சென்ற இதழ் தொடர்ச்சி...

சூரியனின் கிருத்திகை நட்சத் திரத்தை கோட்சார ராகு கடக்கும் 13-6-2022 வரை அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டமாகும். மேஷம், ரிஷப ராசியினருக்கான பலன்களைக் கடந்த இதழில் கண்டோம். மற்றவற்றைத் தொடர்ந்து காண்போம்.

மிதுனம்

இது காலபுருஷ 3-ஆம் ராசி. மாற்றத் தைப் பற்றிக் கூறுமிடம். சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை, மிதுனத்திற்கு மூன்றாம் அதிபதியின் நட்சத்திரம்.

Advertisment

கோட்சார ராகு 3-ஆமதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். 3-ஆமிடம் வீரம், தைரியம், வீரிய ஸ்தானம்; இளைய சகோதர ஸ்தானம்; சகாய ஸ்தானம். சூரியன், ராகு சேர்க்கை கிரகண தோஷ அமைப்பு. அவரவர் ஜனனகால ஜாதகரீதியான தசாபுக்தி சாதகமாக இருந்தால் மனக்குழப்பம் மன சஞ்சலம் அகலும். ஆன்மஞானம் பெருகும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.

முயற்சிபலிதம் உண்டாகும். எதையும் தாங்கும் மனப்பக்குவம் உருவாகும். செவித் திறன் குறைவுக்கான வைத்தியம் பலன் தரும். ஒருசிலருக்கு சிறு அறுவை சிகிச்சைக் குப்பிறகு செவித்திறன் சரிசெய்யப்படும். இளைய சகோதரத்திற்கு அரசு உத்தியோகம் அல்லது அரசின் உதவிகள் கிடைக்கும். தகவல் தொடர்புத் துறை மற்றும் ஊடகங்களில் பணிபுரிபவரின் தனித்திறமைகள் பாராட்டப்படும்.

rr

Advertisment

ஒருசிலருக்கு விபரீத ராஜயோக அடிப்படையில் கைவிட்டுப்போன சொத்து அல்லது வேலை கிடைக்கும். சில மிதுன ராசிக் குழந்தைகளுக்கு இளைய சகோதரன் கிடைப்பான். தொழில், உத்தியோகம் நிமித்தமாக வெளியூர், வெளிநாட்டில் வாழ்பவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து செட்டிலாவார்கள். பலருக்கு இடமாற்றம் செய்ய நேரும். இளைய சகோதரத்தின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலரின் கடனை அடைக்க இளைய சகோதரம் உதவுவார். வெளிநாட்டில் வாழ்ந்த இளைய சகோதரம் பூர்வீக சொத்தில் குடியேறுவார். கைமறதியாக வைத்த ஆவணங்கள் கண்ணில் தென்படும். சிலர் உயில் எழுதலாம் அல்லது உயிலில் திருத்தம் செய்யலாம். மனைவிவழி சொத்தை உயில்மாற்றம் செய்வதில் மாமனாரிடமிருந்த எதிர்ப்புகள் அகலும். சூரியனுக்கு ராகு பகை கிரகம் என்பதால் சுபப் பலன் மிகக் குறைவு.

ஜனனகால ஜாதகரீதியாக தசாபுக்தி சாதகமற்றவர்களுக்கு அசுபப் பலன்கள் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். சூரியன் ஆன்மாவைக் குறிப்பவர். ராகு வினைப்பதிவை அதிகரிக்கச் செய்பவர். கோட்சாரத்தில் சூரியன், ராகு சம்பந்தம் ஏற்படும் காலங்களில் ஆன்மா ஒருவரை கேள்வி கேட்கும். சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு தன்மானத்தைக் கூறுபோடும் விதத்தில் சோதனைகளை உருவாக்கிக்கொண்டே இருப்பார். சிறிய விஷயத்திற்குக்கூட பலமுறை முயற்சிக்க நேரும். அதேநேரத்தில் எதையும் தாங்கும் மனப்பக்குவத்திற்கு உங்களைத் தயார்படுத்தி விடுவார். ஞாபகமறதி அதிகரிக்கும். அதை உற்றார்- உறவினர்கள், நண்பர்கள் தவறாகப் பயன்படுத்துவது உங்களைக் கவலையில் ஆழ்த்தும். இளைய சகோதரரை நம்பி நீங்கள் ஒப்படைத்த பணிகளால் இழப்பும், மன வருத்தமும் வரும். சகோதரரிடம் இணக்க மற்ற சூழ்நிலை ஏற்படும். உங்கள் சகோதரர் மேல் தவறிருந்தாலும் பழி உங்கள்மீதே விழும். செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்க நேரும்.

