ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
கிரக பாதசாரம்:
சூரியன்: சதயம்- 3, 4, பூரட்டாதி- 1.
செவ்வாய்: கார்த்திகை- 2, 3, 4.
புதன்: திருவோணம்- 3, 4, அவிட்டம்- 1, 2.
குரு: திருவோணம்- 2, 3.
சுக்கிரன்: அவிட்டம்- 4, சதயம்- 1, 2, 3.
சனி: உத்திராடம்- 4.
ராகு: ரோகிணி- 4.
கேது: கேட்டை- 2.
கிரக மாற்றம்:
இல்லை.
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்.
28-2-2021- கன்னி.
2-3-2021- துலாம்.
5-3-2021- விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிநாதன் செவ்வாய். 2-ல் ராகுவோடு சேர்ந்து பலம்பெற்று 5, 8, 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். 5-ஆமிடத்தை 5-க்குடைய சூரியனும் 2, 7-க்குடைய சுக்கிரனும் பார்க்கிறார்கள். எனவே, உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் எவ்வித இடையூறு இல்லாமலும் தடைகளும் குறுக்கீடுகளும் இல்லாமலும் ஈடேறும் என்பது உறுதி. 2-ல் செவ்வாய்- ராகு சேர்க்கையும், அவர்களைப் பார்க்கும் குருவும் உங்களுக்கு பொருளாதார நெருக்கடியைப் போக்கி சரளமான பணப்புழக்கத்தை உருவாக்குவார்கள். கொடுக்கல்- வாங்கல் சீராகவே செயல்படும். பாக்கிய விரயாதிபதியான குரு- தனகாரன் தனஸ்தானத்தைப் பார்ப்பது சிறப்பு. பொருளாதாரரீதியான எந்தக் குறைபாடுகளுக்கும் இடம் ஏற்படாது. உங்களுக்கு வரவேண்டியதும் வந்துசேரும். கொடுக்க வேண்டியதும் ஓடியடையும். அதேசமயம் 2-ல் உள்ள ராகு ரத்தபந்த சொந்தம்வகையில் சிக்கிக்கொண்ட பொருளாதாரத்தை, உரிய காலத்தில் உரிய முறையில் திரும்பப் பெறுவதில் சிக்கல், சிரமங்களை ஏற்படுத்தும். தாட்சண்யம் தனநாசம் என்பதால் அதை வசூல்செய்வதில் கண்டிப்பாகவும் கறாராகவும் இருக்கவேண்டும். பார்க்காத தொழிலும் கேட்காத பணமும் கெட்டுப் போகும் என்பது பழமொழி! உங்களின் பெருந்தன்மையை மற்றவர்கள் ஏமாளித்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசியில் செவ்வாய்- ராகுவும், 7-ல் கேதுவும் இருப்பது தோஷம்தான். திருமணத்தடை, வாரிசு தாமதம் குடும்பத்தில் குழப்பம் என்று ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரும். என்றாலும் 9-ல் குரு நீசபங்கம் பெற்றுப் பார்ப்பதால் கழுவின மீனில் நடுவின மீனைப்போல பிரச்சினைகளை சமாளிக்கும் தனி ஆற்றலும் உண்டாகும். அது மட்டுமல்ல; கடந்த அட்டமச் சனிக் காலத்தில் சந்தித்த பிரச்சினைகளுக்கும் சங்கடங்களுக்கும் இப்போது நல்ல தீர்வு எதிர்பார்க்கலாம். 12-க்குடைய செவ்வாய் ஜென்மத்தில் ராகுவோடு இணைவதால், ஒருசிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்பட இடமுண்டு. தொழில், வேலை, உத்தியோகரீதியாகவும் அமையலாம். அல்லது குடியிருப்புரீதியாகவும் மாற்றம் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் சாதமாக இருந்தால் சம்பளத்தில் வேலை பார்த்தவர்கள் விலகி சொந்தத் தொழில் அல்லது கூட்டுத்தொழில் ஆரம்பிக்கலாம். அப்படி கூட்டுத்தொழில் ஆரம்பிக்கும்போது 6, 8 என்று சஷ்டாஷ்டக ராசிக்காரர்களோடு சேரக்கூடாது. 