ட்டு வருடங்களுக்குப்பிறகு அவர்கள் மீண்டும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள். காதலிப்பவர்கள் என்ற போர்வையில் அல்ல... ஆனால், ஒரு காலத்தில் காதலித்தவர்கள் என்ற போர்வையில்... அதனால், சில நிமிடங்களுக்கு எதுவுமே கூறாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருப்போம் என்ற விருப்பம் இருந்தாலும், அவர்கள் அதற்காக முயற்சிக்காமல், அந்த மௌனத்தை சாதாரண வார்த்தைகளைக்கொண்டு கலைத்தார்கள்.

""நான் வர்றதுக்கு தாமதமாயிடுச்சோ?''

""இல்ல... நான் இப்போதான் வந்தேன்.'' அவள் கூறினாள். அரைமணி நேரமோ, அதற்கு அதிகமாகவோ அந்த மைதானத் தில் அங்குமிங்குமாக நடந்து நேரத்தைக் கடத்தியதை அவனிடம் கூறுவதற்கு அவள் விரும்பவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தான் அவனை வாழ்க்கையைவிட அதிகமாகக் காதலிக் கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டு, அவன் தன்னை வெறுத்துவிட்டால்....? அவர்களுக்கிடையே இருந்த காதலை வெறும் ஒரு குழந்தைகளின் விளையாட்டு என்றல்லவா அவன் கூறினான்? அந்த கடிதம்...

st

Advertisment

""நாம எங்காவது கொஞ்சம் உட்காருவோம்.'' அவன் கூறினான்.

அவள் தன் நடுங்கிக்கொண்டிருக்கும் கைவிரல்களைப் புடவையின் தலைப்பைக் கொண்டு மறைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

""ஈரமில்லாத ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கிறேன்.'' அவள் சிரித்தாள். அவளுடைய சிரிப்புக்கு அழுகையின் சாயல் இருந்தது. அதை அவன் கண்டுகொண்டானெனினும், அவனுடைய முக வெளிப்பாடு மாறவில்லை. "நான் நன்றாக நடிக்கிறேன்.' அவள் தனக்குத் தானே கூறிக்கொண்டாள்: "என் இதயத்தின் திரைச்சீலைகளுக்குள் இருப்பவை எதையும் அவனால் பார்க்க முடியவில்லை. அதனால் மீண்டும் ஒரு கண்ணியில் சிக்கவைப்பதற்காக அவனை வேண்டுமென்றே வரவழைத்திருக்கிறேன் என்று அவனால் இனி கூறமுடியாது. ஒரு காலத்தில் முற்றிலும் முடிவே இல்லாததாகத் தோன்றிய அவர்களுடைய காதல் உறவிலிருந்து அவன் விடுதலையாகிவிட்டான். "ஏன் நீயும் வெற்றி பெறக்கூடாது? என் வாழ்க்கை மட்டுமல்ல; உன் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்வதற்கும் நீ முயற்சிக்கிறாய்.

அப்போது நடந்தவற்றையெல்லாம் மறக்கவேண்டும். இனியும் ஒருவரையொருவர் பார்க்கவேண்டும் என்று நீ பிடிவாதம் பிடிப்பது தவறானது. இவ்வளவு காலம் தைரியமாகக் காப்பாற்றி வந்த ஒரு விரதத்தை திடீரென்று இல்லாமலாக்குவதா?' அவன் எழுதியிருந்தான். அதற்கு பதிலாக அவள் எழுதினாள்: "நான் உங்களை வருமாறு கூறுவது, ஒரு காதலரைப் பார்க்கவேண்டும் என்பதற்காக அல்ல. வெறுமனே சற்று பார்ப்பதற்காக மட்டுமே...'

""நான் வந்துட்டேனில்

லியா? இனி என்ன வேணும்?''

அவன் ஒரு துவாலையை எடுத்துத் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டான். அவனுடைய இடக்கையில் ஒரு விரலில் கிடந்த உருண்டையான திருமண மோதிரம் அவளுடைய கண்ணில்பட்டது.

