சுபைரின் புத்தகக் கடையில் பணியாற்றும் பையன் காலையில் வந்து என்னிடம் கூறினான்:

"சீக்கிரம் கொஞ்சம் வரச் சொன்னாரு...''

எனக்கு ஆச்சரியம் உண்டானது. பொழுது அப்போதுதான் புலர்ந்துகொண்டிருந்தது. இந்த அதிகாலை வேளையில் சுபைர் எதற்கு கடைக்கு வரவேண்டும்? பிறகு... என்னை எதற்கு அவசரமாக அங்கு அழைக்க வேண்டும்?

க்ளப்பின் ஆண்டு விழாவைப் பற்றி ஏதாவது கலந்து பேசுவதற்காக இருக்கலாமோ என்று பார்த்தால், அதற்கான காலம் கடந்துவிட்டதே! புதிய வருடத்தில் நடத்தக்கூடிய நாடகத்தைப் பற்றி பேசுவதற்காக இருக்குமோ என்று பார்த்தால், அதற்கு இன்னும் காலம் இருக்கிறதே! இப்போது... இது எதுவுமே இருக்காது. விருது வாங்கிய ஏதாவதொரு இலக்கியவாதிக்கு வரவேற்பு அளிக்கப் போகும் விஷயத்தைப் பற்றி விவாதிப்பதற்காக இருக்குமோ?

Advertisment

ஆனால், அப்படி ஏதாவது இருந்திருந்தால், சுபைர் நேற்றே அதைக் கூறியிருக்கலாமே! இரவில் நீண்டநேரம் ஆகும்வரை ப்ரதீபனும் பாஸ்கரன் மாஸ்டரும் கோபியும் வாசுதேவனும் நானும் கடையில் இருந்தோமே!

அப்படியென்றால்... விஷயம் அதுவாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. பையனிடம் கேட்டேன். ஆனால், அவனுக்கு எதுவுமே தெரியவில்லை.

தொடர்ந்து நான் அவனிடம் கூறினேன்:

Advertisment

"நான் குளிச்சிட்டு வர்றேன். எதுவா இருந்தாலும், நீ சுபைரிடம் எனக்கு கொஞ்சம் ஃபோன் பண்ணச் சொல்லு.''

அப்போது பையன் கூறினான்: ‌

"அங்க ஃபோன் இல்லை.''

உண்மையாகவே நான் அப்போது அதிர்ச்சியடைந்து விட்டேன். நேற்று இரவுவரை அங்கு ஃபோன் இருந்ததே! ஒன்றல்ல... இரண்டு ஃபோன்கள்! எனினும், இப்போது.... கேட்டதற்கு... பையன் கூறினான்:

"ஃபோனை எலி கொண்டுபோயிருச்சு...''

நான் மீண்டும் அதிர்ச்சியடைந்தேன். ஃபோனை எலி கொண்டுபோய்விட்டதா? எலிகள் இரும்புத் துண்டுகளைக் கடித்துத் தின்ற கதையை "பஞ்சதந்திர'த்தில் வாசித்திருக்கிறேன். ஆனால், அவையெல்லாம் அந்தக் காலத்தில் அல்லவா? இப்போது அவை போன்ற எலிகள் இருக்குமா? டெலிஃபோனை தின்னக்கூடிய எலிகள்!

கடந்த சில நாட்களாகவே கடையில் எலியின் தொந்தரவு மிகவும் அதிகமாக இருக்கிறது என்று சுபைர் கூறியதை நான் அப்போது நினைத்துப் பார்த்தேன். தொடர்ந்து அதிகமாக எதையும் நினைத்துக்கொண்டிருக்காமல் நான் பையனிடம் கூறினேன்:

"நீ போ... நான் இப்பவே வர்றேன்.'' ‌

பையன் சென்றவுடன் நான் வேகமாக ஒரு குளியலைப் போட்டுவிட்டு "நாஸ்தா' சாப்பிடுவதற்குக்கூட நிற்காமல் கடையை நோக்கி நடந்தேன்.

பீப்பில்ஸ் புக்ஸ் அண்ட் பீரியாடிக்கல்ஸ்' கடையின் பெயர் இதுவாக இருந்தாலும், இங்குள்ள ஆட்கள் குறிப்பிடுவது "சுபைரின் கடை' அல்லது "சுபைரின் புக் ஷாப்' என்று தான்.

ஆங்கிலத்தில் இருக்கக்கூடிய பெயர், போர்டில் மட்டும்தான். இந்த கடையில் கிடைக்காத புத்தகங்கள் எதுவுமே இல்லை. இலக்கிய புத்தகங்களும் பள்ளிக்கூட குழந்தைகளுக்கான பாட புத்தகங்களும் உட்பட. ஏதாவது புத்தகம் இல்லாவிட்டால், தேவைப்படும் நபர்களுக்கு சுபைர் அதை வரவழைத்துக் கொடுக்கவும் செய்வான். அந்தவகையில் ஒரு காசுகூட அதிகமாக வாங்குவதும் இல்லை.

