""நான் மன்னிப்பு கேட்கறதுக்காக வரல....''
""ருக்மிணி, மன்னிப்பு கேட்கற அளவுக்கு
நீங்க ஏதாவது செஞ்சீங்களா?''
மாதவி அமைதியான குரலில் பதில் கூறிவிட்டு, கைக்குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள்.
""என்ன நடந்தாலும் மன்னிப்பு கேட்கற பழக்கம் எனக்கில்ல.'' ருக்மிணி உரத்த குரலில் கூறினாள்.
""பரவாயில்ல.''
அதைக் கூறிவிட்டு, எதுவுமே நடக்காததைப்போல குழந்தையைத் தாலாட்டுவதைப் பார்த்தபோது, ருக்மிணிக்கு பெரிய அளவில் அமைதி யற்ற நிலை உண்டானது. மாதவியின் முழு கவனமும் அந்த குழந்தையின்மீது இருந்தது. "என்ன வேண்டுமானாலும் செய். எனக்கு இந்த குழந்தை இருக்கிறது' என்பதைப்போல அமைதியாக இருந்த அந்த நிலைதான் மிகவும் கோபத்தை வரச்செய்தது.
ருக்மிணியாலும் அந்த குழந்தையை சற்று பார்க்காமலிருக்கமுடியவில்லை. இளம் சிவப்பு நிறத்திலிருந்த அந்த மாமிசப் பிண்டத்தைப் பற்றி மாதவிக்கு என்ன கர்வம்! அடையவேண்டியதை அடைந் தாகிவிட்டதென்ற வெளிப்பாடு...
அந்த குக்கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்குத் தெரியாது- இதை யெல்லாம் அடைவதற்கு பெரிய அளவில் பலமெதுவும் தேவையில்லை என்ற விஷயம். "இயற்கை அளித்திருக்கும் சக்தி யைத் தாண்டி எதையும் அடைய முடியாது' என்று முகத்தில் அடிப்பதைப் போல சத்தம் போட்டுக் கூறவேண்டுமென்று தோன்றியது. கூறுவதற்கு நாக்கு எழவில்லை. அந்த எட்டாம் தரமான பெண்ணுடன் எதற்கு சண்டை போட்டுக்கொண்டு நிற்கவேண்டும்? அந்த சிந்தனைதான் பின்னோக்கி இழுக்கிறதோ?
தன்னைத்தானே ஏன் விசாரணை செய்யவேண்டும் என்பதைச் சிந்தித்தவாறு, ருக்மிணி மொஸைக் டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்த மினுமினுப்பான படிகளில் இறங்கினாள்.
ருக்மிணி திரும்பி நின்று கூறினாள்: ""மாதவி, நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, அது முழுசா சரியில்ல...''
அதற்கு மாதவி பதில் கூறவில்லை. அவள் குழந்தையை மார்போடு சேர்த்துப் பிடித்தவாறு திகைப்புடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். குறுக்கே வரும் வாகனத்தைப் பார்த்து திடீரென்று நின்றுவிடும் ஒரு சிறிய காரைப் போன்றவள் மாதவி என்று ருக்மிணிக்குத் தோன்றியது.
இளமைக்கால நினைவுகளில் மூழ்கியிருந்த அந்த முகத்துடன் இதை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இரண்டும் ஒன்றுதான் என்று கூறுவதே சிரமமான விஷயமாக இருந்தது.
மேலும் ஒரு நிமிட நேரம் நின்றிருந்துவிட்டு, ருக்மிணி வேகமாக நடந்தாள்.
இன்னும் இரண்டு அடிகள் நடந்தவுடன், குழந்தையின் ஆரவாரத்தைக் கேட்டுத் திரும்ப நின்றுவிட்டாள். அப்போதும் மாதவி திகைத்துப்போய் நின்றிருந்தாள். குழந்தை கையிலிருந்தவாறு அழுதது. மேலும் ஒரு அடிவைத்தபோது, பின்னாலிருந்து உரத்த குரலில் கூறுவது காதில் விழுந்தது. ""நில்லுங்க... நில்லுங்க... ஒரு விஷயம் சொல்லணும்.''
மாதவி முன்னால் வந்து நின்றாள். குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் அந்த நிலையைக் கண்டால் "அப்பாவி அம்மா' என்று கூறுவார்கள்.
''சொல்லுங்க...'' ருக்மிணி அந்த முகத்திலிருந்து கண்களை எடுக்காமலே கூறினாள்.
""எனக்கு உங்கமேல எந்தவொரு கோபமும் இல்ல.'' மாதவி சிரமப்பட்டவாறு தொடர்ந்தாள்:
""அப்படியே இல்லைன்னாலும்... நீங்க என்ன செஞ்சீங்க? என் கணவரும் அந்த அளவுக்குப் பெரிய தவறெதையும் செய்துடல. அவர் ஒரு ஆணில்லியா? பாருங்க... என் அம்மா சொன்னது எந்த அளவுக்கு சரியான விஷயம்! காற்றையும் ஆண்மையையும் பிடிச்சு நிறுத்திவைக்க முடியாது. அவை வீசிக்கொணடிருக்கும். சிலநேரங்கள்ல நல்ல நறுமணத்தைக் கொண்டு வரும். சிலநேரங்கள்ல கெட்ட நாற்றத்தையும்... எல்லாவற்றையும் அனுபவிக்கணும். மனைவிங்க அப்படித்தானே இருக்கணும்?'' "ருக்மிணியை நோக்கி முகத்தை உயர்த்தியவாறு அவள் கேட்டாள்:
""ருக்மிணி, நீங்க ஏன் எதுவுமே பேசாம இருக்கீங்க? என்மேல கோபமா?''
ருக்மிணி, திரும்பி அந்தப் பெண்ணின் முகத்தையே பார்த்தாள். அந்த குழந்தையின் முகத்தையும்... அவள் ஹேண்ட் பேக்கின் மென்மையான மேற்பகுதியைத் தடவியவாறு அமைதியாக நின்றிருந்தாள். அப்போது இந்த வாக்கியம் தொண்டைவரை வந்தது: "அக்கா... எனக்கு உங்கமேல கோபமில்ல. ஆனா எதுக்கு அதை யெல்லாம் சொல்லணும்?'
மாதவி தொடர்ந்தாள்: ""எனக்கு பெரிய அளவில அறிவு கிடையாது. நீங்கல்லாம் நகரத்துல உள்ளவங்க. அறிவுள்ளவங்க. நான் தவறு செய்திருந்தா மன்னிச்சிடுங்க. உள்ளே வந்து உட்காருங்க. எங்கிட்ட ஏதாவது பேசுங்க.''
""வேணாம்.''
""ஏன்?''
""எந்த காரணமும் இல்ல.'' ருக்மிணியின் பதில் மிகவும் அமைதியானதாக இருந்தது.
""நீங்க இங்க வந்து ஒரு கப் காபிகூட குடிக்காம போய்ட்டீங்கன்ற விஷயத்தைக் கேள்விப்பட்டா அவருக்கு கோபம் வரும்.''
