பல வருடங்களாக சறுக்கல்களையே சந்தித்துக் கொண்டிருந்த விமல் விலங்கு வெப் சீரிஸ் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்தார். அதன் பிறகு அவ்வப்போது நம்பகத்தக்க ரசிக்கும்படியான படங்களை கொடுத்து வரும் விமல் தற்பொழுது 'போகுமிடம் வெகுதூரமில்லை' என்ற படம் மூலம் மீண்டும் களத்தில் குதித்திருக்கிறார். இந்த படம் அவருக்கு கை கொடுத்ததா, இல்லையா?
தன் கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு இன்றோ நாளையோ குழந்தை பிறந்து விடும் என்ற சூழ்நிலையில் கையில் பணம் இல்லாததால் ஒரு அவசர சவாரியாக வயதான ஒருவரின் பிணத்தை திருநெல்வேலிக்கு டெலிவரி செய்ய கிளம்புகிறார் அமரர் ஊர்தி டிரைவர் விமல். இறந்து போன நபருக்கு இரண்டு மகன்கள். முதல் மனைவியின் மகன் ஆடுகளம் நரேன், இரண்டாவது மனைவியின் மகன் பவன். இவர்களில் முதல் மனைவியின் மகனான ஆடுகளம் நரேன் தனக்கு தான் தன் தந்தையை அடக்கம் செய்ய உரிமை இருக்கிறது என்று உறுதியாக இருக்கிறார். இரண்டாவது மனைவியின் மகனான பவன் தன் தந்தை வாழும் போது தன் குடும்பத்துடன் இல்லை இறந்த பிறகாவது அவரை அடக்கம் செய்யும் உரிமை எங்களுக்கு கிடைக்க வேண்டும் என பவனின் குடும்பம் உறுதியாக நிற்கிறது. இந்த அண்ணன் தம்பி இருவருக்குள்ளும் மோதல் வெடிக்கிறது. இவர்களில் யார் தன் தந்தைக்கு கொள்ளி வைக்கப் போகிறார்கள் என்ற பிரச்சனை வெடித்துக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே திருநெல்வேலிக்கு உடலை கொண்டு சென்று கொண்டிருக்கும் விமல் வழியில் கருணாஸை சந்திக்கிறார். கருணாசால் விமலுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. இதையெல்லாம் மீறி விமல் அந்த பிணத்தை எந்த மகனிடம் கொண்டு சென்று சேர்த்தார்? வழியில் வண்டியில் ஏறிக்கொண்ட கருணாஸின் நிலை என்னவானது? இறுதியில் இறந்தவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதா, இல்லையா? என்பதே போகும் இடம் வெகு தூரம் இல்லை படத்தின் மீதி கதை.
வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு வித்தியாசமாக ஒரு ரோடு மூவியாக இப்படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குநர் மைக்கேல் கே ராஜா. படம் ஆரம்பிக்கும் பொழுது ஸ்டார்ட் செய்யப்பட்ட அமரர் ஊர்தி எப்படி திருநெல்வேலி சென்றடைந்தது. இதற்கு நடுவே இவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் என்ன. அதை அவர்கள் எப்படி சரி செய்தார்கள். இறுதியில் இறந்தவரின் உடல் யார் வீட்டிற்கு சென்றடைந்தது போன்ற எதிர்பார்ப்புகளை ஆங்காங்கே வைத்து அதற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து யாரும் எதிர்பாராத வகையில் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் மைக்கேல் கே ராஜா. படம் ஆரம்பித்து இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே மையப்படுத்தி ஒரு வண்டிக்குள்ளேயே நடக்கும் கதையாக நகர்கிறது. அது ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் போகப் போக வேகம் எடுத்து ரசிக்கும்படியான திரைக்கதை மூலம் பார்ப்பவர்களுக்கு அயற்சியை கொடுக்காமல் நகர்ந்து இரண்டாம் பாதியில் சற்றே வேகத்தடைகளுடன் நகர்ந்து இறுதியில் நிறைவாக முடிந்திருக்கிறது. கதைக்கும் கதை மாந்தர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்த இயக்குநர் திரைக்கதையில் இன்னும் கூட சில சுவாரசிய நிகழ்வுகளை சேர்த்திருக்கலாம். அது மட்டும் சற்று குறையாக தெரிகிறது. இன்னும் கூட படம் வேகமாக இருந்திருக்கும் பட்சத்தில் இது ஒரு மிகப்பெரிய ஹிட் படமாக மாறி இருக்க நிறை வாய்ப்புகள் இருக்கிறது.
விலங்குக்குப் பிறகு பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் விமல் இந்தப் படத்தையும் அதுபோலையே தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். வழக்கமான டெம்ப்ளேட்டில் படம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் தரும்படியான படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் அதை தேர்வு செய்த விதத்திலும் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார். எந்த இடத்தில் எந்த அளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமோ அந்த அளவு சிறப்பாக வெளிப்படுத்தி தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். படத்தின் இன்னொரு நாயகனான கருணாஸ் தனக்கு கொடுத்த இடங்களில் எல்லாம் புகுந்து விளையாடி இருக்கிறார். எந்தெந்த இடங்களில் அனுதாபம் கொடுக்க வேண்டுமோ அந்த இடத்தில் அதை கொடுத்து எந்த இடத்தில் கலங்கடிக்க வேண்டுமோ கலங்கடித்து எந்த இடத்தில் சிரிக்க வைக்க வேண்டுமோ சிரிப்பு மூட்டி எந்த இடத்தில் நடிப்பில் கைத்தட்டல் பெற வைக்க முடியுமா அந்த இடத்தில் கைதட்டல் வாங்கி சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்தையும் தாங்கி பிடித்திருக்கிறார். இறுதிக்கட்ட காட்சிகளில் அவருக்கான முடிவு என்பது கலங்கடிக்க செய்திருக்கிறது.
இவர்களை தவிர்த்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் பவன் ஆகியோர் சில இடங்களில் மிரட்டுகின்றனர் பல இடங்களில் அனுதாபம் ஏற்படும்படி நடித்திருக்கின்றனர். உடன் நடித்த அருள் தாஸ், மனோஜ் குமார், தீபா சங்கர், வேலராம மூர்த்தி ஆகியோர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு பிளஸ் சேர்த்து இருக்கின்றனர். டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவில் காரும் ஊரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. ரகுநந்தன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். அது படத்திற்கும் பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. எத்தனையோ கமர்சியல் படங்களுக்கு மத்தியில் இது போல் வித்தியாசமான கதைக்களத்துடன் கூடிய படங்கள் அவ்வப்போது வெளிவரத்தான் செய்கிறது. அப்படி ரிலீஸ் ஆகின்ற படங்கள் சில படங்கள் மட்டுமே ரசிக்கும்படி இருக்கும். அந்த வரிசையில் இந்த போகும் இடம் வெகு தூரம் இல்லை படம் இணைந்து இருக்கிறது.
போகுமிடம் வெகுதூரமில்லை - (தியேட்டருக்கு) நீ வாராய்..!