● எஸ். முரளி, தேனாம்பேட்டை.
என் சொத்து ஒரு மோசக்காரனிடம் சிக்கியுள்ளது. அது எனக்கு திரும்பக் கிடைக்க வழிசொல்லுங்கள்.
பூச நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னம். செவ்வாய் தசை விரயாதிபதி தசை. பொன்னமராவதி அருகில் செவலூர் என்னும் ஊரில் பூமிநாதசுவாமிக் கோவில் உள்ளது; வாஸ்துக் கோவில். காலை 11.00 மணிக்கு அபிஷேகம் நடக்கும். பகல் 1.00 மணிக்கு கோவில் நடைசாற்றிவிடுவர். அங்குசென்று, இழந்த சொத்து திரும்பக்கிடைக்கப் பிரார்த்தனை, பூஜைசெய்யுங்கள். மேலும், கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று, 11 வெள்ளிக்கிழமை கடன்நிவர்த்தி யாகத்துக்குப் பணம் செலுத்துங்கள். உங்கள் சொத்து திரும்பக் கிடைக்கும்.கடன் பிரச்சினையும் குறையும்.
● அ. மதியழகன், நெல்லை.
எனக்குத் திருமணமாகி இரண்டரை வருடங்களாகின்றன. கடவுள் அருளால் ஒரு பெண் குழந்தை பிறந்து ஒன்பது மாதமாகிறது. நான் மரவேலை செய்கிறேன். தற்போது வேலை, வருமானம் மந்தமாக உள்ளது. எதிர்கால முன்னேற் றத்துக்கு வழிகாட்டுங்கள்.
மீன லக்னம், திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி. சிவன் கோவிலில் காலபைரவர் சந்நிதியில் 19 மிளகை ஒரு சிவப்புத் துணியில் பொட்டலம் கட்டி, மண் விளக்கில் நெய் நிரப்பி மிளகுப் பொட்டலத்தை நனைத்து தீபமேற்றி வழிபடவேண்டும். ஆடி 18-க்குப்பிறகு தொழில் முன்னேற்றம், சம்பாத்தியப் பெருக்கம் எதிர்பார்க்கலாம். அத்துடன் புதன்கிழமைதோறும் லட்சுமி நாராயணப் பெருமாள் சந்நிதியில் நெய்தீபமேற்றி வழிபட்டுவாருங்கள். (17 புதன்கிழமை). முதல் வாரம் துளசி மாலை சாற்றி வழிபடவும்.
● இரா. அமுதன், மன்னார்குடி.
என் மகன் கணேஷ்- மருமகள் ஆர்த்தி இருவருக்கும் குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும்? மகன் வெளிநாடு சென்று வேலை பார்ப்பாரா? அவர்களுக்குச் சொந்த வீடு யோகமுண்டா?
கணேஷ் ரிஷப லக்னம், கடக ராசி, பூச நட்சத்திரம். ரிஷப லக்னத்துக்கு 5-ல் கேது. ராசிக்கு 5-ல் சனி. குரு 12-ல் மறைவு. புத்திர தோஷமுள்ளது. மருமகள் கீர்த்தி திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கன்னி லக்னம். லக்னத்துக்கு 9-ல் செவ்வாய், குரு. ராசிக்கு 9-ல் ராகு. அதற்கு சனி பார்வை. அவர் ஜாதகத்திலும் தோஷமுண்டு. நாகதோஷ நிவர்த்திக்கும், புத்திர பாக்கியத்துக்கும் சந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும், சந்தான பரமேஸ்வர ஹோமமும், வாஞ்சா கல்பகணபதி புத்திரப் பிராப்தி ஹோமமும் செய்து தம்பதிகள் இருவருக்கும் கலச அபிஷேகம் செய்யவேண்டும். அத்துடன் ஆரோக்கிய விருத்திக்கு தன்வந்திரி ஹோமமும், ஆயுள் விருத்திக்கு ஆயுஷ் ஹோமமும், நவகிரக ஹோமமும் செய்யவேண்டும். சங்கல்பத்தில் வெளிநாட்டு வேலை யோகத்துக்கும் சொல்லவும்.
● கே. கமலா, கோவை.
எனது மகள் கார்த்திகா எம்.ஈ., முடித்து இரண்டு ஆண்டுகளாகின்றன. அரசு வேலைக்கு முயற்சிக்கிறாள். எப்போது கிடைக்கும்?
ரிஷப லக்னம், ரிஷப ராசி. முயற்சியை விடவேண்டாம். குரூப்-1 பரீட்சை யெல்லாம் தொடர்ந்து எழுதட்டும். துறையூர் ரோட்டில் திருவெள்ளறையில் சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. (வடஜம்புகேஸ்வரர் மலைக்கோவில்). அங்கு 16 வியாழக்கிழமை சென்று 16 முறை வலம்வந்து பிரார்த் தித்துக்கொள்ளவும்.
