ஆரூடச் செம்மல் அருண் ராதாகிருஷ்ணன்

லகிலுள்ள பெரும்பாலான மதங்கள் கடவுளைத் தீபமேற்றி வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. விளக்கேற்றுவதால் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பெருகும். ஒளிவழிபாடு, இன்னல்களுக்குப் பரிகாரமாக விளங்குகிறது.

சிவன் கோவில் விளக்குத் திரியை எதேச்சையாகத் தூண்டிவிட்ட எலி அடுத்த பிறவியில் அரசனாக வந்ததை புராணங்களில் காணலாம். கோவில்களில் "தீபாலங்கார சேவை'யின்போது இறைவனை பல விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடும் வழக்கமுள்ளது. உதாரணமாக, குருவாயூர், திருவேங்கடம் போன்ற தலங்களில் 1,008 நெய் தீபங்களேற்றி வழிபடுகிறார்கள். திருவண்ணாமலையில் கார்த்திகை தீப வழிபாடே மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. கேரளாவில் பகவதியைத் திருவிளக்கில் ஆவாகனம் செய்து, சண்டியின் எழுநூறு மந்திரங்களால் பூஜைசெய்து, தாந்திரீக முறையில் செய்யப்படும் வழிபாடே "பகவதி சேவை' என அழைக்கப்படுகிறது.

12

Advertisment

இந்த பகவதி சேவை வழிபாடு எதிரிகள் தொல்லை, கெட்டசக்திகள் தொல்லை, அரசியலில் எதிரிகள் தொல்லை, தீராநோய், தீராக் கடன் போன்றஇன்னல்களுக்குத் தீர்வாக அமைகிறது.

இனி, விளக்குகளில் தீபமேற்றும் முறைகளையும் அவற்றின் பலன்களையும் காண்போம்.

காமாட்சி விளக்குகள் ஒருமுகத்தைக் கொண்டிருப்ப தால், அதில் ஒற்றைத் திரியிட்டு விளக்கேற்றப் படுகிறது. குத்துவிளக்கில் ஐந்துமுகங்கள் உள்ளதால் ஐந்துதிரிகள்கொண்டு ஏற்றப் படுவது வழக்கம். இறைவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான் என்பதாலும், ஐந்தொழிலைச் செய்பவன் என்பதாலும் பஞ்சம் தீர்க்கும் பஞ்சமுகங்களை வழிபடுகிறோம்.

ஐந்துமுக விளக்கில் இரண்டு முகங்களிலாவது தீபமேற்றவேண்டும்; ஒருமுகத்தில் மட்டும் தீபமேற்றுவது கூடாது. துளசிச்செடியை வளர்த்து, அதற்கு மாடம் அமைத்து அதில் விளக்கேற்றி வணங்குவதால் திருமணத்தடை நீங்கும்.

தைமாத வெள்ளிக்கிழமை களிலும், ஆடிமாத வெள்ளிக் கிழமைகளிலும் ஐந்துமுக விளக்கை மஞ்சள், குங்குமம், ரவிக்கைத்துணி, பூ, தாலிக் கயிறு போன்றவற்றால் அலங்கரித்து, விளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபப் பாதம் ஆகிய எட்டிடங்களில் சந்தனம், குங்குமம் வைத்துப் பூஜைசெய்வதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்..

தினமும் மாலை நேரத்தில் அகல் விளக்கில் தீபமேற்றி வழிபட்டால் கிரகதோஷங்கள் விலகும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் தீபமேற்றி வழிபட்டால் சர்வமங்களம் உண்டாகும். பிரதோஷ காலத்தில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும்.

நெய் தீபமேற்றினால் செல்வம் பெருகும்.

நல்லெண்ணெய் தீபமேற்றினால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெயில் தீபமேற்றினால் வசீகரம் கூடும்.

இலுப்பை எண்ணெயில் தீபமேற்றினால் சகல காரிய வெற்றி கிடைக்கும்.

விளக்கெண்ணெயில் தீபமேற்றினால் புகழ் உண்டாகும்.

இந்த வழிபாட்டை ஜாதகரீதியாக யார், எப்படிச் செய்யவேண்டுமெனப் பார்க்கலாம்.

ஜாதகத்தில் ஒளிகிரகங்களான சூரியன், சந்திரன் ஆகியவை இரவு வீடான துலாம், விருச்சிக ராசியிலிருந்து, அது பதினோராம் பாவமாக அமைந்தால், சிவன் கோவிலில் நித்தியப் பிரதோஷ வேளையில் விளக்கேற்றி வழிபட தனம் வந்துசேரும்.

