Skip to main content

அசோக்செல்வன் லைஃபில் விஜய் சேதுபதி செய்யும் மாயம்! ஓ மை கடவுளே - விமர்சனம்

நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. சிலருக்கு அது பிடித்த மாதிரி அமையும். பலருக்கு கிடைத்த வாழ்க்கையை அட்ஜஸ்ட் செய்து ஏற்றுக்கொள்கிற நிலைதான் அமையும். இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை மாற்றி அமைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால்...?

 

ashok selvan vijay sedhuஅசோக் செல்வன், ஷாரா, ரித்திகா சிங் ஆகியோர் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். ஒரு நாள் ரித்திகா சிங் தனக்குப் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் திடீரென அசோக்செல்வனை பார்த்து 'நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?' என்று கேட்க, அதற்கு அசோக்செல்வன் சம்மதிக்க, இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இத்தனை நாள் ஃபிரண்டாகப் பார்த்த ரித்திகா சிங்கை மனைவியாகப் பார்க்கமுடியாமல் தவிக்கிறார் அசோக்செல்வன். இதற்கிடையே அசோக்செல்வன் தனது பால்ய வயது 'க்ரஷ்'ஷான வாணி போஜனை சந்தித்து நட்பு கொள்கிறார். இது ரித்திகா சிங்கிற்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்கின்றனர். அந்த நேரம் பார்த்து விஜய் சேதுபதி மூலம் அசோக்செல்வன் கையில் வாழ்க்கையை ஒரு முறை மாற்றியமைக்க வாய்ப்பு தரும் ரீவைண்ட் பட்டன் கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு அசோக்செல்வன் என்ன செய்தார், விஜய் சேதுபதி யார், ரித்திகாவிற்கும் அசோக்செல்வனுக்கும் விவாகரத்து ஆனதா என்பதே 'ஓ மை கடவுளே' படத்தின் கதை.

தமிழ் சினிமாவின் வழக்கமாகக் காட்டப்படும் சைல்டுஹூட் ஃபிரண்ட்ஷிப்பாக இல்லாமல் இக்காலத்திற்கு ஏற்ற ஃப்ரஷ்ஷான ஃபிரண்ட்ஷிப்புடன் படம் ஆரம்பிக்கிறது. முதல் பாதி முழுவதும் தப்பித்தவறி கூட தோழியை விரசமாகப் பார்க்காத நண்பன் அதே தோழியை திருமணம் செய்து கொண்ட பிறகு அவளை மனைவியாகப் பார்க்கக் கஷ்டப்படுவது, இருவருக்குள்ளும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள், ஈகோ, பொசசிவ்னஸ் என ஸ்லோ அன் ஸ்டெடியாக நகர்ந்து இரண்டாம் பாதியில் வேகமெடுத்து நட்பின் பெருமை, அழகான காதல், யதார்த்த வாழ்க்கையின் புரிதல் என அழகான ஃபீல் குட் மூவியாக முடிகிறது இந்த 'ஓ மை கடவுளே'.

 

 

rithikaகுறிப்பாக ரித்திகா சிங் - அசோக்செல்வன், வாணி போஜன் - அசோக்செல்வன் என இரண்டு உறவுகளிலுமே அவரவர் தரப்பு நியாயத்தை சரியாகக் காட்சிப்படுத்தி யார் மீதும் வெறுப்பு ஏற்படாதவாறு மிகவும் சாமர்த்தியமாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து. இன்றைய இளைஞர்களின் பல்ஸை சரியாகப் பிடித்து அவர்களுக்கான படமாக இதை கொடுத்துள்ளார். முக்கியமாக முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதி திரைக்கதையில் வரும் திருப்பங்கள் சிறப்பாக அமைந்து சுவாரஸ்யத்தை கூட்டி உள்ளது. பெரிய அளவில் ரசிக்கவைக்காத நகைச்சுவையும் மனதில் தாங்காத பாடல்களும் நீண்டுகொண்டே செல்லும் இரண்டாம் பாதியும் படத்தின் பிரச்னைகள்.


ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தனக்கு ஏற்றார்போல் கதையை சிறப்பாகத் தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் அசோக்செல்வன். பெரிய முயற்சி தேவைப்படாத கம்ஃபர்ட் ஸோனில் கதை இருப்பதால் காட்சிகளுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக வெளிப்படுத்தி நடித்துள்ளார். ஆங்காங்கே மிஸ்டர் பீன் தென்படுகிறார். தேசிய விருது நடிகையான ரித்திகா சிங் துறுதுறுவென அழகாக இருக்கிறார். முதிர்ச்சியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தன் ஒவ்வொரு பாத்திரத்திலும் மிக இயல்பாக நடித்து ரசிக்க வைக்கிறார் ரித்திகா. இது வாணி போஜனுக்கு முதல் திரைப்படம். ரித்திகா சிங்கிற்கு சமமான கதாபாத்திரமும் கூட. அதை அவர் அலட்டிக்கொள்ளாமல் நடித்து பாஸாகியுள்ளார். நண்பராக வரும் ஷாரா, வெறும் காமெடி நடிகர் மட்டுமல்ல. முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் கதைக்கு முக்கிய கருவியாக இருந்து ரசிக்க வைத்துள்ளனர். அதுவும் இது போன்ற கெஸ்ட் அப்பியரன்ஸ்களில் விஜய் சேதுபதி, ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்தான்.
 

 

vani bojanவிது அய்யண்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிக்குக் காட்சி புத்துணர்ச்சி பரவிக்கிடக்கின்றது. பாடல்களை விட பின்னணி இசையில்  லியோன் ஜேம்ஸ் ஜொலிக்கிறார். பலரும் வாழ்நாளில் ஒரு முறையாவது ஆசைப்படும் 'ரீவைண்ட்' என்ற விஷயத்தை ட்ரெண்டியான கதையில் நேர்த்தியாக உட்புகுத்தி, சந்தர்ப்ப சூழ்நிலைகள் உருவாக்கிக்கொடுக்கும் வாழ்க்கையின் அர்த்தத்தை அழகாக உணர்த்தி இளைஞர்களுக்கான நிறைவான காதல் படமாக 'ஓ மை கடவுளே' தந்திருக்கிறார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து.

ஓ மை கடவுளே - காதலர் தினத்திற்கு சரியான தேர்வு!


           

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்