அவள் கண்களைத் தாழ்த்திக் கொண்டு, சிரிக்க முயற்சித்தவாறு கூறினாள்: ""கொஞ்சமும் பயப்பட வேணாம். அழுவதற்கோ குறை கூறுவதற்கோ நான் தயாரா இல்லை.

அதையெல்லாம் எட்டு வருஷங்களுக்கு முன்ன உங்க கடிதத்தை வாசித்தபோது நான் செய்துட்டேன். இப்போ அதை நினைச்சு எனக்கு சிரிப்புதான் வருது.''

அதைக் கேட்டபோது அவன் சிரிக்கவில்லை. தன் கையிலிருந்த துவாலையை எடுத்து அருகில் பார்த்த ஒரு கருங்கல் திண்ணையின்மீது விரித்தவாறு அவன் அவளிடம் அமருமாறு கூறினான்.

அந்த கல்லின்மீது ஒரு மனிதனின் பெயரும் சில தேதிகளும் பொறிக்கப்பட்டிருந்தன. அது ஒரு கல்லறையின் கல் என்ற விஷயம் தெரிந்தும் அவள் அதன்மீது அமர்ந்தாள். அவன் அருகிலிருந்த வேறொன்றின்மீது.... அவர்களுக்கு முன்னால் ஒரு கருங்கல் சுவருக்கு அப்பால், கடலின் அலைகள் அசைந்துகொண்டிருந்தன. கறுத்த பாறைத் துண்டுகளுக்கு மத்தியில் அவ்வப்போது நுரையும் குமிழுமாக ஓடிவரும் சிறிய அலைகளைப் பார்த்தவாறு அவர்கள் நீண்டநேரம் அசைவே இல்லாமல் அமர்ந்திருந்தார்கள். இறுதியில் அவன் சற்று கரடுமுரடான தன் குரலில் கேட்டான்:

""சொல்றதுக்கு எதுவுமில்லியா?''

""கேட்கறதுக்கு ஒண்ணு இருக்கு.''

""அப்படியா?''

""என்னை வெறுக்க ஆரம்பிச்சாச்சா?''

""எதுக்கு?''

""ஒரு காலத்தில காதலிச்சதால...''

சற்று குரூரத் தன்மையுடன் அவன் குலுங்கிக் குலுங்கி சிரித்தான். தொடர்ந்து தன் கோட் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப்பற்ற வைத்துக்கொண்டே கூறினான்: ""உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு. நீ சொல்றதோட அர்த்தம் யாருக்குமே புரியாது.''

""உங்களுக்கும் புரியலியா?'' அவளுடைய சுயமரியாதை மீண்டும் அவனுக்கு முன்னால் முழங்காவிட்டு அமர்ந்தது. ஆமாம்... அவள் நினைத் தாள். தனக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. தான் செய்பவற்றிலும் கூறுவனவற்றிலும் ஒழுங்கின்மை இருக்கிறது. அந்த வகையில் அந்தப் பழைய எதிர்ப்புகள் முழுவதையும் அவன் திரும்பவும் வெளிப்படுத்தலாம். ஆனால், அறிமுகமற்ற ஒருத்தியாக எண்ணும் அவனுக்கு இனி அவள்மீது கோபப்பட முடியாமற்போகலாம். அவள்மீது சற்று கோபப்பட்டால், அவளை வெறுப்பதற்காக முன்பைப்போல அவன் காரணங்களைத் தேடி தயார் செய்தால், அவள் சந்தோஷப்படுவாள். காரணம்- பழைய நாட்களின் ஒரு சுமாரான வடிவத்தையாவது இந்த நாளுக்குக் கொண்டுவருவதற்கு அவளால் முடியும். அவனுடைய காதல் அவ்வாறு இருந்தது. எப்போதும் குறைகள் கூறியவாறு... வெறுத்துக்கொண்டு... தன்னைத்தானே வெறுத்துப் பழகிவிட்ட அவன், அவளை வெறுப்பதற்குக் காரணங்களைத் தேடித்கொண்டிருந்தான்.தன்னைக் காதலிக்க ஆரம்பித்ததையும் ஒரு குற்றமாக அவன் கணக்குப் போட்டான். ஆனால், அந்த விவாதங்களின் இறுதியில், பரிதாபமாக அழுதுகொண்டிருக்கும் அவளுடைய கால்களில் விழுந்து, அவன் அந்த கால் விரல்களை முத்தமிடுவான்...

