ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரகப் பாதசாரம்:
சூரியன்: திருவாதிரை- 4, புனர்பூசம்-1, 2.
செவ்வாய்: உத்திரட்டாதி- 3, 4.
புதன்: மிருகசீரிஷம்- 3, 4.
குரு: உத்திராடம்- 2, 1.
சுக்கிரன்: ரோகிணி- 3.
சனி: உத்திராடம்- 1.
ராகு: மிருகசீரிஷம்- 3.
கேது: மூலம்- 1.
கிரக மாற்றம்:
8-7-2020- தனுசு, வக்ர குரு.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- தனுசு.
6-7-2020- மகரம்.
8-7-2020- கும்பம்.
10-7-2020- மீனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 12-ல் மறைவு. என்றாலும், ராசிக்கு 10, 11-க்குடைய சனியின் சாரத்தில் (உத்திட்டாதி) சஞ்சாரம். செவ்வாய்க்கு சாரம்கொடுத்த சனி (10-க்குடையவர்) 9-ல் அமர்ந்து 9-க்குடைய குரு 10-ல் சனியின் ராசியில் அமர்வதால், 9, 10-க்குடையவர்களின் பரிவர்த்தனையால் தர்மகர் மாதிபதி யோகம் செயல் படுகிறது. குரு- சனி பரிவர்த்தனை என்பதால், குரு நீசபங்கமாக இருந்தாலும் நீசபங்க ராஜயோகமாகும். இந்த வாரம் 8- ஆம் தேதி மகர குரு தனுசு ராசிக்கு வக்ரமாக மாறுகிறார். எனவே, குருவும் சனியும் சேர்க்கை தர்மகர்மாதிபதி சேர்க்கையாகிறது. ஆகவே, வாழ்க்கை வசதி, சௌகர்யங் களுக்கு எவ்விதக் குறையும் இருக்காது. அதேசமயம், ராசிநாதன் 12-ல் மறைவதால் மனதில் நிம்மதியும் இருக்காது. என்றாலும், எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும் என்பதில் சந்தேகமில்லை. சிலசமயம் தேவையற்ற கற்பனைப் பயங்களும் கலக்கங்களும் உருவாகி மறையும். பக்தி வழிபாட்டினாலும், உறுதியான தியானப் பயிற்சியினாலும் அவற்றை விரட்டியடித்து நிம்மதி பெறலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு அட்டமச்சனி நடக் கிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி, 26-12-2020-ல் சனிப்பெயர்ச்சி. மகரத்திற்கு சனி மாறுவார். அதுவரை அட்டமத்துச்சனி நடக்கிறது. என்றாலும், குருவும் சனியும் பரிவர்த்தனை என்பதால், அட்டமத்துச் சனியின் பாதிப்பு கடுமையாக இருக்காது. குடும்பப் பொறுப்பு, வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளின் திருமண வாய்ப்பு, படித்துமுடித்த மகன்களுக்கு வேலை வாய்ப்பு, மனைவியிடம் பட்ட கடன் (அவர்கள் நகையை அடகுவைத்து அவசியமான கடன்களைச் செய்த கடன்) போன்றவை கவலைகளெல்லாம் உங்கள் சந்தோஷத்தைக் கெடுக்கலாம். மகிழ்ச்சியை மறக்கடிக்கச் செய்யலாம். இவையெல்லாம் சுமையாகத் தெரிந்தாலும் சுகமான சுமைகள் தான். மண்ணுக்கு மரம் பாரமா? மரத்திற்குக் கிளை பாரமா என்று திரைப்படத்தில் பாடியமாதிரி, கடமைகள் அனைத்தும் பாரமாகத் தெரியாது. கர்ப்பமடைந்த தாய்க்கு குழந்தை சுமையாகத் தோன்றலாம் அல்லவா? "ஈன்று புறந்தள்ளுதல் என் தலைக்குக் கடனே, சான்றோனாக்குல் தந்தைக்குக் கடனே' என்று பாடியமாதிரி, இவையெல்லாம் கடமைக் கடன்!
