இவ்வுலகில் காலைமுதல் மாலைவரை உழைத்துக் களைத்த கூலியாள் சொற்ப பணத்துடன் வீடு திரும்புகிறார். படித்தவர்கள் ஓரளவு சேர்த்து வைக்குமளவு பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியோ, பெரிய நிறுவனம் நடத்தும் தொழிலதிபரோ கடன்வாங்கி முதல்போட்டு லாபம்காண முடியாமல், எங்காவது ஒரு கோவில் வளாகத்திற்குள் அமர்ந்து, "ஆண்டவா, இந்த இக்கட்டான நிலையிலிருந்து என்னைக் காப்பாற்று' என்று புலம்புவது எவருக்கும் தெரியாத உண்மை.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கான தீர்வை, சிவ மூர்த்தங்களில் ஒருவரான காலபைரவர்- எண்வகை மூர்த்திகளில் ஒருவராக நின்று தருகிறார்.
"ஆதரவற்றவர்களுக்கு ஆண்டவனே துணை' என்ற சொல்வழக்கு போய், "பணக்காரர்களை பகவான் தான் காப்பாற்றவேண்டும்' என்று, அவர்கள் படும் வேதனையைக் கண்டு ஏழைமக்கள் பிரார்த்திக்க வேண்டிய சூழல் பல இடங்களில் நிலவுகிறது.
பயம் நீக்கும் பைரவ ரூபம்
சிவபெருமானுக்குரிய அறுபத்து நான்கு திவ்ய வடிவங்களில் லிங்கம், லிங்கோத்பவர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், பைரவர், வீரபத்திரர், நிருத்த மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் ஆகிய ஒன்பது வடிவங்கள் சிறப்பானவை என்று சொல்லப்படுகிறது.
ஈசனின் அம்சங்களில் ஒருவரான பைரவ மூர்த்தியை சிவகணங்களில் க்ஷேத்திரக் காவலர் என்று கூறுவர். மிகப்பெரிய தேவஸ்தானங்களில் இரவுநேர அர்த்தஜாமப் பூஜையை முடித்துவிட்டுக் கதவுகளைப் பூட்டி, அதன் சாவியை பைரவர்முன் வைப்பது வழக்கம். ஆலயத்தை பைரவர் காப்பார் என்பது நம்பிக்கை.
பைரவர் பற்றிய அபூர்வத் தகவல்களை எடுத்துக் கூறும் தந்திர நூல்களான மூர்த்தி தியானம், பரார்த்த பூஜை, பாராக்கியம், வாருண பத்ததி, விஷ்ணு தர்மோத்தரம் போன்றவற்றில் கொடுக்கப்பட்டிருந்தாலும், தந்திர சாஸ்திரம் என்னும் மகா வாக்கிய கிரந்தங்களில் காலபைரவர், மகாகாலர், பஞ்சமுகர், தசபுஜர், ஸ்ரீ வாஞ்சியோக பைரவர் வரிசையில் ஸ்வர்ண பைரவமூர்த்தி வருகிறார்.
ஒருவர் பெரிய தொழில் தொடங்கி அதை மூடுகிற நிலைக்கு வந்துவிட்டா லும், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட் டாலும், கடனால் மூழ்கும் நிலை வந்தா லும், தந்திர சாஸ்திரத்தில் சொல்லப் பட்டவாறு சௌபாக்கிய பைரவர் சக்கரம் வரைந்து, முறைப்படி உபாசனை செய்து வந்தால் கடன்கள் விலகி, ஆபத்துக்கள் அகன்று, மீண்டும் தொழிலை உயர்த்தி லாபம் காணும் உயர்நிலைக்கு வரலாம். ஐஸ்வர்ய சிவனின் அருள் பொதிந்த இந்த பைரவச் சக்கரத்திற்கு சர்வஜித் பைரவ சக்கரம் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.
பைரவ சக்கரம் பயன் தருமா?
பைரவ தந்திரத்தை எடுத்துக் கையாள் பவர்கள் இந்தக் கலியுகத்தில் எந்தக் கஷ்டத் தையும் தாங்கிக்கொண்டு முன்னேறி விடுவர் என்று சொல்லி, அதை வெளிப் படுத்தியவரே ஆனந்த பைரவர்தான் என்னும் தகவல் விஞ்ஞான பைரவம் என்னும் தொகுப்பில் உள்ளது.
கிரகங்களின் ராசி மாற்றங்களால் மக்களுக்கு உண்டாகும் இன்னல்களை விலகி நன்மை செய்யும் கடவுளாக பைரவர் விளங்குவதால், சிவாகமங்கள் இவரை ஆபதுத்தாரணர் என்று போற்றுகின்றன.