""அவர் உங்களைத் திட்றது உண்டா?''
""எந்த சமயத்திலும் இல்லை. அவர் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.'' அதைக் கூறியபோது, அந்தப் பெண்ணின் முகத்தில் "ஸ்விட்ச்' போட்டதைப் போல, வெளிச்சம் பரவியது. அதை கவனித்துவிட்டு, ருக்மிணி கேட்டாள்:
""அவரைப் பத்தி புகழ்ந்து பேசறதுதுக்கு ஆசைப் படுறீங்க இல்லியா?''
""உண்மையிலேயே... அவர் என் குழந்தையின் தந்தை இல்லியா...'' குழந்தையின் நெற்றியில் மாதவி ஒருமுறை முத்தமிட்டுவிட்டு, தொடர்ந்தாள்! ""இல்லைன்னாலும்... அவரைப் புகழ்ந்து பேசலாம். அந்த அளவுக்கு பெரிய ஆள்! எந்த அளவுக்கு அன்புங்கறீங்க? அது எப்படின்னு விளக்கிக்கூற இயலாது ருக்மிணி. ஒரு பெரிய ஊசி உடம்புல குத்தியிருக்குன்னு நினைச்சுக்கங்க. அப்போ வேதனை இருக்குமில்லியா? வேதனைக்கு பதிலா சுகமா இருக்குன்னு கற்பனை செய்துக்கங்க. அதாவது... அது போலதான் அவரோட அன்பு.''
அந்த வார்த்தைகள் ருக்மிணிக்குள் தூங்கிக்கொண்டி ருந்த எரிச்சலைத் தொட்டு எழுப்பியது. அவள் கேட்டாள்:
""நீங்க இப்போ சொன்னதெல்லாம் மனப்பூர்வ மானதா?''
""நான் ஏன் பொய் சொல்லணும்? இருக்கட்டும்.... உள்ளே வந்து உட்காருங்க.''
உள்ளே நுழைவதா அல்லது கேட்டை இழுத்து மூடிவிட்டு வெளியேறிச் செல்வதா?
""காப்பி குடிச்சிட்டுப் போங்க.'' மீண்டும் அழைப்பு... பணியாளை அழைத்துக் கூறுவது காதில் விழுந்தது:
""குஞ்ஞு.... காப்பி வேணும்.''
""வேணாம்...'' ருக்மிணி திடீரென்று கூறிவிட்டாள்: ""நான் இப்பபோறேன். அவசரமா ஒரு ஆளைப் பார்க்கவேண்டியிருக்கு. இரண்டு மணி நேரம் கழிச்சு திரும்பி வர்றேன். நாம பேசலாம். உண்மையிலேயே நாம இன்னும் கொஞ்சம் பேசவேண்டியிருக்குன்னு தோணுது.''
அதிகமாகப் பேசவில்லை. இதயத்திற்குள்ளிருந்து ஒரு பதைபதைப்பு தொண்டையில் வந்து மோதுகிறது. முன்னால் குழந்தையை மார்போடு சேர்த்து வைத்தவாறு மாதவி அமைதியாக நின்றிருந்தாள்.
அந்த பிஞ்சுக் கைகள் காற்றிலாடும் பன்னீர் மலரைப்போல அவளுடைய மார்பில் தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தன. ருக்மிணி அதைப் பார்த்தாள். பாவம்!
""நான் கட்டாயம் கொஞ்ச நேரம் கடந்தபிறகு வருவேன்.'' மெதுவாக கேட்டை அடைத்துவிட்டு, படியைக் கடந்தபோது நிறைந்த கண்களை கீழ்நோக்கிச் செலுத்தியவாறு ருக்மிணி நடந்தாள்.
ஷாம்பு தேய்த்து எண்ணெய் படாமலிருந்த தலைமுடியை காற்றில் பறக்கவிட்டவாறு அவள் வேகமாக நடந்தாள். உயர்ந்த அடிப்பகுதியைக் கொண்ட செருப்பு, காங்க்ரீட்டால் ஆன சாலையில் பட்டு தாள லயத்துடன் சத்தம் உண்டாக்கியது: டுல்... டுல்... டுல்..
பறந்துகொண்டிருக்கும் டெர்லின் புடவையின் ஓரத்தை இடக்கையால் சுற்றிப் பிடித்திருந்தாள்.
நான்கு சாலைகளும் சந்திக்கும் இடத்திற்கு வந்தாள். அவள் தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள்:
"அப்படின்னா... நான் யாரைப் பார்க்கணும்?'
இந்த கேள்வியை வாழ்க்கையின் பல சந்திப்புகளிலும் கேட்க வேண்டிய சூழ்நிலை ருக்மிணிக்கு வந்திருக்கிறது. அப்போதெல்லாம் ஒவ்வொரு வகையான பதிலைக் கண்டுபிடித்திருக்கிறாள்.
இன்று இனம் புரியாத ஒரு வேதனை மனதில் தங்கி நின்றுகொண்டிருக்கிறது. கொஞ்ச காலமாகவே அப்படிப்பட்ட உணர்ச்சிகளுடன் உறவில்லாமல் இருந்தது. மரத்துப்போனதைப்போல இருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு பிரசவமான ரீத்தாவைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றபோது உண்டான ஒரு சம்பவம் அவளுக்கு ஞாபகத்தில் வந்தது.
ரீத்தா படுத்திருந்த சிறப்பு வார்டுக்கு அடுத்திருந்த வார்டில், உணவின் விஷத்தன்மையால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளும் ஒரு தாயும் இறந்துகிடப்பதைப் பார்த்தாள். இரண்டு குழந்தைகளின் கண்கள் மூடியிருக்க வில்லை. உலகத்தைப் பார்த்த திருப்தி அவர்களுக்கு முழுமையாகவில்லை என்று தோன்றியது. ஆட்கள் யாருமில்லாத அந்த பிணங்களை மருத்துவமனைப் பணியாட்கள் பிண வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்வதைப் பார்த்தாள். மனதில் எந்தவொரு உணர்ச்சியும் உண்டாகவில்லை.
மருத்துவமனையின் கேட்டைக் கடந்தபோது, தான் கல்லாகி விட்டோமோ என்று ருக்மிணி நினைத் தாள். அந்த கல் என்ன காரணத்திற்காக இப்போது அசைகிறது?
அந்த வழியில் சிந்தனை நீண்டு செல்வதை அவள் விரும்பவில்லை. இரு பக்கங்களிலும் பார்த்தாள். ஒரு வாகனம் கிடைக்கவேண்டுமே! வாகனம் கிடைத்தால் எங்கு செல்லவேண்டும்? பூங்காவுக்கு...? கடற்கரைக்கு...? இல்லாவிட்டால்- ஏதாவதொரு உணவகத்திற்குச் சென்று உணவு சாப்பிட்டுவிட்டு திரும்பி வரலாம்.
ஒரு கஷ்டம்; நாணு காத்திருக்கமாட்டானா? வேலைக்காரனாக இருந்தாலும் அவன் அன்புள்ளவன். அவனை அப்படி இருக்கச் செய்யலாமா?
