நிறைய குடும்பங்களில், "எங்க அண்ணணுக்கு கல்யாணமானபிறகுதான் அவர் சுத்தமா மாறிட்டார். என் தம்பிக்குத் திருமண மானவுடன்தான் எங்களைத் திரும்பியே பார்ப்பதில்லை' என உடன்பிறந்தவர்கள் காலங்காலமாகச் சொல்கிறார்கள். "என் சகோதரர் நல்லவர்தான். ஆனால் அவரை கல்யாணம் பண்ணிக்கிட்ட எங்க அண்ணி தான் அவரை மாத்திட்டாள். என் தம்பியிடம் கொழுந்தியாள் ஏதாவது போட்டுக் கொடுத்துக்கொண்டே எங்களைப் பிரித்து விட்டாள்' என சொல்பவர்கள் நிறைய உண்டு. உண்மையில் அவர்கள் கோபப்பட வேண்டியது உடன்பிறந்தவர்கள்மீதுதான்.
மனைவி சொல்லிக்கொடுப்பதால்தான் சகோதரர்கள் மாறிவிட்டார்களா என்றால் அது உண்மையல்ல. சகோதரனுக்கும் உடன் பிறந்தவர்கள்மீது அன்பிருந்தால், எப்பேற்பட்ட குற்றச்சாட்டுக்களை யார் சொன்னாலும் பொருட்படுத்தாமல், எந்தநிலையில் இருந்தாலும் தன் பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்பவர்தான் நல்ல அண்ண ணாக இருக்கமுடியும்.
எந்தவொரு மனிதனுக்குள்ளும் அன்பிருந்தால்தான், தன்னை நேசிப்பவர்களைத் தானும் நேசிக்கவேண்டும் என்னும் எண்ணம் வரும். அன்பு தானாக வரவேண்டும். யாரிடமும் அன்பை வரவழைக்கமுடியாது. உடன்பிறந்த வர்களுக்குள்ளே "என் பேச்சை நீ கேளு' என்னும் ஆணவம் தொடங்கி, "நீ வௌங்க மாட்டே' என்று சாபம் தருகிற அளவில் உறவுகள் போய்விட்டன. நல்லவேளையாக அடுத்த தலைமுறை சகோதர- சகோதரிகள் குறைவாகப் போனதால் போட்டி, பொறாமைகள் குறையும். பங்காளிகள் கோர்ட், கேஸ் என சென்று உறவுகளைக் கொச்சைப்படுத்தாமல் இருப்பார்கள். எவனோ ஒருவனிடம் ஏமாந்து, கேட்க நாதியற்றுத் திரியப்போகும் அடுத்த தலைமுறையினர், அவர்களே அவர்களைக் காப்பாற்றிக்கொள்வார்கள் என நம்புவோம்.
உறவுகளின் ஒற்றுமைபற்றி உபதேசம் செய்பவரை பழைய தலைமுறை மனித னென்று தனிமைப்படுத்திவிடுவார்கள். பொய்யான மனிதர்களுக்கு பொய்யான உறவுகளே பாடம் கற்பிக்கும். நம்மைப் பொருத்தவரை பட்டும் திருந்தாமல், "அப்படி அன்பா இருந்தா மட்டும் நல்லாயிடுமா?' என கேள்வி கேட்பார்கள்.
என்ன நடக்கவேண்டுமோ அதுதான் நடக்கும். என்னதான் திறமைகள் இருந்தாலும் அதற்காக அங்கீகாரம், உழைப்பிற்கேற்ற ஊதியம், தனித்தன்மை எல்லாம் வெளிப் படுவது அதற்கான தசாபுக்திகள் நடந்தால்தான். மூன்றாம் அதிபதி தசை உடன்பிறப்பு, கலை, வீரம், வெற்றி, புகழைத் தரும் தசையாக இருக்கும். ஆனால் சிலரை அதுவே கொடுமைப்படுத்தி நாடோடி ஆக்கியும் வைத்துவிடும்.
அவரவரின் சுய ஜாதகத்தில் லக்னத்தின் நிலையைப் பொருத்தும், மூன்றாமிட அதிபதி நிலையைப் பொருத்துமே நன்மை- தீமைகள் நடக்கும். லக்ன அடிப்படையில் மூன்றாமிட அதிபதி தசையானது வெற்றி தருகிறதா? வெறுத்து வேறுதேசம் ஓடவைக்கிறதா?
