில் அகமகிழ்வதே உண்மையான வெற்றி.
சுரேனின் முயற்சியும் அவர் வழங்கும் இலவசப் பயிற்சியும் தொடரவேண்டும் என்பதே பலரது வாழ்த்தாகவும் இருக்கிறது.