இதுநாள்வரை பூர்வீகச் சொத்து நமக்கு மட்டும்தான் என்று மனக்கோட்டை கட்டிய வர்களுக்கு உடன்பிறந்தவர்களால் சஞ்சலம் உண்டாகும். தன்னம்பிக்கை, தைரியம் குறையும். இதுவரை நீங்கள் கட்டிக் காப்பாற் றிய வீரம், விவேகம் மட்டுப்படும். வேலையாட் களால் செலவும் கௌரவக் குறைவும் ஏற்படும். உங்களின் வலக்கையாக- பக்கபலமாக இருந்த உதவியாளரே துரோகியாக மாறுவார். அரசியல் பிரமுகர்கள் கவனமாக செயல் பட வேண்டிய காலம். வரி ஏய்ப்பு செய்து சேர்த்துவைத்த கள்ளப் பணத்தை எப்படி நல்ல பணமாக மாற்றுவதென்ற பயம் சிலரை ஆட்டுவிக்கும்.

இடமாற்றம், வீடுமாற்றம் செய்ய நேரும். வலக்காதில் செவித்திறன் குறைவேற்படும். உடலின் வலப்புறம் வலியுணர்வு இருக்கும். சிறு உடல் உபாதைகள், மனசஞ்சலம் இருந்துகொண்டே இருக்கும். மனக் குழப்பத்தின் காரணமாக கனவுத் தொல்லை மிகுதியாக இருக்கும். தகவல்தொடர்புத் துறை, ஊடகங்களில் செய்தி வெளியிடுபவர்கள் மிகுந்த கவனத் துடன் இருக்கவேண்டும். அரசாங்க ஒப்பந்தம், கான்ட்ராக்ட் தாரர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். காது வலி, கழுத்து, தோள்பட்டைகளில் அவ்வப்போது வலி தோன்றும். அரசு வேலையில் இருந்தால் ஒருசிலருக்கு இடைக்காலப் பதவிநீக்கம் ஏற்படலாம். இளைய சகோதரர் அரசு வேலைக்கு முயன்றுகொண்டிருந்தால் தடை, தாமதம் ஏற்படும். சிலரது இளைய சகோதரருக்கு அரசு தண்டனை கிடைக்கலாம். சிறு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சில நாட்கள் தங்கநேரும். சிலர் காவல் நிலையத்திற்குச் செல்லநேரும்.

இளைய சகோதர வழியில் சில ஆதாயங் கள் கிடைக்கப் பெற்றாலும் அவரால் சில மன உளைச்சலும் ஏற்படும். முன்னோர் வழி சொத்தின் பங்கீடுகள் முறையற்றதாக இருக்கும். பங்காளிகளிடமிருந்த கருத்து வேறுபாடு மிகுதியாகி வழக்கு ஏற்படலாம். அல்லது வாரிசு சான்றிதழ் கள், சொத்து சம்பந்தமான ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் வேதனையைத் தரும்.

பக்கத்து சொத்தின் உரிமையாளருடன் எல்லைத் தகராறு உண்டாகலாம்.

அண்டை அயலாருடன் உப்புக்குப் பெறாத விஷயத்திற்குச் சச்சரவு உண்டாகும். ஒருசிலர் உயில் எழுதுவார்கள். சிலர் எழுதிய உயிலை அல்லது முக்கியமான ஆவணங்களை கைமறதியாக வைத்துவிட்டு தேடுவார்கள். பூர்வீக சொத்து தொடர் பான நீதிமன்றப் பிரச்சினைகள் வருத்தத் தைத் தருமென்பதால், வழக்கை ஒத்திப் போடுவது உத்தமம். சிலருக்கு பல தலை முறையாகப் பாதுகாத்த குடும்ப சொத்து களை, கிடைத்த விலைக்கு விற்றுக் கடனை அடைத்துவிடலாம் என்ற எண்ணம் மேலோங்கும். சிலருக்கு சொத்தின்மீதுள்ள வம்பு வழக்கை சரிசெய்ய சொத்தின் மதிப்பைவிட அதிகமாகக் கடன் உருவாகும். சிலரின் கடனை அடைக்க பூர்வீகச் சொத்து பயன்படும்.