மேஷ லக்னம்
மூன்றுக்குடையவனின் புதன் தசை நடக்கும்போது உடன்பிறந்தவர்களால் தொல்லைகள் உண்டாகும். நன்றிமறந்த சகோதரர்கள் முன்னேறவிடாமல் தடுப்பார் கள். 3-க்குடையவனே 6-க்குடையவனாக வும் வருவதால் நோய், எதிரி, கடனால் அவதிப் படநேரும். தேச சஞ்சாரம், அடிமைத்தனத்து டன் நாடோடிபோல் வாழநேரும். 2, 4, 5-ல் இருந்தால் குடும்பம், சுகம், பூர்வபுண்ணியத் தைக் கெடுத்து அல்லல்படுத்துவார். 7-ஆமிட புதன் எண்ணற்ற தொல்லை தந்து, களத் திரத்தையும் கெடுக்கும். 9-ஆமிட புதன் தந்தையை பாதிக்கும். 10-ஆமிட புதனால் நிரந்தரமான தொழிலின்றி அலைந்து திரியநேரிடும். அதேவேளை பலவகையான கலைகளைக் கற்கும் வாய்ப்புகள் ஏற்படும். 11-ல் புதன் உள்ளவர் உடன்பிறந்தவருக்கு நன்மை செய்து, அவர்களால் நஷ்டத்தையும் அடைவார். 3-க்குடைய புதன் 3, 6, 8, 12-ல் அமர்ந்தால் விபரீத ராஜயோகத்தால் திடீர் அதிஷ்டம், முன்னேற்றம், புகழ்பெறுவர். மறைந்த புதன் நன்மையைச் செய்வார். எதிர்பாராத வளர்ச்சி ஏற்படுத்தும். சுபகிரகப் பார்வை, சுபகிரகச் சாரம் நன்மை தரும். கெட்ட புதனுடன் பாவகிரகச் சேர்க்கைபெற்று கெட்டிருந்தால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தொழிலில் ஈடுபடுவார்.
ரிஷப லக்னம்
மூன்றுக்குடையவனான சந்திரதசை வரும்போது ஏழரைச்சனியும் வந்தால், ஜாதகர் எண்ணிலடங்கா துயரத்தை அடைவார். தைரியமிழந்து தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்படும். அஷ்ட மாதிபதி குருவின் சாரம்பெற்றால் அதிக துன்பத்தைத் தரும். அவரே கெட்டிருந்தால் திடீர் நன்மை நடக்கும். சனியின் சாரம் பெறுதல் தீமையே தரும். சனி கெட்டிருந்தால் நன்மை. புதன் சாரம் சில நன்மைகளையும் கலைத்துறையில் சாதனைகளையும் பெறவைக்கும். சந்திரன் உச்சம்பெறுதல் புகழைத் தரும். முரட்டு தைரியத்தை விட்டு விவேகத்துடன் செயல்படுதல் நன்மை தரும்.
சந்திரதசை ஏற்ற- இறக்கங்களைத் தந்தாலும், பெயர் சொன்னால் தெரியுமளவு வளர்ச்சி தரும். சுபகிரகப் பார்வையானது தீமையையும், பாவகிரகப் பார்வையானது சிலருக்கு நன்மையையும் தந்துவிடுகிறது. சந்திரதசை உடன்பிறந்தவருக்கு நஷ்டம், உடன்பிறந்தவரால் நஷ்டமே தரும்.