""சொல்லுங்க... நான் பைத்தியம் பிடிச்சவள்னு... அதனாதான் நான் தலைமுடியை பின்னோக்கி வாருறேன். ஆங்கிலத்தில பேசுறேன். உங்களை...''

அவன் சிகரெட்டை வீசியெறிந்துவிட்டு சிரித்தான்.

""எனக்கு உங்கிட்ட இரக்கம் மட்டுமே தோணுது. ஒரு சாதாரண பெண்ணா பிறக்கறதுக்கும் உன்னால முடிஞ்சிருக்கே.''

அதற்கு அவள் பதில் கூறவில்லை. அவன் வீசியெறிந்த சிகரெட்டின் நுனியிலிருந்து புகை எழுந்து வருவதைப் பார்த்தவாறு அவள் சிந்தித்தாள். சரிதான்... யாரையும் தோல்வியடையச் செய்யும் தன் வினோதமான செயல்கள் வழியாகப் பார்ப்பதற்கும், தன் வளர்ச்சியடையாத மனதின் உண்மை நிலையைப் பார்ப்பதற்கும் அவனுக்கு எப்போதும் முடிந்திருக்கிறது. ஆங்கிலேயே நடைமுறைகளுடன் அந்த மொழியிலிருந்த ஆற்றலும், அவன் தன் நாட்டின்மீது அன்பில்லாமல் வளர்த்துக்கொண்ட ஒன்றல்ல என்று வேறு யாருக்குத்தான் புரிந்தது! அவனுக்குப் பழக்கமான பெண்களிடமிருந்து சற்று விலகிநிற்பதற்கு அவனுடைய டாம்பீகம் காரணமல்ல; ஆனால், தன்னுடைய வேறுபட்ட தன்மையைப் புரிந்துகொண்டு, அவர்கள் தன்னை வெறுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்னும் பயம்தான் காரணமென்பது அவளைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?

மற்றவர்களிடமிருந்து விலக்கி அவளைத் தனிப்பெண்ணாக நிற்கவைத்த அந்த அழகும், செல்வநிலையும், மனநிலையும்... அனைத்துமே அவளுடைய கண்களில் வெறும் சாபங்களாகத் தெரிந்தன. அன்பு மென்மையாக்கும் சில வார்த்தைகளுக்கான அவளுடைய தாகம்... என்றும் தனியாக இருக்கிறோமென்ற சிந்தனை... இவை எதையும் அவள் வேறு யாரிடமும் கூறியதில்லை. வளர்ந்துவிட்டால், சரீரத்தின் சில சொந்த விஷயங்களை எல்லாரிடமிருந்தும் மறைத்து வைப்பதைப் போலதான் அவள் தன் மனதையும் மூடிவைத்தாள். வேலைப்பளுவுடனும் மனப் பிரச்சினைகளுடனும் நாட்களை ஓட்டிக்கொண்டிருந்த அவளுடைய பெற்றோர்கள் அவளைப் புரிந்துகொள்வதற்கு முயற்சிக்காவில்லை. அவள் எப்போதும் தன் அழகான பற்களைக் காட்டிப் புன்னகைப்பாள். பால் குடிப்பதற்கு அவளுக்கு விருப்பமில்லை. தன் தலையில், வெந்த தேங்காயிலிருந்து தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெயைதான் தேய்ப்பாள். அவ்வாறு சில விஷயங்கள் அவர்களிடம் இருந்தன. ஆனால், அவள் தன் அகலம் குறைவான படுக்கையில் படுத்து, தனக்கு நடக்கப்போகும் திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்பதைப் பற்றி அவர்கள் எந்த சமயத்திலும் கேட்டதில்லை. திருமணம் நடந்தபிறகு இரவில்மட்டும் இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியவாறு தன்னிடம் நெருங்கும் கணவனைப் பற்றி அவளுடைய அபிப்பிராயம் என்ன?

