ஆர்ப்பரிக்கும் கடல் அலையைக் கண்டால் ஆரவாரம் கொள்ளாத மனம் உண்டா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
அறிவியல்படி இந்த உலகம் 71 சதவிகிதம் நீரால் அமைந்தது என்பதாலா என்று கேட்கக்கூடாது. ஆனால் பாருங்கள். கடலைப் பார்த்து அதன் அலைகளில் கால் நனைத்து துள்ளி விளையாடும் காதலர்கள் முதல், துணை இழந்து தனிமையில் இருப்பவர்கள் வரையில், துணையாக வந்து ஆறுதல் சொல்வது இந்த கடல்தான்.
அலைகளைப் பார்த்து மகிழ்ச்சியடையும் நம்மில் எத்தனை பேர் கடலுக்குள் நடந்துபோகப் பிரியபடுவார்கள். என்னங்க ஐயா? கடலுக்குள் நடந்துபோக முடியுமா? இதென்ன அதிசயம்.. ஒருவேளை அப்படி நடந்து போயிட்டா திரும்பி வரமுடியுமா? இதென்ன விபரீத விளையாட்டு என்பது போல உங்களுக்கு யோசிக்கத் தோன்றலாம். அதை சொல்வதற்குதான் இந்த வார பதிவு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/temples_1.jpg)
கடல் நடுவே ஒரு கோவில். அந்த கோவிலை தினமும் கடல் அலை மூடி விடுகிறது என்றாலும், மக்கள் தரிசனத் திற்காக, தினமும் கடல் உள்வாங்கி, சுவாமி தரிசனத்திற்காக காத்திருக்கும் அத்தனை மக்களுக்கும் வழிவிடுகிறது. அட இது என்ன அதிசயம் என வியக்க வேண்டாம். இது என்றோ ஒரு நாள் நடக்கும் அதிசயம் அல்ல. தினம் தினம் நடக்கும் அதிசயம் தான்.
தினமும் கடல் உள்வாங்கிச் செல்கிறது. உள்வாங்கிய கடல் மக்கள் சென்று வருவதற்கு ஏற்ப வைக்கப்பட்ட வழியே மக்கள் பயமின்றிச் சென்று இறைவனை வழிபட்டுத் திரும்புகின்றனர். அந்தி மாலையானதும் உள்வாங்கிய கடல் தானே வந்து மூடிக்கொள்கிறது. இங்கே கோவில் இருந்த இடமே தெரிவதில்லை. ஒரு கொடிக்கம்பம் மட்டும்தான் தெரிகிறது. ஏற்கெனவே வந்து பழக்கமானவர்களுக்கு மட்டும்தான் இந்த இடத்தில் சுவாமி இருக்கிறது எனத் தெரியும் மற்றவர்களுக்கு கொடிக்கம்பம் மட்டும்தான் தெரியும்.
இது ஒரு சிவன் கோவில். இங்கே சிவலிங்கம் நந்தியுடன் இருக்கும். ஒரு லிங்கத் திருமேனி அல்ல; ஐந்து லிங்கத் திருமேனி இருக்கிறது. ஒரு பெரிய பாறையின் நடுவே நடந்து செல்லக்கூடிய வெவ்வேறு ஐந்து இடங்களில் இந்த லிங்கத் திருமேனிகள் இருக்கிறது.
நாமே பூஜை, வழிபாடு செய்யலாம் என்றாலும், அங்கே பூஜை செய்வதற்கும் ஏற்பாடு வசதிகள் உண்டு. கரையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் கடல்நடுவே நடந்துதான் செல்லவேண்டும். உள்வாங்கிய கடல் தண்ணீர் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயமோ அச்சமோ தேவையில்லை. கோவில் என்ற அமைப்பில் கோபுரமோ, நுழைவாயிலோ இருக்காது. ஒரு பாறையில் ஐந்து சிவலிங்கங்கள் வேறு வேறு திசையில் இருக்கும்; அவ்வளவு தான்.
