லக்னத்தில் குரு இருப்பவர்கள் உபதேசம் செய்யக்கூடியவர்களாக இருப்பர். ஓரிடத்தில் இருக்க விடாது. ஊர்ஊராக சுற்ற நேரிடும். கண் முன்னே பாதிக்கப்படுவார்கள் என தெரிந்தால் கேட்காமலேயே ஆலோசனை வழங்குவர். அனுபவசாலிகள். வாக்கு பலிதம் உண்டு. இவர்களின் சொல்படி கேட்டு நடந்தாலே நினைத்ததை அடையலாம். சாணக்கியர்கள். உடன் வைத்துக் கொண்டால் கஷ்ட நேரத்தில் தைரியத்தைத் தந்து, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வழி சொல்லி, நம்மை வெற்றிமேல் வெற்றிபெறச் செய்வர். தன்மானம் மிக்கவர் என்பதால் மரியாதை கொடுத்தால் மரியாதை தருவர். மதிக்காதவர்களைவிட்டு விலகிவிடுவர். மனிதர்களிடம் பாகுபாடு பார்க்காமல், இருக்குமிடத்தில் நிம்மதியாக வாழ்வர். தொந்தரவு தருபவரை பழிதீர்த்து விடுவர். சுபகிரக இணைவு, பார்வை பெற்றவர்கள் ஆன்மிக அறிவையும் கல்வியையும் கற்றுத் தருவர். பாவகிரக சம்பந்தம் பெற்றவர்கள் பிறரை அழிக்கும் வியூகம் கற்றுத் தருபவராகவும் ஏமாற்றக்கூடியவராகவும் இருப்பர். குருவின் ஆதிக்கம் பெற்ற புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திர தனுசு லக்ன, ராசிக்காரர்கள் குறிப்பறிந்து பேசுவார்கள். எதிர்காலத்தை மனதில் வைத்து பேச்சு, செயல் இருக்கும். வெறுப்பை வெளிக்காட்ட மாட்டார்கள். பாவகிரக சம்பந்தம் இருந்தால், எதிரியை நேரடியாக எதிர்க்காமல், அடுத்த வரைத் தூண்டிவிட்டு காய்களை நகர்த்தி வெற்றி பெறுவர். தனக்காக எதையும் செய்வர்.
மீன லக்னக்காரர்கள் மனதிற் குள்ளேயே கனவு, ஆசைகளை வைத்துக்கொள்வர். சுபகிரக வலிமை பெற்றவர்கள் திறமை யால் முன்னுக்கு வருவர். பாவகிரக பலம் பெற்றவர்கள் அடுத்தவர் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியும் அடிமை வாழ்க்கையே வாழ்வர். வேறுவழியின்றி தெரிந்தே ஏமாறும் முட்டாளாக இருப்பர்.
லக்னத்தில் சனி அமையப் பெற்றவர்கள் பின்னர் நடப்பதை முன்பே தெரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். பொதுவாக உடலில் எதாவது குறைபாடு இருக்கும். முரட்டு தைரியத்துடன் இருப்பார்கள். வாழ்க்கைத் துணைவருடன் வயது, அழகு, கல்வி, மதம், இன, சமூக பழக்க வழக்கத்தில் ஏதாவது முரண்பாடு வாழ்நாள் முழுதும் இருக்கும். கடினமான துறை, மக்கள் பாதுகாப்பு, அடிமைத் தொழில், அரசாங்க- அரசியல் தொடர்பு தரும்.
சுபகிரகப் பார்வை, இணைவு பலம் பெற்றவர்கள் மக்களால் போற்றப்படுவர். மக்களைக் கையாளும் ஆளுமைத் திறன் மிக்கவர். பாவகிரக சம்பந்தப்பட்டவர்கள் இரக்கமற்று, சுயநலத்திற்காக யாரையும் எப்படியும் பயன்படுத்திக் கொள்வர். காரியம் முடிந்ததும் நன்றியில்லாமல், நம்பியவரை நடுத்தெருவில் நிறுத்தத் தயங்கமாட்டர். தன் பக்கம் நியாயம் இருப்பதாயப் பேசும் இவர்கள் தன் தவறை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தவறைக் கேட்டறிந்து திருத்திக் கொள் ளாமல், உண்மை சொல்பவரை வஞ்சகர்களாகவும் குறை சொல்பவராகவும் பொய்யர் களாகவும் பழி தீர்ப்பார்கள். சனி ஆதிக்கம் பெற்ற பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர, மகர , கும்ப லக்னக் காரர்கள் பெற்றோர்க்கு உகந்தவர்கள் அல்ல. மக்களால் போற்றப்டுபவர்களும் தூற்றப் படுபவர்களும் இவர்களே. தாத்தா, பாட்டி, எதிரிகளுக்கு ஏற்றவர்கள்.