காசி ரகசியத்தில் ஸ்வர்ண பைரவ மூர்த்தி அருளும் தன்மையை-
"தளம்பொலி மலரோன் ஆதி வானவர் தாழ்ந்து போற்றி
உளம்பொலி காசிமேவும் உயிர்கள்செய் பாவமெல்லாம்
களம்பொலி யாதுதண்டங் கண்டறல் ஒழிந்து முத்தி
வளம்பொலி வகைசெய் கால வயிரவற் கன்பு செய்வாம்'
என்று கூறப்பட்டுள்ளது. இதழ்கள் விரிந்து ஒளியுடன் திகழும் தாமரை மலரில் உறையும் பிரம்மனும், மற்றுமுள்ள தேவர்களும் தலைதாழ்த்தி போற்றி வணங்க, உள்ளம் மகிழ்ந்து, காசியில் வாழும் ஜீவாத்மாக்கள் செய்த பாவங் களையெல்லாம் தண்டிக்காமல் மன்னித்து,
அவர்களுக்கு முக்திப்பேற்றை அடைய வழிகாட்டும் பைரவரின் தாள் பணிந்து வணங்கினால் நாம் வாழ்க்கை வளங் களைப் பெற்றுவிடலாமென்று பைரவ உபாசனா ரகசியத்தை மேற்கண்ட பாடல் தெளிவுபடுத்துகிறது.
சர்வஜித் பைரவ சக்கர மகிமை காலபைரவாஷ்டமி, தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவ உபாசனை செய்யப்படுகிறது. தனிக்கோவில் அமைத்தும், சில கோவில் களில் சிறப்பு சந்நிதி அமைத்தும் பைரவரை வழிபட்டுவருகின்றனர். இந்த விசேட எந்திரத்தை பைரவ தந்திர சாஸ்திரப்படி வரைந்து அத்தர், புனுகு, ஜவ்வாது ஆகிய வாசனை திரவியங்களைப் பூசி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்துவிட்டால் அங்கு ஈர்ப்புத் தன்மை அதிகமாகும். ஆலய அறப் பணிகளைச் செய்திட பொருள்வரவும் தனவரவும் அதிகமாகும். இதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். அதேபோல வியாபாரத் தலங்களிலும் தொழிற்சாலைகளிலும் இந்த சக்கரத்தை வைத்து வணங்கிவந்தால் கடன் தொல்லைகள் தீர்ந்து, பொருள் வரவு அதிகரிக்கும். நிலையான லாபம் கிட்டும்.
தில்லை எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிற்சபையில் கீழ்ப்புறத்தில் பைரவ மூர்த்தி அமைந்திருப்பதைக் காணலாம். சிறப்பு தினங்களில் நெய்யுடன் வடைமாலை சாற்றி வழிபடுவதால் சொர்ண லாபத்துடன், பயம்நீங்கி சகல விருப்பங்களும் நிறைவேறுவதாக நம்பிக்கை.
சிதம்பரத்தில் அருளும் இந்த மூர்த்திக்கு அர்த்த ஜாம அழகர் என்னும் பெயரும் உண்டு. இதுபோல இன்னும் பல தலங்களில் பைரவர் அருள்புரிகிறார்.
கந்தபுராணத்திலும் பைரவரின் மகிமை கூறும் செய்யுள்கள் ஏராளமாக உள்ளன. பைரவருக்கு உகந்த வெள்ளி, அஷ்டமி, செவ்வாய்க்கிழமைகளில் சௌபாக்கிய பைரவர் எந்திரத்தைப் பூஜை செய்யவேண்டும்.
வழிபடும் விதி
வெள்ளிக்கிழமை காலை நித்திய அனுஷ்டானங் களை முடித்துவிட்டு, சர்வஜித் பைரவ சக்கரத்திற்கு பதினாறுவகை உபசாரங்கள் செய்து, பைரவ மூர்த்தியின் எட்டு ஆவரண தேவதைகளையும் பூஜைசெய்ய வேண்டும். பிறகு-
"வந்தே பாலம் ஸ்படிக சத்ருசம் குண்டலோத்
பாணி வக்த்ரம் திவ்யா கல்பைர் நவமணியை
கிங்கிணி நூபுராட்யை தீப்தாகாரம் விதேவதனம்
சுப்ரசன்னம் மகேசம் ஹாஸ்தாப் ஜாப்யாம்
வடுகமனிசம் சௌபாக்ய விருத்திம் பஜே'
என்னும் தியானம் கூறி, மலரிட்டு, தூபதீப நிவேதனம் செய்து ஆரத்தி காட்டவேண்டும். பிறகு-
"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கிலீம் சௌபாக்ய
பைரவாய ஸ்வர்ணாகர்ஷணாய
தன தான்ய விருத்திகராய மம
ருண விமோசனம் ஸ்வர்ண
விருத்திம் குரு தே நம'
என்று 108 முறை ஜெபம் செய்து வாசனை திரவியங்களை இடவேண்டும், வாசனை திரவியங்களால் ரட்சை செய்து திலகமிட்டுக்கொண்டால் வியாபார வசியம், தொழில் விருத்தி ஆகிய பலன்கள் சித்திக்கும். குறிப்பாக பைரவ மூர்த்தங்களை வணங்கு வதால் ரத்தம் தொடர்புடைய அனைத்து நோய்களும் அகன்றுவிடும். எதிரிகள் தாக்கம் பற்றிய பயம் அறவே நீங்கிவிடும்.