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் ஜென்மத்தில் ஆட்சியாக இருக்கிறார். 7, 10-க்குடைய குரு 8-ல் நீசம். என்றாலும், சனியுடன் பரிவர்த்தனை. ஜீலை 8-ஆம் தேதி குரு மகரத்தில் நீசம் தெளிந்து தனுசுவில் ஆட்சிபெறுகிறார். குருவும் சனியும் சேர்க்கை. அவர்களுடன் கேது- ராகு சம்பந்தம். திருமணத்தடை, குடும்பக் குழப்பம், வாரிசுக் கவலை போன்றவையெல்லாம் உருவானாலும், குரு- சனி பரிவர்த்தனை என்பதாலும், பிறகு, குரு, சனி சேர்க்கை என்பதாலும் எல்லா சங்கடங்களும் சூரியனைக்கண்ட பனிபோல விலகிவிடும். ஒரு ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெறும் கிரகங்களைவிட பரிவர்த்தனை யோகம் பெறும் கிரகங்களுக்குப் பலம் அதிகம். மறைந்த முதல்வர் மு. கருணாநிதியின் ஜாதகத்தில் மூன்று ராசிகளில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரின் செல்வாக்குக் குறையவில்லை. முன்னாள் முதல்வர்களான அமரர்கள் அண்ணாத்துரையும், பெருந்தலைவர் காமராஜரும்கூட தங்கள் சொந்தத் தொகுதியிலேயே ஒருமுறை தோல்வியை சந்தித்தனர். ஆனால், இடம் மாறிப் போட்டியிட்டாலும் எந்தத் தேர்தலிலும் மு. கருணாநிதி தோற்றதில்லை. இதுவே பரிவர்த்தனை யோகத்தின் பலன்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு பாடல் உண்டு. "பாடப் படிக்கப் பரதவியம் கற்கத் தேட சுகிக்க செலவழிக்க கற்கடகம் சிம்மம் கன்னிக்கில்லாது மற்கிடமேது மற்று' என்பது அந்தப் பாடல். பன்னிரண்டு லக்னங்களிலும் கடகம், சிம்மம், கன்னியில் பிறந்தவர்களுக்கு (அது ராசியானாலும் லக்னமானாலும்) முக்கியத்துவம் உண்டு. இழந்ததை மீண்டும் அடைந்து சாதிக்கும் வல்லமை உண்டு. பிரம்மன் பூலோகத்தைப் படைத்தபோது கடக லக்னம் உதயமானதாக சாஸ்திரம் கூறுகிறது. கடகம் என்றால் நண்டு. அதற்கு உடலைச் சுற்றி கால்கள் உண்டு. நின்ற நிலையில் இருந்தபடியே நான்கு திசைகளிலும் எந்தப் பக்கமும் பயணிக்கும் ஆற்றல் உண்டு. மற்றவர்கள் உடலைத் திருப்பிப் பயணிக்கவேண்டும். இது கடவுள் தந்த வரம். அதுபோல, கடக ராசிக்காரர்களும் கடக லக்னக்காரர்களும் எந்தப் பிரச்சினையானாலும் சந்தித்து சமாளிக்கும் சக்தி படைத்தவர்களாவார்கள். மற்ற கிரகங்களும் அதற்கு சாதகமாக அமைந்துவிட்டால் சாதனை படைக்கலாம்; சோதனைகளை வெல்லலாம்; வேதனைகளை விரட்டலாம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 11-ல் 11-க்குடைய புதனோடு சம்பந்தம். எந்த வொரு காரியத்திற்கும் முகூர்த்தத் திற்கும் நேரம் குறிக்கும்போது 11-ல் சூரியன் நிற்கும்படி லக்னம் அமைத்துக்கொடுத்தால், அந்தக் காரியமும் செயலும் தோல் வியடையாமல், தொய்வில்லாமல் வெற்றி பெறும் என்பது ஜோதிட சாஸ்திரம். உங்களுக்கு அந்த வெற்றி உறுதியாகிறது. அதேசமயம், ராகு- கேது, சனி தொடர் பிருப்பதால், அவ்வப்போது சில சங்கடங்களும் ஏற்பட