ஜீவநாடியில் பலன்கேட்க 70 வயதிற்கும் அதிக மான ஐந்து பெரியவர்கள் வந்திருந்தார்கள். அவர்களை அமரவைத்து, "என்ன காரியமாக பலனறிய வந்துள்ளீர் கள்' என்றேன். ஐயா, "நாங்கள் வசிக்கும் ஊர் ஒரு சிறிய கிராமம். எங்கள் கிராம தெய்வமாக எங்கள் முன்னோர்கள் உருவாக்கி வழிபட்டுவந்த ஒரு அம்மன் கோவிலுள்ளது. அவர்கள் ஒரு சிறிய மண்குடிசையில் ஒரு உருண்டை யான கல்லை வைத்து, அந்தக் கல்லையே அம்மனாக நினைத்து வணங்கிவந்தார்கள்.
ஐந்த வருடங்களுக்குமுன்பு, கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து நிறையப் பணம் செலவுசெய்து மண்டபம், மூலஸ்தானம், கோபுரம், கலசம் வைத்து கோவில்கட்டி முன்னோர்கள் வணங்கிய அந்தக் கல்லை எடுத்து, வெளியில் வைத்துவிட்டு அம்மனுக்கு புதிய சிலைசெய்து, கர்ப்பக் கிரகத்தில் வைத்து, வேதம் படித்த சிவாச்சாரியார்களைக்கொண்டு, கும்பாபிஷேகம், 48 நாட்கள் மண்டலாபிஷேகம் இவற்றை முறையாகச் செய்து முடித்தோம்.
முன்னோர்கள் காலத்தில் இருந்தே அந்த அம்மன் கோவில் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. தங்கள் குறைகள் நீங்க எதை வேண்டுதல், பிரார்த்தனை செய்தாலும், அதை நிறைவேற்றி வைத்துவிடும். குறிப்பாக ஒருவர் வீட்டில் பணம், பொருள், ஆடு, மாடு என எது திருட்டுப் போனாலும், திருடியவரை தண்டித்து அவர்கள் மனம் திருந்தி, திருடியவர்களே தாங்கள் திருடியதை ஒப்புக்கொள்ள வைத்து, பொருள் இழந்தவர் களுக்கு அதைத் திரும்பக் கிடைக்க வைத்துவிடும். அவ்வளவு சக்திவாய்ந்ததாக அம்மன் இருந்தது.
ஐந்து வருடங்களுக்குமுன்பு புதிதாக கோவில் கட்டி முன்னோர்கள் வணங்கிய கல்லை எடுத்துவிட்டு அம்மன் உருவச் சிலையை வைத்து, கும்பாபிஷேகம் செய்தபின்பு அம்மனின் சக்தி குறைந்துகொண்டே வருகின்றது. வேண்டுதல், பிரார்த்தனை எதுவும் ப-ப்பதில்லை. திருட்டுப்போன பொருள் முன்புபோல் திரும்பக் கிடைப்பதில்லை. அம்மனின் சக்தி குறைந்துபோனதிற்கு காரணம் அறிந்துகொள்ளவும், முன்புபோல் இருந்த சக்தி அம்மனுக்கு உண்டாகவும் வழிகேட்டு அகத்தியரை நாடி வந்துள்ளோம்'' என்றார்கள்.
ஜீவநாடியில் அகத்தியர், ஒரு மனிதனின் முன்பிறவி பாவ- சாபங்களையும், அதனால் இப்பிறவியில் அவர்கள் வாழ்வில் அனுபவிக்கும் தொழில், கடன், நோய், திருமணம், புத்திரன், கணவன்- மனைவி, குடும்ப பிரச்சினை இதுபோன்றவற்றுக்கு பாவ- சாபங்களைக் கூறி, அவை நிவர்த்தியாகி சிரமம், கஷ்டம் இல்லாத நல்ல வாழ்க்கை அடைய வழி கூறியுள்ளாரே தவிர, கடவுள் சம்பந்தமான எதற்கும் இதுநாள்வரை பலன் கூறியதில்லை. நானும் ஓலை படித்ததில்லை. அதனால்
நீங்கள் கூறுவதற்கு நான் ஓலை படிக்கமுடியாது. வேறு எங்காவது சென்று கேட்டுப் பாருங்கள் என்றேன்.
ஜீவநாடியில் பார்க்க வருவதற்குமுன்பே, பலரிடம் சென்று இதற்கு பலன் கேட்டுப் பார்த்தோம். ஒவ்வொரு வரும், ஒவ்வொருவிதமாக காரணம் கூறினார்கள். சிலர் கடவுளைக் கட்டிவிட்டார்கள் என்றார்கள். இதற்கு அவர்கள் கூறிய பரிகார பூஜைகள், யாகம், ஹோமம், மாந்திரீகம் என அனைத்தையும் செய்தோம்; பலனில்லை. அதனால் தான் தங்களை நாடிவந்தோம். ஒரு ஊர்மக்களின் நன்மைக் காக நீங்கள் ஓலையைப் பிரித்துப் படியுங்கள். அகத்தியர் கூறினால் கேட்டுக்கொள்கின்றோம். கூறவில்லையென் றால் உங்களை வற்புறுத்த மாட்டோம் என்றார்கள்.
