பருவம் வந்த பெண்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் திருமணம் முடித்துவைக்க பல பெற்றோர் களால் முடியவில்லை. அதற்குப் பல காரணம் இருந்தாலும், முக்கியமாக ஏழ்மை நிலை, கடன் தொல்லைகள், விலைவாசி உயர்வு, திருமணச் செலவு செய்வதற்கு கடன் கிடைக்காத நிலை, வரதட்சணைக் கொடுமை ஆகியவைதான் என்றால் மிகையாகாது.
பெண்ணின் பெற்றோர் தன் பெண்ணுக்குத் திருமணப் பருவம் வந்ததும், உத்தம ஜோதிடரிடம் சென்று தன் பெண்ணுக்கு வியாழநோக்கு அல்லது வியாழானுகூலம் வந்துவிடாதா- இக்காலத்தில் திருமணம் நடக்குமா என்பதை அறிந்துவைத்திருந்தால், சுபகாரியம் நடத்தவோ அல்லது தன் பெண்ணுக்கு போதிய ஆலோசனைகளைக் கூறி ஜாக்கிரதையாக- பாதுகாப்பாக இருக்கச் சொல்லவோ வசதியாக இருக்கும்.
திருமணமாகும் காலம்
சப்தமாதிபதி எந்த ராசியில் இருக்கிறாரோ, அந்த வீட்டின் அதிபதி, சுக்கிரன், குரு, புதன் ஆகிய மூவர்களுடன் சேரும் காலம்.
ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்டகச்சனி காலங்களில் குரு பார்வையை சனி பெற்றாலோ, பார்வைபெறும் சமயம் சனியுடன் புதன், சுக்கிரன் சேர்ந்தாலோ திருமணம் நடக்கும்.
சப்தம ஸ்தானாதிபதியுடன் குரு சேர்க்கைப்பெருங் காலமும், கோட்சாரப்படி குரு 2, 6, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களுக்கு வரும் காலமும் திருமணம் நடக்கும்.
லக்ன ஸ்புடம், லக்னாதிபதி ஸ்புடம், சப்தமாதிபதி ஸ்புடம் ஆகிய மூன்று ஸ்புடங்களையும் கூட்டிவரும் ராசியில் குரு பிரவேசம் செய்யும் காலம் திருமணம் நடக்கும்.
ஜாதகத்தில் 2, 5, 7, 11 ஆகிய ஸ்தானங்களிலுள்ள கிரகங்களின் தசாபுக்தி, அந்தரங்களில் திருமணம் நடக்கும்.
சந்திர லக்னத்திற்கு சப்தம ஸ்தானத்தில் பாக்கியாதிபதி வரும் காலம் திருமணம் நடக்கும்.
சுக்கிரன் இருக்குமிடத்திற்கு 2, 5, 7-க்குடையவர்கள் வந்துசேரும் காலம்.
சூரியன், சந்திரன், அங்காரகன் ஆகியோருக்கு சப்தம ஸ்தானத் திற்கு சுக்கிரன் வரும் காலம் திருமணம் நடக்கும்.
சுக்கிரன் அல்லது 7-க்குடையவன் லக்னாதிபதிக்கு 5, 9 ஆகிய ஸ்தானங்களுக்கு கோட்சாரப்படி வரும் காலம்.
ஜாதகரீதியாக தசாபுக்தி, அந்தரங்களில் திருமணம் நடக்கும் காலம்
சூரிய தசை குரு புக்தி, குரு அந்தரம், புதன் அந்தரம்.
சந்திர தசை புதன் புக்தி, புதன், குரு, சுக்கிர அந்தரங்கள்.
செவ்வாய் தசையில் சந்திர புக்தி, குரு, சந்திர அந்தரங்கள்.
புதன் தசையில் புதன் புக்தி, சுக்கிரன், புதன், குரு, அந்தரங்கள்.
குரு தசையில் சந்திர புக்தி, குரு, செவ்வாய் அந்தரங்கள்.
குரு தசையில் சூரிய புக்தி, சுக்கிர அந்தரம்.
சுக்கிர தசையில் புதன் புக்தி, சுக்கிரன், சனி அந்தரம்.
சனி தசையில் சுக்கிரன், புதன் புக்தி, சனி புக்தி அந்தரங்கள்.
ராகு தசையில் சனி புக்தி, சுக்கிரன், சனி அந்தரங்கள்.
கேது தசையில் செவ்வாய், புதன் புக்தி, குரு அந்தரங்கள்.
ஆண்- பெண் இருபாலருக்கும் திருமணம் கைகூட உகந்த விரதங்கள், ஹோமங்கள் சங்கடஹர சதுர்த்தி விரதம்: விநாயகரை தேய்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி நாளில் விரதமிருந்து அவருக்கு, அருகம்புல் மாலைசாற்றி, நெய் தீபமேற்றி வழிபட்டு வந்தால், ஜாதகத்தில் எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் அவை விலகி திருமணம் விரைவில் கைகூடும்.
