ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்) கிருஷ்ணாபுரம் காலனி,மதுரை-14.
அலைபேசி: 99440 02365.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
19-1-2020- விருச்சிகம்.
21-1-2020- தனுசு.
24-1-2020- மகரம்.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திராடம்- 3, 4, திருவோணம்- 1..
செவ்வாய்: அனுஷம்- 4, கேட்டை- 1.
புதன்: திருவோணம்- 3, 4, அவிட்டம்- 1, 2.
குரு: பூராடம்- 2.
சுக்கிரன்: சதயம்- 2, 3, 4.
சனி: பூராடம்- 3, 4.
ராகு: திருவாதிரை- 2.
கேது: மூலம்- 4.
கிரக மாற்றம்:
குரு, சனி அஸ்தமனம்.
20-1-2020- குரு உதயம்.
25-1-2020- சனி உதயம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய் 8-ல் மறைந்தாலும், ஆட்சி பலத்தோடு இருக்கிறார். ஆட்சிபெறும் கிரகத்துக்கும், உச்சம்பெறும் கிரகத்துக்கும் 6, 8, 12-ல் மறைந்தாலும் விதிவிலக் குண்டு. மறைவு தோஷம் ஏற்படாது. சில காரியங்களை மறைவாகத்தான் செய்யவேண்டும். சில காரியங் களை வெளிப்படையாகச் செய்ய லாம். இராமபிரான் வாலியை வதம் செய்யும்போது மறைந் திருந்துதான் அம்பெய்தார். அப்படி செய்ததால்தான் வாலியை வெற்றிகொள்ள முடிந்தது. முதலையை முதுகில் சுட்டால் சாகாது; அடிபாகத்தில் சுட்டால் தான் சாகும். முதலையின் முதுகு ஓடுகள் அவ்வளவு வலிமையானதாகும். யுத்தத்தில் எதிரியை மறைந்திருந்து தாக்குவது ஒருமுறை! அதை யுத்ததர்மம் ஏற்றுக்கொள்ளும். ஜாதகரீதியாக 6, 8, 12-க்குடைய கிரகங்கள் மறைவது நல்லது. அதை "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பார்கள். கணக்கில் டபுள் மைனஸ் பிளஸ் ஆகிவிடும். (மைனஸ் ஷ் மைனஸ் = பிளஸ்.) இப்படி எத்தனையோ நடைமுறைகளும், விதிவிலக்குகளும் உண்டு. ஆகவே, செவ்வாய் 8-ல் மறைவது கெட்டதென்று எடுத்துக்கொள்ளக்கூடாது. ராசிநாதன் 8-ல் ஆட்சிபெற்று 2-ஆமிடத்தைப் பார்ப்பதால், எதிர்பாராத தனப்ராப்தியும், அதிர்ஷ்ட யோகமும் உண்டாகும். 8-ஆமிடம் மாரக ஸ்தானம் (ஆயுளைக் குறிக்கும் ஸ்தானம்) என்பார்கள். அதுவே 2, 5, 9, 11-ஆமிடங்களோடு சம்பந்தப்படும்போது அதிர்ஷ்ட ஸ்தானமாகிவிடும். "திருஷ்டம்' என்பது கண்ணுக்குத் தெரிவது. "அ'- திருஷ்டம் என்பது கண்ணுக்குப் புலப்படாதது- கண்ணுக்கு தெரியாதது. 8-ஆமிடம் விபத்து, ஆயுள், மரணம் என்றால் கண்ணுக்கு முன்னதாகவே புலப்படாமல், எதிர்பாராமல் திடீரென்று வருவது. அதிர்ஷ்டமும் அப்படிதான்- எதிர்பாராமல் வரும் யோகம். அதிர்ஷ்டக் குலுக்கலில் 6 நம்பர்கள் இருக்கிறது என்றால், நீங்கள் வாங்கிய சீட்டிலுள்ள நம்பர் வரிசை 5 நம்பர்கள் வந்துவிட்டால் போதாது. உங்கள் சீட்டு எண்ணும் 5 நம்பர் ஒன்றுபோல வந்து 6-ஆவது எண்ணும் அதேபோல அமைந்தால்தான் உங்களுக்கு முதல் பரிசு- அதிர்ஷ்டப்பரிசு கிடைக்கும். அந்தக் கடைசி எண் (6-ஆவது நம்பர்) மாறிவிட்டால் ஒரு நூலிழையில் அதிர்ஷ்டம் மறைந்துவிடும். ஆகவே, 8-ல் மறைந்துள்ள ராசிநாதன் 2-ஆமிடத்தையும் (ரிஷபத்தை யும்), 11-ஆமிடத்தையும் (கும்பத்தையும்) பார்ப்பதால், உங்களுக்கு எதிர்பாராத நன்மைகளும், அதிர்ஷ்டமும் உண்டாகு மென்று எதிர்பார்க்கலாம். அவருக்குத் துணையாக அமைந்து 9-ல் குருவும் சனியும் சேர்ந்து, உங்கள் ராசியை குரு பார்க்கிறார். குரு- சனி சேர்க்கை தர்மகர்மாதிபதி சேர்க்கை. எனவே நீங்கள் கொடுத்துவைத்தவர்கள். எடுத்துவைத்தாலும் கொடுத்துவைக்க வேண்டுமல்லவா!