அன்பின் புனிதத்தன்மையை அவனிடமிருந்து அவள் புரிந்துகொண்டாளா? "ஆமாம்' என்று எல்லாரும் நினைத்திருக்கவேண்டும்.

ஆனாôல், யாரும் அவளிடம் கேட்டதில்லை. அவளுக்கு சந்தோஷம் இருக்கிறதா என்று யாரும் விசாரித்ததில்லை. உள்ளே நட்டு வளர்த்த ஒரு செடியைப்போல, அவளுடைய மனதிற்குள் வளர்ந்துநின்ற தனிமையுணர்வு பூ வைத்துக்காய்தது. இரவில் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளக்கூட இயலாததால், வாழ்க்கையில் தோல்வியடையும் மனித உயிர்கள் வீடுகளிலும் தெருக்களிலும் கிடந்து உறங்கிக்கொண்டிருக்கும்போது, இல்லா விட்டால்- பலவீனமான சாதாரண சுகங்களுக் காக ஒருவரையொருவர் உபயோகப்படுத்திக் கொள்ளும்போது, அவள் தன் படுக்கையில் படுத்து தன்னைத்தானே ஆராய்ந்திருக்கிறாள். பாகுபாடற்றதாகவும், சிறிது குரூரத்தன்மை கலந்ததுமான அவளுடைய மனம், அந்த சரீரத்திலிருந்து எழுந்து வெளியே வந்து அவளுடைய அதிர்ஷ்டமற்ற இதயத்திற்குள் எட்டிப்பார்க்கும். ஈரமற்ற, பசுமையற்ற, சிறிதும் வளமற்ற ஒரு தரிசுநிலத்தைப்போல வெறுமையாகக் கிடக்கும் அவளுடைய இதயம்...

""உங்கிட்ட எந்தவொரு மாறுதலும் உண்டாகல. நீ கொஞ்சமாவது வளர்ந்திருப்பேன்னு நான் நினைச் சேன்.''

அவன் கூறினான். அவனுடைய கண்களிலிருந்து தப்பிப்பதற்காக அவள் தலையைத் தாழ்த்திக்கொண்டாள். அவர்களுக்கு முன்னால் மழைநீர் விழுந்து வீங்கிய கடல், காமவெறி பிடித்த ஒரு பெண்ணைப்போல பெருமூச்சு விட்டவாறு கிடந்து உருண்டு கொண்டும், மெதுவாகத் தேம்பிக்கொண்டும் இருந்தது. ஆகாயம் சிறிய துவாரங்களைக்கொண்ட ஒரு பழைய துணிக்குடையாக அவளுக்குத் தோன்றியது. மழைத்துளிகள் விழ ஆரம்பித்திருந்தன.

""நீ குடை எடுத்துக்கிட்டு வரல. இல்லியா?'' அவன் கேட்டான். அவள் தலையை ஆட்டினாள்.

""நீ இப்பவும் இப்படித்தானா? குடையை எடுக்கறதில்ல. பணத்தை எடுக்கறதில்ல... துவாலையை எடுக்கறதில்ல. நீ எப்படி வாழப்போறேங்கறதே எனக் குத் தெரியல.''

அவன் அவளுக்கருகில் வந்து அமர்ந்தவாறு தன் துணிக்குடையை விரித்து வைத்தான்.

அவளுக்கு அருகில் கட்டப்பட்டிருந்த கயிறுகளில் காய்வதற்காக தொங்கவிடப்பட்டிருந்த மீன்களை எடுத்து அகற்றுவதற்காக, சில மீனப்பெண்கள் குடிசைகளிலிருந்து ஓடிவந்தார்கள். திறந்துகிடந்த ஓலை வாசல்களின் வழியாக அவர்களுடைய அடுப்புகளில் நெருப்பு சிவந்த பூக்களைப்போல மின்னுவதை அவள் பார்த்தாள்.

