நம் வாழ்க்கையில் வீடு, மனை, மக்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது. இறைவன் செயல் என்பதற்கும் மேலாக நம் தலையெழுத்தான ஜாதகமே அதற்கெல்லாம் காரணமாக இருக்கிறது. கிரக சஞ்சார நிலைகளே நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் நமக்கு வழங்குகிறது என்பதே உண்மை. குறிப்பாக, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வீடு, மனை, மனைவி, மக்கள் என்பது மிகப்பெரிய கனவாக, லட்சியமாக இருக்கும். எல்லோருக்கும் அந்தக்கனவு நனவாகுமா? அந்த லட்சியத்தை அடையமுடியுமா என்பது கேள்விக்குறிதான்.
எலி வளையானாலும் தனிவளை வேண்டும் என்பது பழமொழி. அதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு என்பது நிச்சயம் வேண்டும். ஆனால்,அது எல்லோருக்கும் கிடைக்குமா? அதற்கு, ஒருவர் ஜாதகத் தில் எந்தவிதமான அமைப்புகள் இருக்க வேண்டும் என்பதைப்பற்றி பார்ப்போம். சொந்த வீடு அமைவதில் நிறைய பேருக்கு பிரச்சினைகள் இருக்கிறது. சிலருக்கு வீடு கட்ட பணம் இருந்தும் கட்டமுடியாமல் போகும். ஒரு சிலருக்கு பார்த்துப் பார்த்து, ஆசை ஆசையாகக் கட்டிய வீட்டில் குடியிருக்க முடியாமல் போகும். சிலருக்கு வீடு கட்டுவது என்பதே வெறும் கனவாக மட்டும்தான் இருக்கும். வீடு என்றாலே நமது ஜாதகத்தில் நான்காம் பாவகம்தான். வீட்டைக் குறிக்கும் கிரகம் செவ்வாய். மனையைக் குறிக்கக்கூடிய கிரகமும் செவ்வாய்தான். அதிகப்படியான பூமியாக இருந்தால் புதன் கிரகத்தின் நிலைப்பாட்டையும் பார்க்க வேண்டும். ஒரு ஜாதகத்தில் நான்காம் பாவகத்தில் பாவ கிரகங்கள் இருப்பது. மற்றும் நான்காம் அதிபதியுடன் பாவ கிரகங்கள் இணைவது, அல்லது நான்காம் பாவகம் திதி, சூனியம் அடைவது சொந்த வீடு அமைவதில் பிரச்சினையை ஏற்படுத்தும். நான்காம் அதிபதி நீசமடைந்தாலும், அஸ்தமனம் அடைந்தாலும், அஷ்டமாதிபதி, பாதகாதிபதி, மாந்தி நான்காம் பாவகத்தில் இருந்தாலும், ஒருவர் வீடு கட்டினாலும் அதில் வசிக்க முடியாத நிலையை உண்டாக்கும். தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சினையை உண்டாக்கி படாதபாடு படுத்தும்.
நான்காம் அதிபதி 6, 8, 12-ஆம் பாவகத்தில் மறைந்தால் வீடு கட்டுவதில் தொடர்ந்து சிக்கல்கள் வரும். செவ்வாய் 6, 8, 12-ஆம் பாவகத்தில் மறைந்தாலும் வீடு அமைவதில் தாமதம் ஏற்படும். நான்காம் அதிபதி ஆறாம் அதிபதியுடன் தொடர்பு பெறும்பொழுது கடன் வாங்கி வீட்டைக் கட்டும் அமைப்பு ஏற்படும். புதன் தொடர்பு கொள்ளும்பொழுது வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டும் நிலை வரும். புதனுடன் ராகு, கேது தொடர்பு பெறும்பொழுது பத்திரம் தொடர்பான பாதிப்புகளும் சட்டரீதியான சில பிரச்சனைகளும் ஏற்படும். இதுபோன்ற அமைப்பு உள்ளவர்கள் வீடு கட்டுவதற்கு இடம் வாங்கும்போது, அந்த இடத்தின் மூல பத்திரத்தையும் அதில் சிக்கல்கள் இருக்கிறதா என்பதையும் ஒரு வழக்கறிஞரிடம் காட்டி அதன் உண்மை நிலையை அறிந்து அதன்பிறகு வாங்குவது நல்லது.