பரிகாரம்

சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் ஈஸ்வரனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் அஷ்டமச் சனியின் பாதிப்புகள் குறையும்.

கடகம்

சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை கடகத்திற்கு 2-ஆம் அதிபதி. இரண்டாம் இடமென்பது தனம், வாக்கு, குடும்பம் பற்றிக் கூறுமிடம். உங்கள் ராசிக்கு இரண்டாம் அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு, ஜனனகால ஜாதகரீதியான தசாபுத்தி சாதகமாக இருந்தால், பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும். பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக் குறைகள் அகலும். எதிர்பாரத தனவரவி னால் பொருளாதார மாற்றமும் ஏற்றமும் மன மகிழ்வைத் தரும். தனியார் நிதி நிறுவனங் கள் வீட்டிற்குத் தேடிவந்து கடன் கொடுப்பார்கள். அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கை அதிகரிக்கும். சிலர் அதிர்ஷ் டத்தை அள்ளித்தருவதாக மீடியாக்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து, அதிர்ஷ் டப் பொருட்களை வாங்கிக் குவித்து ஏமாறுவீர்கள். அனாவசிய ஆடம்பர செலவு செய்துவிட்டு பின்னர் சேமிப்பைப் பற்றி சிந்திப்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகள் மூலமாகவும் அதிக விளைச்சலா லும் வருமானம் அதிகரிக்கும் காலம். உணவுத் தொழில் செய்பவர்களுக்கு இது பொற்காலம். திருமணத்தடை அகலும். தடைப்பட்ட சுப காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். பலருக்கு சடங்கு சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்காத காதல், கலப்புத் திருமணமாகவே இருக்கும். இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சலசலப்பு, மன சஞ்சலம் இருந்துகொண்டே இருக்கும். தாயின் ஆஸ்தி கிடைக்கும். தாயின் ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும். தந்தையின் ஆசிகளையும், ஆஸ்திகளையும் பெற்றுத் தருவார்.

எந்த மாயமும் எதிர்ப்புமில்லாமல், தந்தைவழி பூர்வீக சொத்துகள் எளிமையாக உங்கள் பெயருக்கு மாறிவிடும். அல்லது வெளிநாட்டில் வசிக்கும் மூத்த சகோதரர் பூர்வீகச் சொத்தை உங்களுக்கு விட்டுக் கொடுப்பார். அரசு சார்ந்த நிதி நிறுவனங்கள் பெரிய தொகையைக் கடனாகக் கொடுக்க உங்கள் வீடுதேடி வருவார்கள். அல்லது உங்களின் பூர்வீகச் சொத்துகள் அரசால் கையகப்படுத்தப்பட்டு அதன்மூலம் பெரிய பணம் கிடைக்கும். தந்தைக்கு தடைப்பட்ட அரசின் உதவித்தொகை கிடைக்கும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். தந்தைக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த கடக ராசியினருக்கு திருமணம் நடந்துமுடியும். ஒருசிலருக்கு சட்டச் சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும். கண் தொடர்பான பிரச்சினைகள் சீராகும்.

