சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

பூமியில் இயற்கைப் பேரிடர்களான புயல், மழை, வெள்ளம், கடல் கொந்தளிப்பு, புதுப்புது நோய்கள், வாகன விபத்து போன்ற எண்ணற்ற விபத்துகள் மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொல்கின்றன. இது போன்ற நிகழ்வுகள் உண்டாகும் காலத்தையும், உருவாக்கும் கிரகங்களையும் தங்கள் வாழ்வின் நடைமுறை நெறிகளில் அறிந்து சிறப்புடன் வாழ சித்தர்கள் பல வழிகளைக் கூறியுள்ளனர்.

பூமியில் பஞ்சபூதங்களினால் உண்டாகும் பேரிடர்களுக்கும் இயற்கை சீற்றங்களும் குரு, சனி, ராகு, கேது ஆகிய நான்கு கிரகங்களே காரணமாகும். இந்த கிரகங்களின் செயல் தாக்கம் தனி மனிதனுக்கு மட்டுமல்ல, பூமி முழுமைக்கும் பொருந்தும்.

w

Advertisment

குரு எனும் கிரகம் உலகில் வாழும் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் குறிப்பிடும் உதாரண கிரகமாகும். சனி என்னும் கிரகம் மனிதன் தன் வாழ்வில் செய்யும் பாவ புண்ணியங்கள், முற்பிறவி பாவ தோஷங்களைக் குறிக்கும் உதாரண கிரகமாகும். ராகு என்னும் கிரகமானது மனிதர்கள் முன்னர் செய்த, தற்போது செய்கிற பாவங்களுக்கு உரிய தண்டனைகளைத் தருகிற நியாயாதிபதி கிரகமாகும்.

கேது எனும் கிரகம், நாம் பிறருக்குச் செய்த பாவங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மனம் வெறுத்துவிட்ட சாபத்தால் ஏற்படும் துன்பங்களை அனுபவிக்கச் செய்கிற கிரகமாகும். சூரியன் முதல் சனி வரையிலான அனைத்து கிரகங்களின் வலிமையைக் கட்டுப்படுத்துகிற ஆற்றல்பெற்ற கிரகங்கள் ராகு- கேதுக்கள். அதனால்தான், ஞானிகள், மகான்கள் ஆகியோரைக் கேதுவின் ஆதிக்கம் பெற்றவர்கள் எனப் பெரியோர் கூறுவர்.

Advertisment

ஜாதி, மதம், இனம், சமூகப் பாகுபாடு, சமூக விரோத ஆட்சி, சர்வாதிகாரம், வெடிவிபத்து, மாயமந்திரம், மோடிவித்தை, விஷம், நெருப்பு, இடிமின்னல் பாதிப்புகள், வறட்சி, நிலநடுக்கம், பூகம்பம், இயற்கை சீற்றங்களால் மக்கள் கூட்டமாக மடிதல், போலி ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், மதக்கலவரங்கள், ஆட்சிமாற்றம், மன்னர் இறந்துபோவது, உயிரினங்கள் கூட்டம் கூட்டமாக மடிவது போன்றவற்றுக்கு ராகுவே காரணமாவார்.

கோட்சார ரீதியாக குரு, சனி, ராகு ஆகிய கிரகங்கள் ஒரே ராசியில் சேர்ந்து சஞ்சரிக்கும் காலங்களில், அந்த ராசிக்கு 1, 2, 5, 7, 9 ஆகிய ராசிகளைக் குறிப்பிடும் நாடுகள், இடங்களில் வசிக்கும் மக்கள் நோயின் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

தன் நாட்டு மக்களை ஒன்றாகக் கருதாமல், இனம், மொழிப் பேதம் பார்த்து சர்வாதிகார ஆட்சி புரியும் ஆட்சியாளர்களையும், போலி மடாதிபதிகளையும், கடவுள், ஜோதிடம், மருத்துவம் ஆகிய புனிதப் பெயர்களால் மக்களை ஏமாற்றி வாழ்பவர்களையும், அண்டை நாட்டில் போர் செய்து உயிர்களைக் கொல்பவர்களையும், இன்னும் இதுபோன்ற பாதகச் செயல்களைச் செய்யும் மக்கள் வாழும் நாட்டில் உள்ளவர்களையும் மேற்கண்ட கிரகச் சேர்க்கை தண்டிக்கும்.