புத்தகங்கள் அல்லாமல் பத்திரிகை, மாத இதழ்கள் ஆகியவற்றையும் மற்ற பிரசுரங்களையும் சுபைர் நல்ல முறையில் விற்றுக்கொண்டிருந்தான். ஆட்களின் "ருசி' சுபைருக்கு நன்கு தெரியும்.

இந்த கடையை ஆரம்பித்தவர் சுபைரின் வாப்பா. (தந்தை)...

ஆனால், அது ஒரு வியாபாரம் நடக்கும் இடமாக இருக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தின் பகுதியாக இருந்தது. போராட்டத்தை ஊக்குவித்துக்கொண்டிருந்த ஒரு பத்திரிகையின் கட்டுகள் கோழிக்கோடு நகரத்திலிருந்து பொழுது புலரும் வேளையில் பேருந்தில் வரும். அதை எடுத்து வைப்பதற்கும் தலைவர்கள் எழுதிய புத்தகங்களையும் துண்டுப் பிரசுரங்களையும் பாதுகாத்து வைப்பதற்கும் சிறிய ஒரு அறைகொண்ட கடையை உண்டாக்கினார்.

அதுதான் பின்னர் இப்போதைய 'பீப்பில்ஸ் புக்ஸ் அண்ட் பீரியாடிக்கல்ஸ்'ஆக வளர்ந்திருக்கிறது. வாப்பாவிற்குச் சொந்தமான இடம் தேவைப்படும் அளவிற்கு இருந்ததால், கட்டடத்தைப் புதுப்பித்துப் பெரிதாக்க வேண்டிய சுமை மட்டுமே சுபைருக்கு இருந்தது. அதை அவன் அருமையாக நிறைவேற்றவும் செய்தான்.

மக்கள் சேவை என்ற விஷயத்தில் சுபைரைத் தோற்கடிப்பதற்கு இங்கு யாருமே இல்லை. யாரிடம் கேட்டாலும்- இதில் ஜாதியோ மதமோ அரசியலோ... எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை- இப்படித்தான் கூறுவார்கள். அனைத்து நல்ல காரியங்களுக்கும் முன்னால் சுபைர் இருப்பான். உடலாலும் காசாலும் அனைவருக்கும் உதவுவான்.

இப்படியெல்லாம் செய்யும்போதும், வியாபாரத்தில் கவனம் செலுத்தாமலும் இல்லை. அதனால்தான் புத்தகக் கடை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருந்தது.

எல்லா சாயங்கால வேளைகளிலும் நாங்கள்.... நண்பர்கள் புத்தகக் கடைக்குப் பின்னாலிருந்த அறையில் சந்திப்போம். பிறகு... உலகத்தின் முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசுவோம். கலை, இலக்கியம், இசை, அரசியல்...

அனைத்தையும் பற்றி. ஆனால், எந்தச் சமயத்திலும் நாங்கள் எல்லையைமீறி விளையாடமாட்டோம். சுபைர் எங்களுக்கு ஹோட்டலிலி-ருந்து தேநீரையும் வடையையும் வரவழைத்துத் தருவான். விசேஷ நாட்களில் வீட்டிலிருந்தும் வரவழைப்பான். பிறகு... புதிதாக நடத்த இருக்கும் நாடகத்தைப் பற்றி... இல்லாவிட்டால்...

தொடக்க விழாவிற்கு அழைக்கப்படவேண்டிய இலக்கியவாதியைப் பற்றி... அதுவும் இல்லாவிட்டால்...

நேற்றும் அப்படித்தானே இருந்தது. எனினும், இப்போது... பொழுது புலர்ந்தவுடன் பையன் வந்து....

ss

நான் வேகமாக நடந்து கடையை அடைந்தபோது, ப்ரதீபனும் பாஸ்கரன் மாஸ்டரும் கோபியும் வாசுதேவனும் அங்கு வந்துவிட்டிருந் தனர். அனைவரின் முகத்திலும்...

சுபைரையும் சேர்த்து... மிகுந்த பதைபதைப்பை நான் பார்த்தேன்.

தரையில் சில சுண்டெலிகள் இறந்து கிடந்தன. பிறகு....

மரண பயத்தில் அவை கடித்து சிதைத்த இரண்டு டெலிஃபோன்களும்... அது ஒரு தாங்கிக் கொள்ளமுடியாத காட்சியாக இருந்தது.

சுபைர் கூறினான்:

"சமீப நாட்கள்லதான் எலிகளின் தொந்தரவு இந்த அளவுக்கு அதிகமானது. விவசாய அலுவலத்திலயிருந்து எலி விஷத்தை வாங்கி உணவுல கலந்து நான் வைத்தேன். ஆனா, இங்குள்ள எலிங்க இன்றுவரை இந்த உணவுப் பொருட்களின் அருகில்கூட வரலை.