5, 9 என்ற திரிகோண ராசிக்காரர்களோடு சேர்ந்தால் தொழில், பொருளாதாரம் வளர்ச்சியடையும். 10-ல் சூரியனும் சுக்கிரனும் இணைவதால் அரசாங்கம் சம்பந்தப்பட்ட வில்லங்கம், விவகாரங்கள் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையும். ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு வரவேண்டிய கிராஜுவிட்டி போன்ற பணங்கள் எல்லாம் வசூலாகிவிடும். 7-க்குடையவர் ஜென்ம ராசியில் நின்று 7-ஆமிடத்தையே பார்ப்பதால் நாகதோஷம், களஸ்திரதோஷம் எல்லாம் விலகிவிடும். குரு பார்வையால் திருமணத் தடை நீங்கி விவாகம் விரைவில் நடைபெறும். அதேபோல வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு அமைந்துவிடும். எத்தகைய சுபமுகூர்த்தமாக இருந்தாலும் ஆங்கிலத் தேதி 4, 7, 8 அமையக்கூடாது. அது பின்விளைவுகளை ஏற்படுத்தும். 1, 3, 6-ஆம் தேதி அல்லது கூட்டுத்தொகை உத்தமம்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர் பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிநாதன் புதன் 8-ல் மறைந் தாலும் அவருக்கு வீடுகொடுத்த சனியோடும் 7, 10-க்குடைய குருவோடும் சம்பந்தப்படுகிறார். மகரகுரு நீசபங்க ராஜயோகமடைகிறார். குரு எப்படி இருந்தாலும்- அதாவது நீசம், பகை, ஆட்சி, உச்சம் என்று எப்படி இருந்தாலும் குரு மரியாதைக்குரியவர்தான். வணங்கத்தக்கவர்தான். இந்த விதி மாதா, பிதா, குரு மூன்றுபேருக்கும் பொருந்தும். இந்தப் பூவுலகில் நாம் ஜெனனம் எடுப்பதற்குக் காரணமாக இருப்பவர்கள் பெற்றோர்தான். ஒரு கரு தந்தையின் கர்ப்பத்தில் இரண்டு மாதமும், தாயின் கர்ப்பத்தில் பத்து மாதமும் தங்கிப் பிறக்கும் என்பது சாஸ்திரம். அதனால் தான், "தாயிற்சிறந்த கோவிலுமில்லை. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்றார்கள். அவர்கள் நல்லவர்களா- கெட்டவர்களா என்ற ஆராய்ச்சிக்கு இடமில்லமால் வணக்கத்திற் குரியவர்கள். மிதுன ராசிக்கு அட்டமத்துச்சனி நடப்பதால் இடப்பெயர்ச்சி, குடியிருப்பு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை எதிர் பார்க்கலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் கடல்கடந்து வெளிநாட்டுக்குப் போய் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். அல்லது சொந்தத் தொழில் செய்கிறவர்கள் உள்ளூரில் அல்லது வெளியூரில் கிளைகள் ஆரம்பித்து தொழிலைப் பெருக்கலாம். 6, 11-க்குடைய செவ்வாய் 12-ல் மறைய, 7, 10-க்குடைய குரு நீசபங்க ராஜயோகம் பெற்றுப் பார்ப்பதால், மனைவி பெயரில் அல்லது குடும்ப அங்கத்தினர் கள் பெயரில் சிலர் கூட்டுத்தொழில் செய்யலாம். தொழில் சம்பந்தமான பொருளாதாரப் பற்றாக் குறை இருந்தால் அதை சமாளிக்க கடன் வாங்கலாம். 9-ல் சூரியன், சுக்கிரன் இருப்பதால், முன்னோர்களின் ஆசியும் வழிநடந்தலும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசிக்கு 11-ல் செவ்வாய், ராகு நிற்பது உங்களுக்கு பக்கபலமாக அமைகிறது. செவ்வாய் 5 10-க்குடையவர். எனவே, உங்களுடைய திட்டங்களும் எண்ணங்களும் முழுமையாக வெற்றியடையும். 