மிதுன லக்னம்
மூன்றுக்குடையவன் சூரியனாக வருவதால், சூரியன் நீசம்பெறுதல், உச்சம் பெறுதல் நன்மையைத் தருவதில்லை. சுபகிரகச் சேர்க்கை, பார்வை ஓரளவு நன்மைதரும். தைரிய இழப்பையும், முரட்டு தைரியத்தையும் தந்து பிரச்சினை தரும். உடன்பிறந்தவர்களால் தொல்லை, பங்காளிகளால் ஆபத்து ஏற்படும். உடன்பிறந்த வர்களால் குடும்பம் கெடும். வீடு, மனை ஆகியவற்றில் வில்லங்கம் ஏற்பட்டு, நீதிமன்றப் படி ஏற்றும். நான்காமதிபதி மூன்றிலிருந்தால் வீட்டை சகோதரன் அபகரிப்பான். சகோதரனுக்கு வீடுகட்டிக் கொடுத்து நன்றாக வைத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு அதிக வருமானத்தைத் தரும். சுபகிரகப் பார்வையானது உடன்பிறந்தவர்களால் நன்மையைத் தரும். பாவகிரகப் பார்வை, சேர்க்கையானது, பார்க் கும்போதெல்லாம் கோபத்தை ஏற்படுத்தும். தந்தையால் தீமை உண்டாகும். தந்தையின் முன்னேற்றத்தைக் கெடுக்கும். சூரியன் மறைந்து கெட்டிருந்தால் அரசாங்க நன்மை, அரசுப் பணி, அரசியல் வெற்றி தரும். துணிச்சலால்- வீரத்தால் புகழ்பெறுவார்.
கடக லக்னம்
3, 12-க்குடையவனாக புதன் வருவதால், இயற்கையாகவே கலைகளில் திறமை பிறப்பிலேயே இருக்கும். நல்ல ஞானம், மக்களுக்காக தைரியமாகக் குரல்கொடுப்பது, நல்ல சிந்தனையை போதித்தல் போன்ற அனைத்து நல்ல விஷயங்களையும் செய்வார். 3-க்குடையவனே விரயாதி பதியாக இருப்பதால், உடன்பிறந்தவர்களால் விரயத்தைப் பெறுவார். சுபச் செலவுகளான கல்வி, திருமணம், தொழில் சம்பந்தமாக உடன்பிறந்த வருக்கு உதவுதல் நன்மை தரும். நன்றியை எதிர் பார்க்காமல் கடமையாகச் செய்வது உத்தமம். புதன் ஆட்சி, உச்சம் பெறுவது சிலருக்கு நன்மையை வாரிவழங்குகிறது. புதன் நீசம் பெறுவது தந்தைக்கு பாதிப்பையும், பங்காளிப் பகையையும் தருகிறது. ஆபத்துக் காலங்களில் பலருக்கு உதவினால் நற்பலன் ஏற்படும். காவியப் படைப்புகளை இயற்றி, எதிர்பாராத அமர புகழ்பெறுவர். பிறரறியா நுட்பமான விஷயங்களை அறிந்து செயல்படுவர். யாரையும் நம்பாமல் தன்னிச்சையாகச் செயல்படும் தைரியம் மிக்கவர். தேவைக்கு யாரை எப்போது பயன்படுத்த வேண்டுமோ அப்போது பயன் படுத்திப் பயனடைவார். புதன் தசை கலையறி வால் வெற்றியையும் புகழையும் தரும்.
சிம்ம லக்னம்
சுக்கிரன் மூன்று, பத்துக்குடையவன். சுக்கிரதசை ஆரம்பித்தால் தைரியமாக தொழிலில் ஈடுபட்டு வெற்றிபெறுவர். சிறுவயதில் சுக்கிரதசை வந்தால் தாய்- தந்தையரை இழந்துவிடுவர். குடும்பத்திற்காக உழைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். பொறுப்புகள் அதிகமாகி சந்தோஷத்தை இழப்பர். 35 வயதிற்குமேல் வரும் சுக்கிரதசை யால் நிதானமாகவும் பொறுப்பாகவும் நடந்து சொகுசான வாழ்க்கையை அனுபவிப் பர். தொழிலில் அசைக்கமுடியாத சக்தியாக வந்துநிற்பர். உடன்பிறந்தவரின் உதவி கிட்டும். உடன்பிறந்தவருக்கு உதவிகள் செய்யநேரும். சுக்கிரன் நீசமாவது நன்மை தராது. சுக்கிரன் உச்சம் பெறுவது பெண்களால் தொல்லையை யும் நன்மையயும் ஏற்படுத்தும். கலைத் துறையில் இசை, பாட்டு, நடிப்பு, இயக்கம் என பல் துறைவித்தகராகப் புகழ் பெறுவர். புகழுக்கு அடிமை யாகாமலிருந்தால் பெரிய வளர்ச்சி இருக்கும். தன்னம் பிக்கை, தைரியம் இருந்தா லும் நிதானமாகப் பேசப் பழகவேண்டும். ஆணவமா கவோ, அவசரமாகவோ எடுக்கும் முடிவுகள் தொல்லைதரும்.
