பஞ்ச அங்கங்களில், சூரிய சந்திரர்களின் தூரத்தை வைத்து மூன்று அங்கங்கள் கணக்கிடப்படுகின்றன. அவற்றுள் முதன்மையானது திதி. திதியின் வீரியமே, பஞ்ச அங்கங்களான நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகியவற்றுள் மிகவும் முக்கியமானதாக ஜோதிடவிதிகள் ஏற்கின்றன. சில திதிகளை சுபகாரியங்களுக்கு ஆகாதவையாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. உதாரணமாக சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசியில் சுபகாரியங்கள் தவிர்க்கப்படுகின்றன. திதிகளைக்கொண்டே சுபகாரியங்களுக்கு நாட்கள் குறிக்கப்படுகின்றன. இவ்வாறாக திதியே ஒரு காரியத்தின் வெற்றி- தோல்வியைத் தீர்மானிக்கும்போது, பரிகாரங்களை நாள் குறிக்காமல், திதி பார்க்காமல் செய்தே பலர் தோற்கின்றனர். பரிகாரங்கள் பிரச்சினைக்கான தீர்வாக இருக்கிறபொழுது அதுவும் ஒரு சுபகாரியமே. நாள் பார்த்து செய்வதுதான் அறிவுடையமையாகும். நாள் பார்த்து செய்யாத பரிகாரம், மருத்துவரை அணுகி மருந்து வாங்கி விட்டு மருந்துண்ணாமல் நோய் தீரவில்லையென்று சொல்வதற்குச் சமம்.
இந்த இதழில் நாம் ஏகாதசி பரிகார வரிசையில், விஜய ஏகாதசி மற்றும் அமலக்கி ஏகாதசி ஆகியவற்றைப் பாப்போம். இங்கு கொடுக்கபட்டுள்ள ஏகாதசி தேதிகள் வைணவ சம்பிரதாயப்படி உள்ள ஆங்கிலத் தேதிகள் ஆகும். நாட்காட்டியிலுள்ள திதிதான் சரியென்று எண்ணி குழம்பவேண்டாம். வைணவ சம்பிரதாயமும் ஆகமங்களும் என்ன திதி எப்பொழுதென்று சொல்வதையே நாம் பிரம்மாணமாகக் கொள்ளவேண்டும்.
விஜய ஏகாதசி
விஜய ஏகாதசி மார்ச் மாதம் 9-ஆம் தேதி, 2021-ஆம் வருடம் வருகிறது. இது மாசி மாதம் தேய்ப்பிறையில் வரும் ஏகாதசி ஆகும். இனி இந்த ஏகாதசியின் மகத்துவம் காண்போம்.
ராமபிரான் ஜடாயுவின் தகவலின் பேரில், சீதை இராவணனிடம் இலங்கையில் சிறைப்பட்டிருக்கிறாள் என்று அறிந்து இலங்கை செல்ல கடலைக்கடக்க முற்பட்ட போது, அது அவ்வளவு சுலபமானதாகத் தெரியவில்லை. என்னதான் மகாவிஷ்ணு அவதாரமாகவே இருந்தாலும், தாம் ஒரு அவதாரமென்று வெளிக்காட்டாமல் ஒரு சாதாரண மனிதன்போலவே நடந்துகொண்டார். இவ்வாறாக கடலைக்கடக்க வழிதெரியாமல் இருந்தபோது பகதல்பய முனிவரின் ஆசிரமம் நாடி அதற்கான அறிவுரையை நாடினார். இதைக் கேட்ட முனிவர் ராமபிரானை விஜய ஏகாதசி விரதமிருக்குமாறு கூறினார். முனிவர் சொன்ன முறையில் ராமபிரான் விரதமிருந்து கடல் கடந் தது மட்டுமல்லாமல், போரிலே வெற்றியும் பெற்று சீதையோடு சொந்த நாடு திரும்பினார்.
ஜாதகத்தில் 6, 10-ஆம் பாவங்களில் ராகு தொடர்பு ஏற்படும்போது, காரக லக்னத்தின் 6, 10-ல் ராகுவின் கோட்சாரத்தில் மற்றும் பாவ முனைகளில் ராகுவின் தொடர்பு ஏற்பட, செய்யவேண்டிய செயலானது மிகக் கடினமாக இருக்கும். மேலும் வினோதமான தடங்கல்களை உண்டுபண்ணும். எந்த தொழில் செய்தாலும் மிகுந்த கஷ்டங்களுக்குப் பின்னரே வெற்றி கிட்டும்.
