ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

Advertisment

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த வாரமும் மேஷத்தில் ஆட்சியாக இருக் கிறார். அவரை 9-க்குரிய குரு 9-ல் ஆட்சிபெற்றுப் பார்க்கிறார். 9-க்குரிய குருவும், 10-க்குரிய சனியும் 9-ல் சேர்க்கை. இது தர்ம கர்மாதிபதி யோகத்தைக் குறிக்கும். ஒரு ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களைவிட தர்மகர்மாதிபதி யோகமிருந்தால், மலையே விழுந் தாலும் நிலைகுலையாத மனம் படைத்தவர்கள் என அர்த்தம். துடிப்பான பந்தயக் குதிரை தடுக்கிவிழுந்தாலும் மிடுக்கோடு எழுந்து ஓடி ஜெயிப்பதற்குச் சமம். பிரச்சினையில்லாதவர்களும் தோல்வியை சந்திக்காதவர்களும் யாருமே இல்லை. தர்மகர்மாதி பதி யோகமுடைய ஜாதகர்கள் தோல்வி யைக்கண்டு துவண்டுவிடாமல் வீறுகொண்டெழுந்து வெற்றிப் பயணம் போகலாம். தர்மம் என்பது 9-ஆமிடம் திரிகோணம். 10 என்பது கேந்திரம். கேந்திரம் என்பது மனிதமுயற்சி. திரிகோணம் என்பது தெய்வத்தின் ஆசிர்வாதம். ஆக, குருவருளும் திருவருளும் இருந்தால் பெருவருள் பெறலாம் என்பது விதி. அது இஷ்டமாக வருவது அதிர்ஷ்டமாகும். உங்களுக்குத் தளர்ச்சியில்லாத முயற்சியும் உண்டு; அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பும் உண்டு.

Advertisment

பரிகாரம்: வியாழக்கிழமை குரு பகவானையும், சனிக்கிழமை காலபைரவரையும் வழிபடவும்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷிப ராசியில் ஜென்ம ராகுவும், 7-ல் கேதுவும் இருக் கும் நிலையில், 8-ல் குரு, சனி மறைவு- அட்டமத்துச்சனி, அட்டமத்து குரு. ஆனால், குரு ஆட்சிபெற்றதால் 10, 11-க்குரியவர்களின் சேர்க்கை எனப்படும். 10- முயற்சி. 11- லாபம், வெற்றி. ஆகவே, அட்ட மத்துச் சனியைப் பற்றிக் கவலைப் படவேண்டாம். "அட்ட மத்துச்சனி தொட்டது துலங்காது' என்பார்கள். குருவோடு சேர்க்கை என்பதால், திட்ட மிட்டு செயல்பட்டு வெற்றியை எட்டிப் பிடிப்பீர்கள். 10-க்குரியவரும், 11-க்குரியவரும் 8-ல் இணைந்திருப்பது எதிர்பாராத வெற்றி யையும், எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும் குறிக்கும். 11-ஆமிடத்தை சூரியன் பார்க்கிறார். 11-ல் சூரியன் இருந்தா லும் அல்லது 11-ஆமி டத்தை சூரியன் பார்த்தா லும் அவர்கள் சொல்லி கில்லியடிப்பார்கள். வெற்றிக் குப் பஞ்சமில்லை. ஒரு முகூர்த்த லக்னம் குறிக்கும் பொழுது, 11-ல் சூரியன் நிற்கும்படி லக்னம் அமைத்துக்கொடுத்தால் அந்தக் காரியம் விருத்தியடையும்; வெற்றிபெறும். வீழ்ச்சிக்கு இடமில்லை. அத்துடன் 10-க்குரிய சனி 10-ஆமிடத்தையே பார்ப்பதால்- அவரோடு 11-க்குரிய குரு சம்பந்தம் என்பதால், முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் நிச்சயம்.