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு 8-ல் குரு, சனி, கேது மூவரும் கூடியிருக்க, 2-ல் உள்ள ராகு அவர்களைப் பார்க்கிறார். 8-ஆமிடம் மறைவு ஸ்தானம். மேஷ ராசிபலனில் மறைவு ஸ்தானம் பற்றிய விளக்கம் எழுதியுள்ளேன்- படித்திருப்பீர்கள்; புரிந்திருப்பீர்கள். 8-ல் குரு ஆட்சிபலம். அவருடன் சனியும் கேதுவும் கூடுவதால் 8-ஆமிடத்துக் குற்றம், தோஷம் விலகும். எந்த ஒரு கிரகத்துக்கு வீடுகொடுத்த கிரகம் சம்பந்தப்படுகிறதோ அல்லது ராசியாதிபதி, லக்னாதிபதி சம்பந்தம் ஏற்படுகிறதோ, அந்த கிரகத்துக்கு எந்த தோஷமும் இருக்காது. அது எப்படியென்று சந்தேகம் இருந்தால், கங்கை புனிதமானது- அதில் குளித்தால் எல்லா தோஷங்களும் போய்விடுமென்று சொல்லியிருக்கிறார் களே- அந்தவகையில் தோஷம் நிவர்த்தி யாகும். ஒரு திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ்.கே.யும், மதுரம் அம்மாவும் ஒரு கிணற்றின் மேல்கரையில் (வட்டச்சுற்றுச் சுவரில்) அமர்ந்திருப்பார்கள். அப்போது டி.ஏ. மதுரம் கலைவாணரிடம், ""தோஷம்- சந்தோஷம் இரண்டுக்கும் என்ன வித்தி யாசம்?'' என்று கேட்பார். கலைவாணர், ""நான் உன்னை இந்தக் கிணற்றில் தள்ளிவிட்டால் தோஷம். நீயாகவே தவறிவிழுந்து விட்டால் சந்தோஷம்'' என்று நகைச்சுவை யாகச் சொல்வார். உண்மையில் அதில் ஒரு தத்துவமே மறைந்திருக்கிறது. காயை மரத்தி லேயே வைத்துக் கனியாக்கிப் பறித்து சாப் பிடுவதில் ஒரு ருசி உண்டு. மூட்டம் போட்டு பழுக்கவைப்பதற்கு வேறு ருசி உண்டு. இதைத்தான் தானாகப் பழுக்கவைப் பதும், தடிகொண்டு பழுக்கவைப்ப தென்றும் கூறுவார்கள். அதேபோல அறிவாற்றலில் இயற்கை அறிவு, செயற்கை அறிவு என்று இரண்டு உண்டு. அதைத்தான் வள்ளுவ, "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்ற னைத்து ஊறும் அறிவு' என்றார். இயற்கை அறிவு, கற்ற அறிவு இரண்டுக்கும் மேலாக அனுபவ அறிவு என்று உண்டு. ஒரு முட்டாள் கடலில் எறிந்த கல்லை நூறு அறிவாளிகள் கூடினாலும் எடுக்கமுடியாது. அதற்காக அந்த ஒரு முட்டாள் நூறு அறிவாளிகளுக்குச் சமமாகிவிடமுடியுமா? ஒரு பெரிய ஆடிட்டர். அவர் மனைவி கல்லூரிப் பேராசிரியை. இருவரும் குழாயில் ரப்பர் டியூப் மாட்டி மேலே தண்ணீர் வரும்படி முயற்சிக்கிறார்கள். குழாயில் மாட்டிய ரப்பர் ட்யூப் (பிளாஸ்டிக்) விரிசல் விடவிட அந்த பகுதியை நறுக்கி நறுக்கி மாட்ட- ட்யூபின் நீளம் குறைகிறது. அப்போது அங்குவந்த அவர் நண்பர் ஒரு டம்ளரில் வெந்நீர் கொண்டுவரச் சொல்லி, அதில் ட்யூப்பை நனைத்து இளக்கம்கொடுத்து குழாயில் மாட்டி விட்டார். பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு பூனை வளர்த்தார். அவர் ஆராய்ச்சிக்கூடத்திற்கு வந்துபோக பூனை நுழையும் அளவு ஒரு துவாரம் அமைத்தார். அந்த பூனை சிலகாலம் கழித்து ஒரு குட்டி போட்டது. அது வந்துபோக பக்கத்தில் சின்ன துவாரம் போட்டாராம். சிலசமயம் அறிவாளிகளின் கணக்கும் தவறாகி விடும். ஒருகாலத்தில் காமராஜரோடு கருத்து வேறுபாடுகொண்ட (குலக் கல்வி திட்டத்தில்) மூதறிஞர் ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகி சுதந்திர கட்சி ஆரம்பித்தார். "பின்னாளில் காங்கிரசுக்கு சாவுமணி அடிப்பேன்' என்று தி.மு.க.வை ஆதரித்தார். அப்போது ம.பொ.சி. (இராஜாஜியின் அனுதாபி) "நீங்கள் விஷச்செடியை விதைக்கிறீர்கள்' என்று வர்ணித்தார். அன்று ராஜாஜி ஆதரிக்காவிட்டால் தி.மு.க. வளர்ந்திருக்காது. அப்போதே எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாலிஸி வந்துவிட்டது.