பாறையின்மீது இருக்கும் லிங்கத்தை கோவில் என்று சொல்வதா என்று கேட்காமல், நம்பிக்கையுடன் கடல் நடுவே இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று வரும் அனுபவம் வித்தியாசமானதாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட சிவலிங்கம் என்று அந்த ஊர்மக்கள் நம்பு கிறார்கள். அதற்கான அடையாளமோ, கல்வெட்டோ எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்றாலும் அவர்கள் நம்பிக்கையை நாமும் ஏற்றுக்கொள்வதுதான் முதிர்ச்சியின் முதல்படி என்பதைப் புரிந்துகொள்வோம்.
ஒருசமயம் இந்த கோவிலுக்கு சென்றபோது, அலை அதிகம் இல்லாத இந்த கடலில் கால் வைத்தபடி, எப்படி இந்த கடல் அலை உள்வாங்கி மீண்டும் கோவிலை மூட முடியும் என்ற ஆய்வு பார்வையில் சிந்தித்துகொண்டிருந்த சிலமணித் துளிகளில் கடல் அலை இடுப்புவரை வேகமாக வந்துவிட்டது. அடடா தவறாக சிந்தித்து விட்டோமோ என்றெண்ணி வருந்திய சிலமணித் துளிகளில் தண்ணீர் தானே வடிந்துவிட்டது. இந்த கடல் பேசும்பேசுவதைக் கேட்கும் என்பதை அப்போது, புரிந்துகொள்ளமுடிந்தது.
சரி; இந்த கோவிலுக்கு எப்படிச் செல்வது என கேட்கும் உங்கள் ஆர்வம் புரிகிறது. சென்னையிலிருந்து அகமதாபாத் வரை சுமார் 30 மணி நேரம் பயணம் செய்து, அங்கிருந்து, பாவ்நகர்வரை ரயிலில் 5 மணி நேரம் பயணம் செய்யவேண்டும். அங்கிருந்து தனியார் வண்டியில் கடற்கரைவரை சென்றால், கோவில் பகுதியை அடையலாம்.
கடற்கரையில் காத்திருக்கவேண்டும். கோவில் நிர்வாகம் செய்யும் அங்கிருப்பவர்கள் கடலுக்குள் எப்போது செல்லவேண்டும் என சிக்னல் தந்த பிறகுதான் எல்லாரும் கடலுக்குள் நடுவே நடை பயணத்தைத் தொடர வேண்டும். சுமார் இரண்டு கிலோமீட்டர் நடந்தால், பாறைமீதுள்ள சிவலிங்கங்களை நாமே தொட்டு பூஜைசெய்து வழிபாடு செய்துவிட்டு வரலாம். அருகிலுள்ள கடல் அலையில் காலை நனைத்துக்கொண்டு, மனதை விட்டு நீங்காத சுகமான அனுபவத்தை எடுத்துக்கொண்டு வரலாம்.
கோவில் ஒரு கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருப்பதால், இங்கே பூஜைக் குத் தேவையான பொருட்கள், உணவுப் பொருட்கள் என நம் தென்னிந்தியா மக்கள் விருப்பத்திற்குக் கிடைக்காது. அவரவர்கள் தேவையானதை உடன் எடுத்துச்செல்வது நல்லது. சிரமம் இல்லாது இருக்கும். இந்த கடற்கரைப் பகுதியில் தங்குவதற்கு போதிய வசதிகளும் இல்லை என்பதால், பாவ் நகரில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துகொள்வது சிரமம் இல்லாமல் இருக்கும்.
தினமும் மதியம் ஒரு மணிமுதல் மாலை 6.30 மணிவரையில் என பொதுவாக சொன்னாலும், அன்றைய திதி, கடல் அலையின் சீற்றம் இவைகளைக் கொண்டு நேரம் கொஞ்சம் மாறுபடலாம். மழைக்காலம், வெளியில் காலம் போன்ற இயற்கை சூழலுக்கு ஏற்ப மாற்றங்களும் இருக்கும் என்பதை அறிந்துகொண்டு, திறந்த மனநிலையில் இருப்பதை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு பயணம் செய்தால், வித்தியாசமான அனுபவத்தை உணரலாம்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-10/temples-t.jpg)