எதற்கு இருக்கிறான்? வீட்டிலிருந்து எங்குமே செல்லாத அவன் தான் செல்லவேண்டிய நேரம் கடந்துவிட்டால், உணவை சாப்பிட்டுக் கொள்வான்... மாலையில் செல்லும்போது, பிடிவாதம் பிடித்து அழும் குழந்தையின் குரலில் கூறுவான்:
""சின்னம்மா... நீங்க மதியம் உணவு சாப்பில.''
இன்று அவன் மட்டுமே தன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பவன். சந்திப்பவர்கள் பலர்... காத்துக் கொண்டிருப்பவன் நாணு மட்டுமே! மனம் முற்றிலும் ஆடிப்போய், தலைகீழாகப் புரண்டு கிடக்கிறது. கடந்தகால சம்பவங்கள் மேற்பரப்பை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.
இதேபோல... பல வருடங்களுக்கு முன்பு... இடக் கழியூர் பாலத்திற்கு அருகில் ஒரு படகு காத்து நின்றிருந்ததை ருக்மிணி நினைத்துப் பார்த்தாள். வானத்தில் நட்சத்திரங்களும் மனதில் ஆசைகளும் பிரகாசித்தன. ஆற்றில் சிறிய அலைகள் நீலநிறப் பாம்புகளைப்போல, அவளுடைய கால் பகுதியில் கிடந்து அசைந்துகொண்டிருந்தன. மனதில் உணர்ச்சிகள் படம் விரித்தாடின.
அன்று யாரைப் பார்க்கவேண்டுமென்ற குழப்பம் இல்லாமலிருந்தது. பார்க்கவேண்டிய ஆள் படகில் வருவான். அப்படிப்பட்ட ஒரு ஆளை எதிர்பார்திருக்கக் கூடிய உரிமை தனக்கிருக்கிறதா என்று அன்று சிந்திக்க வில்லை. துப்புரவுப் பணி செய்யும் ஒரு பெண்ணின் மகள் அந்த அளவுக்கு ஆசைப்படலாமா? உயர்ஜாதியைச் சேர்ந்த தந்தை அவளுக்கு அளித்தது வெளுத்த தோலை யும், கொஞ்சம் அழகையும்... இன்று அதற்காக அவரைக் குற்றம் சுமத்தவேண்டுமென்று தோன்றவில்லை. தன் தாயுடன் கொண்டிருந்த உறவு அவருக்கு ஒரு விளையாட்டாக மட்டுமே இருந்தது. அப்படியென்றால் தான் ஒரு பொழுதுபோக்கின் விளைவு.
பொழுதுபோக்கிலிருந்து ஆழமான வாழ்க்கை உண்டாகுமா? யாரும் தன்னுடைய வாழ்க்கையைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவே இல்லை. எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றபோது, மாத்து மாஸ்டர் கேட்டார்.
"இனி என்ன நினைக்கிற ருக்மிணி?'
பதில் கூறவில்லை. உயர்நிலைப் பள்ளியில் சேர்வதற்கு யார் பணம் தருவார்கள்? உயர்ந்த ஜாதி யைச் சேர்ந்த தந்தையின் வார்த்தைகள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. "படிச்சு நீதிபதியாகவோ வேறு யாராகவோ ஆகப்போறதில்ல. தெரியுதா? தேவையில்லாத எதையும் சிந்திக்காம குருவாயூரப்பனைக் கும்பிடு...'
தேவையற்றது, தேவையானது... எதையுமே நினைக்க வில்லை. உணவு கிடைத்தது. அதைச் சாப்பிட்டு வளர்ந்தாள். அவ்வப்போது குருவாயூருக்குச் சென்று வழிபடுவாள். "முக்கியமாக எதையாவது நினைத்து வேண்டிக் கொண்டோமா?' எங்காவது போகலாமே! என்று நினைத்து தென்னை மரங்கள் நிழல் பரப்பிய மணற்பரப்பின் வழியாக நடந்துசென்றபோது, மனதிற் குள் கட்டிப் பிடித்துக்கொண்டு எழுந்த உணர்ச்சிகளைப் பற்றியும் நினைத்துப் பார்த்தாள். கவலைப்படுவதற்கு இருப்பைத் தவிர, வேறு எதுவுமில்லை. எனினும், சூரியனுக்கு பிரகாசமும், ஆற்றின் நீரோட்டத்திற்கு வேகமும் அதிகரித்திருப்பதைப்போல தோன்றியது. ஒவ்வொரு இலைக்கும் கூறுவதற்கு ஒவ்வொரு கதை இருந்தது. அன்று இளமை இருந்தது. அவ்வாறு இடக்கழியூரிலிருந்து குருவாயூருக்கு வரும்போதுதான், அவனை முதன்முறையாகப் பார்த்தாள். அதை யெல்லாம் இப்போது ஏன் நினைக்கவேண்டும்? இறந்து விட்ட அனைத்தையும் புதைக்கும் வேலையைத்தான் செய்யவேண்டும்.
வேகமாக வந்த ஒரு ஷவர்லே கார் அவளுக்கு முன்னால் நின்றது.
""குட் மார்னிங் ருக்மிணி.''
பதிலுக்கு மரியாதையை வெளிப்படுத்திய பிறகுதான் யாரென்று பார்த்தாள். எஞ்ஜினீயர் சுகுமாரனும் மனைவியும். நூல் கண்டைப்போல இருந்த ஒரு நாய்க் குட்டி காருக்குள் பதுங்கி விளையாடிக் கொண்டிருந்தது.
""வர்றியா?''
திருமதி சுகுமாரன் கேட்டாள். அந்தப் பெண்தான் காரை ஓட்டி வந்தாள்.
""எங்க?''
""வீட்டுக்கு...''
""மன்னிக்கணும். இப்போ இல்ல.''
முகத்தில் சிறிது புன்னகையை வரவழைத்துக்கொண்டு, கைகளை உயர்த்தி ஆட்டினாள். போய்க்கொள்ளட்டும்... அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் ஆகியோரின் பெருமைகளையும், வாயிலிருந்து வரும் வார்த்தைகளையும் கேட்டுக்கேட்டு வெறுப்படைய வேண்டும். சில நேரங்களில் அவளு டைய அக்காள் மகளின் பாட்டையும் கொஞ்சம் சகித்துக்கொள்ள வேண்டியதிருக்கும்.
சுகுமாரனின் மிடுக்கான இருத்தலைப் பற்றி நினைத்துப் பார்த்தபோது சிரிப்பு வந்தது. பாவம்... பயந்துகொண்டு அமர்ந்திருந்தான்!