""பாருங்க...'' அவள் கூறினாள்: ""சிவந்த பூக்கள் மாதிரி இருக்கு.''

""இன்னொருவகையில் சொல்றதா இருந்தா... சிவந்த பட்டாம்பூச்சிங்க சிறகடிச்சிக்கிட்டிருக்கலாம்.''

அவன் கூறினான். அவர்களுக்கு மிகவும் விருப்பமான அந்த பழைய விளையாட்டு மீண்டும் ஆரம்பமாகி விட்டதோ? நிலவு என்பது ஆகாயத்தின் திறக்காத கண்ணோ? நிலவு என்பது ஆகாயத்தின் அகலத் திறக் காத கண்ணோ? இல்லாவிட்டால்... உண்ணாநோன்பு ஆரம்பிக்கப் போகும் ஒரு பருமனான பெண்ணோ? நினைவுகள் அவளை வேதனைப்படுத்தின.

""நீங்க ஏன் கல்யாணம் செஞ்சீங்க? நாம இப்படியே ஒருவரையொருவர் காதலிச்சிக்கிட்டு இருந்திருக்கலாமோ''

அவன் எதுவும் கூறவில்லை. அதனால் மீண்டும் தைரியத்துடன் அவள் கேட்டாள்: ""அவள் எப்படிப் பட்ட பெண்?... உங்க மனைவி?''

அவன் தன் கைவிரலில் கிடந்த உருண்டையான மோதிரத்தை மெதுவாகத் திருப்பியவாறு, தலையை குனிந்துகொண்டு அமர்ந்திருந்தான்.

""நீங்க ரொம்பவும் மாறிட்டீங்க...'' அவள் கூறினாள்: ""தடிச்சிட்டீங்க. தலைமுடியில முன்ன தேய்க்கக்கூடிய க்ரீமை தேய்க்கல. கையில மோதிரம் இருக்கு. நீங்க முன்ன நான் அறிஞ்சிருந்த ஆளா இல்லாம போயிட்டீங்க.''

""ம்..''

அவனுடைய முகத்தின் கோடுகள் அந்த இருட்டில் தெளிவாகத் தெரியவில்லை. கடலையொட்டியிருந்த பாறைத் துண்டுகளின் ஓரங்களில் மட்டும் நிலவு, வெள்ளி ரேகைகளை வரைந்தது. நீர், களைப்படைத்த ஒரு மனிதனைப் போல மேழும் கீழும் மூச்சுவிட்டுக்கொண்டும், அழுதுகொண்டும் இருப்பதைப்போல அவளுக்குத் தோன்றியது. அவளுடைய மனம் கடந்த காலத்தின் சட்டதிட்டங்களுடன் செயல்பட்டுக்கொண்டிருந்த சில நாட்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. "உன்னை நான் காதலிக்கவில்லை என்று கூறுகி றாயா? என் கண்களைப் பார்த்து, அப்படி கேட்பதற்கு தைரியம் இருக்கிறதா?' அவனுடைய வார்த்தைகள், அவளிடம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய அந்த தனித்துவ சிரிப்பு, அவர்கள் இருவரையும் ஒரு கர்ப்பப்பையில் வைத்திருப்பதைப்போல உலகத்திடமிருந்து ஒளித்து ஓய்வெடுக்கச்செய்த அந்த மாலை வேளைகள்... அவையனைத்தும் இறந்துவிட்டனவா? அவள் வேறொருவனுக்கு சொந்தமானவளாகி விட்டாள். அவள் தனக்குத்தானே சொல்லிப்பார்த்து, நம்புவதற்கு சிரமப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த உண்மையை நம்பாமலிருந்தால், இதையும்விட அதிகமாக அவள் கவலைப்பட வேண்டியதிருக்கும்.

""நீங்க அதிர்ஷ்டசாலி.''

