சமீபகாலமாக போராட்டம், வழக்கு, ஜெயில், தேர்தல் பிரசாரம் என்று சென்றுகொண்டிருந்த நடிகர் மன்சூர்அலிகான் தற்போது படப்பிடிப்புத் தளம், வீடு என தன் கவனம் முழுவதையும் நடிப்பிலே செலுத்தத் துவங்கி இருக்கிறார். பெரும்பாலும்
அலைபேசியில்கூட அவரைப் பிடிக்கமுடியவில்லை. அவருக்கு அழைத்தால் அவரது மேனேஜர்தான் போனை எடுக்கிறார். நீண்ட முயற்சிக்குப் பிறகு மன்சூர்அலிகானைத் தொடர்பு, ""ஏன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்குறீர்கள்?'' என்று கேட்டபோது,
""என் மகளுக்குத் திருமண வரன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மகளுக்கு நீதிபதியாக வேண்டும் என்பது கனவு. அதற்காக அவர் படித்துக்கொண்டிருக்கிறார். படிப் பின்போதே திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும் இப்போது நிறைய படங்களிலும் நடித்துவருகிறேன். கௌதம் மேனன் இயக்கும் படம், இயக்குநர் சற்குணத்தின் படம், தங்கர்பச்சான் இயக்கும் படம், ரெஜினா கசான்ட்ராவோடு ஒரு படம், விமல், விக்ரம் பிரபு ஆகியோரின் படங்களிலும் நடித்துவருகிறேன். மனிதர்கள்மீதான அன்பும், செய்யும் தொழில்மீதான பற்றும்தான் என்னை இப்போது உற்சாகமாக்கி வருகிறது. சினிமா வாழ்விலும் என் வீட்டிலும் இன்னும் பல நல்ல செய்திகள் வரும்'' என்றார்.