ட்ராஃப்ட்ஸ்மேனாக இருந்த காலத்திலிருந்தே அவனைத் தெரியும். சம்பளத்தையும் கைக்கூலியையும் சேர்த்தாலும், வாழ்வதற்கு சிரமமாக இருந்தது. பெண்ணைத் திருமணம் செய்தவுடன், ஆளே பிரகாசமாகிவிட்டான். திருமணச் செலவிற்கு அய்யாயிரம்... கார்... நல்ல லாபம் உண்டான வியாபாரம். அதை ஏற்பாடு செய்து தந்தபோது, உபகாரம் செய்யக்கூடிய சந்தோஷமே உண்டானது என்பதை ருக்மிணி நினைத்துப் பார்த்தாள்.
முதல் கதவு திறந்தவுடன், பிறகு இருக்கும் கதவுகள் அனைத்தும் எளிதில் திறந்தன. இன்று வீடு வந்துவிட்டது... அழகான கார் வந்துவிட்டது.... புதிய உறவினர்களும் நண்பர்களும் வந்துவிட்டார்கள்.
காடு வீடானவுடன், ஆசாரி வெளியே!
திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, நிறைந்த கண்களுடன் அவன் தன்னிடம் கூறிய வார்த்தைகளை ருக்மிணி நினைத்துப் பார்த்தாள்:
"நீங்கதான் இதையெல்லாம் செய்தீங்க.'
"நன்றி சொல்றதுக்காக வந்தீங்களா?'
"இல்ல... இந்த திருமணத்தை எதுக்காக ஏற்பாடு செஞ்சீங்கன்னு தெரிஞ்சுக்கறதுக்காக.... ருக்மிணி, இந்தத் திருமணம் நடக்கறதுல உங்களுக்கு வருத்தமிருக்கா?'
""என் நாய்க்குக்கூட வருத்தமில்ல. அப்பாவி மனுசா... ஏதாவது வகையில கரைசேரப் பாருங்க.''
அவன் கரையை அடைந்தான். அவனுடைய மூக்கணாங்கயிறை திருமதி சுகுமாரன் பிடித்திருந்தாள். எனினும், ஆறு மாதங்கள் கடந்தபிறகு, கடிவாளத்தை அறுத்த பைத்தியம் பிடித்த குதிரையைப்போல அவன் தன்னைத் தேடிவந்த கதையை நினைத்துப் பார்த்தாள். அவன் உணர்ச்சி வசப்பட்டு பிதற்றினான்:
"மறக்கமுடியல.... ருக்மிணி. மறக்க முடியல.'
"நாடக வசனம் எதையும் அடிக்கக்கூடாது. இன்னிக்கு ராத்திரி நீங்க என்னோட இருந்துட்டு காலையில் திரும்பிப் போங்க.'
"என் ருக்மிணி....'
"முட்டாள்தனமா இருக்கக்கூடாது. ஆம்பளைங்களப் போல நடந்துக்கணும்.'
மறுநாள் திரும்பிச் செல்லும்போது, முகத்தில் என்னவொரு விரகதாபம்! அந்த மனிதன்தான் இப்போது மிடுக்காக அமர்ந்திருக்கிறான். "எழுந்திருடா!' என்று சத்தம் போட்டுக்கூறினால், இப்போதுகூட அவன் அமர்ந்திருக்குமிடத்தைவிட்டு எழுந்துவிடுவான்.
போகட்டும்... அவன் ஒரு பழைய செருப்பு!
ஒரு வாடகைக் கார்கூட வரவில்லை. எங்கேயாவது போய் சிறிது நேரம் மன நிம்மதியுடன் அமர்ந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. அந்த அளவுக்கு மனம் அமைதியற்ற நிலையிலிருந்தது. இல்லாவிட்டால்- அது எதற்கு மீண்டும் இடக்கழியூர் பாலத்தைத் தேடி ஓடிவர வேண்டும்? இருட்டில் தனியாகவும், பதைபதைப்புடனும், கவலைப்பட்டுக்கொண்டும் நின்றிருந்த அந்த இளம்பெண்ணைப்பற்றி நினைத்துப் பார்த்தாள்.
இவ்வளவையும் கூறிவிட்டு, நம்பிக்கையை உண்டாக்கிவிட்டு அவன் வராமல் இருப்பானா? அந்த விஷயத்தில் சந்தேகமே படவேண்டாம்.
ஆற்றில் அலைகளின் குலுங்கல் சிரிப்புகள் அவ்வப் போது பயத்தை உண்டாக்கின.
திடீரென்று வேட்டியை மடித்துக் கட்டி, ஒட்டகக் கால்களை நீட்டி... நீட்டி வைத்தவாறு, மண் பாதையின் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு மனிதன் அவளைப் பார்த்ததும் அருகில் வந்தான். சந்தோஷப்படவில்லை. முழுமையாக ஒருமுறை பார்த்துவிட்டு, அவன் கேட்டான்.
"எங்கே?'
"தெரிஞ்சு உனக்கு என்ன கிடைக்கப் போகுது?'
எதிர்பார்த்திராத பதிலைக் கேட்டதும், அவன் சற்று நெளிந்தான். தொடர்ந்து நடக்க ஆரம்பித்தபோது கூறினான்: "இப்படி நின்னுக்கிட்டிருப்பதைப் பார்த்தப்போ, சாப்பிடலைன்னு தோணுச்சி. அதனால கேட்டேன்.' பதிலைக்கேட்பதற்கு நிற்காமல், ஒட்டகக் கால் மனிதன் அங்கிருந்து வேகமாகக் கிளம்பினான்.
"ருக்மிணி... பதைபதைப்பு உண்டாயிருச்சா?' படகிலிருந்து இறங்கிவந்து அவன் கேட்டபோது. தேம்பித்தேம்பி அழுதுவிட்டாள்.
"ஏன் அழறே?'
"அதைக் கூறுவதா இருந்தா பிறகு அழமாட்டேனே!'
ஆழமான நம்பிக்கையுடன், நிறைந்த ஆசைகளுடன் அன்று படகில் ஏறினாள். அலைகளை எதிர்த்தவாறு படகு இருட்டில் நீங்கிப் போய்க்கொண்டிருந்தது. கரை தெரியாத கடலின் வழியாக மனம் நீந்திக்கொண்டிருந்தது. பிறகு...
அந்த கதைகளை நினைத்துப் பார்க்காமலிருந்து, சிறிது காலம் ஓடிவிட்டது. இன்று அவையெல்லாம் மனதில் எழுந்து வருகின்றன.
"ருக்மிணி, உனக்கு வருத்தமா இருக்கா?' படகில் ஏறியபோது, அவன் சரீரத்துடன் ஒட்டி அமர்ந்து கொண்டே கேட்டான்.
"இல்ல... எனக்கு நம்பிக்கை இருக்கு. மரணம் வரை நான் நம்புவேன்.'
"நானும்...'
அந்த வார்த்தையைப்போல இனிமையான குரலை வாழ்க்கையில் கேட்டதில்லை. ஆனால், மாதவி கூறியதுதான் "சரி' என்று தோன்றுகிறது. ஆண்கள் காற்றைப்போன்றவர்கள்... சில நேரங்களில் நறுமணத்தையும், சில நேரங்களில் நாற்றத்தையும் கொண்டு வருகிறார்கள்.
