சித்தர்தாசன் சுந்தர்ஜி

ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

வ்வொரு மனிதனுக்கும் உணவு, உடை, வீடு ஆகிய மூன்றும் முக்கியத் தேவையாகும். பிறந்தது முதல் இறக்கும்வரை ஒரு மனிதன் உழைத்து சம்பாதிப்பது இந்த மூன்று தேவைகளுக்காகத்தான். சொந்த வீடு இல்லாதவர் அகதிபோன்றவர்.

ஒரு இடம் வாங்கி, தங்கள் ஆசைப்படி வீடுகட்டி, அந்த வீட்டில் வசிக்கும்போது வாழ்க்கையில் கஷ்டம் ஏற்பட்டால், சிலர், "வீடு சரியில்லை' எனக் கூறுகிறார்கள்.

Advertisment

இன்னும்சிலர், கஷ்டப்பட்டு சொந்த வீடுகட்டி, அதில் வாழும்போது சிரமம் ஏற்பட்டு, அந்த வீட்டில் நிலையாக வாழமுடியாமல் விற்றுவிடுகிறார்கள். சிலர், வாடகை வீட்டில் வசிக்கும்போதும் நிம்மதியில்லாமல் சிரமத்துடனேயே வாழ்ந்துவருகிறார்கள். இதுபோன்ற நிலைக்கு "வாஸ்துக் குறையுள்ள வீடு' என வீட்டின்மீது பழியைப் போடுகின்றனர்.

ஒருவருக்கு சொந்த வீடு அதிர்ஷ்டமானதாக அல்லது அதிர்ஷ்டமில்லாததாக அமைவது, அவரின் முற்பிறவி பாவ-சாப- புண்ணிய வினைப்படியே உண்டாகிறது. மனைவி, வீடு, வேலைக்காரர், பசு ஆகியவை நன்மையானதாகவோ, தீமையானதாகவோ அமைவது அவரின் பூர்வஜென்ம வினைப்படிதான் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

பிறப்பு ஜாதகத்தில் ராசிக் கட்டங்களுள் கிரகங்கள் அமைந்துள்ள நிலையைக்கொண்டு முற்பிறவி பாவ-சாப-புண்ணியங்களை நன்கு அறிந்து, அந்தக் கர்மவினைப் பதிவுகள், நாம் வசிக்கும் வீட்டின் உள்ளேயும், வெளியேயும் பாதிக்காமல் தடுத்துக் கொள்வது நம்மிடம்தான் உள்ளது.

Advertisment

தமிழ்முறை ஜோதிடத்தில் சித்தர் பெருமக்கள், ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் கிரகங்கள் உள்ள நிலையினைக்கொண்டு, முன்வினைத் தாக்கத்தால் நன்மை, தீமைதரும் வீடு அமையும் நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளனர். அதனை அறிவோம்.

மனிதர்களின் முற்பிறவி பாவ-சாபப் பதிவுகளை அவரவர் வசிக்கும் வீட்டின்மூலம் அனுபவிக்க, அவர்கள் அறியாமலேயே வீட்டைக் கட்டவைத்து, வாழ்வில் சிரமம், கஷ்டம், தடைகளை அனுபவிக்கச் செய்வது ராகு- கேது கிரகங்கள்தான். ஆனால், வாஸ்து சரியில்லை என்று கூறி இடிப்பதும், பூஜை, பரிகாரம், யாகம், ஹோமம் என எதையெதையோவும் செய்கின் றனர். இனி, ராகு கிரகம் வீட்டில் உண்டாக்கும் பலன்களை அறிவோம்.

ஒருவரின் ஜாதகத்திலுள்ள சூரியன் ஆண்களையும், சந்திரன் பெண்களையும் குறிக்கும். அதேபோல, ஒருவர் வசிக்கும் வீட்டின் முன்புறம், வலதுபக்கமுள்ள ஜன்னல் சூரியனையும், இடதுபுறமுள்ள ஜன்னல் சந்திரனையும் குறிக்கும். இது மனி தனின் முகத்திலுள்ள வலது, இடதுபுற கண்களை ஒத்த நிலையாகும்.

சூரியன், சந்திர கிரகங்களுக்கு 1, 5, 9, 2, 6, 10-ஆமிடங்களில் ராகு இருந்தால், வீட்டின் முன்புறம் ஜன்னல்கள் இல்லாமலோ, ஜன்னல்கள் இருந்தால் அவற்றை திரைச்சீலைபோட்டு மூடியோ அல்லது எப்போதும் ஜன்னல்களை மூடியோ வைத்திருப் பார்கள். இதனால், வீட்டினுள்ளே வெளிச்சம், காற்று வராமல் வீடு இருளாகவே இருக்கும். இதுபோன்ற நிலை வாஸ்துக் குறையாகும்.

வீட்டின் வலது, இடதுபுற ஜன்னல்களுக்கு எதிர்ப்புறமுள்ள தெருவின் தாக்கம், தெருக் குத்து இருந்தாலும் வாஸ்துவின் நற்பலன் குறையும்.