அவை பொறியிலும் விழலை. எப்போதும் புத்திசாலித்தனமா விலகிப் போய்க்கிட்டிருந்தன. நேத்து கோழிக்கோடு நகரத்திலயிருந்து மிகுந்த சக்தி படைச்ச ஒரு விஷத்தை நான் வாங்கிட்டு வந்தேன். அதை கருவாட்டில கலந்து அங்குமிங்குமா வச்சிட்டு வீட்டிற்குப் போய்ட்டேன். எத்தனை எலிகள் இறந்திருக்க லாம்னு தெரிஞ்சுக்கற ஆர்வத்தோட பொழுது புலரும் வேளையிலேயே இங்க வந்துட்டேன். கடையைத் திறந்தவுடனே இறந்துகிடக்குற எலிகளைப் பார்த்துட்டேன். அவை நாசமாக்கிய ஃபோன்களையும் பார்த்தேன். ஃபோன் போனா போகட்டும். எலிங்க இறந்துவிட்டன என்ற சந்தோஷம் இருந்தது.

ஆனா பிறகு அறை முழுவதையும் பார்த்தப்போ ஆச்சரியம் உண்டானது. நேத்து இரவில வைத்த உணவுப் பொருட்கள் முழுவதும் அந்தந்த இடங்கள்லயே இருந்தன.

ஆச்சரியமான விஷயம்! ஒரு எலிகூட அதனருகில் போகவே இல்லை. அதேநேரத்தில அவை இறக்கவும் செய்திருக்கின்றன! இது எப்படி நடந்தது?''

எங்கள் யாரிடமும் பதில் இல்லை. அப்போது வாசுதேவன் கூறினான்:

"அதிக சக்தி படைத்த விஷமில்லியா? அது காரணமா இருக்கலாம்!''

அப்போது பாஸ்கரன் மாஸ்டர் கோபத்துடன் கூறினார்:

"முட்டாள்தனமா பேசாதே. மருந்துக்கு அதிக சக்தி இருக்கிறது என்பதற்காக, அதைத் தொடாமலே எலி இறந்துடுமா?''

தொடர்ந்து பாஸ்கரன் மாஸ்டர் ஒரு ஷெர்லாக் ஹோம்ஸின் ஆராய்ச்சியுடன் அறை முழுவதையும் சோதித்துப் பார்க்க ஆரம்பித்தார். இறுதியில் அறையின் ஒரு மூலையிலுள்ள அலமாரிக்குப் பின்னாலிருந்து மாஸ்டர் அழைத்துக் கூறினார்:

"இங்கு வாங்க...''

நாங்கள் எல்லோரும் ஆர்வத்துடன் அங்கு ஓடிச் சென்றபோது, மாஸ்டர் காட்டினார்:

இறந்து கிடக்கும் மூன்று எலிகள்! அவற்றுடன் அவை முக்கால் பகுதி கடித்து நாசமாக்கிய ஒரு புத்தகமும் தொடர்ந்து மாஸ்டர் மிகவும் கவனமாக அந்த புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டு கூறினார்:

"இவன்தான் வில்லன்!''

=

புத்தகத்தின் பெரும்பாலான பகுதியும் நாசமாகி விட்டிருந்தது என்று கூறினேன் அல்லவா? படைப்பாளரின் பெயர் இருக்கக்கூடிய இடத்தில் ' டாக்டர்....' என்று இருப்பதைப் பார்த்தேன்.

ஆனால், பின்னாலிருந்த பகுதி இல்லாமற் போயிருந்தது. அதேநேரத்தில் புத்தகத்தின் பெயரை மிகவும் கஷ்டப்பட்டு என்றாலும், எங்களால் வாசிக்க முடிந்தது. அது இப்படி இருந்தது.

‌‌"பின்... நவீன... த்திற்கான... வழிகள்.''

பிறகு.... மாஸ்டர் சுபைரிடம் கேட்டார்:

"இந்த புத்தகம்..?''

சுபைர் கூறினான்:

"நேற்று கோழிக்கோடு நகரத்திலிருந்து புறப்படுறப்போ தேத்திப்பலத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் தந்தார்....''

சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கி நின்றிருந்துவிட்டு, பெரிய ஒரு உண்மையைக் கண்டுபிடித்து விட்டதைப்போல பாஸ்கரன் மாஸ்டர் கூறினார்:

"எனக்குத் தோணுறது... அங்க ஏராளமான டாக்டர்கள் இருக்கிறாரங்க. யூ.ஜி.ஸி. சம்பளம் பெறுபவங்க.

அவர்கள்ல யாராவது எழுதியதா இருக்கும். இவங்க எழுதுறது எதுவுமே மனிதர்களுக்குப் புரியாது. புரிந்துகொள்ள முயற்சித்தா.. எலிகள் என்றல்ல... மனிதனே செத்துப் போவான்... அந்த அளவுக்கு கடுமை! இவர்களோட ஒரு பின்நவீனத்துவம்!''

முற்போக்கான சிந்தனைகளுடன் சிறிதும் உடன்பட்டுப் போக இயலாத ஒரு மனிதர் பாஸ்கரன் மாஸ்டர் என்ற விஷயம்தான் எங்கள் அனைவருக்கும் தெரியுமே! அதனால், அவருடைய கருத்துக்கு நாங்கள் யாரும் பதில் கூறவேயில்லை.