ஜெர்மன் நாட்டு சர்வாதிகாரி ஹிட்லர் செய்த தீமையான செயல் களால் நாடு இரண்டாகப் பிளந்து வலிமை குன்றியது.

இன்று அமெரிக்கா போன்ற நாடுகள் ஆணவ ஆட்சி நடத்தி, அறிவியல் என்னும் பெயரில் மண், நீர், காற்று, ஆகாயம் போன்றவற்றை அதிக மாசுபடுத்தி வருவதால் கொரோனா நோய்த் தொற்றால் உலகம் பேரிடரை சந்தித்து வருகிறது.

மிதுன ராசி அமெரிக் காவைக் குறிக்கும். தற்போது கோட்சார நிலையில் மிதுன ராசியில் ராகு சஞ்சரிப்பதால் அந்த நாட்டில் உயிரிழப்பு பெருமளவில் உள்ளது. வரும் காலங்களில் அமெரிக்க நாடானது ராகுவின் தாக்கத்தால் படிப்படியாக மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். 2057 மற்றும் 2058 ஆகிய ஆண்டுகளில், ராகு மிதுன ராசியில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் அந்த நாடு பெரும் பாதிப்புகளை சந்தித்து நலிவடைய நேரலாம்.

ww

தற்போது நிலவும் சூழலைக் கணக்கில் கொண்டு அமெரிக்கா இப்போதிருந்தே தனது நிலையை மாற்றிக் கொள்வது நல்லது. இல்லை யெனில் ராகுவின் கோபத் திலிருந்து தப்பிக்க இயலாது. இது அமெரிக்க நாட்டுக்கு மட்டுமல்ல, மதம், இனம், மொழி என வேற்றுமை பாராட்டும் அனைத்து நாடுகளுக்கும், அங்கு வாழும் மக்களுக்கும், அமெரிக்காவைச் சார்ந்து வாழும் பிற நாடுகளுக்கும் இதுவே நிலை.

இனி, கடந்த காலங்களில் குரு, சனி, ராகு- கேது ஆகிய கிரகங்கள் 1, 2, 5, 7, 9 ஆகிய ராசிகளில் சஞ்சரித்தபோது உலகில் ஏற்பட்ட பேரிடர்களைக் காண்போம்.

18-12-1964 அன்று தனுஷ்கோடியில் பெரும் மழை ஆரம்பித்து, 26-12-1964 அன்று புயல் தாக்கி ஊரே அழிந்தது. அதில் 20,000 பேர் மரணமடைந்ததாகச் சொல்லப்படுகிறது. பலர் காணவில்லை. பஞ்சபூதங்களில் நீரி னால் ஏற்பட்ட பாதிப்பு இது. ரிஷபம் தெற்கு திசையைக் குறிக்கும். அதில் ராகு நின்றதால் தெற்கு பாதிக்கப்பட்டது.

2-12-1984 அன்று, போபால் ரசாயன ஆலையில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. அதை சுவாசித்ததனால் 3,787 பேர் மரணமடைந்தனர். இது காற்றினால் விளைந்த பாதிப்பு.

26-12-2004 அன்று, வங்கக்கடலில் ஏற்பட்ட சுனாமி எனும் ஆழிப்பேரலை யால் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் ஏராளமான மக்கள் இறந்தனர். தமிழகம் மட்டுமல்ல, கீழ்திசை நாடுகள் பலவும் பாதிக்கப்பட்ட ன. இது நீரினால் ஏற்பட்ட பேரழிவு. அப்போது ராகு மேஷத்திலும், குரு சிம்மத்திலும், கேது துலா ராசியிலும் இருந்தன.

26-1-2001 அன்று, குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுப் பெருமளவு மக்கள் பலியாயினர்.

சுமார் 20,000 பேர் இறந்ததாகச் சொல்லப் படுகிறது. பலரும் பூமிக்குள் புதையுண்டனர்.

பஞ்சபூதங்களில் மண் சக்தியால் ஏற்பட்ட பேரழிவு இது. அப்போது சனி மேஷத்தில், குரு ரிஷபத்தில், ராகு மிதுனத்தில் இருந்தன. தனுசில் கேது இருந்தது.

11-9-2001 அன்று, அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் விமானத்தால் தாக்கி அழிக்கப்பட்டன. இதில் சுமார் 3000 பேர்வரை மரணம் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந் தனர். இது நெருப்பினால் ஏற்பட்டப் பேரிடர்.