கன்னி லக்னம்
மூன்றுக்குடையவன் தசை, அசாத்திய தைரியத் தையும், யாரைப்பற்றியும் கவலைப்படாத எண்ணத் தையும் கொடுக்கும். நினைத் ததை நினைத்தவுடன் செய்து, அவசர புத்தியால் செவ்வாய் தசையில் சிலர் நஷ்டமடைவர். எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமாகச் செயல்பட்டால் அதிக நன்மையடையலாம். செவ்வாய் ஆட்சிபெறுதலோ உச்சம் பெறுதலோ, தசையில் சகோதர நஷ்டம், சகோதரரால் நஷ்டத்தையும் மனக் கஷ்டத்தையும் தந்துவிடும். அஷ்டமாதிபதியாக செவ்வாய் இருப்பதால் நோய், எதிரி, கடனால் துன்பம் தரும். செவ்வாய் நீசமாக இருத்தல் பெரிய நன்மை தராது. பாவகிரகப் பார்வை, சேர்க்கை தொல்லைகளையே தரும். சுபகிரகப் பார்வையால் சில நன்மையே ஏற்படும். பதட்டத்துடனே வாழவேண்டியிருக்கும். மூன்றாமதிபதி நான்கில் இருந்தால் சகோதர னின் ஆதரவு, சொத்து இவர்களுக்குக் கிடைக்கும். லக்ன செவ்வாய் தசை எந்த வயதிலும் போராட்டத்தையே தரும். ஐந்தில் செவ்வாய் பலம்பெறுவது பூர்வீகநிலப் பிரச்சினையைத் தரும். சுபகிரகப் பார்வை யிருந்தால் பூர்வீகத்தால் யோகம் உண்டாகும். செவ்வாய் தசையில் புகழ் மங்கும். செவ்வாய் கெட்டிருந்தால் விபரீத ராஜயோகத்தால் அரசாங்க யோகம் பெறுவர்.
துலா லக்னம்
மூன்றாமதிபதி குருவாகி தசை நடக்கும் போது ஊருக்கு உழைப்பவராக, உடன்பிறந்த வருக்கு உதவாதவராக இருப்பார். நல்லெண் ணத்துடன் பேசக்கூடிய கெட்ட எண்ணம் கொண்டவர். குரு நீசமாகி தசை நடந்தால், தன்னை நிலைநாட்டிக்கொள்ள அனைத்து கெடுதலையும் சுற்றியிருப்பவருக்குச் செய்வார். எடைபோடுகிறேன் என்ற பெயரில் உடன்பிறந்தவர்களின் அன்பைக் கொச்சைப்படுத்துவார். குரு ஆட்சி, உச்சபலம் பெற்றால் நன்மைகள் அதிகம் நடக்காது. நாடோடியாகவே அலையவைக் கும். வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றுவதால், தசை முடிந்ததும் நற்பெயரை இழப்பார். பெரும்பாலும் சிலருக்கு குருதசை தருமளவு சனிதசை தருவதில்லை. குரு உச்சம் நற்பலன் தராது. தந்தையை பாதிக்கும். ஏமாற்றியவரை விட்டுவிட்டு தன்னிடம் ஏமாந்தவரை கடிந்துகொள்வார். குரு கெட்டு, குரு தசையும் சனி சுபத்துவம் பெற்றுமிருந்தால், 35 ஆண்டுகள் அதிர்ஷ்டகரமான வாழ்க்கையுண்டு. பெரும்பாலும் துலா லக்னக்காரர்கள் பெயர், புகழ், அந்தஸ்து, ஆளுமைமிக்கவராக இருப்பர்.
