என் மகனுக்கு திருமணம் எப்பொழுது நடைபெறும்? எந்த நட்சத்திரத்தில் பெண் அமைந் தால் நன்றாக இருக்கும்? பணப் பிரச்சினைகள் எப்பொழுது தீரும் என்று கூறுங்கள்? -விஜயராமு, சென்னை.
மக நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் 6-ல் இருப்பதாலும், சுக்கிரன் நீச பங்க ராஜயோகம் பெற்றிருப் பதாலும் திருமணம் தாமதமாகி உள்ளது. தற்போது சந்திர தசையில் ராகு புக்தி 24-12-2025 முடிய நடக்கிறது. அடுத்து சுப கிரகமான குரு புக்தி வரும் சமயத்தில் நல்ல வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நட்சத்திரங்களை மட்டும் வைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்வது ஏற்றதல்ல நட்சத்திரம் மட்டும் இல்லாமல் அந்தப் பெண்ணின் ஜாதகத்தையும் அருகில் இருக்கக்கூடிய ஜோதிடரிடம் தகுந்த ஆலோசனை பெற்று திருமணம் செய்வது மிகவும் நல்லது. சந்திர தசையில் ராகு புக்தியைவிட அடுத்துவர உள்ள குரு புக்தி காலத்தில் ஜாதகரின் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும். தற்போது அஷ்டமச்சனி நடப்பதால் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
எனக்கு மறுமணம் நடைபெறுமா? எப்பொழுது வேலை கிடைக்கும் என்று கூறுங்கள்? -வெங்கடேஸ்வரன், தூத்துக்குடி.
பூச நட்சத்திரம், கடக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 7-ஆம் அதிபதி குரு 12-ல் மறைந்திருந்தாலும் ஜென்ம லக்னத்தில் சுக்கிரன் இருப்பது சிறப்பான அமைப்பு ஆகும். ஒரு ஜாதகத் தில் லக்ன ராசிக்கு 2, 7-ல் பாவ கிரகம் இருந்து தசை நடப்பது அவ்வளவு சிறப்பு அல்ல. அதுவும் உங்களுக்கு சந்திரனுக்கு 2-ல் அமையப்பெற்ற கேது தசை 5-2-2019 முதல் 5-2-2026 முடிய நடைபெற்றுக் கொண்டிருப்பதும், அதற்குமுன் புதன் தசையில் கடைசி புக்தியான சனி புக்தியும் கேது சாரம் பெற்ற சனிபுக்தி என்ற காரணத்தினால் கடந்த பத்தாண்டுகளாக தசாபுத்திரீதியாக சாதகம் இல்லாத நிலை இருந்ததால் மணவாழ்வில் பிரச்சினை, நல்ல வாழ்க்கை அமைய இடையூறுகள் ஏற்பட்டது. 2026 தொடக்கத்தில் உங்களுக்கு சுக்கிர தசை தொடங்கும் சமயத்தில் நல்ல வாழ்க்கை அமையக்கூடிய யோகங்கள் உங்களுக்கு இருக்கிறது. தற்போது நடைபெறும் கேது தசை 3-ஆவது தசை என்பதால் நல்ல வேலை கிடைக்கவில்லை. அடுத்து சுக்கிர தசையில் நல்லவேலை கிடைக்கும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
எனக்கு காலில் அடிப்பட்டு உள்ளது. மேல் சிகிச்சை எடுக்க வேண்டுமா? எனக்கு எப்பொழுது நல்ல வேலை கிடைக்கும் என்று கூறுங்கள்? முத்துக்குமாரவேல், சென்னை.
மூல நட்சத்திரம், தனுசு ராசி, மிதுன லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம லக்னத்தில் செவ்வாய் அமையப்பெற்று செவ்வாய்க்கு 4-ல் சனி அமையப்பெற்று செவ்வாய்- சனியை 4-ஆவது பார்வை யாகவும் சனி தனது 10-ஆவது பார்வையாக செவ்வாயை பார்த்து செவ்வாய் தசையில் சனி புக்தி 13-5-2026 முடிய நடக்கிறது. செவ்வாய் தசையில் சனி புக்தி நடப்பதால் காலில் பிரச்சினை ஏற்பட்டது. செவ்வாய் தசை என்பதால் அதற்கு ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிலைகூட ஏற்படும். சரியானமுறையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு கோட்சாரரீதியாக தற்போது 7-ல் குரு சஞ்சரிப்பதால் விரைவில் ஒரு நல்ல வேலை கிடைக்கக்கூடிய யோகமானது உங்களுக்கு உண்டு. ஆரோக்கியத்திற்கு தற்போது முக்கியத்துவம் தரவும். ஓரிரு மாதங்களில் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.