அப்போது சனி மேஷத்திலும், குரு ரிஷபத்திலும், ராகு மிதுனத்திலும் இருந்தன.

மிதுன ராசி அமெரிக்காவைக் குறிப்பது. மிதுனத்தில் ராகு சஞ்சரிக்கும் காலங்களிலெல்லாம் அமெரிக்கா பேரிடர்களை சந்தித்து வருகிறது.தற்போதும் மிதுனத்தில் ராகு உள்ளது.

இதுவரை ராகுவால் ஏற்பட்ட இன்னல்களைப் பார்த்தோம். இனி, சனி மற்றும் கேதுவால் விளையும் இன்னல் களைக் காண்போம்.

சித்தர்கள், ஞானிகள், மகான்கள், ஞானம், பகுத்தறிவு, மருத்துவம், மூலிகை, சாபநிவர்த்தி, பாவ சாப தோஷம், தொழில் தடை, தொழில் முடக்கம், தலைமறைவு வாழ்க்கை, சிறைவாசம், நீதிமன்றம் போன்றவற்றை கேது குறிக்கும்.

மக்களுக்காகத்தான் மன்னர் என்கிற அகங்காரத்தால் ஆட்சி புரிந்து மக்களை இன்னலுக்கு ஆளாக்கும் அரசர்கள், நோய் நீக்கும் மருத்துவத்தில் தவறு செய்வோர், மருந்தில் கலப்படம் செய்வோர், அவர்களுக்குத் துணை இருப்போர், மக்களைப் பிரிவு படுத்தி ஆட்சி செய்வோர் ஆகியோருக்கு உண்டான தண்டனையை நோயாகத் தந்து நீதி வழங்குபவர் கேது பகவான்.

பஞ்சபூதங்களை மாசுபடுத்தி இயற்கையை அழிக்கும் மன்னர்கள் வாழும் நாட்டில் நோயைத் தந்து இன்னலைத் தருபவர் கேது பகவானாவார். இந்த நோய்களை நீக்கும் வழிமுறைகளை சித்தர்கள் நமக்கு கூறிச் சென்றுள்ளனர்.

இன்றைய நாட்களில் மக்களைப் பாதிக்கும் டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், தற்போதைய கொரோனா போன்ற பல நோய்களுக்கு சித்தர்கள் மருந்துகளைக் கூறியுள்ளனர். கபசுரக் குடிநீர், வாத சுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர் போன்றவையெல்லாம் சித்தர்கள் நமக்குத் தந்த பொக்கிஷங்களாகும்.

மேற்சொன்னவை போன்ற 72 வகை நோய்களை இம்மூலிகைகள் போக்கும். இவற்றை மக்கள் பயன்படுத்தித் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும்.

சனி, ராகு, குரு, கேது ஆகிய கிரகங்கள் கோட்சார ரீதியாக இணைந்து செயல்படும் காலங்களில் அந்த ராசிக்கு 1, 2, 5, 7, 9 ஆகிய ராசிகளைக் குறிப்பிடும் நாடுகளில் புதுப்புது நோய்கள் உருவாகி மக்களை அல்லல்பட வைத்துவிடும். கடந்த காலங்களில் ஏற்பட்ட இதுபோன்ற எண்ணற்ற நிகழ்வுகள் சாட்சியாக உள்ளன. அவற்றை சுருக்கமாக இங்கு காண்போம்.

1960- ஆம் ஆண்டு சிக்குன்குனியா காய்ச்சல் தனது பாதிப்பைத் தொடங்கியது. இது இன்றுவரை தொடர்ந்து மக்களைப் பாதித்து வருகிறது. 1970- ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சல் 9 நாடுகளில் தொடங்கி ,பின் 100 நாடுகளுக்குமேல் பரவி இன்றுவரை மக்களைப் பாதித்து வருகிறது. 2005, 2006- ஆம் வருடங்களில் உலகெங்கும் சிக்குன் குனியா காய்ச்சல் ஏராளமானவர்களைப் பாதிப் படையச் செய்தது. 2009- ஆம் ஆண்டு மே மாதம்முதல் உலகளவில் பன்றிக்காய்ச்சல் தோன்றியது. இந்த நோயின் காரணமாக ஒன்றரை லட்சம் பேருக்குமேல், அதிகப்பட் சமாக 5 லட்சத்து 75 ஆயிரம் பேர்வரை மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.