லக்னத்தில் ராகு அமையப் பெற்றவர்கள் மரபணுப்படி அப்பாவின் தந்தை குணம், உடற்கூறை உடையவர்களாக இருப்பர். ராகு அமர்ந்த வீட்டுக்குடையவனின் குணங்களைப் பிரதிபலிப்பார். உலக சுகங்களை அனுபவிக்கும் ஆசை கொண்டவர். எதிலும் ஆழம் தெரியாமல் காலைவிடும் நபர்கள். சுபகிரகப் பார்வை, இணைவு இருந்தால் எதிலும் தப்பித்துக் கொள்வர். குறுக்குவழி, அரசு, சட்டத்துக்குப் புறம்பான செயல், ஆபத்தான காரியங்களில் துணிந்து ஈடுபடுவர். பாவகிரகம் வலுப்பெற்றால் தண்டனை பெறுவர். மான, அவமானங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் ஆசைகளுக்கே முக்கியத் துவம் தருவர். சுயநலவாதியாக இருப்பதால் நண்பர்களோ, வாழ்க்கைத் துணைவரோ நிம்மதியாக இருக்கமுடியாது. நம்பிச் சென்றால் பிரச்சினைகளில் சிக்கவைத்து விடுவர். தனித்து இஷ்டம் போல் வாழவே விரும்புவர். பழமைகளைப் போற்றுவர். கலாச்சாரம் பேசும் இவர்கள் அதன்படி நடக்கமாட்டார்கள். சமீபத்திய அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டு, சரியான இடத்தில் பயன்படுத்தி தனக்குத் தேவையானதை அடைந்துகொள்ளும் காரியவாதிகள்.
லக்னத்தில் கேது இருக்கப் பெற்றவர் ஞானி. ஒருவர் ஞானியாக இருக்கிறார் என்றால், ஆரம்பகாலத்தில் தோல்வி பெற்றவராக இருப்பார். நினைத்தது நடக்கா மல், கிடைத்ததை அனுபவிக்க முடியாமல், இவ்வளவுதான் என்று சொல்லித் தீராத கஷ்டத்தை அனுபவித்து, வாழ்க்கையை வெறுத்து, ஏன்டா பொறந்தோம் என்று நொந்து, தற்கொலைவரை சென்று, இந்த வாழ்க்கை என்பது ஒன்றுமில்லை, எத்தகைய சாதனை படைத்தாலும், எத்தகைய கொடுமைக்காரனாக இருந்தாலும் மரணம் என்பது நடந்தே தீரும்; எதையும் எடுத்துச் செல்ல முடியாது; எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்கவே முடியாது; நன்றியோடு எவராலும் நடக்க முடியாது; நன்றிக்காக அடிமையாக வாழ முடியாது என மனிதர்களின் வகைகளையும், எதிர்பார்ப்பில்லா வாழ்க்கையே நிம்மதி தரும் என்கிற உண்மையையும் தெரிந்துகொள்வர்.
இருக்கும்போதே அனுபவிக்க முடிய வில்லை; இறந்தபின்பு சொர்க்கம் கிடைத்தால் என்ன- நரகம் கிடைத்தால் என்ன என்கிற விரக்தி ஏற்படும். கடவுள் எனும் சக்தி உண்டென்று நம்பினாலும், மனிதர்கள் உருவாக்கிக் கொண்டாடி வரும் கடவுள்கள்மேல் நம்பிக்கை யற்றவர்களாக இருப்பர்.
உடல் நலக் கோளாறுகளால் அவதிப்படுவர்.
செல்: 96003 53748