5-ல் கேது நிற்பது ஒருவகையில உங்களுக்கு தயக்கத்தையும் தளர்ச்சியையும் ஏற்படுத்தினாலும், அந்த வீட்டுக்குரியவர் அந்த இடத்தைப் பார்ப்பதால் கொள்கைப் பிடிப்பு, வைராக்கியம் இடைவிடாத சாதனையை உருவாக்கி வெற்றிபெற செய்யும். 11-ஆமிடம் என்பது ஜெய ஸ்தானம்- அதாவது வெற்றி ஸ்தானம் அங்கு செவ்வாய், ராகு இருப்பதால் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். சொன்னதைச் செய்வீர்கள். செய்வதையே சொல்வீர்கள். சூரியனும் சுக்கிரனும் 8-ல் மறைவது ஒருவகையில் குற்றம் என்றா லும், 11-ல் உள்ள செவ்வாயும் ராகுவும் "ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு' என்பதுபோல காலம்கனியும்வரை காத்திருந்து காரியங்களை சாதிப்பீர்கள். சாதிப்பீர்கள். 5-ல் கேது நின்று ராகு பார்ப்பது குற்றம் என்றா லும், 5-க்குடைய செவ்வாய் சம்பந்தம் பெறுவதால் தோஷம் நிவர்த்தியாகிறது. பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றியும், வாரிசுகளின் வருங்காலத்தைப் பற்றியும் சிலருக்கு கவலைகள் காணப்படலாம். 5-க்குடைய செவ்வாயே 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் எல்லாம் திட்டப்படி செயல்படும். எதிர்பார்த்தபடி பலன்தரும். அதே சமயம் காரணமில்லாத கவலைகளும் கற்பனைகளும் ஒருசிலருக்குக் காணப்பட்டாலும் அவற்றை உங்கள் விவேகத்தால்- வைராக்கியத்தால் மாற்றி யமைத்து வெற்றிபெறலாம். பொருளாதாரம், தேக ஆரோக்கியம், வரவு- செலவு எல்லாவற்றிலும் எந்தவித இடையூறுகளில்லாமல் செயல்படும் அமைப்பும் உண்டாகும். "குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என்று பாடலாம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிக்கு 6-ல் புதன், குரு, சனி மூவரும் இணைகிறார்கள். புதன் 2, 11-க்குடையவர். குரு 5, 8-க்குடையவர். சனி 6, 7-க்குடையவர். இந்த மூவரின் சேர்க்கை விபரீத ராஜயோகத்தை ஏற்படுத்தும். ஜாதக தசாபுக்திகள் யோகமாக அமைந்தால் காக்கை உட்கார பணபுழம் விழுந்த கதையாகவும், முயலை ஆமை முந்தியதுபோலவும், இறுமாப்புடைய எதிரியின் பலவீனத்தை உங்கள் வெற்றிக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஜாதி சமயம், அரசியல், கட்சி போன்ற துறையில் உள்ளவர்களுக்கு இப்போது வெற்றி வந்துசேரும் காலம். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 10-ல் செவ்வாய், ராகு இணைவதும், அவர்களை மகர குரு நீசபங்க ராஜயோகம் பெற்றுப் பார்ப்பதும் உங்களது எல்லா முயற்சிகளுக்கும் பச்சைக்கொடி காட்டுகிறது. கல்வி சம்பந்தம், தொழில், வேலை சம்பந்தம் எல்லாவற்றிலும் அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். குறிப்பாக 10-ல் செவ்வாய், ராகு இருப்பது மருத்துவம் சம்பந்தமான படிப்புகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித்தரும். அனுபவரீதியாக சிலர் மருத்துவத் தொழில்துறையில் ஈடுபடலாம். கைராசியானவர் என்று பெயர் எடுக்கலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் தாயின் உடல்நலம் பாதிக்கலாம். அல்லது உங்களது உடல்நலன் பாதிக்கலாம். ஜாதக தசாப்புக்திகளை அனுசரித்து தேவையான பரிகாரங்களை மேற்கொள்ளவும். 