நாம் பிறந்த ராசியின் அதிபதியைக்கொண்டு நம்முடைய தன்மைகளை, வாழ்க்கையை, பொதுப் பலன்களை அறியமுடியும். அந்தவகையில் விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் பொதுப் பலன்களை இப்போது பார்ப்போம்.
உடலுறுதிக்கும் மனவுறுதிக்கும் காரகனான செவ்வாய் பகவானே விருச்சிக ராசியின் அதிபதி யாவார். உலகில் முதல்வரிசையில் இருக்கும் அரசியல் தலைவர்கள், காவல் அதிகாரிகள், தேசத்தைப் பரிபாலனம் செய்வோர், மூவகைப் படைகளை முன்னின்று இயக்குவோர், இராணுவத் தளபதிகள், நீதிபதிகள், பொறியியல் வல்லுநர்கள் முதலானவர்களின் ஜாதகங்களைப் பார்த்தால், அது செவ்வா யின் பலம் கொண்டதாகவே இருக்கும். மாவீரம் கொண்ட புரட்சியாளர்களைத் தோற்றுவித்திடக் கூடியவர் செவ்வாய். பெருந்தன்மை, அதே நேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரைப் பந்தாடும் பராக்கிரமம் போன்வற்றையெல்லாம் அளிப்பவர் செவ்வாய் பகவான்.
நாம் பிறந்த மண்ணுக்கு- அதாவது இந்த பூமிக்குக் காரகர் செவ்வாய். ரத்தத்திற்கும் ரத்தக் கலப்பான சகோதரர்களுக்கும் காரகன் இவர். உஷ்ணம் இவர். கோபம் இவர். ராஜதந்திரி இவர். எரிபொருள் இவர். வெடிமருந்து இவர். தங்கம் இவர். தாமிரம் இவர். நாகம் இவர். நாக சுப்பிரமணியம் இவர். என்றும் இளையவர். அரச இனத்தவர்.
ஆயுதம் ஏந்துபவர். அமைச்சர் இவர். மேல்நோக்கிப் பார்ப்பவர். காரப்பிரியர். தாமச குணம் கொண்டவர். தென்திசைக்குரியவர். துணிச்சலாக செயல்பட்டு கண்டிப்பான முறையில் நடந்துகொண்டு தண்டிப்பவர். பவழம் இவரது ரத்தினம். நெருப்புக் கூடங்களில் உலவிடக்கூடியவர். நான்குவித உபாயங்களில் தண்ட உபாயத்திற்குறியவர்.
இத்தனை சிறப்புகளையும் கொண்ட, பூமிக்கும் சகோதரர்களுக்கும் காரகனான செவ்வாய் பகவானை ராசிநாதனாகக் கொண்டவர்கள் விருச்சிக ராசியில் பிறந்தவர்கள். செவ்வாய் பகவானின் காரகத்துவம் என்னவோ அவற்றையெல்லாம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பொதுவாக கேள்வி ஞானமும், அறிவாற்றலும், சாதுரியமும், முன்கோபமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய ராசிநாதன் செவ்வாயை, ஐவகை பூதத் தத்துவத்தில் மேஷத் தில் நெருப்பாகவும் விருச்சிகத்தில் நீராகவும் காண்கி றோம். நெருப்பு பற்ற ஆரம்பித்தால் எல்லா இடங்களி லும் பரவும். தண்ணீர் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அது கீழ்நோக்கியே பாய்ந்து செல்லும்.
உலக வாழ்வில் புகழ்பெறுவதற்கான பல வாய்ப்புகள் விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக் குண்டு. இவர்களின் கடந்தகால வாழ்க்கையில் நடந்தவற்றை சிந்தித்துக்கொண்டே எதிர் காலத்திற்குரிய வழியை திட்டமிடும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களுக்குள் ஒரு தீர்க்கதரிசனம், ஞானம் இருக்கும். எனவே, இவர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் சக்தி யுடன், இவர்களுடன் இருப்பவர்களையும் பாது காக்கும் சக்தியும் இயற்கையாகவே இருக்கும்.
நாளை என்ன நடக்கும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி இவர்களுக்குண்டு என்பதால், நாளைய வாழ்க்கைக்காக இன்றே வழியமைத்துக்கொள்வார்கள். இவர்கள் செய்யும் செயல்கள் எப்போதும் சிறப்பானதாகவே இருக்கும். இவர்கள் செய்யும் செயல் களை- வாழும் வாழ்க்கையை மற்றவர்கள் போற்றுவார்களே தவிர, இவர்கள் தவறே செய்தாலும் அதற்காகத் தூற்றாமல், "நீங்கள் அப்படிச் செய்கிறீர்கள் என்றால் ஏதோ ஒரு காரணமிருக்கும்'' என்று உலகம் இவர்களை ஆதரிக்கும்.