பரிகாரம்: ஜென்ம ராகு சாதகமாக அமைய துர்க்கை யம்மனை வழிபடவும்.

rr

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் திரிகோணத்தில் இருக்கிறார். மிதுன ராசியை குருவும் சனியும் பார்க்கிறார்கள். குரு 10-க்குரியவர். சனி 9-க்குரியவர். இது தர்மகர்மாதிபதி யோகத்தைக் குறிக்கிறது. தர்மகர்மாதிபதி யோகம் ஜாத கத்தில் அமைந்தால், எளிய முயற்சி; அதிக வெற்றி என அர்த்தம். "காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதை' எனச் சொல்லலாம். இன்னும் தெளிவாகச் சொன்னால்- கும்பிடப்போன தெய்வம் எதிரில் வந்தமாதிரி. எப்போதா பழகியவர் எப்போதா உங்களைவிட்டுப் பிரிந்திருக்கலாம். திடீரென அவர் நினைவு உங்களுக்கு வரும். அவர் எங்கிருக்கிறார், எப்படியிருக்கி றார் எனத் தெரியாத நிலையில், எதிர்பாராதவிதமாக அவரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ' என்கிறமாதிரி பெரு மகிழ்ச்சியடைவீர்கள். இதைத்தான் ஆங்கிலத்தில் "டெலிபதி' என்பார் கள். பிசிராந்தையார் என்ற பெரும் புலவரும் கோப்பெருஞ் சோழ மகாராஜாவும் ஒருவரையொருவர் காணாமல் நட்புகொண்டிருந்தனர். புலவரின் அந்திமக் காலத்தில் சோழன் எதிர்பாராதவிதமாக அவரை சந்தித்தான். இது வரலாறு.

பரிகாரம்: 11-ஆமிடத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய்க்காகத் தண்ட பாணியை வழிபடவும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசிக்கு குருவும் சனியும் 6-ல் மறைகிறார்கள். குரு 6, 9-க்குரியவர். சனி 7, 8-க்குரியவர். 9-க்குரிய குரு 10-க்குரிய செவ்வாயைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுகிறது. குருவும் செவ்வாயும் ஆட்சிபெற்றவர்கள். அட்டமாதி பதி சனி அட்டமத்தைப் பார்ப்ப தால், இடையிடையே இடையூறு களைச் சந்தித்தாலும், 11-ஆமிடத்து ராகுவும், 10-ஆமிடத்துச் செவ்வா யும் உங்கள் முயற்சிகளில் தளர்ச்சி யில்லாமல் வளர்ச்சி பெற்று சாதனை படைக்கச் செய்வார்கள். குறுக்கீடு களையெல்லாம் தாண்டிப்போகும் படிக்கட்டுகளாக நினைத்துப் பயணித்து வெற்றியடையலாம். 6-ல் மறையும் குருவும் சனியும் குறுக்கீடுகளை உருவாக்கினாலும், அவையே உற்சாகமூட்டும் கருவிகளாக அமையும். "மனிதன் நினைக்கிறான் இறைவன் முடிக்கிறான்' என்பது பழமொழி. 9, 10-க்குரியவர்களின் தொடர்பு உங்களின் வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது. இதை "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்' என வள்ளுவர் சொல்வார். 4-ல் பலம்பெறும் புதன் பூமி, வீடு, வாகன யோகத்தை உருவாக்கித் தருவார்.

பரிகாரம்: பொன்னமராவதி அருகே செவலூரிலுள்ள பூமிநாதசுவாமியை வழிபடவும். இது வாஸ்துக் கோவில்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 2-ல் இருக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த புதன் அவருக்கு (சூரியனுக்கு) 2-ல் இருக்கிறார். புதனுக்கு 2-க்குரிய செவ்வாய் புதனையும் பார்க்கிறார்; புதன் நின்ற வீட்டதிபதி சுக்கிரனையும் பார்க்கிறார். 2-ஆமிடம் என்பது வாக்கு, தனம், குடும்பம், வித்தை எனப் படும். இவற்றிலெல்லாம் உங்களுக்கு எந்தக் குறையுமில்லை. "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா' என நிறைவடையலாம். ஓர் உதாரணம்: ஒருவருக்குத் திருமண நாள்- அவரின் தாய்மாமன் மரியாதை செய்ய வேண்டும். நெற்றிப் பட்டம் கட்டவேண்டும். மாமனோ நிறைந்த பாக்கியமாக இருக்கிறார். அவர் மனைவி கைவளையல்களைக் கழற்றிக்கொடுத்து "செய்முறையைச் செய்யுங்கள்' என்கிறார். அப்போது அவர் நண்பர் தாய்மாமனிடம் வாங்கிய பணத்தைக் கொண்டுவந்து தருகிறார். இதுதான் யோகம். "இறைவனிடம் வேண்டுவோருக்கு வேண்டுவது ஈவான்' என வர்ணிப்பார்கள். சிம்ம ராசியை 5-ல் ஆட்சிபெற்ற குரு பார்ப்பதால், உங்கள் தேவைகளை தக்கசமயத்தில் இறைவன் நிறைவேற்றுவார். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்.