7-ல் ராசிநாதன் சூரியனும் களஸ்திரகாரகன் சுக்கிரனும் இணைவது, நல்லகுடும்ப ஒரு பல்கலைக்கழகம் என்று சொல்வதற்கு ஏற்றமாதிரி கணவன்- மனைவி, மக்கள்யோகம் மனமகிழ்ச்சியாக அமையும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசிநாதன் புதன் 5-ல் திரிகோணம் பெறுகிறார். அவருடன் குரு, சனி சம்பந்தம். குரு 4, 7-க்குடையவர். சனி 5, 6-க்குடையவர். 4, 7 கேந்திரம். 5- திரிகோணம். இந்த இருவரும் இணைவது மிகப்பெரிய யோகம். அதாவது கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம், முயற்சி ஸ்தானம். திரிகோணம் என்பது லட்சுமி ஸ்தானம், அனுகூல ஸ்தானம், என்று பலமுறை எழுதியுள்ளேன். இந்த இரண்டும் இணைவதால் உங்கள் முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சமமாக எல்லாம் சிறப்பாக அமையும். 9-ல் செவ்வாய், ராகு நின்று கேதுவும் பார்க்கிறார்; குருவும் பார்க்கிறார். குரு 4, 7-க்குடைய கேந்திராதிபதி திரிகோணம் பெறுவதால் குருவருளும் திருவருளும் பெருகும். மனித முயற்சிகள் எல்லாவற்றுக்கும் குருவருளும் திருவருளும் துணை புரிந்தால்தான் அவை வெற்றியாக அமையும். "தெய்வத்தாலாகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்' என்பது குறள். முயற்சிக்குக்கேற்ற பலன் கிடைப்பது கூலி. ஆனால் தெய்வத்தின் அருள் அதற்குரிய போனஸ். 2, 9-க்குடைய சுக்கிரனும், 12-க்குடைய சூரியனும் 6-ல் மறைவது ஒருவகையில் சங்கடம்தான். 2-க்குடையவர் 6-ல் மறைந்தால் நமது பணம் அந்நியர்கள் வசமாகும். 6-க்குடையவர் 2-ல் இருந்தால் அந்நியர் பணம் நம்மிடம் புரளும். 3, 8-க்குடைய செவ்வாய் 9-ல் ராகு- கேது சம்பந்தம் பெறுவதால், ஒருசிலருக்கு தகப்பனாருக்கோ அல்லது தகப்பனாருடைய சொத்து சுகங்களுக்கோ சங்கடங்கள் ஏற்படலாம். அல்லது வில்லங்கம், விவகாரத்தை சந்திக்கலாம். எனினும் குரு பார்வை இருப்பதால் முடிவில் எல்லாவற்றையும் சமாளித்து சாதகமாக்கலாம்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிநாதன் சுக்கிரன் 5-ல் திரிகோணம் ஏறுகிறார். அவருடன் 11-க்குடைய சூரியன் சம்பந்தம். துலா ராசிக்கு 11-ஆமிடம் பாதக ஸ்தானம் என்றா லும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் எப்போதும் தோஷமில்லை. பொதுவாக இந்த இருவருக்கும் அஸ்தமனதோஷம் இல்லையென்றாலும் கிரகண தோஷம் மட்டும் உண்டு. சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வரும் காலங்களில் சமுத்திர நீரில் நீராடினா லும் ஜெபம் செய்தாலும் பலமடங்கு பலன் உண்டாகும். அதேபோல நதி, குளம், நீரிலும் முக்கியத்துவம் உண்டு. மந்திரிக்கிறவர்கள். கிரகண காலங்களில் நீரில் நின்று ஜெபம் செய்தால் மந்திரசித்தி உண்டாகும். 