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் ராசிக்கு 8-ல் மறைவு. புதனுக்கு மட்டும் எப்போதும் மறைவு தோஷமோ, அஸ்தமன தோஷமோ இல்லை. ஏனென்றால் சூரியனோடு இணைந்தே பயணிக்கும் கிரகம் புதன்தான். நமது வீட்டுக்கு தினசரி காலையில் ஓசிப் பேப்பர் படிக்கவரும் பக்கத்துவீட்டு நண்பருக்கு முக்கியத்துவம் இருக்காது. எப்போதும் வராத அன்பர் வந்தால் அவருக்கு வரவேற்பு தடபுடலாக இருக்குமல்லவா! அதுமாதிரிதான் புதனின் கிரக சஞ்சாரத்திற்கு முக்கியத்துவம் இருக்காது. புதனைப் பொருத்தளவில் அஸ்தமனம்- உதயம், வக்ரம்- நிவர்த்தி, ஆட்சி- உச்சம்- நீசம் ஆகியவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறுவிதமான பலன்கள் உண்டு. 8-ல் உள்ள புதன் திருவோணம், சந்திரன் சாரம் பெறுகிறார். சந்திரன் 2-க்குடையவர். அது வாக்கு, தனம், குடும்பம், வித்தை ஸ்தானமாகும். ஆகவே, 8-ல் மறையும் புதன் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால் வித்தை மேலோங்கும். படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். மேற்படிப்பு யோகம் அமையும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். தொழிலதிபர்களுக்கு தொழில்விருத்தியும், முன்னேற்றமும் உண்டாகும். வெளியூர்களில் கிளைகள் அமைக்கலாம். சிலர் வெளியூர் வேலைகளுக்கு முயற்சி செய்யலாம். 9-க்குடைய சனி 7-ல் கேது- ராகுவோடு சம்பந்தப்படுவதால், 9-ஆமிடத்தை 6-க்குடைய செவ்வாய் பார்ப்பதால்- தசாபுக்தி பாதகமாக இருந்தால், தகப்பனார்வகையில் எதிர்பாராத வைத்தியச்செலவுகள் ஏற்படலாம். ஒருசில குடும்பங்களில் குடும்பத்துக்குத் தெரியாமல் பெரியவர்கள் அல்லது பெற்றவர்கள் கடன் வைத்திருப்பார்கள். வட்டிவாங்கி வட்டியைக் கட்டி கடன்சுமை அதிகமாகிவிடும். அதை பிள்ளைகளும், மற்றவர்களும் தலையிட்டுக் கடனை அடைக்க முயற்சி எடுப்பார்கள். குரு பார்ப்பதால் எப்படியோ- எந்தவகையிலோ கடன் அடைந்தால் சரிதான். கடன் சுமை யிலிருந்து விடுபட கும்பகோணம் அருகில் குடவாசல் பாதையில் திருச்சேறை சென்று பூஜை செய்யலாம். அது கடன்நிவர்த்தி ஸ்தலமாகும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 12-ல் ராகு இருப்பது ஒருவகையில் கெடுதல் என்றாலும், பாக்கியாதிபதி குரு 6-ல் ஆட்சிபெற்று ராகுவைப் பார்ப்பதால் கெடுதல் விலகும். ராகு சிலருக்கு வேலைப்பளுவை அதிகமாக்கலாம். சிலருக்கு செய்த முயற்சியை மீண்டும் மீண்டும் செய்யும் நிலையை உருவாக்கலாம். சிலருக்கு அலைச்சலை அதிகரிக்கலாம். சிலருக்கு வேலையில்லாமல் சும்மா வீட்டிலிருக்கும் காலம், வீணாக நாளும் பொழுதும் ஓடும் நிலையில், ஒரே நேரத்தில், ஒரே நாளில் வேலைக்கு இன்டர்வியூ வரலாம். கான்ட்ராக்ட், அப்பாயின்மென்ட் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று இடத் திலிருந்து அழைப்புவரும். முதலில் எதைச் சந்திப்பது என்று குழப்பம் வரலாம். இதற்குக் காரணம் 6-ல் குரு, சனி, கேது மறைவதுதான். என்றாலும், தொழில் ஸ்தானமான 10-ஆமிடத்துக்கு 6-ஆமிடம் என்பது பாக்கிய ஸ்தானமான 9-ஆமிடமாகும். எனவே தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் எந்த தங்கு தடையுமில்லாமல் செயல்படலாம். சொந்தத் தொழில் அல்லது கான்ட்ராக்ட் ஆர்டர் கிடைக்க வாய்ப்புண்டு. பொதுவாக கடக ராசிக்காரர்களும், கடக லக்னத்தாரும் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். பிரம்மா இந்த பூவுலகைப் படைக்கத் தொடங்கும்போது கடக லக்னம் உதயமானதாகச் சொல்வார்கள். (புராணம்). ஜோதிடப் பாடல் ஒன்று "பாடப்படிக்க பரதவியம் கற்க தேட சுகிக்க செலவழிக்க கற்கடகமல்லாது மற்கிடமேது மற்று' என்று சொல்லும். கடகம், சிம்மம், கன்னி இந்த மூன்றுக்கும் அந்தப் பெருமை உண்டு. அதேசமயம் 7, 8-க்குடையவர் சனி என்பதாலும், 10-ஆமிடம் தொழில் ஸ்தா னத்துக்கு சனி பாதகாதிபதி என்பதாலும், (10- மேஷம், அதற்கு 11-ஆமிடம் கும்பம். மேஷம் சர