22. திருவோணம்
இந்த நட்சத்திரம் மகர ராசியில் 10.00 டிகிரிமுதல் 23.20 டிகிரி வரை உள்ளது. இதன் சாரநாதர் சந்திரன். எனவே இவரின் காலில் ராகு செல்லும்போது, ராகு+சந்திரன் எனும் இணைவு ஏற்படும். உங்களின் லக்னம், ராசி எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
மச்சம்: மர்ம உறுப்பில் மச்சம் இருக்கும்.
குணம்: ராகுவும், சந்திரனும் வெகு விரைவு கிரகம். ராகு போககாரகன். சந்திரன் மனோகாரகன். ராகு அசுபர். சந்திரன் சுபர். ஆக, இந்த இரு கிரக இணைவு, ஜாதகரை ஒரு இடத்தில் உட்காரவிடாது. அவர்கள் சிந்தனையின் வேகம்,அவர்களை துரிதப்படுத்தும். எனவே இவர்களால்ஒரு இடம், ஒரு வேலை என இருக்க இயலாது.ஒரே நேரத்தில் நூறு வேலைகளை கையாள்வார்கள். அத்தனையிலும் முழுமையான நேர்மையை எதிர்பார்க்க இயலாது. ஒரே நேரத்தில் நூறு வேலைகளை கையாள்வார்கள். அத்தனையிலும் முழுமையான நேர்மையை எதிர்பாரக்க இயலாது. எனினும் இவர்களின் மனோ வேகமும், செயல் வேகமும்பரபரவென, நிறைய தொழில்
செய்யவைத்து, வாழ்வின் வெற்றிக்கொடியை நாட்டிவிடுவார்கள்.
நல்ல பலன்+தொழில்: திருவோண நட்சத்திரத்தில், ராகு செல்லும்போது, சிந்தனை வேகமாகும். யோசனை பலமாகும். அதிலும் எதிர்மறை சிந்தனைகள் பெருகும். இதன் பயனாக, எவரும் செய்ய தயங்கும் செயலை, தொழிலை தொடங்கி நடத்துவர். உதாரணமாக, ஒருஸ்டேஷனரி ஷாப் நடத்திக்கொண்டிருப்பவர், அட, ஒரு கூரியர் கிளை ஆரம்பிக்கலாம் என தொடங்கிடுவார். அட நாமே புதுசா ஒரு கூரியர் சேவை நடத்தலாம் என்பார். அந்த கூரியர் சேவைக்கு ஒரு வேன் வாங்குவார். அந்த வேனை ரயிலில் ஏற்றி அனுப்புவார். அந்த ரயிலில் ஒரு பகுதியை ஒப்பந்தம் செய்வார். இதெல்லாம் போதாது என ஒரு விமானம் வாங்குவார். இதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் என சிரிப்பீர்கள். ஆனால் இந்த ராகுபகவான், சந்திரனின் காலில்ஏறி பயணிக்கும்போது, எதிர்மறை சிந்தனைகளை வளர்த்து, அதனை வேகமாக செயல்படச் செய்வார். இவ்விரு கிரகமும், முற்றிலும்வேறுவிதமான செயல்களை செய்யசெய்வதில் ஜாதகரை ஓட வைத்துக் கொண்டே இருப்பர். இதற்கு சாரநாதர் சந்திரன் சுபத்தன்மையாக இருப்பதுஅவசியம்.
கெட்ட பலன்: ராகுவின் சாரநாதர் சந்திரன் நீசம் அல்லது அசுபத் தன்மை யோடு இருப்பின், ஜாதகர் எப்போது மது போதையில் தள்ளாடுவார். மனதில் குழப்பமான எண்ணங்கள் அதிகரித்து மிக கோழையாக இருப்பார். சிலர் பைத்தியமாகிவிடுவர். இவர்களின் வேலை இருள் சூழ்ந்த இடங்களில் அமையும். பிறரிடம் கலந்து பேச மிக தயங்குவார். திருட்டுத்தனமான மது விற்பனையில் ஈடுபடுவர். போதை வஸ்துக்களின் வெளிநாட்டு கடத்தல் இவர்களுக்கு ஆகப் ப்ரியமான ஒன்றாகும். இவரது தாயாரின் வெறுப்புக்குள்ளாவார். எதிர்மறை சிந்தனை செயல்களான, பில்லி, சூன்யம்,ஏவல் போன்றவற்றில் வெகு ஈடுபாடு கொள்வர். மனம் பேதலிக்கும். ராகு பகவான், அசுப சந்திரன் காலில் சென்றால்,கண்டிப்பாக ஜாதகரை பைத்தியமாக மாற்றிவிடுவார். உங்கள் வீட்டில், இவ்வமைப்பு, குழந்தைகளுக்கு இருந்தால், அவர்களை செஸ் போன்ற புத்திபூர்வ விளையாட்டில் கவனத்தை திசை திருப்பிவிடுங்கள்.