இடமுண்டு. ஆனாலும், பாரதியார் பாடியமாதிரி, "எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவையே எண்ண வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும். பண்ணிய பாவமெல்லாம் பரிதினும் பணியே போல நன்னிய நின்னும் இங்கு நசித்தல் வேண்டும்' என்பதுபோல, சங்கடங்களும் சஞ்சலங்களும் விலகி வெற்றிப் பாதை அமைக்கும். பன்னிரண்டு ராசிகளுள் சூரியன் சந்திரனுக்கு மட்டும் ஒரு ராசியாகவும், மற்ற ஐந்து கிரகங்களுக்கு இரண்டு ராசியாகவும் அமைவதன் சூட்சுமம் இதுவே! சிம்மம்- ராஜா. கடகம்- ராணி.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 10-ல் ஆட்சியாக இருக்கிறார். அவருடன் சூரியன், ராகு சம்பந்தம். சனி, கேது, செவ்வாய் பார்வை. ஜோதிட சாஸ் திரத்தில் ஒரு பழமொழி உண்டு. "எட்டில் ஒரு ஏழையேனும் பத்தில் ஒரு பாவியேனும் இருத்தல் வேண்டும்' என்பது அந்தப் பாடல். இதன் தாத்பரியம் தெரியவில்லை யென்றாலும், 8- என்பது ஆயுள் ஸ்தானம். 10- என்பது தொழில் ஸ்தானம். (கர்ம ஸ்தானம்). ஆக, இந்த இரண்டு ஸ்தானங்களிலும் கிரகங்கள் இருந்தால், அந்த ஜாதகர் சாதிக்கப் பிறந்தவர் என்னும் தகுதிக்கு ஆளாவார்கள். இதைத்தான் வள்ளுவர், எண்ணித் துணிக கருமம் என்றார். இதை விளக்கும் கதை- வருமுன் காப்போன், வந்தபின் காப்போன், வந்தபின்னும் காவாதவன் என்னும் மூன்று நிலை. அங்கேதான் அவரவருடைய ஊழ்வினைப் பயன் சாதிப்பதற்கு காரண மாகிறது. எந்தவொரு சாதனையும் செயல் படுத்த ஊழ்வினை வேண்டும். அதைத்தான் கர்மா என்பார்கள். கிராமப்புறங்களில் தலையெழுத்து என்பார்கள். சாஸ்திரம் அறிந்தோர் பிரம்ம லிபி என்பார்கள். தெளிவாகச் சொன்னால் பிராப்தம் எனலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 8-ல் மறைவு. அந்த வீட்டுக்கு உச்சநாதனான சந்திரன் சாரம்பெற்று (ரோஹிணி-3-ல்), சொந்த வீட்டில் ஆட்சியாக இருக்கிறார். எனவே, ராசிநாதன் மறைவு தோஷம் விலகும். யுத்த தர்மத்தில் மறைந்திருந்து தாக்கும் மரபு உண்டு. சில விஷயங்களை மறைபொருளாகச் சொல்வதுண்டு. சங்க காலத்தில், புலவர்கள் எல்லாம் மறைபொருளாகப் பாடியுள்ளனர். ஆசு கவி காளமேகப் புலவர் மறைபொருளா கவும் சிலேடையாகவும் பாடுவதில் வல்லவர். பண்டைய கால அரசர்கள் தூது அனுப்பும்போது மறைபொருளில்தான் எழுதியனுப்புவார்கள். ஆக, மறைவு என்பது குற்றமல்ல, ஏற்றுக்கொள்ளக்கூடியது என எடுத்துக்கொள்ளலாம். 8-ல் மறையும் ராசிநாதன் ஆட்சி என்பதால், தோஷமில்லை, குற்றமில்லை என்பதற்குத்தான் இத்தனை விளக்கம். 