ராசிக்கு 11-ஆமிடம் பாதக ஸ்தானம்) கடக ராசிக்காரர்கள் மனது வைத்தால் எத்தனை பெரிய காரியங்களையும் சாதிக்கலாம். ஒரு அலட்சியம் வந்துவிட்டால் (ஈஹழ்ங்ப்ங்ள்ள்) நாளை பார்க்கலாம் என்ற சோம்பேறித்தனம் ஏற்பட்டுவிடும். "காதல் அரம்பையர் கடைக்கண் காட்டிவிட்டால் மாமலையும் ஓர் கடுகாம்' என்று கவிஞர் பாடியமாதிரி எல்லாம் எளிதாகிவிடும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிநாதன் சூரியன் 6-ல் மறைந் தாலும், 2, 11-க்குடைய புதனோடு சம்பந்தம் என்பதோடு, சூரியன் தனது சொந்த நட்சத்திரத்தில் (உத்திராடம்) சஞ்சாரம். தொழில், வாழ்க்கை, ஜீவன ஸ்தானமாகிய 10-ஆமிடத்துக்கு 6-ஆமிடம் பாக்கிய ஸ்தானமாகும். (9-ஆமிடமாகும்). எனவே தொழில் விருத்திக்கும், வேலை முன்னேற்றத்துக்கும், புதிய முயற்சிகளின் வெற்றிக்கும் இக்காலம் ஏற்ற காலமாகும். 6-ஆமிடம் என்பது போட்டி, பொறாமை, எதிர்ப்பு, கடன் ஆகியவற்றையும் குறிக்கும் இடமாகும். எனவே தொழில் விருத்திக் காகவும், வேலை வாய்ப்புக்காகவும், புதிய முயற்சிகளுக்காகவும் சிலர் தீவிர முயற்சி எடுத்துக்கொள்வதோடு, எதிர்ப்பு, இடையூறு, போட்டி, பொறாமைகளையும் சந்தித்து சமாளிக்கவேண்டும். போட்டி களும், பொறாமைகளும் பொடிப்பொடி யாகிவிடும். தூள்தூளாகிவிடும். ஏனென் றால் 8-க்குடைய குரு 5-ல் ஆட்சிபெற்று ராசியைப் பார்க்கிறார். அதன்பலன் எதிரிகளை உதிரிகளாக்கிவிடும். நினைத் தவை நிறைவேறும். திட்டங்கள் வெற்றியடையும். கருதிய காரியங்கள் கைகூடும். 5-ல் குரு ஆட்சிபெறுவதால் குருவருளும் திருவருளும் பெருகும். தடைகள் பொடிப்பொடியாகும். குறுக் கீடுகள் குறுகியோடிவிடும். வெற்றிமேல் வெற்றிவந்து உங்களைக் கட்டியணைக்கும். 5-ல் சனியும் கேதுவும் நிற்க, அவர்களை ராகு பார்ப்பதால், சிலசமயம் உங்கள்மீதே உங்களுக்கு சந்தேகம் தோன்றலாம். "நம்மால் முடியுமா?' என்ற பயமும் உருவாக லாம். எந்த ஒரு செயலையும் நீங்கள் செய்வதாக நினைக்கக்கூடாது. உங்களை இறைவன்தான் இயக்குகிறான். நீங்கள் கருவிதான். "ரிமோட் கண்ட்ரோல்- கடவுள்'. இதை மாணிக்கவாசகப் பெருமான், "வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத் தூயானை தூவெள்ளையேற்றான் தன்னை சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென் தாயானைத் தவமாய தன்மையானைத் தலையாய தேவாதி தேவர்க்கென்றும் சேயானைத் தென்கூடல் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப்பெற் றேன் நானே' என்று பாடுகிறார்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். தொடக்கத்தில் லாபாதிபதியான சந்திரன் சாரத்திலும் (திருவோணம்), பிறகு 3, 8-க்குடைய செவ்வாய் சாரத்திலும் (அவிட்டம்) சஞ்சாரம். சகோதரவழியையும் நண்பர்களையும் 3-ஆமிடம் குறிக்கும். அங்கு செவ்வாய் ஆட்சி என்பதால், உடன்பிறந்தவர்கள் வகையிலும், நண்பர்கள்வகையிலும் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும். நலம் பெருகும். வளம் பெறலாம். செவ்வாய் 8-க்குடையவர் என்பதால், உடன்பிறந்தவர்கள்வகையில் நிலவும் கருத்து வேறுபாடுகளும், மனக் கசப்புகளும் இப்போது மாறும் காலம். அவர்களுக்காக ஜாமின் பொறுப்பேற்று, வெளியில் வாங்கிக்கொடுத்த கடன்பாக்கி களும் இப்போது பைசலாகிவிடும். "கொண்டுவந்தால் தந்தை- கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்- சீர்கொண்டு வந்தால் சகோதரி' என்ற வாக்கியப்படி, நீங்கள் கொடுப்பீர்கள். அதனால் உங்களுக்கு வரவேற்பும் கிடைக்கும். இந்தக் காலத்தில் உறவினர் மட்டுமில்லை; எல்லாருமே கொடுத்தால்தான் "நல்லவர்' என்று பாராட்டுவார்கள். "இல்லானை இல்லாளும் வேண்டாள்- ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்- செல்லாதவன் வாய்ச்சொல்- கைப்பொருள் உள்ளானை