நகரத்தை அடைந்ததும், அவன் கூறினான்: "இனி உன் அம்மாவுக்கு எழுதிடு... சந்தோஷமாக இருக்கேன்னு. அதிகமா எதையும் எழுத வேணாம்!'
அவன் மிகவும் ஆழமாக சிந்திக்கக் கூடியவன் என்பதாகத் தோன்றியது.
"அந்த நாட்கள் எண்ணிக்கையில் குறைந்துபோனதை நினைத்து, கவலைப்பட வேண்டுமா?' ருக்மிணி நினைத் தாள். "எந்த அளவுக்கு சந்தோஷமான நாட்கள்! எந்த அளவுக்கு மதிப்புள்ள நாட்கள்!'
"பல்காமுக்குப் போய்ட்டு பதினொன்னாவது நாள் திரும்பி வருவேன். தனியா இந்த வீட்ல இருக்க கவலையா இருக்கா? வேலைக்காரி மாணிக்கத்த இங்கயே இருக்கச் சொல்றேன். போதுமா?'
"போதும்'.
பதினொன்றாவது நாள்! எத்தனை பதினோரு மாதங்கள் கடந்து சென்று விட்டன! பல்காம் என்ற அந்த நகரம் எங்கிருக்கிறது என்று தெரியாது.
ஆனால், அந்த நகரத்தையும் அங்கு நிரந்தரமாக வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கும் நெருப்பு மலைகளையும் அவள் கனவுகண்டிருக்கிறாள். அவனைத் தின்ற நெருப்புமலை எதுவாக இருக்குமென்பதை நினைத்து எவ்வளவு அழுதிருக்கிறாள்!
வருடங்கள் கடந்தோடின. பல விஷயங்களும் நடந்தன. பல அனுபவங்களும் கிடைத்தன. தான் தளர்ந்து... தளர்ந்து போய்க்கொண்டிருப்பதாக நினைத்தாள். ஆனால், அந்த நிலையின் எதார்த்தம் தடுக்கமுடியாத ஒன்றாக இருந்தது.
இனியொரு நாள் அவனைச் சந்திப்பதாக இருந்தால், எப்படி இருக்குமென்று ருக்மிணி சிந்தித்துப் பார்த்திருக்கிறாள். போதுமென்று தோன்றுமளவுக்கு அவனைப் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, கூறுவாள்: "நீங்க தேடிக்கிட்டிருக்கற ஆள் இங்க இல்ல. ஒரு ப்யூக் கார் ஏறி, ருக்மிணி என்னிக்கோ இறந்துட்டா.''
ஆனால், பல வருடங்கள் கடந்தபிறகு, மீண்டும் அவன் வந்து "ருக்மிணி' என்று அழைத்தபோது, முற்றிலுமாக இழைந்துபோய்விட்டாள். எதைப் பார்த்தும் பயப்படாமல் ருக்மிணி இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதைக் காட்டவேண்டுமென்று ஆசைப்பட்டாள்.
அவனுக்கு அது எதுவுமே அந்த அளவுக்கு முக்கியமான விஷயமாக இருக்கவில்லை. உயர்ந்த ஜாதியைச் சேர்ந்த தந்தை தன் தாயை ஒரு பொழுது போக்கிற்காக ஏற்றுக்கொண்டதைப்போல, அவன் மனதில் நினைத்திருக்கலாம்.
எந்த அளவிற்கு கொடூரமான விதத்தில் பொழுதுபோக்குகள் மீண்டும் நடக்கின்றன என்பதை ருக்மிணி நினைத்துப் பார்த்தாள்.
அந்த மனிதனுக்கு மீண்டும் அவள் தேவைப்பட்டாள். ஒரு ஆளாவது அந்த வகையில் நன்றாக இருக்கட்டும். அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தாள். உயர்வு உண்டானது. அனைத்தும் முடிந்தவுடன், அவனிடம் கேட்டாள்:
"திருமணம் எந்த தேதியில நடக்குது?'
அவன் தாளின் நிறமாகிப் போனான்.
"பதைபதைக்காம சொல்லுங்க.... அவள் ஏத்துக்கற அளவுக்கு இருக்கக்கூடிய பெண்தானா?'
தலையைத் தாழ்த்தி வைத்தவாறு கடந்து சென்றபோது, குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு எந்தவொரு உணர்வும் தோன்றவில்லை. திருமணச் செய்தியைத் தெரிந்துகொண்டபோதும், அசாதாரணமாக ஏதாவது உண்டானதாக நினைக்கவில்லை.
திடீரென்று ஒரு கார் வேகமாக ருக்மிணி நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தது. அதிர்ச்சியடைந்து பின்னோக்கிச் சென்றாள். ஒரு ஸ்டாண்டர்ட் கார்...
""ஹலோ!''
ஆஃபீஸர்...
""வர்றியா?''
""எங்க?''
""ருக்மிணி, நீ எங்க போகணும்?''
""நல்ல உணவு கிடைக்கற ஏதாவதொரு ஹோட்ட லுக்கு... அந்த அளவுக்கு பசி இருக்கு...''
காரின் கதவு திறக்கப்பட்டது. அவள் ஏறி அமர்ந்தாள். சிவந்த கன்னத்தையும், அரும்பு மீசை யையும், சீவி சீவாமல் இருப்பதைப்போல இருந்த முடியையும் அவள் பார்த்தாள். வெளுத்த டெர்லின் சட்டைக்கு நடுவில் தொங்கியவாறு ஆடிக்கொண்டி ருக்கும் தவிட்டு நிறத்தைக் கொண்ட கழுத்துப் பட்டையில் பொன்னிற ஒற்றைப் பட்டாம்பூச்சி பறந்து விளையாடிக்கொண்டிருந்தது. அதைப் பிடித்து ஒதுக்கவேண்டுமென்று ருக்மிணி நினைத்தாள். எனினும், கை எழவில்லை. முதல் திருப்பம் கடந்தவுடன் ஆஃபீஸர் ஸ்டியரிங்கில் விரலால் தாளம் போட்டவாறு கூறினார்: ""ருக்மிணியைப் பார்க்கவே முடியல.'' ""ருக்மிணியைப் பார்க்கவே இல்லைன்னு சொல்லுங்க.''
""அந்த வார்த்தை இரக்கமற்றதா இருக்கு.''
""மன்னிக்கணும்... அப்படின்னா, நான் "வாபஸ்' வாங்கிக்கிறேன். இன்னிக்கு சாங்காலம் உங்களைப் பார்க்கணும் நினைச்சேன்...''
""மதிய வேளையிலேயே பார்த்துட்டியே.''
இருவரும் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்கள். பெரிய ஒரு நகைச்சுவையைக் கூறியதைப்போலவும், கேட்டதைப்போலவும்....
ஹோட்டல் "டி'க்கு முன்னால் கார் நின்றது. சிவப்புநிற தரைவிரிப்பு விரிக்கப்பட்டிருந்த படிகளின் வழியாக ஏறியபோது, ஆஃபீஸர் சாய்ந்து பார்த்தவாறு கூறினார்: "ருக்மிணி, நீ மேலும்... மேலும் அழகியாகிட்டு வர்றியே!'
