கிரகங்கள் ஏற்படுத்தும் தோஷங்களால் பலர் பலவிதமான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். கிரக தோஷங்கள் பலவிதம். அவற்றுள் பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம், காலசர்ப்ப தோஷம், நாக தோஷம், புத்திர தோஷம் ஆகியவையும் அடங்கும்.
இவ்வித தோஷங்களுக்கு மனப்பூர்வமாக நிவர்த்திகள் செய்வதே பரிகாரமாகும். மனப் பூர்வமாக, பக்தி சிரத்தையுடன் செய்யும் பரிகாரங்கள் மட்டுமே பலனளிக்கும். ஏனோ தானோ என்று பரிகாரங்கள் செய்வது பலனளிக்காது.
பரிகாரங்கள் செய்ய ஏற்ற காலமென்று எடுத்துக்கொண்டோமேயானால், ஜாதகரின் ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்வது சிறப்பு. எந்த கிரகத்திற்கான பரிகாரமோ அந்தநாளில், குறிப்பிட்ட அந்த கிரக ஹோரையில், அதுவும் தேய்பிறைக் காலங்களில் அதிகாலை நேரத்தில் செய்வது சாலச் சிறந்தது. உச்சிவேளையில் பரிகாரம் செய்யலாகாது. அமாவாசை, பௌர்ணமி திதிகளிலும், கேதுவின் நட்சந்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகியவற்றிலும் பரிகாரம் செய்வது உத்தமம்.
பரிகாரங்கள் செய்யத் தகுந்த இடங்கள் புண்ணியத் திருத்தலங்கள், மங்களாசானம் மற்றும் பாடல்பெற்ற தலங்கள், சமுத்திரக் கரை, நதிக்கரை, குளக்கரை மற்றும் இதுபோன்ற நீர் நிலைகள் ஆகியவையாகும்.
பரிகாரம் செய்யும் முறைகளைப்பற்றிப் பார்க்கும்போது, பரிகாரம் யாருக்கோ, அவர் கையால் மட்டுமே செய்யப்படவேண்டும். தவிர்க்கமுடியாத நிலையில், ஜாதகருக்கு பதிலாக தாயாருக்கு மட்டும் செய்யும் அதிகாரமுண்டு. பரிகாரத்திற்காக வாங்கும் பொருட்களை பேரம்பேசி வாங்கக்கூடாது. கஞ்சத்தனம் செய்யாமல் குறிப்பிட்ட அளவுகள் வாங்கப்படவேண்டும். வாங்கிய பொருட்கள் முழுவதும் உபயோகிக்கப்படவேண்டும். மீதமுள்ள பொருட்களை வீட்டுக்குக் கொண்டுவரக்கூடாது. தம்பதிகள் இணைந்தே செய்யவேண்டும். சண்டை, சச்சரவுகள், கலகங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பகைவர்கள், பிடிக்காதவர்கள் அருகில் இருக்கக்கூடாது. பாதியில் நின்றுவிடக்கூடாது. திருமணத்திற்கான பரிகாரங்களில், குறிப்பிட்ட பெண்ணைத் தவிர பிற கன்னிப் பெண்கள் நிற்கக்கூடாது.
ராகு தோஷத்தை புதனும், புதன் மற்றும் ராகுவின் தோஷத்தை சனியும், இந்த மூவரின் தோஷங்களை செவ்வாயும், இந்த நால்வரின் தோஷத்தை சுக்கிரனும், இந்த ஐவரின் தோஷத்தை குருவும் தீர்க்கவல்லவர்கள். இவர்கள் அறுவரின் தோஷங்களை சந்திரன் தீர்த்துவைப்பார். இந்த அனைத்து கிரகங்களின் தோஷங் களை சூரியன் தீர்க்கவல்லவர்.
அதுவும் உத்தராயணத்தில் சூரியன் அனைத்து தோஷங்களையும் தீர்த்துவிடுவார். இனி, குறிப்பிட்ட தோஷங்களைப் பற்றிய விவரங் களை மட்டும் பார்ப்போம்.
களத்திர தோஷம்
களத்திர ஸ்தானாதிபதி 6, 8, 12-ஆமிடங்களில் இருந்தாலும், நீசம், பகை பெற்றாலும் களத்திர தோஷம் ஏற்படும். இதன் பலனாக, தாமதத் திருமணம், மனைவி- கணவன் நோய்வாய்ப்படுதல் அல்லது மரணமடைதல் ஆகியவை ஏற்படலாம்.
இதற்குப் பரிகாரமாக திருமணம் எப்படி செய்வோமோ, அப்படி முறைப்படி வாழை மரத்தை அலங்கரித்து, அதற்குத் தாலிகட்டி, பின் வாழைமரத்தை வெட்டி, அதற்கு உடுத்திய சேலையை தானம் கொடுத்துவிட்டு, வாழையை நீரில் விடவேண்டும். பின் கணபதி, சுதர்சன, நவகிரக ஹோமங்கள் செய்வது சிறப்பு.
புத்திர தோஷம்
ஐந்தாமதிபதி நீசம், பகை பெறவும், அசுப ஸ்தானங்களில் இருந்தாலும், புத்திர காரகன் குரு புத்திர பாவத்தில் இருந்தாலும், 5-ஆமிடம் சாயா கிரகங்களான ராகு- கேது தொடர்புற்றாலும் புத்திர தோஷம் ஏற்படும். ராகு இருந்தால் பெண் குழந்தை பிறக்கலாம். கேது இருக்க கர்ப்பச் சிதைவுக்குப் பிறகு தாமதமாகக் குழந்தைப் பிறப்பு ஏற்படலாம்.
நாக தோஷம்
2, 7, 8, 12-ல் சர்ப்ப கிரகங்கள் இருக்க நாக தோஷம் ஏற்படும். ராகுவுக்கு துர்க்கையையும், கேதுவுக்கு விநாயகரையும் பூஜித்து வரவேண்டும். முறையாகப் பரிகாரம் செய்ய தில ஹோமம், சர்ப்ப சாந்தி ஆகியவை செய்தல் வேண்டும். திருநாகேஸ்வரம் சென்று ராகுகால பூஜை செய்ய தோஷம் நீங்கும்.
செல்: 63836 25384