பரிகாரம்: 4-ஆமிடத்துக் கேதுப்ரீதியாக வடக்குப் பார்த்த விநாயகரை வழிபடவும். (பிள்ளையார்பட்டி).

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 2-ல் இருக்கிறார். அவருக்கு 2-க்குரிய செவ்வாய் 8-ல் ஆட்சிபெற்று புதனைப் பார்க்கிறார். 11-க்குரிய சூரியன் 12-ல் மறைவு. 30-ஆம் தேதி புதன் வக்ர ஆரம்பம். "வக்ரத்தில் உக்ர பலம்' என்பார்கள். எனவே, உங்கள் மதிப்பு, மரியாதை, செல்வாக்கு, செயல்திறன் எதற்கும் குறைவில்லை. அதேபோல, வாழ்க்கை, ஜீவிதம், தொழில், வேலை ஆகியவற்றிலும் பாதிப்பில்லை. 8-ல் செவ்வாய் ஆட்சி; 11, 2, 3-ஆமிடங்களைப் பார்க்கிறார். குழப்பங்களும் பிரச்சினைகளும் சஞ்சலங்களும் உங்கள் மன அமைதியைக் கெடுக்கும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, பனிப்போருக்கு இடமுண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் விஸ்வரூபமெடுத்து வேதனையுண்டாக்கும். இது 9-ஆமிடத்து ராகுவின் வேலை. சிலருக்கு- பெண்கள் எனில் கணவர்வகையிலோ; ஆண்கள் எனில் மனைவிவகையிலோ கௌரவப் போராட்டம், பிரச்சினைகள் உருவாகி சந்தோஷக் குறைவுண்டாகும். இன்னும் சிலருக்கு பங்காளிப் பிரச்சினைகள் மங்காத சங்கடங்களை உருவாக்கும்.

பரிகாரம்: 4-ல் குரு, சனி சேர்க்கையிருப்பதால், பைரவருக்கு மிளகு தீபமேற்றி வழிபடவும்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 10-ல் திக்பலம் பெறுகிறார். 10-ஆமிடம் என்பது கேந்திர ஸ்தானம். சுக்கிரன் சுபகிரகம். சுபகிரகத்துக்குத் திரிகோணம் பலம். அவர் சந்திரன் வீடாகிய கடகத்தில் இருப்பதும், கேந்திரம் பெறுவதும் திக்பலம் என்படும். அதாவது, சுக்கிரன் வீடான ரிஷபத்தில்தான் சந்திரன் உச்சபலம் அடைவார். அந்த சுக்கிரனை கேந்திர பலம்பெற்ற செவ்வாய் பார்ப்பது "திக்பலம்'. சுக்கிரன் கடகத்தில் இருக்கிறார். கடகத்தில் செவ்வாய் நீசம். இங்கு செவ்வாய் ஆட்சிபெற்று கடகத்தைப் பார்ப்பது கேந்திர பலம். செவ்வாய்க்கு 9-ல் குரு ஆட்சிபெற்று செவ்வாயைப் பார்க்க, அந்த குருவின் பலத்தை வாங்கிச் செவ்வாய் சுக்கிரனைப் பார்ப்பது ஒருவகையில் பலம். இதனால் பங்காளிவகையிலும், உடன்பிறப்பு கள்வகையிலும், பழகிய நண்பர்கள் வகை யிலும், புதிய நண்பர்கள்வகையிலும் நிலவும் பகை, வருத்தம் எல்லாம் நிவர்த்தியாகி நேசக்கரம் நீட்டி நட்புறவு கொண்டாடலாம். பொது எதிரியை எதிர்க்க இரண்டு பகைவர்கள் ஒன்றுசேர்வதற்குச் சமம். பள்ளிப் பாடத்தில் பொதுஎதிரி புலியை எதிர்க்கப் பிரிந்துவாழ்ந்த நான்கு மாடுகள் ஒன்றுசேர்வதுபோலாகும்.

