ப் எஸ். சுரேஷ், பெங்களூரு.
எனக்கு 43 வயது. நான்கு வருடங்களுக்குமுன் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உண்டு. என் மனைவி வீட்டார் என்னை மிகவும் அவமானப்படுத்து கின்றனர். என் மனைவி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுகிறாள். கடந்த ஜூன் மாதம் என்னிடம் சண்டை யிட்டுவிட்டு தாய்வீடு சென்றாள். இரண்டு நாட்களில் பெற்றோருடன் வந்து, காவல்நிலையத்தில் புகார் செய்து, என்னிடம் எழுதி வாங்கிக்கொண்டு சென்றுவிட்டாள். இன்றுவரை எங்களுக் கிடையே பேச்சுவார்த்தை இல்லை. எதிர்காலம் என்ன வாகும்?
கணவர் சுரேஷ் 29-6-1978-ல் பிறந்தவர். கும்ப லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் கேது; 8-ல் ராகு. ராகு- கேதுவுக்குள் லக்னம் தவிர அனைத்து கிரகங்களும் அடைந்து நிற்கின்றன. லக்னம் வெளியே விழுந்ததால், இது காலசர்ப்ப தோஷ ஜாதகமல்ல. இவருடைய லக்னத்துக்கு 7-ல் செவ்வாயும், சனியும், ஏழாமதிபதி சூரியன், ராகு சாரத்திலும் நிற்கிறார். உங்களுக்கு மனைவியென்று ஒரு பொம்மையைக் கட்டி வைத்தாலும், அதுவும் ஏளனம் செய்துவிட்டுப்போகும் அதுவும் நடப்பு செவ்வாய் தசை- கேட்கவேண்டுமா? செவ்வாய் தசை 2022, டிசம்பர் வரை உள்ளது. அதற்குள் ஒருமுறை அரசு தண்டனை கிடைக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே கொஞ்சம் முயன்று, மனைவியுடன் சமாதானம் பேசி பிரிந்துவிடுவது நன்று. ஏனெனில் 2023-ல் ராகு தசை ஆரம்பம். அவர் எட்டில் இருந்து தசை நடத்துவார். 8-ஆமிட ராகு தசை ஜாதகரை மிகவும் துன்புறுத்தும். எனவே இப்போதிருந்தே கூடிய மட்டும் பத்திரமாக ஒதுங்கிவாழ ஆரம்பிக்கவும். ராகு தசை, ராகு புக்தி முடிந்து குரு புக்தியில், தாலிகட்டாத ஒரு குடும்பம் உண்டாகும். நீங்கள் எட்டு சனிக்கிழமை, ஆஞ்சனேயருக்கு நெய்விளக்கேற்றி வழிபடவும். 9-ஆவது சனிக்கிழமை வடைமாலை சாற்றி வழிபட, அரசு தண்டனையிலிருந்து விடுபடலாம். உங்களிடமும் சிலபல கெட்ட பழக்கங்கள் உள்ளன. அதனைத் திருத்திக்கொள்ள முயலவும். மனைவி கே. காமினி 2-4-1979-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திரம். லக்னாதிபதி செவ்வாய், சூரியனுடன் ஒரேராசியில் உள்ளார். மேலும் செவ்வாய் அம்சத்தில் நீசம். இதைவிட இவரது எட்டாம் அதிபதி புதன் நீச வக்ரம். ஒரு கிரகம் நீசம்பெற்று வக்ரம் பெறுமானால், அவர் உச்சமடைந்ததாக அர்த்தம். ஆனா லும் இந்த குறிப்பிட்ட ஜாதகத்தில், புதன் 8-ஆம் அதிபதியாகி நீச வக்ரபெற்று, உச்சமாகி 8-ல் அமர்ந்துவிட்டதால், இவருக்குப் பிறந்ததிலிருந்தே சற்று புத்திப் பிறழ்வு நோய் இருந்திருக்கும். உடனிருக்கும் சூரியனும் செவ்வாயும் கோபத்தை அதிகப்படுத்துகின்றனர். நடப்பு சனி தசை, புதன் புக்தி 2022, டிசம்பர் வரை. இதற்குள் இவர், ஆரோக்கியம் சம்பந்தமாக மருத்துவமனைக்குச் செல்லவேண்டி வரும். நடப்பு சனி தசை வக்ரமாகி ராகுவுடன் சேர்ந்திருப்பதால், பலன்கள் சற்று கடுமையாக இருக்கும். இவர் அல்லது இவரது குடும்பத்தினர் தினமும் நரசிம்மரை வணங்க வேண்டும். மகள் பிரணிகா சுரேஷ் 24-5-2018-ல் பிறந்தவர். கன்னி லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். லக்னாதிபதி புதன் 8-ல் மறைவு. 8-ஆம் அதிபதி செவ்வாய் 5-ல் கேதுவுடன் உச்சம். நடப்பு சந்திர தசை ராகுபுக்தி 2022, ஜூலை வரை. இதற்குள் தாய்- தந்தையரிடையே பரிவு ஏற்படும். பௌர்ணமி தோறும் அம்பாளை வணங்குவது சிறப்பு.