அதற்கும் கர்ம லக்னம், கர்மகாரகன், கர்ம பாவம் சற்றேனும் உறுதியுடன் இருக்க வேண்டும். மேலும் அந்த வருடத்தின் சந்திர லக்னம் மற்றும் தசாபுக்தி கள் சாதகமாகவேண்டும். இல்லை யேல் அலைக்கழிப்பு மட்டுமே மிஞ்சும்.
ஆரூடத்தில் திருவாதிரை 2-ஆம் பாதம் கர்ம பாவமாகி, ராகுவும் நிற்க, செய்யவேண்டிய வேலை மிகக்கடினம் என்று கொள்ளவேண்டும்.
மேற்படி அமைப்பு கண்டால் அவர்கள் விஜய ஏகாதசி விரதமிருக்க வெற்றிகிட்டும்.
அமலக்கி ஏகாதசி
அமலக்கி ஏகாதசி 2021, மார்ச் மாதம் 25-ஆம் நாள் வருகிறது. இது பங்குனி வளர்பிறையில் வரும் ஏகாதசி ஆகும். இனி இந்த ஏகாதசியின் மகத்துவத்தைப் பார்க்கலாம்.
சித்ரரதன் என்ற மன்னன், தன் குடிமக்களோடு அமலக்கி ஏகாதசியில் விரதமிருந்து நெல்லி (பெருநெல்லி) மரத்திற்குப் பூஜைசெய்து வந்தான். அப்போது பறவைகள் மற்றும் மிருகங்களைக் கொன்று தொழில் செய்யும் வேடன் அந்நாட்டிற்கு வந்துசேர்ந்தான். அவன் சித்ரரதன் செய்யும் பூஜையும், குடிமக்களும் ஏகாதசியில் கோலாகலமாக விழா எடுத்துக்கொண்டாடுவதையும் கண்டு வியந்து, தாமும் விடியும்வரை எல்லா பூஜைகளையும் ஒரு மரத்தடியில் நின்று கண்டுசென்றான். காலப்போக்கில் அவன் இறந்து திரும்பவும் பூமியில், ஏகாதசியின் விரதப் பலனால் ஒரு பெரிய ராஜாவாக வசுரதன் என்ற பெயரில் பிறக்கிறான். அப்பிறவியில் ஒரு நாள் அவன் காட்டில் வேட்டையாடச் சென்ற இடத்தில் களைப்பில் ஒரு மரத்தடியில் உறங்கிவிடுகிறான். அங்கேவந்த அவன் பகைவர்கள் இதுவே தருணமென்று அவனைக் கொல்ல நிறைய அம்பு மற்றும் ஆயுதங்கள் வீசுகின்றனர். ஆனால் வசுரதனிற்கு ஒன்றும் நேரவில்லை. மாறாக அவன் பகைவர்கள் மாண்டனர். அமலக்கி ஏகாதசியின் பலனால் அவன் உயிர்பிழைத்தான்.
ஜாதகத்தில் 6-ஆம் பாவம் வலுவடைந்து, 6-ஆம் பாவத்திற்கான கிரகம் 8-ஆம் பாவத்தில் தொடர்புகொள்ளும்போது, பகைவர்களால் தொல்லை ஏற்படும். மேலும் புதன் 8-ஆம் பாவத்தில் அதிக பரல் கொடுக்கும்போதும், புதனே மிதுனத்தில் 6-ஆம் பாவமாக வரும்போதும், பறவைகளைக் கொன்ற பாவம் அதிகம் என்றும், அதனால் அம்பு, குண்டுகள் பொழிந்து இறக்க நேரிடும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆரூடத்தில் நாச திரேக்காணம் பட்சி பாதத்தில் அமைய, எட்டாம் பாவத்தில் பாவ கிரகங்கள் நிற்க, லக்னம் மற்றும் லக்னாதிபதி 6-ஆம் பாவத் தொடர்பு கொண்டால் எதிரிகளால் துப்பாக்கி மற்றும் கூலிப்படை ஆள்கொண்டு உயிருக்கு ஆபத்துள்ளது என்று கொள்ளவேண்டும்.
இவ்வாறான அமைப்புள்ளவர்கள் அமலக்கி ஏகாதசியில் முறைப்படி விரதமிருக்க தோஷம் விலகும்.
செல்: 77080 20714