8-ல் செவ்வாய், ராகு சம்பந்தம். திருமணத் தடையையும் தாமத்தையும் குறிக்கும். ஒருசிலருக்கு இருமண வாழ்க்கையையும் குறிக்கும். இதே கிரக ஒற்றுமை ஜனன ஜாதகத்தில் இருந்தால் தாமதத் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமணம் நடக்கும். தாமதத் திருமணத்திற்கு எல்லைக்கோடு பெண்களுக்கு இருபத்தியேழு வயது. ஆண்களுக்கு முப்பதுக்குமேல் என்பது ஒரு கணக்காகும். தப்பித் தவறி முன்னதாகத் திருமணமாகிவிட்டால் அது கலாட்டா கல்யாணமாக அமைந்துவிடும். செவ்வாய், ராகுவோடு ஜனன ஜாதகத்தில் சுக்கிரனோ அல்லது 7-க்குடையவரோ சம்பந்தப்பட்டாலும் மேற்படி திருமண வாழ்க்கையில் குழப்பத்திற்கு இடமுண்டாகும். பெரும்பாலும் ஆண்களானாலும் பெண்களானா லும் ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைத்துணையை அடையக்கூடும் என்பது ஒரு அனுபவ உண்மை. குரு பார்வை இருந்தால் மேற்படி தோஷத்திற்குநிவர்த்தி உண்டாகும். ராசிக்கு 5-ல் சூரியன் இருப்பது புத்திரதோஷம் எனப்பட்டாலும், ராசிநாதன் சுக்கிரன் சம்பந்தப்படுவதால் தோஷ நிவர்த்திக்கு இடமுண்டு. 4-ல் புதன், குரு, சனி சம்பந்தப்படுவதால் பூமி, வீடு, மனை, வாகன யோகம் உண்டாகும். அவை சம்பந்தமாக கடனும் உண்டாகும். 6-க்குடைய குரு 4-ல் நீசபங்கம் என்பதால் கடன் ஏற்பட்டாலும் எளிதாக தவணையைக் கட்டிவிடலாம்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிநாதன் செவ்வாய் தன் ராசிக்கு 7-ல் கேந்திர பலம்பெற்று தன் ராசியைப் பார்க்கிறார். அதனால் ஜென்ம கேது- சப்தம ராகு தோஷம் விலகும். அதாவது நாகதோஷத்தால் உண்டாகும் திருமணத் தடைகளும் தாமதங்களும் விலகும். பொதுவாக நாகதோஷமுள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் 27 வயது அல்லது 30 வயதுவரை திருமணம் தடையாகலாம். ராசிநாதன் பலத்தால் காலாகாலத்தில் உரிய வயதில் திருமணம் கூடும். குரு பார்வை இருப்பதால் திருமண வாழ்க்கையும் திருப்தியாக அமையும். 5-க்குடையவர் குரு நீசபங்க ராஜயோகம் பெற்று 7-ஆமிடம், 9-ஆமிடம், 11-ஆமிடங்களைப் பார்ப்பதால் நல்ல மனைவி, நல்ல மணவாழ்க்கை, நல்ல மக்கட்செல்வம் என்ற அமைப்பில் எல்லாம் சிறப்பாக செயல்படும். நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்று பாராட்டுமளவு வாழ்க்கை அமையும். ஒருசிலருக்கு காதல் கைகூடி விரும்பிய கணவன் அல்லது விரும்பிய மனைவியை அடையலாம். திருமணமானவர்கள் கணவன் அல்லது மனைவி பெயரில் சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம். உணவு விடுதி அல்லது அக்னி சம்பந்தமான தொழில் ஆரம்பிக்கலாம் அல்லது ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்யவும் வாய்ப்பு உருவாகும். 4-ல் சூரியன், சுக்கிரன் சம்பந்தமிருப்பதால் சிலருக்கு ஆரோக்கியக் குறைவு, வைத்தியச்செலவு வரலாம். வயதான பெற்றோர்களுக்கு கவனம் தேவை; பராமரிப்பும் தேவை. சில குடும்பங்களில் தசாபுக்திகள் 6, 8-ஆக இருந்தால் குடும்பத்தில் பகை உணர்வும் ஏட்டிக்குப் போட்டியான செயல் நடவடிக்கைகளும் காணப்படலாம். "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை' என்ற பழமொழிப்படி அனுசரித்து நடந்துகொள்ள பழகிக்கொள்ளுங்கள்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