விருச்சிக லக்னம்
மூன்றுக்குடையவன் சனி 3, 4-ல் ஆட்சிபெற்றால் தைரியமாக, பிடிவாதமாக நினைத்ததை சாதிப்பர். சனி தசை நன்மை- தீமை கலந்தபடியே நடக்கும். கலைகளால் ஆரம்பத்தில் நன்மையாக இருந்தாலும், தீமையாகவே முடியும். தான்பெற்ற புகழால் அவமானமடைவார். தைரியமாகப் பேசி அடுத்தவரிடமிருந்து அபகரித்து பிழைப்பு நடத்த எண்ணுவர். எல்லாநேரமும் நல்லதே நடக்குமென்று எண்ணுகிற பலருக்கு, தசை முடிவில் சறுக்கலைத் தந்துவிடும். புதிய நண்பர் சேர்க்கையால் பழைய நண்பர்களை இழந்து பெரிய பாதிப்படைவார். யாரையும் நம்பி களத்தில் இறங்காமல், தன்னை நம்பியே வாழவேண்டி வரும். தன்னம்பிக்கையால் இழந்ததை ஈடுகட்டுவர். சனி தசை, ராகு புக்தி கெடுதலைச் செய்யும். புகழ்பெறும் ஆசை இருக்கும். தொடர் வேலைப்பளு, மந்த புத்தியால் நினைத்த புகழைப் பெறமுடியாது. அடுத்து வரும் தசை அஷ்டமாதிபதி தசையென்பதால், சனி தசையிலேயே கவனமாக இருக்கவேண்டும். எச்சரிக்கையாக இருக்கவேண்டியவர்களிடம் இல்லாமல் நம்பியவர்கள்மீது சந்தேகப்படுவார்.
தனுசு லக்னம்
மூன்றுக்குடையவன் சனி என்பதால், சனி தசையில் உடன்பிறந்தவரால் பணம், பொருளுதவி, ஆதரவு கிடைக்கும். மூன்றா மதிபதி ஆட்சிபெற்று தசைநடந்தால், வருமானம் கிடைத்தாலும் உள்ளூர ஏதாவது பயம், பதட்டம் இருந்துகொண்டே இருக்கும். மூன்றுக்குடைய சனி 6, 8, 12-ல் மறைவது பெரிய அதிர்ஷ்டத்தை தசையில் தந்துவிடும். அதேவேளையில் தகுதிக்கு மீறிய கடன், காரணமின்றி நோயால் அவதி, பங்காளிப் பகை, உடன்பிறந்தவர்களால் நஷ்டம், நண்பர் களால் ஏமாற்றம், அவமானம் ஏற்படுத் தும். லக்ன சனி யாரையும் மதிக்காமல், தன்னால் எதையும் சரியாகச் செய்துவிட முடியு மென்கிற நம்பிக்கையில் எடாகூடமாகச் செய்து, தசையில் பெரும் அவதிப்படுவர். எதையாவது உருட்டிப் புரட்டி நடத்து வதில் வல்லவர். சனிதசையில் வரும் திடீர் அதிர்ஷ்டம் நஷ்டத்தையே தரும். கலையார் வம், புகழ் சிலருக்குத் தானாக அமைத்துக் கொடுக்கும். கீழானவர்களின் நட்பைப் பாராட்டிப் பேசுவர்.
கேந்திர சனி தொழிலைக் கெடுக்கும். சனி தசையில் கவனமாக இருக்கவேண்டும். உடன்பிறப்பு அல்லது உடனிருந்தே கெடுப்ப வர்கள் அதிகமாக இருப்பர். நான்காம் அதிபதியும் சனி என்பதால் வீடு, மனை சுகத்தை இழக்கநேரும்.
மகர லக்னம்
மூன்றாமதிபதி குரு தசை ஆட்சிபெற்று நடந்தால் துணிந்து செயல்படும் தைரியம் பிறக்கும். அதே குரு விரயாதிபதி பன்னிரண்டுக்குரியவனாகவும் இருப்பதால் ஏறிய வேகத்தில் இறக்கத்தைத் தந்துவிடும். திடீர் அதிர்ஷ்டத்தால் வரும் பெயர், புகழ், பணத்தை வைத்துக்கொண்டு அப்படியே ஒதுங்கிவிடுவது உத்தமம். குரு லக்னத்தில் நீசம்பெறுவது நன்மைதான். அதேவேளையில் ஐந்தாமிடம் கெட்டால் புத்திர தோஷத்தைத் தந்துவிடும். 3, 12-க்குடைய குரு ஏழில் உச்சம்பெறுதல் களத்திர தோஷத்தைக் கொடுக்கும். தாமதத் திருமணம், களத்திர நஷ்டம், பெண்களால் அவமானம், நஷ்டத்தைத் தந்துவிடும். மூன்று, பன்னிரண்டாமிடங்கள் வேற்றுமத, நாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்தும். வெளிநாட்டில் இருப்பவருக்கு அதிக நன்மையை தசையில் தருவார். அதேவேளையில் குடும்பப் பிரிவை ஏற்படுத்துவார். கலைஞர்களுக்கு மேலைநாட்டு நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவரும் யோகம் கிடைக்கும். பணம், புகழ், அந்தஸ்து ஏற்பட்டாலும், ஏதாவது மனக்குறை மனதை வாட்டும். சுபகிரகமான குரு மறைவிடத்திலிருந்து தசை நடத்தும்போது திறமைக்கேற்ற உயர்விருக்காது.