ஜோதிட சாஸ்திரத்திலும் வல்லவர்களாக இருப்பார்கள். இன்று என்ன நடக்கும்? நாளை என்ன நடக்கும் என்பதை சரியாகக் கணிப்பார்கள். தீர்க்கதரிசனரீதியில் சிந்தித்துச் சொல்வார்கள். அது சரியாகவே அமைந்து விடும். எந்தவொரு செயலில் இறங்கினாலும் அதில் முழு கவனமாக இருப்பார்கள். மற்றவர் கள் பேச்சையும் செயலையும் எப்போதும் கவனிக்கவே மாட்டார்கள். கருமமே கண்ணாக இருக்கும் இவர்கள் இளமையிலேயே உலக அனுபவத்தைப் பெற்றுவிடுவார்கள். சமநீதி, சமதர்மம் என்பதில் அதிகபட்சமான ஆர்வமிருக்கும்.
இவர்களில் பலருக்கு இளவயதில் சோதனைகள்தான் வாழ்க்கையாக இருக்கும். பலருக்கு தாயன்பு என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கும். என்றாலும் சகிப்புத் தன்மையால் முன்னேற்றத்தை நோக்கிச் செயல்படுவார்கள். மனவுறுதி மிக்க இவர்கள் ஒரு விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் அதை இவர் களாகவே மாற்றிக்கொள்ள நினைத்தாலும் முடியாமல் போய்விடும். இவர்களுடைய மனதைப் பணத்தாலும் பொருளாலும் யாராலும் மாற்றமுடியாது. வாழ்க்கையின் ஒரு கட்டத்திற்குப்பின் இவர்களுக்கு ஞான மார்க்கத்தில் நாட்டம் உண்டாகும். பகுத்தறிவு வாதிபோல் பலப்பல பேசினாலும், இவர் களுக்குள் கடவுள் நம்பிக்கை அதிகரித்திருக்கும். காலப்போக்கில் இவர்களுடைய வார்த்தைகள் வரமாகி மக்களின் வாழ்க்கைக்கு வளமாகும்; வழிகாட்டியாக மாறும். இவர்களில் பலர் கடவுள், விதியைத்தவிர மற்ற எதையும் பெரிதாக நினைக்கமாட்டார்கள்.
எல்லாரிடமும் சகஜமாகப் பழகிவிட மாட்டார்கள். பழகியவர்களிடம்கூட இவர்களுடைய அந்தரங்க விஷயங் களைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். இவர்களுடைய குறிக்கோளையும் இவர் களுக்குரியதையும் எப்போதும் மற்றவர் களுக்கு விட்டுக்கொடுக்கவும் மாட்டார்கள். சாமர்த்தியத்தையும், அறிவையும், கல்வியையும் சமயத்துக்குப் பயன்படுத்திக்கொள்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்களைப் பற்றி புறம் கூறுபவர்களையும், கேடு விளை விப்பவர்களையும் வஞ்சம்தீர்க்காமல் விடமாட்டார்கள். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து எதிரியை அழிக்கும் திறன்பெற்ற இவர்களுக்கு பழிவாங்கும் உணர்ச்சி பிறவி குணமென்றே சொல்லவேண்டும். இவர்களுக்கு கோபம் வருவது தெரியாது. வந்துவிட்டால் இவர் களுக்கே தலை கால் தெரியாது. நீறுபூத்த நெருப்பென்றே இவர்களைச் சொல்ல வேண்டும். சொல்லாலும் செயலாலும் எழுத்தாலும் ஏற்படும் செல்வாக்கினால், உலகின் போக்கையே மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக மாற்றமடைவார்கள்.