ஜனனகால ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்கள் வலிமையாக இயங்கினால், கௌரவத்தைக் காப்பாற்ற- சம்பாதித்துக் கட்டமுடியாத வட்டிக்கு பொருளை அடகுவைத்துக் கஷ்டப் பட நேரும். கெட்ட சகவாசமும் தேடிவரும். சூரியன் என்றால் ஆன்மா. ராகு என்றால் கர்மா. ஆன்மாவைத் துன்புறுத்தும் வகையில் கர்மாவை அனுபவிக்க நேரும். ராகு இரண்டாம் அதிபதியின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் அசட்டுத்தனமாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கர்மாவை அதிகரிக்க நேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அதிகமாகப் போராட நேரும். உங்களின் வார்த்தையின் கடுமையால் பாதிக்கப்பட்டவர் உங்களை சபிக்கலாம். பேச்சால் ஒருவர் கோபப்பட்டால் காலப் போக்கில் மன்னிப்பு கேட்டு சரிசெய்து விடலாம். சாபம் வாங்கினால் சரிசெய்வது மிகவும் கடினம் என்பதால் கவனம் தேவை. தந்தை- மகன் உறவிலும் விரிசல் ஏற்பட்டு சிலரது குடும்பம் பிரியும். பண இழப்பு, உடல் வேதனையைத் தரும் மருத்துவ சிகிச்சைக்குப்பிறகு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அவசர முடிவுகள் எடுக்கக்கூடாது. அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடைய கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், வாக்குறுதி கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அனாவசியமான விமர்சனங்கள், தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். அரசாங்க ஒப்பந்த தாரர்கள் மிகுந்த எச்சரிக்கை யுடன் இருக்கவேண்டும். புதிய ஒப்பந்தம், வருமானத் திற்கு மீறிய செலவால் சிக்கலில் மாட்டிவைக்கும். சிலருக்கு அரசு தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கணவன்- மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு சட்ட உதவியை நாட வைக்கும். சில ஆண்கள் சொத்து தொடர் பான பிரச்சினை, தவறான நட்பால், மனைவி யால் சட்ட நெருக்கடியை சந்திக்க நேரும்.

கண் தொடர்பான பிரச்சினைகள் உருவாகும்.

பரிகாரம்

செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட பலவித நன்மைகள் கூடிவரும். பிரதோஷ காலத்தில் சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வரவும். கடன்தொல்லை விலகும்.

சிம்மம்

சிம்ம ராசியாதிபதி சூரியனின் நட்சத் திரத்தில் ராசிக்கு 10-ல் கோட்சார ராகு சஞ்சாரம் செய்கிறார். ராசி என்பது உடல். இந்த ஜென்மத்தில் இந்த உடல் அனுபவிக் கப்போகும் சுக- துக்கங்களைப் பற்றிக் கூறுமிடம். 10-ஆமிடம் என்பது தொழில் ஸ்தானம், கர்ம ஸ்தானம். இதன்மூலம் ஜாதக ரின் தொழில், கர்மம், அதிகார யோகம், புகழ், அரசாங்க உத்தியோகம் போன்றவற்றை அறியலாம். ஜனனகால ஜாதகத்தில் சாதகமான தசாபுக்தி நடப்பவர்களுக்கு, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு தொழிலில் வளர்ச்சியும் பெரும் ஏற்றத்தையும் லாபத்தையும் கொடுத்து திணறச்செய்வார். பண வாசனையின் இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்ற ஆவலை மிகுதிப்படுத்துவார். ராகு வேகமான- எதையும் சட்டத் திற்குப் புறம்பாக நடத்தும் கிரகம். சிம்ம ராசியினரை எதிர்த்து யாரும் நிற்க முடியாத வகையில் பல்வேறு தொழில் தந்திரங்களைக் கற்றுக்கொடுப்பார். துரும் பைக்கூட தூணாக மாற்றும் செப்பிடு வித்தையை ராகு உங்களுக்குக் கூறுவார். ஜனனகால ஜாதகத் தில் 2, 5, 10 மற்றும் 11-ஆம் அதிபதிகளின் தசை நடப்பவர்களுக்கு வளர்ச்சி யின் அளவை அளவிடமுடியாது.

சூரியனும் ராகுவும் கடும் பகை கிரகங்கள் என்பதால், இதுவரை நியாயம், தர்மத்திற்குக் கட்டுப்பட்டு தொழில் நடத்தியவர்களைக்கூட தொழில் தர்மத்தைக் கடைப்பிடிக்க விட மாட்டார். ஆயுள், ஆரோக்கியத்தை அதிகரிப் பார். உடல் உபாதைகள் கட்டுப்படும். தனிமை யில் காலம் தள்ளியவர்களுக்கு பொழுதைக் கழிக்க நல்ல நட்பு கிடைக்கும். பய உணர்வு நீங்கும். தைரியம், தெம்பு ஏற்படும். தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் தாமாகவே நடக்கும். தனவரவு மகிழ்வைத் தரும். உங்களை ஏளனம் செய்தவர்கள் மதிப்பு, மரியாதை தருவார்கள். உங்களைத் துரத்திய அவமானம், அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். மந்தத் தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கமான சூழ்நிலை நிலவும். நிறைவான சுகபோக வாழ்வுக்கு மனம் ஏங்கும்.