ப் ஆர்.சரண்ராஜ், கருப்பூர்.
என் வேலைவாய்ப்பு, எதிர்காலம் பற்றிக் கூறவும்.
26-6-1999-ல் பிறந்தவர். கடக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். லக்னாதிபதி சந்திரன் நீசம். லக்னத்தில் புதன், ராகு, சுக்கிரன். இவ்வாறு புதன், ராகு சேர்க்கை உள்ளவர்களின் மூளை எதிர்மறை விஷயங்களில் வெகு ஆர்வம் கொள்ளும். 10- எனும் தொழில் ஸ்தானத் திலுள்ள நீச சனி, குருவின் சேர்க்கையால் நீசபங்கம் பெற்றுள்ளார். எனினும் சனி அம்சத்தில் உச்சம். வேலையில் எப்படியாவது முன்னுக்கு வந்துவிடுவீர்கள். நடப்பு புதன் விரய தசையில், ராகு புக்தி. தற்போது உங்கள் வாழ்க்கை நிலையில்லாமல், காற்றில் அகப்பட்ட சருகுபோல் அலையும். வீண் அலைச்சலும், விரயமும் உண்டு. 2024, பிப்ரவரி வரை இப்படித்தான் இருக்கும். அடுத்து வரும் குரு புக்தி நல்ல பலன்கள் தரும். தற்போது, தோல் சம்பந்தமான நோய்களாலும் சற்று சிரமப்பட்டுக்கொண்டிருப்பீர்கள். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில், திருக்கோஷ்டியூர் சென்று வணங்கவும். கருடனுக்கு புதன் கிழமைதோறும் விளக்கேற்றி வணங்கவும். புதன்கிழமைகளில் ஒரு பெருமாளை சேவிப்பது நன்று.
ப் கே. ராஜி, கருப்பூர்.
என் மகளின் திருமணம் எப்போது நடக்கும்? நர்சிங் படித்திருக்கிறாள். நல்ல இடத்தில் வேலை கிடைக்குமா?
மகள் அர்ச்சனா 21-6-2001-ல் பிறந்தவர். மகர லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னத்துக்கு 6-ல் சூரியன், சந்திரன், குரு, ராகு என நான்கு கிரகங்கள் சேர்ந்து நிற்கிறார்கள். இந்தப் பெண்ணின் பிரசவத்தின்போது, இவரது தாயார் மிகப் பெரிய கண்டத்திலிருந்து தப்பி வந்திருப்பார். ராசியில் ராகு; 7-ல் கேது. ராசிக்கு 7-ல் செவ்வாய். எனவே நாகதோஷம், செவ்வாய் தோஷம் உள்ளது. 7-ஆமிடத்திற்கு சனி பார்வை. எனவே திருமணம் சற்று தாமதமாகும். நடப்பு குரு தசையில் சனி புக்தி நடக்கிறது. இந்த சனி புக்தியில் வேலை கிடைத்து. வெளியிடம் செல்வார். சனி புக்தி 2022, செப்டம்பர் வரை. இந்த காலகட்டத்திற்குள் ஒரு வரன் வர வாய்ப்புண்டு. திருமணமாகி வெளியூர், வெளிநாடு செல்வார். இவர் ஜாதகத்தில் இரண்டு விபரீத ராஜயோகம் உள்ளது. எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் நடக்கும். அரசு சார்ந்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த குரு தசை நல்ல பலன்கள் கொடுக்க, திருச்செந்தூர் முருகனை வணங்க வேண்டும். காலசர்ப்ப தோஷம், நாகதோஷம், செவ்வாய் தோஷம், கிரகண தோஷம் என அதிக தோஷம் இருப் பதால், திருச்சி- திருப் பட்டூர் சென்று வழி பட்டு, பதஞ்சலி முனிவரின் ஜீவ சமாதிக்குமுன் கொஞ்சநேரம் அமர்ந்து, அமைதியாக வழிபட்டு வரவும்.