""நன்றி... சார்.'' இதைக் கூறிவிட்டு, சற்று ஆடியவாறு குழையவும் செய்தாள். தெரிந்தேதான்....
உணவுக்கு "ஆர்டர்' கொடுத்துவிட்டு, ஆஃபீஸர் கோட்டை அவிழ்த்து ஸ்டாண்டில் தொங்கவிட்டார். கழுத்துப் பட்டையை சற்று தளர்த்தினார். தொலை பேசியை எடுத்து "டயல்' செய்தார்.
""பாலசுப்ரமணியம்... கையெழுத்து போடக்கூடிய தாள்களை வீட்டுக்கு அனுப்பு. நான் அஞ்சு மணிக்குதான் வீட்டுக்குப் போவேன்.'' தொலைபேசியைக் கீழே வைத்துவிட்டு, கையைக் கழுவிவிட்டு, சாப்பாட்டு மேஜைக்கருகில் அமர்ந்தபோது ருக்மிணி கேட்டாள்:
""அன்னைக்கு சொன்ன அந்த லைசன்ஸ் விஷயம்....''
""ருக்மிணி, உனக்கு எங்கிட்ட எதுக்கும் லைசன்ஸ் இருக்கே?''
இருவரும் சிரித்தார்கள். மிகப்பெரிய நகைச்சுவையைக் கூறியதைப்போலவும், கேட்டதைப்போலவும்....
""பாருங்க...'' ருக்மிணி தொடர்ந்து கூறினாள்: ""ஒரு ஏழை இளைஞன்... பிழைச்சுக்கட்டும்...''
""ருக்மிணி... நீ விரும்பிக் கேட்கற விஷயமாச்சே!
அதுபோதும். சரி பண்ணுறேன்.''
""உண்மையாவா?''
""உண்மை... நாளைக்கு ஃபோன் பண்ணு.''
குடியும் உணவும் முடிந்தன. கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும். கையின்மீது கையை அழுத்தி வைத்தவாறு படுத்தார்கள். கொஞ்சம் தூங்கவும் செய்தார்கள்.
பூங்கொத்துகளுடன் கனவு வந்தது. அவை நறுமணத்தைப் பரப்பின. ஒவ்வொன்றாக உதிர்ந்தன...
கண் விழித்தபோது, ஆஃபீஸர் போய்விட்டிருந்தார். திரு. கங்காதரனின் லைசன்ஸ் விஷயம் நாளை சரியாகி விடும். சந்தோஷம் உண்டானது. ருக்மிணி நினைத்துப் பார்த்தாள். தான் கனவு கண்டுகொண்டிருந்தோமோ? அப்படியே இருந்தாலும், பல்காமில் வெடித்துச் சிதறும் நெருப்பு மலைகளாக இல்லை என்பதென்னவோ உண்மை.
கடிகாரத்தைப் பார்த்தாள். நான்கரை ஆகியிருந்தது. இரண்டு மணி நேரத்திற்குள் வருவதாக மாதவியிடம் கூறியிருந்தாள்.
போக வேண்டுமா? நேராக வீட்டிற்குச் சென்று, சற்று ஓய்வெடுத்தால் என்ன?
குழந்தையை மார்பில் சேர்த்து வைத்தவாறு நின்றுகொண்டிருக்கும் மாதவியின் உருவம் மனதிற்குள் நிழலாடியது. என்ன ஒரு பலசாலியான பெண்! என்ன அழகு! அப்போதே வேறுமாதிரியும் நினைத் துப் பார்த்தாள். அவளுக்கு என்ன பலமிருக்கிறது? எனினும் போகவேண்டும். நாளைக் காலையில் அவன் "டூர்' முடிந்து வருவான். பிறகு... அங்கு போகவோ எதையாவது கூறவோ வாய்ப்பிருக்காது. அவர்களுடைய வாழ்க்கையை தான் அபகரிக்கப்போவதில்லை. "ஒரு வாழ்க்கையை உண்டாக்கித் தந்தேன்' என்பதை உணரச் செய்யவேண்டும். உணர்வாளா?
ஆடை அணியும்போது ரோஜா மலர் நிறத்திலிருந்த சாளரத்தின் திரைச்சீலைகளை ருக்மிணி பார்த்தாள். ஒரு குழந்தையின் கன்னத்தை அது ஞாபகத்திற்குக் கொண்டு வந்தது.
வெயிட்டருக்கு "டிப்' தந்துவிட்டு, வாடகைக் காரில் ஏறியமர்ந்தபோது, ருக்மிணி சிந்தனையில் மூழ்கியிருந்தாள். கடந்த காலம் திரும்பத் திரும்ப எழுந்து வந்துக்கொண்டிருந்தது. பயமுறுத்தக்கூடிய பேய்களைப் பற்றி சிறு வயது காலத்தில் சொல்லக் கேட்டிருக்கிறாள். அவை சம்பந்தப்பட்டவர்களுக்குப் பின்னால் வந்து நிற்குமாம். கடந்த காலமும் அப்படித் தானோ?
தனக்கு மாதவியுடன் உறவிருக்கிறது என்ற விஷயத்தை எந்த சமயத்திலும் அந்தப் பெண் அறியக்கூடாது. தன் மாமாவும் அவருடைய தந்தையுமாக இருந்த அந்த மனிதர் எப்போதோ இறந்துவிட்டார். பிணங்கள் அனைத்தும் புதைக்கப்பட்ட வேண்டும்.
""இடது பக்கம்தானே?'' ஓட்டுநர் கேட்டார்.
""ஆமா.''
திருப்பத்தில் திரும்பும்போது, "குட்லக்'கின் திரு. ராவ் கடந்து செல்வதை ருக்மிணி பார்த்தாள். ஸ்கூட்ட ருக்குப் பின்னால் ஒரு தாடிக்காரரான பாதிரியார் அமர்ந்திருந்தார். பொதுவாக திருமதி ராவ்தான் அங்கு வழக்கமாக அமர்ந்திருந்ப்பாள். இந்த காலத்தின் ஒரு அடையாளமாக ராவ் இருப்பதாக ருக்மிணிக்குத் தோன்றுவதுண்டு. ஐந்து காதலிகளையும், நான்கு பாதிரியார்களையும், ஒரு துறவியையும், நான்கு கம்யூனிஸ்ட்காரர்களையும், அதே அளவுக்கு ஆர்.எஸ்.எஸ்.காரர்களையும், கொஞ்சம் அய்யப்பன்மார்களையும் ஒரே காரில் ஏற்றிக்கொண்டு, எல்லாருடனும், ஒரேவிதத்தில் இனிமையாக உரையாடிக்கொண்டு, எல்லாருக்கும் தன்மீது மதிப்பை உண்டாக்கிக்கொண்டு, பயணம் செய்வதற்குத் திறமை கொண்ட மனிதர்... காலத்தின் அடையாளம்தான் திரு. ராவ்...
