இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
93
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒருவரின் பிறப்பு, முன்ஜென்ம வினையைப் பொருத்தே இருப்பதால், பிறக்கும் குடும்பத் தையும், தாய்- தந்தையையும் தேர்ந்தெடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. அதனால் பெற்றோரைப் பற்றியும், வாழ்வின் அடித்தளத்தையும் லக்னத்தைக் கொண்டு அறிகிறோம். ஆனால் மனைவி, நண்பர்கள், கல்வி, தொழில் போன்றவை ஒருவரின் மன விருப் பத்தைச் சார்ந்தது. நல்ல நட்பு, வாழ்க்கைத்துணை, கல்வி, தொழிலைத் தேர்ந்தெடுப்பதால், ஒருவரின் வாழ்க்கை நிலை மாறும். மனோகாரகனாகிய சந்திரனின் நிலையைக்கொண்டு பரிகாரம் செய்யும்போது, ஜாதகரின் மனம் தெளிவுபெற்று, சரியான திசையில் பயணம்செய்ய வாய்ப்புண்டாகும். விதியென்னும் லக்னப்பலனை, மதியெனும் சந்திர பலத்தால் மாற்றியமைத்துக்கொள்ள முடியும். விதியை மதியால் வெல்லலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""கயிலாயபதியே! ஞானத்தின் விளிம்பினைத் தொட்டு, உயர்வற உயர்நலமுடைய அவதூதர்களும், அவதாரங்களும் மறுபடியும் மானிடராய்ப் பிறக் கிறார்கள். கர்மவினை சுமக்கும் மானிடரும் பிறவி யெடுத்தே இளைக்கிறார்கள். இதிலுள்ள வேறு பாட்டைத் தாங்கள் விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை மரகதாம்பாள் இராமகிரி எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு வாலீசுவரரைப் பணிந்துகேட்டாள்.
ஜடாதரன் உரைத்தது- ""குயவன் திரிகையில் (சக்கரம்) வைக்கப்பட்ட மண்ணைத் தான் விரும்பிய பாண்டமாய் வளைப்பதைப்போல, மனிதர்கள் படைக்கப்படுகிறார்கள். உடைந்த மண்பாண்டம் மண்ணாகி, மீண்டும் மீண்டும் மண்கலமாவதுபோல, பிறவிச் சக்கரத்தில் சுழன்றுகொண்டே இருக்கிறார்கள். ஆபர ணங்கள் உருமாறி னாலும், சொர்ணம் தரமிழப்பதில்லை. உருமாற்றம் சிருஷ்டி யின் விதி. ஆனாலும், மண்ணும் பொன்னும் ஒன்றல்ல.''
""காளகண்டரே! "அபக்ராந்தம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய மூல நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், பூராடம் 4-ஆம் பாதத்தில் சந்திரனும், உத்திராடம் இரண்டாம் பாதத்தில் குருவும், மகம் முதல் பாதத்தில் சனியும், மகம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், ஸ்வாதி நான்காம் பாதத்தில் புதனும், கேட்டை இரண்டாம் பாதத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருக்கும் அமைப்பைப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று காலேஸ்வரம் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீமுக்தேஸ்வரரை அன்னை சுபா னந்த தேவி வேண்டிப் பணிந்தாள்.
பிட்சாடனர் உரைத்தது- ""அன்னபூரணியே! இந்த ஜாதகன் விழிஞம் என்ற ஊரில் குமரன் என்ற பெயரில் வாழ்ந்துவந்தான். அவன் மனம், முள்மரங்கள் மண்டிய களர்நிலமாய், முதுகாடாய் விளங்கியது. பிறரை நயவஞ்சகமாய் ஏமாற்றி செல்வத்தை அபகரித்தான். செல்வத்தைப் பறிகொடுத்தோர் துயரம் தாங்காது தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
ஆனாலும், குமரன் மனந்திருந்தினான் அல்லன். அவனிடம் செல் வத்தைப் பறிகொடுத்த வர்களின் கவலைப் பெருமூச்சு ஒன்று சேர்ந்தது போன்ற பேய்க் காற்றினால் மரம் விழுந்து மாண்டான். அவன் பாழும் உடல் நெருப்பின் தீராதப் பசிக்கு இரை யானது. இப்பிறவியில் ஸ்வீகரித்த பாவங் களுடன் அவனுயிர் எமனுலகம் சென்றது.
அங்கு இவனால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் காத்திருந்து, அவன்மேல் கல்லெறிந்தனர். எமதூதர்கள் கடுஞ்சொற்களால் ஏசியும், கொடிய ஆயுதங்களால் நையப்புடைத்தும் அவனுயிரை இழுத்துச் சென்றனர். பிறரைத் துளைக்கும் கிருமிகள்போல வாழ்ந்து, தான் மட்டும் சுகம் அனுபவித்ததால் "கிருமி போஜனம்' எனும் நரகத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் துயருற்றான். பின்பு பூதவுடல் பெற்று பூவுலகம் சென்றான். வளவனூர் எனும் ஊரில், செல்வச் செழிப்புமிக்க வணிகக் குடியில் பிறந்து இராகவன் என்ற பெயர் பெற்றான். தவழ்ந்தான். நடந்தான். முன்ஜென்ம வினைப்பயனும் அவனைக் கைப்பற்றி, அவன் கைத்தலம் பற்றி நடந்தது. ஒரு கார்காலம், அவன் கனவுகளைக் கலைத்தது. அவன் வாழ்ந்த ஊரில், விதியே நதியாய்ப் பெருக் கெடுத்து ஓடியது. பெருவெள்ளத்தில், அவன் குடும்பத்துப் பெருஞ்செல்வம் கரைந்து காணாமல் போனது. பெற்றோரை இழந்து அநாதையானான். அவன் ஆடையில், நெய்த நூல் குறைந்து தைத்த நூல் மிகுந்தது.
பசிப்பிணி அவன் வயிற்றை வதைத்தது. ஆற்றின் சுழலில் சிக்கிய பரிசல்போல அல்லலுறுகிறான். * பிரும்ம சர்மாபோல, மெய்ப்பொருளை மறந்து பிறர் கைப்பொரு ளைக் கவர்ந்தால் வந்த வினைப்பயனால் அவதியுறுகிறான். கங்கையே தொழும் காவிரியில், துலா மாதத்தில் நீராடினால் அவன் பாவம் குறைந்து வறுமை நீங்கும்.
* பிரும்ம சர்மா- பிறரை ஏமாற்றி செல்வத்தைப் பறித்துக்கொண்டதால் நரக தண்டனைப் பெற்றான்.
-துலாபுராணம்.
(வளரும்)
செல்: 63819 58636