பங்குனி உத்திர விரதம்: முருகக் கடவுளுக்கு உகந்ததாக பங்குனி உத்திரத் திருநாள் திகழ்கிறது. பங்குனி மாதத்தில் பௌர்ணமி நாளில் சந்திரன் உத்திர நட்சத் திரத்தில் சஞ்சரிக்கும் இந்த பங்குனி உத்திரத் திருநாளில்தான் தமிழ்க் கடவுள் முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.
அந்த நாளில் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட திருமண வரம் கிட்டும்.
பிரதோஷ விரதம்: ஜாதகத்தில் எத்தோஷம் இருந்தாலும் இந்த பிரதோஷ விரதத்தை மேற்கொண்டு வரவும். இது சிவபெருமானுக்கு உகந்த விரதமாகும்.இதனைத் தொடர்ந்து கடைப்பிடித்தால் திருமண பாக்கியம் கைகூடி வரும். நந்தியை யும் பிரத்யேகமாக வழிபடுவது நலம் சேர்க்கும்.
ஏகாதசி விரதம்: ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய ஏகாதசியில் (வளர்பிறை) விரமிருந்து மகாவிஷ்ணு, மகாலட்சுமியை வழிபட்டுவந்தால், திருமண பாக்கியம் கைகூடும்.
குரு, தட்சிணாமூர்த்தி விரத வழிபாடு: வியாழக்கிழமையில் குரு பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் 12 அல்லது 21 வாரங்கள் பிரத்யேகமாக வணங்கி, அவருக் குண்டான கொண்டைக்கடலை, செவ்வந்தி மலர்கள், மஞ்சள் வஸ்த்திரம் சாற்றி வழிபட்டுவந்தால், திருமணம் கைகூடும்.
ஆஞ்சனேயர் விரதம்: சனிக்கிழமையில் அல்லது அமாவாசையில் விரதமிருந்து ஆஞ்சனேயருக்கு துளசி மாலை, வடைமாலை சாற்றி உள்ளன்போடு வழிபட்டுவந்தால், தோஷங்கள் நீங்கி திருமண பாக்கியம் கைகூடும்.
பைரவர் வழிபாடு: பைரவரை பௌர்ணமி நாளில் இரவு 7.00 மணிக்குமேல் 8.00 மணிக்குள் வீட்டில் அல்லது ஆலயத் தில் சென்று அர்ச்னை, ஆராதனைகள், அன்ன தானங்கள் செய்து வழிபடலாம். வீட்டிலே கூட பைரவர் படத்தை வைத்து தூபதீபம் காட்டி, இனிப்பு கலந்த அவல் அல்லது பழங்கள் அல்லது பாயசம் நிவேதனம் செய்து பைரவருக்குண்டான சுலோகங்களைப் படித்து அவரை உள்ளன்போடு வழிபடலாம்.
திருமண தோஷங்கள் நீங்கும் திருத்தலங்கள் நவகிரக விநாயகர் கும்பகோணம் மடத்துத் தெருவிலுள்ள ஸ்ரீ பகவத் விநாயகர் கோவிலில் நவகிரக விநாயகர் உள்ளார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ்க் கையிலும். வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ்க் கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார். இவரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்கி திருமண பாக்கியம் கைகூடும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marriage_61.jpg)
திருமணஞ்சேரி
இங்குள்ள ஆலயத்தைப் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. திருமணத்தடை நீங்குவதற்கென்றே பிரசித்திபெற்ற இந்தத் திருத்தலத்தில் திருமணத்தடை நீங்க சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இங்கு தரப்படும் மாலையை பத்திரமாக வீடு கொண்டுவந்து சேர்க்கவேண்டும்.
திருமுல்லைவாயில்
துவாரபர யுகத்தில் சிவனின் கண்களைப் பொத்தி சிவசாபம் பெற்ற பார்வதி தேவி, சாப விமோசனம் பெற வந்துகொண்டிருந்தார். திருமுல்லைவாயில் தலம் வந்தபோது காலில் முள் தைத்து தடங்கல் உண்டானதால் இந்தத் தலத்தில் தங்கிச் செல்லலாம். என்று தீர்மானித்தபோது, மாசிலாமணீஸ்வரரின் கம்பீர சிவலிங்கத்தோற்றத்தைக் கண்டு அங்கு கடும் தவம் மேற்கொண்டார். தவத்தை மெச்சி சிவபெருமான் பார்வதியை மணந்துகொண்டு தம்பதியானார்கள்.
திருப்பரங்குன்றம்
மதுரைக்கு அருகே உள்ளது. முருகன் திருமணக் கோலத்தில் அமைந்த தலம் என்பதால், அறுபடை வீடுகளில் இது முதல் தலம். இங்குவந்து முருகப் பெருமானுக்கு உகந்தநாளில் (செவ்வாய், வெள்ளி) அர்ச்சனை, ஆராதனை செய்து செல்வது நல்லது.