நோய்: இரத்த சிவப்பணுக்கள் குறைதல், நுரையீரலில் நீர் சம்பந்த வியாதி, மனநோய், ஈசினோபீலியா போன்ற வியாதிகள் வரக்கூடும்.
நாடி ஜோதிடம்: ராகு வேக பரபரப்பையும், சந்திரன் தாயையும் குறிப்பார் ஒன்று இவர் தாயார் வெகு சுறுசுறுப்பாக மாற்றுச் சிந்தனையுடன் இருப்பர். அல்லதுஜாதகர் மனக்குழப்பம், மனபாரம், மன அழுத்தம் இவற்றால், மன ஊன சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
பரிகாரம்: திண்டுக்கல் ராஜகாளியம்மனை வணங்கலாம். அருகிலுள்ள துர்க்கையை அபிஷேகப் பொருட்களுடன் வணங்கலாம். மனபிறழ்வு உள்ள நபர்களின் குடும்ப தேவையறிந்து உதவவும்.
23. அவிட்டம்
இது மகர ராசியில் 23.20 டிகிரிமுதல் 30.00 டிகிரிவரையும். கும்ப ராசியில் 0.00 டிகிரிமுதல் 6.40 டிகிரிவரையும் உள்ளது. இதன் சாரநாதர் செவ்வாய் ஆவார். எனில்இங்கு ராகு+செவ்வாய் என்ற கணக்கில் வரும். நீங்கள் எந்த லக்னம், ராசியில் பிறந்திருந்தாலும், ராகு, அவிட்ட நட்சத்திரத்தில் நின்ற பலன்.
மச்சம்: ஆசனவாயில் மச்சம் இருக்கும்.
குணம்: ராகு ஒரு வஞ்சகமான கிரகம். செவ்வாய் ஒரு பழிவாங்கும், முன் கோப கொடூர கிரகம். இவர்களின் கிரக இணைவு, ஜாதகரை ஒரு முட்டாள் தனமான போக்கிரி ஆக்கிவிடும். இதனால் இவர்களுக்கு முன்யோசனை, பகுத்தறிதல், எதையும் சீர் தூக்கி பார்த்து ஆராய்தல் என ஒரு குணமும் இருக்காது. எடுத்தோம், கவிழ்தோம், வெட்டினோம், கொன்றோம் என ஒரு நொடிபொழுதில், வேண்டாத முடிவை எடுத்துவிடுவர். ஒரு முரட்டுத்தனமான, பழிவாங்கும் கிரக சேர்க்கை, கோபம் வந்தால், மனதிற்குள் வைத்து மருகாமல், அந்த நொடியே, செயலில் காட்டிவிடுவர். இந்த ஆவேச குணம் இவர்களின் அழிவிற்கு காரணமாகிவிடும். வாழ்வின் ஏதோ கட்டத்தில், இவர்கள் ஓரிடத்தில் மறைந்து அல்லது அடைபட்டு வாழும் நிலை ஏற்படும்.
நல்ல குணம்+தொழில்: ராகு வாங்கியஅவிட்ட சாரநாதர் செவ்வாய், சுபத்தன்மை பெற்றிருந்தால், ஜாதகர் சீருடை பணியில், சுட்டு பிடிக்கும் பிரசித்து பெறுவார். தீவிரவாதிக்கும் இந்த ஆபிஸர் வந்தால், நிச்சயமாக சுட்டுவிடுவார் என கிலி பிடித்து ஓடுவர். இவர் அறுவை சிகிச்சை மருத்துவராக இருப்பின், எவ்வித சிக்கலான அறுவை சிகிச்சையையும் செவ்வனே செய்துவிடுவார். இராணுவத்தில், அதிரடி அதிகாரியாக அமைவார். சுரங்கப்பணியில் சூரராக இருப்பார். விளையாட்டுத் துறையில் பரபரப்பான ஆட்ட நாயகனாக ஆடுவார். கெமிக்கல், மருந்து ஆராய்ச்சியில் புதுமையைக் கண்டுபிடிப்பார். பூமி சார்ந்த தாது பொருட்களில் புகுந்து விளையாடுவார். இவர்களின் வீரம் போற்றத்தக்கதாக இருக்கும். ரத்த மாற்று சிகிச்சையில் புதுமை செய்வார். இதேபோல் விஷம் சம்பந்த சிகிச்சையிலும் நிறைய புதுமை செய்வர்.
