குலதெய்வ வழி பாடென்பது, பல தலைமுறைகளாக வழிவழியாகக் கடைப் பிடித்து வரக்கூடிய ஆராதனை முறையா கும். நமக்கு அதைப் பற்றிய அறிதலை, புரிதலை நமது முன்னோர் கள் முறையாகக் கற்றுத் தரவில்லை. குல தெய்வ வழிபாடுகள், நம் குலம்தழைக்க மிகவும் முக்கியமான ஒன்றாகும். குலதெய்வ வழிபாடு, நம் வாழ்க்கையின் முன்னேற்றத் துக்கும், வம்ச விருத்திக்கும் இன்றியமையாத ஒன்று என்பதை நாம் உணரவேண்டும்.
குடும்பதெய்வம் அல்லது குலதெய்வம் எதுவென்பதை அறிய ஜோதிடத்தில் பல வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.
அவற்றை நன்றாகப் புரிந்துகொண்டால், குலதெய்வம் தெரியாதவர்களுக்கு சரியான தெய்வத்தைக் கண்டறிந்து வழிகாட்ட இயலும்.
குடும்ப தேவதையைக் குடும்பத் தலைவரின் ஜாதகத்தைக் கொண்டு கண்டறியலாம்.
ஒவ்வொரு ஜாதகத்திலும், ஒருவரின் குடும்ப தேவதையை 5-ஆமிடத்தின் மூலமாகவும், ஆராதனை தெய்வத்தை 9-ஆமிடத்தின் மூலமாகவும் அறியலாம். இந்த வீடுகளில் இருக்கும் கிரகங்கள், இவற்றைப் பார்க்கும் கிரகங்கள் ஆகியவற்றைக்கொண்டு, நாம் குல- ஆராதனை தெய்வங்களை நிர்ணயிக்க வேண்டும். அதற்கு முதலில், ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய தேவதை எதுவென்று அறிந்துகொள்ளுதல் அவசியமாகும்.
சூரியன்- சிவன், சந்திரன்- பார்வதி, செவ்வாய்- முருகன், பத்ரகாளி போன்ற தெய்வங்களையும்; புதன்- கிருஷ்ணர், இராமபிரானையும் குறிக்கும்.
குரு- மகாவிஷ்ணு, ஸ்ரீநாராயணரைக் குறிக்கும். சுக்கிரன்- சாந்தி துர்க்கையையும் (இராஜராஜேஸ்வரி) கணபதியையும் குறிக்கும்.
சனி- சாஸ்தா, ஐயப்பன், வீரன்போன்ற உபதேவதைகளையும்; ராகு- பத்ரகாளி, கேது- கணபதியையும் குறிக்கும் என்பது பண்டைய நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள பொதுவிதியாகும். இவற்றில் பல மாறுபாடுகளும் உண்டு.
எடுத்துக்காட்டாக, சூரியனானவர் எந்த வொரு ராசியில் இருந்தாலும் அது சிவனையே குறிக்கும். ஆனால், அவர் உபய ராசிகள் அல்லது மூலை ராசிகள் என குறிப் பிடக்கூடிய மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீன ராசிகளின் முதல் திரேகாணத்தில் (0 முதல் 10 பாகை) இருந்தால் சண்முகன், (வள்ளி, தெய்வானை சமேத) சுப்பிரமணியன், பழனியாண்டி மற்றும் பாலசுப்ரமணியர் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். உபய ராசிகளின் மத்திய திரேகாணத்தில் (10-20 பாகை) இருந்தால் முறையே மகாகணபதி, வலம்புரி விநாயகர், உச்சிஷ்ட கணபதி மற்றும் பாலகணபதி என அறியவேண்டும். இதுபோல் நவகிரகங்களுக்கும் உரிய தெய்வங்களைப் பற்றிய பல மாறுபட்ட கருத்துகள் பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சுக்கில பட்சம் என்று சொல்லப்படும் வளர்பிறைக் காலத்தில் சந்திரன் இருந்தால், பார்வதி, இராஜராஜேஸ்வரி அம்பிகை, சிம்மவாஹினி எனவும்; கிருஷ்ண பட்சம் எனும் தேய்பிறைக்கால சந்திரனா யின், அதுவும் சர ராசியில் இருந்தால் துர்க்கை, பகவதி என்றும், ஸ்திர ராசியில் இருக்க பத்ரகாளி என்றும், உபயத்தில் சாமுண்டி என்றும் குறிப்பிடவேண்டும். செவ்வாயின் பார்வை பெற்றால், ரக்த சாமுண்டி என்றும், சுக்கிரன் பார்க்க அஷ்டபுஜங்களைக் கொண்டவள் என்றும் அறிந்துகொள்ள வேண்டும்.