"ம்...''

அவன் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான்.

""என்னால மட்டும் இவை எதையும் ஏன் மறக்க முடியல?''

அவன் என்ன கூறுவான்? அவளுடைய கையற்ற நிலையைவிட, அச்சத்தை உண்டாக்கக்கூடிய தன்னுடைய கையற்ற நிலையை மறைத்து வைத்துக்கொண்டு, அவளை சமாதானப்படுத்துவதற்கு அவனால் முடியுமா? அந்த காதலை மறந்துவிட்டால், பிறகு... ஒரு பொக்கிஷம் என்று கூறுவதற்கு இந்த வாழ்க்கையில் தனக்கு எதுவுமே இல்லையென்று கூறமுடியுமா? வேண்டுமென்றால், அனைத்து விஷயங்களையும் அவளிடம் அவன் திறந்து கூறலாம். அவள்மீது கொண்டிருந்த காதல் காரணமாக மட்டுமே அவளுடைய வாழ்க்கையிலிருந்து அவன் ஓடிப்போனான். தான் திருமணம் செய்ததுகொண்ட பெண்ணின் முகத்தைப் பார்க்கும்போதும், அவளை முத்தமிடும்போதும் தான் முன்பு காதலித்த அந்த முகம் மட்டுமே தெரிந்தது. அவனுடைய மதமும் சிந்தனையும் அவள் மட்டுமே... அவற்றையெல்லாம் திறந்து கூறமுடியுமா?

""நான் அந்த அளவுக்கு சின்ன பையனில்ல. இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டு என்னை வருத்தப்பட்ட வைக்காதே.'' அவன் கூறினான்:

""எங்கிட்ட பெரிய அளவில பணமில்ல... அறிவில்ல. நான் ஒரு சாதாரண மனிதன். காதலிக் கறதுக்குக்கூட எங்கிட்ட தைரியமில்லாம போயிருக்கு.''

அவளுடைய கண்கள் நிறைந்து வழித்து கொண்டிருந்தன. எனினும், தடுமாறாத குரலில் அவள் கூறினாள்: ""சரிதான்... நான் உங்களை கஷ்டப்படுத்துறேன். மறுபடியும் ஒரு கண்ணியில் சிக்கவைக்க நான் முயற்சிக்கிறேன். என்னை மன்னிக்கணும்.''

தன் காதலை சட்டங்கள் கொண்ட ஒரு கூண்டாகவே அவன் எப்போதும் நினைத்திருக் கிறான்- அவள் சிந்தித்தாள். அவர்கள் இருவரின் வாழ்க்கையிலும், மிகவும் இனிமையான நாட்களில்கூட அவன் அவளுடைய மடியில் தலையை வைத்துக்கொண்டு கூறியிருக்கிறான்:

"நீ என்னை காதலிச்சிருக்க வேண்டியதில்ல. என் கால்ல ஒரு சங்கிலி இருக்கறது மாதிரி நான் உணர்றேன்.''

அவள் அப்போதெல்லாம் அதைக்கேட்டு சிரித்திருக்கிறாள். மேலும் சில நாட்கள் கடந்து சென்றபிறகு, கூட்டைத் தகர்த்துவிட்டு வானத்தை நோக்கி மேலே செல்லும் கிளியைப்போல அவன் காதலிலிருந்து விடுதலையாகிப் போவான் என்று அவள் நினைத்ததில்லை. தன் கொஞ்சல்கள் அவனை மூச்சு விடாமல் செய்கின்றன என்பதை அவள் எப்படி புரிந்துகொள்வாள்? அவளுடைய இதயம் தனக்கேயுரிய பகைகளை வளர்த்து, அவனை அவற்றில் கட்டிப்போட்டு நிறுத்தியது. எனினும் தான் ஒரு வளர்ப்பு மிருகமே என்று சிந்திக்க ஆரம்பித்த அவன் அவளை விட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.

""நான் உங்களை மோசம் செய்ய முயற்சித் தேன்.'' அவள் கூறினாள்: ""உங்களை மறுபடியும் கண்ணியில சிக்கவைக்க...''