● டி.கண்ணன், நாகப்பட்டினம்.
நான் பணிபுரியும் தனியார் நிறு வனத்தில் ஆள் குறைப்பு செய்வதற்காக என்னை வேறு மாநிலம் மாற்றப் போவதாகச் சொல்லி சம்பளம் தராமலும், மாற்று வேலைக்கு அனுப்பாமலும் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து பணிபுரிவதா? வேறு வேலைக்குப் போவதா? சொந்தத் தொழில் செய்வதா? சிக்கன் கடை வைக்கலாமா? பள்ளி வாகனம் ஓட்டுவதா? தொழிலாளர் நலக் கோர்ட்டில், பணிபுரியும் நிறுவனத் தின்மீது வழக்குத் தொடர்வதா?
ரிஷப லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிட நட்சத்திரம். குருப்பெயர்ச்சிக்குப்பிறகு உங்களுக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். தொழிலாளர் நல கோர்ட்டில் நிறுவனத்தின்மீது வழக்குத் தொடரலாம். இருந்தாலும் ஏழை சொல் அம்பலம் ஏறுமா என்பது கேள்விக்குறி. நிர்வாகத்தினர் அதிகாரி களையே விலைக்கு வாங்கிவிடுவார்களே! பல வழக்குகளில் சூட்கேஸ் நியாயம்தானே ஜெயிக்கிறது? சொந்தத் தொழில் செய்து நஷ்டமடைந்து கடாளியாவதைக் காட்டிலும், பள்ளி வாகனம் ஓட்டும் வேலைக்குப்போய் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு சிக்கனமாக வாழலாம்.
● சி. ராமசாமி, திருமங்கலம்.
வாழ்க்கை என்னும் ஓட்டத்தில், இயற்கையின் சுழற்சியில் எண்ணில்லா ஏற்ற- இறக்கங்களுடன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டேன். எதிர்காலத் தொழில் சிறப்படைய வழியையும், அடுத்துவரும் சுக்கிர தசை எவ்வாறு அமையும் என்பதையும் தங்களின் வேத வாக்கால் அறிய விரும்புகிறேன். மிதுனத்தில் ராகு இருந்தால் பிறரு டைய மனஓட்டங்களை அறியமுடியுமா?
பிறருடைய மன ஓட்டங்களை அறியும் வல்லமை ஞானிகளுக்குத்தான் உண்டு. ஆனால், கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர். இயற்கையின் சுழற்சியில் இயற்கையோடு இணைந்து பயணிப்பதுதான் நமது கடமை. மீன லக்னத்துக்கு 3, 8-க்குடைய சுக்கிர தசை எப்போதும் நன்மை செய்யாது. உங்களின் கடமை என்ன என்பதைத் தெளிந்து, தெரிந்து செயல்படுவதே உங்கள் வேலை.
● பி. அமுதா, பூங்கி.
நான் எங்கள் குடும்பத்தில் மூன்றாவது கடைசிப் பெண். சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் எனக்குப் பெற்றோர் ஜாதகம் எழுதிவைக்கவில்லை. 15-6-1990-ல் பிறந்தேன் என்பது மட்டும் தெரிகிறது. என்னுடையருது ஜாதகத்தை தங்கள் திருப்பார்வைக்கு அனுப்பியுள்ளேன். இதைவைத்து என் திருமண அமைப்பைக் கணிக்கமுடியுமா?
பிறந்த ஜாதகம்மாதிரி ருது ஜாதகம் துல்லியமாக அமையாது. இடையில் வரும் ருது நாற்பது வயதையொட்டி மாறிவிடும். எனினும், உங்கள் ருது ஜாதகப்படி நாகதோஷம் இருப்பதால் 12 ஆண்டுகளுக்குப்பிறகு திருமணம் கூடும்.
● எஸ். எஸ் எஸ். தமிழ்வாணன், செட்டியூர்.
என் சொத்தை ஒருவர் மோசடிசெய்து அபகரித்துவிட்டார். வழக்குத் தொடர்ந்து என் பக்கம் சாதகமாக தீர்ப்பு வந்தும், சொத்தைமீட்டுக் கடனை அடைக்க முடியவில்லை. எனக்கு நல்லது நடக்க வழிசொல்லுங்கள்.
பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமியிடம் முறையிட்டு பூஜை செய்துவாருங்கள். அது வாஸ்துக் கோவில். சொத்து கைக்கு வந்து கடனை எல்லாம் அடைத்ததும், மறுபடி அங்கு சென்று ஹோமம்செய்து சங்காபிஷேகப் பூஜைசெய்யவும்.