வலதுபுற ஜன்னல் எப்போதும் மூடியோ, தெருக்குத்து தாக்கம் பெற்றோ இருந்தால், அந்த வீட்டில் ஆண் வாரிசு இல்லாமல் அல்லது அற்பாயுள் உள்ள ஆண் குழந்தைகள் பிறக்கும். தந்தை- மகனுக்கிடையே பகை, பிரிவுண்டாகும்.

vv

இடதுபுற ஜன்னல் பெண் குழந்தைகளைக் குறிக்கும். இடதுபுற ஜன்னல் மூடி, தெருக்குத்து தாக்கம் இருந்தால், பெண் குழந்தைகள் இல்லாமலும் அல்லது பெண் குழந்தைகள் அற்பாயுள் உடையவர்களாகவும் இருப்பார்கள். இந்த வீட்டில் வாழும் பெண்கள் சிரமம், கஷ்டம் அடைவார்கள். தீய சக்திகளின் தாக்கம் இருக்கும். மனதில் ஒருவிதப் பயம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அடிக்கடி நோய் வாய்ப்படுவார்கள். இதனைத் தவிர்க்க, தெருக்குத்து இல்லாமலும், ஜன்னல்களை அடைக்காமலும் எப்போதும் திறந்தே வைத்திருக்கவேண்டும்.

ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் கணவனைக் குறிப்பிடும் செவ்வாய்க்கு 1, 5, 9, 2, 6, 10-ஆமிடங்களில் ராகு இருந்தால், அந்தப் பெண் பிறந்த வீட்டிலோ கணவர் வீட்டிலோ படுக்கையறை பெரிதாக இருக்கும். அல்லது ஒரு பெரிய அறை மட்டும் உள்ள வீடாக இருக்கும். இதுபோன்ற படுக்கையறை உள்ள வீட்டில் வசிக்கும் பெண்களுக்குத் திருமணத் தடை, தாமதமாகும். இளம்வயதிலேயே மோக உணர்வுண்டாகும். மாதவிடாய்க் கோளாறுகள் உண்டாகும்.

செவ்வாய், ராகு சம்பந்தம் பெற்றுத் திருமணமான பெண்கள் வசிக்கும் வீட்டில், மற்ற அறைகளைவிட படுக்கையறை பெரிதாக இருந்தால், கணவர் அடிக்கடி நோய்வாய்ப்படுவார். தாம்பத்திய சுகம் குறையும், கணவருக்கு அற்பாயுள், விபத்து உண்டாகும். கணவர்- மனைவி இழப்பு, பிரிவு, விவாகரத்து உண்டாகும். மனைவி, கணவர்மீது ஆதிக்கம் செலுத்தி அடக்கிவைப்பாள். கணவர்- மனைவி ஒற்றுமை குறைந்து, அவரவர் இஷ்டம்போல வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

ஆண்கள் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் சகோதரர், பங்காளி களைக் குறிக்கும். ஒரு ஆணின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு 1, 5, 9-ல் ராகு இருந்தால், அவர் வசிக்கும் வீட்டில் படுக்கையறை பெரிதாக அமைந்துவிடும். அல்லது ஒரு பெரிய அறையில் சகோதரர்கள் அனைவரும் ஒன்றாகப் படுத்துத் தூங்குவார்கள். இவர் வீட்டிற்கு மூத்தவராக இருப்பார். சகோதரர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்தவுடன், அவர்கள் பகையாவார்கள். சகோதரர்கள், தந்தைவழி உறவுகளுடையே ஒற்றுமை, உதவியில்லாமல் போய்விடும்.

நாம் வசிக்கும் வீட்டில் படுக்கையறையை அடக்கமாக அமைத்துக்கொண்டால் இந்த வாஸ்துக் குறை நீங்கிவிடும்.

பிறப்பு ஜாதகத்தில் புதனுக்கு 1, 5, 9, 2, 6, 10-ஆமிடங்களில் ராகு இருந்தால், அவர் வசிக்கும் வீட்டின் வரவேற்பறை பெரிதாகவோ சமமாகவோ, சதுரமாகவோ இல்லாமல், நீளம், அகலம் வித்தியாசப்பட்டு செவ்வகமாகவோ இருந்தால், அந்த வீட்டில் நண்பர்கள், உறவினர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். சூதாட்டம், சீட்டாட்டம் என விரும்பத்தகாத செயல்கள் நடைபெறும். வீட்டிலுள்ள ஆண், பெண்கள் காதல் நிகழ்வுகளில் ஈடுபடுவார்கள். விருந்து, விசேஷம் என பணம் விரயமாகிக்கொண்டே இருக்கும்.

புதன், ராகு சம்பந்தம் பெற்ற ஜாதகரின் வம்சமுன்னோர்கள் காலத்தில் திருமணமாகாத வர்கள், துர்மரணம் அடைந்த தோஷம் மற்றும் தாய்மாமன் சாபம் ஆகியவை இவர் வசிக்கும் வீட்டைப் பாதிப்படையச் செய்யும்.