தன்னால் என்ன காரணத்தால் அந்த அளவுக்கு முன்னோக்கிச் செல்ல முடியவில்லை என்பதையும் ருக்மிணி சிந்தித்துப் பார்த்தாள். பதில் இல்லை.
கார் நின்றது. கேட்டை இழுத்துத் திறந்து உள்ளே சென்றாள். குழந்தையைத் தொட்டிலில் ஆட்டியவாறு மாதவி உறங்க வைத்துக்கொண்டிருந்தாள். ருக்மிணியைப் பார்த்ததும் வழக்கத்திற்கு மாறாக மாதவியின் முகத்தில் ஒரு சிறிய அதிர்ச்சி உண்டானதை ருக்மிணி கவனிக்காமல் இல்லை. அவள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்: காரணம்? காரணம்! வராமல் இருந்திருக்கலாமோ!
""இனிமே இன்னிக்கு வரமாட்டீங்கன்னு நான் நினைச் சேன்.'' மாதவி கூறினாள்.
""வாக்குறுதி தந்தேன் இல்லியா?''
""நல்லது... உட்காருங்க.''
அவள் குழந்தையைப்பற்றிக் கூற ஆரம்பித்தாள். பிறகு... பால், பருப்பு, காய்கறி ஆகியவற்றின் விலை உயர்வைப் பற்றி... துணிவகைகளையும், நகைகளையும் பற்றிப் பேசினாள். சிறிது நேரம் கடந்தபிறகு, ருக்மிணியும் பங்கு சேர்ந்துகொண்டாள். மாதவியின் பேச்சை அவள் புத்திசாலித்தனமாக கணவனை நோக்கித் திருப்பிவிட்டாள்.
சிறிது நேரம் சென்றதும், ருக்மிணி கேட்டாள்:
""நீங்க என்னை தவறா நினைக்கலையா?''
""எதுக்கு?'' மாதவியின் விசாரணை அமைதியான முறையில் இருந்தது. மாதவியை தலையிலிருந்து பாதம்வரை ருக்மிணி ஒருமுறை பார்த்தாள். தொடர்ந்து கூறினாள்:
நான் மனசைத் திறந்து பேசறதுக்காக மன்னிக்கணும். என்மேல உங்களுக்கு சந்தேகம் இருக்குது. அது நியாயமானது.''
""என்ன?'' விமானத்தைப் பார்த்த குக்கிராமத்தைச் சேர்ந்த சிறுமியைப்போல மலர விழித்த கண்களுடன் மாதவி இவ்வாறு கூறினாள்.
""முழுசையும் கேளுங்க. உங்க கணவருக்கு என்மேல ஈடுபாடுன்னு கொஞ்ச நாளா நடிச்சார். அது பொய்யானதுன்னு எனக்குத் தெரியாததைப்போல நானும் நடிச்சேன். அவருக்கு வேலையில சில உயர்வுகள் வேணும்- அதுக்கு என்னைப் பயன்படுத்திக்கணும்.''
மாதவியின் முகத்தில் வெளிப்பட்ட பதைபதைப்பை ருக்மிணி கவனித்தாள். அவள் தொடர்ந்தாள். ""பயன்படுத்திக்கட்டும்னு நானும் நினைச்சேன். நம்ம வாழ்க்கையால யாருக்காவது பயன் கிடைக்குதுங்கறது சந்தோஷமான விஷயம்தானே! உங்களுக்கும் இந்த குழந்தைக்கும் அதனால பயன் கிடைச்சதுக்கு நான் மேலும் சந்தோஷப்பட்டேன். புரியலையா?''
""ம்... சொல்லுங்க.''
""எல்லாம் முடிஞ்சவுடன், அவர் என்னை ஒரு பழைய செருப்பைப்போல நினைச்சார். நான் அதற்காக சந்தோஷப்பட்டேன். ஏதாவதொரு இடத்தில பார்க்கும்போது "குட் ஈவ்னிங்.... குட் மார்னிங்'னு சொல்லிட்டு, கிளம்பிடுவார். அவர் விலகிப்போனதைவிட அதிகமா நான் அவர்கிட்டயிருந்து விலகிப் போனேன். காரணம் என்னன்னு தெரியுமா?''
""சொல்லுங்க...'' குத்துக்கல்லைப்போல அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த மாதவி கேட்டாள்.
""இந்த குடும்பத்தில பிரச்சினை உண்டாகணும்னு நான் ஆசைப்படல.'' ருக்மிணி தொடர்ந்தாள். ""நம்ப முடியல. அப்படித்தானே?''
""ஆமா... ருக்மிணி, இந்த குடும்பத்தின்மேல நீங்க தனிப்பட்ட ஈடுபாடு காட்டுறது இயல்புதானே?''
""எதனால?''
""நாம ரத்த உறவு கொண்டவங்களா இருக்கறதால...''
""என்ன?''
""நீங்க என் அப்பாவோட மருமகள் இல்லியா?''
தலையில் அடிவிழுந்ததைப்போல தோன்றியது. ருக்மிணி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள். கடந்தகாலம் அதன் கூர்மையான நகங்களைக் கொண்ட கைகளை மார்பில் அழுத்தியதைப்போல இருந்தது.
அவள் மாதவியின் முகத்தையே பார்த்தாள். வெற்றியின் பிரகாசம் அந்த கண்களை ஒளிரச்செய்திருக்கிறது. ருக்மிணி கூறினாள்:
""இனி எனக்கு சொல்ல எதுவுமே இல்ல.''
""இனி நான் சொல்றேன்.'' மாதவி தன் முறை வந்துவிட்டது என்பதைப்போல ஆரம்பித்தாள்: ""நீங்க என் தந்தையோட மருமகள் மட்டுமில்ல- என் கணவரின் காதலியாவும் இருந்தீங்க என்ற விஷயம் எனக் குத் தெரியும். அவரை நம்பி, அவரோட ஓடிப்போன பெண்ணுங்கற விஷயமும் எனக்குத் தெரியும்.''
ருக்மிணி வேகமாக எழுந்து மாதவியின் கையை இறுகப்பற்றினாள். அவர்கள் ஒருவரின் கண்களை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.
இறுதியில் ருக்மிணி கேட்டாள்.
""மாதவி, நீங்க யாரு? மோகினியா... பத்ரகாளியா?''
""உங்க மாமாவோட மகள்.. ஒரு சாதாரண பெண்...''
ருக்மிணி தேம்பித்தேம்பி அழுதவாறு மாதவியின் மார்பின்மீது சாய்ந்தாள்: ""இல்ல... இனி எந்தக் காலத்திலும் உங்களால என்ன நம்ப முடியாது. எதிரியா நினைக்கத்தான் முடியும். ஆனா, தயவுசெய்து நம்புங்க... உங்க கணவர் இப்போ என்னுடைய காதலர் இல்ல. நீங்க யாருங்கறதைத் தெரிஞ்சுக்கிட்டதிலிருந்தே இந்தக் குடும்பத்தோட பாதுகாப்புக்காக நான் அவருக்கு உதவினேன்ங்கறது மட்டுமே உண்மை.''