ஐந்து பேரும் வயதில் பெரியவர்கள், அவர்கள் கூறுவதை அலட்சியம் செய்யவும் முடியவில்லை. அகத்தி யரை வணங்கிவிட்டு, ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
ஓலையை அவர்கள்முன்பு படிக்காதே, நான் கூறுவதை நன்கு மனதில் பதிய வைத்துக்கொள், அதன்பின்பு ஓலையைக் கட்டி வைத்துவிட்டு, நான் கூறியதை அவர்களிடம் கூறு என்று கூறிவிட்டு சில குறைகளையும், மறுபடியும் அம்மனுக்கு சக்தி உண்டாக சில வழிமுறைகளையும் கூறிவிட்டு, ஓலையில் இருந்து மறைந்தார். அதன்பின்பு நான் ஓலையைக் கட்டிவைத்து விட்டு, அகத்தியர் கூறியதை அவர்களிடம் கூறத் தொடங்கினேன்.
உங்கள் ஊர் அம்மனுக்கு கோவில் கட்டியது சரிதான். ஆனால் சில தவறுகளை செய்துவிட்டீர்கள். முன்னோர்கள் தெய்வமாக வழிபட்டுவந்த கல்லை, தூக்கி வெளியில் எறிந்துவிட்டீர்கள். அந்தக் கல்-லுள்ள சக்தியை நீங்கள் அறிந்துகொள்ளவில்லை. இப்போது வெளியில் கிடப்பதால், அந்தக் கல்-ன்மீது பலர் சாதாரணக் கல் என்று நினைத்து, அதன்மீது அமர்ந்து கொள்கின்றார்கள். உங்கள் முன்னோர்களின் பக்தியும், நம்பிக்கையும், அதனால் உண்டான தெய்வ சக்தியும், அந்தக் கல்-ல் இன்னமும் உள்ளது. மறுபடியும் அந்தக் கல்லை எடுத்து, கர்ப்பக் கிரகத்தில் உள்ளே நீங்கள் புதிதாக வைத்துள்ள அம்மன் சிலைக்கு முன்பாக பதித்துவிடுங்கள். இனி செய்யும் பூஜைகள், படைப்புகள் அனைத்தையும் அந்தக் கல்-ற்கு முக்கியத்துவம் தந்து செய்யுங்கள். உருவ சிலைக்கு நீங்கள் விருப்பம்போல் அலங்காரம் செய்துகொள்ளுங்கள்.
கோவி-ல் அம்மனுக்கு வேதம் படித்த குருக்களைக் கொண்டு தினமும் இரண்டுவேளை பூஜை செய்து வருகின்றீர்கள். உங்கள் முன்னோர்கள் காலத்தில், உங்கள் முன்னோர்கள் வழிபட்ட இந்த அம்மனுக்கு உங்கள் சாதியைக் காரணம் கூறி வேதம் படித்த குருக்கள் வந்து பூஜை செய்ய மறுத்துவிட்டார்கள். அதனால் உங்கள் ஊரைச் சேர்ந்த உங்கள் இனத் தைச் சேர்ந்த ஒருவரையே அம்மனுக்கு பூஜை செய்ய முன்னோர்கள் பூசாரியாக நியமித்தார்கள். அந்த வம்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே இதுவரை பூஜை செய்துவந்தார்.
கோவில் கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, அந்தப் பூசாரியை நீக்கிவிட்டு, இப்போது சாதியைச் சொல்- அம்மனை ஒதுக்கி வைத்த வேதம் படித்த குருக்களை பூஜை செய்ய வைத்துவிட்டீர்கள். இப்போது அவர்கள் அம்மன்மீது பக்தியுடன் பூஜை செய்யவில்லை. பணத்திற்காக கடமையைச் செய்கின்றார்கள். இனி மறுபடியும் அந்த பூசாரி குடும்பத்தினரையே சிலையை தொட்டு நீரால் கழுவி பூஜை செய்யட்டும். குருக்கள் பூஜை செய்யவேண்டாம்.
உங்கள் முன்னோர்கள் கல்லையே கடவுளாக நினைத்து தங்கள் மனதில் அம்மனைக் கண்டு வணங்கினார்கள். ஆனால் இப்போது நீங்கள் கல்-ல் ஒரு உருவம் செய்து, அதற்கு கலர் கலராக அலங்காரம் செய்து அதன் அழகை கண்டு வணங்குகின்றீர்கள். ஆனால் மனதில் அம்மன் பக்தி இல்லை. முன்னோர்கள் உருவாக்கி செய்த வழிபாடு முறைகள் மாறும்போது, அந்தக் கோவில் தெய்வ சக்தி அனைத்தும் மாறும். மனிதர்கள் மனம், செயல் மாறலாம். ஆனால் முன்னோர் கள் நிர்ணயித்த முறை மாறக்கூடாது என்று அகத்தியர் கூறியதை அவர்களிடம் கூறி அனுப்பிவைத்தேன்.
சிவன், விஷ்ணு, சைவ, வைணவ தெய்வங்களின் கோவில்களில் ஆகம விதிகள் உள்ளதுபோல் காளி, மாரி, பிடாரி, பேச்சி போன்ற அனைத்து கிராம தெய்வங்களின் ஆலயங்களுக்கும் தனித்தனியே ஆகம விதிகள் உண்டு, அவற்றைவிடுத்து நாமே எதையாவது புதிதாக செய்தால் அந்த தெய்வங்களின் சக்தி குறைந்து விடும். இதுபோன்று ஒவ்வொரு குடும்பத்தினரின் குலதெய்வத்தையும் முன்னோர்கள் வகுத்துதந்த முறையில் வழிபட்டால்தான் குலதெய்வத்தின் அருள் அந்தக் குடும்பத்திற்கு முழுமையாக கிடைக்கும் என்பதை நானும் அறிந்துகொண்டேன்.
செல்: 99441 13267