தனுசு ராசிநாதன் குரு மகரத்தில் நீசமாக இருந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த சனி ஆட்சிபெறுவதால் குருவுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. அதனால் உங்களுடைய செல்வாக்கு, கௌரவம், செயல்பாடு, திறமை எதிலும் குறைவில்லை. அதேபோல 4-ஆமிடம் சுகஸ்தானம், தாயார் ஸ்தானம். பூமி, வீடு, வாகனம் ஸ்தானம் இவற்றிலும் குறையேதும் இல்லை. ஜனன ஜாதகத்தில் யோகமாக இருந்தால் சொந்த வீடு, மனை, வாகன யோகங்களை அடையலாம். ஏற்கெனவே இந்த யோகங்களை அடைந்திருந்தால் அவற்றால் உண்டான கடன்களை அடைத்து நிம்மதி பெறலாம். ஒருசிலர் புதுக்கடன் வாங்கி இன்னொரு சொத்து ஏற்படுத்தி அதன் வருமானத்தை வைத்து கடனை அடைக்கலாம். சனி சம்பந்தப்படுவதால் வீடு கட்டுவதில் சிறுசிறு பிரச்சினைகளை சந்தித்தாலும், அவற்றை எளிதாக சமாளித்துவிடலாம். ஒருவர் சொந்தமாக வாங்கிய இடத்தில் போர் போட்டார். அந்த ஏரியாவில் போர்வெல் அமைக்க முன் அனுமதிபெற வேண்டுமாம். அது அவருக்குத் தெரியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முறையாக உரியவர்களைச் சந்தித்து அனுமதிபெற்றார். இது ஏழரைச்சனியால் ஏற்பட்ட இடையூறு. தடைகள் எதுவானாலும் தடைகளை உடைத்தெறிந்து நினைத்ததை சாதிக்கும் கிரக அமைப்பு உங்களுக்கு இருக்கிறது. அதனால் தயங்கவேண்டாம்; மயங்க வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகளாலும் உண்டாகும் எதிர்ப்புகளையும் இடையூறுகளையும் பணத்தால் வெல்லமுடியும். நேர்மை மிகக்குறைவுதான். ஈட்டி எட்டியமட்டும் பாயும்; பணம் பாதாளம் வரை பாயும் என்பதுபோல பத்துக்கு இருபது செலவழித்தால் காரியத்தை சாதிக்கலாம்?
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
மகர ராசிநாதன் சனி ஆட்சியாக இருக்கிறார். 6-க்குடைய புதனும், 12-க்குடைய குருவும் ஜென்ம ராசியில் சம்பந்தப்படுவதால் சில காரியங்களை எளிதாக நிறைவேற்றலாம். சில காரியங்களை எதிர்ப்பு, இடையூறுகளை சந்தித்துப் போராடி சாதிக்கலாம். 9-ஆமிடத்தை குரு பார்ப்பதால் உங்கள் முயற்சிகளுக்கு குருவருளும் திருவருளும் துணையாக நிற்கும். அதனால் நினைத்ததை சாதிக்கலாம். எதிர்ப்புகளைத் தகர்க்கலாம். 11-ஆமிடத்தை செவ்வாய், ராகு பார்க்க, 11-ல் கேது பலம் பெறுவதால் காலம் உங்கள் முயற்சிகளுக்கு பச்சைக்கொடி காட்டும். 6-க்குடைய புதனே 9-க்கும் உடையவர் என்பதால், ஆரம்பத்தில் எதிர்ப்பாக இருப்பவர்களே பின்னர் உங்களுக்கு ஆதரவாளராக மாறலாம். எதிராளிகளை சகுனியின் ராஜதந்திரத்தால் ஜெயிக்க முடியும். எதிரிகளை வெல்வதற்கு படைபலமா, பணபலமா, அதிகார பலமா- இதில் எதையாவது பயன்படுத்தி வெற்றி பெறலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பலவீனம் உண்டு. எதிராளிக்கு என்ன பலவீனம் என்று கண்டறிந்து அதைப்பயன்படுத்தி வெற்றிகொள்ளலாம். அதுதான் சகுனியின் ராஜதந்திரம். 8-க்குடைய சூரியன், 5-க்குடைய சுக்கிரனோடு சம்பந்தப்பட்டு 2-ல் இருப்பது உங்களுக்கு வெற்றிக்கு வழிகாட்டும். காரியம் பெரிதா, வீரியம் பெரிதா என்ற நிலை ஏற்படும்போது, வீரியத்தை விலக்கி காரியத்தை சாதிக்கும் வழிகளைக் கடைப்பிடிக்கவும்.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
