ரு ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால், அந்த ஜாதகருக்கு உடல்நலம் நன்றாக இருக்கும். பணவசதி இருக்கும். நன்கு படித்தவராக இருப்பார். நிறைய நல்ல செயல்களைச் செய்வார். ஆனால், குரு கெட்டிருந்தால் மூட்டுவலி, முதுகுத் தண்டில் பாதிப்பு, உடல் பருமன், காலில் நோய், மலச்சிக்கல், ஈரலில் நோய் ஆகியவை வரும்.

guru

லக்னத்தில் குரு இருந்தால் அந்த ஜாதகர் பெரிய மனிதராக- நல்லவராக இருப்பார். ஒரு தலைவராக இருந்து எதையும் தைரியமாகச் செய்வார். லக்னத்தில் குரு உச்சமாக இருந்தால், அந்த ஜாதகர் நிறைய தர்மகாரியங்களைச் செய்வார். பெரிய அரசியல்வாதியாகவும் இருப்பார். குரு பலவீனமாக இருந்தால், குழப்பவாதியாக இருப்பார். ஜீரணக் கோளாறு இருக்கும். நிறைய பொய்கள் பேசுவார்.

அதனால் பெயர் கெடும். குரு- சனி, ராகுவுடன் இருந்தால், தாயின் உடல்நலத்தில் பாதிப்பு உண்டாகும். செவ்வாயுடன் குரு இருந்தால் மற்றவர்களின் பணத்தை தைரியமாக எடுத்து செலவழித்து, தன் காரியத்தை முடித்துக் கொள்வார். சந்திரனுடன் குரு இருந்தால், குருச் சந்திர யோகத்தால் அவருக்கு பணவசதி உண்டாகும். புகழுடன் வாழ்வார்.

Advertisment

2-ல் குரு இருந்தால், ஜாதகருக்கு நல்ல பணவசதி, பேச்சாற்றல், தைரிய குணம் இருக்கும். குரு- சனி, ராகுவுடன் இருந்தால், சிலர் திக்கித்திக்கிப் பேசுவார்கள். சூரியன், புதனுடன் குரு இருந்தால் ராஜயோகத்துடன் வாழ்வார்.

3-ல் குரு இருந்தால், ஜாதகர் இளம் வயதிலேயே பல இடங்களுக்கும் சுற்றிக் கொண்டிருக்கும் பணியில் இருப்பார். நிறைய பயணம் செய்ய வேண்டியதிருக்கும். சிலருக்கு அடிக்கடி ஜுரம் வரும். செவ்வாய், புதனுடன் குரு இருந்தால், சிலர் வெளியே சென்று படித்து, புகழைப் பெறுவார்கள். ராகுவுடன் குரு இருந்து அதை சனிபகவான் பார்த்தால், அவருக்கு சகோதரர்களுடன் உறவு சரியாக இருக்காது. உடல் நலமும் நன்றாக இருக் காது. எனினும் நிறைய அலைந்து அவர் பணம் சம்பாதிப்பார்.

4-ஆம் பாவத்தில் குரு இருந்தால், அந்த ஜாத கருக்கு வீடு, வாகனம் ஆகியவை இருக்கும். சந்திரனுடன் குரு இருந் தால் பூர்வீகச் சொத்து கிடைக்கும். சனியுடன் குரு இருந்தால், இல்வாழ்க்கையில் சிக்கல்கள் உண்டாகும். இளம் வயதிலேயே வெளியே சென்று பணி செய்யவேண்டியதிருக்கும். நிரந்தர வேலை இருக்காது. 32 வயதிற்குப்பிறகு நல்ல வேலைகிட்டும். செவ்வாய், சனியுடன் குரு இருந்து, ராகு பார்த்தால், அவர்கள் அதிகமாகப் பேசுவார்கள். அதனால் குடும்ப வாழ்வில் சந்தோஷம் இருக்காது.