ஒற்றைப்படை ராசி என்னும் ஆண் ராசிகளில் செவ்வாய் இருக்க சுப்பிரமணியர் என்றும், இரட்டைப்படை ராசி என்னும் பெண் ராசியில் செவ்வாய் இருக்க "ஸ்ரீ' என்றும் (குண்டலினி தெய்வம்) நிர்ணயிக்க வேண்டும். சில நூல்களில், இரட்டைப்படை ராசியிலுள்ள செவ்வாய்- பைரவர், தத்தாத் ரேயர், நடராஜர் ஆகியோரைக் குறிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதன் சர ராசியிலோ, உபய ராசியிலோ இருக்க, முறையே இராமபிரான், கிருஷ்ணர் என அவர்கள் அவதாரத்தைச் சொல்ல வேண்டும். மத்திய திரேகாணத்தில் புதன் இருந்தால், ராதாகிருஷ்ணன், கோபால கிருஷ்ணன் என குறிப்பிடுதல் வேண்டும். ஸ்திர ராசியின் கடைசி திரேகாணத்தில் புதன் இருக்க தசாவதாரம் என்றறிய வேண்டும். குருவானவர் எந்த ராசியில் எந்த திரேகாணத்தில் இருந்தாலும் "ஸ்ரீமன் நாராயணன்' என்றே சிந்திக்கவேண்டும்.
சுக்கிரன் பெண் ராசி எனும் இரட்டைப் படை ராசியில் இருக்க மகாலட்சுமியையும், ஒற்றைப்படை ராசியில் இருக்க அன்னபூர்ணேஸ்வரியையும் குறிக்கும்.
சனியைக்கொண்டு சாஸ்தா, புலி வாகனன் அய்யப்பன், சூரன், கருப்பன், சுடலைமாடன் போன்ற தெய்வங்களைக் கண்டறிய வேண்டும். சனியானவர் புதனின் நவாம்சத்திலோ, புதன் வீட்டிலோ அல்லது சனி, புதன் இணைந்தோ இருந்தால், குலதெய்வம் அனுமன் என நிர்ணயிக்க வேண்டும். சனியானவர் சுக்கிரன், சந்திரன் சாரத்தில் இருந்தால் அது ஏவல் தெய்வங்களைக் குறிகாட்டும்.
இப்படிப்பட்ட தெய்வங் கள் இருக்கும் கோவில்கள் எந்த இடத்தில் இருக்குமென்பதைக் காண்போமா? இவற்றை ஜாதகர் பிறந்த ஊரிலிருந்தே கணக்கிட வேண்டு மேயன்றி, வாழும் ஊரிலிருந்து அல்ல என்பதை நாம் அறியவேண்டும்.
கிழக்கு- சூரியன், தென்கிழக்கு- சந்திரன், தென்மேற்கு (நிருதி)- புதன், மேற்கு- குரு, வடமேற்கு- சுக்கிரன், வடக்கு- சனி, வட கிழக்கு- ராகு என்பதேயாகும்.
வேறுசில ஆசிரியர்களின் கூற்றுப்படி, ஆகாயம் அல்லது ஊரை சூரியன் என்றும், பாதாளத்தை சந்திரன் என்றும் குறிப்பிடுவதைக் காணலாம். மேற்சொன்ன குறிப்புகளின்படி குலதெய்வத்தை அறிய ஜோதிடர்களை அணுகிப் பயன்பெறலாமல்லவா?
செல்: 63836 25384