ப் கே. ராஜேஸ்வரி, ராமநல்லூர்.
என் மகனின் கல்வி, எதிர்காலம் எப்படியிருக்கும்?
மகன் ஆனந்தராஜ் 5-12-2003-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் கேது; 8-ல் ராகு. ராசியில் ராகு; 7-ல் கேது, செவ்வாய். செவ்வாய் தோஷ, நாகதோஷ ஜாதகம். 5-ஆம் அதிபதி சனியும், 9-ஆம் அதிபதி சுக்கிரனும் பார்வை. மேலும் 9-ஆம் அதிபதிக்கு குரு பார்வையும் உள்ளது. எனவே இவர் மேற்கல்வியை- அது தொழில் சார்ந்த கல்வியாக இருக்கும்; நன்றா கப் பூர்த்திசெய்வார். நடப்பு சூரிய தசை விரயாதிபதி தசை. எனவே சூரிய தசை ஆரம்பித்ததிலிருந்தே இவர் வெளியிடம் செல்வது பற்றிய பேச்சு இருந்திருக்கும். நடப்பு சூரிய தசை செவ்வாய் புக்தி. 2022, ஜனவரியில் ராகு புக்தி ஆரம்பம். எனவே இவர் கண்டிப்பாக மேற்கல்விக்காக வெளியி டம் செல்வார். சூரிய தசை நல்ல பலன்களைத் தர, ஆதித்ய ஹ்ருதயம் கூறுவதும், ஞாயிற்றுக் கிழமைகளில் சூரியனுக்கு விளக்கேற்றுவதும், ஒரு முறை சூரியனார் கோவில் சென்று வருவதும் நலம். சூரிய தசை, ராகு புக்தியில் 2023 வரை இவரது வீட்டைவிட்டு வெளியே இருப்பது இவருக்கும், இவர் தாயாருக்கும் நன்மை பயக்கும்.
ப் என். மஞ்சுளா, திருச்சி-1.
எனக்கு 32 வயதாகிறது. இன்னும் திருமணமாக வில்லை. எப்போது நடக்கும்? சொந்தத்திலா, அந்நியத்திலா?
1-4-1989-ல் பிறந்த வர். மிதுன லக்னம், சிம்ம ராசி, பூர நட்சத் திரம். லக்னத்தில் 7-ஆம் அதிபதி குரு. அதனால் கண்டிப்பாக திருமணம் நடக்கும். குருவை சனி 7-ல் இருந்து பார்ப்பதால், திரும ணம் தாமதமாகிறது. லக்னாதிபதி புதன் உச்சம். சுக்கிரன் நீச பங்கம். சிம்ம ராசியில் சூரியன், சந்திரன், செவ்வாய், கேது கூடிநிற்கிறார்கள். கிரக யுத்தம், கிரகண தோஷம், மாங்கல்ய தோஷ ஜாதகம். ராகு தசை, ராகு புக்தி நடப்பு. அடுத்து வரும் குரு புக்தியில், 2022, ஜூன் மாதம் கல்யாணம் கூடிவரும். மணமகனைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் வகுப்பில், சற்று பிரிவு வேறுபட்டவர் அல்லது திருமணம் முடியும் சமயத்தில் திருமணம் தடைப்பட்ட வர் என தேர்ந்தெடுக்கவேண்டும். அப்போது தான் மணவாழ்வு மகிழ்ச்சியாக ஒரே திருமணத் தோடு அமையும். முசிறி அருகிலுள்ள திருப்பைஞ்ஞீலி சென்று கல்வாழைக்கு பரிகாரம் செய்யவும். குலதெய்வத்திற்கு தாலிதானம் அவசியம் செய்யவேண்டும். ஸ்ரீரங்கம் கருடனை வழிபடவும். வரும் மணமகன் சற்று குறைகளுடன் அமைவார். அதுவே ஒரு பரிகாரமாக அமையும்.