Advertisment

5-ல் குரு தனித்திருந்தால், அந்த ஜாதகருக்கு வாரிசு உண்டாவதில் பிரச்சினை இருக்கும். கேதுவுடன் குரு இருந்தால், குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும். குரு நீசமாக இருந்தால், பிள்ளைகளால் எந்தப் பயனும் இருக்காது. குரு, சனி, சூரியனால் பார்க்கப்பட்டால், பெண்களின் கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். ஆணுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும். குரு- செவ்வாய், சூரியனுடன் இருந்தால், அவர் உயரதிகாரியாக இருப்பார். குரு- சந்திரன், சூரியனுடன் இருந்தால் பெரிய அரசியல்வாதியாக இருப்பார்.

6-ல் குரு இருந்தால், அடிக்கடி காலில் நோய் உண்டாகும். குரு, சனியுடன் இருந்தால் மூட்டு வலிவரும். குரு, ராகு, சனி 6-ல் இருந்தால், மூட்டுவலி, முதுகுத்தண்டில் நோய்வரும். குரு பகவான் கேது, சனியுடன் இருந்தால், தேவையற்றதைப் பேசி பகைவர்களை உண்டாக்கிக்கொள்வார்கள்.

7-ல் குரு இருந்தால், சிலருக்கு திருமண விஷயத்தில் தடை ஏற்படும். 7-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால், சிலருக்குத் திருமணம் நடக்காது. அப்படியே நடந்தாலும் சந்தோஷம் இருக்காது. குரு- செவ்வாய், சந்திரனுடன் இருந்தால், ஜாதகருக்கு உடல் பருமன் ஏற்படும். சிலர் யாரையும் மதிக்காமல் மட்டம்தட்டிப் பேசுவார்கள். சிலர் நன்கு தூங்குவார்கள்.

8-ல் குரு இருந்தால், அந்த ஜாதகருக்கு இளம்வயதிலேயே சிறுநீரகத்தில் பிரச்சினை இருக்கும். குரு, கேதுவுடன் இருந்தால், அவர் அரசியல்வாதியைப்போல நடந்துகொள்வார். குடும்பத்தில் சண்டை இருக்கும். குரு, சனியடன் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் மனைவிக்குத் தெரியாமல், வேறு பெண்ணுடன் உறவுகொண்டிருப்பார்கள்.

9-ல் குரு நல்ல நிலையில் இருந்தால், வீடு, வாகனம் இருக்கும். குரு- சனி, செவ்வாயுடன் இருந்தால், பொய்பேசி சிலர் பிறரை ஏமாற்றுவார்கள். குரு- சூரியன், செவ்வாயுடன் இருந்தால், ராஜதந்திரியாக இருந்து, பணம் சம்பாதிப்பார்கள்.

10-ல் குரு இருந்தால், அந்த ஜாதகர் புகழுடன் இருப்பார். குரு பலவீனமாக இருந்தால் ஜாதகருக்கு நிரந்தரத் தொழில் இருக்காது. முதுகுத்தண்டில் நோய் இருக்கும். குரு- சூரியன், செவ்வாயுடன் இருந்தால் அவர் பெரிய அரசியல்வாதியாக இருப்பார்.

11-ல் குரு இருந்தால், தந்தை இருக்கும்வரை அந்த ஜாதகர் அரசரைப் போல வாழ்வார்.

அதற்குப்பிறகு பணவரவு இருக்காது. வீட்டில் பிரச்சினை உண்டாகும். குரு சூரியன், புதனுடன் இருந்தால் புகழுடன் இருப்பார்.

12-ல் குரு இருந்தால், அந்த ஜாதகர் பிறரைக் குறைகூறிக்கொண்டே இருப்பார். நிறைய தவறுகளைச் செய்வார். குரு- சூரியன், புதனுடன் இருந்தால், திருமணத்தடை இருக்கும்.

பரிகாரங்கள்

தாத்தா, தந்தையை மதிக்கவேண்டும். பௌர்ணமியன்று தன் குருநாதரை வணங்கவேண்டும். வீட்டின் வடக்கு திசையை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். வியாழக்கிழமை சூரியன் மறைந்தபிறகு, அரசமரத்தைச் சுற்றிவந்து ஒரு தீபத்தை ஏற்றவேண்டும். பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபடவேண்டும். திங்கட்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை அரசமரத்திற்கு நீர்விடவேண்டும். பௌர்ணமியன்று ஏழைகளுக்கு உணவளிப்பது நல்லபரிகாரம்.

செல்: 98401 11534