சௌபாக்கிய பைரவரை விதிப்படி பூஜை செய்துவருபவர்கள், பைரவருக்கு உகந்த சிறப்பு நாட்களில் முடிந்தவரை ஆலயங் களுக்குச் சென்று, அங்குள்ள பைரவரை வணங்கிவருதல் நன்று. சிவாலயங்களில் நடைபெறும் பிரதோஷ வழிபாடு நேரத்தில் சிவனருட் சேவை செய்வதும், சிவாலயத்தில் உழவாரப்பணி மேற்கொள்வதும் சௌபாக்கிய பைரவரின் நேரடி அருட்பார்வையைப் பெற்றுத்தரும். சிறப்பான வாழ்வை அடையலாம்.
ஜாதகத்தில் சோதனைக்காலமும் பைரவ சித்தியும் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டுக் குடையவர் தசை நடக்கும் காலங்களில், அதிகமான முதல்போட்டுத் தொழில் தொடங்கி, நஷ்டத்திற்கு ஆளாகி அவமானங் களையும் சந்திப்பது பலரது அனுபவமாகும்.
9-ஆம் வீட்டோன் 12-ல் அமர்ந்து, 12-ஆம் அதிபதி பலம் குறைந்திருந்தாலும், 2-ஆம் வீட்டிலும் 3-ஆம் வீட்டிலும் பாவிகள் இருந்தாலும் வழக்குகள், கடன்கள் உண்டாகி தனலாபம் கிடைக்காமல் போகக்கூடும்.
ஒருவரது ஜாதகத்தில் 4-ல் சூரியன் அமர்ந்து சனியால் பார்க்கப்பட்டால், தொழிலை நல்லபடியாகத் தொடங்குவார். மூன்று மாதங்கள் கடந்ததும் தொழிலில் முடக்கம் ஏற்பட்டு, மெல்ல மெல்ல இறங்கு முகம் காணநேரும்.
பொதுவாக ஐந்தாம் பாவத்தைப் பூர்வபுண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம் என்றறியும் அதேவேளையில், அதுவே லட்சுமி கடாட்சத்தைத் தரக்கூடிய சுக பாக்கியஸ்தானம் என்றும் அறிய வேண்டும். இதில் சனி, சுக்கிரன், குரு அமர்ந்தால் தனவரவை அதிகமாக அடையும் லட்சுமி யோகத்தைப் பெறுவர். ஆனால் கவனக்குறைவு ஏற்பட்டு, தயாள குணத்தால் தன்னிலை இழந்து கடன்படும் நிலைக்கு ஆளாவர்.
செவ்வாய் மேஷம் அல்லது விருச்சிகம், மகரத்தில் இருக்க ருசக யோகம் உண்டாகும். இந்த யோகம் பெற்ற ஜாதகர் வாழ்வில் விரைவாகப் பண வசதியைப் பெருக்கிக்கொள்வார்கள். ஆனால் சனி தசை, புதன் தசை, ராகு தசைக் காலங்களில் நஷ்டங்களைச் சந்திக்கக்கூடும். ஜாதகத்தில் நஷ்டஜாதக கிரக அமைப்புகளை ஆராய்ந்து, பரிகார வழிபாடுகளைச் செய்யும்போது சர்வஜித் பைரவ சக்கரத்தை முறையோடு வழிபட்டால் சரிவிலிருந்து மீண்டு நல்வாழ்வு பெறலாம்.
"வீமேசுர உள்ளமுடையான்' என்னும் ஜோதிட கிருஹ சிந்தாமணி நூல், செய்யுள் களால் ஜோதிடப் பலனறியும் முறைகளைச் சொல்கிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன் என்பவ ரால் பாடப்பெற்றது. தமிழ் வடிவில் காணக் கிடைக்கிறது. இந்த நூலில் ஒரு ஜாதகர் எந்த கிரக நிலையால் துன்பமடைகிறார் என்று கூறப் பட்டிருப்பது வியப்பான விஷயம். எனவே நமக்கு ஏற்படும் தசாகால இடர்களை அறிந்து, உரிய பரிகாரம்தேடி நலம்பெற பைரவ பூஜையை சிறந்த வழிகாட்டியாகப் பயன்படுத்த வேண்டும்.