பிறப்பு ஜாதகத்தில் குருவுக்கு 1, 5, 9, 2, 6, 10-ஆமிடங்களில் ராகு இருந்தால், இவர்கள் வம்சமுன்னோர்கள் வாழ்ந்த வீட்டிலேயே துர்மரண நிகழ்வு நடந்திருக்கும். குடும்பத்தில் பாதிக்கப்பட்டு இறந்துபோன அந்த ஆத்மா, இவர் வசிக்கும் வீட்டில் பாதிப்பினைத் தந்துகொண்டே இருக்கும்.

குடும்பத் தலைவர் எதிர்பாராத விதமாக மரணம் அடையும் நிலை, நரம்பு, வாதம் சம்பந்தமாக நோய்களால் பாதிப்பு, ஏவல், பில்லி, சூனியம், தீய ஆவிகள் தாக்கம் போன்றவை அந்த வீட்டைப் பாதிப்படையச் செய்யும். பொய் பேசுதல், பிறரை ஏமாற்றிப் பொருள் அபகரித்து வாழ்வார்கள். பக்திமான் வேடம் தரித்துப் பணம் சம்பாதிப்பார்கள்.

ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 1, 5, 9, 2, 6, 10-ஆமிடங்களில் ராகு இருந்தால், வீட்டில் சமையலறை பெரிதாக இருக்கும். இந்த வீட்டில் வசிக்கும் பெண்களுக்கு காம உணர்வும், அனுபவித்தலும் அதிகமிருக்கும். இதனால், உடல்நலப் பாதிப்பு உண்டாகும். பேராசைக் குணம் இருக்கும். பணத்தாசை உண்டாகும். எப்படியாவது, எதைச்செய்தாவது தன் வாழ்க்கை யில் வசதியாக வாழவேண்டும், எல்லாரையும் விட அதிகமான சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் குறிக்கோளுடன், அதனைய டைய முயற்சி செய்வாள். ஒரு நடிகையைப் போல் செயல்படுவாள்.

சமையலறையை சரியான அளவில் அமைத்துக்கொண்டால், அந்த வீட்டில் வசிக்கும் பெண்கள் அமைதியான வாழ்வை அடையலாம். வாஸ்துக் குறை அகலும். தவறான எண்ணம், செயல்பாடு மாறும்.

பிறப்பு ஜாதகத்திலுள்ள சனி கிரகம் ஒருவர் செய்யும் தொழிலையும், அதில் கிடைக்கும் வருமானத்தையும் குறிக்கும். தொழில்செய்து சம்பாதிக்கும் பணத்தை சேமித்துவைக்கும் சேமிப்பு அறை சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் உள்ளது.

சனி கிரகத்திற்கு 1, 5, 9, 2, 6, 10-ஆமிடங் களில் ராகு இருந்தால், சேமிப்பு அறை பெரிதாக இருக்கும். இந்த வீட்டில் வசிப்பவர்கள் பொய் பேசுபவர்களாகவும், சூதாட்டம், கள்ளக்கடத்தல், திருடுதல், பிறரை ஏமாற்றிப் பொருள் பறித்தல், விபசாரம் என இதுபோன்று சட்டத்திற்கு விரோதமான தொழில்களைச் செய்து பணம் சம்பாதிப்பார்கள். எதையும் செய்யலாம், எப்படியும் வாழலாம் எனக் கூறுவார்கள். அரசியல், ஆன்மிகத்தில் அதிகா ரத்தில் இதுபோன்ற அமைப்புள்ளவர்கள் அதிகம்பேர் இருப்பார்கள்.

ஒருவர் புதிதாக வீடுகட்டும்போதும் அல்லது வாடகை வீட்டிற்குச் செல்லும்போதும் தனது பிறப்பு ஜாதகத்தில் ராகு கிரகம் உள்ள நிலையை அறிந்து, வீட்டிலுள்ள அறைகள் தனக்கு நன்மைதரும் நிலையில் உள்ளதா? தீமை தமைதரும் நிலையில் உள்ளதா என்பதை யறிந்து வீட்டைக் கட்டவேண்டும், வாடகை வீட்டிற்குச் செல்லவேண்டும்.

நாம் வாழும் வீடு பெரிதாக, வசதியாக இருக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் வாஸ்து சரியில்லாத வீட்டில் வசிப்பதைவிட, அமைதியும், ஆரோக்கியமும் தரும் வண்ணம் வாஸ்துப் பலமுள்ள வீட்டில் வசிக்கவேண்டும். நிம்மதியை அடையவேண்டும். சிறுகக் கட்டி பெருக வாழ்தல்வேண்டும்.

அடுத்த இதழில், சாப கிரகமான கேது பகவான், நாம் வசிக்கும் வீட்டில் எப்படி வாஸ்துக் குறையை உண்டாக்கி வைப்பார் என்பதை அறிவோம்.

செல்: 96003 53748