கும்ப லக்னம்
மூன்றுக்குரிய செவ்வாய் தசை திடீர் புகழ், பாராட்டை சிலருக்குத் தந்துவிடுகிறது. ஆறாமிடத்தில் செவ்வாய் நீசமடைந்தால் தசையில் பாதி நன்மைகளும், பாதி தீமைகளும் நடைபெறும். இரண்டு ஸ்தானாதிபதிகள் பெரும்பாலும் நன்மை தராததற்குக் காரணம், சுப ஸ்தானமாக இருந்தாலும் 3, 6, 8, 12-ஆம் அதிபதிகளாகவும் வருவதால், முழுநன்மை செய்யும் நிலையை இழந்துவிடுகிறார்கள். ஆதலால்தான் நல்லது நடக்கும்போதே சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். தீயவை நடந்தால் பிற்பகுதி நன்மை நடக்குமென்பதால் மனம் நோகாமல் முயற்சிசெய்துகொண்டிருந்தால் பெருநன்மை பெறலாம். செவ்வாய் தசையில் மருத்துவம் சம்பந்தப்பட்ட லாபமும், குடும்பத்தில் யாருக்காவது கர்மம் செய்யவேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தும். பத்தாமதிபதி தசையென்பது தொழிலில் விருத்தியையும், தொழிலால் புகழ், பணத்தையும் வழங்கும். சிறிய வயதில் செவ்வாய் தசை வந்தால், அவரே கர்மாதிபதி என்பதால் குடும்பத்தில் முக்கியமானவர்களின் இழப்பால் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தைத் தந்துவிடும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு செவ்வாய் தசை முழு நன்மை தருவதில்லை.
மீன லக்னம்
மூன்றாமிட அதிபதி சுக்கிரனின் தசை பல போராட்டங்களைத் தந்தாலும் சொகுசாக வைத்துக்கொள்ளும். எந்த லக்னமாக இருந்தாலும் சுக்கிர தசை பொதுவாகவே சுக்கிரனுக்குரிய ஆடம்பர, அலங்கார விஷயங்களில் தாராளமாக அள்ளித்தரும். கடன் பட்டாவது சந்தோஷத்தை- சுகத்தைத் தரும். மூன்று, எட்டுக்குடையவராக சுக்கிரன் இருப்பதால் ஊர் சுற்றும் யோகத்தைத் தருவார். சிலருக்கு வெளிநாட்டு வாழ்க்கையைத் தரும். இன்னும் சிலர் சொந்த ஊரைவிட்டுச்சென்று, அடுத்தவரின் சொத்துகளுக்குப் பாதுகாவலராக வெளியூர்களில் உல்லாசமாக இருப்பர். சுக்கிரன் நீசம்பெற்று, நின்ற அதிபதி புதன் பலம்பெற்றால் புகழ் நிலைத்து நிற்கும். வருமானம் குறைந்தாலும் வசதிகள் குறையாது. ஊரார் மெச்ச வலம்வருவர். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு தசையின் பாதி அதிக நன்மை தரும். திருப்தியற்ற மனநிலையைக் கொடுக்கும். சுக்கிரன் கெட்டு கேது வலுப்பெற்றிருந்தால் சந்நியாசி யோகத்தைத் தந்துவிடும். ஆசையிருந்தும் வாய்ப்புகளின்றி அவதிப்படுவர். தசையில் நேரடி நன்மை, சந்தோஷத்தைத் தரமாட்டார். சுக்கிரன் பாவகிரகங்களால் பாதிக்கப்பட்டால் அல்லது வலுவற்ற நிலையிலிருந்தால் சொந்த ஊரிலே வாழ்க்கையைப் போராட்டத்துடன் கழிப்பார்.
செல்: 96003 53748