2014- ஆம் ஆண்டு டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல்களால் உலகமெங்கும் சுமார் ஒரு மில்லியன்பேர் பாதிப்படைந்ததாகக் கூறப் படுகிறது. 2019- ஆம் ஆண்டுமுதல் டெங்கு காய்ச்சல் உலகளவில் பெரும் பாதிப்பினைத் தந்துவருகிறது. அமெரிக்காவில் 3.1 மில்லியன் மக்கள் இதனால் பாதிப்படைந்ததாகக் கூறுகிறார்கள்.

தற்போது 2020- ஆம் ஆண்டு ஜனவரி முதல் கொரோனா நோய்த் தொற்று உலக மக்களைப் பயமுறுத்தி வருகிறது. 2020- ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2023- ஆம் ஆண்டுவரை இயற்கைப் பேரிடர், புதிய நோய், போர்ச்சூழல் என ஏதாவதொருவகையில் பாதிப்பு தென்மேற்கு, தெற்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்படும்.

2022 ஏப்ரல் முதல் 2024 ஏப்ரல் வரை புதிய நோய்களால் போர்ச்சூழல், இயற்கைப் பேரிடர்களால் மக்கள் கூட்டமாக மடிவது, ஆட்சி மாற்றம், அரசியல் தலைவர் மரணம், ஆன்மிகவாதிகளுக்கு சிரமம், மண், நீர், காற்று, நெருப்பினால் பாதிப்பு போன்றவை தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு நாடுகளில் ஏற்படக்கூடும். தமிழ்நாட்டிலும் பேரிடர்கள் உண்டாகக்கூடும். கிழக்காசிய நாடுகளில் கடலின்கீழ் பூகம்பம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

2040- ஆம் ஆண்டு நவம்பர் மாதம்முதல் 2042 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை கிழக்கு, மேற்கு சார்ந்த நாடுகளில் நோய் பாதிப்புகள் உண்டாகி அதிகளவில் மக்கள் பாதிப்படைவார்கள். 2054 அக்டோபர் முதல் 2056 மே மாதம்வரை தென்மேற்கு, மேற்கு, வடகிழக்கு, கிழக்கு சார்ந்த நாடுகளில் நோய் பாதிப்புகள் அதிகம் உண்டாகும்.

தமிழ்நாடு, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடல் கொந்தளிப்பு, புயல் வெள்ளப் பாதிப்பு உண்டாகக்கூடும். ஆட்சி மாற்றம், அரசியல் தலைவர்கள் மரணம் நிகழலாம். 2057- ஆம் ஆண்டு மே மாதம்முதல் 2060- ஆம் ஆண்டு டிசம்பர்வரை போர்ச்சூழல், இயற்கைப் பேரிடர், ஆட்சி மாற்றம், அரசியல் தலைவர் மரணம் என பாதிப்புகள் உண்டாகும். தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு, மேற்கு திசை சார்ந்த நாடுகள் பாதிப்படையும்.

ஒரு நாட்டில் ஏற்படும் நோய், பஞ்சம், மழைக்குறைவு, வறுமை, வேலையின்மை போன்றவற்றுக்கு அந்த நாட்டை ஆளும் அரசனே காரணம். அவர் நாட்டு மக்கள் நலமுடனும் அமைதியுடன் வாழவேண்டுமென்றால், மக்களுக்கான மன்னன் என்ற குணமும், இயற்கையை நேசித்துக் காப்பாற்றும் எண்ணமும், தன் நாட்டு மக்களிடையே மதம், இனம் போன்ற எவ்விதப் பேதமும் காட்டாமல், அனைவரையும் ஒன்றாக நினைத்து வாழும் பண்பும் கொண்ட ஒருவரே அரசனாக இருக்கவேண்டும். அவ்வாறுள்ளவர் ஆட்சி செய்யும் நாட்டில் பெருமளவு பாதிப்பு வராது. வந்தாலும் காப்பாற்றப்படுவார்கள். அத்தகையவர்களை மக்கள் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கவேண்டும். பெற்றோர்கள் செய்த பாவம் பிள்ளையைச் சேரும். மன்னன் செய்த பாவம் அந்த நாட்டு மக்களையே சேரும்.

செல்: 99441 13267