கெட்ட பலன்: ராகு நின்ற, அவிட்ட சாரநாதர் செவ்வாய், நீசம் அல்லது அசுபத்தன்மையோடு அமைந்திருந்தால், ஜாதகரைப் போல் கெட்டவன் யாரும் இருக்கமுடியாது. பெரிய தீவிரவாதியாக இருப்பார். காவல்துறை எப்போதும் இவரை தேடிக்கொண்டிருக்கும். வெடிகுண்டுகள் செய்வதில் நிபுணர். நிறைய நாடுகளில் திருமணம்செய்து, ஆங்காங்கே குடும்பம் இருக்கும். வெளிநாட்டு போதை பொருள் கடத்தும் செயலில் ஈடுபடுவார். உள்நாட்டில் கொலை செய்து, போரடித்து, வெளிநாட்டில் கொலை செய்வார். தாய்நாட்டு இராணுவம், காவல்துறைக்கு எதிரான சதி வேலைகள் செய்வார். போலி அறுவை சிகிச்சை மருத்துவர் ஆகிவிடுவார். துப்பாக்கி போன்ற ஆயுதங்களை விற்பனை செய்வார். சிலர் பெண்களை வைத்து வேண்டாத தொழில்செய்வர். இந்தமாதிரி அமைப்பு, உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு இருப்பின். ஆரம்பத்தில் இருந்தே விளையாட்டு, உடற்பயிற்சி, யோகா, தியானம் என இவற்றில் மனதையும், புக்தியையும் திருப்பிவிடுங்கள்.
நோய்: எலும்பு மூட்டுகளில் வலி, நரம்பு சுருட்டிக் கொள்ளுதல், வெகு சிலருக்கு, உடம்பில் சில பாகத்தை வெட்டி நீக்கும் நிலை உண்டாகும்.
நாடி ஜோதிடம்: ராகுவை பாட்டனார்என்றும், செவ்வாயை சகோதரர் என்றும் குறிப்பிடுகிறது. ஒருவிதத்தில் இருவருக்கும் ஒத்துவராது. அல்லது இருவரும் சட்டபுறம்பான செயல்கள் செய்யக்கூடும்.
பரிகாரம்: கரூர் அருகே கொடுமூடிநாதர், பன்மொழியம்மையை வணங்கவும். அருகிலுள்ள காளியை நிறைய குங்குமம் கொண்டு வணங்கவும். மேலும், உக்ர துர்க்கைகளான, பிரத்யங்கார, வராஹி போன்ற காளிகளை வணங்குவது மிகச்சிறப்பு. செவ்வாய்க்கிழமைதோறும் விரதமிருந்து வணங்கவும்.
24. சதயம்
இது கும்ப ராசியில் 6.40 டிகிரிமுதல் 20.00 டிகிரிவரை உள்ளது. இதன் சாரநாதர் ராகு ஆவார். எனில் இது ராகு+ராகு என்றாகிறது. நீங்கள் எந்த லக்னம் எந்த ராசியில் பிறந்திருந்தாலும், ராகுபகவான் சதய நட்சத்திரத்தில் செல்லும் பலன்.
மச்சம்: வலது தொடையில் மச்சம்அமைந்திருக்கும்.
குணம்: ராகுவின் குணம் சூது, வாது கபட, வஞ்சகம் ஆகும். இதே ராகுவின் இன்னொரு குணம், மாயை, ஏவல், பில்லி, சூன்யம், லஞ்சம், களவு போன்றவைஆகும். குற்றங்களின் காரகரான ராகு, கொலையின் காரகரான இன்னொரு ராகுவின் காலில் செல்லும்போது, என்னத்தைச் சொல்ல, ஏதென்று பகர! மேலும், இந்த இணைவு இருப்பது சனியின் வீடான கும்ப ராசியில். எனவே இவர்களைப்பற்றி யாரும் எதுவும் அறிந்துகொள்ள இயலாது. பெரிய கொலையை செய்துவிட்டு, நல்ல பிரியாணியை ருசித்து சாப்பிடுவர். மிக சுயநலம் கொண்டவர்கள். வெகுகர்வம் உடையவர்கள். இவர்களிடம் பழகுவது, ஒரு நல்ல பாம்புடன் பழகுவதற்கு ஒப்பாகும். மொத்தத்தில் இவர்கள் சைலண்ட் கில்லர்கள் எனலாம்; ஆபத்தானவர்கள்.