திருவிடந்தை
சென்னை- மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ளது. இங்கு நித்திய கல்யாணப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். இத்திருத்தலத்திற்குச் சென்று பெருமாளை வழிபட்டால் நிச்சயம் திருமணத் தடை நீங்கி திருமணம் கைகூடும்.
திருவண்ணாமலை
இங்குள்ள அண்ணாமலையார், உண்ணாமுலையம்மையை திருமணம் வேண்டி ஒரு கிரிவலம் வந்தால், அஷ்டதிக்கு பாலகர்கள், நவகிரகங்கள் ஆகியோரால் ஏற்பட்டிருக்கக்கூடிய தோஷங்கள் நீங்கி இல்வாழ்க்கை ஏற்படும். மேலும் இந்தத் தலம் பஞ்சபூதத் தலங்களில் அருட்பெரும் ஜோதியாய் விளங்கும் அக்னி தலமாகும். இங்குசென்று இவர்களை தரிசித்தால் எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் நீங்கி திருமண பாக்கியம் விரைவில் கைகூடும்.
திருவாசி
திருமணமாகாத ஆண்களும்- பெண் களும் திருச்சிக்கு அருகிலுள்ள திருவாசி மாற்றிருவாசுவரர் ஆலயத்திற்குச் சென்று (ஐந்து வெள்ளிக்கிழமைகள்) அன்னமாம் பொய்கையில் நீராடி வழிபட்டு வர, திருமணம் கைகூடும்.
திருக்கண்டியூர்
திருவையாறுக்கு அருகிலுள்ள திருக் கண்டியூர் அரன் சாபந்தீர்த்த பெருமாள் ஆலயத்திற்குச் சென்று, சனிக்கிழமையில் நெய்விளக்கேற்றி வழிபட்டுவந்தால், திருமண பாக்கியம் கைகூடும்.
மதுரை மீனாட்சியம்மன்
மீனாட்சி, சொக்கநாதரை வழிபட்டு, பின் திருமணக் கோலத்திலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆண்டாள், அரங்கநாதாப் பெருமாளை மணமகனாக எண்ணி வாழ்ந்து, பின்னர் இறைவனுடன் இணைந்தார். அவரது கோவில் இங்குள்ளது. மார்கழி மாதத்தில் திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை வணங்கி திருப்பாவை பாடினால் திருமணம் கைகூடும்.
திருக்காளஹஸ்தி
ஆந்திர மாநிலத்திலுள்ள திருக்காளஹஸ்தி சென்று திருக்காளத்தியப்பனையும் ஞானப் பூங்கோதையையும் ராகு காலத்தில் தாரிசித்து வழிபடவும்.
பட்டீஸ்வரம் துர்க்கை
இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை சென்று அம்மனுக்கு எலுமிச்சம்பழ மாலை சாற்றி திருமணம் வேண்டி வழிபட்டு வருவது (ராகு காலத்தில்) மிக உகந்தது. சிவப்பு வஸ்திரமும் மாலையும் அணிவிக்கலாம்.
பட்டமங்கலம்
திருப்பத்தூர் அருகில் பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள தலம் பட்டமங்கலம். இத்தலத்தில் எங்குமில்லாத அமைப்பாக அஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி கிழக்கு முகமாக, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலமரத்தின் அடியில் கோவில் கொண்டுள் ளார். இங்கு சிறப்பு என்வென்றால், இவரை வழிபடுவதோடு இந்த ஆலமரத்திலிருந்து ஒரு விழுதை பூமியில் இறக்கிவிட வேண்டுதல் செய்வார்கள். வேண்டுதல் நிறைவேறியபின் மீண்டும் இந்தத் தலத்திற்கு வந்து ஆலமர விழுதை நேர்த்திக்கடனாக பூமியில் இறங்கச் செய்யவேண்டும்.
சிதம்ரம்
கணபதி, தட்சிணாமூர்த்தி இணைந்திருக்கி றார்கள். இவர்களை வழிபட்டபின் நந்தியை யும் வணங்கவேண்டும். பின் இங்குள்ள நடராஜரையும், கோவிந்தராஜப் பெருமாளை யும், சுற்றுப்புறத்திலுள்ள மகா தட்சிணா மூர்த்தியையும் ஒருசேர வழிபட, எத்தகைய தோஷங்களும் நீங்கி திருமண பாக்கியம் கைகூடும்.
திருச்செந்தூர்
இதனை குருத்தலம் என்றழைப்பார்கள். இங்குவந்து கடலில் நீராடி பஞ்சலிங்கம், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, வள்ளி குகை, நாழிக்கிணறு ஆகியவற்றை தரிசித்து வழிபட்டால், திருமணம் விரைவில் கைகூடும்.
வளர்பிறை வியாழக்கிழமை சென்று தரிசிப்பது நல்லது.
செல்: 94868 68485
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-09/marriage-t.jpg)