அவிட்டம்

ராசி மண்டலத்தின் 23-ஆவது நட்சத்திரம் அவிட்டம். அவிட்ட நட்சத்திரம் மகரம் மற்றும் கும்ப ராசியில் அமைந்துள்ளது. அவிட்ட நட்சத்திரத்தின் முதலிரண்டு பாதங்கள் மகர ராசியிலும், அடுத்த இரண்டு பாதங்கள் கும்ப ராசியிலும் இருக்கும்.

ss

மகர, கும்ப ராசிகளின் அதிபதி சனியாகும். அவிட்ட நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இதன் உருவம் மனித தலை, உடுக்கை, தவிட்டுக் கூட்டம், மிருதங்கம் என பலவாறாகக் கூறப்படுகிறது. இதன் மற்றொரு பெயர் தனிஷ்டா ஆகும். இதன் அர்த்தம் தனவான் என்பதாகும். இது வானில் பிரகாசமாக யானைபோலவும் காக்கைபோலவும் தோற்றமளிக்கும் என்பதால், இதன் தமிழ்ப்பெயர் காக்கை. இதற்கு காகம், கொடி, பறவை, புள், வசுநாள், சமுத்திர நட்சத்திரம் என பல பெயர்கள் உண்டு.

இந்த நட்சத்திரத்தின் இருப்பிடம் தொழிற்சாலை. இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை அஷ்டவசுக்கள். இதன் உருவம் மனித தலை என்பதால் பூ முடித்தல், முடிவாங்கல், பட்டாபிஷேகம் செய்ய, சமுத்திர யாத்திரை செய்ய உகந்த நட்சத்திரமாகும். இதன் உருவம் மிருதங்கம் உடுக்கை என்பதால் இசை பயில, இசை அரங்கேற்றம் செய்ய உகந்த நட்சத்திரமாகும். இதில் உச்சமடையும் கிரகம் செவ்வாய் என்பதால் போர் துவங்க, எதிரிகளை வெற்றி கொள்ள சிறப்பான நட்சத்திர மாகும். அடிக்கடி விபத்துக்கு உள்ளாகு பவர்கள் அவிட்ட நட்சத்திரத்தன்று மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்தால் விபத்து களில், ஆபத்து களில் இருந்தும் தப்பிக்கலாம். பேய், பிசாசு பிடித்த வர்களுக்கு பேய் ஓட்ட, ஏவல், பில்லி, சூனியங்களிலிருந்து விடுபட, அவிட்ட நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்ய நல்ல பலன் கிடைக்கும். இதன் வசிப்பிடம் தொழிற்சாலை என்பதால் புதிய தொழிற்கூடங்கள் கட்டுவதற்கும், புதிய தொழிற்சாலைகளை வாங்குவதற்கும் சிறப்பானதாகும்.

"அவிட்டம் தவிட்டுப்பானையை பொன்னாக்கும்.' உண்மையா? "அவிட்டத்தில் பிறந்தால் அயலானுக்கு கொடுக்காதே!'

"அவிட்டம் தவிட்டுப்பானையும் பொன்னாக்கும்'

என்று ஒரு ஜோதிடப் பழமொழி உள்ளது. அதாவது தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற பழமொழிக்கு இணையானது இந்த ஜோதிடப் பழமொழி. எனவே அவிட்ட நட்சத்திரக்காரர்கள் எதைத் தொட்டாலும் பொன்னாகும். அதாவது, வெற்றிகரமாக முடியும் என்பதுதான் இதற்கு அர்த்தம்.

"அவிட்டத்தில் பெண் பிறந்தால் அயலானுக்கு கொடுக்காதே'

என்பது மற்றொரு பழமொழி.

அதாவது, அவிட்ட நட்சத்திரத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் அந்தப் பெண்ணை வெளி நபருக்குக் கொடுக்காமல் சொந்தத்திலேயே திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்றொரு பழமொழி இருக்கிறது. அதாவது அவிட்டத்தில் பெண் பிறந்தால் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்பார்கள். அந்த அதிர்ஷ்டம் தங்கள் குடும் பத்திற்குப் பயன்பட வேண்டும், வேறு குடும்பத்திற்கு சென்றுவிடக்கூடாது என்பதற் காக உருவாக்கப்பட்டது. அவிட்டம் எனும் நட்சத்திரம் அத்தனை மகத்துவம்வாய்ந்த நட்சத்திரம். அதிர்ஷ்டத்தையும், லட்சுமி கடாட்சத்தையும், செல்வ வளத்தையும் அள்ளிக் கொடுக்கக்கூடிய நட்சத்திரம்.

தொழில் தொடர்பான போட்டியை சமாளிக்க, அவிட்டம் நட்சத்திரம் வரும் நாட்களில் விரதமிருந்து அருகிலுள்ள முருகன் ஆலயங்களுக்குச் சென்று வழிபட தொழில் போட்டிகள் குறையும். குறிப்பாக பழனி முருகனை தரிசித்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் கிருஷ்ணருக்கு வெண்ணெய் படைத்து வழிபட பணவிருத்தி, செல்வ விருத்தி ஏற்படும்.