ராகு சுபத்தன்மை பெறின்: நல்ல குணம்+தொழில்: ராகுபகவான், சதய நட்சத்திரத்தில், தனது சுய பாதத்தில் செல்லும்போது, இவர்கள் நம்பமுடியாத, யாரும் எளிதில் செய்யமுடியாத செயல்களை, வெகு முயன்று செய்து, வெற்றிபெறுவர். அணுசக்தி துறையில் மிக புதுமைகள் செய்வர். கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ் போன்ற துறைகளில் சிக்கலான பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுபிடிப்பர். பங்கு பத்திரம் சம்பந்தமான நிறை குறைகளை யூகித்து உணர்வர். எலக்ட்ரானிக்ஸ், சம்பந்த புதுமைகளை உண்டாக்குவார். தொழுநோய் போன்ற விரியமான நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பார். சந்திரன், செவ்வாய், சூரியனுக்கு ராக்கெட் அனுப்பி, அது சம்பந்தமான புதுமை செய்திகளை, உலகுக்கு அறிவிப்பார். இவர்களில் பெரும்பாலோர் மருந்து தயாரிக்கும் கம்பெனிகளில் தலைமை கெமிஸ்ட் ஆக இருப்பர். இவர்கள் கொஞ்சமும் அஞ்சாமல், உலகம் முழுவதும் சுற்றி, பயணம் செய்வர். எனவே, ராகுபகவான், சதயம் எனும் ராகு சாரத்தில் நிற்கும்போது, யாரும் யோசிக்கக்கூட தயங்கும் செயல்களை, அசால்டாக செய்துமுடித்து, வியக்கச் செய்வர். மிக மாறுபாடான ஆட்கள்.
ராகு அசுப சம்பந்தம் பெறின்: கெட்ட பலன்: ராகுபகவான், சதய நட்சத்திரத்தில் நின்று, சுய சாரம் பெறும்போது, அங்கு இரு பாம்புகள் இணைவு உண்டாகும். எனவே இவர்கள் மிகவும் அச்சத்துக்குரியவர்கள். திகில் கிளம்பும் மனிதர்கள். அரசியலுக்கு ஏற்ற ஆட்கள். தங்கள் சுயநலத்துக்காக எதையும், யாரையும் அழிக்கத் தயங்காதவர்கள். சுயநலமும், பேராசையும் உடையவர்கள். இந்த பேராசை கெட்ட எண்ணம் உண்டாக்கும். இந்த கெட்ட எண்ணம், அடுத்தவர்கள்மீது பொறாமை கொள்ளும். இந்த பொறாமை, அடுத்தவர்களை அழிப்பதில் கொல்வதில் மகிழ்ச்சியடையும். அடுத்தவர்கள் மீது வேண்டாத செயல்களைச் செய்யசெய்யும். சிலர் துஷ்ட சக்திகளை கை கொள்வர். இவர்கள் எந்தத் தொழில் செய்தாலும், அதில் வஞ்சகம், கபடம், ஏமாற்று, திருட்டு, கடத்தல், குசும்பு பேசி சண்டையிழுப்பது என இவர்களை பற்றிய லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். போதை வஸ்த்துக்களை கடத்துவதில் மிகக் கேடியாக இருப்பர். எப்போதும் காவல்துறை தேடும் நபராகவே இருப்பர். இந்த கிரக அமைப்பு, மிகவும் வெறுத்து, ஒதுங்கும் சேர்க்கை ஆகும்.
நோய்: எலும்புகளில் சீழ், கணைக்கால் வீக்கம், கால்வலி, சிலருக்கு கால்களை எடுக்கும் நிலை மற்றும் வாதநோய்.
நாடி ஜோதிடம்: ராகுவை பாட்டனார்என்று நாடி ஜோதிடம் பகர்கிறது. ஆக, இந்த ஜாதகரின் பாட்டனார் பரம்பரையே குற்ற பரம்பரையாக இருக்கும் நிலைஅமையும் அல்லது ஜாதகர் வஞ்சகராக இருக்க வாய்ப்புண்டு.
பரிகாரம்: திருநாகேஸ்வரம் சென்று வழிபடவும். அமாவாசையன்று, பிரத்தியங்கரா வழிபாட்டில், மிளகாய் வற்றல் சேர்த்து பூஜிக்கவும். காளி தெய்வத்தை வணங்கவும். இவ்விதம் உக்ர காளிகளை வணங்கினால், இவரை சுற்றி இருப்பவர்கள் கொஞ்சம் ஷேமமாக இருக்கலாம்.
(அடுத்த இதழில் பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி)
முனைவர் ஆர். மகாலட்சுமி
செல்: 94449 61845