""ஆனா...'' மாதவி தயங்கியவாறு நின்றாள்.
""தயங்காம சொல்லுங்க. இனி ஏன் தயங்கணும்?''
""காலாவதியாகிவிட்ட ப்ரோ நோட்டைப்போல, காதலரைத் திருப்பித்தர முடியுமா?''
""நான் அந்த ப்ரோ நோட்டை எப்போதோ கிழிச்செறிஞ்சிட்டேன். பிறகும் ப்ரோ நோட்டுங்க என்னைத் தேடிவந்தன. நான் அவற்றைப் பணயம் வச்சேன். வித்தேன். கிழிச்செறிஞ்சேன். காத்துல பறக்கவிட்டேன். உங்களைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, அவர் எந்த சமயத்திலும் என் படுக்கையறையோட தோற்றத்தையே பார்த்ததில்லை.'' இதைக் கூறியபோது, ஹோட்டல் "டி' யின் ரோஸ் நிறத்திலிருந்த தீரைச்சீலைகள் அவளுடைய மனதில் ஓடி விளையாடின. அவள் இதையும் சேர்த்துக் கூறினாள்: ""விருப்பமிருந்தா நம்புங்க... இல்லாவிட்டாலும் எனக்கு எதுவுமில்ல.''
""அவரை வெறுப்பாலதானே விலக்கிவிட்டீங்க?'' மாதவி சுருங்கித் தாழ்ந்த பார்வையுடன் கேட்டாள்.
""நெருக்கமா இருக்கச் செய்தவங்ககிட்ட வெறுப் பிருக்காதுன்னா நினைக்கிறீங்க? எந்த சமயத்திலும் காற்று என்னிடம் நறுமணத்தைக் கொண்டு வந்ததில்லை. வந்த காற்றையெல்லாம் நான் ஏத்துக்கிட்டேன்.
அவ்வளவுதான்.''
மாதவி பதில் கூறவில்லை. அந்த கண்கள் நீரால் நிறைகின்றன என்பதை ருக்மிணி புரிந்துகொண்டாள். அவள் தொடர்ந்து கூறினாள். ""என்ன நினைச்சாலும் பரவாயில்லை. வெறுக்கவோ அன்பு செலுத்தவோ இயலாத அளவுக்கு என் இதயம் மரத்துப்போய்விட்டது. இருந்தாலும் இந்த குழந்தையைப் பார்த்தப்போ.''
சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு அவள் எழுந்தாள்: ""நான் வர்றேன்...''
""உட்காருங்க ருக்மிணி. காபி குடிச்சிட்டுப் போலாம்.''
வேலைக்காரன் ட்ரேயுடன் வெளியே வந்தான். ஓவல் டின்னை எடுத்து கையில் தந்தான்.
அதைப் பார்த்ததும் மாதவியின் முகத்தில் உண்டான அதிர்ச்சி, ருக்மிணியை ஆச்சரியப்படச் செய்யாமல் இல்லை. வேலைக்காரனிடம் மாதவி கேட்டாள்:
""இது தெர்மா ஃப்ளாஸ்க்கிலிருந்து எடுத்ததா?''
""ஆமா.''
""அப்படின்னா...'' மாதவி தடுத்தாள்: ""இதைக் குடிக்கவேணாம்.''
""எதனால?''
""கெட்டுப் போயிருக்கும்.''
""பரவாயில்ல.''
ருக்மிணி கப்பை உதட்டில் வைத்தாள்.
""அய்யோ... வேணாம்...'' அந்த கப்பை மாதவி தட்டி, கீழேவிழச் செய்தாள். தொடர்ந்து பெரிய ஒரு சாகசச் செயலைச் செய்ததைப்போல நின்று பெருமூச்சுவிட்டாள்.
அவர்கள் ஒருவரையொருவர் அமைதியாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். பெண் புலிகளைப்போல, குத்துவதற்குத் தயாராக இருக்கும் பசுக்களைப்போல, இறுதியில் ஒன்றைப் பார்த்து ஒன்று பயப்படக்கூடிய இளம்மான்களைப்போலவும்...
ருக்மிணி மெதுவாக சிரித்தாள்.
மாதவி முகத்தைத் தாழ்த்திக்கொண்டு நின்றிருந்தாள். அவள் தேம்பித்தேம்பி அழுதாள்: ""மன்னிக்கணும்... என்னால தாங்கிக் முடியல.''
""பரவாயில்ல...'' ருக்மிணி தேற்றினாள்: ""சொந்த இருப்புக்கு ஆபத்து உண்டாகிடும்னு தோணும்போது, யாருமே இப்படித்தான் நடந்துக்குவாங்க. அக்கா, ஆண்கள் மட்டுமல்ல... பெண்களும் காற்றுதான். சில நேரங்கள்ல நறுமணத்தைக் கொண்டு வருவாங்க. சில நேரங்கள்ல கெட்ட நாற்றத்தையும்...''
மாதவி அவளை இறுக அனைத்துக் கொண்டாள். அவள் இவளையும்...
இவ்வாறு எவ்வளவு நேரம் நின்றார்கள்? என்னவெல்லாம் சிந்தித்தார்கள்?
குழந்தை அழுததைக் கேட்டதும், மாதவி பிடியை விட்டாள். ருக்மிணி கூறினாள்:
""நான் வரட்டுமா?''
""சரி...''
படிகளில் இறங்கினாள். வாடகைக் காரில் ஏறிய போது, ருக்மிணியின் இதயமும் அன்னப்பறவையின் தூவலைப்போல கனமற்றதாகத் தோன்றியது . அவள் நினைத்தாள்:
"அந்த விஷயம் அப்படி... அங்கேயே முடிஞ்சிருச்சி. நாளை காலைல ஆஃபீஸருக்கு போன் பண்ணனும்- கங்காதரனின் லைசன்ஸ் விஷயமா...'
கார் நகர்ந்தவுடன், இருக்கையில் சாய்ந்து கிடந்தாள். சாளரத்தின் வழியாக வானத்தை நோக்கி கண்களைச் செலுத்தினாள். இருண்ட வானத்தில் நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தன. முன்பு எப்போதோ படித்த இரண்டு வரிகளை அவள் முணுமுணுத்தாள்:
"சாம்பலாகும் வரைக்கும் என் உயிர் அழகைத் தழுவி நிற்கவேண்டும்.'
திரும்பத் திரும்ப பாடியபோது, வாடைக்காரின் ஓட்டுநர் திரும்பிப் பார்த்தார். ருக்மிணிக்கு சந்தோஷம் உண்டானது. ஒரு புன்னகையை அவருக்கு பரிசாகத் தந்துவிட்டு, உலகம் கேட்கவேண்டும் என்பதைப்போல அவள் கூறினாள்:
""இன்று நறுமணம் நிறைந்த நாள்...''
அப்போதும் இடக்கழியூரின் பாலமும், அதில் கடந்து சென்றுகொண்டிருக்கும் படகுகளும் மனதில் தங்கி நின்றிருந்தன.