சதயம்

ராசி மண்டலத்தின் 24-ஆவது நட்சத்திரம் சதயம். இது கும்ப ராசியில் அமைந்துள்ளது. கும்ப ராசியின் அதிபதி சனி ஆகும். சதய நட்சத்திரத்தின் அதிபதி ராகு. சதயம் என்பதன் சமஸ்கிருதப் பெயர் சதாபிஷா. இதன் பொருள் நூறு மருத்துவர்கள். சதய நட்சத்திரத்தின் உருவம் பூங்கொத்து, தராசு, ஒட்டகம் என பலவாறாகக் கூறப்படுகிறது.

இது வானில் செக்கு அல்லது லிங்கம்போல் பிரகாசிப்பதால் இதன் தமிழ்ப் பெயர் செக்கு. இது நூறு நட்சத்திரங்கள் சேர்ந்த கூட்டமாகும்.

இந்த நட்சத்திரத்திரம் குணப்படுத்தும் மற்றும் சுத்திகரிக்கும் சக்தியைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நட்சத்திரம் புத்துணர்ச்சி மற்றும் மறுபிறப்பு சக்தியைக் குறிக்கும் என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் சதயம் என்ற சொல்லுக்கு "நூறு மருத்துவர்கள்' என்று பொருள் கூறப்படுகிறது. இந்த நட்சத்திரம் நோய்களை குணப்படுத்தும் மற்றும் ஒரு நபரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங் களைக் கொண்டுவரும் சக்தி கொண்டது என்று நம்பப்படுகிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உள்ளுணர்வு, நேர்மறையான திறனைக் கொண்டுள்ளனர். இதில் பிறந்தவர்களுக்கு மருத்துவ ஞானம் அதிகம் உண்டு. அரசியல், அரசாங்கம் போன்றவற்றில் தனி ஆளுமைத் திறன் உண்டு. மருத்துவ நுழைவுத் தேர்வில் வெற்றியடைய விரும்புபவர்கள் இந்த நட்சத்திர நாளில் காலபைரவரை வழிபட வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இந்த நட்சத்திரம் ராகு கிரகத்தால் ஆளப்படுகிறது, ராகு மர்மமான மற்றும் வழக்கத்திற்கு மாறான இயல்புக்குப் பெயர் பெற்றது. ராகு நிழல்; தெரியாத மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்டது. வேத ஜோதிடத்தில், ராகு ஆசைகள், லட்சியங்கள் மற்றும் மாயைகளைக் குறிக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் சதய நட்சத்திரத்தில் ஏதேனும் கிரகம் நின்றால் அந்த ஜாதகத்தில் ராகு பெற்ற வலிமைக்கேற்ப நல்ல மற்றும் கெட்ட பலன்கள் ஏற்படும்.

சனி வீட்டு ராகு என்பதால் இந்த நட்சத்திரத்தில் சுய தொழில் துவங்கக்கூடாது. கர்ப்பதானம், சாந்தி முகூர்த்தம் போன்றவற்றிற்கு சிறப்பான நட்சத்திரமாகும். இதன் உருவம் ஒட்டகம் என்பதால் ஆடு, மாடு, குதிரை, கழுதை வாங்கலாம்.

தொழிலில் கடுமையான இழப்புகளைச் சந்திப்பவர்கள், அதிக நஷ்டம் உள்ளவர்கள் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்ய உயர்வுண்டு. சனியின் வீட்டில் அமைந்த ராகுவின் நட்சத்திரம் சதயம் என்பதால் சனி, ராகு சேர்க்கைக்கு அதிதேவதையான பைரவரை வழிபட சிறப்பான யோகம் வந்தடையும்.

கை, கால் மூட்டுகளில் வலியுடையவர்கள், அடிக்கடி விபத்து, கண்டங்களை சந்திப்பவர்கள் சதய நட்சத்திரம் வரும்நாளில் சிவாலயங்களுக்குச் சென்று அங்குள்ள காலபைரவருக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி தொடர்ந்து வழிபட்டுவந்தால் உடம்பிலுள்ள எல்லா வலிகளும் நீங்கும். செய்வினைக் கோளாறு, மாந்த்ரீக பாதிப்பிலிருந்து விடுபடமுடியும். இந்த நட்சத்திரம் வரும்நாளில் திருச்செங்கோட்டிலுள்ள அர்த்தநாரீஸ்வரரை வழிபட, குணப்படுத்த முடியாத நோய்கள் எல்லாம் குணமாகும். ஏவல், பில்லி, சூனிய பாதிப்புகள் விலகும்

ராஜராஜசோழனின் ஜென்ம நட்சத்திரம் சதயம். இவர் சிவ வழிபாட்டின்மூலம் வெற்றிமேல் வெற்றியை அடைந்தார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திரநாளில் சிவ வழிபாடு செய்துவர வெற்றிமேல் வெற்றி வந்துசேரும்.

தொடரும்....

செல்: 98652 20406