உலக நாடுகள் அனைத்திலும் வாரத்திற்கு ஏழு நாட்கள் என்னும் பொதுமுறையே பின்பற்றப் பட்டு வருகிறது. இவை ஏழு கிரகங்களின் அடிப்படையில் அமைகின்றன.
கிரகங்கள்மூலம் மனிதனுக்கு ஏற்படும் தாக்கத்தை உணர்த்தும் பல்வேறு சாஸ்திர வழிமுறைகளில் கைரேகை சாஸ்திரமும் ஒன்று. மனித உள்ளங்கையில் அமைந்துள்ள கிரகமேடுகள்மூலம் ஒருவரது வாழ்வில் ஏற்படும் உயர்வு- தாழ்வுகள் பற்றி அறிந்துகொள்ளமுடியும்.
நமது கை அமைப்பில் விரல்களும் உள்ளங்கையும் சந்திக்கும் பகுதியே கிரகமேடுகளாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இந்தப்பகுதி சற்று உயர்ந்து தென்பட்டால் கிரகமேடு நன்கு அமைந்துள்ளது என்றும்; சமமாக இருந்தால் கிரகமேடு சரியில்லை என்றும் புரிந்துகொள்ளலாம்.
சுட்டுவிரலின் அடிப்பகுதி- குரு மேடு.
நடுவிரலின் அடிப்பகுதி- சனி மேடு.
மோதிரவிரலின் அடிப்பகுதி- சூரிய மேடு.
சுண்டுவிரலின் அடிப்பகுதி- புதன் மேடு.
கட்டைவிரலின் அடிப்பகுதி- சுக்கிர மேடு.
சுண்டுவிரலின் கீழே, மணிக்கட்டுக்கு மேற்பகுதி- சந்திர மேடு.
உள்ளங்கை மேற்பகுதி (குறுக்குப் பகுதி)- செவ்வாய் மேடு.
இனி, கிரகமேடுகளால் மனிதர்களுக்கு அமையப்பெறும் பொதுவான குணநலன்களையும், வாழ்க்கை வாய்ப்புகளையும் காணலாம்.
குரு மேடு
சுட்டுவிரலின் கீழமையும் குரு மேடு தெள்ளத்தெளிவாக இருப்பதே சிறந்தது.
பண்புகள்: இளம்வயது முதலே வாழ்க்கைப் பாதையில் முக்கியக் குறிக்கோளை அமைத்துக்கொள்ளும் மனப்பாங்கு; அந்த குறிக்கோளை அடையும் விடாமுயற்சி; எதையும் சாதித்துவிட முடியுமென்ற தன்னம் பிக்கை, மனோதிடம்; எதிலும் பொறுப்புடன் செயல்படுதல்; கண்ணியம், கட்டுப்பாடு போன்றவை அமையும்.
வாய்ப்புகள்: ஐ.ஏ.எஸ் அதிகாரி, சட்டநிபுணர், நீதி, கல்வித்துறை உயர்பதவி; பிரபல பேச்சாளர், அரசியல் பிரமுகர், அரசுப்பதவி, மதத்தலைவர்.
சனி மேடு
இது அதிக அளவு பெரிதாக இருத்தல் கூடாது. அளவாக இருப்பதே நன்மை தரும்.
பண்புகள்: எதையும் கூர்ந்துநோக்குதல்; எதிலும் நிதானம், பொறுமை; சிந்தித்துச் செயல்படுதல்; தீர விசாரித்து முடிவெடுத்தல்; கடின உடலுழைப்பு; தனிமையை அதிகம் விரும்புதல் போன்றவை அமையும்.
சூரிய மேடு
சூரிய மேடு தெள்ளத் தெளிவாக, நன்றாக இருத்தல் சிறப்பு.
பண்புகள்: எதிலும் தலைமை தாங்கும் தகுதி; உயர்ந்த லட்சியம்; கண்ணியம், நியாயம், நேர்மை, இரக்கம், தயாள குணம்; எதையும் நேரடியாகப் பேசுதல்.
வாய்ப்புகள்: அரசியல் தலைமைப் பொறுப்பு, அரசாங்கத் தலைமைப் பொறுப்பு; மருத்துவர், தொழிலதிபர், தங்க வியாபாரம், தர்மவான், கொடையாளி.
புதன் மேடு
இந்த மேடு தெளிவாக இருத்தல் அவசியம்.
பண்புகள்: படிப்பில், பேச்சில் திறமை, வல்லமை; எதிலும் உடனடியாக முடிவெடுக்கும் தன்மை; லாபம்பெற திட்டமிடுதல்; மாறுதல்களை விரும்பும் தன்மை; தோல்விகளைக் கண்டு துவளாமை.
வாய்ப்புகள்: வங்கிப் பணி, தொழில் முனைவோர், ஆசிரியப்பணி, வியாபாரி, பத்திரிகை, விளம்பரத்துறை.
சுக்கிர மேடு
இது நன்கு தெளிவாக இருத்தல் வேண்டும்.
பண்புகள்: அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை; கலைகளில் அதிக நாட்டம்; அழகு, ஆபரணம், கவர்ச்சிகளில் ஈடுபாடு; உலக சுகங்களில் அதீத விருப்பம்; சட்டம்- ஒழுங்கை மதித்தல்; அமைதியைப் பெரிதும் விரும்புதல்; நண்பர்களுடன் சேர்தல்; அதிக ஞாபகத் திறன்.
வாய்ப்புகள்: திரைப்படம், தொலைக் காட்சிக் கலைஞர்; மேடைப் பாடகர்; நடனக் கலைஞர்; அழகு, ஆபரண வியாபாரி; ஒப்பனைக் கலைஞர்; திருமண ஒப்பந்ததாரர்.
சந்திர மேடு
பண்புகள்: கற்பனை வளம் அதிகம்; புதிது புதிதாக உருவாக்குவதில் விருப்பம்; கலைகளில் ஆர்வம்; மொழிகளில் தேர்ச்சி; பயணங்களில் அதிக விருப்பம்.
வாய்ப்புகள்: எழுத்தாளர், பாடலாசிரியர், ஓவியக் கலைஞர், போக்குவரத்துத்துறை, விமானி, மாலுமி, ஏற்றுமதி- இறக்குமதித் தொழில், தடயவியல் நிபுணர் போன்றவை.
செவ்வாய் மேடு
பண்புகள்: சவால்களை விரும்பி எதிர்கொள்ளுதல்; வீரதீர செயல்களில் ஈடுபாடு; சரீர பலம்; மனத்துணிவு; கண்டிப்பும் அதிகாரமும் அமைதல்;
எதற்கும் அஞ்சாமை; அன்புக்குப் பணிதல்- தீங்குக்கு பதிலடி; சட்டதிட்டங்களைப் பெரிதும் மதித்தல்.
வாய்ப்புகள்: இராணுவ, காவல்துறைப் பணிகள்; அறுவை சிகிச்சை நிபுணர்; மலையேற்றம், கடல் நீச்சல் போன்றவற்றில் பங்கேற்றல்; விளையாட்டு வீரர்; இயந்திரத் தொழில் ஈடுபாடு; தொலைதொடர்புப் பணிகள்.
அவரவர் உள்ளங்கைகளிலுள்ள கிரகமேடுகள் தெள்ளத் தெளிவாக உள்ளனவா என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கேற்ற துறைகளில் கவனம் செலுத்தினால் வெற்றி வாய்ப்புகள் உருவாகும். மற்ற ரேகை அமைப்புகளையும் கொண்டு இவற்றை உறுதிசெய்து கொள்ளலாம்.
செல்: 74485 89113