எல்லாரும் சென்று எதிர்கொள்வர்' என்று அன்றே ஒரு புலவர் பாடியுள்ளார். ஈட்டி எட்டின மட்டும் பாயும். பணம் பாதாளம்வரை பாயுமாம். ஆகவே, இன்றைய உலகத்தில் பணம்தான் பிரதானம். இதை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே "அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை- பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை' என்று சொல்லிவிட்டார். இது கலியுகம். ஆகவே, இப்போது பணத்துக்கே முக்கி யத்துவம். அந்தக் காலத்தில் தியாகப் பிரம்மம் (திருவையாறு மகான்) பணத்தைத் தொடவேமாட்டார். வீடுகள்தோறும் அரிசி பிச்சை எடுத்துவந்து, அன்னமாக்கி இராமருக்கு நைவேத்தியம் செய்துவிட்டு, அந்த பிரசாதத்தை உண்பது வழக்கம். அவர் ஒருமுறை திருப்பதி போய்வந்த சமயம், அவர் அவர் ஆதரவாளர் ஒருவர் அவருக்கே தெரியாமல் பல்லக்கில் பொன்முடிப்பை வைத்துவிட்டார். வழியில் திருடர்கள் படையெடுக்க, சீடர்கள் பயந்தனர். தியாகப் பிரம்மம் "நம்மிடம் காசா, பணமா? ஏன் பதறுகிறீர்கள்' என்றதும், "முதலியார் ராம சேவைக்கு பொன் முடிப்பை வைத்துவிட்டார்' என்றதும், "அது ராமன் பணம். அவனே பார்த்துக்கொள்வான். நீங்கள் பயப்படவேண்டாம்' என்றார். பல்லக்கின் பின்புறம் ராமரும் லட்சுமணரும் காவலாக இருந்து, திருடர்கள்மீது அம்பு மழை பொழிய, திருடர்கள் ஓடிவந்து தியாகப் பிரம்மத்தை வணங்கினர்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் தன் ராசிக்கு திரிகோணத்தில்- கும்பத்தில் இருப்பது சிறப்பு. சுபகிரகங்கள் திரிகோணம் பெறுவதும், அசுப கிரகங்கள் கேந்திரம் பெறுவதும் பலம்! குரு, சுக்கிரன், சந்திரன், புதன் நால்வரும் சுபகிரகங்கள். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது அசுப கிரகங்கள். இதில் புதன் மட்டும் விதிவிலக்கு! சுபரோடுசேரும் புதன் சுபராகவும், அசுபரோடு சேரும்போது அசுபராகவும் பலன் தருவார். அசுபரை சிலர் பாவகிரகம் என்றும், பாவிகள் என்றும் வர்ணிப்பார்கள். உண்மையில் நாம்தான் பாவிகள். கிரகங்கள் எந்த பாவமும் செய்வதில்லை; பாவிகள் இல்லை! அவர்களை குரூர கிரகங்கள் என்றுதான் கூறவேண்டும். (இது எனது குருநாதர் பள்ளத்தூர் அய்யா அவர்கள் கூறிய தகவல்). அதாவது ஸௌமிய கிரகங்கள்; குரூர கிரகங்கள் எனப்படும். நல்லது செய்யும் இனிய கிரகங்கள் சுபர் என்றும், கடுமையான பலன் செய்யும் கொடிய கிரகங்கள் அசுபர் என்றும் கூறப்படும். அப்படிப்பட்ட கொடிய கிரகங்களும் திரிகோணம் பெற்றால், தமது கடுமையைக் குறைத்துப் பலன் செய்யலாம். போலீஸ் காவலிலிலுள்ள விசாரணைக் கைதி மயங்கி விழுந்துவிட்டால், அவனுக்கு காப்பி, டீ, தண்ணீர், உணவு கொடுத்து, மயக்கம் தெளிவித்து, பிறகு விசாரிப்பதில்லையா! அதுமாதிரிதான். குற்றம் புரிந்தவர்களில் யாராவது ஒருவர் அப்ரூவராக மாறி உண்மையைக் கூற முன்வந்தால் அவருக்கு தண்டனை குறையுமல்லவா! துலா ராசிக்கு 9-ல் உள்ள ராகுவை 3-ல் ஆட்சிபெற்ற குருவும், 2-ல் ஆட்சிபெற்ற செவ்வாயும் (அத்துடன் சனியும் கேதுவும்) பார்க் கிறார்கள். இது உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தும். கைகாட்டி இல்லாத நான்கு சந்திப்பு சாலையில் வழிதெரியாமல் தடுமாறி நிற்பவருக்கு, அந்த இடத்துக்குப் போகும் ஒரு நபர் வந்து அவரை வழிகாட்டி அழைத்துச் சென்றால் எப்படியிருக்கும்? அதைத்தான் "தெய்வாதீனம்' என்பார்கள்! இப்படி சில அதிசய நிகழ்ச்சிகள் அல்லது அற்புத நிகழ்ச் சிகள் நடக்கலாம். (இதற்கு "மிராக்கிள்' என்று பெயர்). ராசிநாதன் சுக்கிரன் (அசுரகுரு) 5-ல் திரிகோணம். தேவகுரு வியாழன் (குரு) 3-ல் ஆட்சி. எனவே குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தித் துணையாக வருவதால், உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் தங்குதடையின்றி, தாமதம் எதுவுமின்றி நடக்கும்; திருப்தியடையலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் தன் ராசியில் ஆட்சியாக இருக்கிறார், 4, 7, 8-ஆமிடங்களைப் பார்க்கிறார். 