சொந்த வீடு யாருக்கெல்லாம் அமையும்?
ஜாதகத்தில் செவ்வாய் பகவான் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும், சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும். நான்காம் பாவகத்தில் குரு, புதன், செவ்வாய், சுக்கிரன் இருப்பவர்களுக்கும் சொந்தவீடு அமையும். நான்காம் அதிபதி சுப கிரகங்களுடன் தொடர்பு கொள்ளும் ஜாதகர்களுக்கும் சொந்த வீடு எளிதில் அமைந்து விடும். நான்காம் பாவகத்தில் திக்பலம் பெற்று சுக்கிரன், சந்திரன் இருப்பதும் சிறப்பான மனையை அமைத்துத்தரும். சிலருக்கு வீடு கட்டுவதில் கற்பனைத்திறன் அதிகமாக இருக்கும். நிறைய அறைகள் அமைத்து, வீட்டினுள் படிக்கட்டுகள் அமைத்து, அழகான மின் விளக்குகள் அமைத்து அழகழகாக கட்ட வேண்டும் என்ற கற்பனைகள் யாருக்கு இருக்கும் என்றால், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அதிகப்படியான கற்பனைகள் இருக்கும். லக்னத்தில் சூரியன் இருப்பதும், சூரியன் உச்சம், ஆட்சியாக இருப்பதும் மற்றும் சிம்ம ராசி, சிம்ம லக்னம், நான்காம் வீட்டில் சூரியன், நான்காம் அதிபதி சூரியனாக இருக்கும் அமைப்பு இருப்பவர்களுக்கு எளிமையாக வீடு கட்டுவது என்பது பிடிக்காது. மிகவும் பிரம்மாண்டமாக கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
அரண்மனைபோல் வீடு யாருக்கு?
செவ்வாய்+சுக்கிரன் நான்காம் பாவகத்தில் தொடர்பு பெறும்பொழுதும், குரு+சுக்கிரன், செவ்வாய்+சந்திரன் நான்காம் பாவகத்தில் தொடர்பு பெறும்பொழுதும், சுக்கிரன்+ராகு நான்காம் பாவகத்தில் தொடர்பு கொள்ளும் ஜாதகருக்கும் மிகப்பெரிய அரண்மனை போன்ற வீடு அமையும். வேறு பாவக கிரகங்களின் பார்வை இந்த பாவகத்திற்கு இல்லாமல் இருக்க வேண்டும். செவ்வாய் + சனி சேர்க்கை நான்காம் பாவகத்தில் இருப்பதும், நான்காம் அதிபதியுடன் சேர்க்கை பெறும்போதும் பழைய வீடு வாங்குவது அல்லது பழைய வீட்டை சரிசெய்து அதில் குடியிருக்கும் நிலையுண்டாகும்.
எந்த தசா புக்தியில் வீடு கட்டும் யோகம்?
நான்காம் பாவகத்தில் ஒரு கிரகம் நின்று புக்தி நடத்தும் காலத்தில், அல்லது நான்காம் அதிபதியின் புக்தி நடத்தும் காலத்தில் வீடு கட்டும் யோகம் உண்டாகும்.
நான்காம் அதிபதி நின்ற நட்சத்திரத்தின் கிரகம் அதனுடைய புக்தி நடத்தும் காலத்திலும் வீடு கட்டும் அமைப்பு ஏற்படும். சுக்கிரன், செவ்வாய், புதன் கிரகங்கள் நான்காம் இடத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுதும், கோட்சார குரு நான்காம் பாவகத்தைப் பார்க்கும்போதும் வீடு கட்டும் யோகம் ஏற்படும்.
ஆலய வழிபாட்டால் வீடு கட்டும் யோகம்!
சொந்த வீடு கட்டுவதற்கு கிரக பலம் இல்லாதவர்கள் சோளிங்கரில் உள்ள நரசிம்மர் ஆலயம் சென்று கோவிலுக்குள் கற்களால் வீடுபோல் கட்டி வேண்டிக்கொள்ள வேண்டுதல் நிறைவேறும்.
செல்: 90802 73877