9-ல் சூரியன், புதன், ராகு இருப்பதால், சிலருக்குக் குலதெய்வ வழிபாட்டு முறைகளில் குற்றங்குறைகள் இருக்கலாம். அவற்றைக்கண்டு தெளிந்து நிறைவேற்றினால் விமோசனம் பிறக்கும். அல்லது தெய்வப் பிரார்த்தனைகள் இருந்தாலும் ஆலயம் திறந்தவுடன் நிறைவேற்றவேண்டும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிக்கு 2020 டிசம்பர்வரை ஏழரைச்சனி நடக்கிறது. (அதாவது அடுத்த சனிப்பெயர்ச்சிவரை). முதல் சுற்று மங்கு சனி, இரண்டாவது சுற்று பொங்கு சனி, மூன்றாவது சுற்று கண்டச்சனி என்பார்கள். செப்டம்பர் 1- ஆம் தேதிவரை ராகு- கேது பிடியில் சனி இருப்பதால், உங்களுக்கு எந்தச் சுற்றாக இருந்தாலும் அனுகூலமில்லை. கொரோனா வைரஸ் காரணமாக எல்லாப் பகுதிகளுக்கும் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டமாதிரி, உங்களுடைய காரியங்களும் செயல்களும் ஸ்தம்பித்து நிற்கும். செப்டம்பர் 1-ல் ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு, சனி சுதந்திரமான பலனைத்தர ஆரம்பிப்பார். அதுவரை, நல்லது நடக்கக் காத்திருக்கவேண்டும். நல்லது நடக்கவில்லையென்றாலும் பரவாயில்லை, கெட்டது நடக்காமலிருக்கப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். குருவருளும் திருவருளும் இருந்தால் எல்லா கிரக சோதனைகளையும் வேதனைகளையும் விலக்கிவிடலாம். நம் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் கிரகங்களல்ல- நம் வினைப்பயனே! அதைப்போக்குவது பக்தி வழிபாடுதான்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு ஜென்ம ஏழரைச்சனி நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி, 2020- டிசம்பரில்தான் சனிப்பெயர்ச்சி. சனி பகவானுக்குரிய திருத்தலம் திருநள்ளாறுதான். அங்கு, வாக்கியப் பஞ்சாங்கப்படிதான் சனிப்பெயர்ச்சி கொண்டாடப்படுகிறது என்று ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அதன்படி, ஜென்மச்சனி 2020 டிசம்பர்வரை நடப்பதால், அடிப்படைப் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என்றாலும், நல்லவை தாமதப்படலாம். இன்றைய நாட்டு நிலவரப்படி, சில இடங்களில் நேர் பாதைகள் அடைபட்டு, சுற்றுப்பாதையில் போக்குவரத்து செயல்படுவதுபோல, உங்களுக்கும் நல்லவை தாமதமாகலாம். அதற்காகத் தோல்விகள் தொடருமென பயப்படவேண்டாம். சில திருமணங்களும், மற்ற வைபவங்களும் சமூக இடைவெளி கருதி கட்டுப்பாட்டோடு நடப்பதுபோல, உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச் சிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். உதாரணமாக, ஆகஸ்ட் 12-ஆம் தேதிவரை ரயில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற போக்கு வரத்துகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கடைப்பிடிக்கப் பழகிக்கொள்ளுங்கள். இதுவே பரிகாரம்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிக்கு 2020 டிசம்பர்வரை ஏழரைச்சனியில் விரயச்சனி நடக்கிறது. ஜூலை 8-ஆம் தேதிவரை குரு, சனி பரிவர்த் தனை. அதன்பிறகு, குரு, சனி சேர்க்கை. குரு சம்பந்தம் ஏற்படுவதால் ஏழரைச்சனி உங்களைப் பாதிக்காது. முதல் சுற்று மங்கு சனி. இரண்டாம் சுற்று பொங்கு சனி, மூன்றாம் சுற்று மரணச்சனி என்பார்கள். உங்களுக்கு எந்தச் சுற்றாக இருந்தாலும் குரு, சனி