8-ல் ராகு தன் சுயசாரம் பெறுகிறார். அவரை 2, 5-க்குடைய குருவும், 3, 4-க்குடைய சனியும் பார்க் கிறார்கள். குரு 5-க்குடைய திரிகோணா திபதி; சனி 4-க்குடைய கேந்திராதிபதி. திரிகோணம் லட்சுமி ஸ்தானம்; கேந்திரம் விஷ்ணு ஸ்தானம். திரிகோணம் பூர்வபுண்ணிய வசமாக- தெய்வகடாட்ச மாக தானாக வந்து ஆட்கொள்வது. கேந்திரம்- உங்கள் முயற்சிக்கேற்ற அளவு கிடைக்கும் பலனைக் குறிப்பது. இதனைத் தான் திருவள்ளுவர், "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிலிதரும்' என்கிறார். ஆந்திராவில் இரண்டு ஆன்மிகவாதிகள், வேத சாஸ்திர விற்பன் னர்கள் இருந்தார்கள். அவர்களிருவரும் பிரம்மச்சாரிகள். லட்சாதிபதியாகி, திருமணம் செய்து சுகமாக வாழ திட்டம் போட்டு, எல்லாவிதமான பூஜைகளும் ஹோமங்களும் செய்தார்கள். ஹோமாக்னியில் தெய்வம் பிரசன்னமாகி, "இந்த ஜென்மாவில் நீங்கள் செல்வந்தராகும் யோகமில்லை' என்றது. "அப்படியானால் நாங்கள் செய்த ஹோமம், பூஜைக்கெல்லாம் பலனில் லையா?' என்றார்கள். "உண்டு. இதன்பலன் அடுத்த ஜென்மாவில் கண்டிப்பாகக் கிடைக்கும்' என்றது. உடனே அவர்கள் விரக்தியடைந்து தங்கள் குருநாதரிடம் விளக்கம் கேட்க, "அதற்காக நீங்கள் இறந்து மறுபடி பிறக்கவேண்டுமென்று அர்த் தமல்ல. சந்நியாசம் வாங்கிக்கொண்டால் மறுஜென்மம் எடுத்ததற்குச் சமம்' என்றார். அவ்வாறே பிரம்மச்சாரிகள் இருவரும் சந்நியாசம் வாங்கியதும், லட்சுமி- குபேரனுக்கு உத்தரவிட, குபேரன் சங்கநிதி, பதுமநிதிகளை அவர்கள்முன் கொண்டு வந்து கொட்டிக் குவித்துவிட்டான். ஆனால், அவர்களுக்கு செல்வத்தின்மீதிருந்த மோகம் விலகிவிட்டது. அவர்கள் "வேண்டாம்; நீயே எடுத்துச் செல்' என்றதும், "அது முடியாது. நீங்கள் செய்த பூஜாபலன் இது. நீங்கள்தான் பெற்றுக்கொள்ள வேண்டும்' என்று போய்விட்டான். அவர்கள் தங்கள் சீடர்களிடம் அதைக்கொடுத்து விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். அவர்கள்தான் ஹரிஹரன், புக்கன்! ஜாத கத்தில் தர்மகர்மாதிபதி யோகம் அமைந் தால், பூர்வஜென்ம புண்ணியவசமாக இந்த ஜென்மாவில் எல்லா யோகங்களையும் அடையலாம். அதுதான் அதிர்ஷ்டம் என்பது! ஜாதகம் எழுதும்போது "ஜெனனீ ஜென்ம ஸௌக்யானாம் வர்தனீ குலஸம்பதாம் பதவி பூர்வ புண்யானாம் லிலிக்யதே ஜெனன பத்ரிகா' என்று எழுதுவார்கள். இதன்பொருள்- இந்த தாய்- தந்தையின் கர்ப்பத்தில் பிறக்க வேண்டும் என்பது. (அதுதான் குலம்). இவ்வளவு சம்பத் (செல்வம்) அடைய வேண்டும்- இந்த பதவி, பட்டம் பெறவேண்டும் (குலம்- சம்பத்- பதவீ) என்பதும் கருவிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு கரு, தந்தையிடம் இரண்டுமாதமும், தாயின் கர்ப்பத்தில் பத்துமாதமும் வாசம் செய்யும். அதனால் தான் ஜாதகத்தில் 12 லக்னம்- 12 ராசி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு அதிர்ஷ்டயோகம் உண்டு.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிக்கு இப்போது ஜென்மச் சனியும் ஜென்ம கேதுவும் இருப்பது ஒரு குறை என்றாலும், அவர்களுடன் ஜென்ம குருவும் இருப்பதால் அந்தக் குறை நிறைவாகிவிடுகிறது. தேன் தானும் கெடாது; தன்னுடன் சேர்ந்த பொருள் களையும் கெடவிடாது. நல்லவர்கள் தன்னுடன் தொடர்புடையவர்களையும் நல்லவர்களாக்கிவிடுவார்கள். மேலும் உங்களுக்கு நடக்கும் ஜென்மச்சனி எந்தச் சுற்றாக இருந்தாலும், குருவின் சேர்க்கையால் பொங்குசனியாக மாறிப் பலன் செய்யும். முதல் சுற்று ஏழரைச்சனி மங்குசனி என்றும், இரண்டாவது சுற்று ஏழரைச்சனி பொங்குசனி என்றும், மூன்றாவது சுற்று ஏழரைச்சனி மரணச்சனி என்றும் பொதுவாகச் சொல்வதுண்டு. 