அதற்காக கடுமையாகப் போராட நேரும். எந்தவொரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றிபெறும் தைரியம் உருவாகும். ஆன்மபலம் பெருகும். சூரியனே ஆத்மகாரகன்; தந்தைக்கும் காரகனாவார். எண்ணங்கள் மற்றும் முன்ஜென்ம பூர்வ புண்ணியத்துக்கு காரகன் சூரியனே என்பதால் முன்னோர்களில் நல்லாசிகள் உங்களை சிறப்பாக வழிநடத்தும். விபரீத ராஜயோகம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு மிக சாதகமான காலம். மக்கள் மனதில் இடம்பிடிக்க ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து செல்வாக்கை உயர்த்திக்கொள்வீர்கள். இழந்த பதவி தேடிவரும். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். பட்டங்களும் பதவிகளும் தேடிவரும். தசாபுக்திகள் சாதகமான அரசியல்வாதிகள் அரசு சார்ந்த பணிகளில் மக்களுக்குப் பயன்படும் பல்வேறு நலன்களைச் செய்து பொதுமக்களின் நல்லாதரவைப் பெறுவார்கள். தன்னை நம்பி வருபவர்களுக்கு, யாரும் சொல்லமுடியாதபடி நியாயத் தீர்ப்பு கிடைக்க பாடுபடுவீர்கள்.

ஜனன ஜாதகரீதியான தசாபுக்திகள் சாதகமற்றவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உறுதுணையாக இருந்தால்கூட, பெயருக்கு ஒரு களங்கத்தையும் ஏற்படுத்தத் தயங்கமாட்டார். சூரியன்- ராகு சம்பந்தம் கிரகண அமைப்பென்பதால், சில குழந்தைகள் தந்தையைப் பிரிந்து தாத்தா வீட்டிற்குச் செல்ல நேரும். அல்லது தந்தை குறுகிய காலத்திற்கு தொழில் நிமித்தம் அல்லது ஏதேனும் காரணத்திற்காக குழந்தையைப் பிரிந்து வாழநேரும். சூரியன்- ஆன்மா; ராகு- கர்மவினை ஊக்கி. ஆன்மாவையும் உடலையும் இணையவிடாமல் சித்த பிரம்மை பிடித்ததுபோல் இருக்கும். ஒருவருக்கு ஆத்மஞானம் கிடைக்கவிடாமல் தடைசெய்வதில் ராகுவுக்கு இணையாக எந்த கிரகமும் செயல்படவே முடியாது. ஆத்மாவுக்குத் தேவையான ஞானம் கிடைக்கும்போது மட்டுமே செயல்பாடுகளில் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். ஜனனகால ஜாதகத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதி வலிமையில்லாமல் சூரிய தசை அல்லது ராகு தசை நடக்கும்போது மேலே கூறிய சில தொந்தரவுகள் மிகைப்படுத்தலாக இருக்கும். ஜனனகால ஜாதகத்தில் சூரியன்- ராகு சேர்க்கை இருப்பவர்களுக்கு, கோட்சாரத்தில் சூரியனின் நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிப்பதால் கற்பனையில், கனவில் வாழும் நிலை ஏற்படும். சிலருக்கு அடிக்கடி நெஞ்சு வலிப்பதுபோன்ற உணர்வு தோன்றும். பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், முழு உடல் பரிசோதனை அவசியம்.

தசாபுக்தி சாதகமற்ற அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்படவேண்டும். சுய ஜாதகத்தை சரிபார்க்க வேண்டும். சிலர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் பிடியில் அகப்படுவார்கள். அவர்கள் உங்களைப் பயன்படுத்துவதுடன் செலவையும் உங்கள் தலையில் கட்டி காரியம் சாதித்து, நற்பெயரைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவார்கள். சிலர் ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத் தையும் விரைவாக முடித்தும், அதனால் பலன்கிட்டாத நிலை ஏற்படும். வீட்டில் முதியவர்கள் இருந்தால் அரசின் உதவித்தொகை கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படும்.

பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமைகளில் சிவ வழிபாடு செய்வது நல்லது. வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், ஆதரவற்ற பிணங்களின் தகனத் திற்கு உதவுதல் ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம். இதனால் பல்வேறு சிக்கல்களைத் தவிர்க்கலாம்..

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 98652 20406