""எந்த கண்ணியில சிக்கவைக்க?''

""எனக்கு ஒரு குழந்தை வேணும்னு ஆசை இருந்தது. எனக்கும் உங்களுக்கும் பிறக்கும் ஒரு குழந்தை... என்னை மன்னிக்கணும்.''

அவன் தன்னுடைய இடது கையால் தன் நெற்றியைத் துடைத்துக்கொண்டே கடலைப் பார்த்தான். வளையங்களைக் கழற்றி எறியும் சில பாம்புகளைப் போல நுரையும் குமிழ்களும் நிறைந்த வெள்ளியலைகள், பாறைகள்மீது மோதி உரசிவிட்டு மீண்டும் திரும்பிச் சென்றன. மழை பெய்து முடிந்திருந்தது. அவன் குடையை மடக்கி, உதறினான்.

பிறகு... எழுந்து நின்று அவளிடம் சாதாரணமான குரலில் கூறினான்:

""நேரம் ரொம்ப தாமதமாகிட்டது. உன்னோட கணவர் என்ன நினைப்பார்?'' அவன் அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டே சிரித்தான். அது என்றென்றைக்குமான ஒரு விடைபெறுதல் என்று அவளுக்குத் தோன்றியது. ஒரு முடிவுக்குக் கொண்டு வருதல்! அவர்களுக்கிடையே இருந்த காதலின்... நம்பிக்கையின்... அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வருதல்... சிரிப்புகளின், வார்த்தைகளின், முத்தங்க ளின் நினைவுகள் அப்போதும் அவளைச் சுற்றிக் கொண்டிருந்தன. ஆனால், அவை ஒவ்வொன்றும் பாதி இறந்துவிட்ட சரீரங்கள் என்று அவளுக்குத் தோன்றி யது. அவள் எழுந்து நின்று தன் கையை நீட்டியவாறு அவனிடம் கூறினாள்: ""எனக்கு ரெண்டனா தாங்க. பேருந்துல பயணச்சீட்டு வாங்கறதுக்கு.''

அவன் சிரித்தான். அவன் கொடுத்த நாணயத்துடன், அவள் அந்த இருட்டுக்குள் மறைவதைப் பார்த்தவாறு அவன் சத்தம் உண்டாக்காமல் அழுதான். தரிசனம் தந்துவிட்டு மறைந்துவிடும் ஒரு தெய்வத்தைப்போல அவள் மறைந்துவிட்டாள். தன் தனிமையும் தூரமுமான உலகத்தை நோக்கி... கவலையின் வாசனைகொண்ட அவளுடைய கருங்கல் கோவிலுக்குள்... அவளை உரக்க அழைத்து, முன்பு செய்ததைப்போல அந்த கால் விரல் களை முத்தமிட்டுக்கொண்டே சிறிது அழவாவது... கருங்கற்களும் சிறிய மணல் மேடுகளும் நிறைந்த அந்த சுடுகாட்டின் வழியாக நடந்து, மைதானத் தையும் கடந்து, சிறிய மஞ்சள்நிற விளக்குகள் எரிந்துகொண்டிருந்த ஒரு கடைக்கு அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தை அடைந்தபிறகு, அவள் தாகமெடுக்கும் கண்களுடன் பின்னோக்கித் திரும்பிப் பார்த்தாள். ஆனால், வெறுமையான ஒரு அடர்த்தி யான இருட்டை மட்டுமே அவளால் பார்க்கமுடிந்தது.