கும்ப ராசிநாதன் சனி 12-ல் மறைந்தாலும் ஆட்சியாக இருப்பது உங்களுக்கு தனி பலம்தான். அதன் பலன் சில காரியங்களை நேருக்கு நேர் மோதி சாதிக்கவேண்டும். சில காரியங்களை திரைமறைவில் நின்று சாதிக்கவேண்டும். அப்படி திரைமறைவில் நின்று சாதிப்பது தர்மமாகுமா என்று ஒரு சந்தேகம் ஏற்படலாம். யுத்த தர்மத்தில் மறைந்திருந்து தாக்குவது ஒரு தர்மம்தான். ஸ்ரீ ராமபிரானே வாலியை மறைந் திருந்து தாக்கிதான் வெற்றிகொண்டான். நவீன காலத்தில் அதை கொரில்லா போர் என்பார்கள். இராமாயணத்தில் சீதையை அக்னி பிரவேசம் செய்ததும், மகாபாரதத்தில் நிராயுதபாணியான அபிமன்யுவை வதம் செய்யவைத்ததும் தர்மத்திற்கு விரோதமான செயல்கள்தான். ஆக, தர்மவிரோதமான செயல்கள் இராமாயணம், மகாபாரதம், காலத்திலேயே வந்துவிட்டது. ஆகவே, உங்களுடைய செயல், நடவடிக்கைகள், ஆற்றல் எல்லாவற்றிலும் சாதனை படைக்கலாம். 4-ல் செவ்வாய், ராகு இருந்தாலும், அவர்களை நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு பார்ப்பதால் செவ்வாய், ராகு சேர்ந்த துர்ப்பலன்கள் மறைகிறது. மாறுபாடாக நற்பலன்கள் உருவாகும். எப்படி நெல்லிக்கனி துவர்ப்பாக இருந்தாலும் உமிழ்நீர் பட்டவுடன் இனிக்கிறதோ அதுபோல!
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
இந்த வாரம் 12 ராசிகளிலும் மீன ராசிக்குத்தான் அதிக நன்மைகள் ஏற்படக்கூடிய கிரக அமைப்பு காணப்படுகிறது. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதுபோல, மீனத்தில் பிறந்தவர்களுக்கு ராஜயோகம் அமைகிறது. மேஷம் முதலாவது ராசி. மீனம் பன்னிரண்டாவது ராசி. எப்போதும் ஆரம்பமும் முடிவும் என்ற இரண்டும் முக்கியத்துவமுடையது. டிவி சீரியல்களிலும் மற்ற தொடர்கதை நாவல்களிலும் "தொடரும் வளரும்' என்பதுபோல அதற்கு முக்கியத்துவம் உண்டாகும். 9-ல் உள்ள கேதுவை 9-க்குடைய செவ்வாய் பார்ப்பதால் பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், அறுபத்து நான்கு கலைவகை மார்க்கம் எல்லாவற்றிலும் மீன ராசிக்காரர்களும் மீன லக்னத்தில் பிறந்தவர்களும் முதலிடம் பெறுவார்கள்; முக்கியத்துவம் அடைவார்கள். "ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே' ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே என்று ஒரு திரைப்படப் பாடல் உண்டு. அதுபோல ஆரம்பமும் முடிவும் உங்கள் ஆற்றலை பறைசாற்றும்; திறமைக்குப் பெருமை சேர்க்கும். 6-க்குடைய சூரியன் 12-ல் மறைவதும் உங்களுக்கு ப்ளஸ் பாயின்ட்டுதான். 8-க்குடைய சுக்கிரனும் 12-ல் மறைவதும் உங்களுக்கு யோகம்தான். அதாவது டபுள் மைனஸ் ஒரு ப்ளஸ் என்பதுபோலவும், "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம்' என்பது போலவும் உங்களுக்கு அனுகூலமாக முடியும். 3-ல் உள்ள செவ்வாயும் ராகுவும் உடன்பிறப்புகள் வகையில் நல்லதும் உண்டு; கெடுதலும் உண்டு. உங்கள் கிரக அமைப்புக்கு கெடுதலையும் நல்லதாக மாற்றிக்கொள்ளும் தகுதியும் உண்டு.