90 வயதைக் கடந்தவர்கள் மரணச்சனியையும் கடந்தவர்கள். ஆகவே மரணச்சனி என்றதும் பயந்துவிடவேண்டாம். பிறக்கும்போது ஏழரைச்சனியில் இருந்தவர்கள் 30 வயதில் இரண்டாவது சுற்று, 60 வயதில் மூன்றாவது சுற்றைச் சந்தித்தவர்கள். 90 வயதில் நான்காவது சுற்றாகிவிடும் என்பதால், மரணச்சனி என்பதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம். இந்த ஏழரைச்சனி சிலருக்கு தேக ஆரோக்கியத்தை பாதிக்கலாம். பெரிய அளவில் நோய் என்பது வராது. வைத்தியச்செலவும் வராது. சின்னச்சின்ன உபாதைகள், கொசுக்கடி தூக்கத்தைக் கெடுப்பதுபோல நிம்மதியைக் கெடுக்கலாம். என்றாலும் ராசிநாதன் குரு ஆட்சிபெற்றதால், "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்பதுபோல குறை ஏதும் ஏற்படாது- வரவும் வராது! செயலளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. என்றாலும், முக்கியமான பொருளைத் தேடும்போது, கண்ணெதிரே இருந்தும் ஏதோ ஒரு துணி அல்லது பேப்பர் அதை மறைத்திருந்தால் எப்படி டென்ஷனாகத் தேடுவோமோ அப்படிப்பட்ட உணர்வுதான் இருக்கும். இதுதான் ஜென்மச்சனியும் ஜென்ம கேதுவும் செய்யும் திருவிளையாடல்! அதேசமயம் குரு சேர்க்கை, ஆட்சி என்ப தால் திரை விலகும். மறைந்திருந்தவை கண்ணுக்குத் தெரியும்!
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி ராசிக்கு 12-ல் மறைந்திருக்கிறார். அவருடன் அவருக்கு வீடுகொடுத்த குருவும் மறைவு; கேதுவும் மறைவு. இந்தநிலையில் ராசிநாதன் சனியும் அஸ்தமனம்; அவருக்கு வீடுகொடுத்த குருவும் அஸ்தமனம். டபுள் மைனஸ் = ஒரு பிளஸ் என்றமாதிரியும், டபுள் நெகட்டிவ் = ஒரு பாசிட்டிவ் என்பது. போலவும் 12-ல் மறையும் கிரகங்கள் அஸ்தமனம் அடைவதால் 12-ஆமிடத்துக் கெடுபலன் எல்லாம் மாறிவிடும்; மறைந்து விடும்! சனி, குரு சேர்க்கையால் எந்த ஒரு செயலையும் முயற்சியையும் திடமாகவும் உறுதியாகவும் செயல்படுத்தலாம். கேது- ராகு சம்பந்தப்படுவதால் சிலநேரம் சிறுசிறு இடையூறுகளும் தடைகளும் ஏற்பட்டாலும், அவை வேகத்தடை (ஸ்பீடு பிரேக்கர்) மாதிரிதானே தவிர, பயணத்தைத் தடுப் பதாகவோ, "பிரேக் ஜர்னி' என்றோ கருத வேண்டாம். உண்மையில் அதைப் பயணத் தடை என்று எடுத்துக்கொள்ளாமல், முன்ஜாக்கிரதைக்குரிய அறிவிப்பாக எடுத்துக்கொள்ளலாம். இதுகூட இல்லை யென்றால் ஏழரைச்சனி என்பதற்கும், விரயச்சனி என்பதற்கும் அர்த்தமில்லாமல் போய்விடுமல்லவா? கொட்டினால்தான் தேள்- கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி என்ற மாதிரிதான். விரயச்சனி வேலை, உத்தியோகம், தொழில் சம்பந்தமாக தவிர்க்க முடியாத பயணங்களைத் தரலாம். அந்தப் பயணங்களும் பயனுள்ள பயணங் களாகும்; லாபம் தரும் பயணங்களாகும். சிலநேரம் ஆதாயம் கருதி- லாபம் கருதி முதலீடு செய்யும் யோகமாக (இன்வெஸ்ட் மென்ட்) அமையும். சிட்பண்டு, இன்சூரன்ஸ், எப்ஃடி டெபாசிட் போன்றவகையிலும் முதலீடு செய்யலாம். இப்படி வருமானமும் லாபமும் வரும் முதலீடு செய்தால் மற்றவகையில் வீண்விரயம், வெட்டிச் செலவுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிக்கு அதிபதி சனி 11-ல் இருக்கிறார். அது குரு வீடு. அங்கு குருவும் ஆட்சி; 10-க்குடைய செவ்வாயும் ஆட்சி! அத்துடன் 3, 10-க்குடையவர் ஆட்சிபெற்று கும்ப ராசியைப் பார்ப்பதும் சிறப்புதான். நண்பர்களும் உடன்பிறந்தவர்களும் உங்களுக்கு ஆதரவாக இருந்து அனுகூல மாக ஒத்துழைப்பதால், உங்களின் முயற்சி களும் காரியங்களும் எவ்விதத் தடையுமில்லாமல்- ஏமாற்றமில்லாமல் ஈடேறும். அதனால் ஏற்படும் திருப்தியும் நம்பிக்கையும் அடுத்த காரியங்களுக்கு அஸ்திவாரமாக அமைந்து செயல்படலாம். பொதுவாகவே கும்ப ராசியில் பிறந்தவர் களும், கும்ப லக்னத்தில் பிறந்தவர்களும் அனுதாபத்துக்குரியவர்கள் என்பது எனது கணிப்பு. ஏனென்றால் கும்பத்துக்கு அதிபதியான சனியே 12-க்கும் உடைய விரயாதிபதியுமாவார். மற்ற எந்த ராசிக்கும் அல்லது லக்னத்துக்கும் இந்தமாதிரி அமைப்பிருக்காது. 