பரிகாரம்: 2-ல் கேது, 8-ல் ராகு தோஷநிவர்த் திக்கு ராகு காலத்தில் துர்க்கையம்மனை வழிபட வும். கேதுவுக்கு விநாயகரை வழிபடவும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந் தாலும் அங்கு ஆட்சிபெற்று தன் ராசியைத் தானே 8-ஆம் பார்வை பார்ப்பது சிறப்பு. மேலும், 2, 5-க்குரிய குரு 2-ல் ஆட்சிபெற்று செவ்வாயைப் பார்ப்பதும் பலம். அதற்கும் மேலாக 10-க்குரிய சூரியன் 11-ல் நின்று சனியின் பார்வையைப் பெறுகிறார். இந்தக் காரணங்களால் ஏழரைச்சனி நடந்தாலும் அது முதல் சுற்று, இரண்டாம் சுற்றாக இருந்தாலும் பொங்குசனியாகப் பொலிவைத் தரும். குரு இயற்கையில் சுபகிரகம். சனி இயற்கையில் அசுபகிரகம். சுபகிரகமான குருவோடு சேர்ந்ததால் அசுபகிரகமான சனியும் சுபகிரகமாகிவிடுகிறது. அதனால்தான் பெரியோர்கள் "நல்லாரைக் காண்பதும் நன்று, நல்லாரோடு இணங்கியிருப்பதும்' நன்று என்றார்கள். தேன் தானும் கெடாது, தன்னோடு சேர்ந்த பொருளையும் கெடவிடாது. நல்லோர்கள் நட்பு தேனுக்குச் சமம். குரு, சனி சேர்க்கையின் பலனாக சனியின் பாவத்தன்மை விலகி சுபத்தன்மை பெறும்.

பரிகாரம்: ஏழரைச்சனியின் கடைசிக் கட்டம் இது. காலபைரவரையும் ஆஞ்சநேயரையும் வழிபடலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசியில் குரு, சனி சேர்க்கை. குரு இயற்கையில் சுபர். அவர் வீட்டில் அவரோடு சேர்ந்த சனி இயற்கையில் அசுபராக இருந்தாலும் சுபத்தன்மை பெறுவார். அதாவது, ஆட்சிபீடத்திலுள்ளவர்கள் அல்லது அதிகாரப் பதவியிலுள்ளவர்களுக்கென்று தனி செல்வாக்கு உண்டு. அவரைப் பிடிக்காத வர்களும் அவருக்கு சல்யூட் அடிக்கத்தான் வேண்டும். இதே குரு, சனி சேர்க்கை மகரத்தில் இருந்தால் வேறுமாதிரிப் பலன். மகரத்தில் குரு நீசம், சனி ஆட்சி. அப்போது பலன் மாறுபடும். தந்தை குற்றவாளியெனில் காவலதிகாரியான மகன் அவரைக் கைதுசெய்ய வேண்டுமல்லவா? அங்கே சட்டம் பேசும்; பந்தபாசத்திற்கு இடமில்லை. இதிலொரு உண்மை என்னவெனில், தர்மம் என்பது வேறு; சட்டம் என்பது வேறு. பகைவனை உயிர்ப்பலி வாங்குவது சட்டப்படி குற்றம். தூக்குத் தண்டனைக் கைதியைத் தூக்கிலிடுவது அந்த உத்தியோகத்திலுள்ளவனின் கடமை. (தர்மம்).

பரிகாரம்: ஜென்மச்சனி நிவர்த்திக்கு ஆஞ்சநேயரை வழிபடவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி 12-ல் மறைவு. அவருக்கு சாரம்கொடுத்த சுக்கிரன் (பூராடம்) சனிக்கு 8-ல் மறைவு. சனிக்கு வீடுகொடுத்தவர் குரு. அவரும் 12-ல் மறைவு. 2020 டிசம்பர் வரை ஏழரைச்சனியில் விரயச்சனி. ஆகவே, தவிர்க்கமுடியாத விரயச்செலவுகளும் பயணங்களும் ஏற்பட இடமுண்டு. அந்த விரயங்களையும் பயணங்களையும் பயனுள்ள, பலனுள்ள விரயமாக மாற்றிக்கொள்வது உங்கள் கடமை. "அவப்பொழுதும் தவப் பொழுதும்' என்பார்கள். "கோழி காத்தல், மீன் பார்த்தல், ஆமை நினைத்தல்' என மூன்று நிலையுண்டு. கோழி முட்டையிட்டு அதன்மீதமர்ந்து அடைகாக்கும். அப்போது அந்த முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்படும். அடைகாக்காத முட்டை கூமுட்டையாகிவிடும். மீன் முட்டையிட்டுத் திரும்பிப் பார்க்கும். அதன் கண்களில் படும் முட்டையெல்லாம் மீன் குஞ்சாகப் பொரியும். ஆமை எங்கோ ஓரிடத்தில் முட்டையிடும். குறிப்பிட்ட திதி, நட்சத்திரப் பருவ காத்தில் அதை நினைக் கும்போது முட்டை பொரிந்து ஆமைக் குஞ்சு பிறக்கும். கோழி மனிதர்களுக்குச் சமம். மீன் சாதுக்களுக்குச் சமம். ஆமை சித்தர்களுக்குச் சமம். மேற்சொன்ன விதி மனிதர்களுக்குப் பொருந்தும்.