பொதுவாகவே இவர்களைக் கண்டு மற்றவர்கள் அஞ்சுவார்கள். இவர்களுடைய ராசியான தேளுக்கு கொடுக்கில் விஷம் என்றால், இவர்களுக்கு நாக்கில் விஷமென்று சொல்ல வேண்டும். எப்படிப்பட்டவரையும் தங்கள் வார்த்தைகளால் அச்சமடைய வைத்துவிடுவார் கள். பொதுநல சேவையில், அரசியலில் ஈடுபாடு கொள்வதுடன், தான, தர்மம் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள். எப்போதும் தனது ஜாதி, தனது கட்சி, தனது மதம் என்று பேசுவதற்கு இவர்களிடம் நிறையவே விஷயங்கள் இருக்கும். எத்தகைய தோல்வி, இழப்பு, பிரச்சினைகளையும் கண்டு பயப்பட மாட்டார்கள். அதேபோல் எத்தனைப் பெரிய நபராக இருந்தாலும், முன்பின் அறிமுகமில்லாத வர்களாக இருந்தாலும் கூச்சமில்லாமல் எளிதாகப் பேசி நட்புக் கொள்ளக்கூடியவர்கள். பெற்றோர் இருந்தாலும், அவர்களின் ஆதரவில்- பொறுப்பிலிருந்து இளைய வயதி லிருந்தே விலகி, இவர்களை இவர்களே வளர்த் துக்கொண்டு முன்னேற்றம் காண்பவர்கள்.
பூர்வீக சொத்துகள் இருந்தாலும் அதை அனுபவிக்கும் யோகம் இருக்காதென்றே சொல்லவேண்டும். அப்படியே அமைந்தா லும் ஒரு காலகட்டத்துக்குப்பின் அது இவர் களைவிட்டுப் போய்விடும். வசீகரம், கவர்ச்சி, மனோதிடம், நெஞ்சுரம் இவர்களின் பிறவி சொத்தென்றே சொல்லலாம். எப்பாடு பட் டாகிலும் உயர்ந்த நிலையை எட்டிவிட வேண்டு மென்ற வைராக்கியத்துடன் செயல்படும் இவர்களுக்கு நினைத்தபடி யாவும் நடந்தேறும்.
குடும்பம் மற்றும் வாக்கு ஸ்தானாதிபதி யாக குருபகவான் விளங்குவதால், இவர்கள் வாக்குப்பலிதம் மிக்கவர்களாகவும் விளங்கு வார்கள். செல்வாக்குப் பெற்றவர்களின் வரிசை யில் முதலிடம் பெற்றவர்கள் விருச்சிக ராசியினர் என்றும் சொல்லலாம். மூளை பலம்தான் இவர் களின் மூல பலமாகும். இவர்களின் யோசனைகளைக் கேட்டு நடப்பவர்கள் வாழ்வில் வெற்றி மேல் வெற்றிபெறுவார்கள். மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், மற்றவர் களுக்கு உதவிகள் புரிவதிலும் தானாகவே முன் நிற்பார்கள். வருமானத்திற்கு ஏற்றபடி வாழ்க் கையை நடத்தவேண்டும் என்பது இவர்களின் கொள்கையாக இருக்கும். என்றாலும், சுற்றியிருப்பவர்களின் தவறான வழிகாட்டுதல் இவர்களைத் தடுமாற வைக்கும். வீண் சிக்கலிலும் கொண்டுபோய்விடும். ராசியாதிபதி செவ்வாய் இவர்கள் ராசியில் ஆட்சியாக இருப்பதால் தைரியம் இவர்களுக்குத் துணை யாக இருக்கும். அரசு வழியிலும் ஆதரவுகள் ஏற்படும்.
விருச்சிக ராசியில் பிறந்த ஒருவருக்கு புதன் நட்பாக இருப்பாரேயானால்- அவர் லாபம் கொடுக்குமிடத்தில் அமர்ந்திருப்பாரேயா னால், ராஜ கிரகமான சூரியன் இவர்களுக்கு நட்பாக அமைந்துவிட்டால் கல்வித்துறையில் அரசு ஊதியம் பெறக்கூடிய நிலையை வழங்கு வார். இத்தகைய கிரக அமைப்பு எல்லா விருச்சிக ராசியினருக்கும் அமைந்துவிடாது. அதேபோல், சுக்கிரன் தனித்திருந்து சுப கிரகங் களால் பார்க்கப்பட்டால் கற்புநெறி தவறாமல் வாழக்கூடிய நிலையை வழங்குவார். ஆனால், சுக்கிரன் செவ்வாய் வீட்டில் இருந்தாலும், பாவ கிரகங்களுடன் இருந்தாலும், பாவ கிரகங்களால் பார்க்கப் பட்டிருந்தாலும் இவர்களின் நிலை மாறுபடும்.
சுதந்திரமாக இருப்பதையும் செயல்படுவதை யும் விரும்பும் இவர்கள், எல்லாரும் தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
அடுத்த இதழில் தனுசு...
செல்: 94443 93717