6-க்குடையவர் அல்லது 8-க்குடையவர் என்ற ஆதிக்கம் வரலாம். தனக்குத்தானே விரயாதிபதி என்ற ஆதிக்கம் ஏற்படாது. அதனால்தான் கும்ப ராசி அல்லது கும்ப லக்னத்துக்காரர்கள் அனுதாபத்துக்குரியவர்கள் என்று குறிப்பிடுகிறேன். எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு இருக்கிறது. அதாவது 9-க்குடைய சுக்கிரன்- திரிகோணாதிபதி ஜென்ம ராசியில் இருக்க, 5-க்குடைய புதன் 7-க்குடைய சூரியனோடு சேர்ந்திருக்க, 10-க்குடைய கேந்திராதிபதி செவ்வாய் (1, 4, 7, 10 கேந்திர ஸ்தானங்கள்) 10-ல் ஆட்சிபெற்று 5-ஆமிடமான திரிகோண ஸ்தானத்தைப் பார்ப்பது யோகம்! அதாவது கேந்திரமும் திரிகோணமும் இணைவது ராஜயோகம். துலா ராசிக்கு 4, 5-க்குடைய சனியும், ரிஷப ராசிக்கு 9, 10-க்குடைய சனியும் அந்தந்த ராசிகளுக்கு ராஜயோகாதிபதிகள். திரிகோணமும் கேந்திரமும் இணைவது ராஜயோகம். உங்களுக்கு அந்த ராஜயோகம் அமைகிறது. எப்படி? 9-க்குடைய சுக்கிரன் ராசியில் இருக்க, 10-க்குடைய செவ்வாய் பார்க்கிறார்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
சமீபகாலமாகவே 12 ராசி களிலும் மீன ராசிக்கு மட்டுமே கோட் சாரம் அனுகூலமாகத் திகழ்கிறது. எப்படி யென்றால், 10-ல் 10-க்குடைய குரு ஆட்சி. 9-ல் 9-க்குடைய செவ்வாய் ஆட்சி! அத்துடன் 6-க்குடைய சூரியனும், 10-க்குடைய புதனும் 11-ல் கூடியிருப்பது ஒருவகையில் நல்லது; இன்னொரு வகையில் கெடுதல்! 4-க்குடையவனும் 7-க்குடையவனுமான புதன்- ராசிக்கு 6-க்குடைய சூரியனோடு சேர்வதும்; 7, 12-க்குடையவனோடும் சேர்வ தென்பதால் உங்களுக்கோ மனைவிக்கோ உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உருவானாலும் பாதிப்புக்கு இடம் ஏற்படாது. அதாவது மதிப்பு, மரியாதை, கௌரவம், செல்வாக்கு ஆகியவற்றுக்குக் குறைவில்லை. பொருளாதாரத்திலும் குறையிருக்காது. ஆனால் எவ்வளவு வருவாய் வந்தாலும், பாலைவனத்தில் பெய்த மழைபோல சேமிப்புக்கு இடமில் லாமல் செலவாகிவிடும். என்றாலும் இறைக்கிற கிணறு ஊறும் என்பதுபோல, மிச்சமில்லாமல் செலவாகிவிட்டாலும், மறுபடியும் வருவாய்க்கு இடமுண்டு. ஒருசிலர் பெரிய திட்டங்களில், பெரிய முயற்சிகளில் இறங்கிவிட்டு, ஆழம் தெரியாமல் காலை விட்டுத் தவிப்பார்கள். இருந்தாலும் தன் கொள்கையை அல்லது திட்டத்தை- குறிக்கோளை மாற்றிக்கொள்ளாமல் ஒரே லட்சிய வெறியாக செயல்படுவார்கள். 10-ல் குரு ஆட்சி, 9-ல் செவ்வாய் ஆட்சி என்பதால் உங்கள் லட்சியம் ஈடேறும். "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்று வள்ளுவப் பெருந்தகை சொல்வார். அதாவது வைராக்கியமும் சாதனையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம்! இதற்கு உதாரணம் ஏகலைவனும், விசுவா மித்திரரும், பகீரதனும்தான்! குரு துரோணர் ராஜவம்சத்தினருக்கு மட்டுமே வில்வித்தை கற்றுக்கொடுத்தார். ஏகலைவனுக்கு மறுத்து விட்டார். அவன் துரோணரை மானசீக குருவாக மதித்து தானாகவே பயிற்சி செய்து அர்ஜுனனை மிஞ்சிய வில்லாளி யாகிவிட்டான். விசுவாமித்திரரும் கடும் தவமியற்றி வசிஷ்டருக்கு இணையாக பிரம்ம ரிஷியானார். பகீரதனும் முன்னோர் களின் ஆத்மா சாந்தியடைய பிதுர் தர்ப் பணத்துக்காக கங்கையை பூமிக்கு வரவழைத்தான். ஆக, வைராக்கியமும் சாதனையும் இருந்தால் எண்ணியது ஈடேறும் என்பதற்கு இவர்களெல்லாம் உதாரணம்.