பிறகு... அந்த அறையில் வளர்ந்து நின்றிருந்த காட்டு மரம், மீண்டும் வளர்ந்து மேற்கூரைவரை உயர்ந்தது. அதன் கிளைகள் சுவர்களின்மீது மோதி உரசி விரிசல்களை ஏற்படுத்தின. இரவுப் பொழுதின் விஷம் கலந்த காற்றில் ஒரு "ஹைட்ரா'வைப்போல தன் பல கைகளையும் அசைத்தவாறு திரும்பத் திரும்ப வளர முயற்சிக்கும் அந்த மரத்தின் சுவாசத்தை கவனித்தவாறு அவள் படுத்திருந்தாள். தன்னுடைய இதயத்தில் தனிமையுணர்விலிருந்து தப்பித்துச் செல்வதற்கு ஆசைப்படும் அவளுக்கு மரணமும் ஒரு அருளாக இருந்தது.

ப்

மொழிபெயர்ப்பாளரின் உரை

வணக்கம்...

இந்த மாத "இனிய உதய'த்திற்காக மூன்று சிறந்த சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். "பானிபாய்' என்னும் வங்கமொழி கதையை எழுதியவர் பிரபல வங்கமொழி பெண் எழுத்தாளரான த்ருஷ்ணா பஸாக். கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் என்று அனைத்திலும் ஆழமான முத்திரையைப் பதித்திருப்பவர் இவர்.

வங்காளத்தைச் சேர்ந்த ஃபுல்லறா காவ்ரா என்ற ஏழைப் பெண்ணின் கண்ணீர்க் கதை... "பானிபாய்' கதையின் இறுதிப் பகுதி நம்மை நிச்சயம் சிந்திக்கவைக்கும். இப்படிப்பட்ட துயரக் கடலில் மூழ்கி வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களுக்கு என்று விடியல்?

"தரிசுநிலம்' என்னும் மலையாளக் கதையை எழுதியவர் மலையாள இலக்கியப் பெண் எழுத்தாளர்களின் நட்சத்திரமான மாதவிக்குட்டி. எப்போதோ காதலித்து, இன்று தனித்தனியே வேறு ஆணுடனும் பெண்ணுடனும் திருமணமாகி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆணையும், பெண்ணையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. அவள் ஏன் அவனைச் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள்?

பேருந்து பயணச் சீட்டிற்காக அவனிடம் நாணயங்களை வாங்கிக்கொண்டு, நடந்தவாறு இருட்டிற்குள் மறையும் அவள்... அவள் சென்ற திசையைப் பார்த்து சத்தமே இல்லாமல் அமர்ந்துகொண்டு அழும் அவன்... மாதவிக் குட்டி எந்த அளவிற்கு முழுமையாகவும், ஆழமாகவும், உயிரோட்டத்துடனும் கதாபாத்திரங்களைப் படைத்திருக் கிறார்! இனி அவர்கள் ஒருவரையொருவர் எந்தச் சமயத்தி லும் சந்திக்கவே மாட்டார்களா என்பதை நினைக்கும் போது, இனம்புரியாத சோகம் நம் மனதில் நிச்சயம் நிறையும்.

"ஒரு சட்டப் பிரச்சினை' கதையை எழுதியவர் சாகித்ய அகாடெமி விருதுபெற்ற மூத்த மலையாள எழுத்தாளரான டி. பத்மநாபன். போலீஸ் அதிகாரியையும், நல்ல மனம் கொண்ட கலெக்டரையும், பாதிப்பிற்கு ஆளாகி மருத்துவமனையிலிருக்கும் ஒரு நடுத்தர வயதைக் கடந்த பிரபல மனிதரையும் (அது... அனேகமாக எழுத்தாளர் டி. பத்மநாபனாகவே இருக்கலாம்) மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. இந்தச் சிறுகதையின் இறுதியில் கலெக்டர் ஒரு வேண்டுகோள் வைக்கிறாரே! அதுதான் டி. பத்மநாபனின் முத்திரை!

எனக்கு விருப்பமான இந்த மூன்று சிறுகதைகளும் உங்களுக்கு மாறுபட்ட அனுபவங்களைத் தரும்.

"இனிய உதயம்' வெளியிடும் என மொழிபெயர்ப்புப் படைப்புகளைத் தொடர்ந்து வாசித்துவரும் உயர்ந்த இலக்கிய உள்ளங்களுக்கு நன்றி.

அன்புடன்,

சுரா