விருச்சிகம், ரிஷப லக்னம்- ராசிக் காரர்களுக்கு குரு மகரத்தில் இருந்தால், வியாழக்கிழமை ஜீவசமாதிகளில் விளக்கேற்றிவழிபட தனம் வந்துசேரும்.

ரிஷபம், சிம்மம், விருச்சிக லக்னம்- ராசிக்காரர்களுக்கு புதன் மீன ராசியிலிருந்தால் கடன்தொல்லையால் மிகுந்த அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் பெருமாள் கோவிலில் புதன்கிழமை, திருவோண நட்சத்திர நாட்களில் ஐந்து எண்ணெய் விளக்கேற்றிவழிபட பணம் வந்துசேரும்.

மீனம், மகரம், துலாம், மிதுன லக்னம்- ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கடகத்திலிருந்தால் பூமி, தங்கம் போன்ற விஷயங் களில் நஷ்டம் உண்டாகும். சிலருக்கு வீடுவாங்குவதில் தடங்கல்கள் உருவாகும். இவர்கள் மண்விளக்கேற்றி , செவ்வாய்க்கிழமை பூவராக சுவாமி கோவிலில், செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டத்தில் விளக்கேற்றிவழிபட துன்பம் தீரும்.

தனுசு, மகரம், மீனம், மேஷ லக்னம்- ராசிக்காரர்களுக்கு சனி மேஷத்தில் இருந்தால் தொழிலில் லாபமில்லாமல் போகும். மேலும் அரசாலும், அரசியலாலும் நஷ்டம் ஏற்படும். இவர்கள் சனிக்கிழமை சிவன் கோவிலில் பிரதோஷ வேளையில் விளக்கேற்றிவழிபட பணம் வருவதிலுள்ள தடையகலும்.

மேஷம், கன்னி, கடகம், தனுசு லக்னம்- ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் கன்னியில் இருந்தால் வம்பு, வழக்கால் பணம் இழப்பா கும். சிலருக்கு வேலை செய்யுமிடத்தில் பணம் தருவது தாமதமாகிக்கொண்டே இருக்கும். போராடி வாங்க வேண்டிவரும். இவர்கள் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி சந்நிதியில் தாமரைத்திரியால் தீபமேற்றிவழிபட தனம் வந்துசேரும்.

துலாம், மகர லக்னம்- ராசிக்காரர்களுக்கு விருச்சிகத்தில் கேது இருந்தால் தனம் வருவதில் தடையேற்படும். இவர்கள், சூரியன் மறைந்ததும் முன்னிரவில் பகவதிசேவை செய்வது, பைரவர் சந்நிதியில் தேய்பிறை அஷ்டமி நாட்களில் தீபமேற்றிவழிபட பணம் வந்துசேரும்.

ஜாதகத்தில் தனகாரகனோ, லாபாதி பதியோ ராகு- கேது சேர்க்கையில் இருப்பது அல்லது தனஸ்தானம், லாபஸ்தானங்களின் பாவமுனை ராகு- கேது சேர்க்கையிருப்பது தனவரவை மாயையாகவே காட்டும். இவர்கள் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றிவழிபட தன வரவிலுள்ள தடை நீங்கும்.

மேற்கூறிய அமைப்புகளில் கோட்சாரத் தில் கிரகங்கள் சஞ்சரிக்கும்போதும் இதே பலன்களை எதிர்பார்க்கலாம். தனவரவுக்காக விளக்கேற்றி வழிபடும்பொழுது கீழ்க்கண்டநெறிமுறைகளைக் கையாள வேண்டும்.

தூய பசுநெய், நல்லெண்ணெய், மூலிகை எண்ணெய் (புதனிற்கு மட்டும்) கொண்டு மட்டுமே விளக்கேற்றவேண்டும்.

விளக்கேற்றும் திரி தனவரவுக்குரியது என்பதால், பஞ்சு அல்லது தாமரைத் தண்டா லான பொருள்களால் மட்டும்தான் உபயோகிக்கவேண்டும்.

நம் கையால் மட்டுமே விளக்கேற்றவேண்டும். ஏற்கனவே ஒருவர் ஏற்றிய விளக்கிலிருக்கும் தீபத்தைக்கொண்டு ஏற்றக் கூடாது.

விளக்கை வடக்கு அல்லது கிழக்கு முகமாக மட்டுமே ஏற்றவேண்டும்.

விளக்கேற்றும் போது கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லவேண்டும் .

"ஓம் சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பதஹ

ஷத்ரு புத்தி விநாசாய தீப ஜோதி நமோஸ்துதே

தீப ஜ்யோதி பர ப்ரஹ்மா தீப ஜ்யோதி

ஜனார்தனா

தீபோ மே ஹார து பாபம் சந்த்யா தீப நமோஸ்துதே."

செல்: 77080 20714