பரிகாரம்: சித்தர்கள் வழிபாடு, சித்தர்கள்பீட வழிபாடு உத்தமம்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் நின்று ராசியைப் பார்க்கிறார். அவருடன் 2, 11-க்குரிய குரு சம்பந்தம். உங்களின் செயல்பாடுகளில் குறையேதுமில்லை. திறமையில் பங்கமேதுமில்லை. உழைப்புக்கேற்ற ஊதியமும், திறமைக்கேற்ற கௌரவமும் உண்டாகும். "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என வள்ளுவர் சொல்வார். எனது நண்பர் மிஸ்டிக் செல்வம் "கோடிகோடியாக நினைக்கவேண்டும். நினைப்பதில் எதற்குக் கஞ்சத்தனம்' என்பார். அதுபோல, 10-ல் உள்ள கேது உங்களை எல்லாவற்றிலும் எளிமையாக அலலது எளிதாக நினைக்கத் தோன்றும். என் நண்பரின் மனைவி ஆடைவசதி இல்லாதவராக இருந்தார். அஸ்வினி நட்சத்திரமும் வெள்ளிக்கிழமையும் சேரும் நாள் அரைடஜன் பிளவுஸ் துணியை நண்பரிடம் தந்து அவர் மனைவிக்குத் தரச்சொன்னேன். "அஸ்வினி வெள்ளியில் கோடி எடுத்தால் ஆடை பெருகும் ' என்பது சாஸ்திரம். அந்த அம்மாள் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதைத் திரும்பக்கொடுத்துவிட்டார். எல்லாம் உனக்கே என்றபிறகு வாங்கிக்கொண்டார். இது அவரின் எளிமையைக் காட்டுகிறது.

பரிகாரம்: கும்பம் என்றால் குடம். வசதியுள்ளவர்கள் பௌர்ணமிதோறும் கும்பப் பூஜைசெய்யலாம். மற்றவர்கள் சனிக்கிழமை காலபைரவரை வழிபடலாம்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிக்கு 10-ல் குரு, சனி சேர்க்கை. 9-க்குரிய செவ்வாய் ஆட்சிபெற, அவரை 10-க்குரிய குரு பார்க்கிறார். (5-ஆம் பார்வை). இதற்குத் தர்மகர்மாதிபதி யோகம் எனப் பெயர். குருவோடு சேர்ந்த சனி 11, 12-க்குரியவர். சிலர் செலவுசெய்து லாபம் சம்பாதிப்பர். வேறுசிலர் லாபம் சம்பாதித்து விரயமாக்கிவிடுவர். இது அவரவர் ஜாதக அமைப்பைப் பொருத்து நடைபெறும். தர்மகர்மாதிபதி யோகப் பலனாக எப்போதும் உங்களுக்கு பொருளாதாரத் தில் ஏக்கமிருக்காது. தேக்கமும் இருக்காது. ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவீர்கள். அதேசமயம் 9-ல் கேது, 3-ல் ராகு இருப்பதால், இக்கரைக்கு அக்கரை பச்சை என மனம் மாறி ஓடிக்கொண்டே இருப்பீர்கள். சமயத்தில், கொடுத்த வாக்குறுதியையும் மறந்துவிடுவீர்கள். அதாவது, குறைந்த உயமுடைய வாசல் நிலைப்படியில் பணிந்து குனிந்துபோகாமல் முட்டிமோதி அடிபட்டபிறகு குனிந்துபோவீர்கள். ஒவ்வொரு செயலிலும் குட்டுப்பட்டு உணர்வீர்கள். அதாவது, விரயத்தின் பிறகு தெளிவடைதல். கண்கெட்டபிறகு ஞானி. பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு சுண்டல் மலை சாற்றி வழிபடவும்.