பரிவர்த்தனை அல்லது சேர்க்கை சம்பந்தத்தால் பொங்கு சனியாகவே பலன் தரும். விரயச்சனி பலனை சுபச்செலவாக மாற்றிக்கொள்வது உங்கள் பொறுப்பாகும். இடம் வாங்குவது, வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, வாகனத்தைப் பரிவர்த்தனை செய்வது போன்றவகையில் சுபவிரயம் செய்யலாம். சிலர் உத்தியோக மாற்றம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க லாம். இந்த மாற்றங்கள் எல்லாம் உங்கள் ராசி அமைப்புக்கு ஏற்றம் தரும் மாற்றமாகவே அமையும். எதுவானாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ராசிக்கு 11-ல் சனி நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். ஜூலை 8-ஆம் தேதிவரை சனி வீட்டில் குருவும், குரு வீட்டில் சனியும் பரிவர்த்தனை. பொதுவாக, ஆட்சி, உச்சம் பெறும் கிரகங்களைவிட பரிவர்த்தனை பெறும் கிரகங்களுக்குப் பலம் அதிகம். பலனும் அதிகம்; எத்தனையோ யோகங்கள் இருந்தாலும், ஒரு ஜாதகத்தில் பரிவர்த்தனை யோகமிருந்தால் அந்த ஜாதகருக்கு அதிர்ஷ்டம் தேடிவரும். அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால், தசாபுக்தி சந்திப்பால் சிலசமயம் வீழ்ச்சியடைந்தாலும் மீண்டும் எழுச்சிபெற்று சாதிக்கமுடியும். அதற்கு உதாரணம், இந்திராகாந்தி. பதவியை இழந்தாலும் சிக்மக்ளூரில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகி, மீண்டும் பிரதமரானார். சாகும்வரை பிரதமராகவே இருந்தார். 5-ல் ராகு நிற்க, செவ்வாய், சனி பார்ப்பதால் சிலருக்குப் புத்திர சோகம் ஏற்படலாம். சிலருக்குப் புத்திர தோஷம் ஏற்படலாம். ஜாதகத் திற்கேற்ற பரிகாரங்களைச் செய்து நிவர்த்தி பெறலாம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
மீன ராசியில் 2, 9-க்குடைய செவ்வாய் பலம்பெறுகிறார். 10, 11-க்குடைய சனியும் குருவும் 8-ஆம் தேதிவரை பரிவர்த்தனையாகவும், அதன்பிறகு சேர்க்கையாகவும் செயல்படுகிறார்கள். எனவே, "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடியமாதிரி, குறையேதும் வராது. 4-ல் உள்ள ராகு 6-க்குடைய சூரியனோடு சம்பந்தம் என்பதாலும், சனி, கேது பார்வையைப் பெறுவதாலும், செவ்வாயும் பார்ப்பதாலும் சிலருக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். என்றாலும், பாதிப்புக்கு இடமில்லை. சோர்வு, அசதி, சிறுசிறு தொந்தரவுகள் வந்துவிலகும். 4-ல் உள்ள ராகுவை செவ்வாய், சனி, கேது பார்ப்பதுதான் அதற்கு காரணம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருப்பதால், ஒருசிலருக்கு அறுவைச் சிகிச்சைகள் ஏற்படலாம். மற்றவர்கள் பயப்படத் தேவையில்லை. தன்வந்திரி பகவானையும் சீர்காழி அருகில் வைத்தீஸ்வரன் கோவில் சுவாமி வழிபாடையும் கோவில் திறந்தவுடன் செய்யலாம். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் மடவார் வளாகத்தில் வைத்தியநாத சுவாமியை வழிபடவும்.